வெண்முரசின் இறுதிநாவல்- கடிதம்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம் தொடர்க,

வெண்முரசின் நிறைவு நாவலைப் பற்றிய குறிப்பு பல எண்ணங்களைக் குவித்துவிட்டது. இந்த தொடர்வாசிப்பில் வெண்முரசில் நான் பெற்றதென்ன என்று யோசித்துப்பார்க்கிறேன். நிகழ் வாழ்க்கையினின்றும் விலகித் திளைக்கும் படியான பெரும் கனவுலகைச் சித்தரிக்கும் வர்ணனைகள், தாண்டிச்செல்ல முடியாதபடி, எண்ணங்கள் ஒரு வார்த்தையினின்றும் விரிந்து செல்லும்படியான அழகியல் என பல கூறுகளுக்கு மேல் தனிப்பட்ட முறையில் என் சிந்தனைகளும் வெளிப்படும் மொழியும் செறிந்து செல்லுமொரு வாழ்க்கைப் பயணமாக அமைந்திருக்கிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்னிருந்த என் சிந்தனை முறையும், தர்க்கமும், மொழியும் பெரிதும் மாறியிருக்கிறது. ஒருசொல்லின் பொருள் மனதுள் நெருங்கி உணர்வாக மாறுவதென்பது அற்புத அனுபவம். அது அந்தப் பொருளுக்கான மிகச்சரியான சொல் அங்கே வந்தமரும்போதுமட்டுமே நிகழும். அந்த அற்புதம், நிகழ் வாழ்வில் பல சொற்கள் பொருளை வந்தடையுமுன்னரே இயலாமையில் முடிவதை உணரும்போது மேலும் பேருருக்கொள்கிறது. அதை அள்ளி அள்ளி அளித்துக்கொண்டேயிருக்கிறது வெண்முரசு.

அதனுடன் நெருங்க மனது வேண்டும். படிப்பறிவெல்லாம் பிறகே என்று தோன்றும். நெருங்கும்தோறும் அள்ளிச்சென்று விண்ணின் அறியா பிரபஞ்சங்களில் சஞ்சரிக்க வைக்கும். பிறகு அதன் மொழியிலேயே சிந்தனை வயப்படும். பேசும் சொற்கள் கூட மனதில் வேறுவகையில் ஓடிக்கொண்டிருக்கும். முடிவிலி என்ற சொல்லளித்த பரவசத்தை நண்பனுடன் பேசித்தீர்க்கமுடியாமல் போன ஓரிரவு எனக்கு வாய்த்திருக்கிறது. (பொறுங்கள் என்று வாய் சொல்ல மனதில் அளிகூர்க என்று பலமுறை தோன்றியிருக்கிறது). முதற்கனல் ஆரம்பித்தபோது ஒரு ஆர்வம் மட்டுமே இருந்தது. சிறுகச்சிறுக பல்வேறு தளங்களில் மனதின் கட்டமைப்பு விரிந்துகொண்டே சென்றது. மீளா மயக்கம் நீலமென்றல் சொல்வளர்காடு சிந்தனை நீட்சி, உடலின் உள்ளத்தின் பெரும்போராட்டம் குருதிச்சாரல்.

மேற்செல்ல முடியாமல் நிற்கும் வாழ்வின் எந்த ஒரு நிகழ்விற்கும் எங்கோ ஓரிடத்தில் விடையைக் கொண்டிருக்கும் ஒரு முழு வாழ்விற்கான படைப்பென்றே வெண்முரசு எனக்குத் தோன்றும். கடந்த வருடங்களில் அதைப் பலமுறை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். பெரும்பாலும் எதிலும் விலகிநின்று அதற்கான ஒப்புமையை வெண்முரசில் இயல்பாக நாடிச்செல்கிறது மனம். பிறகு அதை நினைக்கும்பொழுது, எப்படி மனது அதை சரியாக வெளிக்கொண்டுவந்தது என்று ஆச்சரியமடைவேன். அந்த ஆச்சரியத்திற்கும் பதில் ஒரு பத்தியில் வருவதைக்கண்டு மெலும் உவகை கொள்வேன். தன்னளவில் அடையும் உயரத்தை நீட்டிக்கொண்டே இருக்கத்தூண்டும், தனிப்பட்ட முறையில் மிகுந்த மனநிறைவை அளிக்கும் ஒரு வாசிப்பு. அகத்திலும் புறத்திலும் இணைவாழ்க்கையொன்றை நிகழ்த்திக்காட்டியபடியே இருக்கிறது வெண்முரசு.

