ஏணிப்படிகள்- கடிதம்.

அன்பு எழுத்தாளருக்கு வணக்கம்,

தங்களால் பல்வேறு மொழிகளில் முன்னோடிகள் கொடுத்துள்ள வாழ்வின் தரிசனங்களை காட்டும் நாவல்களை வாசித்து வருகிறேன். ஆரோக்கிய நிகேதனம் தொடங்கி மண்ணும் மனிதரும், அக்னி நதி, இப்பொழுது  ஏணிப்படிகள் அதன் வரிசையில். ஏணிப்படிகள் பற்றிய ஒரு சிறு முயற்சி வார்த்தை வடிவில். தங்களுடைய வார்த்தைகள் இந்த கட்டுரையில்  நான் பயன்படுத்தி இருந்தால் அது என்னுள் நீங்கள் ஏற்படுத்திய பாதிப்பு.

இந்த மொழிபெயர்ப்பு நூல்களின் மூலம் பரந்துபட்ட வாழ்வனுபவங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

பிரசன்ன குமார் N

ஏணிப்படிகள்

பிரசன்னகுமார்

திரு. தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய இந்நூலை  திரு.பாலன் மொழி பெயர்த்து உள்ளார்.

கேசவப்பிள்ளை என்கிற  குமாஸ்தா, தலைமைச் செயலாளராக உயர்கிறார். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பதவி உயர்விற்காகவும் அவர் செய்வது என்ன. அதன் காரணமாய் அவர் இழந்ததும், பெற்றதும், அவருடைய வாழ்வின் முக்கியமான இரண்டு பெண்கள் இவர் மூலமாய் அடையும் மன சிக்கல்களையும் ஆழமாக அலுசுகிறது இந்நாவல்.

கேசவப்பிள்ளை, அவர் மனைவி கர்த்தியாயினி காதலி தங்கம்மா மூவரும் மைய கதாபாத்திரங்கள்.

இவர்கள் சார்ந்து வரும் கிட்டு மாமா, கேசவ பிள்ளையின் தந்தை, தாய், தங்கம்மா வின் தந்தை சேகரன், மாத்யூ, சங்கர பிள்ளை, கிருஷ்ணன், சாவித்ரி. ஒவ்வொரு கதாபாத்திரமும் அதற்கான காரணமும் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது.

கேசவப்பிள்ளை 15 ரூபாய் சம்பளத்தில்  ஒரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக சேர்கிறார். தங்கம்மாவின் உதவியால் அவர் தந்தை மூலம் அவருக்கு பதவி உயர்வு கிடைக்கின்றது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு தன் அடுத்த கட்டத்தில் உள்ள திவானிடம் நற்பெயர் எடுக்கிறார். காலம் செல்ல செல்ல அரசு வேலையின் தன்மை தான் வேலை செய்யும் இடத்தின் நெளிவுகள் கை கூடுகிறது. யாருக்கு எதிராக வேலை செய்தால் தன் வேலை இருப்பு நிலைப்படுமோ அதற்கு ஏற்றவாறு வேலை புரிகிறார். பலர் வேலை இழக்கின்றனர். இவர் உயர்கிறார். ஆங்கிலேய ஆட்சி மறைந்து காங்கிரஸ் ஆட்சி வருகிறது. தன்னுடைய இருப்பை காங்கிரஸ் தலைவர்களே ஆதரிக்கும் வகையில் அவர் கருத்துகள் மேலோங்குகிறது. கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். மன சஞ்சலங்கள்  அதிகரிக்கிறது. மனைவி சொல்வது போல் வேலையை விட்டு விடலாமா என்று தோன்றுகிறது. இல்லை நான் வேலை காலத்தை பூர்த்தி செய்து முடிப்பேன் என்கிறது அவரின் மற்றொரு குரல். முதல்வரின் அழுத்தத்தால் வேளையில் இருந்து ராஜினாமா செய்கிறார்.

