அஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் பொறுமையிழந்தவர்களாக உடலை அசைத்துக்கொண்டிருந்தனர். ஏவலர்களிடமும் அந்தப் பொறுமையின்மை இருந்தது. சம்வகை அவையை நோக்கியபடி நின்றாள். யுயுத்ஸு அங்கிலாதவன் போலிருந்தான். இளையோர் நால்வரும் நிலம்நோக்கி உடல் அசைவிலாது உறைந்திருக்க அமர்ந்திருந்தனர்.
யுதிஷ்டிரன் சொன்னார். “அவையோர் அறிக, கங்காமுகம் எனப்படும் ரிஷிகேசத்தில் அமைந்த சிருங்கபாதம் என்னும் மலையடிவாரத்தில் குருகுலத்தின் பிதாமகரும் விசித்திரவீரியரின் மைந்தருமான எந்தை திருதராஷ்டிரரும் காந்தாரத்து சுபலரின் மகளும், அஸ்தினபுரியின் அரசியும், என் உடன்பிறந்தாரின் அன்னையுமான காந்தாரிதேவியும், யாதவ போஜகுலத்து குந்திபோஜரின் மகளும், எங்கள் அன்னையுமான குந்திதேவியும் ஆறாண்டுகளுக்கு முன்பு காட்டெரியில் சிக்கி உயிர்துறந்தனர்.”
அவையில் இருந்தவர்கள் “மாமன்னர் திருதராஷ்டிரர் வெல்க! குருகுலத்து மூத்தோன் விண்புகுக! காந்தாரத்து அரசி நிறைவுறுக! யாதவ அரசி நிறைவுறுக!” என்று கூவி தங்கள் கைக்கோல்களைத் தூக்கி வாழ்த்துரை எழுப்பினர். கைகளைக் கூப்பி எந்த உணர்ச்சியுமில்லாமல் அதை கேட்டுக்கொண்டிருந்தார் யுதிஷ்டிரன். ஓசை அடங்கியதும் அவர் பேசத்தொடங்கினார்.
“விதுரரின் உயிர்நீப்புக்குப் பின்பு சதயூபரின் குருநிலையில் நான் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். என் அன்னை அருகே திருதராஷ்டிரரின் காட்டிலிருப்பதை அறிந்திருந்தேன். நான் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. அன்னையைச் சென்று பார்க்கவேண்டும் என்றும் அவர் என்னிடம் சொல்ல ஏதேனும் எஞ்சியிருக்கிறதா, நான் ஆற்றவேண்டியவை குறித்த ஆணையேதேனும் உள்ளதா என்று அறியவேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் செல்லவும் துணிவு வரவில்லை. அன்னைக்கும் எங்களுக்குமிடையே நெடுந்தொலைவு உருவாகிவிட்டிருந்தது. அத்தொலைவை இவ்வுலகிலுள்ள எவ்வுணர்வைக்கொண்டும் கடந்துவிட முடியாது.”
அப்போது திருதராஷ்டிரரின் காட்டிலிருந்து ஓர் ஒற்றன் வந்து செய்தியை அறிவித்தான். திருதராஷ்டிரர் காந்தாரியுடன் வாழும் காடு அனல்கொண்டிருக்கிறது. அவர்கள் அதில் சிக்கிக்கொண்டிருக்கலாம். நான் உடனே கிளம்பி அவர்களை மீட்கவேண்டும் என்று முனைப்பு கொண்டேன். சதயூபர் தன் குடிலில் இருந்து வெளியே வந்து தொலைவில் இருந்து எழுந்த பறவைக்குரல்களையும் எரிபுகையின் மணத்தையும் கொண்டு கணித்து ‘அந்நெருப்பை நீங்கள் சென்றடையவே முடியாது. அது மலையிறங்கி வரும் நெருப்பு. மிக விரைவாக வரும். இரு கைகளை விரித்து சூழ்ந்துகொள்ளும். அதிலிருந்து அவர்கள் எவ்வகையிலும் தப்பமுடியாது’ என்றார்.
