சிலநாட்களுக்கு முன்னர் திருவையாறு ஐயாறப்பன் ஆலயத்தில் சென்றுகோண்டிருந்தபோது வழிபாட்டுணர்வுடன் சென்றுகொண்டிருந்த மக்களைப் பார்த்துவிட்டு மலையாள இலக்கியத் திறனாய்வாளர் கல்பற்றா நாராயணன் என்னிடம் சொன்னார் “பக்தியில் மட்டும்தான் ஒரு சிறப்பு உள்ளது, அதில் மூழ்கி மூழ்கிச் செல்வதற்கான இடம் இருக்கிறது.”
நான் சொன்னேன், “பக்தி என்பது உண்மையில் ஒற்றைப்படையான ஓர் உணர்வே… பக்தியை இந்திய பக்தி இயக்கங்கள்தான் மூழ்கிச்செல்ல வேண்டிய கடலாக மாற்றின. பக்தியை முழு வாழ்க்கையளவுக்கே பெரிதாக்கிக் கொண்டன அவை. பக்தியில் வாழ்க்கையின் எல்லா கூறுகளையும் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டன. நம்முடைய பக்தியில் தத்துவம் இருக்கிறது, இலக்கியமும் இசையும் இருக்கிறது. எல்லா கலைகளும் பக்தியே. சுவையான சமையல், கட்டிடக்கலை ஆகியவையும் பக்தி சார்ந்தவையே. நம்முடைய களியாட்டங்கள் கொண்டாட்டங்கள் ஆகியவையும் பக்தி சார்ந்தவையே. நம் வாழ்க்கையில் பக்தி ஊடுருவாத எந்த வெற்றிடமும் இல்லை என்ற நிலையை உருவாக்கினார்கள் முன்னோர்.”
பக்தி என்பது முழுமையான அர்ப்பணிப்பு. பிறிதொன்றிலாத இணைவு. தீவிரத்தின் உச்சங்களில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கும் இயல்பு. அத்தகைய பக்தி என்பது எப்போதும் ஒற்றைப்படையான ஒரு வேகமாக, எதில் பக்தி இருக்கிறதோ அதையன்றி பிறிதையெல்லாம் நிராகரிக்கும் மூர்க்கம் கொண்டதாக வெளிப்படுவதே இயல்பானது. ஆனால் உச்சகட்ட பக்தி உருவகிக்கப்பட்ட நம் மரபில் பக்திக்கு அத்தகைய முகம் உருவாகவே இல்லை. ஒன்றின் மீதான பக்தி என்னும் நிலையில் அந்த ஒன்றை எல்லாமுமாக ஆக்கிவிடும்போது பக்தி எல்லையில்லாத அன்பாக மாற்றப்பட்டுவிடுகிறது. நம்முடைய முழுமுதன்மை நோக்கின் வெற்றி இதுவே.
சிவ பக்திகொண்ட ஒருவர் சிவனையன்றி பிறிதை எல்லாம் வெறுக்க இயலாது. ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை சிவனன்றி வேறெதுவும் இப்பிரபஞ்சத்தில் இல்லை. பிரபஞ்சமே ஆடவல்லானின் ஆடல்தோற்றமே. விஷ்ணுவும் பிரம்மாவும் இன்னும் எண்ணிறந்த தெய்வத்தோற்றங்களும் அவன் அலகிலா முகங்களே. அவர் வெறுக்க வேண்டிய எதுவுமே இப்பிரபஞ்சத்தில் இல்லை.
இவ்வாறு பக்தியை விரிவாக்கம் செய்யும்போதுதான் அனைத்து மெய்ஞானங்களையும் அனைத்து கலைகளையும் அதற்குள் கொண்டுவர நேர்கிறது. பக்தி இயக்கம் இந்திய நிலப்பரப்பில் எல்லா பண்பாட்டுக் கூறுகளையும் தன்னுள் இணைத்து ஒன்றுடன் ஒன்று உரையாடச்செய்யும் ஒரு பொதுக்களமாக உருவாக்கம் கோண்டது. நம்முடைய தத்துவமும் இலக்கியமும் இசையும் சிற்பக்கலையும் நாம் இன்று காணும் மாபெரும் விரிவை அடைந்தது பக்தி மூலமே.
