கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நலம்தானே?
சிறகு கதை ஒருவகையில் என்னுடைய கதை. நான் பிறந்தது ஒரு சின்ன கிராமத்தில். சிறுவயதிலேயே என்னை தாய்மாமனுக்கு என்று சொல்லிவிட்டார்கள். அவர் குடிகாரர், முரடர், படிப்பும் இல்லை. என் குடும்பமும் வறுமையானது. நான் மறு எண்ணமே இல்லாமல் வளர்ந்தேன். நான் பள்ளிப்படிப்பு முடிந்ததும் காலேஜ் போகவேண்டும். என் ஊரிலிருந்து மதுரைவரை பஸ் இல்லை. பஸ் ஏறும் இடம் வரை வரவேண்டும். என்ன செய்வது என்று தெரியவில்லை. என் அப்பா எனக்கு சைக்கிள் சொல்லித்தந்தார். சைக்கிளில் வந்து அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு பஸ் ஏறி காலேஜ் போக ஆரம்பித்தேன்.
அது என் வாழ்க்கையில் மிகப்பெரிய மலர்ச்சி. எனக்கு உலகம் என்றால் என்ன என்று தெரிந்தது. சைக்கிளில் காடுகழனியெல்லாம் போக ஆரம்பித்தேன். உள்ளூரில் ஒரு எல்.ஐ.சி ஏஜெண்டாக ஆனேன். பெண்கள் நடுவே சீட்டும் நடத்தினேன். நானே சம்பாதித்து படித்து வேலைக்கு போனேன். அதற்குள் அந்த மாமனுக்கு வேறு திருமணம் ஆகிவிட்டது.எனக்கு பிடித்தவரை நானே திருமணம் செய்துகொண்டேன். இப்படி நினைத்ததில்லை. ஆனால் சிறகு படிக்கும்போதுதான் எனக்கு திருப்புமுனை அந்த சைக்கிள்தான் என்று தெரிந்தது. அந்த சைக்கிளை வைத்திருக்கலாம் என்று ஏக்கமாக இருந்தது
எல்.
அன்புள்ள ஜெயமோகன்,
வாழ்க்கையில் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்திற்காக நம்மை அறியாமலியே நாம் காத்திருப்போம். அந்த தருணம் வரும் போது, அதன் ‘சிறகு’கள் கொண்டு நாம் பறந்து செல்ல முயல்வோம். ஆனந்தவல்லியின் அப்படிப்பட்ட தருணம் அவள் ‘சைக்கிள்’ கற்றுக் கொள்ளும் போது ஏற்பட்டது. அவள் அதை ஒரு சிறகாகப் பயன்படுத்தி தன்னை, வாழ்க்கையின் அடித்தள பகுதியிலிருந்து மீட்டெடுத்து பறந்து செல்கிறாள்.
சங்கு போன்ற பண்ணையார்களின் அடக்கும் அதிகாரமும், ஆனந்தவல்லி போன்ற எளிய மக்களின் அடங்கும் குணமும், இதில் யார் யாரைப் பயன்படுத்திக் கொள்கிறர்கள் என்பதே மிகவும் முக்கியம். பெரும்பாலான சமயங்களில் சங்கு போன்றவர்களே வெல்கிறார்கள். மிகவும் சொற்ப சமயங்களிலே ஆனந்தவல்லி போன்ற எளியோர் தங்களின் மன உறுதியாலும் தீராத கனவாலும், அனைத்து தடைகளையும் மீறி முன்னகர்ந்து செல்கிறார்கள்.
அப்படி அவர்கள் செல்லும்போது தங்கள் பாதையில் ஒரு சில சமரசங்களை செய்து கொள்கிறார்கள். அது அவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யும் செயல் அல்ல. தன் மீது தொடுக்கப்பட்ட அத்துமீறல்களிலிருந்து எப்படியாவது மீள அவர்கள் செய்யும் எதிர்வினையின் ஒரு சாரமே ஆகும். அதனாலேயே ‘சிறகு’ கதையின் கதை சொல்லியால், பெண்கள் செய்யும் சமரசத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேலுமொரு காரணம் நாம் வாழும் ‘patriarchal’ சமூகம். நாம் நம் பெண்களை தெய்வமாக அல்லது கௌரவப் பொருளாக மட்டுமே நினைப்பது. அவளை ஒரு சக மனிதராக நினைப்பதையே ஒரு முற்போக்குச் செயலாகக் கொண்டிருந்த காலம் நம்மில் உள்ளது. ஆனந்தவல்லியின் ‘சிறகு’, சங்குவின் ‘சைக்கிள்’.
