‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15

தென்குமரிக் கடலுக்குள் ஆழத்தில் இருந்து எழுந்து ஒளிகொண்டு நின்றிருந்த மகேந்திரமலையின் முடிமேல், ஒரு காலூன்றி ஓங்குதவம் செய்த கன்னியின் அடிச்சுவட்டில் அமர்ந்து, அஸ்வக குலத்து சபரியின் மைந்தனான சீர்ஷன் எனும் சூதன் கிருஷ்ண துவைபாயன வியாசரின் புகழை பாடினான். பின்னர் நூற்றெட்டு பாடல்களில் அவர் யாத்த அப்பெருங்காப்பியத்தின் விதைவடிவை பாடி முடித்தான்.

பாண்டியன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதியும் அவன் அமைச்சர் தென்குன்றூர் பெருஞ்சாத்தனாரும் புலவர் பிறரும் அதைக் கேட்டு அமர்ந்திருந்தனர். துடுப்பை ஊன்றி தன் உடல் எடையை அதில் சாய்த்து விழிமயங்கி கண்ணன் கீரத்தன் அதை கேட்டுக்கொண்டிருந்தான். “ஐந்தாம் வேதமென்று எழுந்த இதை முழுதறிந்தோன் வேதப்பொருளறிந்தோன், ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சீர்ஷன் பாடி முடித்தான்.

விளக்கும் கைமலர்வுடன்

யோகபீடத்தில் அமர்ந்திருப்பவரும்

இடதுகையை இடது கால்முட்டின்மேல் வைத்தவரும்

கல்விக்கருவூலமும்

அந்தணரால் சூழப்பட்டவரும்

மலர்ந்த உள்ளத்தவரும்

தாமரையென ஒளிர்பவரும்

புனிதமான கதைகொண்டவருமாகிய

வேதவியாசரை

வீடுபேறின் பொருட்டு வணங்குகிறேன்

மாபாரதக் கதை என்னும் நெய்விளக்கில்

மெய்மையெனும் சுடர் கொளுத்தி

இவ்வுலகை துலக்குபவரும்

மலர்ந்த தாமரையின் இதழ்கள்போல

அழகிய கண்கள் கொண்டவரும்

எல்லையற்ற அறிவுடையவருமாகிய

வியாசரை வணங்குகிறேன்

ஆழியின் ஓரலையும்

ஆழியென்றே ஆனவரும்

அலகில் வெளியென்றும்

வானுறை முகிலென்றும்

பொழியும் மழையென்றும்

பெருகும் ஆறென்றும்

என் இல்லத்து கிணறென்றும்

என் கைக்குவை நீரென்றும்

ஆகி உலகுபுரப்பவரை

மண்படிந்து வணங்குகிறேன்

என்று வேதவியாசரை அவன் வாழ்த்தி யாழை விலக்கி தலைதாழ்த்தி நிலம் தொட்டு வணங்கினான்.

பாண்டியன் “இப்பெருங்காவியம் என் அவையில் உங்களால் முழுதுற உரைக்கப்படவேண்டும், சூதரே” என்றான். “ஆம், அது என் கடமை” என்றான் சீர்ஷன். அமைச்சர் பெருஞ்சாத்தனார் “இக்காவியத்திற்கு சாற்றுகவி என எவை உள்ளன? எந்தெந்த அவைகளில் இது நிலைநாட்டப்பட்டுள்ளது?” என்றார். “இது முழுமைப்பெருநூல் என தேவர்களால் ஏற்கப்பட்டது. அக்கதையை சொல்கிறேன்” என்றான் சீர்ஷன்.

நைமிஷாரண்யத்தில் சூததேவராகிய உக்ரசிரவஸ் நூற்றெட்டுமுறை இப்பெருங்கதையை முனிவர்களுக்கு கூறி முடித்தார். பாரதவர்ஷத்தின் அனைத்து திசைகளிலிருந்தும் அவர் அதை கூறுவதை செவிச் செய்தியாக அறிந்து உசாவி வந்த முனிவர்களின் அவை அவர் முன் எப்போதும் அமர்ந்திருந்தது. மடியில் கைவைத்து விழி மூடி அமர்ந்து மலை ஊற்றுகளனைத்தையும் தன்னிலிருந்து வெளிப்படுத்தும் பாறைபோல் அவர் இந்த அழியாப் பெருங்கதையை கூறினார்.