பக்தி இயக்கம் இந்தியாவுக்கு வந்த பிற மதங்களிலும் ஆழ்ந்த பாதிப்பை செலுத்தியது. குறிப்பாக பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இந்தியாவுக்கு வந்த இஸ்லாம் துருக்கிய ஆக்ரமிப்பாளர்களின் மதமாகவே இருந்தது. தொடர்ந்த போர்களும் அழிவுகளும் இஸ்லாமின் வரலால் இந்திய நிலப்பகுதியை உலுக்கின. இந்தியாவெங்கும் ஆலயங்கள் அழிக்கப்பட்டன. ஆனால் இது மன்னர்களின் இஸ்லாம். இஸ்லாம் மதத்தின் மையச்செய்தியுடன் இங்கே வந்த மெய்ஞானிகளின் இஸ்லாம் ஒன்று இருந்தது. அது எளிய மக்களின் இஸ்லாம். இறையடியார்களின் இஸ்லாம். அந்த இஸ்லாம் நம் பக்திமரபுடன் உரையாடியது. அதன் விளைவாகவே இங்கே ஸுபி பாரம்பரியம் வேரூன்றியது.
நம் பண்பாட்டின் ஒளிமிக்க முகங்களில் ஒன்றாகிய ஸுபி மரபில் ‘அனல் ஹக்’ என்னும் ஆப்த வாக்கியம் ஒன்று உள்ளது. அஹம்பிரம்மாஸ்மி என்ற ஆப்த வாக்கியத்தின் மொழியாக்கம்தான் அது. ‘நானே அல்லா’ என்று அது பொருள்படுகிறது. பக்தி வழியாகவே அந்த தரிசனத்தை ஸுபி மரபு எடுத்துக்கொண்டது. எங்கும் எதிலும் அல்லாவே இருக்கும்போது, அல்லா அன்றி பிறிது எதுவுமே பிரபஞ்சத்தில் இல்லையென்ற நிலையில் நானும் அல்லாவே என்று உணரும் பெருநிலையின் சொல்லாட்சி அது.
ஸுபிகளும் பாடினார்கள். ஆடினார்கள். கலைகளிலும் இலக்கியத்திலும் எங்கும் அல்லாவைக் கண்டார்கள். அல்லா அன்றி எதையுமே காணாத வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் தொழுகைநேரமே என்றும் செய்யும் ஒவ்வொன்றும் தொழுகையே என்றும் வாழ்ந்தார்கள். அல்லாவை அப்பனாக அம்மையாக நண்பனாகக் கண்டு கனிந்தார்கள். ஏன், காதலியாகக் கண்டு களிகூரவும் செய்தார்கள். தன் மனதின் மணியாகிய அல்லாவை ‘மனோன்மணியே’ என்றழைத்து குணங்குடி மஸ்தான் சாயபு பாடிய அரிய பாடல்கள் நம் மொழியில் உள்ளன. பக்தியே பிரபஞ்சமளாவிய ஒரு பெருநிலையாக ஆகும் தளம் அது.
அந்தநிலை இஸ்லாமிய மதத்தின் கட்டமைப்புக்குள் மட்டுமே நின்றவர்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. ஸுபிகள் மத மீறலுக்காக குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கவும் தண்டிக்கவும் பட்டிருக்கிறார்கள். தக்கலை பீரப்பா அப்பா வரை அந்த வரலாற்றை நாம் காணலாம்… ஏனென்றால் மத்திய ஆசிய மதங்களில் உள்ளது பக்தி அல்ல, விசுவாசமே. கிறித்தவ பிரார்த்தனைகளும் ஆணைகளும் விசுவாசத்தைப் பற்றியே பேசுகின்றன.
