தூவக்காளி,கீர்ட்டிங்ஸ்- கடிதங்கள்

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

தூவக்காளி கதையை வாசித்தேன். முதல்வாசிப்பில் தன் மரபின் மேல் அவநம்பிக்கை கொண்ட இளைஞன் மரபின் ஆழத்திலிருந்து எழுந்துவரும் ஒரு தெய்வத்தை தன் அகத்திலே தரிசிக்கும் கதை என்று தோன்றியது. ஆனால் ஒரு கேள்வி மிச்சமிருந்தது. அந்த சுபத்ரை என்ற பெண்  ‘என்னை மன்னித்துவிடு’ என்று தன் மகனிடம் சொல்கிறாள்?

அந்த வரியிலிருந்து மீண்டும் வாசித்தேன். கதையின் மையம் துக்கங்களைப் பற்றிய பேச்சுதான். துக்கங்களில் பெரும்பாலானவை மனிதர்க்ள் தங்களுக்கே இழைத்துக்கொள்பவை. சுபத்ரை தனக்குத்தானே இழைத்துக்கொண்ட தீங்குதான் கரு கலைவது. அந்தக் கருமேல் அவளுக்கே கசப்பு இருக்கிறது. அதற்கு அந்தக்குடும்பச் சூழல், அந்த கணவன் எல்லாம் காரணமாக இருக்கலாம். அவளுக்குள் அவளுடைய அம்சமாக பிள்ளைதின்னி காளி இருக்கிறது

அந்த நெகெட்டிவிட்டியை தான் தூவக்காளி பலியாக வாங்கிக்கொள்கிறாள். தன் மகன் என நினைத்து அவள் அந்த புல்பிள்ளையை பற்றிக்கொள்ளும்போது அவள் அம்மாவாக ஆகிவிடுகிறாள். அவளுக்குள் இருக்கும் நஞ்சு மறைந்துவிடுகிறது. அந்த இடத்தில் கதையில் வந்து இணைவது லட்சுமியின் கதை. பாற்கடலில்தான் பெருமாள் பள்ளிகொள்கிறார். அது லட்சுமியின் முலைப்பால். ஆனால் அதில் ஒரு துளி இருட்டானது. கருப்பானது. கோடி கோடி அலைகளில் ஒன்று நஞ்சு

சிவக்குமார் எம்

***

அன்புள்ள ஜெயமோகன்,

தூவக்காளி கதை என் மனதிற்கு மிக நெருக்கமானது.

பணத்திற்காகவும் சமூக மரியாதையின் காரணத்திற்காகவும் நாம் நமது குலத்தொழிலை இழிவாகவே பார்ப்பதற்கு. கற்றுயிருக்கிறோம். எட்டாம் தலைமுறையாக வரும் கிருஷ்ணன் தான் பள்ளிக்கூடம் சென்று படித்ததால் தன் ஒரு வாத்தியார் என்று தன்னை உணருகிறான். இது அவனது புறமனத்தில் தான் நிகழ்கிறது. அவனுடைய ஆழ்மனம் சக மனிதர்களின் துக்கத்தை போக்கும் தூவக்காளி  இருக்கும் இடம். முதல் முறை எந்த முயற்ச்சில்லாமல் ஈடுபடும்போதே அவனுக்கு பூஜை கைகூடி அவனுள் தூவக்காளி மலருகிறாள். ஒரு செயல் செயும்போது தன்னுள் தெய்வம் எழுவது எவ்வளவு பெரிய பெரு. ஆனால் கிருஷ்ணனின் புறமனம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் டீச்சர் வேலைக்காக காத்துக்கிடக்கிறது. சுபத்ரையி துக்கத்திற்கு காரணம் ஆதி மானுஷம் தான். அதை தூவக்காளி நீக்குகிறாள். கிருஷ்ணனின் புறக்கண் திறந்திருக்கும் வரை அவனுள் தெய்வம் எழவில்லை. முகமூடி அணிந்து புறக்கண் மூடியவுடன் அகக்கண் திறந்து அம்மை எழுந்து அருள்பலிக்கிறாள்.

