வேறொரு காலம்

இப்போது காலையிலும் மாலையிலும் நடை செல்கிறேன். வழக்கமான பாதையை முற்றாகவே மாற்றிவிட்டேன்.என் வீட்டருகே ரயில்பாதையை ஒட்டி ஒரு மண்சாலை உள்ளது. ரயில்பாதையை அகலப்படுத்தும்பொருட்டு உருவாக்கப்பட்டது, வண்டிகள் ஏறமுடியாது. அதன்வழியாக நடந்து இரண்டு ஏரிகளைச் சுற்றிக்கொண்டு திரும்பி வருவேன். பலசமயம் கிளம்பி வருவது வரை ஒருவரைக்கூட எதிரில் சந்திக்கவேண்டியிருக்காது.

இது மழைக்காலம் இங்கே. தென்மேற்குப்பருவமழை வீசி அறையவேண்டிய பருவம். ஆனால் அத்தனை மழை இல்லை. வானம் கருமைகொண்டிருக்கிறது, ஆனால் மழையை காற்று வீசிக்கொண்டு சென்றுவிடுகிறது. ஒவ்வொருநாளும் மழை உண்டு, ஆனால் மென்மழை. அது மண்ணை ஈரமாகவே வைத்திருக்கிறது. மரங்களின் இலைகளில் பசுமை ஒளிகொண்டிருக்கிறது. ஆனால் இந்தப்பருவத்தில் ஓடைகள் நிறைந்து ஒழுகவேண்டும். அத்தனை ஏரிகளும் கரைமுட்டி ததும்பவேண்டும்.

இருண்ட காலையில் குளிர்காற்று சுழன்றடிக்க நடைசெல்கிறேன். காலையில் தனியாக, மாலையில் அஜிதனும் சைதன்யாவும் கூட வருவார்கள். காலையில் எவருடனும் பேசிக்கொள்வதில்லை. மின்னஞ்சல்களும் பார்ப்பதில்லை. ஒழிந்த மனம் இருந்தால் கதைகளுக்கான கருக்கள் தோன்றும். முந்தையநாள் இரவு ஒரு கரு கூட இல்லை, இனி அவ்வளவுதான் என்று தோன்றி படுக்கச் செல்வேன். மறுநாள் காலையில் நடக்கச்செல்லும்போது எழுதவேண்டிய மனிதர்கள் கண்முன் பெருகி நின்றிருப்பார்கள்.

இந்தப்பாதையில் ஒரு குளம். நீர்ப்பாசி படர்ந்து பெருகியிருக்கிறது. எந்நேரமும் எவரோ குளித்துக்கொண்டிருக்கிறார்கள். நீர்ப்பாசியை பார்த்திருக்கையில் அது வானத்திலேயே படர்ந்திருப்பது போல பிரமை ஏற்படுகிறது. அது அலைவுறும்போது வானில் ஏதோ நிகழப்போவதுபோலத் தோன்றுகிறது.வானில் தாவுகின்றன தவளைகள்

இந்த பாசிப்பரப்பில் மழைக்குப்பின் நீர்துளிகள் பரவியிருப்பது பிரமிக்கச்செய்யும் அழகு. சற்றுநேரம்தான். காற்று அவற்றைச் சிதறடித்துவிடும். எக்கணமும் மறையப்போகிறோம் என்று உணர்ந்தவைபோல அவை ஒளிகொண்டு நலுங்கிக்கொண்டிருக்கும்

கணியாகுளம் தொன்மையான ஊர். சோழர்காலத்தையது. இந்த ஊருக்காக வெட்டப்பட்டவை மூன்று ஏரிகள். மூன்றுமே அழிந்துகொண்டிருக்கின்றன. விவசாயம் மறையும்போது ஏரிகள் தேவையில்லாமலாகின்றன. ஆனால் நிலத்தடிநீருக்கு ஏரிகள் தேவை. அதைவிட மனிதர்கள் உளம்மலர்ந்து வாழ ஏரிகள் தேவை. அதை இங்குள்ள எந்த மக்களும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழ்மக்கள் ஒரு வெறியுடன், வஞ்சத்துடன் நீர்நிலைகளை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். கீழேபோட்டு மிதித்து மிதித்து சாவு சாவு என கொல்வதுபோல தோன்றும். எங்கும் இப்படித்தான். குப்பைகளை கொட்டுகிறார்கள். கரைகளை உடைக்கிறார்கள். சாக்கடைகளை பெருக்குகிறார்கள். இன்னும் ஒரு தலைமுறைக்குள் இந்த ஏரிகள் மறைந்துவிடும்.

இந்த ஏரி சோழர்காலத்தையது. பராந்தகசோழன் நினைவாக உருவாக்கப்பட்டது. இன்று இதன் முப்பதுசதவீதம்கூட எஞ்சியிருக்கவில்லை. ஆக்ரமிப்புகள் பட்டாநிலங்களாக மாறிவிட்டன. மாடிவீடுகளே அமைந்துள்ளன. நீர்ப்பிடிப்பு மிகமிக குறைவு- நீர் வருவதற்கான எல்லா வழிகளும் மூடப்பட்டுள்ளன. ஆகவே எஞ்சியிருக்கும் பகுதியிலும் பெரும்பகுதி கோரை மண்டிய சதுப்புதான்.

