முரசுகளும் கொம்புகளும் முழங்கி ஓய்ந்தன. அவைநடைமுறைகளை அறிவிக்கும்பொருட்டு பட்டுத்தலைப்பாகையும் மேலாடையும் அணிந்த இளம்நிமித்திகன் அறிவிப்பு மேடையில் ஏறினான். வெள்ளிக்கோலை இருபுறமும் சுழற்றி தலைவணங்கி, உரத்த குரலில் அவன் அஸ்தினபுரியின் குடிவரிசையை கூறினான். “பிறவா இறவா பரம்பொருள் என விஷ்ணு. விஷ்ணுவிலிருந்து பிரம்மன் தோன்றினான். பிரம்மனிலிருந்து அத்ரி. அத்ரியிலிருந்து சந்திரன். சந்திரனிலிருந்து புதன், புதனிலிருந்து சந்திரகுலத்தோன்றல் புரூரவஸ் பிறந்தார்” என்று அவன் சொன்னான்.
“ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன், ஹஸ்தி என்னும் மங்காப் புகழ்கொண்ட அரசர்களின் பெயர்கள் என்றும் வாழ்வதாக!” கோலைச் சுழற்றி “மாமன்னன் ஹஸ்தியின் மைந்தனான அஜமீடனின் வழிவந்த ருக்ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழ் ஒருநாளும் குன்றாதிருப்பதாக! குருவம்சத்தின் பெருமை அழியாமல் திகழ்வதாக!”
“குலமூதாதை குருவுக்குப் பின் எழுந்த ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்ஷன், பீமன் என நீளும் மாமன்னர்களின் வரிசையில் எழுந்த ஒளிமிகுந்த விண்ணவனாகிய பிரதீபரின் புகழ் வெல்க! பிரதீபரின் மைந்தர் சந்தனுவும் அவர் மைந்தர் விசித்திரவீரியனும் புகழ் குன்றாது நிலைகொள்க! விசித்திரவீரியனின் மைந்தர்கள் பாண்டுவும் திருதராஷ்டிரரும் விண்ணிலிருந்து நம்மை வாழ்த்துக! வீரப் பேருலகில் இருந்து மாமன்னர் துரியோதனன் இக்குடியை காத்தருள்க!” அவையில் ஒரு மெல்லிய முணுமுணுப்போசை சிற்றலைபோல எழுந்து அமைந்தது.
அக்குடிவரிசை அங்கு ஒரு கொடியென பறந்துகொண்டிருந்தது. அங்கு பறந்த அனைத்துக் கொடிகளும் மட்கி மறைகின்றன, மலர்கள்போல. புதிய கொடிகள் விரைந்து எழுகின்றன. அரும்புகளென. அழியா மலர்போல அந்தக் கொடிவரிசை அங்கு பறந்துகொண்டிருக்கிறது என்று குபேரர் உணர்ந்தார். இன்னும் நெடுங்காலம் அவ்வண்ணம் அது பறக்கும் என்னும் எண்ணம் தனக்கு ஒரு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் நிறைவையும் அளிப்பதை கண்டார். கைகளை மடியில் கட்டிக்கொண்டு நிமித்திகன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“அவையீரே, இங்கே நிலம் துறந்து சென்ற அரசர் யுதிஷ்டிரனும் இளையோர் நால்வரும் வருகை தந்துள்ளனர். அரசி திரௌபதியும் அவைகொள்வார். அனைத்துக் குடிகளும் கூடியிருக்கும் இந்தக் குடிப்பேரவையில் அரசர் இறுதியாக முடிவெடுத்து சில உரைக்கவிருக்கிறார். இக்குடி இங்கு நீடூழி வாழவும் அவர்களின் கொடிவழிகள் செழிக்கவும் நலம் நிகழவும் இவற்றை அவர் முன்வைக்கிறார். நலம் திகழ்க!” என்றான் நிமித்திகன். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அவை கைகளைத் தூக்கி வாழ்த்துரைத்தது.
