அன்புள்ள ஜெ
கோட்டி கதை பலமுறை நுட்பமாக ரசித்துப்படிக்கத்தக்க படைப்பு. மேலோட்டமான ஒரு கிண்டல் கதைமுழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அந்தக்கதைக்குள் உள்ள சமூகவிமர்சனமும் டிராஜிக் ஃபீலிங்கும் சேர்ந்து கதையை நல்ல சட்டயராக ஆக்கி உள்ளன. பல இடங்களை மீண்டும் நினைத்துப்பார்க்கும்போது புன்னகை செய்துகொண்டேன். ஒன்றுக்கடித்தபடியே வேலைபார்க்க வெள்ளைக்காரன் கருவி கண்டுபிடிக்கிறான் என்ற வரி. அடிக்கப்போகும் போலீஸ் ஆபீசரை மாட்டுக்காரனாக மாற்றிக்காட்டி அவரை தடுப்பது. பணம் கட்டி தோட்டியாக மாறிவிட்டேன் என்று பூமேடை சொல்லக்கூடிய வரி. அவர் என்ன சொன்னாலும் அதெல்லாமே சட்டயராகத்தான் இருக்கிறது. தொண்டு செய் குண்டு வீசு என்று போகும் பூமேடை பைலோ ஓர் உதாரணம்.
சட்டயர் என்பது எப்போதுமே ஆழமான உண்மையைச் சொல்லக்கூடியதாக இருக்கும். இந்தக்கதையின் உண்மை ஒன்றுதான். சுதந்திரத்துக்குப் பின்னால் சுதந்திரப்போராட்ட தியாகிகளை கொன்று கறிவைத்து சாப்பிட ஆரம்பித்தோம். பலர் பென்ஷன் வாங்கிக்கொண்டு உட்கார்ந்து விட்டார்கள். ஓய்வு பெறமாட்டேன் என்று அடம்பிடித்த பூமேடை போன்றவர்கள் கிறுக்காக ஆக்கிக்கொண்டார்கள்
ஏன் பூமேடை தன்னை கிறுக்கனாக ஆக்கிக்கொண்டார் என்று யோசித்தேன். அவருக்கு எப்போதுமே காமிக் சென்ஸ் இருக்கிறது. ஆனால் சுதந்திரம் கிடைத்த பிறகு அவரை யாருமே பொதுவாக கவனிக்கவில்லை. அவரை எல்லாருமே புறக்கணிக்கிறார்கள். அவர் என்ன சொன்னாலும் அதை ஒருவருமே பொருட்டாக நினைக்க மாட்டார்கள். காரணம் என்னவென்றால் புதிய குரல்கள் வந்து விட்டன. சாதிக்குரல்கள் மற்றும் மதக்குரல்கள் மற்றும் இன்னும் சில்லறை அரசியல்குரல்கள் போன்றவை. ஆகவே அவர் தன் கவனத்தை கவர நினைக்கிறார். நேராக பேசினால் கவனிக்க மாட்டாய சரிதான் காமெடி செய்கிறேன் என்கிறார். அந்த காமிக் டிஸ்ப்ளே அவருடைய ஒரு போராட்ட மார்க்கம் என்று நினைக்கிறேன். அவர் நீதி மன்றத்திலே ஏன் காந்திக்கு கோமாளிக்குல்லாய் போட்டால் என்ன தப்பு என்று கேட்கிறாரே அதனால்தான்
சுப்ரமணியம்
மதுரை
அன்புள்ள ஜெ
நானும் நாகர்கோயில்காரன்தான். எனக்கு பூமேடை கொஞ்சம் அறிமுகம். எலக்ஷனில் நிற்கும்போது அவர் சைக்கிளில் யானை பொம்மையுடன் வந்து ஓட்டு கேட்பார். நானும் அவருக்கு மூத்திரச்சந்திலே போஸ்டர் ஒட்ட உதவி செய்திருக்கிறேன். நீங்கள் சொல்லக்கூடிய அதே டைட்டஸ் டூட்டோரியல் சந்து. இப்போது அந்த டூட்டோரியல் இருக்கிறதா? அங்கே பூமேடை போஸ்டர் இல்லாத நாளே இல்லை
பூமேடை மாதிரி இன்னொருவர் உண்டு. அவர் பெயர் எம் வி நாயுடு. அவர் ஒரு டாக்டர். சுதந்திர போராளி. ஐ என் ஏ யிலே இருந்தார். ஆகஸ்ட் 15 அன்றைக்கு பள்ளிக்கூடங்களுக்கு ஐ என் ஏ சீருடையிலே வந்து மாணவர்களிடம் பேசுவார். பழைய கதைகளை எல்லாம் சொல்வார். பையன்களுக்கு அவர் ஒரு கேலிப்பொருளாகத்தான் இருந்தார். 2010லேதான் இறந்துபோனார்.
நாகராஜன்
பிலாய்
அன்புள்ள ஜெ,
கோட்டி கதை சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசுகிறது. அவ்வளவு ஈஸியாக மறந்துபோகக்கூடாத விஷயங்கள் அவை. கதையிலே உள்ள சிரிப்பிலே அவை மறந்து போகக்கூடாது. இந்த உயிர் எழுத்து இதழிலே சரஸ்வதி ஜெயபாஸ்க்ரனைப்பற்றி எஸ் வி ராஜதுரை ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலே வ.ஜெயபாஸ்கரனின் குடும்பமே தியாகிக்குடும்பம் என்கிறார். அவர்களெல்லாம் எப்படி சுதந்திரம் கிடைத்ததும் அரசியல் அனாதைகளாக ஆகிக் கேலிப்பொருட்களாக ஆகிப் போனார்கள் என்று சொல்கிறார். அவர்களைப்போன்ற தியாகிகளை தூக்கிப்போட்டுவிட்டு காங்கிரஸ் அதுவரைக்கு பிரிட்டிஷாரை ஆதரித்த பெரிய முதலாளிகளை காங்கிரஸ்காரரகளாக ஆக்கி தேர்தலிலே நிறுத்தியது. அதைப்பொறுக்கமுடியாமல் தியாகிகள் வெளியே போனதும் அவர்களைத் துரோகிகள் என்று சொல்லி முத்திரை குத்தி அவமானம் செய்து விரட்டிவிட்டார்கள்.