குலக்கதைகளும், குடிக்கதைகளும், ஊர்க்கதைகளும், போர்க்கதைகளும், நெறிக்கதைகளும், அறக்கதைகளும் வந்து கலந்துகொண்டே இருப்பது அக்காவியம். உணர்வுகளும், அறிதல்களும், நெறிகளும், மீறல்களும் கொண்டு மழைக்கால கங்கைபோல் கட்டற்றதாக பெருகுவது. தென்மழைபோல ஒவ்வொரு விதையையும் மரமாக்கும் ஆற்றல் கொண்டது. அதை கேட்டவர்கள் அறியாமையின் தெளிவை இழந்தனர். அறிவின் அலைதலை தொடங்கினர். அதை உணர்ந்தவர்கள் அறிவின் நிமிர்வை இழந்து அமைதலின் தெளிவை அடைந்தனர்.

நூற்றெட்டு முறை கூறப்படும் காவியம் தெய்வங்களுக்குரியதாகிறது. நூற்றெட்டாவது முறையாக அக்கதையை சூததேவர் கூறி முடித்ததும் அவர் அருகே அமர்ந்திருந்த சிறு கிளி மகிழ்ந்து சிறகடித்து எழுந்து சுழன்று மீண்டும் அமர்ந்தது. அவர் கைகூப்பி “இம்மண்ணில் என்றுமழியா முழுமைக் காவியம் என்று இது அமைக! இதை தேவர்கள் அவி என கொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

ஆனால் “இல்லை! இல்லை!” என்று கிளி குரல் கொடுத்தது. அவையில் அமர்ந்திருந்த முனிவர்களும் பிறரும் திகைத்து திரும்பிப்பார்த்தனர். “என்ன சொல்கிறாய்?” என்று சூததேவர் கேட்டார். “இது முழுமைக் காவியம் அல்ல” என்று கிளி கூறியது. “நீ எவ்வண்ணம் அறிந்தாய்?” என்று அவர் கேட்டார். “உங்கள் ஆசிரியரின் குடியை சேர்ந்தவள் நான். உங்கள் நெஞ்சில் இருந்து ஒலிப்பவள்” என்றது கிளி.

அவர் அதை திகைத்து பார்த்தார். அக்கிளிக்கான சொற்கள் தன் அகத்திலிருந்து ஊறி அதை சென்றடைகின்றன என்று அவர் அறிந்திருந்தார். “கூறுக கிளிமகளே, இதன் குறையென்ன?” என்றார். “இது இன்னும் முடிவடையவில்லை” என்று அக்கிளி கூறியது.

அமர்ந்திருந்த முனிவர்கள் “இவ்வண்ணம் ஒரு குரல் எழுவதற்கான தருணம் தெய்வத்தால்தான் அமைக்கப்பட முடியும். அதை தடுக்க இயலாது. இக்காவியம் முழுமையடையவில்லை என்றே கொள்ளவேண்டும்” என்றனர். “என்ன செய்வது?” என்றார் உக்ரசிரவஸ். “நீங்கள் உங்கள் சொல்லால் விண்ணவரை அழைக்கமுடியும். விண்ணும் மண்ணும் அறிந்தவராகிய நாரதர் வந்து உரைக்கட்டும். கிளி சொன்ன இச்சொல்லின் பொருளென்ன என்று” என்றனர் முனிவர்.

