‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14

ஜனமேஜயனின் வேள்விப்பந்தலில் சூததேவராகிய உக்ரசிரவஸ் தன் ஏடுகளை படித்து முடித்து மூடி வைத்து அவற்றின் மேல் வலக்கையின் சுட்டுவிரல்தொட்டு அமர்ந்து ஊழ்கத்தில் ஆழ்ந்தார். வேள்விப்பந்தலில் முற்றமைதி நிலவியது. வேள்விச்சுடர் எரிந்துகொண்டிருந்தது.

வியாசர் தன் அமைதியை கலைத்தார். அறியாக் காற்றில் பெருமரம் சற்றே நலுங்குவதுபோல அவர் அசைய அவர் உதடுகளில் செவி வைத்து சொற்களைக் கேட்டு வைசம்பாயனர் அவைக்கு அறிவித்தார். “ஆம், இதுவே இப்பெருங்காவியத்தின் நிறைவாகும். மானுடர் உணர்ந்தவை அனைத்தையும் கூறுவது. மானுடர் சென்ற வழிகள் அனைத்தையும் ஆராய்வது. மானுடருக்கு தெய்வங்கள் அளித்தவை அனைத்தையுமே தொட்டுச் செல்வது. இது மானுட விழைவுகளின், அச்சங்களின், பிழைகளின் கதை. மானுட வெற்றிகளின், கடத்தல்களின், நிறைவுகளின் கதை.”

“இது இந்த முக்கடல் சூழ் பாரதப்பெருநிலம்போல என்றும் இங்கிருக்கும். இது அக்கடல்களைப் போலவே ஓயாது அலையடிக்கும். இது பனிபடு வடமலை எழுந்த இந்நிலத்தின் மேல் ஒரு வைர மகுடமென நிலைகொள்ளும். அப்பனிமலைகளைப் போலவே அனைத்திற்கும் அழியாச் சான்றென அமையும். ஆம், அவ்வாறே ஆகுக!” அவருடைய சொற்கள் ஒலித்ததும் வேள்விப்பந்தலுக்குள் ஒரு செம்பருந்து உள்ளே நுழைந்து வேள்விமரத்தின் மேல் சிறகு மடித்து அமர்ந்தது. அந்தணரும் முனிவரும் “இந்திரனே, உன் வருகையே சான்று!” என்று குரலெழுப்பினர்.

நடுங்கும் கைகளை நெஞ்சுடன் கோத்து வியாசர் சொன்னார். இச்சொற்களில் நான் சிக்கியது நெடுங்காலம் முன்பு. எவ்வண்ணம் என்று நினைவுறுகிறேன்.  என் இளையோனாகிய பீஷ்மன் என்னை காண வந்தான். அவன் அன்று ஒரு முடிவை எடுக்கவேண்டிய நிலையில் இருந்தான். தன் இளையோன் விசித்திரவீரியனுக்காக காசிநாட்டு இளவரசியரை கவர்ந்து வரவேண்டும் என்று எண்ணி அது அறமா என்று தயங்கி அலைபாய்ந்தான். விடைதேடி என்னை அணுகினான்.

என்னிடம் அவன் கேட்டான் ‘மூத்தவரே, ஒரு ஷத்ரியனின் முதற்கடமை எது? எதன்பொருட்டு அவனுடைய பிற அனைத்துப் பிழைகளும் பொறுத்தருளப்படும்?’ நான் சொன்னேன் ‘ஷத்ரியனின் ஒரே கடமை நாட்டுக்காகவும் குடிகளுக்காகவும் வாழ்வதே. முற்றளித்து அவன் செய்யும் அனைத்தும் தெய்வங்களால் ஏற்கப்படும்.’ அன்று என் குடிலுக்கு வெளியே கட்டப்பட்டிருந்த கந்தினி என்னும் பசுவை சித்ரகர்ணி என்னும் சிம்மம் கவர்ந்துசென்றது. என் மாணவனாகிய சுதன் கையில் நீரள்ளி சிம்மத்துக்கு தீச்சொல்லிட முற்பட்டான். அப்போது நான் அவனைத் தடுத்து ‘பசுவைக் கொல்வதுதான் சிம்மத்தின் உயிரறம். ஆகவே அதற்கு பசுக்கொலை பழி கிடையாது’ என்றேன்.