நான் அதில் துயர்கொள்ளவில்லை. எவ்வுணர்வையும் அடையவில்லை. அங்கே நிகழ்ந்தது என்ன என்பதை மறுநாள் அங்கிருந்து வந்த சங்குலன் சொன்னான். எந்தையின் உடற்காவலனாகவும் அணுக்கனாகவும் அஸ்தினபுரியில் திகழ்ந்தவன் அவன். காட்டிலும் அவனே அவர்களுடன் இருந்தான். தந்தைக்குரிய உணவை வேட்டையாடிக் கொண்டுவந்து அளிப்பதிலிருந்து இரவில் அவருக்காக தர்ப்பை மஞ்சம் அமைப்பது வரை அனைத்தையும் அவனே செய்தான்.
குந்திதேவி தனித்து காட்டினூடாக அங்கே வந்ததைப் பற்றி சங்குலன் சொன்னான். ஒருநாள் உச்சிப்பொழுதில் காட்டில் அசைவு எழக் கண்டதுமே கையில் வில்லம்புடன் அவன் எழுந்துசென்று நோக்கினான். செடிகளை ஊடுருவி அணுகியது குந்திதேவி எனக் கண்டதும் அருகணைந்து வணங்கினான். குந்திதேவியை அழைத்துச்சென்று காந்தாரியிடம் சேர்த்தான். காந்தாரியின் அருகில் திருதராஷ்டிரர் இருந்தார். விதுரர் விண்புகுந்தார் என்று திருதராஷ்டிரரிடம் குந்திதேவிதான் சொன்னார். ‘அவர் விண்புகுவதை காகங்கள் எனக்கு அறிவித்தன’ என்றார்.
திருதராஷ்டிரர் ஓசையின்றி கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்தார். காந்தாரியும் அமைதியாக விழிநீர் சிந்தினார். ஆனால் குந்திதேவி எவ்வுணர்வையும் காட்டவில்லை. அவர்கள் அத்துயரால் இணைந்தவர்களாக ஒன்றாக அங்கிருந்தனர். அதன்பின் குந்திதேவி காந்தாரிதேவியின் குடிலிலேயே தங்கியிருந்தார். அவர்களிருவருக்கும் தேவையான பணிவிடைகளை செய்தார். காலையில் மூவரும் கங்கைக்கரைக்குச் சென்று ஆற்றைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். அந்தியில் மலைகளில் கதிரணைவதை பார்த்துக்கொண்டிருந்தனர். இரவில் ஒன்றாக, ஒரு சொல்லும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் வாழ்ந்த காடு கோடையில் கருகத் தொடங்கிவிட்டிருந்தது. அங்கே பெரும்பகுதி தலைக்குமேல் எழுந்த நாணல்கள்தான். முதல் மழையில் செழித்து கோடையில் வறண்டு காய்வன. காற்றில் அவை சலசலக்கும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. புல்விதைகள் பறந்து சுழன்ற காற்றுவெளியில் முகம் சுளித்து அமர்ந்திருந்த திருதராஷ்டிரர் சங்குலனிடம் ‘எரியெழுகையில் இவை அழியும், விதைகள் அழிவதில்லை. அவை மண்ணுக்கு அடியில் வாழும்’ என்றார். ‘மேலே எரி எழுவதென்பது உள்ளிருப்பவை முளைப்பதற்கான வழியொருக்குவதற்காக மட்டுமே. புகை வானில் சென்று தொட்டு முகில்களிடம் சொல்கிறது, களமொருங்கிவிட்டது என்று.’
சங்குலன் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். அவர் அவ்வாறு மிகையாகப் பேசுபவர் அல்லர். ‘புல்லுக்குத் தெரிந்திருக்கிறது, அது ஆயிரம்மேனி விதைபெருக்கினால் அரைமேனியே பொலியும் என்று. ஒவ்வொரு உயிருக்கும் எஞ்சுவதென்ன என்னும் தெளிவிருக்கிறது. அவை துயர்கொள்வதில்லை’ என்று அவர் சொன்னார். ‘எழுந்து அழிந்து எழுந்து முடிவில்லாமல் அவை தங்களுக்கு பிரம்மம் அளித்த ஆணையை நடிக்கின்றன. அதுவே உயிர்களின் கடன்.’ இரு கைகளையும் விரித்து ‘பறக்கும் இவ்விதைகளுக்குமேல் புல்லுக்கு என்ன உரிமையும் உறவும் உள்ளது? கொண்டுசெல்லும் காற்றுக்கும் அவற்றின் பயணமென்ன என்று தெரியுமா?’ என்றார்.
