கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம் .கீர்ட்டிங்ஸ் சிறுகதை படித்தேன். மலர்ந்து சிரித்து கொண்டேன்.
என் பெண் கிண்டர்கார்டடனில் படித்து கொண்டிருந்த பொழுது ஒரு முறை அவளை கூடி வரும் வழியில் செக் போட வங்கிக்கு போக வேண்டியிருந்தது. இவள் சிவப்பான துருதுரு கண்களும் துருத்திய வாயும் கொண்டவள்.அவள் உள்ளே நுழைந்தவுடன் சூழ்நிலையில் கண்ணுக்கு தெரியாத தளர்வு உருவாவது சந்தேகமில்லாமல் தெரிந்தது. முன்னாள் மேஜையில் அமர்ந்திருக்கும் வங்கி பணியாளர் பெண்மணி {நம்மிடமெல்லாம் பெரும்பாலும் சைகையிலேயே பேசுபவர்} ஹாய் குட்டி தங்கம் என்றார் . எல்லோரின் முகத்திலும் ஒரு சிறு மலர்ச்சி தெறிந்ததது .
நீங்களே ஒரு முறை சொல்லியது போல பெண்களை பெற்றவர்கள் பாக்கியவான்கள்தான்
அன்புடன்
சரவணக்குமார் கோவை
***
அன்புள்ள ஜெ
கீர்ட்டிங்ஸ் கதையுடன் இணைத்து வாசிக்கவேண்டிய இரு கதைகள் ஒன்று வண்ணதாசன் எழுதிய ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’. இன்னொரு கதை கி.ராஜநாராயணன் எழுதியது. பெயர் நினைவுக்கு வரவில்லை. ஒரு பஸ்ஸில் நெரிசலில் கூச்சலில் ஒரு குழந்தை உருவாக்கும் மலர்வை பற்றிய கதை.
இந்தக் கதைகள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இன்னும் எழுதப்படும். மேலே சொன்ன கதைகளில் அதெல்லாம் குழந்தை. இதில் சிறுமி. பேரன்னை என்று தன்னை நிலைநிறுத்திக்கொண்டு தேவியாக நின்று உலகை ஆட்சி செய்பவள். நீ நல்ல தாத்தா என்று அவரே சான்று அளித்தபின் ஆபீஸர் அப்படி இல்லாமலிருக்கமுடியுமா?
சந்திரகுமார்
***
கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
மணிபல்லவம் கதை வரைக்கும்தான் நான் வந்திருக்கிறேன். நான் ஒவ்வொரு கதையையும் இரண்டுநாட்கள் வாசிக்கிறேன். மணிபல்லவம் என்ற அந்தத்தீவு கடலுக்குள் இருந்து எழுந்து வருகிறது. அது மிகப்பெரிய கொந்தளிப்புக்கு பிறகு வரும் அமைதியில்தான் தோன்றும் என்பதே ஏராளமான அர்த்தங்களை அளிக்கிறது. மனிதர்களுக்கு அன்கான்சியஸ் இருப்பதுபோல பண்பாடுகளுக்கும் அப்படி ஆழ்மனசு இருக்கும் என நினைக்கிறேன். நம்முடைய ஆழ்மனசுக்குள் கடல்கொண்ட தென்னிலம் இருக்கிறது. இரண்டயிரம் ஆண்டுகளாக நாம் அதைப்பறிச் சொல்லிக்கொண்டிருக்கிறோம் [வடக்கே சரஸ்வதி அவர்களுக்கு அப்படி இருக்கிறது] கனவுக்குள் போய் அது வாழ்கிறது. கனவுக்குள் இருந்து வரும் அர்த்தங்கள்தான் மொழியில் ஆழமாக வெளிப்படுகின்றன. அவைதான் கலைகள் எனப்படுகின்றன. நம்முடைய கனவுக்குள் ஒரு பயணம்தான் மணிபல்லவம்.
எம்.ராஜ்குமார்
***
அன்புள்ள ஜெ
மணிபல்லவம் கதையை வாசிக்கும்போது ஆழத்தில் என்னென்ன இருக்கும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன். சென்ற் கால்ங்கள், மறைந்த இலட்சிய்ங்கள் எல்லாம் இருக்கும். தொன்மையான காலகட்ட்த்தில் மறந்துவிட்ட எல்லாம் அங்கேதான் சென்று சேர்கின்றன. ஆனால் கதை முடிந்தபோது ஒரு திடுக்கிடலாக உணர்ந்தேன், குற்றவுணர்வுதான் அங்கே இன்னும் ஆழமாக இருக்கும். இங்கே நாம் வழிபடும் தெய்வங்களில் பெரும்பாலானவை குற்றவுணர்ச்சியில் இருந்து வந்தவை தானே? பன்னாசிங் அப்படியே அவர்களின் ஆழ்மனதுக்குள் போய் சுடலைமாடனும் மாடசாமியுமெல்லாம் வாழும் உலகில் வாழ ஆரம்பித்துவிட்டான்
மாணிக்கவேல்
***