அந்த ஓசை எழுந்து அடங்கிய கார்வையில் அமைதி வந்து நிறைந்தது. அங்கு சொல்லப்பட்ட அனைத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர். அது முறையாக நிகழத்தொடங்குகையில் பொறுமையின்மையும் துயரமும் அவர்களுக்குள் எழுந்தன. அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்று தாங்கள் அறிந்த அன்றாடத்திற்குள் நுழைய விரும்பினர். அவர்களின் உடல்களில் அந்தத் ததும்பல் இருந்துகொண்டே இருந்தது. அவைக்கூடத்திலிருந்தவர்களின் உடலில் அந்த அசைவு சிற்றலை எனத் தெரிந்தது.
உள்ளிருந்து மெல்லிய அசைவொலி கேட்டது. அனைவரும் திரும்பிப் பார்த்தனர். தனியாக எளிய மரவுரி ஆடை அணிந்து, கட்டிய கூந்தல் தோளில் சரிந்திருக்க, அணிகளோ அகம்படியோ எதுவுமின்றி திரௌபதி வந்து பெண்களுக்குரிய பகுதியில் சிறு பீடத்தில் அமர்ந்தாள். அங்கிருந்த பெரும்பாலோருக்கு அவள் திரௌபதி என்றே தெரிந்திருக்கவில்லை. ஒருவருக்கொருவர் “திரௌபதி! பாஞ்சாலி!” என்று மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டார்கள். வியப்பொலிகளை வெளியிட்டார்கள். அதன் பின்னரே பிறர் மீண்டும் கூர்ந்து பார்த்தார்கள்.
“இந்த அவையில் நிகழ்ந்ததா?” என்று எவரோ கேட்டார். “இல்லை, பிறிதொரு அவை. அது முற்றாக கலைக்கப்பட்டு இந்த அவை கட்டப்பட்டது.” எவரோ “கொற்றவை!” என்றனர். “எரியமர்ந்த பீடம் என உருகி மாற்றுருக் கொண்டுள்ளது இந்நகர்.” அந்தக் கலைசல் ஒலி அடங்க சற்று நேரம் பிடித்தது. நிமித்திகன் மீண்டும் அவையை வணங்கி “இந்த அவை சிறப்புறுக! இங்கே மூத்தோரும் குடித்தலைவரும் அரசர்களும் அமர்ந்திருக்கையில் அறமே உரைக்கப்படுக! தேவர்களும் நீத்தோரும் தெய்வங்களும் சான்றென அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி கைக்கோலைச் சுழற்றி இறங்கினான்.
யுதிஷ்டிரன் மெல்லிய தள்ளாடும் நடையுடன் தன் பீடத்தில் இருந்து எழுந்து அரசமேடைக்கு வந்தார். கைகூப்பியபடி அவர் நின்றபோது அவையில் மூச்சொலிகளே எழுந்தன. யுதிஷ்டிரன் முதிர்ந்த குரலில் “குடியினரே, இங்கு இந்த அவையில் நின்றிருக்கையில் நான் நெடுங்காலம் வாழ்ந்துவிட்டேன் என்று உணர்கிறேன்” என்றார். “ஒரு பிறவிக்குள் ஏழு பிறவி எடுப்பவனே முக்தி அடைகிறான் என்று ஒரு சொல் உண்டு. ஆறு பிறவிகள் வழியாக நான் வந்துவிட்டேன் என உணர்கிறேன். இளமையில் இந்நகருக்கு வருவதற்கு முன் அங்கே சதசிருங்கத்தில் எந்தையுடன் எத்துயரும் அறியாத சிறுவனாக வாழ்ந்தேன். அவருடைய இறப்பு என் முதற்சாவும், இரண்டாம் பிறப்புமாகும்.”
