கதைத் திருவிழா-30, முதலாமன் [சிறுகதை]

பச்சைக்காடு குவிந்து உச்சியில் ஒற்றைப்பாறையை எந்தி நின்றிருக்கும் கரடிமலையின் அடிவாரத்தில், முத்துக்குளிவயல் உச்சிக்காட்டில் இருந்து பெருகிவரும் வள்ளியாற்றின் கரையில் அமைந்த நூற்றெட்டு ஊர்களில் ஒன்றான திருச்செங்கரைக்கு அதிகாலை நேரத்தில் காட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. பூசாரி வண்டிமுத்தன் அதைக் கேட்டான். எப்போதும் அவனுடைய குடிவழியினருக்கே அது அறிவிக்கப்பட்டு வந்தது.

வள்ளியாற்றங்கரையில் இருந்த ஊர்களெல்லாமே அன்று அடர்ந்த மழைக்காடுகளால் சூழப்பட்டிருந்தன. குளத்துநீரில் பாசிப்படர்வை விலக்கி விலக்கி குளிப்பது போலத்தான் விவசாயம். நான்குபக்கமும் காடு வந்து வந்து முட்டிக்கொண்டிருக்கும். சற்று கைவிலக்கினால், கொஞ்ச நேரம் சும்மா இருந்தால், மேலே படர்ந்து மூடிவிடும். பரவுக, மூடுக, ஓங்குக என்ற ஆணையே தாவரங்களின் உள்ளே இலங்கும் தெய்வம். காடு அத்தாவரங்கள் அனைத்தும் ஒன்றாகி எழுந்த பெருந்தெய்வம்.

அங்குள்ள ஒவ்வொருவரும் காட்டுடன் ஓயாமல் போரிட்டுக் கொண்டிருந்தனர். வயல்களில் வாரந்தோறும் வரம்பு திருத்தினர், சலிக்காமல் களை அகற்றினர், வீடுகளைச் சுற்றி செடிகொடிகளை செதுக்கி நீக்கினர். சுவரிடுக்குகளில் முளைக்கும் விதைகளை தளிரிலேயே அகற்றினர். சற்று மனம் சலித்தவர்களின் வயல்களும் வீடுகளும் நோக்கியிருக்கவே காடு மண்டின. ஓராண்டு அப்படியே விட்டால் உள்ளே நுழையமுடியாதபடி எழுந்து செறிந்தது காடு. உள்ளே பாம்புகளும் பிற உயிர்களும் பிறந்து நிறைந்தன.

முதியவர்களும் வறியவர்களும் வாழும் சிறுவீடுகளை மிகமெல்ல, நாகப்பாம்புகள் போல ஒழுகி வந்த காட்டுமரங்கள் கவ்விக்கொண்டன. நொறுக்கி காலடியிலிட்டு மேலெழுந்தன. ஊருக்குள் அப்படி பல வீடுகள், தோட்டங்கள் காட்டின் துண்டுகள் என நின்றன. கூரைமடிப்புகளில் தேங்கிய கைப்பிடி மண்ணில்கூட ஒரு துளிக்காடு உருவாகியிருந்தது.

ஊரை பசியுடன், உடைமைவெறியுடன் காடு உற்றுநோக்கிக் கொண்டே இருந்தது. ஊர் என்பது ஒரு பிழை என, ஓர் அத்துமீறல் என காடு எண்ணியது. ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் எதையும் வேர்களால் விலக்கிப் பிளந்து தள்ளாமல் அதனால் இருக்க முடியவில்லை. தண்டுகளால் எதையும் மீறி மேலெழாமலிருக்க இயலவில்லை

ஊர்கள் பகலில் மட்டுமே தனித்து திகழ்ந்தன. இரவில் அவை காட்டுடன் இணைந்துகொண்டன. அந்தியில் நரிகள் காட்டின் ஊளையுடன் ஊருக்குள் புகுந்தன. இருட்டே சிற்றலைகளாக வருவதுபோல காட்டுபன்றிகள் வந்தன. மலைப்பாறைகள் உருண்டு வருவதுபோல பிளிறியபடி யானைகள் வந்தன. அவ்வப்போது வீட்டுமுற்றங்களில்கூட சிறுத்தைகளின், வரிப்புலிகளின் காலடித்தடங்கள் தெரிந்தன.

வயல்களை நோக்கி காட்டிலிருந்து பூச்சிகள் வந்துகொண்டே இருந்தன. ஒவ்வொரு பருவத்திற்கும் உரிய பூச்சிகள். ஒவ்வொரு ஆண்டும் வேறுவேறு பூச்சிகள். தெள்ளித்தெள்ளிச் செல்பவை. புகையென சுழன்று பறப்பவை. ரீங்கரிப்பவை, சிறகு ஒளிரப் பறப்பவை, இருட்டில் மட்டுமே எழுபவை, அமைதியானவை. இலைகொள்ளாமல் அமர்ந்து பெரியவிழிகளுடன் வெறிகொண்டு தின்றுதின்று செல்லும் சிறுகுழந்தைகளை அடுக்கிவிட்டுச் செல்பவை.

“ஆனை அபாயமில்லை, அந்துபூச்சி அழிச்சுப்போடும்” என்று மூத்தகுடியார் அப்பாவு நாடார் சொல்லிக்கொண்டே இருப்பார். “காட்டுக்க பட்டாளமாக்கும் அது. நின்னு பொருதி ஜெயிக்க தேவர்களாலேயும் முடியாது. துளி ரெத்தம் விழுந்தா தொள்ளாயிரமா முளைச்சு பொங்குத ரத்தபீஜாசுரனாக்கும்”.

காட்டிலிருந்து நோய்களும் வந்தன. கண்ணுக்குத்தெரியாத ஆயுதங்கள். ஒவ்வொன்றுக்கும் அதற்கான வாசனை இருந்தது. தண்ணீரில் புளிப்புவாடை எழுந்தால் நீர்க்கம்பம் வரவிருக்கிறது என்று பொருள். காற்றில் உளுந்துமாவு மணம் வந்தால் சின்னம்மை. அழுகிய மாமிசத்தின் நாற்றம் என்றால் எலிக்காய்ச்சல். “ஆடிக்கு நீக்கம்பு, சித்திரைக்கு வைசூரி, மார்கழிக்கு எலிப்பனி” என்று அப்பாவு நாடார் சொல்வார்.

அவ்வூர்களின் எல்லை முழுக்க காட்டுத்தெய்வங்கள் குடியிருத்தப்பட்டு பலியும் கொடையும் அளிக்கப்பட்டன. கொடுநோய்களை கொண்டுவரும் குளிகன், காற்றின் தேவியான மாதி, மழையின் அரசனான பிறுத்தா, தீயின் தலைவனான கடுத்தா, பச்சைக்கூந்தல்கொண்ட நீலி, வேர்களைப்போல் சடைகொண்ட கேசி, தொல்கிழவியான முத்தி, எலிகளையும் பூச்சிகளையும் ஆளும் சோதி, பாம்புவடிவமான நாகினி என நூற்றெட்டு தெய்வங்கள். ஒவ்வொரு பருவத்திற்கும் அதற்குரிய தெய்வங்கள் பூசைகொண்டன.

தெய்வங்களின் விழிகள் வெறித்துச் சூழ்ந்து அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தமையால் பெற்றோர் கண்முன் விளையாடும் குழந்தைகள்போல அவர்கள் பாதுகாப்புணர்வும் தன்னுணர்வும் கொண்டிருந்தார்கள். எப்பேச்சிலும் தெய்வங்களை அழைத்துக்கொண்டிருந்தனர். தெய்வங்கள் உறக்கிலும் விழிப்பிலும் உடனிருக்கவேண்டும் என்று மன்றாடினர்.

பூசாரி வண்டிமுத்தன் கைகளை வான்நோக்கி விரித்து பதறிக் கூச்சலிட்டபடி ஊரின் தெற்கு எல்லையில் சுடுகாட்டுப்பாதையின் தொடக்கத்திலிருந்த தன் குடிலில் இருந்து ஓடி ஊருக்குள் நுழைந்தபோது தென்மேற்கு மூலையில் கருமன் தெய்வத்திற்கு பொங்கலிட்டுக் கொண்டிருந்த தெளிக்கரை நாராயணப் பணிக்கரும் அவருடைய ஏவலர்களும்தான் அவனை முதலில் கண்டனர். “டே, அவனை இங்க கூட்டிவாருங்கடே!” என்று நாராயணப் பணிக்கர் ஆணையிட்டார்.

ஏவலர்கள் ஓடிச்சென்று வண்டிமுத்தனை மறித்தனர். ஆனால் அவன் கிறுக்கன் போலிருந்தான். கூச்சலிட்டு எம்பிக்குதித்து அலறி மறிந்தான். அவர்கள் அவனை அள்ளி பற்றி கொடிகளால் கைகளை கட்டி தூக்கிக் கொண்டு வந்தனர்.

அவன் நாராயணப் பணிக்கரை பார்த்ததும் நெஞ்சில் அறைந்து அலறி, கழுத்து நரம்புகள் புடைக்க ஓசையிழந்து அதிர்ந்து, வலிப்பு வந்து அறுபட்டு விழுந்து, கைகள் தளர்ந்து தலைசரிந்து வாய்நுரை ஒழுக்கினான். அவன் முகத்தில் நீர் தெளித்து எழுப்பி சற்று நீர் அருந்தக் கொடுத்தபோது தெளிந்து கண்ணீர் வழிய விழித்தான்.