அன்புடன்
கிஷோர்

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தூவக்காளி போன்ற ஆக்ரோஷமான கதைகளுக்கு நடுவே இனிய சுவையுடன் இருந்தது கீர்ட்டிங்ஸ். இந்த உலகத்தையே தழுவி வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்கிறது குழந்தை. பெரிய மனிதர்கள் பெரிய விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள். ஒரு போர்க்களம் அது. ந்டுவே ஒரு தென்றல் மாதிரி குழந்தை உலவுகிறது. அதன் வேறொரு உலகத்தில் வாழ்கிறது. அங்கே அது சண்டிராணியான அம்மா. பிள்ளைகளை வளர்ப்பவள்

பாப்பா எல்லாரையுமே குழந்தையாகத்தான் பார்க்கிறாள். அதியுக்கிரமான மரைக்காயரைக்கூட அவள் ஒரு குழந்தையாகத்தான் பார்க்கிறார். பத்திரமா கிழிக்காம வச்சி விளையாடு என்று சொல்கிறாள். அங்கே மரைக்காயரையும் குழந்தையாக ஆக்கிவிடுகிறாள். மொத்த போரும் குழந்தைவிளையாட்டாக ஆகிவிடுகிறது.

அது பராசக்தி இந்த உலகுக்கு அளிக்கும் வாழ்த்து. சிரித்துக்கொண்டே கண்ணீர்மல்கவைத்த கதை

மகாதேவன்

***

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம். நலம்தானே?

கீர்ட்டிங்க்ஸ் கதை படித்தேன்.

இக்கதையைப் படித்துக் கொண்டே போகும்போது யாராலும் சிரிக்கால் இருக்க முடியாது. வெளியில் சிரிக்கக் கூச்சப்பட்டாலும் உள்ளுக்குள் நிச்சயம் சிரித்துத்தான் ஆக வேண்டும்.

ஆனையில்லா கதையை விட இதில் கதையுடன் உரையாடல் மூலம் நகைச்சுவை கலந்து மிளிர்கிறது. அதிலும் மகேஷ் இரண்டில் ஒன்றை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்  என்று சொல்வது நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

இத்தனைக்கும் கதை ஒரு சீரியஸான விஷயத்தைப் பேசுகிறது. டவரை அமைக்கும்போது சரியாக ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்யாததால் அது சாய்ந்து போகிறது. அது குறித்துக் கேட்க ஜி.எம்.வரும்போது அந்த ஃபைல் காணால் போக அதைத் தேடுவதுதான் கதை.

இதில் வரும் ஒரு வரி இடத்தோடு ஒத்துப்போவதைச் சொல்லியாக வேண்டும். மேஜர் சந்திரகாந்த் படத்தில் தையல்காரராக வரும் நாகேஷ் தன் தங்கையிடம், “நீ என்னை ஊசியாலத் தச்சிட்ட” என்று தொழிலுக்குத் தகுந்த வசனம் சொல்வதாகப் பாலசந்தத் எழுதியிருப்பார். அதேபோல “தர்காவுல தொழுகையை முடித்து நேர இங்க வருவாரு குர்பானி போடுறதுக்கு “என்னும் சொற்கள் மரைக்காயர் சொல்வது போல அமைந்திருப்பது நகைச்சுவைக்கு என்றாலும் பாத்திரத்துக்கு ,ஏற்றவாறு ஒத்துப்போகின்றன.

குழந்தை முகத்தைப் பாத்தா கோடி துக்கம் போயிடும். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றெல்லாம் தொன்றுதொட்டு நம் மரபு நம்பி வருகிறது. சாதாரணமான கீரிட்டிங்க்ஸ் மூலம் அனைவருமே நெருங்க அச்சமுறும் ஜி.எம் அருகில் சென்று பாப்பா அவருக்குக் கீரிட்டிங்ஸ் தருகிறது. அலுவலகப் பணியாளர்களுக்குத்தானே அவர் ஜி.எம். பாப்பாவுக்கு மரைக்காயர் தாத்தானே. அவர் குழந்தையிடம் நெகிழ்ந்து போகிறார்.மனத்தையும் லேசாக்கிக்கொள்கிறார். அந்த நேரத்தில் முத்தாலம்மையே வித்யா பாப்பாவானாளோ?

வளவ. துரையன்

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைஆமை,சுக்ரர்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகிறிஸ்தவம், அவதூறுகள்…