கதைத் திருவிழா-29, அருகே கடல் [சிறுகதை]

இரவாவதும் விடிவதும் தெரியாதபடி எப்போதும் இருண்டிருந்த பெரிய வீட்டில், நூற்றாண்டுகள் பழக்கமுள்ள பெரிய மரக்கட்டிலில், புல்பாய் விரித்து அவன் படுத்திருந்தான். நாலைந்துபேர் படுத்து உருளத்தக்க அளவு பெரிய கட்டிலிலேயே அவன் புத்தகங்களை குவித்து வைத்திருந்தான். புத்தகங்கள் குவிந்து சரிந்துவிழுந்து கலைந்து அவன் படுப்பதற்குரிய இடம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவற்றின்மேல் தூசி படிந்திருந்தது.

தூசி அல்ல, அந்த தொன்மையான வீட்டின் மச்சு உளுத்து உதிரும் வெண்பொடி. அது மரத்தூள் போலிருந்தது. அந்த மரப்பலகைகளை உண்டுகொண்டிருக்கும் சின்னஞ்சிறிய உயிரினத்தின் எச்சம் அது. அவன் அங்கே அசைவில்லாது அமர்ந்து படித்துக்கொண்டிருந்தால் அவன்மேல் அந்த பொடி விழுந்து மென்மையான படலமாக ஆகிவிடும். இரவு தூங்கி காலையில் எழுந்தால் அவனை மூடியிருக்கும்.

அந்த இல்லம் மௌனமாக அழிந்துகொண்டிருந்தது. முறிந்து இடிந்து சரியும்போது ஓசையெழுகிறது. முற்றழியும் இந்த பயணம் மிகமிக அமைதியான ஒரு மூழ்குதல். மூழ்கும் பொருட்கள் எடைமிக்கவை, உட்செறிவுகொண்டவை என்றால் ஓசையே இடுவதில்லை.

அவனுக்கு மூன்று அறைகளைத்தான் உரிமையாளர் அளித்திருந்தார். ஒன்று சமையலறை, ஒன்று படுக்கையறை, ஒன்று கூடம். பிற அறைகளை அவர் பழைய மரச்சாமான்களைப் போட்டு துருப்பிடித்த பூட்டுகளால் பூட்டியிருந்தார். அவற்றுக்குள் எலிகள் பெற்றுப் பெருகின. பலநூறு எலிகள். அவை வெளியே எங்கோ சென்று மேய்ந்து மீண்டு வந்து அவ்விருளில் திளைத்தன. பகலிலும் அவற்றின் பூசலோசையும் பேச்சொலியும் கேட்டுக்கொண்டிருந்தது. மச்சின்மேல் அவை கூட்டம் கூட்டமாக ஓடின. அவனுடைய நூல்கள் அனைத்தையும் அவை கரம்பி உண்டன.

சிலநாட்கள் எடுக்காத ஒரு நூலை அவன் குவியலில் இருந்து எடுக்கும்போது உள்ளே சுட்டுவிரல் அளவுக்கு சிறிய எலிக்குஞ்சுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி முட்டிமோதின. சிவந்த மூக்கும் பார்வையற்ற கடுகுக்கண்களும் கொண்டவை. தோலில்லாதவை எனத் தோன்றிய தளிர் உடல்கள். எலி தின்ற புத்தகங்களின் எஞ்சிய பகுதியை வாசிக்க அவன் பழகிவிட்டிருந்தான். அவனுடைய எல்லா நூல்களிலும் ஒரு பகுதியை அந்த வீடு மென்று துப்பியிருந்தது.

காண்டீன் நடத்தும் ஷாஃபியிடம் அவன் தனக்காக ஒரு தனிஅறை வேண்டுமென்று கேட்டபோது அவன் தங்கியிருந்த விடுதியில் என்ன பிரச்சினை என்று கேட்டான். அங்கே எந்த பிரச்சினையும் இல்லை. அங்கிருந்த மகிழ்ச்சிதான் பிரச்சினை.