அன்று மாலை கௌசிக சதுர்புஜன் என்னும் சூதன் என்னை தேடிவந்தான். அவன் என் முன் அமர்ந்து ஒரு பாடலை பாடினான். என்னை பார்க்கவருகையில் அவன் கங்கைக்கரையில் நீத்தார்சடங்குகள் செய்யும் ஹரிதகட்டம் என்னும் படித்துறைக்கு அப்பால் ஒரு கடம்பமரத்தடியில் நின்றிருக்கையில் ஒரு சிம்மம் பசு ஒன்றை கிழித்து உண்டு நிலமறைந்து ஓசையிட்டதை கேட்டான். அவன் அக்கணத்தில் எழுந்த சொல்லைக்கொண்டு எழுதிய கவிதை அது. முதற்கவி வான்மீகியின் குருமரபைச் சேர்ந்தவன் அவன். அவர் பறவையை வீழ்த்திய வேடனைக் கண்டு உளமுருகிப் பாடிய கவிதையின் மாற்றொலி என அது ஒலித்தது. அப்போது உணர்ந்தேன், நான் பேருருக்கொண்டு வளரவிருக்கும் ஒன்றை தொடங்கிவைத்துவிட்டேன் என்று.

நான் சொன்னது நெறி. நூல்களை நவிலும் எவரும் சொல்லக்கூடுவது. அதை அத்தனை ஐயமின்றி நான் சொன்னதுமே விண்ணகம் ஒருமுறை புரண்டுவிட்டது. அந்த ஒரே கணத்தில் என்னுள் வாழ்ந்த அத்தனை சொற்களும் உறுதியான பொருளை இழந்துவிட்டன. நிலையழிந்திருந்தேன். கானகத்தில் அலைந்தேன். பின்னர் ஒருநாள் என் காட்டிலேயே சித்ரகர்ணி என்னும் சிம்மம் இறந்துகிடப்பதை பார்த்தேன். அதை கழுதைப்புலிகள் கிழித்து உண்டன. குட்டிக்கழுதைப்புலி ஒன்று முதிர்ந்த சிம்மத்தின் இதயத்தை கவ்விக் கிழித்து உண்பதை கண்டேன். செயலும் விளைவும் என தொடரும் அம்முடிவிலியை அன்று நேரில் அறிந்தேன்.

அந்த கழுதைப்புலிக் குட்டியின் பெயர் குஹ்யசிரேயஸ். அது என்னிடம் சொன்னது ‘நான் விதைக்குள் வாழும் அழியா நெருப்பு. இங்குள்ள அனைத்தையும் உண்டு வளர்வேன். நான் விராடன். நானே வைஸ்வாநரன். எனக்குள் என் குலத்தின் தலைமுறைகள் வாழ்கின்றன.’ அந்த முதல் வரியிலிருந்தே இந்தப் பெருநூலை நான் இயற்றலானேன். ஆயிரம் ஆயிரமென பாடல்கள் என்னிலிருந்து எழுந்தன. அவை என்னிலிருந்து சென்று நாடெங்கும் பரவி என்னிடமே மீண்டன. அவ்வாறு மீண்டு வந்தவற்றை மட்டுமே நான் வைத்துக்கொண்டேன்.

பின்பு குருக்ஷேத்ரப் போர் முடிந்தபின் அக்களத்திற்கு சென்றேன். அங்கே என் இளையோன் வடக்குநோக்கி படுத்திருந்தான். அவன் அருகே அனைவரும் துயில்கொண்டிருந்தனர். நான் அவனருகே சென்று காலடியில் நின்றேன். அவன் விழித்து என்னை பார்த்தான். ‘இளையோனே, நான்தான்’ என்றேன். அவன் வாழ்த்து சொன்னான். ‘இளையோனே, அன்று நீ வியாசவனத்திற்கு வந்தநாளில் தொடங்கியது இது, அல்லவா?’ என்றேன். ‘ஆம், உங்கள் கவிதையை முன்னரே கேட்டுவிட்டேன். குஹ்யசிரேயஸ் என் நெஞ்சைக் கிழித்து உண்டது’ என்றான்.