உக்ரசிரவஸ் மண் தொட்டு ஊழ்க நுண்சொல்லுரைக்க அங்கு நாரதர் தோன்றினார். “திசையாளும் முனிவரே கூறுக, இக்காவியம் நிறைவுற்றதா?” என்று சூததேவர் கேட்டார். ”இது பெருங்காவியம். இப்புவியில் இன்று இதற்கு ஈடில்லை. என்றும் அவ்வாறே திகழும். எனினும் இது இப்போது நிறைவடையவும் இல்லை” என்று நாரதர் கூறினார். “எவ்வண்ணம் என்று அறியேன், இதை நான் வடமலையுடன் ஒப்பிட்டுச் சொல்கிறேன்” என்றார்.

உக்ரசிரவஸ் தனது மாணவர்களை நிலமெங்கும் அனுப்பினார். அஸ்தினபுரியில் அமைச்சராகத் திகழ்ந்த வைசம்பாயனர் யயாதியில் தொடங்கும் அஸ்தினபுரியின் மூதாதையரின் கதைகள் அனைத்தையும், யதுகுலத்தவர் கதைகள் முழுமையையும் இணைத்து கொடிவழிகளின் ஓவியத்தை சொல்லாக்கி அக்காவியத்திற்கு முற்கதை ஒன்றை எழுதி காவியமாக ஆக்கியிருப்பதாக அறிந்தார். தானே நேரில் சென்று அவரை வணங்கினார். அக்காவியத்தை கேட்டு வாங்கி வந்து பயின்றார்.

மீண்டும் அந்த அவையில் வைசம்பாயனர் கதையுடன் காவியத்தை தொடங்கினார். அவர் அதை கூறி முடித்து “இக்கதை இங்கு நிறைவுறுக! இது முழுமைக் காவியம் என்றாகுக! இதை தேவர்கள் அவியெனக் கொள்க!” என்றபோது “அல்ல! அல்ல!” என்றது கிளி. திகைப்புடன் அமர்ந்திருந்த உக்ரசிரவஸ் பின்னர் நாரதரை வரவழைத்து உசாவினார்.

“ஆம், இப்போது இது பேருரு கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் குலத்தொடர்முறையின் பெரும் சரடொன்றில் கோக்கப்படுகையில் பெரும்பொருளும் பொருளின்மையும் கொள்கின்றன. ஒவ்வொன்றும் இங்கு நிகழ்ந்தவை என்றும், நிகழ்ந்தே ஆகவேண்டியவை என்றும் தோன்றுகின்றன. எனினும் இன்னும் இது நிறைவடையவில்லை” என்றார் நாரதர்.

அதன் பின் உக்ரசிரவஸ் தன் மாணவர்களை அனுப்பி பாரதவர்ஷம் முழுக்க தேடியபோது ஜைமினி வேதப் பொருளனைத்தையும் அப்பெருங்காவியத்தின் நிகழ்வுகளினூடாக ஆராய்ந்து மெய்யறிதல்களை தொகுத்து எழுதிய பெருநூல் ஒன்றைப்பற்றி அறிந்தார். தானே நேரில் சென்று வணங்கி அந்நூலை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதையும் அக்காவியத்துடன் இணைத்து அவர் நைமிஷாரண்யத்தில் உரைத்தார்.

ஆனால் கூறி முடித்து உளநிறைவுடன் “இப்பெருங்காவியம் நிறைவடைவதாக! தெய்வங்கள் படைத்த மலைகள்போல் தன்னில் நிறைவு கொள்க!” என்றார். கிளி “அல்ல! அல்ல!” என்று சிறகடித்து எழுந்து சுழன்று அமர்ந்தது. அங்கே அகல்சுடரில் எழுந்த நாரதர் “ஆம், இன்று இக்காவியம் உலகியலையும் மெய்யியலையும் ஒருங்கு சொல்லும் பெருநூலாகியுள்ளது. தெய்வங்கள் மகிழும் களம் இது. எனினும் இது முழுமை கொள்ளவில்லை” என்றார்.

மீண்டும் தன் மாணவர்களை நிலமெங்கும் அனுப்பிய உக்ரசிரவஸ் உபவியாசரான சுமந்து அந்நூலில் திரண்டுவரும் தொல்நெறிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதற்கான தருணங்களுடன் பொருத்தி ஒரு நூலை யாத்திருப்பதாக அறிந்தார். நேரில் சென்று வணங்கி அந்நூலை பெற்றுக்கொண்டார்.