அவனும் அதில் திளைத்தவன்தான். புத்தகங்கள், சினிமா, அரசியல், இரவெல்லாம் நீளும் விவாதங்கள். ஆனால் ஒரே வாரத்தில் அவன் மகிழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாதவனாக ஆனான். சிரிப்புகள் அவனை துணுக்குறச் செய்தன. அவனிடம் எவரேனும் பேசினால் திடுக்கிட்டு உடல் அதிரத்தொடங்கினான். கேட்கும் எதற்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அச்சொற்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பொருளாக மாறவில்லை. அவனுள் எதையும் தொடவில்லை. ஆகவே எது கேட்டாலும் பிரமித்து விழித்துப் பார்த்தான்.

அவர்கள் அவனை சங்கடமாக உணர்ந்தனர். அவனை தங்களுடன் இழுக்கமுயன்றனர். ஆனால் மகிழ்ச்சியானவர்கள் மகிழ்ச்சியற்றவர்களை எளிதாகத் தவிர்த்துவிடுகிறர்கள். இயல்பாக, அவர்களே அறியாமல். அவன் அவர்களை சுவரிலாடும் நிழல்களை என பார்த்துக்கொண்டிருந்தான்.

எங்கோ அவர்கள் மேல் ஒவ்வாமை கொள்ள தொடங்கினான். நாள் நாள் என வளர்ந்த அந்த ஒவ்வாமை வெறுப்பாக மாறியது. அவனால் அவர்களை இனி ஒருகணமும் தாளமுடியாது என்று தோன்றிய போதுதான் அவன் விலகிப்போக முடிவெடுத்தான்.

ஷாஃபி புரிந்துகொள்ளாமல் மீண்டும் ஒற்றை அறைகளையே கொண்டுசென்று காட்டினான். கீழே கடைகளும் மேலே வரிசையாக அறைகளும் கொண்டவை. அவற்றில் பள்ளி ஆசிரியர்கள் குடியிருந்தனர்.

“இல்லை, எவருமே இல்லாத இடம்… தனிவீடாக இருந்தாலும் சரி” என்றான்.

ஆனால் வீடுகளுக்கு வாடகை மிக மிக அதிகம். தேடித்தேடி எரிச்சலுற்று ஷாஃபி சொன்னான் “ஒரு வீடு இருக்கிறது, ஆனால் குடியிருக்க முடியாது”.

அந்தச்சொல்லே அவனை உலுக்கியது. குடியிருக்கமுடியாத வீடு! “எனக்கு அதுதான் வேண்டும்” என்றான்.

“என்ன?” என்றான் ஷாஃபி

“குடியிருக்கமுடியாத வீடு”.

ஷாஃபி ஒருசில நிமிடங்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். “பின்னே நீங்க என்ன அங்கே சாகவா போகிறீர்கள்?” என்றான்.

“ஆம்” என்றான். “பயப்படதே, தற்கொலையெல்லாம் செய்துகொள்ள மாட்டேன்”.

ஷாஃபி “வேறெப்படி சாவீர்கள்?” என்றான்.

“புத்தகங்கள் படிக்கப்போகிறேன்”.

ஷாஃபி வெடித்துச் சிரித்துவிட்டான். “நல்ல காரியம்…” என்றான்.

அவன் ஷாஃபியின் பைக்கின் பின்னால் அமர்ந்து அந்த வீட்டுக்கு வந்தான். கடற்கரைக்கு வந்து கடலோரமாகவே சென்ற சிறிய தார்ச்சாலையில் கடற்காற்று நீர்ப்பிசிறுகளுடன் மூச்சடைக்கும்படி முகத்தில் அறைய கீழே கீழே விழுந்துகொண்டே இருப்பதுபோல வந்துகொண்டிருந்தான்.

வலப்பக்கம் தென்னந்தோப்புகள், அவற்றுக்குள் சிறிய ஓடுபோட்ட வீடுகள். இடப்பக்கம் மணற்கரை சரிந்து சென்று கடல். மழைக்காலமாதலால் கடல் மங்கலான பாசிப்பச்சை நிறத்தில் அலைகொண்டபடி இருந்தது. நீரில் சேறு கலந்திருந்தமையால் நுரைவரிகள் மணலில் நெடுநேரம் தங்கியிருந்தன.