ஒன்றுக்காக முழுமையான சமர்ப்பணம் செய்துகொள்வதும் அதற்காக போரிடும் போராளியாக ஆவதுமே விசுவாசம். ஒரு கிறித்தவர் பக்தி என்று சொல்வது என்று சொல்வது எதை? அவரது அடிப்படை மத உருவகங்களான பிதா-சுதநாவி ஆகியவற்றுக்கு விசுவாசமானவனாக தன்னை அறிவித்துக் கொள்வதை. தன் தேவைகளுக்காக அவற்றிடம் பிரார்த்தனை செய்வதை. அதன் பின் அந்தத் தரப்பு அல்லாத பிற அனைத்தையும் முழுமையாக மறுத்து பிற அனைத்தையும் அழிப்பதற்கான போராளியாக ஆவதை. விசுவாசமுள்ள ஒரு கிறிஸ்தவனுக்கு வாழ்க்கை என்பது ஒரு முடிவிலாத மதப்போராட்டமே.
அதி உக்கிரமாக சைவ வைணவ மதங்கள் முன்வைக்கப்பட்டு தீவிரமான பக்தி உருவாக்கப்பட்ட நம்முடைய பக்திகாலகட்டம் பத்தாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ அறுநூறு வருடங்கள் நீண்டுநின்ற ஒன்றாகும். அந்த இயக்கத்தின் ஒட்டுமொத்த விளைவு என்ன என்று பார்த்தால் அறுவகை மதங்களும் தங்களுக்குள் ஓயாது உரையாடி வேற்றுமைகளை இழந்து ஒரே அமைப்பாக ஆயின. ராமலிங்கங்களும் ஹரிஹரபுத்ரர்களும் உருவானார்கள். மதமோதல்கள் மிக மிக அபூர்வமாக, அதுவும் மன்னர்களின் அதிகார வெளிப்பாடாக மட்டுமே காணக்கிடைக்கின்றன. ஆனால் மத்தியக்கிழக்கு மதங்களின் விசுவாசத்தின் வரலாறு நமக்கு நாநூறு வருடங்களாக நீண்ட அவநம்பிக்கை போர் மற்றும் அழித்தொழிப்பின் கதையையே சொல்கிறது.
இந்திய பக்தி இயக்கத்தில் கிறித்தவத்தின் செல்வாக்கு குறித்து ஹாப்கின்ஸ் [ T. J. Hopkins, The Hindu Religious Tradition]போன்ற ஆரம்பகால கேம்பிரிட்ஜ் வரலாற்றாசிரியர்கள்தான் முதன்முதலில் பேசினார்கள். அவர்கள் இங்கே கண்ட பக்தியை தங்கள் மதத்தின் விசுவாசத்துடன் மேலோட்டமாக ஒப்பிட்டுக் கொண்டார்கள். ஆனால் மிக விரைவிலேயே அந்த கருத்துக்கள் ஆதாரபூர்வமாக பிற்கால ஐரோப்பிய இந்தியவியல் அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டன. இந்திய மதங்களில் கிறித்தவத்தின் செல்வாக்கு என்பது அனேகமாக ஏதுமில்லை என்பதே உண்மை.
அதற்கான புறக்காரணங்கள் பல. கிறித்தவம் தொல்பழங்காலத்தில் இந்தியாவுக்கு வந்தமைக்கான எந்த ஆதாரமும், ஒரு சிறுதடயம்கூட நம் நூல்களில் இல்லை. பழங்காலத்தில் கிறித்தவம் இந்திய நிலப்பகுதியில் எங்கும் ஆட்சி செலுத்தியதாகவும் தகவல் இல்லை. பெரும் வணிகப் போக்குவரத்து நடந்திருந்த அக்காலத்தில் உதிரிகளான கிறித்தவர்கள் சிலர் வந்திருக்கலாம். அதற்கும் புகைமூட்டமான சிலசெய்திகள் மேல் கற்பனையைச் செலுத்தி செய்யப்படும் விரிவாக்கங்களாலேயே வாய்ப்பு உள்ளது.
அப்படி வந்தவர்களின் பங்களிப்பு மிகமிகச் சொற்பமாகவே இருந்திருக்கும். ஏனென்றால் அக்காலத்தில் வணிகம் மூலம் கருத்துப்பரிமாற்றம் என்பது மிகமிகக் குறைவே. அதற்கான காரணங்கள் பல. முக்கியமானது வணிகத்தில் ஈடுபட்டவர்கள் வணிகத்தை அல்லாமல் வேறெதையும் அறியாத தனித்த வணிகச்சாதியினராக இருப்பதே அக்கால வழக்கம் என்பதுதான்.