“சொல்லுடா, என்ன? என்ன செய்தி?” என்றார் நாராயணப் பணிக்கர்.

“ஏமானே, ஏமானே” என்று வண்டிமுத்தன் கைகூப்பினான். “விளி வந்துபோட்டு… விளி வந்துபோட்டு ஏமானே.”

நாராயணப் பணிக்கர்ருக்கு புரியவில்லை. “என்னடே விளி, நசுக்காம சொல்லுடே” என்று சீறினார்.

“ஏமானே, கரடிமலைக்க விளி வந்துபோட்டுது. கருமலைப் பட்சிக்க விளி வந்துபோட்டுது.”

நாராயணப் பணிக்கர் திடுக்கிட்டார். திரும்பி தன் வேலைக்காரர்களைப் பார்த்தார். “உள்ளதா? உனக்கு எப்டி வந்தது?” என்றார்.

வண்டிமுத்தன் மீண்டும் நீர்குடித்து மூச்சுவாங்கி இளைப்பாறிவிட்டுச் சொன்னான். காலையில் அவன் தன் குடிலுக்குமேல் காற்றுவீசும் ஓசையை கேட்டு கண்விழித்தான். சுழல்காற்று கூரையை பிய்த்துக்கொண்டு சென்றுவிடுவதுபோல ஓலமிட்டு வீசியது. காலையில் இது என்ன பருவம் தவறிய காற்று, இது ஆடிமாதமா என்ன என்றெல்லாம் யோசித்தபடி படுத்திருந்தபோது மிகப்பெரிய அலறலோசை கேட்டது. ஓசையாலேயே அவன் கொடியில் காயப்போட்டிருந்த துணிகள் கிழிந்தன.

அவன் பிறுத்தாசாமியின் சூலாயுதத்தை கையிலெடுத்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தான். முற்றத்தில் அரையிருளில் பத்துமடங்கு பெரிய தென்னைமரக்கன்று ஒன்று புதிதாக முளைத்து நிற்பதுபோலிருந்தது. இரண்டு பிரம்மாண்டமான ஓலைகள் இருபுறமும் நீண்டு காற்றில் ஆடியபடி நின்றன. அது என்ன என்று அவன் மேலும் இறங்கிச் சென்றபோது புரிந்துகொண்டான்.

கருமலைப்பட்சி வந்து இறங்கி முற்றத்தில் அமர்ந்திருந்தது. காகம்தான், பத்தாயிரம் மடங்கு பெரிய காகம். கன்னங்கரிய நிறம், கருமை பளபளக்கும் அலகு. சிவந்த அனல்போன்ற கண்கள். அது அவனைக் கண்டதும் சிறகடித்து தலைதூக்கி கூவியது. தரையை ஓங்கி மும்முறை கொத்தியது. பின்பு எழுந்து பறந்து சென்று இருண்ட வானில் மறைந்தது. அதன் காற்றில் தென்னை ஓலைகள் சுழித்தாடின.

“ஏமானே, அது பலிகேட்டு வந்திருக்கு. வாற பௌர்ணமியிலே அதுக்கு நாம பலி குடுக்கணும்… நம்ம மொறை வந்துபோச்சு ஏமானே” என்றான் வண்டிமுத்தன்.

“ஏலே, உனக்க கதைய நம்மகிட்டயே சொல்லுதியா?” என்றார் நாராயணப் பணிக்கர் அவநம்பிக்கையுடன்.

“ராத்திரி கஞ்சா இளுத்திருப்பான்” என்றார் காரியஸ்தன் அச்சுதன் நாயர்.

“இல்ல ஏமானே, சந்தேகமிருந்தா வந்து அடியனுக்க குடிலு முற்றத்தைப் பாருங்க. கருமலைப்பட்சிக்க கால்தடம் அங்க கெடக்கு” என்றான் வண்டிமுத்தன்.

நாராயணப் பணிக்கருக்கு நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது. அவரும் சிறுவயது முதலே அதைக் கேட்டவர்தான். அதற்கும் ஊராரைக் கூட்டிக்கொண்டு செல்வதுதான் நல்லது என்று தோன்றியது. தன் ஏவலர்களிடம் “ஏலே, ஊருக்குப்போயி எல்லா தலைக்கட்டுக்களையும் கூட்டிட்டு வாருங்கலே” என்றார்.

அவர் அங்கேயே அமர்ந்து ஒருமுறை வெற்றிலை போட்டுக்கொண்டார். படபடப்பு அடங்கியதும் வண்டிமுத்தனிடம் என்ன நடந்தது என்று இன்னொருமுறை விரிவாக விசாரித்து அறிந்தார்.

அதற்குள் ஊருக்குள் செய்தி சென்று பரவ ஊரிலுள்ள ஒன்பதுசாதியின் தலைக்கட்டுகளும் கைகளில் கழிகளுடன் கிளம்பி வந்தனர். அவர்களை தொடர்ந்து ஊரிலிருந்த ஆண்கள் அத்தனைபேரும் வந்தார்கள்.

அவர்களில் முதலில் வந்த மூத்தாசாரி கண்ணன் “அய்யோ, எஜமானே இப்டி ஆயிப்போச்சே… இப்பிடீன்னு வந்து போச்சே” என்று கதறினார்.

“ஏமானே, ஏமானே, இனி என்ன செய்வோம்” என்று கண்டன் புலையன் கூச்சலிட்டார்.

“இருங்க, முதல்ல போயிப் பாப்பம்” என்று நாராயணப் பணிக்கர் சொன்னார். “எளவு கஞ்சாவ அடிச்சுகிட்டு சொல்லுதானான்னும் தெரியல்ல… எதுக்கும் வாருங்க”

அவர்கள் திரண்டு வண்டிமுத்தனின் குடில்முற்றத்தை அடைந்தனர். அங்கே சேற்றுமண்ணில் ஆழப்பதிந்த இரண்டு பறவைக்கால் தடங்களை தூரத்திலேயே கண்டார்கள்.

“அதாக்கும், ஏமானே அதாக்கும்!” என்று வண்டிமுத்தன் சுட்டிக்காட்டி கதறினான்

“வெட்டிக்கிட்டி வச்சிருப்பானோ?” என்று எவரோ சொன்னார்கள். “ஆடி மாசமாக்கும். காணிக்கையில்லாம அலைஞ்சுகிட்டு இருக்கான்.”

“போயி பாருங்கலே, வெட்டி வைச்சான்னா பாத்தா தெரிஞ்சிரும்லா?” என்றார் நாராயணப் பணிக்கர்.

ஆனால் எவரும் முன்னால் போகவில்லை. “சின்னவயசுக்காரனுக ஆரானும் போயி பாருங்கலே…” என்றார் அணைஞ்சான் நாடார்.

“பாட்டா நீரு ஆண்டு அனுபவிச்சாச்சுல்லா… நீரு போவும்” என்றது ஒரு குரல்.

“எவன்லே அது? உனக்க அம்மையையாலே நான் ஆண்டு அணைஞ்சேன்?” என்று அணைஞ்சான் நாடார் கூச்சலிட்டார்.

அவர்கள் முட்டி ததும்பி அங்கேயே நின்றிருந்தபோது பின்னால் காளியன் வந்து சேர்ந்தான். “ஏலே, என்னலே ஆச்சு? என்ன சங்கதி?” என்றான்

காளியனைக் கண்டதும் கூடியிருந்தவர்கள் ஆறுதல் அடைந்தனர். இளைஞர்கள் வழிவிட்டார்கள். “என்ன ஆச்சு?” என்று அவன் முன்னால் வந்தான்.

நாராயணப் பணிக்கர் எரிச்சலுடன் “ஆ, வந்தாச்சே அர்ஜுன மகாராஜா. வழி விடுங்கலே” என்றார்.

“பணிக்கரே, அர்ஜுனன்னு சொன்னா அர்ஜுனன்தான். இப்ப என்ன?” என்றான் காளியன்.

நாராயணப் பணிக்கர் “போயிப் பாருலே, அது என்னன்னு பாரு” என்றார்.

காளியன் “என்னது?” என்றான். அவன் முன்னால் செல்ல காலெடுத்து வைக்க பெருமாள் கையைப் பிடித்தான்.

“ஏலே வேண்டாம்லே… கருமலைப்பட்சி வந்திருக்குன்னு பூசாரி சொல்லுதான். அதுக்க காலு அங்க பதிஞ்சிருக்காம்.”

“பாத்திருவோம்” என்று அவன் தோளை உதறிவிட்டு முன்னால் சென்றான். அந்த காலடித்தடத்தை அணுகி கூர்ந்து பார்த்தான். அவனுடைய இரண்டு கைகளையும் விரித்த அளவுக்கு அதன் நீளமிருந்தது. மூன்று பெரிய விரல்கள். அவற்றின் நகங்கள் கடப்பாரைத் தடம்போல ஆழமாகப் பதிந்து இறங்கியிருந்தன.

“என்னன்னு தெரியல்லை… பறவைக்க காலடி மாதிரியேதான் இருக்கு. வெட்டி வச்சது மாதிரியும் தெரியல்லை” என்றான்.