அவையிலிருந்தவர்களுக்கு அவர் சொன்னவை சென்றடையவில்லை என்பது அவர்கள் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்ததில் தெரிந்தது. அவர்கள் எவருமே யுதிஷ்டிரனை இளமையில் கண்டவர்கள் அல்ல. யுதிஷ்டிரன் சொன்னார் “முற்பிறவிக்கு என நான் அடிக்கடி அங்கே சென்று மீள்கிறேன். இப்போது அகவை நிறையும்போது மீண்டும் மீண்டும் தெளிவாக, ஒரு புல் ஒரு நீரலை குறையாமல் கனவுகளில் எழுகிறது அந்நிலம். அங்கே தெளிந்த விழிகளுடன் எந்தை என்றுமிருக்கிறார். சில நாட்களுக்கு முன் நான் கண்ட கனவில் அவர் தன் உடலெங்கும் மைந்தரைச் சுமந்தபடி தலையில் மலைத்தேனின் அடைகளை நாரில் கட்டி எடுத்துக்கொண்டு நடந்தார். அவர் உடலெங்கும் தேன் வழிந்துகொண்டிருந்தது. அவர் முகம் மகிழ்ச்சியில் தேவர்களுக்குரிய மலர்வை கொண்டிருந்தது. அவையோரே, மானுட வாழ்வென்பது ஒரு பெருங்கனவு. அக்கனவு மெல்லமெல்ல கலைவதையே ஞானமென்றும் வீடுபேறென்றும் சொல்கிறோம்.”
இந்நகரில் வந்து கல்வி கற்று இளையோருடன் கூடி பிறிதொரு வாழ்க்கை வாழ்ந்தேன். அவ்வாழ்வும் இனிதே. வாரணவதத்தில் மீண்டும் இறந்தேன். சிதையில் எரிந்தேன். குகை வழியாக மீண்டும் பிறந்தேன். மீண்டும் கானக வாழ்க்கை. அது மூன்றாம் பிறப்பு. அஸ்தினபுரிக்கு வந்து இந்திரப்பிரஸ்தத்தை அடைந்தது நான்காம் பிறப்பு. இந்திரப்பிரஸ்தத்தில் ஒரு சிறுபோது அரச வாழ்க்கை. சூதில் தோற்றபோது மீண்டும் இறந்தேன். நூறுமடங்கு கொடிய இறப்பு அது. உலகமே தன்மேல் காழ்ப்புகொள்வதை உணர்ந்தவனைப்போல தனியனும் துயருற்றவனும் வேறில்லை. தானே தன்மேல் காழ்ப்புகொண்டிருப்பதை உணர்பவன் கீழினும் கீழோன். கொடிய சாவு அது, அவையோரே. நூறு சிம்மங்களால் கிழிக்கப்படுவது, ஆயிரம் கழுகுகளால் கொத்திச் சிதறடிக்கப்படுவது.
நகரிழந்து கானேகியது ஐந்தாம் பிறப்பு. மெய்தேடி, உள்ளுறையும் பொய்யை மீளமீள அறிந்து ஒரு நீண்ட அலைவு. அறியா நிலங்களில் நாளும் இறந்துபிறக்கும் ஒரு பயணம். மீண்டு வந்து உபப்பிலாவ்யத்தில் அரசுசூடி அமர்ந்து பெரும்போரை நிகழ்த்தினேன். களத்தில் துரியோதனன் இறந்த அன்று நானும் உடனிறந்தேன். நீர்க்கடன் முடித்து இந்நகரில் நுழைந்தபோது ஆறாம் முறையாக பிறந்தேன். பிறவி ஒவ்வொன்றிலும் துயர் மகிழ்வு எனும் இரு நிலைகளின் உச்சங்களை அடைந்திருக்கிறேன். நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் என்னுள் கூர்கொண்டு முழுமைகொண்டு அலைக்கழித்திருக்கின்றன. விண்ணுறை ஒளித்தெய்வங்களையும் இருளிறைகளையும் அருகருகே பார்த்திருக்கிறேன். நான் வாழ்க்கையை வாழ்ந்து சலித்துவிட்டேன்.