‘நான் ஐயமின்றி சொன்ன அச்சொல்லில் இருந்து தொடங்கிய அழிவு இது இளையோனே, இங்கே இனி அறம்சார்ந்த எச்சொல்லையும் ஐயமின்றி அறுதியாகச் சொல்லமுடியாது என்று ஆக்கவிழைகிறேன்’ என்றேன். ‘அதன்பொருட்டே பெருங்காவியமொன்றை ஆக்குகிறேன்.’ அவன் புன்னகை புரிந்தான். நான் திரும்பி வருகையில் குஹ்யசிரேயஸை பார்த்தேன். என்னை நோக்கி வந்து வணங்கியது. ‘இளையோனே, குருதியால் நிறைந்துள்ளாயா?’ என்றேன். ‘உண்ணும் விலங்கின் குருதியால் நிறைகையிலேயே நான் நிறைவடைகிறேன்’ என்று அது சொன்னது. மீண்டும் ‘விதைக்குள் வாழும் அழியா நெருப்பு. இங்குள்ள அனைத்தையும் உண்டு வளர்வேன். நான் விராடன். நானே வைஸ்வாநரன். எனக்குள் என் குலத்தின் தலைமுறைகள் வாழ்கின்றன’ என்றது.

வியாசர் தொடர்ந்தார். ‘நாராயணம் நமஸ்கிருத்ய’ என்று சொல்லி தொடங்கிய இக்காவியம் என்னை தன் இடையிலேற்றிக்கொண்டு பறந்தது. சென்ற ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் இக்காவியத்தில் வாழ்ந்திருக்கிறேன். தெய்வங்கள் ஆத்மாவிற்கு உடலை அருளென்றும் தீச்சொல்லென்றும் அளிக்கின்றன. உடலினூடாகவே திகழவும், வெளிப்படவும், எய்தவும் இயல்கிறது. உடலே முற்றிலும் திகழவும், முழுமையாக வெளிப்படவும், இறுதியாக எய்தவும் தடையாக அமைகிறது. இக்காவியமும் அவ்வாறே. இதை உதறுகையிலேயே இதிலிருந்து விடுபடுகிறேன். இதனூடாக எய்திய அனைத்தையும் இதில் சேர்த்து இதிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்.

இனி ஒருபோதும் இந்நூலில் ஒரு சொல்லையும் நான் செவிகொள்ளப்போவதில்லை. ஒரு சொல்லையும் என் நா உரைக்கப்போவதில்லை. இக்காவியம் இருக்கும் வரை மண்ணில் எனது இருப்பும் உண்டென்பது தெய்வங்கள் எனக்கு அருளியது. ஆகவே அழிவிலி என்றும் நீடுவாழி என்றும் நான் அறியப்படுகிறேன். அதனால் இக்காவியம் எண்ணப்படும், உரைக்கப்படும், எழுதப்படும் எவ்விடத்திலும் எவ்வண்ணமும் நான் திகழப் போவதில்லை. எங்கு ஒருவன் இக்காவியத்தினூடாக கடந்து வந்து, இதை முற்றாக மறந்து, ஒரு சொல் எச்சமின்றி ஊழ்கத்தில் அமர்கிறானோ அவன் அருகிலேயே நான் அமர்ந்திருப்பேன்.

இக்காவியம் ஒரு மாபெரும் சொல்வலை. இதன் நடுவே நச்சுக்கொடுக்குகளுடன் எட்டுகாலில் அமர்ந்திருப்பது நானல்ல, அவன். சிக்குந்தோறும் விடுவிக்கும் முயற்சியிலேயே மேலும் சிக்குறுகிறார்கள். அவனுக்கு பலியாகிறார்கள். நான் இதை கடப்பவர்களுக்குரியவன். தான் அறிந்த ஒவ்வொன்றாலும் இதை ஆராய்பவர்களுக்கு பிறிதொன்றென வெளிப்படுவேன். தன் அறிவின்மையை இதன்மேல் சேணமென, கடிவாளமெனப் போடுபர்களுக்கு மேலும் அரியவனாக வெளிப்படுவேன். நான் மெய்யாக வெளிப்படுவது இதன் அறியவொண்ணாமையை அறிந்தவர்களுக்கு மட்டுமே.