“போயிப் பாருங்கலே”என்றார் நாராயணப் பணிக்கர்

ஒவ்வொருவராக அருகே சென்று பார்த்தார்கள். கூடி வளைந்து நின்று பலவாறாக ஆராய்ந்தார்கள். பறவைக்காலடியேதான்.

“சந்தேகமில்லை, அதுதான்” என்றார் பிச்சைக் கோனார்.

கருத்தான் நாடார் “அப்ப பூசாரி சொன்னது உள்ளதாக்கும். அதுக்க வரியை கேட்டு வந்திருக்கு” என்றார்.

“என்ன வரி?” என்று காளியன் கேட்டான்.

“தலைவரி” என்றார் பிச்சைக்கோனார்.

“அது மகாராஜாவுக்கு குடுக்கோம்லா?”

“இது தலையையே வரியா கேக்குது… இது தெய்வம்லா?” என்றார் அணைஞ்சான் நாடார்.

“ஏலே, எல்லாவனும் மாடன்கோயில் சாவடிக்கு வந்திருங்க… இருந்து பேசவேண்டிய விஷயமாக்கும்” என்றார் நாராயணப் பணிக்கர்.

மாடன்கோயில் சாவடியில் அந்தக் காலடிக்கு என்ன அர்த்தம் என்று அம்மன்கோயில் சாமிகொண்டாடியும், வில்லுப்பாட்டுப் பாடகரும், கூத்து நடிகருமான ஆவுடை அண்ணாவி சொன்னார். அங்கே பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த கதை என்றாலும் எவருக்குமே முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்தவர்கள் அதை மறந்து பிற கதைகளுடன் இணைத்து நினைவுகூர்ந்து, விருப்பம்போல நீட்டி ஆளுக்கொன்றாக சொல்லி அறிந்திருந்தனர்.

அதோடு அது அந்நாள்வரை வெறும் கதையாகவே இருந்தது. அர்ஜுன ராசன் கதை முதல் சுடலைமாடன் கதை வரையிலான ஆயிரம் கதைகளில் ஒன்று. அது உண்மையாக மாறி வாசலில் வந்து நின்றிருந்தபோது அதன் ஒவ்வொரு சொல்லும் கூர்மைகொண்டது, ரத்தம் கேட்கும் நாக்குமுனைகளுடன்

ஆவுடை அண்ணாவி சொன்னார். வள்ளியாற்றை ஒட்டியிருந்த அந்த நிலம் பிரம்மன் பூமியையும் வானத்தையும், இரண்டு அணையாச்சுடர்களையும், ஆயிரம்கோடி நட்சத்திரங்களையும் படைத்த காலம் முதல் அடர்ந்த காடாகவே இருந்தது. மாதம் பத்துமழை பெய்யும். மாரிபெய்து மண்புரளும்.வானம் தரையிறங்கி மண்ணில் கலக்கும்.மண்ணுக்கு அடியிலிருக்கும் பாதாளநாகங்கள் மரங்களாக முளைத்தெழுந்து நின்றிருக்கும்.கொடிச்சுருள்கள் நின்றுபெய்யும் மழைத்தாரைகளில் சுற்றிப்படர்ந்து மேலேறும்.

எருமையும் யானையும் பன்றியும் மகிழ்ந்து வாழும் ஈரம்காயாத நிலம் அது. தூவல் நனையாத கருங்காகமும் குரல்நனையாத குயிலும் பெருகிய மரத்தழைப்பு. தவளையும் தேரட்டையும் பாம்பும் என ஊர்வன நிறைந்த சேற்றுப்பரப்பு. நடப்பனவற்றில் யானையும் பறப்பனவற்றில் காகமும் ஊர்வனவற்றில் ராஜநாகமும் ஆட்சிசெய்யும் இடம்.

அனந்தகோடி புழுக்களுக்கு ஆயிரம்கோடி பூச்சிகள். ஆயிரம்கோடி பூச்சிகளுக்கு ஆயிரம் லட்சம் பறவைகள். ஆயிரம் லட்சம் பறவைகளுக்கு ஆயிரமாயிரம் விலங்குகள்.ஆயிரமாயிரம் விலங்குகளுக்கு ஆயிரம் யானை.ஆயிரம் யானைக்கு ஐம்பது புலி என்பது காட்டின் கணக்கு. ஐம்பது புலிக்கும் தலைமையென அமைந்து அத்தனை உயிர்களையும் ஆட்சிசெய்வது ஒற்றைப்பறவை, அதற்குப்பெயர் கிடையாது.அதை கருமலைப்பட்சி என்று முன்னோர் அழைத்தார்கள்.

கரடிமலைச் சிகரத்திற்கு அப்பால் இருக்கும் காட்டுச்சமவெளியை கடந்துமேலேறி பன்றிமலை உச்சியில் நின்றால் அந்தப்பறவையை பார்க்கமுடியும். அது அங்கே மலையுச்சியில் ஒரு கரும்பாறையாக அது அமைந்திருக்கும். இரு சிறகுகளையும் விரித்து, தலையை வானம் நோக்கி தூக்கி ,அலகு கூர்ந்து வானைக்கிழிப்பதுபோல நின்றிருக்க, மலையுச்சியில் அது திகழும்.

பகலில் அது வெறும் கரும்பாறைதான். அதன்மேல் ஏறிச்சென்று அந்தச் சிறகுகளில் நின்றவர்கள் உண்டு. அதன் கழுத்தென்றும் தலையென்றும் இருப்பது கூர்மையான பாறை, அதன் வளைவுவரைக்கும் கூட செல்லமுடியும். அங்கே குறவர்கள் மலைத்தேன் எடுக்கவும் மலைக்கழுகு முட்டைகளை திருடிவரவும் ஏறிச்செல்வதுண்டு. மலைக்கழுகுகளை அவர்கள் வீட்டில் கலத்தில் வைத்து பொரிக்கவைத்து குஞ்சுகளாக்கி வீட்டிலேயே வளர்த்துப் பழக்குவார்கள். அவை காட்டின் மேல் எழுந்து சுழன்று வேட்டைக்கான விலங்குகளை இடம்காட்டும். தேன்கூடுகளுக்கு திசைகாட்டி அழைத்துச் செல்லும்

ஆனால் இரவில் கருமலைப்பட்சி உயிர்கொள்ளும். நிலவொளியில் அந்தப்பாறையைப் பார்த்து நின்றால் அதன் சிறகுகள் இழுபட்டு குவிய, தலை கீழிறங்கி மண்ணைப்பார்க்க, அதன் கண்கள் கனல் என சுடர்விடுவதைக் காணலாம். மலைப்பாறைகள் நடுங்கி அதிரும் பேரொலியுடன் அது வானத்தில் பறந்து எழும். சிறகடித்து காட்டின்மேல் பறக்கும். அதன் சிறகசைவில் எழும் காற்றில் காட்டுமரங்கள் சுழலும்.

கருமலைப்பட்சி பதினெட்டு மலையுச்சிகளில் அமர்ந்து கீழே நோக்கி ஒவ்வொன்றும் அதனதன் முறைப்படி அதனதன் இடங்களில் திகழ்கின்றன என்பதை உறுதி செய்து கொள்ளும். அதன்பின் வள்ளியாற்றில் இறங்கி ஏழு சுழிக்கயங்களில் இருந்து நீர் அருந்தி மேலே செல்லும். அது இரையெடுப்பதில்லை, ஆகவே எந்த விலங்கும் அதை அஞ்சுவதில்லை. பிரம்மமுகூர்த்தத்திற்கு முன்னால் அது சென்று மலையுச்சியில் சிறகு விரித்து அமரும். காலையொளி எழும்போது கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும். சூரியக்கதிர்கள் படப்பட அதன் சிறகுகள் கல்லாகும். அது பாறைவடிவமென்றாகி உறைந்துவிடும்

காட்டின் பதினாறாயிரம்கோடி நெறிகளின் காவலன் அந்தப்பறவை. தேன்சிட்டுக்கு தலைகீழாகப் பறக்கவும் குளவிகளுக்கு பறந்தே புணரவும் அதிகாரம் அளித்தது அதுதான். அதற்கு சாவு இல்லை. ஆகவே அதற்கு துணையில்லை. முட்டையிட்டுப் பெருகுவதுமில்லை. காட்டின்மேல் மலைகளின் ஆணை அந்தப்பறவை வழியாகவே திகழ்கிறது.

சக்திதுர்க்கையின் அம்சமான திருவிதாங்கூர் அரசி கௌரி பார்வதிபாய் தம்புராட்டி மக்கள் வாழ்வதற்கு மண் போதவில்லை என்று உணர்ந்தாள். அனந்தபத்மநாபனிடம் ஆணை பெற்று காட்டுக்குள் ஊர்களை உருவாக்க உளம்கொண்டாள். நூற்றெட்டு மந்திரிகளை தாம்பூலம், வஸ்திரம், உப்பு,வெல்லம்,பொன் என ஐந்து செல்வங்களுடன் தூதனுப்பி காணிக்காரர்களின் தலைவர்களிடம் அவ்வாறு மக்களைக் காடழித்து நாடாக்கிக் குடியமர்த்துவதற்குரிய ஆணையை பெற்றாள்.