பழைய கலங்கரை விளக்கத்தை கடந்தபின் வீடே இல்லை. தோப்புகள் மட்டும்தான். ஒரு தோப்புக்குள் நுழைந்து மணலில் சக்கரம் சிக்க காலால் உந்தி உந்தி முன்னால் செலுத்தி அந்த வீட்டை வந்தடைந்தான். அது மணலில் புதைந்து சற்றே நின்றிருந்தது.

மிகப்பழைய முஸ்லீம் தரவாட்டு வீடு. “இது சமீர் இக்காவுடைய வீடு. தேங்காய் போட்டு வைக்கிறார். ஆனால் பெரிய மூன்று அறை மிச்சமிருக்கிறது. வாடகை என்று நீங்கள் என்ன கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார். என்ன, இங்கிருந்து பஸ் ஸ்டாப்புக்கு நான்கு கிலோமீட்டர் நடக்கவேண்டும். உங்களுக்கு பைக் ஓட்டத்தெரியாது இல்லையா?”.

“ஷாபி, இந்த வீடு ஏன் மூழ்கிக்கொண்டிருக்கிறது?”

“மூழ்குகிறதா? என்ன சொல்கிறீர்கள்? இது கடற்கரை. இங்கே காற்றில் மணல் வந்துகொண்டே இருக்கும். ஆடிமாசத்தில் மணல்புயல் போலவே காற்று வீ சும். பழைய வீடுகள் எல்லாம் புதைந்துதான் இருக்கும்.”

வீட்டின் தரைத்தளம் வெளியே இருந்த மணல்நிலத்தைவிட அரையடி பள்ளத்தில் இருந்தது. கதவைத் திறந்தபோது உள்ளே திரைகட்டி விட்டதுபோல இருட்டு.

“இங்கே பழைய முஸ்லீம் வீடுகளில் ஜன்னல்கள் இருக்காது. இருந்தாலும் திறந்து வைக்கமுடியாது. கடல்காற்றில் உப்பு வந்து உள்ளே படிந்து உருகி வழியும்” என்றான் ஷாஃபி “சொன்னேனே, இங்கே நீங்கள் வாழமுடியாது”.

அவன் அதைப்பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இருட்டு அவனை பயமுறுத்தியது. பட்டப்பகலில் வீட்டுக்குள் அத்தனை இருட்டு. அது வெளியே நிறைந்திருந்த ஒளியைப் பார்த்தபின் உள்ளே பார்ப்பதனாலாக இருக்கலாம்.

கடல் அங்கிருந்து மிக அருகே இருந்தது. வெண்ணிற இறகுவிசிறி போல வளைந்து மண்ணுக்குள் வந்து கொந்தளித்தது. “இது உள்கடல்… நன்றாக அலையடிக்கும்” என்று ஷாஃபி சொன்னான். குடாவை அங்கே உள்கடல் என்கிறார்கள். திண்ணையில் அமர்ந்தால் அந்த விசிறிக்கடலை பார்க்கமுடியும்.

“இந்த திண்ணையில் இருந்தால் நீங்கள் கடலைப் பார்க்கமுடியும். கவிதை எழுதலாம்” என்றான் ஷாஃபி.

கடலின் ஒளி தென்னை மரங்களின் தடிகளிலெல்லாம் பாதிவளைவை மிளிர்வுகொண்டு அலையடிக்கச் செய்தது. தென்னையின் ஓலைகளில் ஒளியலைகள் நிறைந்திருந்தன. காற்றில் தென்னைகள் ஓலைபறக்க சுழன்று ஆடி அமைந்து மீண்டும் அசைவுகொண்டன.

அவன் பதற்றம் கொண்டான். அங்கே இருக்கமுடியாது என்று தோன்றியது. பல்லாயிரம் மரங்கள் பதைத்துப் பதறி நிலையழிந்து ஆடிக்கொந்தளிக்கும் ஒரு நிலத்தில் தன்னந்தனியனாக வாழ்வது. அப்பால் நிலையில்லா கடல். அங்கே நிலமும்கூட நிலையற்றதே. பார்த்திருக்கவே மணலில் அலைகள் எழுந்து வளைந்தன.