அன்று காலையில் திருதராஷ்டிரர் கங்கையில் நீராடச் சென்றபோது மூக்கைச் சுளித்து தலையை சரித்து ஒரு திசையை பார்த்தார். பின்னர் காற்றில் மீண்டும் மீண்டும் மூக்கை வைத்தபின் சங்குலனை அருகழைத்து ‘அக்காட்டிற்குமேல் மலைகளின் இடுக்கில் புல்லில் அனலெழுந்துள்ளது’ என்றார். ‘அந்த அனல் மேலிருந்து கீழிறங்கி வந்துகொண்டிருக்கிறது. உச்சிப்பொழுதுக்குள் அது இங்கே வந்துவிடும்.’ சங்குலன் பதறி ‘உடனே கிளம்பிவிடுவோம்’ என்றான். ‘இல்லை, நேற்றே எனக்கு என் மூதாதையர் ஆணையை அளித்துவிட்டனர். நான் இங்கிருப்பேன். இந்த எரியில் உயிர்துறப்பேன்’ என்றார்.
சங்குலனும் அனல்மணத்தை உணர்ந்துகொள்ளத் தொடங்கினான். காட்டில் இருந்து பறவைகள் கலைந்து எழுந்து விண்ணில் கூவியபடி சுழன்று அகன்று செல்லும் ஓசைகள் கேட்டன. முட்டையிட்ட பறவைகளும் சிறகு முளைக்காத குஞ்சுகள் கொண்ட பறவைகளும் தவித்து கூவின. புல்லை வகுந்தபடி நாகங்கள் அப்பால் சென்றன. எலிகள் கூட்டமாகச் சென்று கங்கை நீரில் பாய்ந்து தளதளத்து நீந்தி சதுப்புகளை நோக்கி சென்றன. எறும்புகள் மண்ணுக்குள் சென்று மறைந்தன. எரிபுகை கொடி என எழுந்து விண்ணைத் தொட்டு நின்றது.
திருதராஷ்டிரர் காந்தாரியிடமும் குந்தியிடமும் ‘இன்று உச்சிப்பொழுதுக்குள் இங்கு அனல் எழும்’ என்றார். காந்தாரி ‘ஆம்’ என்றார். குந்திதேவி ‘அனல் நன்று’ என்றார். திருதராஷ்டிரர் சங்குலனிடம் ‘மைந்தா, அருகணைந்து என் கால்தொட்டு வணங்கு. உன்னை நான் வாழ்த்துகிறேன்’ என்றார். கண்ணீருடன் சங்குலன் அவருடைய காலைத் தொட்டு வணங்கினான். அவர் தலைமேல் தொட்டு வாழ்த்தி ‘அனலில் இருந்து தப்பும் வழி ஒன்றே, கங்கையில் பாய்ந்துவிடு… நீர் வழியாகவே நீந்திச் சென்று சதயூபரின் குடில்களை அடைந்து இங்கு நிகழ்ந்ததை சொல்’ என்றார். சங்குலன் ‘ஆணை’ என்று வணங்கினான்.