காதலியான தங்கம்மா , கேசவ பிள்ளையின் மீது உள்ள அள்ள முடியாத காதலால் தவிக்கிறாள். அதற்கான பொருளை தூண்டி விட்டு அதனை தொடர முடியாமல் இருக்கிறார் குமாஸ்தா கேசவப்பிள்ளை. ஒரு கட்டத்தில் அவளுக்கு, அவரின் அணைப்பு அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் அவரால் செயல் பட முடிய வில்லை என தீயும் போது எட்டி காலால்  உதைக்கிறாள். போனவர் திரும்பவில்லை. அவளுக்கும் அங்கு உள்ள மேல் அதிகாரிஇன் அரவணைப்பு கிடைக்கிறது. ஆனால் நிலைக்கவில்லை. மறுபடியும்  தங்கம்மா விற்கு தான் கடன் பட்டவன் என்ற உந்துதலால் அகளுக்காக ஒரு பெரிய வீட்டை கட்டி கொடுக்கிறார். அதில் தினமும் இரவுப் பொழுதை அவளுடன் களிக்கிறார். அவள் அவருக்காக காத்திருக்கிறாள். ஆனால் முன்பு இருந்ததைப் போல அல்ல. ஒரு நாள் வேறு ஒருவன் இவர் தங்கம்மாவிற்கு கட்டி கொடுத்த வீட்டில் அவளுடன் உள்ளதைப் பார்க்கிறார். அன்றில் இருந்து அந்த வீட்டுக்கு செல்வதை நிறுத்தி கொண்டார். அவள் வேலையை துறந்து  காவி உடைஅணிந்து அந்த வீட்டை ஆசிரமமாக  மாற்றுகிறாள். ஒரு கட்டத்தில் அவள் கேசவப் பிள்ளையிடம் வந்தடைகிறாள். மனம் உருகி கண்ணீர்  சொரிகிறாள். அவரின் அணைப்பு அவளை சாந்தப்படுத்தியது. அவர் காணாத அனுபவம் அவளின் மூலம் அடைகிறார்.  குமரியில் ஒன்றாகி, பீர் மேடிலும் ஒன்றாகிறார்கள். அங்கே கேசவ பிள்ளையின் அழுத்தமான பதிலால் அவரை விட்டு பிரிகிறாள். ஒரிரு மாதம் கழித்து அவர் மூலம் கரு உருவாகி உள்ளது தெரிகிறது. வாழ்வின் பலனை அடைகிறாள். மட்டற்ற சந்தோஷம் அவலினுள். கேசவப்பிள்ளைக்கு இந்த விஷயம் தெரிய கூடாது என்கிறாள்.  பிரசவத்திற்கு முன் குழந்தையை அவரிடம் சேர்க்கும் படி சொல்லிவிட்டு பிரசவத்தில் இறந்து விடுகிறாள்.

ஒரு பட்டிக்காட்டு பெண்ணாக தாலி கட்டிய அன்றே  அவளை விட்டு வெளியூர் வேலைக்கு செல்லும் கேசவப் பிள்ளையின் மனைவியாக கார்த்தியாயினி. உலக நடப்புகள் எதுவும் அறியாத, யாரிடமும் சிரித்து பேசாத, சமையலறை மட்டுமே உலகம் என்று வாழும் கர்த்தியாயினி. கணவன் வீட்டுக்கு வரும் போதும் அவன் தன்னிடம் பேசுவாரா எனும் ஏக்கம் அனைத்தையும் மனதில் பூட்டி வைத்திருப்பவள், அடுத்த வீட்டு பெண்கள் சொல்வது போல் தன் கணவன் திருவனந்தபுரத்தில் யாரோ ஒரு பெண்ணுடன் வாழ்கிறார் என்று சொல்லும் போது உடைகிறாள். அவளின் உற்ற தோழியான நானி குட்டி சொல்லும் போது கூட அவள் மனம் சமாதானம் ஆகவில்லை.  தங்கம்மாவிடமிருந்து ஏற்படும் விளக்கம் காரணமாக கர்த்தியாயினிக்கு குழந்தை பிறக்கிறது. பெயர் விஜயா. கால மாற்றத்தில்  கேசவப்பிள்ளை மனைவி மற்றும் குழந்தையை திருவனந்தபுரத்திற்கே அழைத்து வருகிறார். கர்த்தியாயினி  அவள் கணவன்  மூலமே அவரின் கடந்த கால வாழ்க்கையை அறிகிறாள். இனி தங்கம்மா வாழ்வில் நுழைய கூடாது எனும் ஆணையுடன் கணவனுடன் மகிழ்ச்சி தொடங்குகிறது. ஆனால் அவள் மனதில் போராட்டம் ஓயவில்லை. மறுபடியும் தங்கம்மா கேசவப்பிள்ளை ஏற்பட்ட உறவினால் கேசவப்பிள்ளையினால் கார்த்தியாயினியுடன் பழைய உறவை தொடர முடியவில்லை.  கார்த்தியாயினி அந்த வேறுபாட்டை உணறுகிறாள். கணவன் கேட்கும் பொழுது அந்த வெறுப்பை கொட்டுகிறாள். கடைசியாக கணவன் அவளிடம் நடந்தவைகளை சொல்லி அவளிடம் பாவ மன்னிப்பு பெற்று ஒரு நிம்மதியான வாழ்வை  அடையலாம் என்று சொல்ல தொடங்கும் போது தங்கம்மாவின் குழந்தை வீட்டிற்கு வருகிறது. விஜயா அதனை கையில் ஏந்தி செல்கிறாள். அவளை தொடர்ந்து கார்த்தியாயினி  செல்கிறாள். கடைசியாக அந்த வீட்டை பிரிய மனமில்லாமல் கேசவப்பிள்ளை வெளியே செல்கிறார். நாவல் முடிவடைகிறது.