வரலாற்றுக்காலம் முழுக்க தென்கடற்கரைகளுக்கு யவன தேசத்துடனும் சீன தேசத்துடனும் வணிகத்தொடர்புகள் இருந்திருக்கின்றன. ஆனால் ஒரு ஞானப்பரிமாற்றம் நடந்தமைக்கான எந்தத் தடயமும் நம் சிந்தனைகளில் இல்லை. நம்முடன் நெடுங்காலத் தொடர்பு கொண்டிருந்த இஸ்லாமியர் இங்கே பல சமூகங்களாக குடியேறி நிரந்தரமாக வாழ ஆரம்பித்தபோதுகூட ஞானப்பரிமாற்றம் நிகழவில்லை.
அவ்வுரையாடல் நிகழ்ந்தது துருக்கியப் படையெடுப்புகள் வழியாகந்தான். ஆக்ரமிப்பு வெறி கொண்ட அரசர்களுடன் லட்சக்கணக்கான சாதாரண மக்களும் வந்தார்கள். இங்குள்ள மக்களுடன் உரையாடினார்கள். அவர்களிடம் இஸ்லாமின் ஆன்மீக சாரம் வந்தது. அது இங்குள்ள ஆன்மீகத்தைக் கண்டடைந்தது. நம் ஸுபிக்கள் அனைவருமே மிக எளிமையான மக்களில் இருந்து வந்தவர்கள். படைவீரர்கள் குதிரைக்காரர்கள்… மிக அபூர்வமாகவே மன்னர்குலத்தவர்கள்.
மேலும் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இங்கே கிறித்தவம் வந்தபோது அது சாம்ராஜ்யக் கனவுகொண்டிருந்த ஐரோப்பிய இனத்தின் மதமாக வந்தது. எந்த விதமான உரையாடல்களுக்கும் அது தயாராக இருக்கவில்லை. கிறித்தவத்தின் எளிமையான பிதா கோட்பாடு பிரம்மம் என்னும் தொன்மையான மாபெரும் தரிசனத்துடன் உரையாட முற்பட்டிருந்தால் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ஆனால் அபப்டி நடந்தமைக்கான ஆதாரங்களை நாம் நம்முடைய ஜேசுசபை பாதிரியார்களின் குறிப்புகளில் காண முடிவதில்லை. புனித சேவியர், இரேனியஸ், கால்டுவெல், ரிங்கள்தௌபே என நாம் வாசிக்கக் கிடைக்கும் கிறித்தவ ஊழியர்கள் எவரின் குறிப்புகளும் அந்த வகையான உரையாடலும் புரிதலும் நிகழ்ந்தமைக்கான சான்றுகளை அளிக்கவில்லை.
நேர்மாறாக அவர்கள் தங்களின் எளிமையான வாதங்களை மீண்டும் மீண்டும் இங்குள்ள மக்களிடம் முன்வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார்கள். சாமுவேல் மெட்டீர் என்ற மதபோதகர் திருவிதாங்கூர் பற்றி எழுதிய நூலில் இங்குள்ள வழிபாடுகளை அவர் ‘பிசாசு வழிபாடு’ என்றே சொல்கிறார். ‘பிசாசு’க்களை வழிபடுபவர்களிடம் அவர் கிறித்தவக் கருத்துக்களைச் சொல்லும்போது அவர்கள் அளிக்கும் எதிர்வினையை அவர் பதிவுசெய்கிறார்.
அவர் அவர்களின் கோயிலில் புகுந்து சிலைகளை உடைத்தும் அவமரியாதை செய்தும் அவர்களிடம் ஆவேசமாக பேசும்போது அவர்கள் நிதானமாக அவரிடம் உரையாடுகிறார்கள் என்கிறார் அவர். அச்சிலைகள் எங்கும் உள்ள பரப்பிரம்மத்தின் வடிவங்களே என்றும் சிலையில் உண்மையில் ஒன்றும் இல்லை என்றும் சொல்கிறார்கள். அவர் வழிபடும் தெய்வமும் தாங்கள் வழிபடும் தெய்வமும் ஒரே பரம்பொருளின் வடிவங்களே என்றும் ஆகவே அவர்கள் மதம் மாறவேண்டியதில்லை என்றும் சொல்கிறார்கள். ‘இந்தமக்கள் நம்மை மதிக்கிறார்கள். நம்மை பிரியமாக வரவேற்கிறார்கள். நாம் சொல்வதை கவனமாகக் கேட்கிறார்கள். ஆனால் நம் கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்வதே இல்லை” என்று சாமுவேல் மெட்டீர் பதிவுசெய்கிறார். பெரும்பாலான கிறித்தவ மதப்பரப்பாளர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள். இதுதான் உரையாடல் நடந்த விதம்.