‘நீ இங்கிருந்து சென்ற பின்னர் மூன்று மங்கையரை மணம்கொள்ள வேண்டும், உனக்கு முப்பது மைந்தர் பிறப்பார்கள். உன் கொடிவழிகள் செழிக்கும்’ என்றார் திருதராஷ்டிரர். ‘நீ எனக்கு ஆற்றிய ஒவ்வொன்றையும் அரசனாக அல்ல, தந்தையாக நின்று பெற்றுக்கொள்கிறேன். குலமூத்தோனாக நின்று உன் கொடிவழிகளுக்கும் துணை என அமைவேன். உன் குடியின் ஒவ்வொரு நலத்திற்கும் வாழ்த்துரைப்பேன். உன் மரபினர் என்னை உங்கள் முற்றங்களில் மூதாதையென நிறுவி வழிபடுக!’ என்றார். அவன் விழிநீர் சொட்ட கால்தொட்டு வணங்கினான். ‘செல்க!’ என்றார் திருதராஷ்டிரர்.
அப்போது அக்குடிலின் மண்திண்ணையில் செவ்வண்ணப் பறவை ஒன்று வந்தமைந்தது. அவர் ஓசை கேட்டு திரும்பி ‘அது என்ன பறவை?’ என்றார். ‘செவ்வண்ணத்தில் ஒரு சிறு குருவி’ என்றான் சங்குலன். ‘அது அனல்பறவை. எங்களுக்கான அழைப்பு வந்துவிட்டது. நன்று. செல்க!’ என்றார். சங்குலன் தலைவணங்கி ‘ஆணை’ என்று கூறி அங்கிருந்து கிளம்பி கங்கையை நோக்கி வந்தான். தொலைவில் அனலும் புகையும் எழுந்து சூழ்வதை அவன் கண்டான். கங்கைக்கரை அருகே ஒரு பேராலமரத்தின்மேல் ஏறி அவன் பார்த்தபோது அவர்கள் வாழ்ந்த காடு செந்தழலால் ஆனதாக இருந்தது. தொலைவில் இருந்து பார்த்தபோது அது கோடையில் மலர் பூத்து பொலிந்திருக்கிறது என்றே தோன்றியது.
சங்குலன் கீழிறங்கி வரும்போதே எரியெழுந்த காட்டின்மேல் மழை இறங்கத் தொடங்கிவிட்டிருந்தது. அங்கு மட்டும் வானம் உருகி மண்ணில் இறங்கியதுபோல தோன்றியது. சூழ்ந்திருந்த கோடை வெம்மைக்குள் அத்திசையிலிருந்து வந்த புகைக்காற்றில் நீராவியும் குளிரும் இருந்தன.
அவையினர் “திருதராஷ்டிரர் வெல்க! குருகுல மைந்தர் வெல்க! மும்முடி சூடிய அரசர் வெல்க! விண்புகுக பெருந்தோளர்! சிறப்புறுக பெருந்தந்தை! பிரஜாபதிகளுடன் அமர்க விசித்திரவீரியரின் மைந்தர்! இளையோனுடன் தோள் தழுவுக இணையிலா பேரன்பர்! மைந்தருடன் குலவுக பெருங்களிறு! கௌரவர்கள் வாழ்க! வாழ்க துரியோதனன்! வாழ்க துச்சாதனன்! வாழ்க நூற்றுவர்ப்பெருங்குலம்!” என்று வாழ்த்தினர். காந்தாரிக்கும் குந்திக்கும் விதுரருக்கும் வாழ்த்துரைகள் எழுந்தன.
“சங்குலன் சதயூபரின் குருநிலைக்கு நீர்வழியாக வந்தான். எனக்குரிய செய்தியை உரைத்துவிட்டு வடக்கு நிலம் நோக்கி சென்றான்” என்று யுதிஷ்டிரன் தொடர்ந்தார். ”நான் என் தவத்தை முடிவுசெய்தாகவேண்டும் என்று விரும்பினேன். ஆகவே சதயூபரின் குருநிலையிலேயே கடுநோன்பு ஆற்றி ஒடுங்கியிருந்தேன். தவநிறைவு அடைந்த பின்னர் என்னை இங்கிருந்து செல்ல ஒப்புதல் அளிக்கும் ஒரு செய்திகாக காத்திருந்தேன். அவ்வண்ணமே இளைய யாதவர் விண்புகுந்த செய்தி என்னை வந்தடைந்தது. அதன் பின்னரே நான் அஸ்தினபுரிக்குத் திரும்ப முடிவெடுத்தேன். என் இளையோருக்கு செய்தியை அனுப்பும்படி யுயுத்ஸுவுக்கு தெரிவித்தேன். நான் அஸ்தினபுரியின் அரசன் அல்ல என்பதனால் இந்நகரின் எந்தப் படகுகளையும் வண்டிகளையும் ஏற்காமல் நடந்து இந்நகர் நோக்கி வந்துகொண்டிருந்தேன்.