காணிக்காரர்களின் பதினெட்டுகூட்டங்களின் தலைவர்கள் கரிமலையில் கூடி அமர்ந்து பேசி, மலைத்தெய்வங்களின் சொல் பெற்று, கோல்தூக்கி அந்த ஆணையை அளித்தார்கள். ஆனால் கரடிமலையின் அடிவாரக்காட்டில் மட்டும் குடியேறவேண்டாம், அது தெய்வங்களுக்கான நிலம் என்றார்கள். அங்கே மலையுச்சிமேல் கருமலைப்பட்சி அமர்ந்து ஆட்சி செய்கிறது என்றும் ,அவ்வெல்லைக்குள் புதியவர்கள் செல்லக்கூடாது என்றும், சொன்னார்கள்.

அவர்கள் அளித்த பதினெட்டு காடுகளிலும் மக்கள் குடியேறி ஊர்களாயினர். மேலும் மேலும் மக்கள் வந்துகொண்டே இருந்தமையால் நிலம்தேடி மக்கள் அலைந்தனர். அப்போது கிழக்கே பாண்டியநிலத்தில் இருந்து பன்னிரு குடிகளுடன் வந்த குலத்தலைவன் கருமன் என்பவன் ஒரு மலையுச்சிமேல் ஏறிநின்று பார்த்தபோது வெள்ளிச்சரிகையால் பின்னல் வேலைசெய்யப்பட்ட பச்சைப்பட்டு விரிப்பு போல நீரோடைகள் மின்னும் நிலப்பரப்பை கண்டான்.அதை தன் குடிகளுக்கு கரமொழிவாக தரவேண்டும் என்று அவன் ராஜசபையில்போய் மகாராணி கௌரி பார்வதிபாய் சவிதம் பணிந்து வேண்டினான்.

அந்நிலத்தை கரமொழிவாக அளிக்கமுடியாது, அது காணிக்காரர்களின் ஆணை என்று மகாராணி சொன்னாள். அப்படியென்றால் நாங்கள் போய் காணிக்காரர்களிடமே சம்மதம் பெற்றுக்கொள்கிறோம் என்றார்கள் கருமனும் கூட்டமும். ’எனில் அவ்வாறு ஆகுக’ என்றாள் அரசி.

அவர்கள் காணிக்காரர்களை சென்று சந்தித்து ஒப்புதல் தரும்படி மன்றாடினர். காணிக்காரர்களின் தலைவன் முதலில் பல சொல்லி தவிர்த்தான். அவர்கள் கண்ணீருடன் மன்றாடியபோது கடைசியில் கருமலைப்பட்சி அங்கே மலையுச்சியில் வாழ்வதைச் சொன்னான்.இரவுகளில் அது வானில் அலைகிறது. சிறு நெறிதவறுவதைக்கூட அது ஏற்றுக்கொள்வதில்லை.அதன் ஆணைப்படியே காட்டில் பூச்சிகளும் யானைகளும் வாழ்கின்றன என்றான்.

ஒருமுறை கருநாகம் ஒன்று மரத்தில் சுற்றி ஏறி காகத்தின் கூட்டில் இருந்த மூன்றுமுட்டைகளில் ஒன்றை விழுங்கியது. ஒன்றை மட்டும் தனக்கு உணவென எடுக்கவேண்டும் என்பதே அதற்குரிய நெறி. ஆனால் எஞ்சிய இரண்டு முட்டைகளையும் அது கீழே தட்டிவிட்டது.

காகம் வானிலெழுந்து கூச்சலிட்டது. நாகத்தின் முன் தோன்றிய கருமலைப்பட்சி “நீ வேண்டுமென்றே தட்டிவிட்டாயா?”என்று கேட்டது. நாகம் இல்லை என்று மறுத்தது. பிறநாகங்கள் ‘ஆமாம், அவன் தற்செயலாகவே தட்டிவிட்டான், நாங்கள் கண்டோம்’ என்று பொய்சாட்சி சொல்லின.

கருமலைப்பட்சிக்கு தெரியாத ஒன்றில்லை. அது சீறி எழுந்தது. ‘பொய்சொன்ன உங்கள் நாவுகள் இனி இரண்டாக பிளந்திருக்கட்டும். இனி உங்கள்விழிகள் மூடாமல் ஆகட்டும். உங்கள் சான்றுகளுக்கு எந்த சபையிலும் மதிப்பில்லாமலாகட்டும்’ என்று சாபமிட்டது. இன்றும் நாகங்களின் நாக்கு கிழிந்தே இருக்கிறது.அவற்றால் சீறத்தான்முடியும், ஓசையிட முடியாது என்றார் காணிகாரர்களின் தலைவன்.

“அப்படியென்றால் நாங்கள் அந்த பறவையிடமே சென்று கேட்டு நிலத்தைப் பெற்றுக்கொள்கிறோம்” என்று கருமன் சொன்னான்.

கருமன் தன் மக்களுடன் கூட்டமாக அந்நிலத்திற்கு வந்தான்.அவர்கள் அங்கே நிலத்தில் குடிலமைத்தனர். அன்றிரவு அவர்களின்மேல் சுழலிக்காற்று அடித்தது. மாபெரும்சிறகுகளுடன் கன்னங்கரிய கருமலைப்பட்சி வந்திறங்கியது.

“யார் நீங்கள்? என் நிலத்தில் எப்படி கால்வைத்தீர்கள்?” என்று இடியோசையால் கேட்டது

கருமன் “நாங்கள் பாண்டிநிலத்திலிருந்து பஞ்சம்பிழைக்க வந்தவர்கள். இந்தநிலம் பச்சை செழித்திருக்கிறது. இங்கே எங்கள் பிள்ளைகள் அன்னப்பால் உண்டு வாழும் என நினைத்தோம். ஆகவே இங்கே வந்தோம்” என்றான்

“இங்கே எவருக்கும் ஒப்புதல் இல்லை. இங்கே இருப்பவர்களை கொன்றே அழிப்பேன்”என்று கருமலைப் பட்சி சொன்னது

“நாங்கள் பட்டினியால் செத்தவர்போக மிஞ்சியவர்கள். இங்கே உன் அலகால் சாவதே விதி என்றால் சாகிறோம்.இனி எங்கும் போவதாக இல்லை”என்றான் கருமன்

“நீ இங்கே இருக்க நான் அனுமதிக்கவேண்டும் என்றால் அதற்கு என்ன காரணம்? ஒன்றே ஒன்று சொல்”என்றது கருமலைப்பட்சி

“உன்னை பயப்படவும் பணியவும் இங்கே ஆயிரம் உயிர்கள் இருக்கின்றன. உன் புகழைப் பாட நாவுள்ள மனிதர்கள் இல்லை. நாங்கள் ஆண்டுதோறும் உன் புகழ்பாடுவோம்” என்று கருமன் சொனனன்

அவன் சொன்னதைக்கேட்டு கருமலைப் பட்சி மகிழ்ந்தது. “உன் துணிவையும் தெளிவையும் கண்டு மகிழ்கிறேன். நீ இந்தக் காட்டுக்கு உரியவன்”என்று அது சொன்னது. “ஆனால் இந்தக் காட்டில் இருப்பவர்கள் என் ஆணைக்கு கட்டுப்பட்டாகவேண்டும். இந்தக்காட்டில் நான் நிறுவியிருக்கும் நெறிகளுக்கு அவர்கள் பூரணமாக உடன்படவேண்டும். அதை உன் குடிகளின் சார்பாக நீ நிலம் தொட்டு ஆணையிடு”

கருமன் “இந்நிலம் உன்னுடையது. நாங்கள் எப்போதும் உன் குடிகள். உன் நிலத்தில் உன் ஆணைப்படியே வாழ்வோம். இது உறுதி” என்று நிலம்தொட்டு ஆணையிட்டான்.

“நீங்கள் என்னை ஆண்டுதோறும் புகழ்ந்து கொடை அளிக்கவேண்டும். உங்கள் குலங்களெல்லாம் என் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதை ஒருபோதும் மறக்கலாகாது. அதற்காக நீங்கள் உங்களில் ஒருவரை ஆண்டுக்கொரு முறை எனக்கு பலியாக அளிக்கவேண்டும்” என்றது கருமலைப்பட்சி.

“அளிக்கிறோம்”என்று கருமன் உறுதியளித்தான். “ஆனால் நீ எங்களுக்கு காவல்தேவதையாக அமையவேண்டும்”

“அவ்வாறே அமைகிறேன்”என்றது கருமலைப்பட்சி. மூன்றுமுறை மண்ணைக்கொத்தி ஆணையிட்டது.

கருமனின் குடியினர் அந்நிலத்தில் அவ்வாறுதான் குடியேறினார்கள். ஒருபோதும் ஈரம் உலராத அந்தமண்ணில் அவர்கள் நெல்லும் வாழையும் பயிரிட்டனர்.கதிருக்கு கலம் தேறி நெல் விளைந்தது. தரைதொட்டு காய் அடுக்கி வாழை குலை தாழ்ந்தது. அவர்கள் செழித்தனர்.

முதலில் அவர்கள் பன்னிரண்டு ஊர்களாக அங்கே வாழ்ந்தனர். ஓர் ஆண்டுக்கு ஓர் ஊரிலிருந்து ஒருவரை பலியளிப்பதென்று தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள். அவ்வாறு பலிகொடுத்தனர். கருமலைப்பட்சி வந்து அவர்களின் பலியைப் பெற்றுச் சென்றது.