அனைத்து பேரிலக்குகளும் அடிப்படையில் ஒரு ஒழுங்கமைவிலிருந்துதான் தோன்றமுடியும். பேரிலக்கை நோக்கிச்செல்லும் ஒழுங்கமைவு பொதுபுத்தியிலிருந்து முற்றிலும் வேறொன்றாக இருந்தாலும். அத்தகைய ஒரு அடிப்படை ஒழுங்கமைவிற்கு உதாரணமாக உங்கள் வெண்முரசு பதிவிடும் பழக்கத்தை என் மகளிடம் சொல்லியிருக்கிறேன் ஒரு அகத்தூண்டுதலுக்காக.

இத்தனை மாந்தர்களை படைத்து ஆளுவது எப்படியென்பது வியப்பளிப்பது. ஆனால் அதற்கு மறுமுனையாக, சந்திக்கும் அனுபவம் அனைத்திலிருந்தும் ஏதோ ஒரு கூறு சென்றடையவேண்டிய இடமென்றாகியிருக்கும் வெண்முரசு. ஒரு சமையலறையில் தென்படும் எறும்புநிரை குருஷேத்திரத்தின் வீரர்களின் நிரையாக மாறக்கூடும். எதிர்ப்படும் ஒரு மனிதனின் ஏதோ ஒரு அசைவு கணிகராகவோ, சகுனியாகவோ சிகண்டியாகவோ அமையக்கூடும். வாசலிலோ தோட்டத்திலோ இருக்கும் தெட்சி போர்க்களக்குதிரையின் குருதித்துளியாகக்கூடும். அந்த நோக்கில் அனைவரும் பங்குபெற்ற ஒரு மஹாகாவியம் வெண்முரசு. தேடிக்கண்டுகொள்ளவேண்டியது அவரவர் சிந்தனைபோலும்.

“முதலா விண் “ என்ற தோன்றாத வானம் இயல்பாக தோற்றத்தின் ஏதோ ஒரு ஆரம்பகணத்தை எதிர்நோக்கியிருப்பதுதானே. அப்போது மீண்டும் முதற்கனல் எழும். ஏனென்றால், “இருள் முதல் முடிவற்றது. ஆதியில் அது மட்டும்தான் இருந்தது. வானங்கள் அனைத்தும் அந்த இருளுக்குள்தான் இருந்தன.” தன் வாலை வாயால் கவ்வி விழுங்கி பெரிய வளையமாகி எப்போதும் இங்கே இருக்கும் அந்த ஆதிநாகம். ஜைமினிக்களும் வைசம்பாயனர்களும் எங்கோ அதன் சீற்றத்தையும், அமைதியையும், ஆழத்தையும் உயரத்தையும் நுட்பத்தையும் பிரபஞ்ச விரிவையும் மீட்டுக்கொண்டேயிருப்பார்கள். எங்கோ மீண்டும் வியாசரும் தன்னை தோற்றுவித்துக்கொண்டேயிருப்பார், மேலும் தோன்றவிருக்கும் ஜைமினிகளுக்கும் வைசம்பாயனர்களுக்குமாக.

ஆகவே “விண்வரை” குருவருளால் நிறைவுறும். என்னைப்போன்றவர்களின் வேண்டுதல்களும் பெரியவர்களின் வாழ்த்தொலிகளும் சூழ. விண்வரை நிறைவுற்றாலும் விசும்புவரை பரவி நிறைந்திருக்கும் வெண்முரசின் அதிர்வு.

தங்கள் முதற்கனலுக்கு முன்சொல்லை நினைவு கூர்கிறேன். வியாசனின் மானுட நாடகம் அவர்களின் வாழ்க்கையை மேலும் சில வருடங்கள் ஒளியேற்றுவதாக‘. ஆம் அந்த அக ஒளியில் அவர்களை அவர்களே கண்டுகொள்ளக்கூடும். அந்த முடிவற்ற நிகழ்வில் எங்கோ ஒரு துளியினும் துளியாக தொடர்ந்து வர முடிந்தது என் இருப்பை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்கியிருக்கிறது.

இயற்கையின் முன் நன்றியென்பது மானுடனின் அக உணர்வில் பெரிதென்றாலும் வார்த்தைவெளிப்பாட்டில் இயலாமையே. ஆனால் அவனால் வார்த்தைகளில் இயல்வதும் அதுவேயல்லவா. நன்றி.

நான் பணிந்து வணங்கும் இறையிடமும் குருவிடமும் உள்ளார்ந்த மனதின் வேண்டுதல்களுடன் விண்நிரையை எதிர்பார்த்து,

நா. சந்திரசேகரன்

சென்னை

***

முந்தைய கட்டுரைசித்தம் எப்படியோ
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]