‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13

குகையின் இருள் மேலும் செறிந்து பருவடிவென, பசை என, படலம் என, உடலை உந்தி பின் தள்ளும் விசையென மாறியது. ஒவ்வொருவரும் அவ்விருளை எதிர்த்து போரிடுபவர்கள்போல கைகளை முன்னால் நீட்டி, முழு விசையால் உடலை அழுத்திச் செலுத்தி, அதை துளைத்து ஒவ்வொரு அடியாக முன் வைத்து நடந்தனர். ஒவ்வொரு அடிவைப்பிலும் மேலும் திசையின்மைக்கு சென்றனர். மெல்ல மெல்ல அவர்களின் உள்ளம் விசையழிந்தது. செல்வதும் நிற்பதும் பின்னடைவதும் ஒன்றே என்று ஆன அந்த இருளில் அவர்கள் உணர்ந்த பொருளின்மை உடலை அசைவிழக்கச் செய்தது.

அப்போது யுதிஷ்டிரன் ஒரு மெல்லிய முனகலோசையை கேட்டார். அது ஒரு நாயின் ஓசையென்று தெரிந்தது. அவர் உரத்த குரலில் நாயை நோக்கி ஓர் ஓசையை எழுப்பினார். மானுடர் நாயுடன் பேசுவதற்காக உருவாக்கிய மொழி அது. சொல்லற்றது. சீழ்க்கையாகவும், உதடசைவாகவும், தனிச்சொற்களாகவும் ஒலிக்கக்கூடியது. நாய் நின்று செவிகூர்வதை உணர முடிந்தது. பின்னர் இருட்டில் இரு மின்மினிகள்போல் அதன் விழிகள் தெரிந்தன. மூக்கு கூர்ந்து மெல்ல காலடி வைத்து அவர்களை நோக்கி வருவதை யுதிஷ்டிரன் காலடி ஓசையால் தெரிந்துகொண்டார்.

யுதிஷ்டிரன் அது தன்னருகே வரும்பொருட்டு அழைத்துக்கொண்டே இருந்தார். நாய் அவரது மணத்தை அறிந்ததும் முனகல் மெல்லிய குரைப்பாகியது. யுதிஷ்டிரன் தான் கட்டுண்டு கிடப்பதாகக் காட்டும் ஓசையை எழுப்பினார். நாய் குரைத்தபடி பாய்ந்து வந்து அவர் மேல் முட்டியது. அவர் காலை முகர்ந்து சுற்றி வந்து துள்ளியது. வாலைச் சுழற்றியபடி எழுந்து எழுந்து அவர் கையை முத்தமிட்டது. அதன் கொஞ்சலோசை சிறு குழவிகள் தன்னை தூக்கிக்கொள்ளும் பொருட்டு எழுப்பும் குரல் போலிருந்தது.

யுதிஷ்டிரன் அதன் தலையில் கையை வைத்து காதுகளுக்கு நடுவே வருடினார். அதன் காதுகளைப் பிடித்து நீவிவிட்டார். தாடைக்கு அடியில் கையை வைத்து சுரண்டுவதுபோல் வருடினார். அது மகிழ்ந்து அப்படியே தரையில் படுத்து நான்கு கால்களையும் மேலே தூக்கி அசைத்தது. அவர் அதன் அடிவயிற்றை நீவினார். அவர் உடலில் தன் உடலை உரசிக்கொண்டு பக்கவாட்டில் சென்றது. முன்னால் ஓடிச் சென்று, உடலை பக்கவாட்டில் நிறுத்தி, வாலை விரைப்பாக்கி துடிக்க வைத்தபடி அவரை நோக்கி வந்தது. பின்னர் அவரை முகர்ந்துவிட்டு முன்னால் ஓடியது. அங்கு நின்று குரல் எழுப்பிய பின் மீண்டும் அருகே வந்து கையை முத்தமிட்டது.