காலம் செல்லச்செல்ல ஊர்கள் பெருகி நூற்றெட்டு ஊர்களாயின. ஆகவே ஓர் ஊர் நூற்றெட்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒருவரை அளித்தால்போதும் என்ற நிலை வந்தது.

“நம்ம ஊரிலிலே இருந்து நூற்றெட்டு வருசம் முன்னாலே குடுத்த பலி. இந்த ஆண்டு நம்ம மொறை வந்திருக்கு” என்றார் ஆவுடை அண்ணாவி. “வாற பௌர்ணமியிலே கருமலைபட்சி வந்திறங்கும். நம்மிலே ஒரு உசிரை நாம குடுத்தாகணும். இது நம்ம அப்பன் மூத்தப்பன்மாரு குடுத்த சொல்லு”

மாடன்கோயில் முற்றத்தில் ஒவ்வொருவரும் திகைத்து அமர்ந்திருந்தனர். பலர் தொண்டை வரண்டு வாய் திறந்திருந்தனர்.

“ஏலே, என்னலே முளிச்சிட்டிருக்கிய? இங்கபாரு, இது நினைச்சுப்பாத்தா பெரிய விசயம் ஒண்ணுமில்லை. சீக்கும் மூப்புமா வருசத்துக்கு எப்டியும் நம்ம ஊரிலே பத்துப்பதினஞ்சு தலைகள் போயிடுது. அதிலே ஒண்ணை இந்த சாமிக்கணக்குக்கு மாத்திட்டா போரும்… எல்லாரும் செய்யுதது அதாக்கும்” என்றார் நாராயணப் பணிக்கர்

“ஆமா, சாமி நமக்கு குடுத்திருக்குத பெரிய அனுகூலம் அதாக்கும். நம்மளிலேயே லட்சணமொத்த சின்னவயசுக்காரனை பலிகுடுக்கணும்னு அது கேட்டிருந்தா என்ன செய்வோம்? இப்ப அது கேக்குதது நம்மளிலே ஒரு தலைய மட்டும்தான். சாக்காடு வந்து நாளெண்ணி கிடக்குத ஒண்ணை குடுத்தாலும் சாமிக்கு அதுவே போரும்” என்றார் பிச்சைக் கோனார்

“ஆமா, எப்டியும் சாவுத ஆளு” என்றார் அண்ணாவி.

காளியன் சீற்றத்துடன் “என்ன பேச்சு இது? அறிவுகெட்டபேச்சு? சாமியாவது பலியாவது. அப்டி நூற்றெட்டு ஊரும் பலிகுடுக்குதுன்னா நமக்கு அது எப்டி இதுவரை தெரியாம போச்சு?”என்றான்

“குடுத்த பலிய வெளியே சொல்லக்கூடாதுன்னு சாமிக்க ஆணை இருக்கு” என்றார் ஆவுடை அண்ணாவி. “ஆனா குடுக்கானுக, இது எனக்கு தெரியும்”

“அந்த சாமியை ஆரு பாத்தது? ஆருக்க கதை இது?” என்றான் காளியன்

“பாத்தவன் இந்தா நிக்கான், டேய் வண்டிமுத்தா சொல்லுடே” என்று அப்பாவு நாடார் சொன்னார்

“அவன் பூசாரி. பூசாரி மட்டும் பாக்குத ஒரு தெய்வம் உண்டா?” என்றான் காளியன்

நாராயணப் பணிக்கர் “லே நீ உக்காரு… எங்க பிடாகை கூட்டினாலும் நீ எந்திரிச்சு பேசிட்டிருக்கே”என்றார்

“ஆமா, ஆனா இது வரை நான் எனக்க நியாயத்துக்காக இங்கே பேசினதில்லை. எப்பவும் ஊரு நியாயமாக்கும் என் நியாயம்…” என்றான் காளியன்

“ஊரு நியாயம் பேசுததுக்கு நீ ஆருலே? அதுக்கு இங்க ஓரோ சாதிக்கும் தலைக்கெட்டுகள் உண்டு”என்றார் நாராயணப் பணிக்கர்

“தலைக்கெட்டுகள் அந்தந்த சாதிக்க நியாயத்தைப் பேசுவான்…அத்தனை சாதிக்க நியாயத்தையும் பேசணுமானா ஒருத்தன் வரணும்”என்று காளியன் சொன்னான்

“எல்லாருக்காகவும் பேச நீ ஆருலே, தெய்வமா?”என்றார் நாராயணப் பணிக்கர்

“இல்ல மனுசன்… மனுசனுக்காக பேசுதேன்” என்று காளியன் சொன்னான் “அப்டி அத்தனைபேருக்காகவும் பேசினவருதான் உமக்க கொள்ளுத்தாத்தனுக்க அப்பன் கிருஷ்ணப்ப பணிக்கரு. அவருக்க அதிகாரத்திலயாக்கும் இப்ப நீரு அந்த மேடையிலே ஊருத்தலைவராட்டு இருந்திட்டிருக்கீரு”

“அப்ப உனக்கு இதிலே உக்காரணும்… அதாக்கும் திட்டம் இல்லியா?”

“இல்ல. எனக்கு எங்கயும் உக்காரவேண்டியதில்லை. ஆனா நியாயம்னு ஒண்ணு இருக்கு. அதை சொல்லணும்”

“என்ன நியாயம், சொல்லு? சொல்லுடே” என்றார் ஆவுடை அண்ணாவி

“அப்டி ஒரு சாமி இல்லை. அப்டி ஒரு சாமி இருந்தாக்கூட அதுக்கு நாமளே கூடி நம்மளிலே ஒருத்தரை பலிகுடுக்குதது அநீதி. அதைச் செய்யக்கூடாது…”

“ஏலே சாவக்கிடக்குத கட்டையைத்தானே பலிகுடுக்கப்போறோம்..”

”இருக்கட்டும். ஆனா அவருக்கு ஊரேகூடி தன்னை சாகக்குடுக்கானுகன்னு தெரியும்ல? அவருக்க மனசு என்ன பாடுபடும்? அவரு இந்த ஊரிலே ஒரு அம்சமாக்கும். அவரை அப்டி ஊரு கைவிட்டுட முடியுமா?” என்றான் காளியன்

“இருக்கிறதிலேயே யாருக்கும் வேண்டாத ஒருத்தரை குடுப்போம்” என்றார் அண்ணாவி. “இங்க சோத்துக்கு செலவா பூமிக்குச் செலவா கிடக்குத ஒருத்தரை குடுத்தா என்ன தப்பு?”

“அப்டி ஒருத்தர் இல்லை. அப்டி ஒருத்தர் இருந்தாக்கூட ஒரு ஊரு அவரை அப்டி விட்டிரக்கூடாது. எது வந்தாலும் நம்ம ஊரு நம்மளை விட்டிராதுங்கிற நம்பிக்கை ஊரிலே ஒவ்வொருத்தருக்கும் வேணும். இப்டி ஒருத்தரை பலிகுடுத்தோம்னா அந்த நம்பிக்கையை நாம கொல்லுதோம். அதைச் செய்யக்கூடாது” என்றான் காளியன்

“பிறவு என்ன செய்யணும்னு சொல்லுதே?”

“அந்த தெய்வம் வரட்டும்… அது என்ன செய்யும்? பலிகுடுக்கல்லேண்ணா நம்மளை என்ன செய்யும்?”

“என்ன செய்யுமா? நம்ம ஊரையே அழிக்கும்… ஒத்த ஒருத்தனை மிச்சம் வைக்காது. பெண்டு பிள்ளைகளோட அத்தனைபேரையும் பலி எடுக்கும்”

“எடுக்கட்டும்… நாம போயி நிப்போம். இந்தா எடுத்துக்க, என்னவந்தாலும் எங்களிலே ஒருத்தனை நாங்களே விட்டுக்குடுக்க மாட்டோம்னு சொல்லுவோம்” என்றான் காளியன். “அதைச் செய்ய நமக்கு தைரியம் உண்டுன்னா அந்த தெய்வம் நம்மளை வாழ்த்தும். சந்தேகமே வேண்டாம்”,

“தெய்வத்தை சோதிக்கச் சொல்லுதியா?”என்றான் வண்டிமுத்தன்

“இல்லை, நம்மை தெய்வம் சோதிக்குது. நாம தெய்வத்துக்கு முன்னாலே இதுவரை ஜெயிச்சதில்லை. ஒருதடவை நின்னுபாப்போம். கண்டிப்பா ஜெயிப்போம்”

“சும்மா வெட்டிப்பேச்சு பேசிக்கிட்டு”என்று நாராயணப் பணிக்கர் சொன்னார். “ஆகிற வேலையை கவனியுங்க பூசாரி”

“அப்டி ஒருத்தரை பலிகுடுத்தா அதுக்கு என்ன அர்த்தம்? அவரு ஒருபக்கம், மொத்த ஊரும் அவரை எதிர்த்து இந்தபக்கம் நிக்குத மாதிரில்ல அது? ஒரு மனுசனை அப்டி தனிமைப்படுத்தலாமா?”காளியன் கேட்டான்.