இந்நூல் இன்னும் வளரும் இதன் விழுதுகளே மரங்களாகும். தனி மரம் காடென்றாகும் வியப்பை இதில் மானுடர் உணர்வார்கள். நிலமறிந்தவை அனைத்தும் இதில் எழும். வானறிந்தவை அனைத்தும் இதில் வந்து சேரும். மழைக்கால ஏரி என நாள்தோறும் விரியும். நவில்தோறும் வளரும். அத்தனைக்கும் அப்பால் இது மாற்றமில்லாததாக நீடிக்கவும் செய்யும். ஆசிரியனைக் கொன்று வெளிவரும் நூல் இரக்கமற்றது, அது தெய்வங்களால் மானுடம் மீது ஏவப்பட்டது என்று உணர்க!

இது அறிதலின் உச்சமென அமையும் நூல். அறிதலின் உச்சம் அறிதொறும் அறியாமை கண்டற்றால் என்பதால் இது அழிவிலாத அறியமுடியாமையின் வெளிப்பாடென நிலைகொள்ளும். இப்பல்லாயிரம் சொற்களினூடாக நான் ஒருவனை அறிய முயன்றேன். இப்புவி கண்ட புதிர்களில் அவனே முதன்மையானவன். அறிந்து அறிந்து வகுத்து வகுத்து ஆயிரம் பல்லாயிரம் பாடல்களினூடாகச் சென்று எங்கு தொடங்கினேனோ அங்கேயே அவ்வண்ணமே நின்றிருக்கிறேன் என்று அறுதிச்சொல்லினூடாக அறிந்தேன்.

என்றும் அவ்வண்ணமே அணுகும் அனைவருக்கும் இனியவனாகவும், அணுக அணுக அகல்பவனாகவும், அறிவோருக்கு தன்னை அளிப்பவனாகவும், அறிய ஒண்ணாமையில் அமைந்திருப்பவனாகவும் அவன் இருப்பான். ஆழிவெண்சங்கினூடாக அவனை அணுகுவோர் அறிகிறார்கள். அழகிய பீலி நலுங்கலினூடாக அவனை அணுகுவோர் அவனில் மகிழ்கிறார்கள். அவன் சொற்களினூடாக செல்பவர் தங்கள் சொற்களை கண்டடைகிறார்கள். அவன் செயல்களினூடாக செல்பவர் தங்கள் செயலை முடிக்கிறார்கள். அவனை முற்றாக அடிபணிவோர் அவனால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இந்நூல் இவ்வண்ணம் இங்கு திகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!

வியாசர் கூறி முடித்ததும் ஜனமேஜயனின் அவையிலிருந்த அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினார்கள். வாழ்த்தொலிகள் அலையலையாக எழுந்துகொண்டே இருந்தன. மெல்ல அவை அடங்கியதும் “அவையோரே, இந்த சர்ப்பசத்ர வேள்வி இங்கு நிறைவுறுக! தேவர்கள் மகிழ்க! மூதாதையர் நிறைவுறுக! அழியா நாகங்கள் பெருகுக! அவ்வண்ணமே ஆகுக!” என்று வியாசர் தன் இரு கைகளையும் தூக்கி வாழ்த்தினார். அவையிலிருந்தோர் அனைவரும் தங்கள் அருகே நிலத்தை தொட்டு “வாழ்க ஐந்தாம்வேதம்! வெல்க அழியாச் சொல்! நிலைகொள்க ஆசிரியன் புகழ்!” என்று வணங்கினர்.

வைதிகர்களும் குடித்தலைவர்களும் எடுத்துக்கொடுக்க ஜனமேஜயன் மீண்டும் முடிகொண்டு கோல்சூடி அரியணையில் அமர்ந்தார். அவர் ஆணைப்படி வைசம்பாயனர் முன்னமர அந்தணர்கள் வேள்விச்செயலை தொடங்கினர். அவிகுளங்கள் அனல் கொண்டன. வேள்விப்புகை எழுந்து மானுடஅறிவின் வெண்கொடியென விண்ணில் நின்றது. தூய அறிவென வானில் கரைந்தது, வானே ஆயிற்று.

