வேறொரு காலம்
இனிய ஜெயம்
வேறொரு காலம் வாசித்தேன். அதன் நிலமும் பொழுதும் (லைட்டா) பொறாமையை கிளர்த்தியது. பொதுவாக கடலூர் கடற்கரை ஒர பருவசூழல் வினோதமானது. ஊரே அக்கினி நட்சத்திரம் துவங்கினால் கதறும். விதி விலக்காக கடலூர் மட்டும் அ ந முடிந்த பிறகு கதறும். ஆம் இங்கே அ ந முடிந்த பிறகே வெயில் ஆட்களை உயிருடன் உறித்து உப்பு தடவும். அக்கினி முடிந்ததும் நாலு ஊர்க்கு தாங்கும் நாய் மூத்திரம் போல ஒரு மழை, பிறகு தென் தமிழகம் நோக்கி சுழலும் காற்று இங்குள்ள காற்றின் ஈரத்தையும் கொண்டு போய் விடும்.
குக்கரில் முதல் விசில் காணும் உணவு போல ஒரு வேக்காடு. ஜூன் இறுதி வாரம் வரை நிகழும். ஒரு சோதனையாக மாடியில் என் அறை வராண்டாவில் மெழுகுதிரி துண்டு ஒன்றை நிறுத்தி வைத்தேன். நூறுக்கும் நூற்றி எட்டுக்கும் இடையே கபடி ஆடிய வெயிலில், நான்கு நாட்களில் திரி மட்டும் தரையில் ஒட்டிக் கிடந்தது. மெழுகை காணவில்லை. குழாயை திறந்தால் எம்பெருமான் அருளால் காலை ஏழு முதல் இரவு ஏழு வரை வெந்நீர் கொட்டுகிறது. நள்ளிரவில் சுவர் தரை தலையணை எல்லாம் காய்ச்சலில் தகிக்கிறது. வெளியே வந்து மொட்டை மாடியில் நின்றால், மா வாழை தென்னை எல்லாம் இலை நுனியிலும் அசைவு இன்றி என்ன செய்யப் போகிறோம் நாம் வகையறா கவிதையை படிக்க நேர்ந்தது போல ஸ்தம்பித்து நிற்கின்றன.
சூரிய கிரகணத்தின் பிறகு சூரியனையே காணவில்லை. காற்றும் இல்லை. ஊரே ஒரு பெரிய தார்பாய் கொண்டு மூடி போர்த்தியது போல புழுக்கம். இருப்பினும். இவை இனிதுதான். ஏரி குறித்து எழுதி இருந்தீர்கள். நான் பார்த்த வகையில் இப்போது ஆளும் எடப்பாடியார் அவர்களின் அரசு விவசாயத்துக்கான நீர்த்தேக்கங்கள் மீது கவனம் கொண்டு அதன் புனர் நிர்மாணத்துக்கு தொடர் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த அரசு செய்யும் சில நல்ல பணிகள் மீது ஏன் இந்த அளவு மௌனம் நிலவுகிறது என்று தெரியவில்லை. குறிப்பாக சில வருடம் முன்பு காவிரி டெல்டா ஒப்பாரி ஓங்கி எழுந்தது. அந்த எல்லை முழுக்க இக்கணம் வரை நீர் மேலாண்மை சார்ந்து அரசு நிகழ்த்தும். பணிகள் சார்ந்து ஒரே ஒரு வார்த்தை பார்க்க முடிய வில்லை. கடலூர் சுற்றி விவசாயம் சார்ந்த பல ஏரிகள் மராமத்து நடைபெற்று வருகிறது, குள்ளஞ்சாவடி அருகே முழுவதும் தூர்ந்த ஏரி ஒன்று புணர் நிர்மாணம் நடந்து வருகிறது. எல்லா அரசு பணி போல சில இடங்களில் மெத்தனம் இருக்கலாம். ஆனால் நடக்கிறது. அது முக்கியம். உங்கள் பதிவு தகுந்த வாயில் வழியே அரசு பார்வைக்கு சென்றால், பலன் கிடைக்கும் என்றே நம்புகிறேன்.
நத்தையுடன் காலை நடை செல்லும் ஜெயமோகன். நினைக்க எழுந்த சித்திரம் நன்றாகவே இருந்தது. ஜென் பௌத்தத்தில் அது ஒரு தியான முறை. ஒரு மனிதன் தன்னுணர்வுடன் செய்யும் செயல் அனைத்தையும் நத்தையின் அதே வேகத்தில் செய்வது . ட்சாய் மிங் லியாங் என்றொரு தாய்வான் இயக்குனர், இந்த தியானத்தின் படி வாழும் பிக்கு ஒருவரின் நடவடிக்கைகளை, அவர் எழுவது துவங்கி உண்பது நடப்பது என அனைத்தையும் ஒரு ஒரு மணி நேர படமாக எடுத்திருக்கிறார். கிட்ட தட்ட திரையில் அந்த தவ அனுபவத்தை பார்வையாளருக்கு கடத்தும் முயற்சி.
பிரான்ஸில் எதோ ஒரு நகரம். மொத்த நகரமும் பரபரத்து கிடக்க, பிக்கு மட்டும் வேறு உலகில் நடை பயின்று கொண்டு இருக்கிறார்.
நத்தையுடன் ஜெயமோகனின் காலை நடை இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன். :)
கடலூர் சீனு