“ஊருக்காக ஒருத்தன் சாகலாம்னு சாஸ்திரம் இருக்கு” என்றார் ஆவுடை அண்ணாவி

“யாரை? அதானே கேள்வி யாரை?”என்று காளியன் சொன்னான். “நான் சொல்லுதேன். ஒருத்தனுக்காக ஊரே சாகலாம். அப்டி வாழுத ஊருகள்தான் ஜெயிக்கும்”

“எதுக்குய்யா வெட்டிப்பேச்சு…” என்று கூட்டத்தை நோக்கி திரும்பி “ஊர்க்காரங்க என்ன சொல்லுறீங்க? ஒருத்தனை குடுக்க முடியாதுன்னு சொல்லி சாமி முன்னாடி போயி நின்னு ஊரையே அள்ளிக் குடுத்திருவோமா?”என்று நாராயணப் பணிக்கர் கேட்டார்.

கூடியிருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து “ஒருத்தரை பலிகுடுப்போம்” என்று கூச்சலிட்டனர்

“அப்டி ஒரு தெய்வம் இல்லை…இது பூசாரி சொல்லுத கிறுக்குத்தனம்”என்று சொல்லிக்கொண்டு காளியன் சபையிலிருந்து வெளியே சென்றான்

அதன்பின் நாராயணப் பணிக்கர் அந்த சபையை தலைமை தாங்கி நடத்தினார். சாகப்போகும் நிலையில் ஊரில் இருக்கும் கிழவர்களின் பட்டியல் போடப்பட்டது. ஏழுபேர் தேறினார்கள். அந்த ஏழுபேரில் வாழ்ந்தகாலத்தில் திருடனாகவும், பெண்வெறியனாகவும், ஊருக்கு அடங்காதவனாகவும் இருந்த கோணன் மூப்பன் என்பவரை கடைசியாகத் தேர்வுசெய்தனர். அவருடைய பேரப்பிள்ளைகளில் ஒருவனாகிய கொச்சுமாடனின் வீட்டுத்திண்ணையில் கிழம் ஆறுமாதமாக நினைவில்லாமல் கிடந்தது.

“அப்ப முடிவு எடுத்தாச்சு. கோணன் நம்ம ஊருக்கான பலியாக்கும்! அவருக்கு இப்ப நல்ல நினைவும் இல்லை. என்ன சொல்லுறிய?”என்றார் நாராயணப் பணிக்கர்

அனைவரும் கைதூக்கி “ஆகட்டே!”என்றார்கள். கொச்சுமாடனும் கைதூக்கினான்

“அப்ப அற்றகையாட்டு முடிவுசெய்தாச்சு… இன்னும் ஏழுநாள் இருக்கு. பௌர்ணமி வரை ஊரிலே விரதமாக்கும். எல்லாரும் நோன்பு எடுத்து சாமி கும்பிட்டு இருந்து கொள்ளுங்க”என்றார் நாராயணப் பணிக்கர்

அனைவரும் பெருமூச்சுடன் கலைந்தனர். அவர்களுக்கு விடுதலை உணர்வும் நிம்மதியும் இருந்தது.

ஆவுடை அண்ணாவி “நல்ல முடிவு… உள்ளதைச் சொன்னா அந்த கிழடுக்கும், அவனுக்க பேரன் கொச்சுமாடனுக்கும், ரெண்டுபேருக்குமே இது ஒரு விடுதலையாக்கும்” என்றார்

“ஊருக்கே விடுதலைன்னு சொல்லும்”என்றார் நாராயணப் பணிக்கர்

வீட்டுக்குச் சென்று தன் மனைவியிடம் கொச்சுமாடன் அந்தச் செய்தியைச் சொன்னதுமே அவள் “ஊருக்கே எளைச்சவங்க நாமளா? திண்ணையிலே சாவக்கெடக்காரு, இல்லேன்னு சொல்லல்ல. ஆனா அவரு சேத்துக் குடுத்த நெலமும் அம்பது பவன் பொன்னும் இல்லேண்ணா ஊரிலே உங்களுக்கு என்ன மதிப்பு?”என்றாள்

“ஆனா ஊரு முடிவு எடுக்குறப்ப?”என்றான் கொச்சுமாடன்

“ஊரு அப்டித்தான் சொல்லும். நாளைக்கு எல்லாம் முடிஞ்சபிறவு அவனுகளே சொந்த பாட்டனை வித்து தின்னகுடின்னு நம்மளைக் காட்டி எகணி சொல்லுவானுக. அவரு தேடிக்குடுத்த நிலத்திலே தாயாதிமாரு சொந்தம்பேசி வந்து நிப்பானுக” என்றாள்

கொச்சுமாடன் திகைத்துப்போனான். அவன் மனைவி “செரி, தூக்கிக் குடுக்கோம். போறநேரத்திலே ஒரு சாபத்தை போட்டுட்டு போயிட்டாருன்னா ஆருக்கு நட்டம்? இவனுக வந்து சாபத்தை ஏத்துக்கிடுவானுகளா?” என்றாள். “அவருக்க சோத்த திங்குதோம். நம்ம புள்ளைக வாழணுமில்ல?”

கொச்சுமாடன் வெளியே வந்து கிழவரை பார்த்தான். புடைத்த மூக்குக்குள் முடி நிறைந்திருக்க பல்லில்லாத வாய் திறந்து தூங்கிக்கொண்டிருந்தார். அவனுக்கு ஏனோ அழுகை வந்தது. அவனால் அவரை பார்க்க முடியவில்லை

அன்று இரவு அவன் நெடுநேரம் தூங்கவில்லை. புரண்டு புரண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான். தூங்கியபோது ஒரு கனவு வந்தது. அதில் கிழவர் வந்து அழுதபடியே “என்னைய தூக்கி குடுக்காதே மக்கா… நான் உனக்க பிள்ளைகளுக்க பாட்டனாக்கும்!” என்றார்

காலையில் எழுந்ததுமே கொச்சுமாடன் கதறி அழுதபடி பணிக்கரின் வீட்டு முகப்பிற்குச் சென்று நின்று கதறி அழுதான். “எனக்க பாட்டனை நான் விட்டுத்தர மாட்டேன். என் குடும்பமே அழிஞ்சாலும் சரி, அவரை விடமாட்டேன்” என்றான்

“ஏலெ என்ன பேச்சு பேசுதே?அது ஊருகூடி எடுத்த முடிவாக்கும்”என்றார் நாராயணப் பணிக்கர்

“ஊரு என்ன சொன்னா என்ன? அவரு எனக்க பாட்டன்… என் ரெத்தம்… அவரு இல்லேன்னா நான் இல்லை” என்று கொச்சுமாடன் கூச்சலிட்டான்.

”பத்து காசுக்கு பிரயோசனமில்லாத்த கெழடு… திருட்டும் பெண்ணுபிடியுமா அலைஞவரு”.

“அது நீங்க சொல்லுதது…அவரு இந்த ஊருக்கு செய்த நன்மைகளை மறந்திட்டீகளா? அறுபது வருசம் முன்ன பாண்டிப்படை வந்து ஊரை வளைச்சப்ப ஒத்தையாளா நின்னு பொருதினவரு அவராக்கும்… அவருக்க ஈட்டி இல்லேன்னா அப்ப இந்த ஊரிலே அம்பது தலை உருண்டிருக்கும்!” என்றான் கொச்சு மாடன் “நண்ணி மறக்கப்பிடாது. உப்பு திங்கிறவன் நண்ணி மறக்கப்பிடாது”

நாராயணப் பணிக்கர் “அது உள்ளதாக்கும், எனக்க அப்பன் சொல்லியிருக்காரு”என்றார். பிறகு யோசித்து “அப்ப மத்தவரு இருக்காரே, கண்டன்கோரனுக்க தாத்தா. சொடலைமுத்து. அதுவும் எந்திரிக்க முடியாம இளுத்துட்டுத்தானே கிடக்கு? அதை குடுப்போம்” என்றார்.

கண்டன்கோரனின் தாத்தா. சுடலைமுத்துவும் நினைவில்லாமல்தான் படுத்திருந்தார். ஆனால் செய்தி சொல்லப்பட்டதும் கண்டன்கோரனின் பெண்குழந்தைகள் ஓடிவந்து கிழவரை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறத் தொடங்கிவிட்டார்கள். சாவடிக்கு ஓடிவந்த கண்டன்கோரன் “எனக்க சங்கை அறுங்க… நான் என் பாட்டனை விட்டுத்தரமாட்டேன்” என்றான். நெஞ்சிலறைந்து கதறி “எனக்க பாட்டனுக்காக நாங்க குடும்பத்தோடே சாவோம்”என்றான்.

மூன்றாவதாக குமரேசனின் அப்பா இருளனை பலிக்கு தேர்ந்தெடுத்தனர். அவர் ஒருபக்கம் தளர்ந்து படுத்து ஆறு ஆண்டுகளாகிவிட்டிருந்தது. கழிப்பதும் படுக்கையிலேயே. உடலின் ஒருபக்கமே புண்ணாகி அழுகியிருந்தது. ஆனால் அவர் அச்செய்தியை அறிந்ததும் “மக்களே என்னைய கைவிட்டிராதீங்கடே…என்னைய கொலைக்கு குடுக்காதீங்கடே!” என்று கூவினார்.