வேள்வி முடிந்து பெருவிருந்து அங்கு நிகழ்ந்தது. அஸ்தினபுரியின் குடிகள் அனைவரும் திரண்டெழுந்து அந்த ஊண்பந்தல்களில் அன்னம் உண்டு திளைத்தனர். விடுதலை பெற்று மீண்ட தட்சன் அங்கே ஒரு சிறுகல்லை மும்முறை கொத்தியபின் ஒரு சிறு துளைக்குள் சென்று மறைந்தான். அங்கே அவன் குடியினர் பண்டு தோண்டிய பாதைகள் இருந்தன. அவன் மூதாதை ஒருவர் விட்டுவிட்டுச் சென்ற நாகமணியின் அருகே அவன் சென்று நின்று படமெடுத்தான். அவன் நிழல் நூறென ஆயிரமென பல்லாயிரமென பெருகியது. அவையெல்லாம் நாகங்களாயின. கணமாயிரம் மறுகணம் பல்லாயிரம் என நாகர்கள் அங்கே எழுந்துகொண்டிருந்தனர்.

நாகம் தொட்ட கூழாங்கல்லை ஓர் இளைஞன் மிதித்தான். அவனில் ஒரு சிறு அனல்துளியென காமம் எழுந்தது. தன்னுடன் வஞ்சத்தையும் பொறாமையையும் அது இட்டுக்கொண்டு வந்தது. அவ்வனல் பற்றிக்கொண்டதும் களியாட்டுகள் தொடங்கின. காமம் போரின்றி அமையதென்பதனால் அங்கு தடை செய்யப்பட்டிருந்த குருக்ஷேத்ரப் போரின் கதைகள் எழுந்து வந்தன. ஒரு தலைமுறைக்கு மேலாக அவர்கள் மறந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்த அப்பெரும்போரின் நுண்ணோவியங்கள் ஒவ்வொன்றும் தெளிந்து விரிந்தன.

அக்கதைகள் பாடல்களாக காற்றை நிறைத்தன. நடனங்களாக தெருவெங்கும் நடந்தன. பாணரும் சூதரும் மாகதரும் பாடினர். கூத்தரும் ஆட்டரும் விறலியரும் ஆடினர். பின்னர் அனைவரும் பாடி ஆடலாயினர். அஸ்தினபுரியே மாபெரும் நாடகமேடையென்றாகி அத்தனை குடிகளும் அதில் களியாட்டமிட்டனர். இனிய ஆடல்கள் முதலில் எழுந்தன. பீமனின் மற்போர்கள், மலர்ப்பயணம், அர்ஜுனனின் வில்வெற்றிகள், அவன் எய்திய காதல்கள். அவர்கள் அனைவரும் அர்ஜுனனும் பீமனும் ஆயினர். அவர்களின் காதலியரும் ஆயினர்.

பின்னர் வஞ்சமும் தீமையும் அழிவுமே களியாட்டாயின. வாரணவதத்தில் மாளிகை எரிந்தது. பாஞ்சால நாட்டில் வில் முறிந்தது. இந்திரப்பிரஸ்தத்தில் துரியோதனன் நீரில் விழுந்தான். அவைச்சிறுமை கொண்டு திரௌபதி வஞ்சம் உரைத்தாள். கானக வாழ்வில் தேவர்களை நேருக்குநேர் கண்டனர் பாண்டவர். மும்முறை தூது சென்றான் ஆழிவெண்சங்கு ஏந்திய ஆசிரியன். எழுந்தது குருக்ஷேத்ரப் பெரும்போர். தந்தையரும் ஆசிரியரும் ஒருபுறம் நிற்க காண்டீபம் ஏந்தி நின்ற பெருவீரன். அவனுக்கு தேர் தெளித்த வேதமுதல்வன்.

அவர்கள் அக்கதையை ஆயிரம் முறை தங்களுக்குள் எவரோ சொல்லிக்கொண்டிருந்ததை அறிந்தனர். அதில் ஒரு சொல்லைக்கூட தாங்கள் மறந்ததில்லை என்று உணர்ந்தனர். அதில் வாழ்கையிலேயே இங்கு வாழ்வதன் எச்சங்கள் அனைத்தும் நிரம்புகின்றன என்று உணர்ந்தனர். அஸ்தினபுரியின் தெருக்களெங்கும் அக்கதையே நிரம்பியிருந்தது. அப்பெருங்காவியத்திலிருந்து சூதர்கள் பாடல்களை பாடிப்பாடி அங்கே புத்தம் புதியதென நிலைநாட்டினர்.