இதுவரை என்னை ஆறு முறை உருக்கி மறுபடியும் வார்த்திருக்கிறேன். ஏழாவது முறை என்னை உருக்கி மீண்டும் புதிய அச்சில் ஊற்றிக்கொண்டாலொழிய எனக்கு மீட்பில்லை. உகந்த வாழ்வென்பது ‘போதும் இது’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும்போது நிறைவடைவது என்பார்கள். நான் அவ்வண்ணம் போதும் போதும் என்று எனக்குள் பலமுறை சொல்லிக்கொண்டாலும் கூட ஒவ்வொரு முறையும் மெய்யாகவே அது எனக்கு போதவில்லை என்றும் அறிந்திருந்தேன். போதும் என நான் தெய்வங்களிடம் சொல்லும்போது என்னை இங்கு நிறுத்தி வைப்பதற்காக எதையேனும் அவர்கள் எடுத்துப்போடுவார்கள் என்றும் அதை பற்றிக்கொண்டு மீண்டும் வாழ்ந்துவிடுவேன் என்றும் நான் நம்புவது எனக்கு தெரிந்திருந்தது. ஏனென்றால் அது வாழ்வின் மாயம்.
“இங்கு மண்ணாளும் தலைமை, நோயிலா உடல், பெருகி இனிக்கும் உறவுகள் என திருமகள் அருளும் அனைத்தும் அளிக்கப்பட்டாலும் கூட, அவற்றை முழுதறிந்து திளைத்தாலும் கூட வாழ்பவனுக்கு இங்குள்ள வாழ்க்கை போதுமென்று தோன்றுகையிலேயே அவ்வாழ்க்கை நிறைவுறுகிறது. போதும் என்று முழுதுளத்தாலும் தோன்றவேண்டும். எச்சமென துளியும் இருக்கலாகாது. என் வாழ்க்கையில் இப்போதுமட்டும்தான் அவ்வண்ணம் உணர்கிறேன். இதை நூறுமுறை விலகி நின்று எட்டு திசைகளிலிருந்தும் நோக்கி நோக்கி அவ்வண்ணமே அவ்வண்ணமே என உறுதிசெய்துவிட்டேன்.”
அங்குளோர் அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்தும் புரியாமலும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். “அவர் விட்டுச்செல்லப் போகிறார்” என்று குபேரர் சொன்னார். “ஆம், அது அறிந்ததுதானே?” என்று மிருத்திகன் சொன்னான். “அவரால் இந்நகரை ஆள முடியாது என நன்கறிந்திருக்கிறார், அவர் எண்ணியதைவிட இது மிகப் பெரியதாக ஆகிவிட்டது” என்று எவரோ சொன்னார்கள். “அவர் இளையோரின் துணையுடன் வாழ்ந்தவர். இன்று இளையோர் ஆற்றலிழந்துள்ளனர்.” எவரோ எங்கோ “நம்மை விட்டுச்செல்வதை நாம் துறப்பது அறிவுடைமை” என்றார். சிரிப்பொலிகள் எழுந்தன.
மேடையில் யுதிஷ்டிரன் தொடர்ந்து சொன்னார் “இந்நகர் என் இளவல் யுயுத்ஸுவின் ஆட்சியில் சிறப்புறுகிறது. அவன் துணைவி அரசி சம்வகையால் அன்னையென பேணப்படுகிறது. இங்கு என் கொடிவழி சிறக்க வேண்டும். என் இளையோனின் குருதிவழியில் எழுந்த மைந்தன் பரீக்ஷித் இங்குளான். அவன் குருதியில் எழும் மைந்தர்கள் இந்நகரை ஆள்வார்கள். பொலிவுற்று இன்னும் நெடுங்காலம் இது இங்கிருக்கும். இது நீடுவாழ்க!” அவையினர் கோல்களைத் தூக்கி “வெல்க அஸ்தினபுரி! சிறப்புறுக அமுதகலக்கொடி!” என்று ஏற்றுரை எழுப்பினர்.