நாவல் நடை பெறும் கால கட்டம் சுதந்திர இந்தியாவிற்கு முன்பு, வெள்ளையர்கள் வெளியேறும் காலகட்டம், காங்கிரஸ் ஆட்சி அடுத்து கம்யூனிஸ்ட் ஆட்சி.

கேசவப்பிள்ளையின் படிநிலை வளர்ச்சி, அரசியல் தொலைநோக்கு பார்வை, அதிகாரத்தை நிலைப்படுத்துதல், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் , கார்த்தியாயினி , தங்கம்மா மீது கொண்டுள்ள அன்பு மற்றும் அவர்களின் உணர்ச்சிகள். கேரள காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப கால நிலை ஆகியவற்றை பேசுகிறது.

நாவலின் மைய கதாபாத்திரங்களான கேசவப்பிள்ளை, கர்த்தியாயினி, தங்கம்மா மூவரும் இரண்டு விதமான பிம்பங்கள் ஆசிரியரால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கேசவப்பிள்ளை  ஒரு பெரிய மாளிகை வாசலில் ஒரு குமாஸ்தா வேலைக்காக உயர் அதிகாரியின்  பார்வை பட வேண்டிக் காத்து கிடக்கிறார். அவருக்கு எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லை. வாழ்வின் போக்கு , லட்சியம் எதைப்பற்றியும். தங்கம்மாவுடன் பழகும் பொழுது, தன் திருமணத்தின் பொழுது தங்கம்மா தந்தையை சந்திக்கும் பொழுது என எந்த ஒரு இடத்திலும் அவரால் நிலையான முடிவு எடுக்க வில்லை. ஆனால், தன் முதல் பணி உயர்வு ஏற்பட்டவுடன் அவருள் மாறுதல் தொடங்குகிறது. வேலையின் சாத்தியங்களை, நுண்மங்களை அறிகிறார். அதனை பழகுகிறார். ஒரு கட்டத்தில் அதில் நிபுணர் ஆகிறார். தன் வாழ்வில் எதிர்பார்க்காத தலைமை காரியதரிசி ஆகிறார். நாவலின் ஒரு இடத்தில் காங்கிரஸ் அமைச்சர் மாத்யூ சொல்கிறார், வேலையை விட்டு விட்டு காங்கிரஸை வழி நடத்தி கேரளாவின் முதல்வர் ஆகி விடவும் என்கிறார். உள்ளுக்குள் ஆசை பற்றிக் கொள்கிறது. மனைவியை எழுப்பி அனைத்து உன் கணவன் முதல்வராக போகிறேன் என்று கூறுகிறார்.

ஒரு குமாஸ்தா வேலைக்கு வந்தவர் முதல்வராக  வேண்டும் என்று ஆசை கொண்டவராக மாறுகிறார்.