நான் வரும் வழியெங்கும் சிற்றூர்களிலெல்லாம் இளைய யாதவரின் விண்புகுதலை மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்தனர். இளஞ்சிறுவர்களுக்கு நீலவண்ணம் பூசி, மஞ்சளாடை அணிவித்து, பீலி சூட்டி, குழல் கையில் அளித்து தங்கள் இல்லமுற்றங்களில் விளையாடவிட்டனர். அவர்களுக்கு வெண்ணையை உண்பதற்கு அளித்தனர். வெண்ணையை உருட்டி அம்மைந்தரை எறிந்து துரத்தி விளையாடினர். மலர்மாலைகளால் மைந்தரை அடித்தும் கைகளைக் கட்டி கொண்டுவந்து உரலில் பிணைத்தும் நகையாடினர். எங்கும் சிரிப்பும் கூச்சலுமாக இருந்தது. ஒரு விண்புகுதல் அவ்வண்ணம் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டதை நான் முன்பு அறிந்ததே இல்லை.
இந்நகரை நான் தனியாக அணுகியபோது என் இளையோன் அர்ஜுனன் எனக்காக கோட்டைக்கு வெளியே சாலையில் காத்து நின்றிருந்தான். அவன் முன்னரே அனைத்தையும் அறிந்திருந்தான். இளைய யாதவர் விண்புகுந்த முறையைப் பற்றி அவன் எனக்கு விரித்துரைத்தான். இருபுறமும் நின்றிருந்த கொன்றைகள் பூத்து பொன் சொரிந்தன. பொன்பொடி பரவிய தரையில் இளைய யாதவரின் விண்ணெழுகையைச் சொல்லியபடி நாங்கள் நடந்தோம். அப்போது எவனோ ஒரு பாணன் ‘பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே’ என்று பாடிக்கொண்டிருப்பதை கேட்டேன். என் உடல் மெய்ப்பு கொண்டது. கண்ணீருடன் கைகூப்பி நின்றேன்.
அதன்பின் இந்நகருள் வரும் வழியெல்லாம் அவ்வரியே வெவ்வேறு நாவுகளிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்தது. ‘நல்லவர்களைக் காக்க அல்லவர்களை அழிக்க அறம் நிலைநிறுத்த மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பேன்.’ கடலில் இருந்து ஓர் அலை எழுந்து வந்து நிலத்தை அறைந்தது. இங்கு இருந்த அனைத்தையும் இடித்துத் தள்ளியது. ஒரு கல்மேல் இன்னொன்று இல்லாமல் ஆக்கிவிட்டு மீண்டது. அதன் ஆணைப்படி நாம் மீண்டும் கட்டியுள்ளோம். இதைக் காப்பது கடலின் பொறுப்பு. அலை ஓயாத பெருங்கடலுக்கு வணக்கம்.
“பராசரரின் புராணசம்ஹிதையில் விண்ணில் மாலவன் உறையும் பாற்கடல் பெருமுரசென ஓயாது அலையெழுந்து அறைந்து கொண்டிருந்தது என்று சொல்லப்படுகிறது. வெண்பெருமுரசு. அவ்வலைகள் அமுதை திரட்டிக்கொண்டே இருக்கின்றன. இங்கு சொல்லென்று நாம் உணர்வது அதன் ஓசையை, அறமென்று நாம் அறிவது அதன் அலைகளை, மெய்மையென்று சுவைப்பது அதன் அமுதின் இனிமையை. அமுதின் ஆழியில் அவன் மீண்டும் சென்றமைக! அறிதுயிலில் அவன் அமிழ்க! அவன் கனவில் புடவிகள் எழுந்து நிகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் யுதிஷ்டிரன்.