“இங்கு அவையில் இரு செய்திகளை முறையாக நான் அறிவிக்க விரும்புகிறேன்” என்றார் யுதிஷ்டிரன். “ஏற்கெனவே அச்செய்தி இங்கு அனைவரும் அறிந்ததே. அரசுமுறையாக அறிவிக்கப்பட்டு உரிய சடங்குகளும் செய்யப்பட்டுவிட்டன. ஆனால் இங்கே அவற்றை நான் என் வாயால் அறிவிக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் என் குலத்தின் முடிவை நான் இங்கே தெய்வங்கள் மூதாதையர் சான்றோர் கேட்க உரைத்தாகவேண்டும். நான் இங்கிருந்து கிளம்புவதற்கான சடங்குகளில் அதுவே முதன்மையானது.”
“அவையோரே, என் தந்தையரில் ஒருவரும், அஸ்தினபுரியின் பேரரசர் திருதராஷ்டிரருக்கும் பாண்டுவுக்கும் இளையவரும், கிருஷ்ண துவைபாயன மகாவியாசரின் மைந்தருமான விதுரர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கங்கைவாயிலாகிய ரிஷிகேசம் என்னுமிடத்தில் சதகுண்டம் என்னும் காட்டில், சதயூப முனிவரின் குருநிலையில் உயிர்துறந்தார்.” அவையினரில் உணர்ச்சிகளென ஏதும் எழவில்லையாயினும் முறைப்படி “பேரறிவர் வெல்க! நிலைகொள்க விதுரர் புகழ்!” என்று வாழ்த்தொலிகள் எழுப்பியபடி எழுந்து நின்றனர்.
வாழ்த்தொலிகள் ஓய்ந்து அவை மீண்டும் அமர்வது வரை யுதிஷ்டிரன் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் கைகூப்பி நின்றார். அவை அமைதியடைந்ததும் அவர் மீண்டும் சொல்லத்தொடங்கினார். “நான் கான்வாழ்வில் இருந்தபோது விதுரரிடமிருந்து அஸ்தினபுரிக்கு வந்த செய்தி எனக்கு அனுப்பப்பட்டது. விதுரர் தன் காலம் முடிந்ததென்று உணர்ந்து என்னை சந்திக்கவேண்டும் என்று அழைத்தார். நானும் எப்படியோ அதை எதிர்பார்த்திருந்தேன். நான் உபகௌதமர்களாகிய என் தவத்துணைவருடன் அக்காட்டிற்கு சென்றேன்.”
அன்னையும் விதுரரும் எளிய புற்குடிலில் இருந்தனர். விதுரர் நான் செல்வதற்கு எட்டு நாட்களுக்கு முன்னரே உணவும் நீரும் ஒழித்து வடக்குநோன்பில் இருந்தார். மெல்லிய துடிப்புபோல அவரிடம் சிறிதளவே உயிர் எஞ்சியிருந்தது. நான் சென்று சொல்லில்லாது அவர் காலில் வணங்கினேன். அவர் மிக மெலிந்து உதிரும் தருணத்தில் இருந்தார். என் அன்னை அங்கிருந்தார். என்னை அவர் விழிகளாலும் அறியவில்லை. எனக்கும் அவர் முற்றிலும் அயலவராகத் தோன்றினார். நாங்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. அவரை என்னிடம் ஒப்படைப்பதுபோல நான் சென்றதுமே அவர் குடிலில் இருந்து வெளியே சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்தார். நான் உள்ளே தர்ப்பைப் படுக்கைமேல் கிடந்த விதுரரின் அருகே அமர்ந்தேன்.