கிறித்தவம் முன்வைத்த அடிப்படைக் கருத்துக்கள் எதுவும் இங்கிருந்தவர்களுக்கு புதியனவாகவும் இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். பிட்ஸாவை கறிவேப்பிலை போட்டு தாளித்து இத்தாலிக்கே கொண்டு சென்று அறிமுகம் செய்ய முனைவதையே கிறித்தவ போதகர்கள் செய்தார்கள் என்று சொல்லலாம். கிறித்தவ மதக்கட்டுமானத்தின் கருத்தியல் அடிப்படைகள் மூன்று. ஒன்று தீர்க்கதரிசி வரிசை. இரண்டு, பாபம்-பாவமீட்பு என்னும் கருத்து. மூன்று முக்குணம் கொண்ட இறைவன் என்னும் கருத்துருவம். இம்மூன்றுமே சமண மதத்தில் இருந்து யூதர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு கிறித்தவத்துக்கு வந்து சேர்ந்தவை.
ஆசீவக மரபில்தான் நாம் வரலாற்றில் முதன்முறையாக தீர்க்கதரிசிகள் என்னும் வரிசையை காண்கிறோம். 108-தீர்க்கதரிசிகள் இருந்தார்கள். அவர்களில் கடைசி தீர்க்கதரிசியே ஆசீவக மதத்தை உருவாக்கிய மாகதி கோஸாலன். அதே அமைப்பு சமணர்களால் எடுத்தாளப்பட்டது. வர்த்தமானமகாவீரர் கடைசி தீர்த்தங்கரர் ஆனார். தீர்க்கதரிசிகளில் கடைசியானவர் என்ற உருவகம் இவ்வாறு வலிமையாகி தொன்மையான பட்டுச்சாலை வழியாக மத்திய ஆசியாவுக்குச் சென்றது.
சமண மதமே உலக சிந்தனை வரலாற்றில் பாவம் என்பதற்கு முதன்முதலில் அழுத்தம் கொடுத்தது. மானுட பிறப்பே பாவத்தால் ஆனது என்ற கருத்தும் விரதநெறிகள் மூலம் பாவமீட்பு பெற்றாகவேண்டும் என்ற கருத்தும் சமணத்தின் அடிப்படை தரிசனங்கள். சமணத்தில் இருந்து இந்த கடுமையான பாவமீட்பு விரதங்கள் யூத மரபுக்குச் சென்று சோஃபிஸ்டுகள் வழியாக கிறித்தவத்திலும் நீடித்தன. இன்று பெந்தேகொஸ்தே சபை போன்றவற்றில் உள்ள கடும்நெறிகள் தொன்மையான சமண சமயத்தின் நினைவுகளே.
மூன்று தெய்வங்கள் என்ற கருத்து சமண மதத்தில் இருந்து பௌத்தத்துக்குச் சென்றது. தர்மகாயம்- புத்தர் – மகாகாயம் என்ற மூன்று தெய்வ உருவகங்களை அப்படியே பிதா – சுதன் – ஆவி என்ற மூன்று தெய்வங்களாக நாம் காண்கிறோம். இடைய சமூகத்தில் இறைவனை ஆகப்பெரிய தந்தையாக உருவகித்தனர். அதுவே அவர்களுக்குச் சாத்தியமான ஆகப்பெரிய இறைஉருவகம். பட்டுநூல்பாதை வழியாக வந்த கீழைநாட்டு சமண பௌத்த சிந்தனைகள் அந்த இறையுருவகத்துடன் கலந்தன.
