அன்பு எழுத்தாளருக்கு வணக்கம்,
தாங்கள் கடந்த வருடம் சென்று வந்த ஜப்பான் பயணக் கட்டுரைகளை படித்தேன். ஜப்பான், ஒரு கீற்றோவியம் – 15 வாழ்வின் ஒரு முக்கியமான அம்சத்தைப் பற்றி மிக ஆழமான பார்வையுடன் அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
ஜப்பானியர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் உணவு, இருப்பிடம், கட்டுமானம், இசை, தோற்றம் போன்றவற்றில் எவ்வாறு அமெரிக்கர்களைப் போல மாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதில் தொடங்கி அவர்களது உளச்சோர்வு, அவர்கள் வாழ்க்கை முறை, நுகர்வு அதன் விளைவாக உருவாகும் தன்னலம் மற்றும் குடும்பச் சிதைவு என ஓர் தொடர் முடிச்சுகளுடன் கட்டுரை செல்கிறது.
அடுத்து தாங்கள் ஒரு கருத்தை பிறிதொரு பார்வையில் எடுத்துரைக்கிறீர்கள். “மனிதன் உழைப்பிற்காக படைக்கப்பட்டவன் அல்ல. குறைவாக உழைக்கும் மக்கள் தான் உலகெங்கும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” உழைப்பை தன் இயல்பாகக் கொண்ட ஜப்பானியர்கள் அந்த உழைப்பின் பலனாக உளச்சோர்வு அடைகிறார்கள். “ஒருவரின் உழைப்பும், தனிப்பட்ட பொழுதும் இணையாக இருக்க வேண்டும். அந்த தனிப்பட்ட பொழுதுகளில் மட்டுமே ஆன்மீகத் தேடல் நிகழ முடியும். மனித வாழ்வின் உருவாகும் மாபெரும் வெற்றிடங்களை நிரப்புவது இதுவே.” ஓர் தரிசனம்.
கட்டுரையின் முடிவில் தாங்கள், நவீன தொழில்நுட்பம் ஓய்வைப் பெருக்கி வாழ்க்கையை இனிமை ஆக்குவதற்கு பதில் , அது மனிதனை மேலும் உழைப்பில் இறுக்கி உளச்சோர்வுக்கே கொண்டு செல்கிறது. ஜப்பான் அந்த நிலையில் உள்ளதையும், இந்தியா அதை நோக்கி சென்று கொண்டிருப்பதையும் எடுத்து உரைத்துள்ளீர்கள். இது இன்று நம் முன் உள்ள காட்சி. ஒரு தனியார் பணியில் இருக்கும் இடைநிலை ஊழியன் உட்பட தன் வேலை நேரம் முடிந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் தன் பணி சார்ந்த தகவல் பரிமாற்றங்களுடன் அவன் அன்றாட தனிமைப் பொழுதுகள் கடக்கின்றன. நிறுவனத்தின் மேல் மட்டத்தில் இருக்கும் மேலாளர் தொடங்கி கடை நிலை ஊழியர் வரை தங்களுடைய பணி ஒன்று மட்டுமே இந்த வாழ்வின் குறிக்கோள் என அவர்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. முன்பு டார்கெட் என்பது மேல் மட்ட ஊழியர்கள் வார்த்தையாக இருந்தது. இன்று கடை நிலை ஊழியர் வரை அதன் பரபரப்பை இந்த கட்டமைப்பு எடுத்துச் சென்றுள்ளது. இதன் காரணமாய் தனிப்பொழுது என்பது மொபைலில் விடியோக்கள் பார்ப்பதும், டிக் டாக்கில் லைக்ஸ் போடுவதும், வாட்ஸ் ஆப் இல் forward மெஸ்சேஜ்களை forward செய்வதுமாய் பொழுது கழிகிறது. இந்த வேலை கட்டமைப்பு கொடுக்கும் பாதிப்பு அடுத்த தலைமுறையையும் பாதிக்கிறது. அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை. “இதுக்கு எப்படி நம்ம வேலை காரணம், அவன் தற்கொலை பண்ணினா அவன் மடையன்” என்று சொல்பவர்கள் பலர். பள்ளி கல்வி, கல்லூரி கல்வி, முடித்தவுடன் வேலை, என்ற நிரந்தர அமைப்புகள் மூலம் மறைமுகமாக பிள்ளைகளை ஒரு போருக்கு தயார் செய்கிறோம். வாழ்க்கை ஒரு தேர்வுடன் முடிவது அல்ல. வேலை வாழ்வின் ஓர் பகுதி என்று சொல்ல வேண்டிய கடமை உள்ளவர்களே, தாங்கள் சொல்லிய இந்த வேலை கட்டமைப்பு எனும் மாய சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மிக திறம்பட தங்கள் எழுத்துக்கள் சொல்கிறது.
என் அளவில் இக்கட்டுரை மிக முக்கியமானது. அதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் சமூகத்தில் விவாதிக்கப்பட வேண்டும், அதன் காரணமாக வேலை , தனிப் பொழுது, வாழ்க்கை பற்றிய ஒரு திறப்பு உருவாக வேண்டும்.
தங்கள் அனுபவங்கள் மூலம் ஜப்பானை அணுக்கமாக்கியமைக்கு நன்றி.
பிரசன்ன குமார் N