இனிய ஜெயம்
திபெத் என்றதுமே வஜ்ராயன பௌத்தம், பனி, செஞ்சுடர் வண்ண உடைகள் அணிந்த பிக்ஷுக்கள், மடாலயங்கள், தலாய் லாமா, சீன ஆக்கிரமிப்பு, என கொஞ்சம் அரசியலும், பெரிதும் ஆத்மீகமும், ஷாம்பாலா போல மர்மமும் கலந்த ஒரு நிலத்தின் வாழ்வே மனதில் எழுகிறது.
நேர் எதிராக இந்த ஆவணம், திபெத்திய சமவெளி கிராமம் ஒன்றின் குடும்பம் ஒன்றின் ஒரு நாளை பேசுகிறது.
மாடு வளர்ப்பு, சாணி பொருக்குதல், விறகு சேகரித்தல், களி மண் இல்லம் அமைத்தல், வித விதமான களி மண் உணவு கலங்கள், சேகரிப்பு பத்தாயங்கள், வித விதமான அடுப்புகள், உணவுகள், எல்லாமே முழுக்க முழுக்க உடல் உழைப்பு மட்டுமே கொண்டு நகர்பவை. மாவு திரித்தல் முதல் வீடு கட்டுவது வரை. மாட்டுக்கான மருந்து முதல் சிறுவர்களுக்கான விளையாட்டு பொருள் வரை எல்லாமே, அங்கேயே அப்போதே செய்யப்படுகிறது.
சிறிய களி மண் இல்லத்தில் வாழும் அவ்வீட்டை காவல் காக்கும் சிங்கம் நிகர்த்த இரு மிஸ்டிப் நாய்கள், பனியில் சறுக்கி விளையாடும் பாலகர்கள் என அந்த லௌகீகமும் ஒரு மலை சரிவுத் தனிமை தியானம் போலவே உள்ளது.
மனம் குளிர செய்யும் ஆவணம். பாருங்கள் :)
கடலூர் சீனு
***