“இந்த இடம் வேண்டாம்”. அதை அவன் சொல்லவில்லை. அவன் சொல்பவை பெரும்பாலும் ஒலியாக ஆவதில்லை. அவன் உதடுகள் எப்போதும் உலர்ந்து ஒட்டியே இருந்தன.

அவன் இருட்டுக்குள் நுழைந்தான். மிகப்பெரிய கோழி ஒன்றின் இறகுச்சூட்டுக்குள் சென்றதுபோல. அந்த கட்டிலில் அமர்ந்தான். இருட்டு மென்மையாக வெம்மையாக அவனைச் சூழ்ந்து அணைத்துக்கொண்டது. அவனுடைய பதற்றம் குறைந்தது. தசைகள் மெல்ல மெல்ல எளிதாயின. கைகால்கள் தளர்ந்தன.

அவன் அதில் படுத்தான். சிறிய தூக்கம் ஒன்று வந்தது. தன் குறட்டையை தானே கேட்டு விழித்துக்கொண்டான்.

ஷாஃபி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். “விளக்கு போட்டுக்கொள்ளவேண்டும். நல்லவேளையாக இப்போது மின்விளக்கு இருக்கிறது”

அவன் அந்த வீடு போதும் என்று ஷாஃபியிடம் சொன்னான். ஷாஃபி வியந்து “பிடித்திருந்தால் ஒருமாதம் இருங்கள்” என்றான்.

“இல்லை, பரவாயில்லை” என்றான்.

ஷாஃபி மீண்டும் “ஒருமாதம் பார்க்கலாம்” என்றான்.

“ஆமாம்” என்றான்.

அன்று விடைபெறும்போது ஷாஃபி “மாஷே, தப்பாக ஒன்றும் செய்துவிடாதீர்கள்” என்றான்.

அவன் சிரித்து “இல்லை” என்றான். “நல்ல திண்ணை… இங்கே படுத்தால் நல்ல காற்றுவரும். கடலை எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பார்க்கலாம்” என்றான்.

முற்றத்துக்கு நேர்முன்னால் தென்னை மரங்கள் இல்லை. மண் சரிந்து இறங்கி கடலை அடைந்தது. தொலைதூரம் வரை கடல். விழிதொடும் எல்லைவரை. தொடுவானத்தை பார்க்கமுடிந்தது.

ஆனால் அவன் ஒருமுறைகூட அந்த திண்ணையில் அமர்ந்ததில்லை. முகப்புவாசலை திறப்பதே இல்லை. கொல்லைப்பக்கம் வழியாகவே வந்துசென்றுகொண்டிருந்தான்.

முகப்புக் கதவு பெரியது. சித்திரவேலைப்பாடுகள் கொண்டது. ஆனால் சரியாக பொருந்தாமல் கோடுபோல உள்ளே வெளிச்சத்தை வீழ்த்திக்கொண்டிருக்கும். ஒரு கூர்மையான வாள் போல மின்னி அது முன்னறையை இரண்டாகப் பிளக்கும்.

ஒருமுறை அவ்வழியாகச் சென்றபோது அந்தக் கூர்வாள் அவனை வெட்டிப்பிளந்தது. அவனுடைய ஒருபாதி அப்பால் நின்று ஒற்றைக்கையை வீசி அலறித் தவித்தது. இப்பால் நின்று அவன் கூவினான். கைநீட்டி தவித்தான். பின்னர் பாய்ந்து சென்று அந்தக்கதவை ஓங்கி அறைந்து மூடினான். ஒரு பாதி இப்பால் தாவி வந்தது. அவர்கள் அணைத்துக் கொண்டனர். கட்டி இறுக்கி நடுங்கிக்கொண்டு அழுதனர். பின்னர் பெருமூச்சுடன் புன்னகை செய்தனர்.