வடக்கிருந்து உயிர்நீப்பவர்கள் இறுதியை அருகே காணும்போது ஒரு நிறைவை அடைகிறார்கள். அதை நான் விதுரரிடம் கண்டேன். விதுரர் என்னிடம் ‘மைந்தா, நான் மண்நீங்கப் போகிறேன். விடைகொடு’ என்றார். நான் ‘அவ்வண்ணமே ஆகுக!’ என்றேன். ‘இன்னும் சிலகாலம் கழித்து எங்கோ இளைய யாதவர் மண் நீங்குவார். அவர் இங்கிருந்து செல்கையில் துவாபர யுகம் முற்றிலும் முடிகிறது. கலியுகம் அக்கணமே பிறந்துவிடுகிறது. ஒருகணம் கூட கலியுகத்தில் வாழலாகாது என்பதே எனது விழைவு. ஆகவே இம்முடிவை நான் எடுத்தேன்’ என்றார். நான் ‘நிறைவுறுக, தந்தையே!’ என்று தலைவணங்கினேன்.
அவர் என் கையை பற்றிக்கொண்டு ‘உண்ணாநோன்பில் உடல் நலிந்திருக்கிறேன். இப்போது என்னால் எழுந்து நடக்க முடியாது. இந்தத் தவநிலையின் தெற்கு மூலையில் இருக்கும் பேராலமரத்தின் அடியில் என்னை கொண்டு அமர வை’ என்றார். நான் அவர் கைபிடித்து அந்தப் பேராலமரத்தின் அடியில் அமர்த்தினேன். அவர் என்னிடமங்கே ஒரு சிறுகல்லில் யமனை நிறுவும்படி ஆணையிட்டார். நான் கிடைக்கல் மேல் நிலைக்கல்லாக யமதேவனை நிறுவினேன். அருகே அவர் ஊழ்க நிலையில் அமர்ந்தார். தன் கைகளை துறத்தல் முத்திரையில் மடியில் வைத்துக்கொண்டார். ‘என்னைத் தொட்டவாறு இரு. என் உடலில் இருந்து ஒளி அகன்றதும் கையை எடுத்துக்கொள்’ என்றார்.
நான் அவர் அருகே அமர்ந்து அவர் உடலை தொட்டுக்கொண்டிருந்தேன். நெய்குறையும் அகலில் சுடர் என அவர் உடலில் ஒளி குறைந்து வந்ததை கண்டேன். மரத்தின் மேலிருந்து ஒரு காகம் இறங்கி வந்து அவர் தோளில் அமர்ந்தது. அப்போது ஒரு சிறு துடிப்புடன் அவர் உடலில் எஞ்சிய உயிரின் ஒளி முற்றாக அகன்றது. ஊன்சிலை என அவர் மாறினார். நான் கையை எடுத்துக்கொண்டேன். அக்கணத்தில் என்னில் நிகழ்ந்தது என்ன என்று எனக்கு தெரியவில்லை. அதை சொல்லாக ஆக்க நான் முயலப் போவதுமில்லை. ஆனால் இப்போது இங்கு நின்று அனைத்தையும் கடந்துவிட்டேன், இனி ஏதும் இல்லை என்று சொல்லும் இவ்வுளநிலையை அப்போதுதான் முதல்முறையாக அடைந்தேன். அவர் அருகே நானும் ஊழ்கத்தில் சற்றுநேரம் அமர்ந்திருந்தேன்.
