ஆமை,சுக்ரர்- கடிதங்கள்

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சுக்ரர் கதையை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன், இந்த கதைக்கு சுக்ரர் என்றபெயர் வேறெவ்வகையில் பொருந்துகிறது என்று. சுக்ரர் அசுரர்களின் ஆசாரியார். முனிவர். ஆனால் பிறகு அந்த படத்தைப்பார்த்தபோதுதான் புரிந்தது. அது ஒற்றைக்கண். சுக்ரர் ஒற்றைக்கண் கொண்டவர். ஒருமுகப்பட்ட பார்வை, வேறெதையும் பார்க்காத கூர்மை ஆகியவற்றின் அடையாளம். அவரால் தேவர்களை பார்க்கவே முடியாது. அரிகிருஷ்ணனும் அந்த ஒற்றைப்பார்வையையே கொண்டிருக்கிறார்

கே.ராஜகோபால்

***

அன்புள்ள ஜெ

நலம்தானே? நானும் நலமே.

சுக்ரர் கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது ஓர் எண்ணம் வந்தது. இந்தக்கதையின் அழகே இதில் உள்ள நேடிவ் ஆன துப்பறியும் முறைதான். யாரைச்சொன்னாலும் வம்சபரமபரையையே சொல்வது நம்மூர் பாட்டாக்கள் பாட்டிகளின் வழக்கம். அதையே ஒரு துப்பறியும் முறையாக மாற்றிவிட்டிருக்கிறார் அரிகிருஷ்ணன். இதில் நவீன அறிவியலே இல்லை. பாரம்பரியமான ஒரு குலக்கதை சொல்லும் முறை மட்டுமே உள்ளது. ரூட்ஸ் நாவலில் ஒரு குலப்பாடகன் ஒட்டுமொத்த குலத்தையும் ஞாபகம் வைத்திருப்பதுபோலத்தான் இதுவும். இந்த முறை இங்கே சோதிடம் மருத்துவம் எல்லாவற்றிலும் உண்டு. ஒரு வைத்தியரிடம் போனால் நோயளியின் குடும்பபாரம்பரியத்தையே சொல்லிவிடுவது வழக்கமாக இருந்தது. அது அற்புதமாக போலீஸிலும் கைகொடுப்பது ஆச்சரியமான ஒரு கதையாக அமைந்தது

செல்வக்குமார் .எம்

***

Turtle’s back background texture abstract pattern nature.

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

தங்களின் ‘ஆமை’ சிறுகதை வாசித்தேன். இரண்டு parallel கோடுகள் கதையில் உள்ளதாக  உணர்கிறேன். தாழ்த்தப்பட்டோரின் எழுச்சி மற்றும் பனையின் வீழ்ச்சி. இரண்டுக்கும் நேரடியான தொடர்புகள் இல்லை எனினும், எப்படி பனை மக்களின் ஒரு வாழ்வாதாரமாகவும், எளியோரின் உணவு, உடை, உறைவிடமாகவும் இருந்துள்ளது என்பதை அறிகையில், நாம் இன்று பனையின் மகத்துவத்துவதை அறிய கூட முற்படுவதில்லை என்றே தோன்றுகிறது.

ஆயிரமாயிரம் கதைகள் வந்தாலும் சிந்திய ரத்தத்தையும், பட்ட வலியையும் எழுதி தீர்த்து விட முடியாது. கதையில் அனக்கன் பாட்டியைப் பற்றியும், அந்த கால கட்டத்தில் அவர்கள் ஒடுக்கப்பட்ட விதத்தையும் வாசிக்கையில் புதிதாக படிப்பது போலவே உள்ளது. ஒவ்வொரு வலியும், ஒவ்வொரு ஒடுக்கப்படலும் வெவ்வேறே. அதை வெறும் பொதுச் சொல்லோடு குறிப்பிட்டு, அதன் மொத்த எடையையும் அந்த சொல்லிற்குள் புகட்டி விட முடியாது.

பனை அன்றைய மக்களின் இன்றியமையாத பொருளாதார பொருளாக இருந்துள்ளது. பனையின் அடி  முதல், நுனி வரை எல்லாவற்றயும் நாம் பயன்படுத்தி உள்ளோம். பனையின் ‘கொரம்பை’ எப்படி நம் தலைக்கு மேல் கூரையாக இருந்தது, எப்படி அது நம்மை அத்தனை விதமான மழையிலும் (முதல் முறையாக இத்தனை மழையைக் கேள்விப்படுகிறேன்) காத்தது, எப்படி அது நம்மில் ஒரு பிரிவற்ற பொருளாக ஆனது என்பதை அறிய முடிகிறது.  அனக்கன் பாட்டி கொரம்பையிலே வாழ்ந்து, மடிந்தாள். அது அவளின் கூடாகவும், ஆமையின் ஓடாகவும் இருந்தது. அவளுடைய வாழ்நாளே கொரம்பயின் கீழ். அவளின் அனைத்து மனித உணர்வுகளுக்கும் கொரம்பையே சாட்சி. அது அவள் உடலின் ஒரு அங்கம். சாவும் போதும் அதனுடன் செத்தாள். அந்த பனையால் ஆன கொரம்பை இல்லையெனில் அவள் என்றோ மடிந்திருப்பாள். அது தான் அவளை வாழ வைத்தது.

இப்பேற்பட்ட பனையை மீட்டெடுப்பதற்காக தன்னார்வலர்கள் இருப்பதைக் கண்டு மனம் ஒரு சிறு அமைதி அடைகிறது. கதையில் வரும் ராஜேந்திரனைப் போல பனை மீட்டெடுப்பில் உள்ளவர்களால், அனக்கன் பாட்டி போன்ற எண்ணற்ற மக்களை அவர்கள்  மீட்டெடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதனின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பனை தவிர வேறு எதுவும்  முழுவதுமாக பூர்த்தி செய்வதில்லை. அதனாலே பனையின் அடியில் தெய்வங்கள் உள்ளன போலும்.

அன்புடன்,

பிரவின்,

தர்மபுரி

***

அன்புள்ள ஜெ

ஆமை ஒரு கூர்மையான கதை. நம் குழந்தைகளிடம்கூட இந்தக்கதையை சொல்லலாம். சமூக யதார்த்தத்தை சொல்லும் கதை மட்டும் அல்ல. இதன் உள்ளடக்கம் மனிதனுக்குள் இருக்கும் தோற்கடிக்கமுடியாத சக்திதான்.

ஜான் கிறிஸ்துதாஸ்

***

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைலோகி நினைவில்…
அடுத்த கட்டுரைதூவக்காளி,கீர்ட்டிங்ஸ்- கடிதங்கள்