அது அளித்த ஓசைகளையும், அதன் காலடிகள் படிந்த இடத்தையும், கூர்ந்து நோக்கி அதனூடாக யுதிஷ்டிரன் அக்குகையிலிருந்து வெளிவந்தார். அவரைத் தொடர்ந்து அர்ஜுனனும் பீமனும் நகுலனும் சகதேவனும் திரௌபதியும் வந்தனர். தொலைதூரத்தில் சிறு கையளவு வெளிச்ச வட்டம் தெரிந்தது. ஒரு நிலவு எழுந்ததுபோல. பின்னர் அது பெரிதாகியபடி வந்தது. அதன் வெளிச்சத்தில் அக்குகையின் சுவர்கள் தெரியத்தொடங்கின. தசைகள்போல அச்சுவர்கள் ஈரமும் நெகிழ்வும் கொண்டிருந்தன.

குகைப்பாதை ஒருவர் மட்டுமே நகர்ந்து செல்லும் அளவுக்கு சிறியதாகியது. பின்னர் படுத்து முழங்கைகளால் ஊர்ந்து மட்டுமே செல்லும் அளவுக்கு குறுகியதாகியது. சுவர்களிலிருந்து வழுப்புள்ள சேறு அவர்கள் மேல் படிந்ததால் புழுக்களைப்போல அந்தச் சிறு பாதையினூடாக தவழ்ந்துதான் செல்ல முடிந்தது. பின்னர் அப்பாதை சரிந்து செங்குத்தாக கீழிறங்கத் தொடங்கியது. வழுக்கிச் சென்றமையால் அவ்விசையை கட்டுப்படுத்த யுதிஷ்டிரனால் முடியவில்லை.

வழுக்கி வழுக்கி அப்பாதையினூடாகச் செல்கையில் சிறு சிறு கல்நீட்சிகளில் சிக்கி அவருடைய ஆடை முற்றகன்றது. தலை ஒரு சிறுதுளையில் சென்று அறைந்து அதை திறக்க பிதுங்கி கலங்கிய சேறும் நீருமாக தலைகீழாக வெளியே விழுந்தார். அவருக்கு மேல் பீமனும் விழுந்தான். அவர் எழுந்து தன் உடலை உதறி நின்றபோது ஆடையற்ற உடலில் இருந்து சேறு வழிந்தது. அந்தச் சேறு உடனே உலர்ந்து அரக்கென்றாகியது. அதை கிழித்து தன்னை பிடுங்கிக்கொண்டே வெளியேற முடிந்தது.

உடலை உதறிக்கொண்டு யுதிஷ்டிரன் சற்று அப்பால் நின்று துள்ளித் துள்ளி குரைத்துக்கொண்டிருந்த நாயை நோக்கி சென்றார். நாயின் உடலில் சேறில்லை என்பதை அப்போதே கண்டார். அது தன் உடலை உதறி காதுகளை அடித்துக்கொண்டு அவரை முகர்ந்து பார்த்து பின் ஓசை எழுப்பி அவரை அழைத்துக்கொண்டு முன்னால் சென்றது. பீமனும் எழுந்து அவருக்குப் பின்னால் வந்தான். அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் இறுதியாக திரௌபதியும் வந்து விழுந்தனர். ஆடையற்ற உடலுடன் சேறு படிந்து மண்சிலைகளென அவர்கள் அப்பாதையில் நடந்து மேலே சென்றனர்.

அது முட்களும் கூழாங்கற்களும் நிறைந்த மலைஏற்றமாக இருந்தது. ஒவ்வொரு காலடிக்கும் வெவ்வேறு விலங்குகள் நடமாடிய வழிகள் பிரிந்து பின்னிக் கிடந்தன. ஒருமுறை வழிதவறினால் கூட மீண்டு வழிக்கு வருவதற்கு பல நாட்களாகும். யுதிஷ்டிரன் அந்த நாயை மட்டுமே நோக்கினார். அது முகர்ந்து வழி தேடிச்செல்ல அதை தொடர்ந்து சென்றார். அது பல இடங்களில் சுற்றுவழிகளில் செல்கிறதோ என்று தோன்றினாலும்கூட தன் அகம் சுட்டிய வழிகளை நோக்கி திரும்பவில்லை. இயல்பாகவே திரௌபதியும் பிறரும் அவரைத் தொடர்ந்து வந்தனர்.