நெறிநூல்கள் இணைந்ததும் ஒவ்வொரு தருணத்திலிருந்தும் பாலில் திரண்டு வரும் வெண்ணை என நெறிகள் கொண்டதாக அக்காப்பியம் மாறியது. அதை நைமிஷாரண்யத்தில் கூறி முடித்து அவை வணங்கி உக்ரசிரவஸ் சொன்னார் “நிறைவுற்றதாகுக இந்நூல்! கடலென அலை கொண்டிருக்கையிலும் தன் எல்லைக்குள் தான் நின்றிருக்கும் முழுமை என்றாகுக!”

அப்போதும் “அல்ல! அல்ல!” என்று கிளி எழுந்தமர்ந்தது. நாரதர் தோன்றி “எளியோர் நூல் பயில்வது நெறிகளை கற்பதற்காகவே. நிகழ்வுகள் நெறிகளை அளிப்பதல்ல, அவை நெறியின்மைகளுக்கு செல்லவும் கூடும், எளியோருக்காக ஒவ்வொரு தருணத்திலும் உகந்த நெறிகள் இங்கு கூறப்பட்டமையால் இது அனைவருக்கும் உரிய நூலாகும். இந்நெறிநூல்களைத் தவிர்த்து இவற்றை படிப்பவர் அறிஞர், இது அறிஞர்களுக்குள்ள நூலும் ஆகும்” என்றார்.

“நிகழ்வுகளை தெய்வத்தின் நாற்களக் கருக்களாகக் காண்போர் யோகியர். அவர்களுக்கும் இந்நூல் உகந்ததே. இது இவ்வண்ணம் ஆகியது என்றாலும் ஒரு குறையை நான் காண்கிறேன். இன்னும் இதில் எஞ்சுவது ஏதோ உள்ளது” என்றார். திகைத்து செயலற்று அமர்ந்திருந்த சூததேவர் நீள்மூச்சுடன் மீண்டு தன் மாணவர்களை மீண்டும் நிலமெங்கும் அனுப்பினார்.

அவர்கள் வடக்கே ஒரு மலைச்சாரலில் அமர்ந்து உபவியாசரான பைலர் எழுதிக்கொண்டிருந்த நூலைப்பற்றி அறிந்து சொன்னார்கள். அது அப்பெருங்கதையில் இருந்து கிளை விரியும் முனிவர்களின், தேவர்களின் கதைகளாலான நூல். சூததேவர் அங்கே சென்று பைலரை வணங்கி அந்நூலை கொண்டுவந்து பயின்று தன் பெருநூலுடன் சேர்த்துக்கொண்டார்.

நான்குமுறை விரிவுபடுத்தப்பட்ட அப்பெருநூலை நைமிஷாரண்யத்தில் கூறி முடித்து அவர் விரல்தொட்டு “இது நான்குமுறை நிறைவுற்றது. நான்குமுறை செறிவுற்றது. நான்கு அரண்களால் காக்கப்படுவது. நான்கு போகிகளால் தூக்கப்படும் பல்லக்கு. இது இவ்வண்ணமே ஆகுக! இது நிறைவுறுக” என்றார்.

கிளி “இல்லை! இல்லை!” என்று எழுந்தது. அதன் சிறகசைவைப் பார்த்து அவர் திகைத்து அமர்ந்திருந்தார். நாரதர் “ஆம், இது நிறைவுற்ற நூலென்றே என் ஞானம் அறிகிறது. என் உளமும் ஆம் என்கிறது. எனினும் ஆழத்தில் ஒன்று எஞ்சியிருக்கிறது என்ற குரல் ஒலிக்கிறது” என்றார்.