ஆனால் அவனே வேண்டுமென்றே அங்கே சென்று நின்றிருக்கிறான். மரமறுக்கும் வாள் என ஓடிக்கொண்டிருக்கும் அந்த கூரிய பட்டையை தன் உடலின் நடுவே வாங்கி தன்னை இரு துண்டுகளாக நெடுக்குவாட்டில் போழ்ந்து கொண்டிருக்கிறான். இரு துண்டுகளாக விழுந்து துடித்து குருதி வார்த்திருக்கிறான். ஒருபாதியை பற்ற வரும் மறுபாதியை கையாலும் காலாலும் மிதித்தும் உந்தியும் தள்ளியிருக்கிறான்.

பின்னர் கனமான சாக்குப்போர்வையால் அந்தக் கதவிடுக்கை மூடினான். அறையை முற்றிருளாக ஆக்கினான். அந்தக் கதவில் ஒரு சாவித்துளை கண்விழி போல திறந்திருக்கும். அதை அவன் மூடவில்லை. அந்த கண்ணை மூடும்போது அறைக்குள் ஒருவகையான உருவில்லாத மூர்க்கம் ஒன்று குடியேறுவதாக உணர்வான். அதன் வழியாக ஒளிரும் வெள்ளிக்கம்பி போல ஒளி நீண்டு எதிர்ச்சுவரில் விழுந்து கிடக்கும். சுவரில் இன்னொரு கண் திறந்ததுபோல.

அங்கு வந்தபின் ஒருநாள் பின்மாலைப் பொழுதில் முகப்பறைக்குள் சென்றபோது அச்சுவரில் மெல்லிய நிழல்கள் ஆடுவதைக் கண்டான். அவை எவற்றின் நிழல்கள் என்று புரியவில்லை. அறைக்குள் எந்த பொருளும் இல்லை. கொடிகளில் துணிகள் அசைவதன் நிழல்போலிருந்தது.

பின்னர் கண்டுகொண்டான், அவை வெளியே நின்றிருந்த தென்னை மரங்களின் தலைகீழ் நிழல்கள். சூரிய ஒளி கடலில் இருந்து எழுந்து எப்படியோ சாய்வாக விழுந்திருந்தமையால் தென்னைமரங்களின் நிழலுருவங்கள் சுவரில் விரிந்திருந்தன. அவை ஏன் தலைகீழாக விழுந்தன? அதன்பின்னரே அவன் இளமையில் படித்த ஊசித்துளைக் காமிராவின் நுட்பம் பற்றி எண்ணிக் கொண்டான்.

அங்கே அமர்ந்து வெளியே அலையடிக்கும் தென்னை மரங்களை பார்த்தான். அவை வானிலிருந்து தோரணம்போல அசைந்தாடின. சட்டென்று அவன் தன் உடல் விதிர்ப்புற, தலைகீழாக நடந்துசென்ற ஒரு பசுமாட்டைக் கண்டான். அது சுவர் மூலையில் உருகி இழுபட்டு மறைந்தது.

கட்டிலின் மேலிருந்து இறங்குவது அவனுக்கு கடினம். வெளியே வெயில் பொழியும் மதியத்தில்கூட அவன் மின்விளக்கைப் போட்டுக்கொண்டு படித்துக் கொண்டிருப்பான். பெரிய ரொட்டி அடுக்கை வாங்கிக் கொண்டு வைத்திருப்பான். குடிக்க நீர் ஒரு புட்டியில். ரொட்டியும் நீரும் ஓரிருவாய். சிறுநீர் அப்படியே கட்டிலிலேயே வெளியேறும். பல நாட்களுக்கு ஒருமுறைதான் கழிப்பறை. எழவேண்டியதே இல்லை. எழுவதைப் பற்றி உள்ளம் எண்ணுவதில்லை, எண்ணினாலும் அவ்வெண்ணம் உடலை வந்தடைவதில்லை.