முடிவிலாது சுருளவிழ்ந்துகொண்டிருந்தது அந்தப் பாதை. செல்லுமிடத்திற்கே மீண்டும் சென்றுகொண்டிருப்பதுபோல. எங்குமே செல்லவில்லை என்பதுபோல. திரௌபதி வழியில் கால் தளர்ந்து ஒரு பாறையில் அமர்ந்துவிட்டாள் என்று தெரிந்தது. பீமன் நின்று அவளை பார்த்தான். பின்னர் ஓடிச்சென்று அவளை அணுகி கையை நீட்டினான். திரௌபதி அவன் கையை விலக்கி “செல்க!” என்றாள். “இல்லை, நீயில்லாது செல்லப்போவதில்லை” என்றான் பீமன்.

“என் எடையையும் நீங்கள் சுமக்கவேண்டும்” என்று அவள் சொன்னாள். “நீ என்றும் எனக்கு சுமையாக ஆனதில்லை” என்றான் பீமன். “செல்க, செல்க, எனக்காக நீங்கள் எதையும் இழக்கவேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. “உன்னை இழந்து நான் பெறுவதொன்றுமில்லை” என்று பீமன் சொன்னான். “எழுக, உன்னை நான் தூக்கிக்கொள்கிறேன்!” என்றபோது அவன் புன்னகை புரிந்தான். “நம் இளமையில் உன்னைச் சுமந்தபடி கங்கையில் நீந்தினேன்.” அவள் முகம் மலர்ந்து “ஆம்” என்றாள். “நம் முதல் சந்திப்பில்.”

அந்த இனிமையால் இருவருமே எடைகொண்டவர்களானார்கள். பீமன் கால் தளர்ந்து அவளருகே அமர்ந்தான். “எடை நான் நினைத்ததைவிட மிகுதி” என்றான். அவளால் கையையே அசைக்க முடியவில்லை. “துயருக்குத்தான் எடைமிகுதி என எண்ணியிருந்தேன்” என்றாள். “சென்றகாலத்து இன்பம் பலமடங்கு எடைகொண்டது” என்றான் பீமன். “இனி நாம் செல்ல இயலாது. நம் மீட்பு இதுவரை மட்டுமே” என்று பீமன் கூறினான். “எனில் இந்த இடமே நன்று” என்றாள் திரௌபதி. “இங்கே இனிய காற்று வீசிக்கொண்டிருக்கிறது. முடிவிலி வரையென்றாலும் இங்கிருப்பது நன்றே.”

அந்த இனிமையில் திளைத்தபடி தேவர்கள் என முகம் மலர்ந்து அவர்கள் கைகளை தொட்டுக்கொண்டு அங்கே அமர்ந்திருந்தனர். திரௌபதி தன் குழல்முடிச்சில் இருந்து ஒரு மலரை வெளியே எடுத்தாள். “இது என்னவென்று தெரியுமா?” என்றாள். “இது கல்யாண சௌகந்திகம்” என்று பீமன் வியப்புடன் சொன்னான். “இதை நீ கொண்டுவந்தாயா என்ன?”

“ஆம், என் உடைமைகளை துறக்கவேண்டும் என்று எண்ணி ஒவ்வொன்றாக அகற்றியபோதெல்லாம் இதை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன். இங்கு வரும்பொருட்டு கிளம்பியபோதும் இறுதியாக இதை வைத்திருந்தேன். நூறுமுறை வீச எண்ணினேன். என்னால் இதை வீச முடியாதென்று அறிந்தேன். அந்தக் குகையினூடாக வந்தபோது என் ஆடையனைத்தும் அகன்றது. ஆனால் எழுந்தபோது என் குழற்சுருளில் இது எஞ்சியிருந்தது” என்றாள் திரௌபதி. “இதன் எடையால்தான் நான் நடை தளர்ந்தேன்.”