கிறித்தவ மரபில் கிழக்கு மெய்ஞானத்தின் ஊற்றாக காட்டப்படுகிறது. கிழக்கால் அடையாளம் காட்டப்பட்டவர் ஏசு என்னும் மரபு அதையே சுட்டுகிறது. ஏசுவின் வாழ்க்கையில் அறியப்படாத இளமைக்காலம் கிழக்கில் கழிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் உள்ளது. மத்தியக்கிழக்கில் இருந்து பௌத்தம் மேலோங்கியிருந்த ஆப்கானீஸ்தான் அல்லது காந்தாரம் மிக அருகேதான் இருந்தது.
கிழக்கின் மெய்ஞானத்தை உள்வாங்கி தன் ஞானதரிசனத்தை அடைந்த மனிதகுமாரனின் மகத்தான செய்தி மேற்குலகை நோக்கி விரிந்தது. ஆரம்பத்தில் அது பல்வேறு மதக்கூறுகளை உள்ளிழுப்பதாகவும் சமரசத்தையும் முழுமையையும் முன்வைப்பதுமாகவே இருந்தது. ஏசு என்னும் மாபெரும் ஞானகுரு ரோமப்பேரரசால் அடிமைப்பட்ட மக்களின் மீட்பராகவே இருந்தார். பின்னர் கிறித்தவம் ஆளும் வர்க்கமாகிய ரோமப்பேரரசின் மதமாக ஆகியது.
மாற்றமில்லாத ஒற்றை அமைப்பாக, விசுவாசத்தை மட்டுமே கோரக்கூடிய ஆக்ரமிப்பு சக்தியாக உலகை நோக்கி எழுந்த கிறித்தவம் ஏசுவின் கிறித்தவம் அல்ல, ரோமப்பேரரசர் கான்ஸ்டண்டைனின் கிறித்தவம். அந்தக் கிறித்தவத்தின் பிரதிநிதியே புனித சேவியர் அல்லது கால்டுவெல். அவர்களிடம் இந்திய மரபுக்கு உரையாடும் திறப்புகளே இருக்கவில்லை. இஸ்லாமின் சாரமான ஆன்மீக நோக்கில் இருந்து ஸுபி மரபு கிளைத்தது போல கிறித்தவத்தின் சாரமாக ஒன்று கிளைத்து எழாத காரணத்தால் அந்த உரையாடல் இன்றுவரை நிகழவும் இல்லை.
இந்தக் காலகட்டத்தில் நாம் இந்து மெய்ஞான மரபின் சாரமாகக் கண்டடைய வேண்டியது அந்த மாபெரும் ஒருமைத்தரிசனத்தை. அதை நோக்கி அனைத்தையும் கொண்டுசெல்லும் சமன்வயத்தை. அதன் அடிப்படையில் எல்லா ஞானங்களையும் உள்வாங்கிக்கொள்ள முயலும் சமயக் திருஷ்டியை. அதற்கு நம் மரபின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் வெளிப்படையான விரிவான விவாதங்கள் அவசியம். இந்து மரபு என்பது என்றும் ஒரு விவாதக்களமே
நமது பாரம்பரியம் பன்மைத்தன்மையின் பாரம்பரியம். ஏற்பின் உரையாடலின் சமரசத்தின் பாரம்பரியம். அதுவே இன்று நம்மை மேலும் நாகரீகமான சமூகமாக ஆக்கும். தொன்மையான ரிஷிவாக்கியம் வேதத்தில் இவ்வாறு ஒலிக்கிறது
நான் ஒருபோதும் பிரம்மத்தை
நிராகரிக்காமலிருப்பேனாக!
பிரம்மம் என்னை ஒருபோதும்
நிராகரிக்காமலிருப்பதாக!
பரச்பர நிராகரிப்பு
ஒருபோதும் நிகழாதிருப்பதாக!
சுயமாக ஒளிவிடும் மகத்தான சிந்தனைகள்
என்னில் விளைவதாக!
அவை என்னில் விளைவதாக!
ஓம் ஓம் ஓம்
24 ஜனவரி 2009 அன்று கும்பகோணம் மூவர்முதலிகள் முற்றத்தின் சார்பில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை பகுதி 3 மறுபிரசுரம்