கோட்டி-கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ,

வணக்கம்.

கோட்டி – சிறுகதை படித்தேன். அற்புதம்.

சமூகத்திற்காக வாழ்பவர்களுக்கு கிடைக்கும் பட்டப்பெயர், அப்படி பெறுபவர்களுக்குத் தான் தெரியும். ‘பூமேடை’கள் பலர் அவமதிக்கப்பட்டதால்தான், இன்று நாம் நாறிக் கொண்டிருக்கிறோம் எனில் தவறில்லை.

‘அறம்’ வரிசை சிறுகதைகளில் மிகுந்த நகைச்சுவை மிளிர்ந்த கதை. இயல்பான கதையோட்டத்துடன் கூடிய நகைச்சுவை. பூமேடையின் ஒவ்வொரு நக்கலிலும் இதய ஆவேசம் பீறிடுகிறது. காந்திக்கு கோமாளித் தொப்பி போடுவதாக வரும் சம்பவம் போதும், பூமேடையின் குணத்தை விவரிக்க.

அரசு ஆஸ்பத்திரிகளின் கேவலமான நிலை சில வர்ணனைகளிலேயே எட்டப்பட்டிருக்கிறது. ஓரிடத்தில் நேசமணியை வையும் பூமேடை, இன்னொரு இடத்தில் நேசமணியின் வாரிசுகள் நடந்து போவதாகக் கூறுவது, என்ன இயல்பு. மானிடனின் உயர்ந்த பண்பு, எள்ளலிலும் அங்கு வெளிப்படுகிறது.

எழுத்துத் துறையில் ஒரு ‘தோட்டி’யாக நீங்கள் விளங்குகிறீர்கள். நல்ல கதானுபவத்தைக் கொடுத்ததற்கு நன்றி.

-வ.மு.முரளி

அன்புள்ள ஜெ,

கோட்டி கதை படித்து ரசித்தேன். சிறப்பான கதை. இதுவரை வந்த கதைகளில் இல்லாத ஒரு அங்கதம் இந்தக் கதையிலே உள்ளது. கதை முழுக்க காந்தி வந்துகொண்டே இருக்கிறார். சாக்கடை சுத்தம் செய்யும் காந்தி, தோட்டி காந்தி, மண்ணு தின்ன பிள்ளை மாதிரி சிரிக்கும் காந்தி, கோமாளிக்குல்லாய் போட்ட காந்தி. கடைசியில் காந்தி தொப்பியிலே வாய்க்கரிசி. காந்தியும் உன்னைமாதிரி கிறுக்குதானா என்று அம்மா கேட்பதுதான் மையமான இடம்.

ஒரு கோட்டியை இன்னொரு கோட்டி அந்தரங்கமாக கண்டுகொள்ளும் கதை. கதையில் உள்ளே ஓடும் துக்கம் அந்த நகைச்சுவைக்கு கனத்தை ஏற்றுகிறது

நன்றி

சாம்ராட் மணி

அன்புள்ள ஜெ,

கோட்டி கதையில் பல இடங்களை மறுமுறை வாசிக்கும்போது அதிர்ச்சியுடன் எண்ணிக்கொண்டேன். எந்த போலீஸ் ஆபீசர் சுதந்திரப்போராளிகளை அடித்தானோ அவன்தான் சுதந்திர இந்தியாவில் போலீஸ் உயரதிகாரி. மரியாதையாக இருந்துக்கோ என்று அவன் சுதந்திரப்போராளியை எச்சரிக்கிறான். அதே சட்டம் அதே நீதிபதி. எதையும் மாற்றக்கூடாது. ஒரு காந்தி படம்தான் கூடுதலாக வந்து சேர்ந்தது. காந்திக்கு கோமாளிக்குல்லாயை அதனால்தான் பூமேடை போடுகிறார்.நல்ல போராளி எப்போதும் போராளிதான். எதற்காக போராடுகிறானோ அதன் பலன்களை அனுபவிப்பவன் அல்ல என்று காட்டிய கதை.

ஆஸ்பத்திரியில் ஒரு போலீஸ்காரன் பூமேடையை உதைக்கும் இடம் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பூமேடையின் குணாதிசயமும் இன்னது என்று சொல்லமுடியாதபடி இருக்கிறது. அவருக்குள் ஒரு காமிக் சென்ஸ் இருந்துகொண்டே இருக்கிறது. சுதந்திரப்போராட்டத்தையும் அவர் ஒரு காமிக்பிளே ஆகத்தான் செய்திருக்கிறார். கடைசிவரை எல்லாவற்றையும் ஒரு சிறிய கோணலுடன் மட்டும்தான் செய்தாகவேண்டும் என நினைக்கிறார்

குலுங்கறதானா இண்ணைக்கே குலுங்கணும் என்ற வரியை நினைத்து நினைத்து சிரித்தேன். பிறகு சிந்தனைசெய்தேன். அதுதான் புரட்சி மனப்பான்மை என்பது இல்லையா?

சரவணன் சென்னை

அன்பு ஜெயமோஹன், வணக்கம். கோட்டி சிறு கதை அமைப்புகளின் உள்ளார்ந்த பலவீன விளிம்புகள் பற்றிய பதிவாகப் பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட படிமங்கள். படைப்பு நகாசுகளில் இந்தத் தொடரில் இது ஆகச் சிறந்தது. நன்றி.

அன்பு சத்யானந்தன்.

ஜெ,

பூமேடைப் பற்றிய என் நினைவுகள்

http://ninaivupaathai.blogspot.com/2010/01/blog-post.html

நன்றி

ராம்பிரசாத்

[அழியாச்சுடர்கள்]

http://azhiyasudargal.blogspot.com/


கதைகள்


கோட்டி

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


தாயார் பாதம்

மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

முந்தைய கட்டுரைபெருவலி- வாசிப்பு
அடுத்த கட்டுரைமரம் ஓர் அனுபவம்