அவர்களைச் சூழ்ந்து பொன்னிற வானம் இறங்கி வந்தமைந்தது. அவர்கள் பொன்னொளிரும் உடல் கொண்டவர்களானார்கள். “நீங்கள் என்னை தேரில் வைத்து இழுத்த நாளை நினைவுறுகிறேன்” என்று திரௌபதி நாணத்துடன் சொன்னாள். பீமன் உரக்க நகைத்தான். அக்கணம் முதல் அவர்கள் வாழ்ந்த காலத்தின் இனிய காதற்கணங்களை மட்டுமே தொடுத்து உருவாக்கிய ஒரு காலத்தில் அவர்கள் அங்கிருந்தனர். அக்கணங்களில் பல்லாயிரத்தில் ஒன்றுமட்டுமே புறத்தே நடந்தது, எஞ்சியவை எல்லாமே அகத்தில் பொலிந்தவை என்று அவர்கள் உணர்ந்தனர்.

நகுலன் யுதிஷ்டிரனின் அருகே வந்து “மூத்தவரே, திரௌபதி விழுந்துவிட்டாள், அதைக் கண்டு பீமசேனன் திரும்பிவிட்டார்” என்றான். யுதிஷ்டிரன் அச்சொற்களை கேட்கவில்லை, அவ்வண்ணம் ஒருவர் தன் அருகே வந்ததையே உணரவில்லை. அவருக்கு முன்னால் நாய் வாலைச் சுழற்றி துள்ளி, திரும்பிப்பார்த்து முனகி, அழைத்து வழிகாட்டிச் சென்றது. நகுலன் சீற்றத்துடன் “அவரை விட்டுவிட்டு எவ்விண்ணுலகையும் நாம் ஈட்ட இயலாது” என்றான். யுதிஷ்டிரன் திரும்பாமல் நடப்பதைக் கண்டு “என் விண்ணுலகில் அவர் இருப்பார்” என்றபடி திரும்பிச்சென்றான்.

நின்று நகுலனைப் பார்த்தபின் ஒரு சொல்லும் கூறாமல் சகதேவன் உடன் சென்றான். செல்லும் வழியில் அவர்கள் கைகோத்துக்கொண்டனர். தோள் தொட்டனர். உடல் இணைந்தனர். ஓருடலாக மாறி நின்றபோது அவர்களைச் சூழ்ந்தது ஒரு பொன்னொளி. பிறந்த கணம் முதல் தொடர்ந்திருந்த தவிப்பொன்று அகல அவர்கள் ஆகமெல்லாம் தித்திக்க நின்று ததும்பினர். கருவறைக்குள் ஓருடலென இருந்த புதைவுக்கு மீண்டனர். அங்கே முடிவிலாத கனவுகளால் ஆனதாக இருந்தது காலம்.

முற்றிலும் மணல் நிரம்பி பல்லாயிரம் சுவடுகள் மட்டுமே ஆகிக்கிடந்த வழியினூடாக யுதிஷ்டிரன் நடக்க பின்னால் வந்த அர்ஜுனன் “மூத்தவரே, நானும் செல்கிறேன். அவர்கள் நால்வரும் அங்கு விழுந்துகிடக்கையில் மேலும் சென்று நான் அடைவதென்ன?” என்றான். அவன் திரும்பி நடந்ததைக்கூட யுதிஷ்டிரன் அறியவில்லை. “மூத்தவரே, நாம் அடைந்தபோதெல்லாம் இழந்திருக்கிறோம். இழந்தவையே மேலானவை என்று அடைந்தபின் உணர்ந்திருக்கிறோம்” என்றான். அதன்பின் “என் அறம் இதுவே” என்று திரும்பி நடந்தான்.