அவையில் இருந்தவர்கள் எழுந்து “வெல்க யாதவர் புகழ்! நிலைகொள்க ஆழியன் சொல்! எழுக அவன் படை! திகழ்க அவன் உரைத்த வேதம்!” என்று கூவினர். “அழியாச் சொல் வெல்லட்டும்! உலகுபுரக்கும் வேதம் வெல்லட்டும்! நிலைகொள்க பெருநெறி! வெல்க என்றுமுள மெய்யறிதல்!”
யுதிஷ்டிரன் மீண்டும் கைகூப்பி “இறுதியாக ஒன்றை அறிவிக்க விழைகிறேன். என் பெயர்மைந்தன் பரீக்ஷித் இங்கு அவை புகுவான். இனி இந்நகர் அவனுக்குரியது. அவனுக்கு ஏழு அகவை ஆகிறது. இன்னும் பதினொரு ஆண்டில் பதினெட்டாவது அகவை நிறைகையில் இங்கு அவன் முடிசூடி அமர்வான். இப்போது அவனை இங்கே குடித்தலைமைக்குரிய மைந்தனாகவும் அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசனாகவும் அறிவிக்கிறேன்” என்றார்.
“பதினொரு ஆண்டுகளுக்குப் பின் இங்கே நிகழவிருக்கும் அந்த விழாவை இங்குள்ள மூத்தவரும் சான்றோரும் அந்தணரும் அறிவரும் படிவரும் இணைந்து சிறப்பிக்கவேண்டும் என்று இப்போதே கோருகிறேன். அப்போது நாங்கள் இருக்கப்போவதில்லை. நாங்கள் இன்று அந்தி எழுகையிலேயே இங்கிருந்து நகர்நீங்குகிறோம். இந்நகரில் என்றும் இளைய யாதவரின் அழியாச் சொல் திகழவேண்டும். யயாதி, குரு, ஹஸ்தி, பீஷ்மர் முதல் துரியோதனன் ஈறாக குருகுலத்தின் மூதாதையர் பேணப்படவேண்டும். என்றும் நெறிகளும் முறைகளும் வழுவாதொழுக வேண்டும்.”
“நாங்கள் நகர்நீங்கும் முடிவுடனேயே இந்நகருக்குள் நுழைந்தோம். இப்பிறவியில் இனி நாங்கள் செய்வதற்கொன்றுமில்லை. எழுயுகத்தில் நாங்கள் இங்கு நடித்த வாழ்க்கை ஒரு அழியாத பாடமென்று அமைக! இதை நம் மைந்தர்கள், வருந்தலைமுறையினர் ஆய்ந்து தெளிக! இது அரங்கொழியும் பொழுது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “எவருமறியாது உடலிலிருந்து உயிர் என இறுதி நகர்நீங்கல் நிகழவேண்டும் என்று நூல் சொற்கள் கூறுவதனால் இக்கணமே எங்களுக்கு விடை கொடுங்கள். நான் விண்புகுவதற்குரிய பயணம் அது. மானுடனாக நின்று என் குடிகளுக்கும் கொடிவழியினருக்கும் நான் அளிக்கும் இறுதி வாழ்த்து இது. நலம் பெறுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் யுதிஷ்டிரன்.
குடியினர் விழிநீருடன் கைகூப்பி “அறச்செல்வர் வாழ்க! யுதிஷ்டிரன் வாழ்க! பாண்டுவின் மைந்தன் வாழ்க! குருகுலத்து மூத்தோன் வாழ்க! அஸ்தினபுரியின் மும்முடி சூடிய சக்ரவர்த்தி வாழ்க!” என்று வாழ்த்துரைத்தனர். அலையலையாக அவ்வாழ்த்து ஒலித்துக்கொண்டிருக்க பாண்டவர்கள் மேடையில் தோன்றி அவையினரை வணங்கினர். “பெருந்தோள் பீமன் வெல்க! வெல்வேல் விஜயன் வாழ்க! நகுல சகதேவர்கள் வெல்க!” என அவை வாழ்த்து கூவிக்கொண்டே இருந்தது.