சூததேவர் உளம் சலித்தவராக நைமிஷாரண்யத்திலிருந்து கிளம்பி தெருக்கள் தோறும் பாடி இரந்து, பொருள் கொண்டு உண்டு, விடுதிகளிலும் மரத்தடிகளிலும் துயின்று அலைந்தார். வேசரநாட்டில் ஒரு வயல்கரையில் தன் சுரைக்காய்க்குடுவை வீணையுடன் அமர்ந்திருந்தபோது, சற்று அப்பால் வயலிலிருந்து சேற்றுக் கைகளை உதறியபடி கரையேறி வந்து, ஓடையில் நீரில் கைகழுவிய பின்னர், வரப்புகளில் சிதறி அமர்ந்து தாங்கள் கொண்டுவந்த கலவை உணவை உண்ணத்தொடங்கிய உழவரை கண்டார்.

அவர்கள் உண்டபடி ஒருவரோடொருவர் நகையாடி சிரித்துக் கொண்டிருக்கையில் அவர்களில் ஒருவன் யுதிஷ்டிரனின் அவைக்கு வந்த கீரியின் கதையை கூறினான். ஒரு கீரி தன் உடலில் பாதியை தங்கமாக ஆக்கிக்கொண்டது. யுதிஷ்டிரனின் அவைக்கு வந்து தன்னை அடகுவைக்க முயன்றது. பாதிப் பொன் என்பதனால் பாதி விலை அளிக்கக் கோரியது. மீதி பொன்னல்ல என்பதனால் விலையே இல்லை என்றார் யுதிஷ்டிரன். தன்னை முழுக்க பொன்னாக்கும் பொருட்டு அது அலைந்தது.

அது முற்றிலும் பிறிதொரு கதையாக இருந்தது. சூததேவர் திகைத்தெழுந்து அதை கேட்டுக்கொண்டிருந்தார். “இக்கதையை எங்கு கேட்டீர்கள்?” என்று அவர் அவர்களிடம் கேட்டார். “இவ்வண்ணம்தான் நடந்தது, எங்கள் முன்னோர் கூறிய கதை இது” என்றனர் உழவர்.

அங்கிருந்து அவர் செல்லும்போது ஆய்ச்சியர் சிலர் தயிர் கடைந்தபடி பேசிக்கொண்டிருப்பதை கேட்டார். திரௌபதி இளமையில் தன் சுட்டுவிரலால் முடிசுழிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாள். அவ்வழக்கம் தீயதென்று அவள் அன்னை விலக்கினாள். முடிசுழிப்பவர் தன்னில் தான் ஆழ்ந்திருப்பவர், அவர் பிறிதொன்று அறிய இயலாது, முடி உனக்கு அழிவை கொண்டுவரும் என்று சொல்லி ஆசிரியர் விலக்கினார். ஆனால் அவ்வழக்கத்தை திரௌபதி விடவில்லை.

பின்னர் அவையில் ஆடை களையப்பட்டு, சிறுமை கொண்டு நின்று, அழுது வஞ்சினம் உரைத்து கானேகுகையில் அந்தத் திரளில் நின்ற தொல்குடிகளில் முதுமகளொருத்தி ‘முடிசுழித்ததால் கூந்தல் முடியாத நிலையை வந்தடைந்தாள்’ என்றாள். அதைக் கேட்டு திரௌபதி திரும்பிப்பார்த்து தன் ஊழை எண்ணி ஏங்கி கண்ணீர் வடித்தாள் என்றாள் ஓர் ஆய்ச்சி. இன்னொருத்தி “ஆமாம், முடிசுற்றி முடிசுற்றி திரௌபதியும் கெட்டாள், தொடைதுள்ளி தொடைதுள்ளி துரியோதனனும் கெட்டான்” என்றாள்.

சூததேவர் அந்த ஆய்ச்சியரிடம் சென்று “அன்னையே, இக்கதையை எங்கு கேட்டீர்கள்?” என்றார். “இது என் அன்னை எனக்கு சொன்னது” என்று அவர்களில் இளையோள் சொன்னாள். “உன் அன்னையை எனக்கு காட்டு” என்று சூததேவர் சொன்னார். அச்சிறுமகளுடன் சென்று அவ்வன்னையை கண்டார். “அன்னையே கூறுக, இந்தக் கதையை நீங்கள் எவ்வண்ணம் அறிந்தீர்கள்?” ஆய்ச்சி “இது என் அன்னை எனக்கு சொன்னது, எங்கள் நாவழியில் திகழ்வது” என்றாள்.