அன்புடன்,
பிரவின்
அன்புள்ள ஜெ
தூவக்காளி கதையை நினைப்பில் ஓட்டிக்கொண்டே இருக்கிறேன். பாற்கடலில் ஒரு நஞ்சு அலை அந்த நஞ்சு சுபத்ரையின் மனசில் ஊறிய ஒரு துளி நஞ்சுக்கு மருந்தாகிறது என்ற எண்ணத்தில் உள்ள அந்த முடிச்சை பலபடியாக நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது
புல் உலகையே உணவூட்டும் அம்மா. அது பாற்கடல்போல அலையடிக்கிறது. அந்தப் புல்லில் இருந்துதான் புல்பிள்ளை வந்து திரும்பவும் புல்பிள்ளையாகவே ஆகியது. தூவக்காளி என்ற தெய்யம் வடகேரளத்திலும் உள்ளது [https://ml.wikipedia.org/wiki/%E0%B4%A4%E0%B5%82%E0%B4%B5%E0%B4%95%E0%B5%8D%E0%B4%95%E0%B4%BE%E0%B4%B3%E0%B4%BF ]
கார்த்திக்ராஜ்
கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்.
தூவக்காளி படித்தேன். வாசகரின் ஊகங்களை மேம்படுத்தும் நல்ல கதை. நம்புகிறவனுக்கு மட்டும்தான் அது உண்மை என்பது கதையில் மையமாக ஓடுகிறது. முதலில் நம்பாமலிருந்தவன் பிறகு உளப்பூர்வமாக நம்பி மந்திரங்களை உச்சரித்துச் சடங்குகள் செய்யும்போது உண்மையாகவே தூவக்காளி வருகிறாள். அவள் இப்போது அவனுக்கு உண்மையாகிறாள்.
நம்பாமல் கேலி பேசுவோர் தண்டனை அடைகின்றனர். ஏனெனில் அப்போதுதான் சாமிகளை நம்புவோர் நம்பிக்கொண்டே இருப்பார்கள். இதைத்தான் “நமக்கு எப்படி சாமிகள் வேணுமோ அதுபோல சாமிகளுக்கு நம்மையும் வேணும் என்னும் வரி காட்டுகிறது. அதனால்தான் தொன்மங்களில் கடவுள்கள்தோன்றி பக்தர்களுக்கு வரங்கள் கொடுக்கிறார்கள்.
மற்றொரு சிந்தனையைத் தூண்டும் வரி: ” நெறியும் முறையும் இருந்தால் சாமி சாமியாக இருக்கும். சில நெறிகள் மீறப்படும்போது, ஒழுக்கக்குறைபாடுகள் நடக்கும்போது சாமி சாமியாக இல்லாமல் கொடுந்தண்டனைகள் கொடுப்பதை புராணங்களில் பார்க்கிறோம். இப்போது சுனாமியாகவும், கொரானாகவும் பார்க்கிறோம். ஆனால் ஒரு சிலரின் நடத்தைகளால் எல்லாருமே அவதிப்படுகிறார்கள். அவர்களின் நடத்தைகளை அமைப்புகளும் அரசுமே கட்டுப்படுத்த வேண்டும்.
சுபத்ராவின் கணவனும், மூதம்மையும், மற்றொரு பெண்ணும் புரியும் நெறிமீறல்களே கரு கலைதல்கள்.புல்லுக்கும் கடவுளுக்கும் நல்ல ஒப்புமை. அதனால்தான் மங்கலமோ அல்லது அமங்கலமோ தருப்பைபுல் சடங்குகளில் முக்கிய இடம் பெறுகிறதோ?
கடவுள் அருள் என எண்ணாமல் தனக்குக் கிடைத்தது தனக்கே என எண்ணும் மேட்டுக்குடி மனப்பான்மை உள்ளதால் தருப்பைப்புல் குழவியையும் சுபத்ரா அப்படியே நினைக்கிறாள். ஒருவேளை அவள் கணவன் எண்ணுவதன் தாக்கமோ? “நான் அப்படி நெனச்சது பெரும்பிழைதான் எனக்க ராஜான்னு” என அவள் கூறுவதை இப்படி ஊகிக்கலாமா?
இறுதியில் தூவக்காளி அசைவற்றுக் கிடந்தாள் என்பதால் அவள் அமைதி கொண்டு விட்டாள் இனி சுபத்ராவின் கருவிற்குத் தொல்லையில்லை என்றும். வெண்ணிற நுரைபோன்ற புல் தூவல்கள் என்பது தூவக்காளி புரியும் அருள் எனவும் நினக்கத் தோன்றுகிறது.
வளவ. துரையன்
கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]
கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]
கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]
கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]
கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]
கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]
கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]
கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]
கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]
கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]
கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]
கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1