முரசொலியும் கொம்பொலியும் எழுந்தன. அஸ்தினபுரியின் அமுதகலக்கொடியுடன் வீரன் ஒருவன் உள்ளே வந்தான். தொடர்ந்து மங்கலச்சேடியர் தாலங்களுடன் இரு நிரைகளாக வந்தனர். இசைச்சூதர்கள் முழக்கமிட்டபடி தொடர்ந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னால் மூன்று அந்தணர்களால் கங்கை நீர் தெளித்து தூய்மைப்படுத்தப்பட்ட வழியினூடாக பரீக்ஷித் மெல்ல நடந்து மேடைக்கு வந்தான். அவனை தொட்டும் தொடாமலும் தாங்கியபடி இரு ஏவலர் பின்னால் வந்தனர்.
அவனைக் கண்டதும் அவையினர் “இளவரசர் வாழ்க! குருகுலத்து தளிர் வெல்க!” என்று வாழ்த்துரைத்தனர். ஆனால் பரீக்ஷித்தின் தோற்றத்தையே அவர்களின் விழிகள் வியப்புடனும் அதிர்ச்சியுடனும் பார்த்துக்கொண்டிருந்தன. ஆகவே குரல்கள் செயற்கையாக உரக்க ஒலித்தன. பரீக்ஷித்தால் நடக்க முடியவில்லை, ஆங்காங்கே நின்று நடந்தான். அவன் கால்கள் நடப்பதற்கு உரியவை அல்ல என்று தோன்றியது, அவை குழந்தைகளின் உள்ளங்கைகள் போலவே தோன்றின.
யுயுத்ஸு மைந்தனை தலைவணங்கி கைபற்றி அழைத்து வந்து அங்கிருந்த பொன்னாலான அரியணையில் அமரவைத்தான். மைந்தன் சற்று உயரமாக வளர்ந்திருந்தான். ஆனால் வெளிறி அகழ்ந்தெடுத்த கிழங்கு போலிருந்தான். அவன் உடலில் அப்போதும் தோல் முழுமையாக வளர்ந்திருக்கவில்லை. ஆங்காங்கே பாசி படிந்ததுபோல் செந்நிறமும் பச்சை நிறமும் இருந்தது. சிறிய உதடுகளும் கைகளும் நடுங்கிக்கொண்டிருந்தன. நீலக் கண்களில் நோக்கும் தெளியவில்லை. அவன் ஒரு நீர்த்துளிபோல, எத்தருணத்திலும் உதிர்ந்துவிடுபவன்போல தெரிந்தான்.
யுயுத்ஸுவும் சம்வகையும் கைகாட்ட ஏழு குலமூத்தோர் பெரிய தாலத்தில் பட்டத்து இளவரசர் மணிமுடியை கொண்டுவந்து அவனுக்கு அணிவித்தனர். குடிமூத்தோர் இளவரசனுக்குரிய செங்கோலை அவனிடம் கொடுத்தனர். அந்தணர்கள் அரிமலரிட்டு வாழ்த்தி கங்கை நீர் தெளித்து அவனுக்கு முழுக்காட்டு செய்தனர். சடங்கு சுருக்கமாகவும் விரைவாகவும் நடந்தது. அவை வாழ்த்துரைத்துக் கொண்டே இருந்தது. அவையிலிருந்தோர் அனைவரும் அரிமலரிட்டு வாழ்த்தியபின் பரீக்ஷித் எழுந்து அவையினரை வணங்கினான். நெடுநேரம் அரியணையில் அமர்ந்திருக்க இயலாதென்பதனால் மும்முறை அவையை வணங்கி ஏவலர் கைபற்றி மெல்ல நடந்து அவை நீங்கினான்.