“அன்னையே, என் முதலாசிரியர் ஒரு சொல்லும் எஞ்சாமல் பெருநூல் யாத்தவர். அவருடைய மாணவர்களாகிய நாங்களோ மேலும் மேலும் சொல்சேர்த்து ஆழிபோல் குறையாததாக வளராததாக இந்நூலை ஆக்கியிருக்கிறோம். எங்களுக்குத் தெரியாதது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நான் எப்படி நம்பமுடியும்?” என்றார். “ஆழி மழையால் குன்றுகிறது, ஆறுகளால் கூடுகிறது. தானே அளித்து தானே பெற்றுக்கொண்டிருக்கிறது” என்று ஆய்ச்சி சொன்னாள்.

“இக்கதைப்பெருக்கு எங்கள் அனைவருக்கும் உரியது. இது எளியோர் நாவினூடாக கணம் கணமென பெருகிக்கொண்டேதான் இருக்கும். அறிஞர்களும் பாணர்களும் தொழுது பின்வந்தாகவேண்டியவர்கள்.” என்றாள் ஆயர்குலத்து அன்னை. சூததேவர் தன் ஆணவம் புண்பட்டு “நான் அறியத்தக்க ஒன்றின்பொருட்டு அடிபணியக் கடமைப்பட்டவன். ஆனால் அவ்வறிவு என்னை வென்று எழுந்து கிளைமலர்ந்ததாக இருக்கவேண்டும்” என்றார்.

“எனில் ஒன்று கேட்கிறேன், கூறுக! இளைய யாதவரென எழுந்த ஆழிவெண்சங்கு ஏந்திய அண்ணலின் குருதி இப்புவியில் நீடிக்கிறதா?” என்றாள் ஆய்ச்சி. “நூல்களனைத்தும் கூறியதன்படி அவர் வானில் ஒரு நீலப்பறவை பறந்துசென்றணைந்ததுபோல தடமில்லாது மறைந்தார்” என்றார் சூததேவர். “தெய்வமே ஆனாலும் மானுடனாகப் பிறந்தால் நீர்க்கடனின்றி விண்புகலாகுமா?” என்றாள் அன்னை. “இயலாது” என்றபின் சூததேவர் சொல்லிழந்தார்.

ஆய்ச்சி கேட்டாள் “கூறுக, அண்ணலின் குழல் எங்கு சென்றது?” சூததேவர் “அது அவர் விழியிலா மைந்தர் முரளியின் மாணவர்நிரை வழியாக சென்றுகொண்டிருக்கிறது” என்றார். புன்னகைத்து ஆய்ச்சி கேட்டாள் “எனில் பீலி எங்கு சென்றது?” சூததேவர் திகைத்தார். “பீலி எங்கு செல்லும்?” என்று ஆய்ச்சி மீண்டும் கேட்டாள். சூததேவர் “அடிபணிகிறேன் அன்னையே, கூறுக!” என்றார். “அது கோகுலத்திலேயே என்றுமிருக்கும். யமுனைக்கரையிலேயே திகழும். ராதையிலன்றி வேறெங்கும் இப்பெருங்கதை நிறைவுறாது” என்றாள்.

அடிபணிந்து வணங்கி சொல்பெற்று சூததேவர் கோகுலத்திற்கு சென்றார். யமுனையில் அவர் படகிறங்கியபோது பீலிமுடி சூடிய இளஞ்சிறுமி மின்னும் கரிய நிற உடலுடன் விரிந்த ஒளிர்விழிகளுடன் சிரித்தபடி ஓடிவருவதைக் கண்டு கைகூப்பி நின்றார். அவளை நோக்கி கைநீட்டியபடி நடைநிலைக்காத ஆண்குழந்தை ஆடையற்ற கரிய உடலில் மண்பொடி படிந்திருக்க, தலையில் சுருட்டிக் கட்டிய மென்குழலில் மயிற்பீலி நலுங்க ஓடிவந்து குப்புற விழுந்து கையூன்றி எழுந்து மீண்டும் துரத்தியது.