நீர்ப்பரப்பு நூறாண்டுகளாக சேறு மண்டியது. ஆகவே தாமரைக்கு உகந்தது. இடைவெளியில்லாமல் செந்தாமரை பூத்துக்கிடக்கிறது  வட்டப்பாத்திரங்களில் ஏறிச்சென்று தாமரையை பறித்து விற்கிறார்கள். ஆனாலும் அத்தனை தாமரையையும் பறித்துவிடமுடியாது.

ஒவ்வொருநாளும் இருமுறை தாமரைகளை பார்க்கும் வாழ்க்கை இனியதுதான். இந்தக் கதைகளின் உணர்வெழுச்சிகள் வெண்முரசு உருவாக்கும் கொந்தளிப்புகள் அனைத்திலிருந்தும் விடுதலை என்பது இதுதான். தாமரைகளின் மேல் காலை ஒளி எழுவதை மாலை அணைவதை பார்த்துக்கொண்டு ஐந்து நிமிடம் நின்றிருக்கிறேன்

இந்தப்பகுதி பழைய ‘ஊரின்’ கொல்லைப்பக்கம். ஏரியை ஒட்டிய தாழ்வான பகுதிகள்தான் அக்காலத்தில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டன. தெய்வங்களிலும் தலித்துக்கள் உண்டு. கழுமாடன்கள், சுடலைகள். அவர்களுக்கு ஊருக்குள் இடமில்லை. ஏரியை ஒட்டிய சதுப்புப் புறம்போக்குகளில் திமிறி வளர்ந்த ஆலமரங்களின் அடியில், புதர்களுக்குள் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்

நித்யபூஜை என ஏதுமில்லை. ஆண்டுக்கொருமுறை ஒரு கோழி, ஒரு கைப்பிடி பொங்கல், அவ்வளவுதான். உறுமியும் மேளமும் ஆடம்பரம். மற்றநாட்களில் இத்தெய்வங்கள் பிறிதொரு உலகில் பிறிதொரு காலத்தில் அமைந்திருக்கின்றன. ஆலமரமும் அரசமரமும்கூட இவ்வுலகைச் சேர்ந்தவை அல்ல. அவை தோட்டங்களில் நிற்பதில்லை. அவை ஊருக்குள் ஊடுருவும் காடுபோன்றவை

இப்பகுதி மிகமிக வேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் ஆறுவழிச்சாலை. மறுபக்கம் பார்வதிபுரம் சந்திப்பு. பெரியபெரிய வீடுகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. மாடன்களுக்கு சிமிண்ட் ஆலயங்கள் எழுகின்றன. அருள்மிகு மாடசாமிகளாக உயர்கிறார்கள்.

வயல்கள் கைவிடப்பட்டு பிளாட்போட காத்து கிடக்கின்றன. மிக வளமான மண். ரசாயன உரம்போட்ட நீர் வந்து தேங்கும் நிலம். ஆகவே புல் செறிந்து பச்சைப்பசேலென்று கிடக்கின்றது. உலகம்தெரியாத நகர்மக்கள் நெல் என்று நினைக்கலாம். ஆனால் பசும்புல்

நெல் அல்ல புல்

என் சின்னவயதில் எல்லாம் இப்படி புல்லைக்கண்டால் கல்லூரி போகும் வழியிலேயே சட்டையைக் கழற்றிவிட்டு இறங்கிவிடுவேன். புல்லை பறித்து கட்டி வீட்டுக்கு கொண்டுபோட்டுவிட்டுதான் மறுவேலை. பஸ்ஸில் ஏற்றி கொண்டுபோனதுகூட உண்டு. புல்லைக்கண்டால் மாட்டுக்கு வரும் அதே பரவசம் வந்த காலம்

இப்போது புல்லுக்கு மதிப்பில்லை. மிக அரிதாகவே புல்பறிப்பவர்களை பார்க்கிறேன். மாடு வளர்ப்பவர்களே குறைவு. அது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அளிக்காத வேலை எனப்படுகிறது. மாடுகள் கண்ணுக்குப்படுவதே குறைவு நான் ஒரு பசுவை பார்த்து நீண்டநாட்களாகின்றது.

இன்று காலை நடை செல்கையில் வழியில் ஏதோ கிடந்தது. அருகே சென்று பார்த்தேன், சற்றுப் பெரிய நத்தை. அது உண்மையில் காலைநடைதான் சென்றுகொண்டிருந்தது. ஏன் அவசரம் என்று தோன்றியது. நத்தையுடன் ஒரு நடை சென்றாலென்ன. ஆனால் நெடுநேரம் நிற்கமுடியவில்லை. அது சுடலைகளின் கழுமாடன்களின் காலத்தில் சென்றுகொண்டிருந்தது.

முந்தைய கட்டுரைகதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]
அடுத்த கட்டுரைவேறொரு காலம்- கடிதம்