யுதிஷ்டிரன் மீண்டுமொருமுறை அவையை வணங்கி திரும்பி வெளியே சென்றார். அவருடன் இளையோரும் அகன்றனர். அவையில் கலைவொலி எழுந்தது. “நகர்நீங்குகையில் அவர்கள் அரசியையும் உடன் அழைத்துச் செல்கிறார்களா?” என்று குபேரர் கேட்டார். “பெண்டிரை அவ்வாறு அழைத்துச் செல்லும் வழக்கமில்லை. ஆனால் காட்டுப்பயணங்களுக்கெல்லாம் அரசி உடன்சென்றிருக்கிறார். ஆகவே செல்லக்கூடும்” என்று மிருத்திகன் சொன்னான். நிமித்திகன் மேடைக்கு வந்து அவை கலைவதை அறிவித்தான். நிரைநிரையாக அனைவரும் எழுந்து வாயில்களை நோக்கி சென்றார்கள். ஆனால் முற்றத்தை நோக்கி சென்று தங்கள் தேர்களை நாடவில்லை. அங்கேயே தயங்கி நின்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
குபேரர் அங்கு நின்றிருந்த முதுநிமித்திகரிடம் “விண்ணேகும் பயணத்தில் ஐவரும் அரசியை அழைத்துச் செல்கிறார்களா?” என்றார். “ஆம், அவர் முடி சூடி நாடாண்டவர். அரியணை அமர்ந்து செங்கோல் ஏந்தியவர். அரசருக்குரிய நெறிகளையே கடைபிடிக்க வேண்டும்” என்றார் நிமித்திகர். “பிற அரசியர்?” என்று மிருத்திகன் கேட்டான். “அவர்கள் அரசியருக்குரிய நெறிகளுக்குள் நிற்பவர்கள். பாண்டவரின் பிற துணைவியர் அவரவர் நாடுகளில் இருப்பார்கள். கொழுநர் விண்ணேகிய பிறகு கைம்மை நோன்பு நோற்று வாழ்வை நிறைவு செய்வார்கள். முதலரசி மட்டும் அவருடன் விண் வரைக்கும் செல்வார்” என்றார்.
“அவர்கள் எப்போது கிளம்புகிறார்கள்?” என்று மரகதர் கேட்டார். “அதை அவர்களே அறிவித்துவிட்டனர், இன்று அந்தியில்” என்றார். “அந்தி நற்பொழுது அல்ல” என்றார் குபேரர். “அது உலகச்செயல்களுக்கு. அவை இருபுறம் கொண்டவை. இது ஒருபுறம் மட்டுமே கொண்ட செயல்” என்றார் நிமித்திகர். அங்கே நின்றிருந்தவர்கள் குழப்பங்களும் கொந்தளிப்புகளும் நிறைந்தவர்களாகத் தெரிந்தனர். ஒரு முதியவர் அருகே வந்து “நிமித்திகரே, மெய்யாகவே இளைய யாதவர் விண்புகுந்துள்ளாரா?” என்றார். “ஏன் ஐயம்?” என்றார் நிமித்திகர். “அவர் இறவான் அல்லவா? அவருக்கே இறப்பென்றால் இங்கே எதற்குத்தான் வாழ்வு?” என்று அவர் கேட்டார். “இங்கே அவையில் அவர் இறக்கவில்லை என்னும் சொல் அளிக்கப்படும் என்று நம்பியே நான் வந்தேன்.”
“இறவாத ஒன்றே உள்ளது” என்றார் நிமித்திகர். “அது இளைய யாதவரின் சொல். அவர் அளித்த ஐந்தாம் வேதத்தின் மணிமகுடம் அது. அது படைக்கலமாகும்போது கூர்முனை. மரமாகும்போது மலர்த்தேன்.” முதியவர் நிறைவின்மையுடன் “அவர் எவ்வண்ணம் இறக்கமுடியும்? அது இயல்வதா என்ன?” என்றார். நிமித்திகர் புன்னகைத்தார். “அவர் இறக்கவில்லை, அவர் இங்கிருக்கிறார். நான் அவரை உணர்கிறேன். அவர் எழுவார். நான் அழைத்தால் அவர் வருவார்” என்று முதியவர் உணர்வெழுச்சியால் கலங்கிய விழிகளுடன் சொன்னார்.