சிரித்து கைகூப்பி துள்ளிய அச்சிறுமியிடம் “அரசி, உன் பெயர் என்ன?” என்று சூததேவர் கேட்டார். “ராதை, என் அன்னை பெயரும் ராதை” என்று அவள் சொன்னாள். “இம்மைந்தன் பெயர் என்ன?” என்றார். “இவன் பெயர் கிருஷ்ணன். இவன் அன்னை பெயரும் ராதையே” என்றாள். சூததேவர் மெல்லிய நடுக்குடன் கைகூப்பி நின்றார். பின் “அவன் மூதன்னை யார்? அவன் கொடிவழி எது?” என்றார். “சூதரே, துவாரகையின் இளவரசி மயூரியன்னையின் மகள் ராதையின் மகள் ராதையே இவன் அன்னை” என்றாள் ராதை. சூததேவர் அவ்விளமைந்தனின் சிறுகாலடி படிந்த நிலத்தில் தன் தலையை வைத்து வணங்கி விழிநீர் உகுத்தார்.

சூததேவர் அங்கே யமுனைக்கரையில் நின்றிருந்த நீலக்கடம்பின் அடியில் சென்று அமர்ந்தார். அங்கே கல்பீடத்தின் மேல் யமுனையில் இருந்து எடுத்த ஒரு நீளுருளை நீலக்கல்லாக யாதவமைந்தனாகிய கிருஷ்ணன் நிறுவப்பட்டிருந்தான். அருகே சற்று பெரிய வெண்ணிற உருளைக்கல்லாக ராதை. நீலக் கல்மேல் ஒரு மயிற்பீலி சூட்டப்பட்டிருந்தது. ராதையின்மேல் ஒரு வெண்மலர். முன்னால் புற்குழல் வைக்கப்பட்டிருந்தது. நீலக்கடம்பு பூத்து மலர்கள் அக்கற்களின்மேல் உதிர்ந்துகொண்டிருந்தன.

சூததேவர் அங்கே அமர்ந்து யமுனையை பார்த்துக்கொண்டிருந்தார். பிறந்து சொல்லறிந்த கணம் முதல் அவர் உணர்ந்த ஆணவத்தை முற்றழித்து சுருங்கி இன்மையென்றாகி மறைந்து மீண்டும் எழுந்தார். அவர் கோகுலத்தில் எவரையும் சந்திக்கவில்லை. அங்கிருந்து கிளம்பி பதினெட்டு ஆண்டுகள் பாரதப் பெருநிலம் முழுக்க தானும் அலைந்தார். தன் மாணவர்களை நிலம்தோறும் அனுப்பினார். மக்கள் கூறும் அனைத்துக் கதைகளையும் கேட்டு தெரிந்துவரச் சொன்னார். அவையனைத்தையும் தொகுத்து உரிய இடங்களில் அமைத்து அப்பெருங்காவியத்தை முழுமை செய்தார்.

மீண்டும் அவர் அதை நைமிஷாரண்யத்தில் கூறியபோது இனி ஒன்றும் இல்லை என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இப்புவியில் இனி ஒருதுளிகூட எஞ்சியிருக்க வாய்ப்பில்லை என்று தனக்கே சொல்லிக்கொண்டார். “இது நிறைவுறுக! பிரம்மம்போல பெருகும்போதும் குறையாதது என்றே ஆகுக!” என்று அவர் கூறுகையில் “இல்லை! இல்லை!” என்று கூறியது அக்கிளி.

அவர் துயரடைந்து பார்த்துக்கொண்டிருக்க அனலில் தோன்றிய நாரதர் “ஆம், இனி இப்புவியில் சொல்லவும் கேட்கவும் ஏதுமில்லை. எனினும் இக்காவியத்தில் ஏதோ ஒன்று எஞ்சுகிறது என்று எனக்குள் குரலொன்று சொல்கிறது. இது பிரம்மம் என்றே ஆகவேண்டுமெனில் அதுவும் தேவை” என்றார்.