“அப்பச்சீ, நான் உயிரோடே இருக்கிற வரை அது நடக்காது அப்பச்சீ” என்று அவன் கதறி அழுது அவர் காலில் விழுந்தான்

சாகக்கிடந்த ஏழு கிழவர்களும் அவர்களின் உறவினர்களுக்கு மிக முக்கியமானவர்களாக ஆனார்கள். அவர்களின் நற்குணங்களும் நற்செயல்களும் நினைவுக்கு வந்தன. அவர்கள் உதவிகள் செய்திருந்தனர், தியாகங்கள் புரிந்திருந்தனர், சிரித்து களித்து விளையாடி கண்ணீர்விட்டு வாழ்ந்திருந்தனர். ஊரெல்லாம் அவர்களை நினைவுறுத்தும் பொருட்களும் இடங்களும் இருந்தன.அவர்களின் உறவினர்கள் உணவுப்பொருட்களுடன் கிளம்பி வந்து அவர்களைப் பார்த்து நலம் விசாரித்தார்கள். அவர்களின் இல்லங்கள் பண்டிகைக்கோலம் கொண்டன.

“எனக்க அப்பன் இப்ப வயசாகி சாகக்கிடக்கலாம். ஆனா ஒரு காலத்திலே இந்த ஊரிலே எவனுக்க மாட்டுக்கு சீக்குன்னாலும் வாகடம் ஓலையை எடுத்துக்கிட்டு போனவரு அவராக்கும். இப்ப அவரை தூக்கி குடுன்னு சொல்லுதானுக. ஏலே, இந்த ஊரே அழிஞ்சாலும் செரி, என் குடும்பமே அழிஞ்சாலும் சரி, எனக்க அப்பனை விட்டுக்குடுக்க முடியாதுலே”என்று அணைஞ்சி நாடார் கூச்சலிட்டார். கண்ணீருடன் நெஞ்சில் அறைந்து “என் அப்பனை எவனாம் இனிமே சுட்டிக் காட்டி பேசினிய அவன் சங்க கடிச்சு துப்பீருவேன்” என்றார்.

“நாங்க பாவங்கதான். ஆனா சொந்த ரெத்தத்திலே மூத்ததை கொன்னு தின்னுகதுக்கு எரணம் கெட்ட எரப்பாளிக இல்லை” என்று நாணன் ஆசாரியின் பிள்ளைகள் சொல்லிவிட்டார்கள்.ஆசாரிக்குடியே அவர்களின் வீட்டில் கண்ணீருடன் கூடியிருந்தது.

அப்படியென்றால் பலியாக யாரைக்கொடுப்பது என்ற பேச்சு கிளம்பி வயல்களிலும் தோப்புகளிலும் படர்ந்தது. ஆளுக்கொருவரை சுட்டிக்காட்டினார்கள். எவரை தேர்வுசெய்தாலும் அவருக்காக ஒரு கூட்டம் கிளம்பியது.

“ஆமலே கண்ணு தெரியாத ஆளாக்கும்… கண்ணில்லாதவனுக்கு எட்டு காதுன்னு தெய்வத்துக்க உத்தரவு…. கண்ணில்லாதவன குடுத்துட்டு நீ எவ்ளவுநாள் கண்ணோட வாழ்வே?”

“உள்ளதாக்கும், மூளையில்லா பிள்ளையாக்கும். ஆனால் இப்பமும் நான் என் கையாலே சோறு வாரிக்குடுத்து உறக்குதேன்… எவனாம் என் பிள்ளையைப் பத்தி சொன்னா வீடுதேடி வந்து வெட்டுவேன்”

“அனாதைன்னு எவம்லே சொன்னான்? எனக்க வீட்டுமுற்றத்திலே அந்தியுறங்குத பயலாக்கும். என் வீட்டுச் சோத்தை தின்னு வளந்தவன் அவன். பேசுதவன் நாக்கை இளுத்துவச்சு அரிஞ்சிருவேன்”

“எளவு, இந்த ஊரிலே பிரயோசனப்படாதவன்னு ஒருத்தன்கூட இல்ல போலிருக்கே” என்றார் நாராயணப் பணிக்கர்

“உள்ளதைச் சொன்னா அது உண்மையாக்கும்….” என்றார் ஆவுடை அண்ணாவி “யாரானாலும் யாருக்கோ அவரு வேண்டப்பட்டவராக்கும். யாருக்கோ அவரு நல்லது செய்திருப்பாரு…அதனாலே யாரு செத்தாலும் கண்ணீரு விட ஒரு ஆளாவது இங்க உண்டு”

“அப்ப இப்பம் என்னவே செய்ய? இன்னும் ஒருநாளுதான் இருக்கு. பௌர்ணமிக்குள்ள ஆளைக் கண்டுபிடிக்கணுமே” என்றார் நாராயணப் பணிக்கர்

“மறுக்கா பிடாகையைக் கூட்டுவோம். அங்க முடிவெடுப்போம். ஒரு ஆளை கண்டுபிடிக்கல்லேன்னா ஊரே அழியவேண்டியிருக்கும்னு சொல்லுவோம்… பலிகுடுக்கல்லேன்னா நீயும் உன்குடியும் சாவும்னு சொன்னா பயந்திருவானுக” என்றார் ஆவுடை அண்ணாவி

பிடாகை கூடியபோது ஊரில் அனைவருமே கொந்தளித்துக்கொண்டிருந்தார்கள். அத்தனைபேரும் அதற்குள் மானசீகமாக தங்கள் வீட்டிலிருந்து எவரை அப்படி பிடாகை சுட்டிக்காட்டக்கூடும் என்று எண்ணினார்களோ அவர்களை பாதுகாக்கும் மனநிலையை அடைந்து விட்டிருந்தார்கள். கைகால் விளங்காதவர்கள், மூளை வளராதவர்கள், பைத்தியங்கள் அத்தனை பேரையும் மனதால் கொஞ்சிக்கொஞ்சி அவர்களே வாழ்க்கையின் ஆதாரங்கள், அவர்களுக்காக சாகவும்தயார் என்று நினைக்கத் தொடங்கிவிட்டிருந்தனர்.ஒவ்வொருவரையும் எண்ணி எண்ணி கண்ணீர்வடித்தனர்.

ஆகவே பஞ்சாயத்து தொடங்கியபோதே ஒவ்வொருவரும் உச்சமனநிலையில் இருந்தனர். ஒவ்வொருவரும் மற்றவரை எதிரியாக பார்த்தனர்.தங்களை ஊரே சேர்ந்து பொறியில் சிக்கவைக்க முயல்வதாக நினைத்துக் கொண்டனர்.

பஞ்சாயத்தில் நாராயணப் பணிக்கர் எழுந்து “நாளைக்கு கருமலைப்பட்சி வருது…நாம இன்னும் ஆளை முடிவுசெய்யல்லை…நம்ம குடும்பமும் ஊரும் அழிஞ்சிரும்”என்று தொடங்கினார்

ஆவுடை அண்ணாவி “ஒரு வங்கிழடோ முடமோ போரும்..அதுக்கு நமக்கு வழியில்லேன்னா…” என்றார்

உடனே அத்தனைபேரும் கூச்சலிட தொடங்கினர். எவரும் எந்த முடிவையும் எடுக்க விடவில்லை. நாராயணப் பணிக்கர் கைவிரித்து கூச்சலிட்டு அனைவரையும் அடக்கினார்

“செரி, நீங்க யாரும் உங்க ஆளை விடமாட்டீங்க. ஆனா யாராவது ஒருத்தரை அனுப்பித்தானே ஆகணும்… நாளைக்கு பௌர்ணமியிலே வந்து நிக்குமே…” என்றார்

“ஏன் நீரு உம்ம அப்பனை அனுப்பும்வே”என்றான் ஒருவன்

“டேய், ஆருலே அது சொன்னது?டேய்”என்றார் நாராயணப் பணிக்கர்

காளியன் எழுந்து “அவன் சொன்னது உண்மையாக்கும். இங்க ஒவ்வொருத்தரும் இன்னொருத்தரை அனுப்ப நினைச்சீங்க..ஒரு ஆபத்து வந்தப்ப ஒவ்வொருத்தரும் மத்தவங்களை கைவிட்டுட்டீங்க”என்றார்

“பின்ன என்ன நான் போயி சாகணுமா?”ஏன்றார் நாராயணப் பணிக்கர்

“ஏன், ஊருக்கு மும்பன் நீருல்லா? நீரு போவும்வே”என்றான் காளியன்

“ஏன் நீ போடே. நீயில்லா அர்ஜுன மகாராஜா? சகல லெச்சணமும் ஒத்தவன். படிப்பும் வித்தையும் திகைஞ்சவன்? நீ போகவேண்டியதுதானே?”

