வண்ணம், ஆமை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ.

வண்ணம் கதை உண்மையில் அளிக்கும் கதை என்ன? வரிவசூல் கொடுமை. அரசின் அலட்சியமான போக்கு. மக்களின் வாதை. ஆனால் அடிப்படையில் இன்னொரு கதை இருக்கிறது. தலைப்பு அதைத்தான் சொல்கிறது. மக்களை நம்பியே அரசன் இருக்கிறான். அரசன் வந்து மக்களை பணிந்துதான் ஆகவேண்டும்.

ஆனால் மக்களும் சிக்குண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் சிக்குண்டு இருப்பது உறவுகளில். ஒரு சின்ன வண்ணத்துப்பூச்சியின் வண்ணத்தை வைத்து குழந்தையை பிடித்துவிடுகிறார்கள். அதைக்கொண்டு அந்த ஊரையே பிடித்துவிடுகிறார்கள். ஒரு துளி வண்ணம்போதும். அது அரசுக்கு தெரியும். யார் யாரிடம் சிக்குண்டிருக்கிறார்கள்?

ராஜேந்திரன் எம்

***

அன்புள்ள ஜெ,

வண்ணம் சிறுகதை குறுகத் தரித்த குறள் போல எத்தனை இடங்களைத் தொட்டுப் பாய்கிறது.  உழவர்களின் பாடு (இன்று வரை தொடர்கிறதே) திருக்கண் நோக்கக்கூட மனமில்லாத மன்னர்கள், மன்னர் பேரைச் சொல்லி ஊழல் ஆட்சி புரியும் காமாந்தகார சேவகர்கள், செய்யும் வேலை என்னவென்றே தெரியாத கணக்காளர்கள், உண்மை நிலவரம் தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலாத ஊர்ப் பணியாளர்கள் (எருக்கிலை தின்ற ஆட்டுக்குட்டி) என்று அனைவரையும் தொட்டு நக்கல் நையாண்டியோடும், மனதில் ஆழப்பதியுமாறும் பதிவிடுகிறது.

தென்பாண்டி வேளாளர்களின் குடி மேன்மையும், குலப்பழக்கங்களும் அவர்களின் உழவின் சிறப்பும் போற்றப்பட்டாலும், அவர்கள் படும்பாடு உழந்தும் உழவே தலை என்பதையே கேள்விக்குள்ளாக்குகிறது. இத்தனை பாடுகளிலும் உண்மை நிலவரம் தெரிந்ததும் அதைச் சரி செய்ய மன்னர் முதலானோர் பணிவுடன் செய்யும் செயல்கள், குழந்தைமை, தாய்மையின் மேன்மை, பட்ட பாடுகளை மறக்கச் செய்கிறது. உழவர்களும், கலைஞர்களுமே மன்னர்களும் பணியும் உயர்வைப் பெற்றிருந்தார்கள் என்பது மன நிறைவைத் தருகிறது.
நன்றி ஜெ.

நாரா.சிதம்பரம்.

***

Turtle’s back background texture abstract pattern nature.

அன்புள்ள அண்ணன்

தூரத்திலிருந்து எனக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்கிறீர்கள். பனையே வான் நோக்கி பயணிக்கும் ஒரு ஆமை தான். அது சென்ற வழித்தடம் மனிதர் துணிந்து செல்ல ஏற்ற வழி. பனைக்கு திருப்பிச் செய்ய மக்கள் நினைத்தால்… தெவங்களுக்கு செய்ததைவிட அதிகமாக செய்யவேண்டிவரும்.

பனையை முன்னிறுத்தும் எனது பணிக்கு மாத்திரம் அல்ல பல்வேறு பனை ஆர்வலர்களுக்கும்   இந்த கதை உத்வேகமளிக்கும்.

மனம் நிறைந்து நன்றி கூறுகிறேன்

தம்பி

காட்சன் சாமுவேல்

***

அன்புள்ள ஜெ

ஆமை கதையின் உணர்ச்சிகரம் எனக்கு புரியவைத்தது இன்னொன்று. நல்லவேளை என் தாத்தா அந்த ஊரிலிருந்து கிளம்பினார் என்ற வரி. ஆமைபோல அந்த ஓட்டுக்குள் இருக்காமல் கிளம்பியதனால்தான் அவர்கள் தப்பினார்கள். எங்கள் ஊர் விருதுநகர் பக்கம். ஏதாவது ஒரு காரணத்தால் ஊரைவிட்டு கிளம்பியவர்கள்தான் உருப்பட்டார்கள். ஊரிலேயே இருந்துகொண்டவர்கள் ஆமைபோலத்தான் வாழ்கிறார்கள்

மாரிச்செல்வம்

***

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைகதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]
அடுத்த கட்டுரைதங்கப்புத்தகம், மலையரசி- கடிதங்கள்