உளம் சோர்ந்து அங்கிருந்து கிளம்பிய சூததேவர் பதினெட்டாண்டுகள் கதையை பாரதவர்ஷமெங்கும் சொல்லி அலைந்து மீண்டும் நைமிஷாரண்யத்திற்கு வந்தார். அங்கு அவர் வந்தபோது முற்காலை. பறவைகள் துயிலெழுந்துகொண்டிருந்தன. கிளிகள் அக்காவியத்தின் வரிகளை கூறுவதை கண்டார். அக்காடு முழுக்க பல்லாயிரம் பறவைகளால் அது பாடப்பட்டது. சொற்கள் ஒவ்வொன்றும் பறவை மொழிக்கு மாற்றப்பட்டிருந்தன.

அதை கேட்டபடி மெய்ப்புகொண்டு விழிநீர் மல்கி மண் தொட்டு அவர் சொன்னார். “இக்காவியமே மண்ணிலெழுந்த நூல்களில் முதல்முழுமை கொண்டது. நிகர் வைக்க பிரம்மம் அன்றி பிறிதொன்றிலாதது!” அவர் தோளில் இருந்த கிளி எழுந்து சிறகடித்து “ஆம்! ஆம்! ஆம்!” என்றது. அவர் முன் தோன்றிய நாரதர் “மெய்! மெய்! மெய்!” என்றார். காட்டிலிருந்த பறவைகள் அனைத்தும் “ஆகுக! ஆகுக! ஆகுக!” என்றன.

“ஆகுக! ஆகுக! ஆகுக!” என்றது வளி. “ஆகுக! ஆகுக! ஆகுக!” என்றது ஒளி. “ஆகுக! ஆகுக! ஆகுக!” என்றது நிலம். “ஆகுக! ஆகுக! ஆகுக!” என்றது நீர். “ஆகுக! ஆகுக! ஆகுக!” என்றது வான். அவ்வண்ணம் இது தெய்வங்களால் ஏற்கப்பட்டது என்றான் சீர்ஷன்.

நிலவு பரந்த கடலில் இருந்து அலைகளெழத் தொடங்கின. அதன் ஓசை வலுத்துச் சூழ்ந்தது. கண்ணன் கீரத்தன் “முரசெழுகை” என்றான். “நிலவில் இக்கடல் ஒரு மாபெரும் வெண்முரசென்றாகிறது. என்றும் மாறா ஒற்றைச் சொல்லை உரைத்துக்கொண்டிருக்கிறது” என்றான்.

“கிளம்புவோம்” என்று சொல்லி சீர்ஷன் யாழுடன் எழுந்தான். அவர்கள் மீண்டும் படகில் ஏறிக்கொண்டார்கள். அலைகள் எழுந்து கொந்தளித்தன. “இப்பெருநூல் என்றுமுள தென்மொழிக்கும் மாற்றப்படவேண்டும்” என்று பாண்டியன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதி கூறினான். “சிப்பியில் ஆழியின் மொழியை படிக்கக் கற்ற ஒருவனால் அது நிகழ்க!” என்றான் சீர்ஷன். “மீனவனின் சொல் மீனவனில் பெருகுக!”

படகுகள் பேரலைகளில் ஏறி அமைந்து ஏறி விழுந்து அகன்று செல்ல மகேந்திரமலை மெல்ல அலைகளால் மூடப்பட்டு உள்ளே சென்றது. கடல் அவர்களை ஏந்தி அலைக்கழித்தது. கண்ணன் கீரத்தன் துடுப்பிட்டு கரைநோக்கி கொண்டுசென்றான். கன்னி காத்திருக்கும் முக்கடல் முனை எழுந்து அவர்களை நோக்கி வந்தது.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைஇரு இளம்பெண்களுக்கு…
அடுத்த கட்டுரைவைரமுத்து மீதான கண்டனங்கள்