அரசனாலும் அந்தணராலும் வணங்கப்பட்டு விடைபெற்ற வியாசரை அவருடைய மாணவர்கள் மஞ்சலில் சுமந்து கொண்டுசென்று தேரில் ஏற்றினர். குடிகளின் வாழ்த்தொலிகள் சூழ வியாசர் நகரிலிருந்து கிளம்பிச்சென்றார். அவர் சென்ற பாதை முழுக்க குடிகள் அந்தத் தேர்த்தடத்தை தொட்டு வணங்கினர். அந்தப் பொடியை எடுத்து தங்கள் மைந்தரின் நெற்றியிலிட்டு சொல் வளரவேண்டும் என்று வாழ்த்தினர்.

வியாசர் வியாசவனத்திற்கு செல்லவில்லை என்றும் அங்கிருந்து பிறிதெங்கோ சென்றுவிட்டாரென்றும் கூறப்பட்டது. வியாச மாணவர்கள் நால்வரும் அவரின்றி திரும்பி வந்தனர். அவர் எங்கிருந்தார் எங்கு சென்றார் என்பதை அவர்கள் கூற மறுத்துவிட்டனர். வைசம்பாயனர் அஸ்தினபுரியின் அமைச்சரென தொடர்ந்தார். சுமந்து வியாசவனத்திலேயே இருந்தார். ஜைமினியும் பைலரும் வடபுலமும் தென்புலமும் சென்றனர்.

வேள்வி முடிந்த ஏழாம் நாள் சூததேவராகிய உக்ரசிரவஸ் நைமிஷாரண்ய காட்டிற்கு சென்றார். உக்ரசிரவஸ் மட்டுமே அப்பெருங்காவியத்தின் முழுச் சொல்லையும் தன்னுள் வைத்திருந்தார். அவர் இறுதியாக அந்நகரிலிருந்து செல்கையில் அந்நகரே ஒரு நாடக அரங்கென அக்காவியத்தை நடத்திக்கொண்டிருப்பதை கண்டார். ஒருபால் துரியோதனன் பீமனால் தொடையறைந்து கொல்லப்பட்டான். பிறிதொரு இடத்தில் கர்ணன் அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டான். பிறிதொரு இடத்தில் அஸ்வத்தாமனும் கிருபரும் அர்ஜுனனுடன் போரிட்டுக்கொண்டிருந்தனர். பீஷ்மரை இளையோர் எதிர்கொண்டனர்.

அஸ்தினபுரியை விட்டு நீங்குகையில் கிழக்குக் கோட்டைவாயிலில் நின்ற உக்ரசிரவஸ் தான் அறிந்த அனைத்தும் அங்கே நிகழ்ந்துகொண்டிருப்பதை கண்டார். நோக்க நோக்க அது வளர்ந்து உருமாறிக்கொண்டிருப்பதை அறிந்தார். விழியை வலப்பக்கம் திருப்பியபோது காந்தாரி வஞ்சமகளெனத் திகழ்வதையும் இடப்பக்கம் திருப்பியபோது அவளே பேரன்னையென அருள்வதையும் பார்த்தார். குந்தி வலப்பக்கம் மூதன்னையென்றும் இடப்பக்கம் விழைவின்வடிவென்றும் தெரிந்தாள். சகுனியின் பகடையிலமைந்த தெய்வம் எழுந்து நின்று வெறியாட்டமாடியது. இந்திரப்பிரஸ்தத்தின் ஆடிமாளிகையில் தேவர்கள் களியாட்டமிட்டனர்.

உக்ரசிரவஸ் புன்னகையுடன் இறங்கி கோட்டை முற்றத்தை அடைந்து குறுங்காட்டினூடாக தனித்து நடந்து சென்றார். ஒவ்வொரு சொல்லாக தான் கற்ற அக்காவியத்தை தன்னுள் மீட்டிக்கொண்டிருந்தார். பன்னிரு நாட்கள் காட்டினூடாகச் சென்று அவர் நைமிஷாரண்யத்தின் விளிம்பை அடைந்தபோது அவ்விரவில் மரத்தழைப்புக்குள் பந்தங்களின் ஒளியைக் கண்டு அருகணைந்தார். அங்கே நாகர்களின் ஒரு தெய்வக்கொடை நடந்துகொண்டிருந்தது.