என் தவத்துணைவர் என்னைத் தேடி வந்தனர். அவர்களிடம் விதுரர் விண்ணேகிய செய்தியை சொன்னேன். விதுரரின் உடலை என்ன செய்வது என்னும் வினா எங்களுக்குள் எழுந்தது. அவர் இல்லறத்தார் என்பதனால் முறைப்படி எரியூட்டவேண்டும். அவர் குருதியில் பிறந்த மைந்தர்கள் நீர்க்கடன் செய்யவேண்டும். ஆனால் அவர் மைந்தர்களையும் மைந்தர்கள் அவரையும் துறந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டிருந்தன. அவர் மைந்தர்கள் மதுராவிலும் மதுவனத்திலும் இருந்தனர். அவர்கள் தங்களை யாதவர்களாகவே மாற்றிக்கொண்டுவிட்டிருந்தனர். மைந்தன் என என்னை நிறுத்தி அக்கடன்களை நான் செய்யலாகும்தான். அவர் இல்லறத்தாருக்குரிய நோன்புகள், கடன்கள் எதையும் இயற்றியவர் அல்ல. அவரை இல்லறத்தார் என்று கொண்டு எரியூட்டினால் அவர் விண்புகாது போகக்கூடும் என்றேன்.
அவர் முறைப்படி துறவும் பூணவில்லை. முனிவருக்குரிய வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளவில்லை. அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் தன் அகம்செலுத்திய வழியில் கட்டின்றி அலைபவராகவே இருந்திருக்கிறார். ஆகவே அவரை முனிவருக்குரிய முறையில் ஊழ்க அமர்வில் மண்ணில் புதைப்பதும் முறையானது அல்ல. அந்த ஐயம் எழுந்ததும் நாங்கள் சென்று சதயூபரிடமே அவர் உடலை என்ன செய்வது என்று கேட்டோம்.
சதயூபர் சொன்னார். ‘விதுரர் தான் எவர் என அறிவார். அவர் தன்னை யமனுக்குரிய திசையில் ஆலமரத்தின் அடியில் அமரச்செய்தது அதனால்தான். அவர் இல்லறத்தாரோ துறவியோ அல்ல எனில் பரிவிரஜர் என்ற நிலையில் இருப்பவர். அலைந்து திரிபவர், அமராதவர், இடங்களை முற்றொழிந்து செல்பவர். ஆகவே அவரை அவ்வண்ணமே அந்த மரத்தடியிலேயே விட்டுவிடுவதே நன்று. அவர் பறவைகளைப்போல இயல்பாக காட்டில் உதிர்ந்து பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சிற்றுயிர்களுக்கும் உணவாவார். அதுவே பரிவிரஜர்களுக்கு உகந்த இறுதியாகும்.’
நாங்கள் விதுரரை வணங்கி அவ்வண்ணமே அந்த ஆலமரத்தடியில் விட்டுவிட்டு மீண்டோம். அன்னையைப் பற்றி அப்போதுதான் உணர்ந்தேன். அவர் எங்கே என்று கேட்டேன். நான் குடிலுக்குள் நுழைந்ததுமே அவர் வெளியே சென்று மேற்குத்திசை நோக்கி சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அன்னையைத் தொடர்ந்து செல்லவேண்டும் என்று விரும்பினேன். விரக்தரைத் தொடர்வது பழி சேர்ப்பது என்று சதயூபர் என்னிடம் சொன்னார். ஆகவே நான் அவரை பின்தொடர முற்படவில்லை. ஆனால் ஏழாம் நாள் மலைக்குறவர்கள் வழியாக அன்னை திருதராஷ்டிரரும் காந்தாரியும் வாழ்ந்த சுகிர்தம் என்னும் காட்டுக்குச் சென்றுவிட்டதை அறிந்தேன்.
அஸ்தினபுரிக்கு முறையாக விதுரரின் மறைவை அறிவித்துவிட்டு நான் அங்கேயே சதயூபரின் குருநிலையில் காத்திருந்தேன். அவர் விதுரரின் தோற்றத்தைப் பற்றி சொன்னார். மாண்டவ்யர் என்னும் முனிவரின் கதை அது. மாண்டவ்யர் கொடுங்காட்டில் ஒரு குகையில் தனியாக சொல்லொடுங்கு தவம் செய்கையில் அரசனால் துரத்தப்பட்டு தப்பியோடும்போது அவ்வழி வந்த திருடர்கள் நிதிக்குவையை அவர் அருகே வைத்துவிட்டு விலகி ஓடினர். துரத்திவந்த அரசன் அவரே திருடன் என நினைத்து அவரைப் பிடித்து உசாவினான். தன் நோன்பை உடைக்க விழையாத மாண்டவ்யர் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. ஆகவே அவன் அவரை கழுவிலேற்றினான்.