அவன் திரும்பிச்சென்ற பாதை வழி பிரிந்து அவனை தனித்து அழைத்துச் சென்றது. அவன் அங்கே நிலத்தில் ஒரு மயிற்பீலி கிடப்பதை கண்டான். நெஞ்சு விம்ம ஓடிச்சென்று அதை எடுத்தான். அவன் செவியில் ஒரு குழலோசை எழுந்தது. எண்புறமும் பொன்னொளிமுகில்கள் வந்து சூழ்ந்துகொண்டன. “சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ!” என்னும் விண்முழக்கத்தை அவன் கேட்டான்.

யுதிஷ்டிரன் சென்ற பாதை சுழன்று மலைமேல் ஏறியது. காற்று குளிர்கொள்ளத் தொடங்கியது. உடலைக் குறுக்கி நடுங்கியபடி அவர் நடந்தார். காற்றில் வெண்பனித்துருவல்கள் பொழிந்தன. கரிய நாய் வெண்ணிறப் பனிப்பொருக்கால் மூடப்பட்டது. உடலை உதறிக்கொண்டு கருமை மீண்டு உடனே மீண்டும் வெண்ணிறமாகியது. தரையில் வெண்பனி நுரையென, பொருக்கென படிந்திருந்தது. அதில் கால்கள் புதைந்து புதைந்து எழ யுதிஷ்டிரன் சென்று கொண்டிருந்தார்.

சூழ்ந்திருந்த திசைகள் அனைத்தும் வெண்மையாக மாறின. வானும் வெண்ணிறம் கொண்டிருந்தது. வெண்மையன்றி பிற வண்ணங்கள் ஏதும் அங்கிருக்கவில்லை. கண்களே வண்ணங்களை இழந்துவிட்டிருந்தன. அவர் திரும்பிப்பார்க்கையில் தனது கால்தடம் மட்டும் நீள்சரடு என விழுந்துகிடப்பதை கண்டார். நாய் களைத்து அவருக்குப் பின்னால் மூக்கு தாழ்த்தி, வாலை காலிடுக்கில் செருகிக்கொண்டு தளர்ந்த நடையுடன் வந்துகொண்டிருந்தது.

தன் உடலை இறுதி எண்ணத்துளியால் உந்தி அவர் முன்னால் கொண்டு சென்றார். ஏறுகிறோமா இறங்குகிறோமா என்று தெரியவில்லை. நின்று கொண்டிருக்கிறோமா நடக்கிறோமா என்பதற்கும் அத்தொலைவிலா வெளியில் வேறுபாடு இருக்கவில்லை. சென்றுகொண்டிருப்பது என்பது தன் உள்ளத்தில் மட்டும் நிகழ்கிறதா, அது ஒரு ஆழ்கனவு நிலையா என்று அவர் எண்ணினார். முற்றிலும் தன்னை அந்த விழிக்கு அளித்துவிடுவதன்றி செய்யக்கூடுவது ஒன்றில்லை.

அவர் நடந்துகொண்டிருக்கையில் ஒவ்வொன்றும் சுருங்கி உட்புகுந்து மறைந்தன. நெடுநேரத்திற்குப் பின் அவர் தன்னிலை உணர்ந்தபோது இங்குளேன் என்னும் உணர்வாக மட்டுமே எஞ்சியிருந்தார். அதை அவர் நோக்கியதுமே அதுவும் அகன்று வேறெங்கோ வேறு எவருடையதோ என நின்றது. அந்தப் பனிவெளியில் தாமரைக்கூம்புக்குள் என தன்னுள் எஞ்சிய சிறு வெம்மை. அதுவும் மறைந்து மறைந்து மீண்டது.

தொலைவில் பொன்னிற மலைமுடி ஒன்றை கண்டார். அந்த மலையை கூர்செதுக்கியதுபோல. வானில் கதிரவன் இல்லை. வான் ஒளி கொண்டிருக்கவும் இல்லை, ஆயினும் அந்த மலைமுடி பொற்சுடரெனத் தெரிந்தது. அசையாது நிற்கும் அகலின் தழல். அவர் அதை நோக்கி சென்றுகொண்டிருந்தார். செல்லச்செல்ல அது பெரிதாகவோ சிறிதாகவோ மாறவில்லை. அவர் அணுகவோ அகலவோ இல்லை என உணர்ந்தார்.