மன்றுமேடையில் பதிட்டை செய்யப்பட்டிருந்த நாகச்சிலைகளுக்கு மஞ்சள் பூசி நீல மலர்மாலைகள் அணிவித்து கமுகுப்பூ சாமரம் அமைத்து பூசகர் பூசை செய்தனர். இரண்டு பெரிய யானங்களில் நீல நீர் நிறைத்து விலக்கிவைத்து அவற்றை நாகவிழிகள் என்று உருவகித்து பலியிட்டனர். நாகசூதர் இருவர் முன்வந்து நந்துனியை மீட்டி நாகங்களின் கதைகளை பாடத்தொடங்கினர். பாடல் விசையேறியபோது அவர்கள் நடுவே அமர்ந்திருந்த நாகர்குலத்து முதுமகளின் உடலில் நாகநெளிவு உருவாகியது. அவள் கண்கள் இமையா விழிகளாக ஆயின. அவள் மூச்சு பாம்புச்சீறலாகியது.

“காலகனின் மகளாகிய நான் மானசாதேவி. ஜகல்கௌரி, சித்தயோகினி, நாகபாகினி. எந்தை தட்சன் உயிர் பெற்றான். வளர்கின்றன நாகங்கள். செழிக்கின்றது கீழுலகம்” என அவள் சீறும் குரலில் சொன்னாள். இரு தாலங்களிலும் இருந்த நீல நீர் பாம்புவிழிகளாக மாறுவதை நாகர்கள் கண்டனர். நந்துனியும் துடியும் முழங்க அவர்கள் கைகூப்பினர். அப்பால் மரத்தின்மேல் அமர்ந்து அதை கண்ட உக்ரசிரவஸ் நாகம் புற்றுக்குள் நுழைகையில் தலையை வாயிலில் முதலில் வைத்து உடலை வளைத்து உள்ளிழுப்பதுபோல அந்தக் காவியம் தன்னுள் நுழைவதை உணர்ந்தார்.

நைமிஷாரண்யத்தில் சௌனகரும் அவர் மாணவர்களும் தவம் செய்துகொண்டிருந்தனர். புலரியில் அங்கே வந்து சேர்ந்த சூததேவரிடம் சௌனகர் “கூறுக சூதரே, வியாசரின் பெருங்காவியத்தின் முழு வடிவை அறிந்திருக்கிறீரா?” என்றார். “ஆம், அறிவேன்” என்றார் சூததேவர். “எனில் கூறுக!” என்று அவர்கள் அமர்ந்தனர். உக்ரசிரவஸ் “இந்தத் தொல்கதையை அழிவற்றதென்று அந்தணர் சொல்கிறார்கள். முன்பு நைமிஷாரண்யத்தில் இருந்த அந்தணர்கள் என் தந்தையாகிய லோமஹர்ஷணரிடம் இக்கதையை கேட்டனர். அவர் அவர்களிடம் இக்கதையை சொன்னார். நான் அவர்களிடம் கேட்டபடி சொல்வேன்” என்றார்.

உக்ரசிரவஸ் மாநாகங்களின் கதையிலிருந்து தொடங்கினார். “முதற்றாதை தட்சரின் மகளும் பெருந்தாதை கஸ்யபரின் மனைவியுமான அன்னை கத்ரு விண்ணையும் மண்ணையும் ஆயிரத்தெட்டு முறை சுற்றிக்கிடக்கும் மாபெரும் கருநாகம். அவள் கண்கள் தண்ணொளியும் குளிரொளியும் ஆயின. அவள் நாக்கு நெருப்பாக மாறியது. அவள் மூச்சு வானை நிறைக்கும் பெரும் புயல்களாகியது. அவள் தோலின் செதில்களே விண்ணகத்தின் மேகத்திரள்களாயின. அவள் சருமத்தின் ஒளிப்புள்ளிகளே முடிவற்ற விண்மீன் தொகைகளாக ஆயின. அவள் அசைவே புடவியின் செயலாக இருந்தது. அவளுடைய எண்ணங்களே இறைவல்லமை என இங்கு அறியப்படலாயிற்று. அவள் வாழ்க!”

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைஹிந்து தமிழ்- நாயும் நாணும் பிழைப்பு
அடுத்த கட்டுரைபீடம், கழுமாடன், சாவி கடிதங்கள்