உடலில் ஏற்றப்பட்ட ஆணியுடன் மாண்டவ்யர் விண்ணுலகு புகுந்தார். அங்கே யமனைக் கண்டு அவ்வண்ணம் பெருந்துயர் தனக்கு அமைந்தது ஏன் என்று கேட்டார். முற்பிறவியில் அவர் சிற்றுயிர்களைப் பிடித்து நாணலில் கோத்து விளையாடியமையால் என்று யமன் மறுமொழி சொன்னான். ஆனால் அவ்வாறு தான் செய்தது பன்னிரு அகவைக்கு முன்பு என்றும், பன்னிரு அகவை வரை செய்யும் செயல்கள் நேரடிப் பழி அளிப்பவை அல்ல என்று இந்திரநீதி சொல்கிறது என்றும் ஆணிமாண்டவ்யர் சொன்னார். ஆம் ஆம் ஆம் என்று இந்திரனின் உலகில் முரசு எழுந்தது.
‘துயருற்ற யமன் இந்திரனிடம் அப்பிழைக்கு நிகர்செய்ய தான் என்ன செய்யவேண்டும் என்று உசாவினான். அவன் மண்ணில் பிறந்து அத்துயரை தானும் அடையவேண்டும் என்று இந்திரன் சொன்னான். அதன்படியே யமன் அரண்மனைச் சேடி சிவையின் வயிற்றில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசரின் குருதியில் விதுரராகப் பிறந்தான். சூதன் என்னும் சுடுசொற்களைக் கேட்டு வளர்ந்தார். விரும்பிய பெண்ணை இழந்தார். மணந்த பெண்ணுக்கு நிறைவளிக்கவில்லை என்று உணர்ந்து துயருற்றார். அவ்வண்ணம் நூற்றெட்டு முறை இவ்வாழ்வில் அவர் கழுவிலேற்றப்பட்ட வலியை அறிந்தார். திரௌபதி அவைச்சிறுமை செய்யப்பட்டபோதும், பீஷ்மரும் துரோணரும் கௌரவ மைந்தர்களும் கொல்லப்பட்டபோதும் கழுவில் அமர்ந்து துடித்தார். வலிநிறைவு அடைந்து விண்புகுந்தார். அவர் வெல்க!’ என்று சதயூபர் சொன்னார்.
“விதுரரின் உடலை மலைக்கழுகுகளும் கழுதைப்புலிகளும் ஓநாய்களும் இணைந்து விருந்தென உண்டன. பின்னர் சிறுபறவைகள் உண்டன. இறுதியாக எறும்புகளும் வண்டுகளும் உண்டன. வெள்ளெலும்புகள் அங்கே கிடந்தன. ஏழு நாட்கள் தொடர்ந்து மழை பொழிந்தது. மழை ஓய்ந்தபோது அவ்வெலும்புகளும் மறைந்துவிட்டிருந்தன. அவர் அமர்ந்திருந்த இடத்தில் இளநீல மலர்களுடன் சிறிய செடிகள் முளைத்திருப்பதைக் கண்டேன்” என்றார் யுதிஷ்டிரன். “அங்கிருந்து கிளம்புகையில் சதயூபர் சொன்னார். அவ்வண்னம் யமன் இங்கு வந்தது நன்று. விண்ணின் மலைமுடி என நின்ற அறம் இங்கே மண்ணில் துலாக்கோல் முள் என அலைவுறுவதை நேரில் கண்டு மீண்டான்.”