ஒன்றும் தெரியாது என வாழும் கர்த்தியாயினி ஊரில் உள்ள வரை கணவரின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசியதில்லை. ஆனால் பார்க் வியூ வீட்டில் ஒரு கட்டத்தில் கணவனுக்கு அறிவுரை வழங்கும்  நிலைக்கு வருகிறாள். ஊரில் சமையலறை விட்டு வெளி வராத , எண்ணெய் பிசுக்கு கொண்ட, கரி அப்பிய முகத்துடன் இருக்கும் கார்த்தியாயினி புதிய வீட்டில் சமையல் அறையில் வாழ்ந்தாலும் கணவன் வேலை செய்யும் பொழுது அவன் உடன் இருக்கவும், அவனுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்கிறாள். அவளின் பெரிய மாறுதல். கேசவப் பிள்ளைக்கும் அவளுக்கும் உண்டான காதல், அதனை தொடர்ந்து வரும் சீண்டல்கள் அதன்  காரணமாய் அவளுக்குள் ஏற்படும் பெருமிதம்.

தங்கம்மா சக குமாஸ்தாவாக கேசவப்பிள்ளையுடன்  வேலையை தொடங்குகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவனை அவளுடன் நெருங்க வைக்கிறாள். தனக்குள் இருக்கும் தழலை அவன் மூலம் காண்கிறாள். அலுவலகத்திற்கு அரை மணி முன்பே வருகிறாள். பைல்ஸ் இருக்கும் பின்புற அடுக்கில் கேசவ பிள்ளை உடன் முத்தம் பரிமாறுகிறாள். இரவில் அவனை வீட்டுக்கு வரவழைத்து காதல் பேசுகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் காமம் அவனுள் இல்லை என தெரியும் பொழுது அவனை விட்டு வெளியேறுகிறாள். வேறொரு உறவில் அரவணைப்பு தேடுகிறாள். அதிலும் ஏமாற்றமே. மறுபடியும் கேசவப்பிள்ளை மூலம் வீடு, அந்த வீட்டில் அவருடன் இரவில் வாசம் என்று செல்கிறது. அவளின் மனம் செல்லவில்லை. புதிய இளைஞன் அவள் வாழ்வில் வருகிறான். கேசவப்பிள்ளை வெளியேறுகிறார். தாயும் வெளியேறுகிறார். அவள் எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை. காவி உடை தரித்து ஆசிரம வாழ்வில் அற்பணிக்கிறாள். ஆனால் வாழ்வில் வெறுமை பின் தொடர்கிறது. கேசவப்பிள்ளையை தேடிச் செல்கிறாள்.அவர் காலைப்பிடித்து, மனதில் இருந்து அழுகிறாள் என்பதனை புரிந்து கொள்கிறார் கேசவப்பிள்ளை. வாழ்வில் தான் கடந்து வந்த பாதை அனைத்தையும் துணிச்சலுடன் அணுகியவள் இன்று தவறை உணர்ந்து தன் உறைவிடம் கேசவப்பிள்ளை மட்டுமே என்பதை உணர்கிறாள். இருவரும் குமரியிலும், பீர் மேட்டிலும் ஒரு புது உலகில் சிருஷ்டித்தார்கள்.  கேசவப்பிள்ளையின் வாழ்வில் தன் இடம் எது எனும் அறியும் கணத்தில் உடைகிறாள். ஒரு குழந்தை மூலம் என் உறவில் ஒரு இருப்பு ஏற்படவில்லையே என்று தன்னுடைய நிலையை எண்ணி அழற்றுகிறாள். அதற்கு பதில் கிடைக்கிறது. 2 மாதம் கழித்து அவள் தாயாகிறாள். குழந்தை அவருடன் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு பிரசவத்திற்கு பிறகு இறக்கிறாள்.

மூவரின் வாழ்க்கையும், அவர்கள் எண்ண ஓட்டங்கள், லட்சியம், வாழ்க்கை ஓட்டத்தில் அவர்களின் இடம் மிக தெளிவாக ஆசிரியரலால் சொல்லப் பட்டுள்ளது. 630 பக்கங்கள் செல்லும் இந்த நாவல் சிறிது சோர்வையும் அளிக்கக்கூடியது. ஆனால் மனித வாழ்வியலை சொல்லும் பெருநாவல்களில் இது இயற்கையே. மேலும் அதுவே  நாவலினுள் நம்மை ஆழம் இழுத்துச் செல்கிறது.

மனித வாழ்வின் ஒரு பிரதிபலிப்பை சிறப்பாக காட்டும் மற்றுமொரு நாவல்

பிரசன்ன குமார் N

தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்

முந்தைய கட்டுரைவைரமுத்து மீதான கண்டனங்கள்
அடுத்த கட்டுரைஆமை,சாவி-கடிதங்கள்