நெடும்பொழுது அவர் அதை நோக்கி சென்றுகொண்டிருந்தார். பின்னர் அவர் உணர்ந்தார் அந்த நாய் அவருக்கு நெடுந்தொலைவு பின்னடைந்திருந்தது. முற்றாக அவரை கைவிட்டதுபோல். திரும்பிப்பார்த்தபோது தனது காலடிகள் பனியில் இல்லை என்பதை கண்டார். அவை பனிமூடி மறைந்திருக்கவில்லை, அங்கு எப்போதும் எக்காலடியும் விழுந்ததில்லை என, வெண்தளிர் பரப்பெனத் தெரிந்தது பனிநிலம்.

அவர் முன்னகர்ந்து சென்றார். எப்போதோ அந்த ஒளிரும் பொன்மலையின் மேலேயே அவர் ஏறிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். முகத்தருகே தூக்கி பார்த்தபோது அவரது கைகள் பொன்னிறமாகத் தெரிந்தன. தழலென தன் உடல் சுடர்வதை அவர் கண்டார். அவர் உடலுக்குள் இருந்து பொன்னொளி தோலினூடாக கசிந்து சூழச் சுடர்ந்தது.

மலையின் உச்சியை அவர் அடைந்தபோது அங்கு எவரும் இருக்கவில்லை. அங்கு ஒருவர் மட்டுமே நிற்க இடமிருந்தது. ஏறிய பின் ஒரு கால் வைப்பதற்கு மட்டுமே அதன் முனையில் இடமிருந்தது என உணர்ந்தார். மறுகால் விண்வெளியில் தவித்தது. தன்னை நிகர்நிலைப்படுத்திக்கொண்டு ஒரு காலில் அவர் நின்றார். கைகளை பறப்பவர்போல் விரித்து வைத்துக்கொண்டார்.

விண்ணில் முகில் நிரைகள் இல்லை. விண்ணென்பதே இல்லை. மெல்லிய வெண்பரப்பென பத்து திசைகளிலும் அவரைச் சூழ்ந்து இருந்தது வெண்வெளி. அது மிக மெல்லிய ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தது. பனிநொறுங்குவதுபோன்ற ஓசை. அது குரலாகியது. அவர் செவிகளில் எவரோ சொன்னார்கள். “அக்காலை எடுத்துவிடு. விண் உனக்கு திறக்கும்.”

அவர் சித்தமின்றி அவ்வண்ணமே நின்றிருந்தார். “கனியின் இறுதிக் காம்பு அது. எடு அக்காலை. உதிர்க விண்நோக்கி!” என்றது அக்குரல். “இல்லை, என்னை இதுகாறும் கூட்டிவந்த அந்த நாயை விட்டுவிட்டு இக்காலை நான் எடுக்க இயலாது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அது நின்றுவிட்டது, அதற்கு இங்கு வர ஊழ் இல்லை” என்றது அக்குரல். “இல்லை, அது வரவிழைகிறது. பனியில் உந்தி ஏறிக்கொண்டிருக்கிறது.”

“அது ஒரு விலங்கு. கானகத்தெய்வங்கள் தன் குடிக்கு அளித்த நெறிகளை உதறி மானுடருடன் இணங்கியமையால் இழிவடைந்தது. நன்றியெனும் சரடால் மானுடருக்கு அடிமையாகப் பிணைக்கப்பட்ட கீழ்மை கொண்டது” என்றது அக்குரல். “மானுடனாக, அறச்செல்வனாக, ஊழ்கநிறைவு கொண்டவனாக நீ செல்லும் இடங்களுக்கு அது ஒருபோதும் செல்ல முடியாது.” யுதிஷ்டிரன் “இது என்னுடைய கடமை, அதன் தகுதி இங்கு ஒரு பொருட்டு அல்ல” என்றார்.