உடல்நலிந்து, எலும்புகள் புடைத்து, தாடியும் தலைமயிரும் வளர்ந்து அவன் உடல் அவனறியாத எவனையோ மேலே எடுத்து போர்த்திக் கொண்டிருக்கிறது என்று கண்டான். தன்னை கண்ணாடிகளில் பார்க்கையில் திடுக்கிட்டான். அவனை வெறுத்து முகம் சுளித்தான். அதே வெறுப்பை திரும்பப் பெற்றான்.

ஆனால் உடல் நலிவது நன்று. உடலுடன் நலிகிறது பிரக்ஞை. தன்னுணர்வு கரையக் கரைய விடுதலையை அடைந்தான். அவன் மேல் ஏற்றி வைக்கப்பட்ட எடைகள் அகல்கின்றன. பழைய துணிக்கிழிசல் போல அவன் உடல் கட்டிலில் படிந்திருக்கிறது. எதற்கும் எந்த எதிர்ப்பையும் அவன் உடலோ உள்ளமோ தெரிவிப்பதில்லை.

அவன் மேல் எலிகளின் எச்சங்கள் உதிர்கின்றன. எலிகளே சிலசமயம் ஏறி ஓடிச்செல்கின்றன. உளுத்து உதிரும் அந்த வீட்டுக்குள் குடலில் உணவுபோல அவன் செரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவன் வாசிப்பவை ஒரு சொல்கூடாமல் குறையாமல் உள்ளே செல்கின்றன. மலைப்பாறைமேல் அருவிபோல புத்தகங்களின் சொற்கள் அவன்மேல் பொழிந்துகொண்டே இருக்கின்றன.

அவனை அங்கே பிடித்துவைக்கும் எதுவுமில்லை. ஆகவே அங்கிருந்து முற்றாக மறைந்துவிடுகிறான். தொல்காலங்களில் அறியா நிலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

எப்போதாவது அங்கிருந்து திரும்பி நோக்குகிறான். அந்தக் கட்டிலில் கிடக்கும் வெளிறிய, பொடிமூடிய, மெலிந்த உடலை கண்டு திகைக்கிறான். பின் அதனுள் இருந்து வெளிவந்து உலகைப் பார்க்கிறான். எண்ணங்கள் அந்த உடலில் வந்தமைய நெடுநேரமாகும். அவ்விழிகள் நோக்குவதை எண்ணங்களுக்குள் செலுத்த மேலும் பிந்தும்.

வெறுமே நோக்கிக்கொண்டு கிடக்கிறான். மச்சு அலையடிக்கும். சுவர்கள் துணிப்படுதாக்களென நெளியும். இருட்டில் மெல்லிய அதிர்வின் அலைகள். அத்தனை ஒலிகளையும் வாங்கிக்கொள்கிறது அந்த இருள். இருளுக்குள் கசிந்துவரும் ஒளியில் வெளியுலகின் வடிவங்கள் கரைந்திருக்கின்றன.

அவன் அலுவலகம் செல்வதை விட்டுவிட்டான். நாட்கணக்கில் மாதக்கணக்கில். அவனை எவரும் தேடவில்லை. அங்கே அவன் சென்றால்தான் வேலை, வேலைக்கு ஏற்ப ஊதியம். அதற்குப் போட்டியும் மிகுதி.

அந்த வீடு மண்ணுக்குள் சென்றுகொண்டிருந்தது. ஒருவேளை அது அப்படியே மண்ணுக்குள் சென்றுவிடும். ஆழத்தில் புதைந்து இருக்கும். அவன் அதற்குள் விதைக்குள் பருப்புபோல இருப்பான்.

விழித்துக்கொண்டு எழுந்தபோது அவன் உடலை நிலம் வலப்பக்கமாக தள்ளியது. அவன் தோள் சுவர்மேல் அறைந்தது. விழுந்து சுவரைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றான். வாய் கசந்தது. கைகால்களில் ஓய்ச்சலும் கண்களில் எரிச்சலும் இருந்தது.

அவன் சாப்பிட்டு மூன்றுநான்கு நாட்களிருக்கும். வாசித்துக்கொண்டிருந்தான். பலநாட்களாக. ஆயிரம் இரண்டாயிரம் பக்கங்கள் இருக்கும். எங்கோ பனிபெய்யும் அயல்நிலம். அறியா மானுடர், அறிந்த கொந்தளிப்புகள்.

