கௌசல்யாவின் கணவர் சங்கர் கொலையில் ‘தீர்ப்பு’ வழங்கப்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். இதைப்போன்ற மக்கள் உள்ளம் கொந்தளிக்கும் வழக்குகளில் கீழமைநீதிமன்றங்கள் உச்சகட்ட தண்டனையை வழங்கும். அப்போது ஊடகங்களில் சூடான விவாதங்கள் நிகழும்.குற்றவாளிகள் கதறி அழுதபடி சிறைக்குச் செல்வார்கள்.
ஆனால் அதெல்லாமே ஒரு நாடகம்தான். கீழமைநீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளை விடுவிப்பதற்கு தேவையான இடுக்குகள் போடப்பட்டிருக்கும் என்று சீனியர் இதழாளர்கள் சொல்வார்கள். பெரும்பாலும் இந்த பரபரப்பு வழக்குகளில் சில ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகள் விடுதலைசெய்யப்படுவார்கள். கொஞ்சநாள் கழித்து தெனாவெட்டாக பேட்டிகளும் கொடுப்பார்கள் ஆகவே நான் கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ஒட்டி கருத்தே சொல்வதில்லை, அந்த நாடகத்தில் ஊதியமில்லாமல் நடிக்கவேண்டாமே என்றுதான் எண்ணுவேன்.
நீதிமன்றங்களை ஒருவகையான புனிதமான அமைப்புக்கள், நீதிபதிகள் தேவதூதர்கள் என எண்ணவேண்டியதில்லை. ஒரு சமூகத்திலுள்ள நீதியைத்தான் நீதிமன்றம் எதிரொலிக்கும். பெரும்பாலான உயர்-நடு சாதியினர் சங்கர்கொலையை நியாயப்படுத்தி, குற்றவாளிகளுக்கு ஆதரவான மனநிலையையே கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடான உண்மை. சமூக ஊடகங்களின் முற்போக்குப் பொங்குதல்களுக்கு சமூகத்தில் இடமில்லை. சொன்னப்போனால் இது உண்மையில் சமூகம் வேறுவகையில் இருப்பதன் விளைவான ஒரு பொதுவெளிப் பாவனை மட்டுமே.
ஒரு குற்றச்செயலில் குற்றவாளிக்கு எதிராக வழக்கை நடத்துவது அரசு. குற்றத்தை பதிவுசெய்யும் காவலர்கள், அரசுவழக்கறிஞர்கள், நீதிபதிகள் என ஒரு பெரிய வட்டத்தின் பொதுவான முடிவே இப்படி ‘நீதி’யாக வெளிப்படுகிறது. இதற்கு நீதிமன்றத்தை, அமைப்பை குற்றம்சாட்டுவதில் பொருளில்லை. இது நம் சமூகத்தில் இருப்பது, திரண்டு இவ்வாறு வெளிவருகிறது.
நீண்டகால கருத்தியல் செயல்பாடுகள், அதையொட்டிய சமூக மாற்றங்கள் வழியாகவே இதை களைய முடியும். அதற்கு தேவை உண்மையை பேச ஆரம்பிப்பது. இது பெரியார்மண், புனிதபூமி போன்ற பாவனைகளை களைந்து மெய்யாகவே நாம் யார் என்று நாமே பார்ப்பது. அதை முன்வைப்பது.பிரச்சினைகளை மடைமாற்றாமலிருப்பது. யோசித்துப்பாருங்கள், இந்த ஒட்டுமொத்த வழக்குவிசாரணையில் எங்கேனும் ஒரு பிராமணர் இருந்தால் பார்ப்பனச் சதி என்று இங்குள்ளோர் கடந்துசென்றுவிடுவார்கள் இல்லையா? அதில் இருக்கிறது நம்முடைய கூட்டுப்பாவனை. நாம் போலிநீதி.
எந்தத் திசை நோக்கி பேசவேண்டுமோ அந்தத்திசை நோக்கிப் பேசவேண்டும். அப்படி ஒரு பேச்சு இங்கே அரசியல், சமூகவியல், இலக்கிய சூழலில் இருந்து எழுவ்தே இல்லை. அனைத்துக் குரல்களுமே திசைதிருப்பும் தன்மைகொண்டவை, பொய்யான எதிரியை கற்பனைசெய்து கத்தி சுழற்றுபவை.
இங்கெ சாதிப்பற்று என்பது ‘வெளியே’ இருந்து எவராலும் சுமத்தப்பட்ட அடையாளம் அல்ல. ஒவ்வொருவரும் அவருடைய தொல்காலத்தில் இருந்து எடுத்துக்கொண்டு தன் முழு அடையாளமாகவே சுமந்துகொண்டிருப்பது. ஒருவர் தன்னை எவர் என எண்ணுகிறார் என்று கேட்டால் அந்தரங்கமாக இன்ன சாதி என்றுதான். நடுத்தர சாதியினரின் சாதிவெறியை மறைக்கவே இங்கே பலவகையான பாவனைகள் பொதுவெளியில் உள்ளன. ஒன்று, தன்னையும் ஒருவகை ஒடுக்கப்பட்டவராக கற்பிதம் செய்துகொள்வது. அவ்வாறு ஒடுக்குபவராக பார்ப்பனர் என்ற ஒரு எளிய இலக்கை உருவகித்து அவர்களை வசைபாடிக்கொள்வது. ஒருபோதும் தன் சொந்தச் சாதிவெறியை கண்ணுக்குக்கண் நேரடியாக பார்க்காமலிருப்பது. இந்தப்பாவனையே இங்கே சாதியை நிலைநிறுத்துகிறது
இங்கே சாதிக்கு எதிரான குரல்கள் இத்தனை பெருகியிருப்பதற்குப் பின்னாலிருப்பது அது சாதிப்பற்றை மறைப்பதற்கான வசதியான நுரைப்படலம் என்பதுதான். சாதிவெறிக்கு எதிராக எழுதித்தள்ளும் புரட்சியாளர்கள் , எழுத்தாளர்கள் சாதிச்சங்கங்களுடன் சமரசம் செய்து அரசியல் செய்வது இங்கே பரவலாக ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. இந்த சம்பவமும் ஒரு மிகையுணர்ச்சி வெளிப்பாட்டுடன் கண்டிக்கப்பட்டு அப்படியே கடந்துசெல்லப்படும். தமிழக அரசியல்வாதிகளுக்கு அரசு அமைப்புக்களுக்கு இந்த போலிப்பாவனைக்கு அடியிலுள்ள யதார்த்தம் தெரியும். அதையே இத்தீர்ப்பு பிரதிபலிக்கிறது.
இந்த நீதிமறுப்பு என்பது இந்தியாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. முன்பு பன்வாரி தேவி வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்திய நீதிமுறையின் மாபெரும் களங்கமாக நீடிக்கிறது. அதைப்பற்றி உலகமெங்கும் எழுதிவிட்டார்கள். அப்போது இது சமூகநீதி மண் என்றார்கள். சமூகநீதி என்பது கடையனுக்கும் அது சென்றுசேர்வதுவரைத்தான், தலித்துக்களை அகற்றிவிட்டு பேசப்படும் சமூகநீதிக்கு பொருளே இல்லை என்று நான் சொன்னேன். இந்த வழக்கு இதையே காட்டுகிறது. பன்வாரி தேவி வழக்குபோலவே இந்த தீர்ப்பும் இந்திய நீதிமுறைக்குமேல் ஒரு பெரும் களங்கம்
***