“இந்த இடத்தில் நன்று தீதில்லை. அறமும் அல்லதும் இல்லை. இரண்டின்மையின் உச்சம் இது. இங்கே மீண்டும் கடமையைச் சுமந்து நின்றிருக்கப் போகிறாயா?” என்றது குரல். “தெய்வங்களேயானாலும் மீறமுடியாதவை சில உண்டு, அறம் அதில் ஒன்று” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நான் அதன்பொருட்டு உயிர்துறக்கச் சித்தமானவனாகவே இதுவரை வாழ்ந்திருக்கிறேன்.”

“ஆம், நீ மானுடனாக அடைந்த துயரங்கள் அனைத்தினூடாகவும் இங்கு வந்திருக்கிறாய்” என்றது அக்குரல். “நான் அடைந்த அனைத்துத் துயர்களையும் சென்ற அத்தனை பாதைகளையும் என் இளையோரும் அடைந்துள்ளனர். ஆனால் அறுவரில் நான் மட்டுமே இங்கு வந்திருக்கிறேன். அது ஏன்?” என்றார் யுதிஷ்டிரன். “உன் வாழ்நாளெல்லாம் அறமென்று ஒன்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தாய். ஆகவே அன்றாடச் செயல்கள் அனைத்திலும் நிலையற்றவனாக, உசாவுபவனாக, துயர்கொண்டவனாக, தனித்தவனாக இருந்தாய். நிலையற்றவர்கள், உசாவுபவர்கள், துயர்கொண்டவர்கள், தனியர்கள் தெய்வத்திற்கு இனியவர்கள்.”

“அறத்தின்பொருட்டு துயருறுபவனை நம்பியே அறம் மண்ணில் வாழ்கிறது. மானுடன் கொள்ளும் உணர்வுகளில் குற்றவுணர்வுக்கு நிகரான தூய்மையும் மாண்பும் கொண்டது பிறிதில்லை. வாழ்நாளெல்லாம் நீ கொண்ட அந்த குற்றவுணர்வின்பொருட்டே விண்ணகத்தால் வாழ்த்தப்படுகிறாய்” என்றது அக்குரல். “எனில் என்மேல் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து வந்த அந்த நாயின்றி நான் விண்ணேக முடியாது. இதுவரை என்னை கொண்டுவந்து சேர்த்த ஒன்றை இக்கணத்தில் உதறுவேன் என்றால் விண்ணகத்திலும் நான் மகிழ்ந்திருக்கமாட்டேன்” என்றார் யுதிஷ்டிரன்.

“ஆனால் இங்கு ஒருவர் ஒற்றைக் கால் வைப்பதற்கே இடமுள்ளது” என்று விண் அவரிடம் சொன்னது. “ஆம். அது இங்கு வரட்டும். நான் இறங்கிக்கொள்கிறேன்” என்றார் யுதிஷ்டிரன். “இறங்கியவர்கள் இதில் மீண்டும் ஏற முடியாது. மீண்டும் ஏழு பிறவிகள் எடுத்து, ஏழு துயர்ப்பரப்புகளில் உழன்று, ஏழு வகையான தவங்கள் இயற்றியே இங்கு வந்துசேர முடியும்” என்றது வான். “ஆகுக, ஒருவன் தன்னை இழந்து அடைவதுதான் என்ன? குறையுணர்வுடன் நான் இதை எய்தலாகாது. என் ஊழ் தகைவுகொள்ளவில்லை என்று கொள்கிறேன்” என்று யுதிஷ்டிரன் கூறினார்.

“நன்று, எனில் நீ இறங்கிக்கொள்ளலாம். அந்நாய் அங்கு நின்றிருந்தால் அதை மேலேற்றுக!” என்றது ஆழ்குரல். யுதிஷ்டிரன் கீழிறங்கிப் பார்த்தபோது நாக்கு தொங்க, மூச்சிரைத்தபடி மேலேறி வந்த நாய் அவரைக் கண்டு வாலாட்டியது. அவர் கை நீட்டி அதன் கழுத்தை பற்றித் தூக்கி மேலெடுத்தார். “செல்க, கரியோனே! விண் உனக்கு உரித்தாகுக!” என்று அதைத் தூக்கி அம்மலைமுடியின் முனையில் விட்டார்.