அவன் அடுப்பைப் பற்றவைத்தான். கையிலிருந்த நூலின் தாள்களையே கவனமில்லாமல் பிய்த்து தீக்குச்சிச் சுடரில் பற்றவைத்து அடுப்பில் இட்டான். விறகு குளிர்ந்திருந்தது. ஆகவே புத்தகத்தையே உள்ளே வைத்தான். நீலமாக சுருண்டு சுருண்டு எரிந்தன அதன் தாள்கள். அலுமினிய கலத்தை வைத்து தண்ணீர் ஊற்றினான்.

அங்கே எப்போதுமே சீனியும் தேயிலைப் பொடியும் வைத்திருப்பான். ஒரு புட்டியில் அரிசிப்பொடி இருந்தது. கொதிக்கும் நீரில் அரிசிப்பொடியை அள்ளி போட்டான். சீனியும் கூடவே போட்டு கிண்டி களியாக இறக்கி வைத்தான். அதை அள்ளிக் குடித்தபோது உடல் ஆவலுடன் பெற்றுக்கொண்டது.

சீனி அவன் ரத்தம் வழியாகச் சென்று உடலில் எல்லா தசைகளையும் அடைந்தது. அவை ஆறுதல் கொண்டன. நெகிழ்ந்து இயல்புநிலை அடைந்தன. அவன் உள்ளமும் மெல்லிய இனிமையை உணர்ந்தது. இருக்கிறேன் என்னும் இனிமை.

தண்ணீர் குடித்துவிட்டு வெளியே சென்றான். பின்மதியம் ஆகியிருக்கும். தென்னந்தோப்பு முழுக்க வலைபோல நிழல் பரவி காற்றில் இழுபட்டு அசைந்து கொண்டிருந்தது. அவன் அதனூடாக இன்னொரு நிழலாக கலந்து தோன்றி மறைந்து தோன்றி சென்றுகொண்டிருந்தான்.

சாலையில் எவருமில்லை. அந்தப்பாதையின் வழியாகத்தான் அவன் அலுவலகம் செல்லவேண்டும். மிகத்தொலைவில் காயிக்கரை அகமது இக்கா சைக்கிளில் டீயுடன் செல்வது தெரிந்தது. கடற்கரையில் வலைசீரமைக்கும் மீனவர்களுக்கு விற்பதற்காக. வலைக்குல்லா, கைலி, கெந்திக்கெந்தி எடுத்துவைக்கும் ஊனமுற்ற கால்.

இக்கா சைக்கிளை நிறுத்தி மணியோசையை எழுப்ப, சிலர் டீ வாங்கி குடிக்கத் தொடங்கினர். அவன் அருகே சென்றான். இக்கா பெரிய பற்களைக் காட்டிச் சிரித்து “டீ வேணுமா மகனே?” என்றார்.

“ஆமாம்” என்றான்.

டீயை குடித்துவிட்டு பைசாவை கொடுத்தான்.

இக்கா அவனிடம் “என் மகனே, நீ ஏன் இப்படி இருக்கிறாய்? நீ ஏன் தலைமுடியை வெட்டி ஷேவ் செய்துகொள்வதில்லை? குளித்து நல்ல ஆடை அணிந்தால் நீ மிகவும் அழகாக இருப்பாய்..” என்றார்.

எப்போதும்போல அவன் தோளில் கையை வைத்து “உனக்கு என்ன பிரச்சினை? இக்காவிடம் சொல். உனக்காக நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்” என்றார்.

அவன் கண்கள் கலங்கின. மெய்யாகவே தன் இறுதிப்பொருளையும் எடுத்துத் தந்துவிடக்கூடியவர் அவர்.

“சொல்லு மகனே, உனக்கு என்ன செய்கிறது?”

“ஒன்றுமில்லை இக்கா”

“மனிதர்களை மகிழ்ச்சியாக இருக்கத்தான் அல்லா ஆணையிட்டிருக்கிறார் மகனே”

அவன் புன்னகைத்து “முயற்சி செய்கிறான் இக்கா” என்றான்.