“நான் போறேன்… எனக்கு ஒரு தயக்கமும் இல்லை. ஊருக்காக நின்னா ஊருக்காக போகவும் ஒருக்கம்னுதான் அர்த்தம்”என்றான் காளியன்

“அப்ப நீ போடே” என்று நாராயணப் பணிக்கர் சொன்னார்

“போறேன்… நான் போறேன்”என்றான் காளியன். நெஞ்சில் கைவைத்து “நான் இன்னொருத்தனை கைகாட்ட மாட்டேன். எதுக்கும் என்னைத்தான் முன்னாலே வைப்பேன்”என்றான்

“செரி, அப்ப முடிவெடுத்தாச்சு. காளியன் போறான்” என்றார் நாராயணப் பணிக்கர் “ஊருக்கான அறிவிப்பு இது, நாளைக்கு பௌர்ணமியிலே ஊருக்கு தெக்கே கொண்டிமலை உச்சியிலே கருமலைப்பட்சி வந்து எறங்குறப்ப காளியன் அங்கபோயி பலிநிப்பான்”

அங்கிருந்த எவரும் எதுவும் சொல்லவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தார்கள்

நாராயணப் பணிக்கர் ஏளனமாக புன்னகைத்து “பாத்தேல்ல, ஊரிலே உனக்காக ஒருத்தனும் பேசல்ல”என்றார். “நீ சொல்லு மாறுறேன்னா சொல்லிப்போடு. இப்ப மாடன் சாமி முன்னாலே வெத்திலை சுருட்டிப்போட்டு சங்கல்பம் எடுப்போம். அதுக்குப்பின்னாலே மாத்த முடியாது”

“மாத்தவேண்டாம்… நான் போறேன், என்னான்னு பாக்குதேன்.நான் எதுக்காகவும் பயந்ததில்லை. ஊருக்காகச் சாவுறதிலே நிறைவுதான்” என்றான் காளியன்

“வே ஆவுடை அண்ணாவி, சங்கல்பம் வையும் வே” என்றார் பணிக்கர்

ஆவுடை அண்ணாவி தயங்கியபடி இருவரையும் மாறிமாறிப் பார்த்தார்.

“வையும்வே” என்று பணிக்கர் கூவினார்

“வையும் மாமா”என்று காளியன் புன்னகையுடன் சொன்னான்

ஆவுடை அண்ணாவி மாடனின் முன் வெற்றிலைச் சுருளை வைத்து சங்கல்பம் சொன்னார். அங்கிருந்தவர்கள் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு அதை கேட்டுக்கொண்டிருந்தனர்

“அப்ப பிடாகை முடிவெடுத்து தெய்வத்துக்கிட்ட சொல்லியாச்சு”என்றார் நாராயணப் பணிக்கர். “ஊருபலி காளியனாக்கும்…”

பிடாகை கலைந்தபோது அனைவரும் மௌனமாக கலைந்து சென்றார்கள்.

மறுநாள் மாலையில் காளியன் தன் வீட்டிலிருந்து புதிய ஆடை அணிந்துகொண்டு கிளம்பினான். அவனுடைய மனைவி கர்ப்பிணியாக இருந்தாள். அவள் அழுது வீங்கிய முகத்துடன் வந்து வாசலில் நின்றாள்.

“இவனுக சும்மா சொல்லுதானுக, அப்டி ஒரு பறவை இல்லை”என்று காளியன் சொன்னான். ‘நீ தைரியமா இரு. நான் காலம்பற வந்திருவேன்”

“இல்லை, அப்டி ஒரு பறவை இருக்கு. உங்களுக்கும் தெரியும்”என்றாள் அவன் மனைவி “நீங்க போயி அந்த கால்த்தடத்தை பாத்துட்டு வந்தீங்க”

காளியன் பார்வையை விலக்கி “செரி, இருக்கட்டு. இப்ப என்ன? அம்மை மகாராணிக்க விளி வந்தா யுத்தத்துக்கு போகமாட்டோமா? அங்க சாகமாட்டோமா? ஊருக்காக சாவுறதுதான் வீரனுக்க வாழ்க்கை. நீ பிள்ளைய பாத்துக்க” என்று காளியன் சொன்னான். அவள் வயிற்றை தொட்டு கண்ணில் வைத்து “வாறேன் எனக்க மக்கா”என்றான்

அவள் அழுதபடி திண்ணையில் படுக்க அவள் அம்மா வந்து தாங்கிக்கொண்டாள். காளியன் நடந்து ஊரில் தெருக்கள் வழியாக தெற்கு நோக்கிச் சென்றான்.

முந்தைய நாள் முதலே வீடுகளின் கதவுகளை மூடி அத்தனைபேரும் வீட்டுக்குள்ளேயெ இருந்தார்கள். எவரும் எவருடனும் பேசிக்கொள்ளவில்லை. அவன் போவதை கதவுகளின் இடுக்குகள் வழியாக பார்த்து பெருமூச்சு விட்டனர். ஊரில் அவனுக்கு எதிரே ஒருவர் கூட வரவில்லை

அவன் தனியாக நடந்து கொண்டிமலை நோக்கிச் சென்றான். அவன் நெடுந்தொலைவு சென்றதும் பூசாரி வண்டிமுத்தன் வழிகாட்ட நாராயணப் பணிக்கர், ஆவுடை அண்ணாவி, பிச்சைக் கோனார், அணைஞ்சான் நாடார் ஆகியோரும் அவனை அறியாமல் பின் தொடர்ந்து சென்றார்கள்.

இருட்டிக்கொண்டு வந்தது. வெள்ளை ஆடை அணிந்த காளியனை தொலைவிலேயே பார்க்கமுடிந்தது. அவன் தயங்காமல் சீராக அடிவைத்து ஏறி கொண்டிமலை உச்சியில் இருந்த பெரிய தேர்ப்பாறைமேல் சென்று நின்றான்

அவர்கள் கீழே நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவனுடைய வெள்ளை ஆடை சிறகுகள் போல படபடத்துக்கொண்டிருந்தது. நிலவு உதித்தது. மேகங்களை ஊடுருவியபடி மெல்ல அது வானில் மேலெழுந்து வந்தது. சூழ்ந்திருந்த புல்வெளி ஒளிகொண்டது

அவர்கள் படபடப்புடன் காத்திருந்தனர். அவர்களுக்கு கொஞ்சம் அவநம்பிக்கை இருந்தது. ஒருவேளை வெறும் கதையாகக்கூட இருக்கலாம். ஆம், கதைதான். அவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தபோதே அவர்கள் அந்த சமாளிப்பை நம்பவில்லை என்றும் உணர்ந்திருந்தனர்.

கதைகள் கடல்போல நிலத்தைச் சூழ்ந்திருக்கின்றன. அவை தெய்வங்கள் வகுத்த எல்லையை தாண்டுவதில்லை. ஆகவேதான் நிலம் வாழ்கிறது. நிலத்திலிருந்து எல்லாமே கடலுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. கடலில் இருந்து மழைமட்டுமே வருகிறது.ஆனால் எப்போதாவது பேரலை எழுந்து வந்துவிடுகிறது. எல்லா எல்லைகளையும் கடல் மீறிவிடுகிறது. நாராயணப் பணிக்கர் பெருமூச்சுவிட்டார்

“அதோ!”என்று ஆவுடை அண்ணாவி மூச்சொலியுடன் சொன்னார்

“எங்கே?”என்றார் கோனார்.

அதற்குள் நாராயணப் பணிக்கர் பார்த்துவிட்டிருந்தார். வானில் ஒரு கரியமேகத்தீற்றல் போல ஒரு பறவை தெரிந்தது. அது நிலவொளியில் மெல்லமெல்ல தெளிவான உருவம் கொண்டது. அதன் கூரிய அலகையும் மடிந்த உகிர்கள் கொண்ட கால்களையும் பார்க்கமுடிந்தது

அது அந்தப்பாறைமேல் வந்திறங்கியபோது அந்தப்பாறையை விடபெரிதாக அதன் சிறகுகள் விரிந்திருந்தன. அது சிறகுகளால் பாறையை மூடிக்கொண்டது. மிகக்கொடூரமான அலறல் மேகங்களில் இருந்து ஒலிப்பதுபோல கேட்டது

அது மீண்டும் சிறகு விரித்தபோது அதன் கால்களில் வெண்ணிறமான ஒரு பூச்சிபோல காளியன் இருந்தான். அது அவனை தூக்கிக் கொண்டுசென்றது. அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே மேகங்களுக்குள் சென்றுவிட்டது.

ஆவுடை அண்ணாவி பெருமூச்சுவிட்டு “நல்ல பையன்… லட்சணமொத்த உடம்பு. அர்ஜுனன்னு சும்மா சொல்லல்லை”என்றார்

“அவன்தானே முந்திக்கிட்டு வந்தான்?”என்றார் நாராயணப் பணிக்கர்.

பூசாரி வண்டிமுத்தன் “எப்பமுமே இப்டித்தான். நூத்தியெட்டு ஊரிலேயும் கடைசியிலே பலியாகிறவன் ஊரிலே முதலாமனாக்கும்” என்றான். “போனதடவை வந்தப்ப நம்ம பணிக்கருக்க பாட்டனுக்க அப்பன் கிருஷ்ணப்பப் பணிக்கராக்கும் ஊருக்காக போயி நின்னு உயிருகுடுத்தது. அந்த அதிகாரமாக்கும் அவருக்கு இப்ப உள்ளது”

“ஆமா, நூற்றெட்டு ஊருக்கும் முதலாமனாகி தெக்குக் காட்டிலே தெய்வமா இருக்குத கருமன் மூத்தானும் அப்டி தன்னைக் குடுத்தவராக்குமே” என்றார் ஆவுடை அண்ணாவி. “இவனுக்கும் ஒரு வீரக்கல்லு நாட்டணும்வே பணிக்கரே”

முந்தைய கட்டுரைஅய்யா வைகுண்டர் இதிகாசம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10