இப்படித்தான் நம்முடைய தியாகிகள் எல்லாருமே சுதந்திரம் கிடைத்ததும் கைவிடப்பட்டார்கள். பழைய சாமான்களைப்போல துரு பிடித்து அழிந்தே போனார்கள். அந்த பாவம் நம்முடைய தலைமுறைகள் மீது உள்ளது. நம்முடைய இளைய தலைமுறை ஏன் இன்றைக்குத் தியாகிகளை கிண்டலாக பார்க்கிறதென்றால் இதனால்தான். இதெல்லாம் ஏன் நடந்தது என்று நாம் சிந்திக்கவேண்டும். அதற்கு நம்முடைய உணர்ச்சிகரமான பற்று எல்லாம் குறுக்கே நிற்கக்கூடாது.
தமிழ்நாட்டிலே வெள்ளைக்காரன் திருநெல்வேலிக் கிளர்ச்சியை அடக்கிய பிறகு பெரிய சுதந்திரப்போராட்டம் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. திருநெல்வேலி கிளர்ச்சியை நடத்திய வ உ சி ஜெயிலுக்கு போய் திரும்பிவந்தபோது இங்கே அவரை வரவேற்கவே ஆள் இல்லை. சுப்ரமணிய சிவா எல்லாம் அரசியல் அனாதைகளாக செத்தார்கள். சுதந்திரப்போராட்டமே இல்லாமல் ஆகிவிட்டது
அதற்குபிறகு இங்கே வந்தது சுதந்திர போராட்டம் கிடையாது. காங்கிரஸ் அரசியல்தான். ஏனென்றால் அப்போது காங்கிரஸ் மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டத்தை ஏற்றுக்கொண்டு மாகாண அரசியலில் போட்டி போட்டு பதவிக்கு வர ஆரம்பித்தது. இந்த தேர்தல்அரசியலிலே உருவாகி வந்த தலைவர்கள்தான் ஜஸ்டிஸ் வி சுப்ரமணிய அய்யரும அவரது சீடர் சத்தியமூர்த்தியும் ராஜாஜியும் எல்லாபேரும். இவர்கள் இதை பிராமண அரசியலாகவே நடத்தினார். ஆகவே இங்கே அதற்கு எதிராக ஜஸ்டிஸ் கட்சியின் பிராமண அல்லாத உயர்சாதி அரசியல் வந்தது. பிற்பாடு அது பிற்படுத்தப்பட்டோர் அரசியலாக ஆகியது
பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல்போட்டி வந்தபோது காங்கிரஸிலே ராஜாஜி ஆதிக்கம் போய் காமராஜ் ஆதிக்கம் வந்தது. ஆனாலும் பிற்படுத்தப்பட்ட அரசியலை எதிர்கொள்ள காங்கிரஸால் முடியவில்லை. அதற்கு காமராஜ் ஒரு வழி கண்டுபிடித்தார். ‘வெற்றி வாய்ப்புள்ளவர்களை’ காங்கிரஸுக்கு இழுத்து தேர்தலில் நிறுத்துவது காமராஜ் கொண்டுவந்த முறை. அப்படித்தான் நிலச்சுவான்தார்களும் பஸ்முதலாளிகளும் காங்கிரஸ் வேட்பாளர்களானார்கள். பெரிய ரவுடிகள் கூட காங்கிர வேட்பாளர்களாக ஆனார்கள். ஜமீன்தார்கள் வந்தார்கள். இன்றைக்கும் அவர்கள்தான் இருக்கிறார்கள். காங்கிரஸ் அப்போதும் முழு மெஜாரிட்டியிலே ஜெயிக்கவில்லை. இந்தியா முழுக்க காங்கிரஸுக்கு வந்த வெற்றி இங்கே வரவே இல்லை.
அதற்குத்தான் ராஜாஜியை கொண்டுவந்தார்கள். அவர் எதிர்கட்சிகளை விலைக்கு வாங்கி காங்கிரஸ் ஆட்சி அமைத்தார். இந்த தகிடுதத்தங்களால்தான் மக்கள் மனம் வெறுத்து அதிலே திமுக பதவிக்கு வந்தது. அவர்கள் தங்களை பணமுதலைகளுக்கு எதிராக போராடக்கூடிய சாமானியர்களின் கட்சி என்று சொன்னார்கள். ராஜாஜி செய்த கட்சித்தாவல் தந்திரம் காங்கிரஸ் மேல் கசப்பை உருவாக்கியது. காங்கிரஸ் தோற்றது
ஆரம்பத்திலே பதவி ஆசைக்காக தியாகிகளை ஒதுக்கினார்கள் காமராஜும் அவரது ஆதரவாளார்களும். கடைசியிலே அவர்களை மக்கள் ஒதுக்கினார்கள். இதுதான் நடந்த கதை
சங்கரலிங்கம்
மதுரை