“நீ ஏன் தனியாக இருக்கிறாய்? நீ ஜனங்களுடன் கலந்து இரு. கூடிவாழுங்கள் என்றுதான் ரசூல் சொல்கிறார்.”

அவன் புன்னகைத்தான். இக்காவை அவன் விரும்பினான், ஆனால் அவர் அருகே நின்றிருக்கவோ பேசவோ அவனால் முடிவதில்லை. கடலைப் பார்ப்பதுபோல விலகிச் சென்றான்.

அவனுக்குப்பின்னால் இக்கா சொன்னார்.“போனதெல்லாம் அல்லாவுடைய கணக்கில் எழுதிவிடு.”

கடலை பார்த்துக்கொண்டு நின்றான். கடலைப்பார்த்து எத்தனை காலமாகிவிட்டது என்று எண்ணிக்கொண்டான். அவன் வீட்டு முகப்புக்கு வருவதே இல்லை. அவ்வழியேதான் அலுவலகம் செல்வான், திரும்பி கடலை பார்ப்பதில்லை.

கடலின் ஒளி கண்களை கூசி கலங்கி வழியச்செய்தது. அது நீராலான கடல் அல்ல, ஒளியாலானது. உருகி வெம்மைகொண்டு நிறைந்து ததும்பி அலைகொண்டு கரையை அறையும் வெண்ணிறமான தழல்.

கண்களை மூடிக்கொண்டு கண்ணீரை ஒற்றினான். மீண்டும் கண்களை தூக்கி கடலை பார்த்தான். உடல் பற்றி எரியத் தொடங்குவது போலிருந்தது. திரும்பி கடற்கரை ஓரமாக நடந்தான். கடலின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. தென்னைமரங்கள் கூத்தாட்டமிட்டன.

அவன் மிக அருகே கடலின் குரலைக் கேட்டான். ஒரு வார்த்தை. திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். நாக்குகளை வளைத்து வளைத்து கடல் அந்தச் சொல்லை கூவிக்கொண்டிருந்தது.

அவன் கைகள் பதறி அலைபாய விழப்போகிறவன் போல அங்கே நின்றான். “ஆ!ஆ!ஆ!” என்று கூச்சலிட்டான். திரும்பி ஓடினான். அவனுக்குப்பின்னால் கடலின் அந்த வார்த்தை முழக்கமிட்டது.

தென்னந்தோப்புக்குள் நுழைந்து விழுந்தும் எழுந்தும் ஓடினான். மணலில் அவன் காலடிகள் ஆழப்பதித்தன. மூச்சிரைக்க தன் வீட்டை அடைந்தான். காற்று மணலை அள்ளி சுவரில் அறைந்து வீசிக்கொண்டிருந்தது. புறத்திண்னையில் ஏறி நின்று திரும்பிப் பார்த்தான். அவனுடைய காலடிச்சுவடுகள் முழுமையாக அழிந்திருந்தன.

அவன் உள்ளே நுழைந்து கதவை மூடிக்கொண்டான். இருட்டு சூழ்ந்து கொண்டபோது ஆறுதலாகப் பெருமூச்சு விட்டான். மிகமெல்ல நிதானமடைந்து மூச்சுகளாக விட்டு ஓய்ந்தான்.

பின்னர் கட்டிலில் சென்று அமர்ந்தான். புத்தகத்தை எடுத்துக்கொண்டு விரித்து கையில் வைத்தபடி இருட்டிலேயே அமர்ந்திருந்தான். மூடிவிட்டு எழுந்து மெல்ல வெளியே சென்றான். முகப்பறையின் கதவில் அந்த கண் சிறிய வெண்ணிற விளக்குக்குமிழ் போல ஒளிவிட்டது. அவன் திரும்பி மறுசுவரைப் பார்த்தான். அங்கே அலையடிக்கும் தலைகீழ்க்கடலைக் கண்டு அதைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

***

முந்தைய கட்டுரைஅந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9