நாய் அங்கு சென்றதுமே பேருருக்கொண்டு எழுந்து கரிய முகில் உருவமாக நூற்றெட்டு கைகளும் ஆயிரத்தெட்டு முகங்களும் கொண்டு விண்நிறைத்து நின்றது. “யுதிஷ்டிரனே, நீ இதுகாறும் நம்பிய அறத்தின் காவலனாகிய நான் காலதேவன். என்னை சாவின் தெய்வமாகிய யமன் என்றும், நீத்தோருலகின் தலைவனாகிய தென்றிசையோன் என்றும் அறிக! நீ இனிய மைந்தன். நீ என்னை நம்பியதனால் உன்னை நம்பும் பொருட்டு பணிக்கப்பட்டேன். எழுக, விண்ணகம் திறந்துள்ளது உனக்கு!” என்று இடியோசை முழக்கமிட்டது.

“எந்தையே, துறந்து செல்லவேண்டும் என்ற விழைவு இறுதியில் அக்குகைக்குள் நுழையும்வரை என்னுள் இருந்தது. அதற்குள் நான் அறிந்தது நான் துறப்பவன் அல்ல என்றே. பெரும்பற்றினாலானவன் நான். துறப்போர் அறத்தையும் துறக்கலாகும். நான் அறம்துறக்க ஒப்பாதவன், ஆகவே எதையும் துறக்க இயலாதவன். என் உடன்பிறந்தாரும் சுற்றமும் உடன்சூழும் விண்ணுலகொன்றை மட்டுமே விரும்புகிறேன். அவர்களை விட்டுவிட்டு இந்த மலைமுடியிலேறி நான் அடையப்போவதென்ன?”

“உன்னை உணர்ந்துளாய், நன்று. நீ சென்றமரவிருக்கும் இடம் தவத்தோரும் தந்தையரும் இருக்கும் உலகு அல்ல, பேரன்னையருடன் சென்றமைவாய் நீ” என்றார் காலப்பேருருவன். “என் இளையோர் என்னை விண்ணிலும் சூழ்ந்திருக்கவேண்டும். என்னை நம்பி கைபிடித்தவள் உடனமர வேண்டும். என் உறவும் சுற்றமும் சூழ நான் அங்கிருக்கவேண்டும். என் தந்தை பாண்டுவை நான் காணவேண்டும். அன்னை மாத்ரியை, குந்தியை, என் மைந்தர்கள் அனைவரையும் நான் தழுவிக்கொள்ளவேண்டும். என் மூத்தவர் கர்ணன் என்னை வாழ்த்தி நெஞ்சோடணைக்க வேண்டும்.”

“தந்தையே, புவியில் நான் பகைமையும் அச்சமும் ஐயமும் விலக்கமும் கொண்ட அனைவரும் என்னுடன் இருக்கவேண்டும். பீஷ்மரும் துரோணரும் நான் வணங்கும் பாதங்களுடன் எழவேண்டும். எந்தை திருதராஷ்டிரரும் அவர் மைந்தர் நூற்றுவரும், அவர் குடியினர் ஆயிரத்தவரும் என்னுடன் இருக்கவேண்டும். மாதுலர் சகுனியும் அவர் இளையோரும் மைந்தர்களும் அங்கிருக்கவேண்டும். ஒருவர் குறையலாகாது. ஒருவர் குறைந்தாலும் அவ்வுலகை நான் ஏற்கமாட்டேன்” என்று யுதிஷ்டிரன் கூறினார்.

இருண்ட வானில் காலதேவனின் தோற்றம் முகிலெனக் கரைந்து மறைந்தது. மின்னல்கள் வெட்டின, இடியோசை திசைகளனைத்தையும் நிறைத்தது. “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றது விண்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைசிலோன் விஜயேந்திரன்
அடுத்த கட்டுரைசிறகு,வரம்- கடிதங்கள்