‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8

வியாசரின் மாணவர் ஓலையிலிருந்து படித்துச் சென்றார். “எப்போதும் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்துகொண்டிருந்த பிரதீபன் என்னும் அரசன் கங்கையின் பிறப்பிடத்திற்குச் சென்று அங்கே நெடுங்காலம் தவமியற்றிக்கொண்டிருந்தான். அந்த அரசமுனிவன் வேதம் உரைத்துக்கொண்டிருக்கையில் அழகிய முகமும் தேவதைக்குரிய எழிலுடலும் கொண்ட பெண்ணுருவை அடைந்த கங்காதேவி நீரிலிருந்து கரையேறி அவனுடைய வலத்தொடைமேல் வந்தமர்ந்தாள்.”

“தந்தையே!” என்று கரடு தட்டிய குரலில் அழைத்தபடி முன்னால் சரிந்த திருதராஷ்டிரர் “எனக்குப் புரியவில்லை, தந்தையே. என் அறிவின்மையை நீங்கள் பொறுத்தருள வேண்டும். நான் கல்லாதவன். அகமும் இருண்டவன். இந்தப் பேரழிவின் கதையை தாங்கள் ஏன் எழுதவேண்டும்? உங்கள் குருதியில் பிறந்த குழந்தைகள் விழைவு-பகை-வஞ்சங்களால் பூசலிட்டு அழிந்ததை எழுதுவதில் உங்களுக்கு என்ன பெருமை?” என்றார்.

அத்தனைபேர் உள்ளத்திலும் எழுந்த வினா அது என்பதை, முகங்களில் தெரிந்த உயிரசைவிலிருந்து நான் அறிந்தேன். வியாசர் பெருமூச்சுவிட்டார். “இந்தக் கேள்வியைத்தான் நான் என்னிடம் கடந்த பல மாதங்களாக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். என் மனம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. என்னால் எங்கும் அமரமுடியவில்லை. எங்கும் மக்கள் இந்தப் போரைப் பற்றியே பேசுவதை கண்டேன். சூதர்கள் பாடல் முழுக்க இப்போர் பரவி வளர்வதை அறிந்தேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தப் போர் மானுடகுலத்தின் நினைவில் என்றென்றும் இருக்கத்தான் போகிறது. ஏன்? இந்தப் போர் ஒவ்வொரு மானுடர் மனத்திலும் நிகழும் போர் அல்லவா?”

வியாசர் பெருமூச்சுடன் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு தொடர்ந்தார். “கங்கையை நோக்குக! பெருங்காப்பியம் என்பது கங்கைபோல. அது இமையமலைமுடிகளில் ஏன் உருவாகிறது? அங்கே காலமில்லாது உறைந்த வெண்பனி அடுக்குகளில் எங்கோ ஒரு சிறு நிலைகுலைவு உருவாகிறது. ஒரு விரிசல் எழுகிறது. உடைவு என ஆகி சரிவென விழுந்து ஊற்றென உருகி வழிகிறது. துணையாறுகளும் சிற்றாறுகளும் பல்லாயிரம் ஓடைகளும் கலந்து பெரும்பெருக்காக மாறி கடலில் கலக்கிறது. கடலை மலை அறியும் வழி அது. கடல் மலையை பெற்றுக்கொள்வதும் கூட.”

வியாசர் தனக்குள் உலவத் தொடங்கிவிட்டிருந்தார். “நான் கங்கோத்ரியின் முதல் ஊற்று. பெயரில்லாத பல்லாயிரம் சூதர்கள் மழையின் துளிகள். இந்தக் காவியம் தன் பாதையை தானே கண்டடைந்தபடி முன்னகர்கிறது. அதை ஒருபோது வியப்புடனும், மறுபோது எக்களிப்புடனும், பிறிதொருபோது செயலற்ற வெறுமையுடனும் நான் பார்த்து நிற்கிறேன். கங்கை மீது காற்று பரவும்போது தோன்றும், அனைத்துமறிந்த கை ஒன்று நீர்ச்சுவடி மீது எழுதிச் செல்வதாக. புரியாத மொழியாலான எழுத்துக்களின் அலைவரிகள். மறுகணம் தோன்றும், காவியம் கங்கைபோல என்றும் மாறாத பொருளாழத்துடன் அப்படியே ஓடிக்கொண்டிருப்பதாக. அதன் மீது காலத்தின் விரல்கள் புதுப்புதுக் கற்பனைகளை கணம்தோறும் எழுதிக்கொண்டிருக்கின்றன. நீர்மேல் எழுத்து. ஆம், நீர்மேல் எழுத்து!”

“ஆனால் நீர் அறியும் தன் மீது எழுதப்பட்ட அனைத்தையும். நீரின் பெருவெளி அறியும் சொற்களின் முடிவிலியை.” வியாசர் மீண்டும் தன் மெளனத்திற்கு திரும்பினார். யுதிஷ்டிரன் அந்தச் சொல்லின்மையில் ஊடுருவி எழுந்து “பிதாமகரே, தங்கள் காவியத்தில் அறம் மறம் என்னும் பாகுபாட்டுக்கு என்ன அளவையை கொண்டுள்ளீர்கள்?” என்றார். வியாசர் சற்று எரிச்சல் அடைந்தவர்போல ஒரு கணம் தயங்கி “மானுடரின் வாழ்வறிவைத்தான்” என்றார்.

“என்ன அறமும் மறமும்!” என்று திருதராஷ்டிரர் தலையை அசைத்தார். “வெல்பவன் அறத்தோன், தோற்றவன் மறத்தோன். இதுதான் என்றும் உலகநெறி. இதுமட்டும்தான்.” சலிப்புடன் கையசைத்து “அத்தனை எளிதல்ல, மைந்தா” என்றார் வியாசர். திருதராஷ்டிரர் “போதும், தந்தையே. சொற்களால் என் செவி நிறைந்துவிட்டது. என் மைந்தன் தொடை உடைந்து கிடந்தான்… என் மைந்தர்கள் களம்பட்டனர். அது ஒன்றே மெய். நான் எத்தனை தவம் செய்தாலும், எத்தனை முதிர்ந்து ஒடுங்கினாலும் துளியும் குன்றாத மெய் அது” என்று கூவினார்.

பீமன் உடலில் ஓர் அசைவு எழுந்தது. யுதிஷ்டிரனின் கண்கள் அவரை தொட்டு மீண்டன. அவற்றில் குற்றம் சாட்டும் பாவனை இருந்தது. பீமன் உரக்க “ஆம், தந்தையே! நான்தான் உமது மகனை கொன்றவன். தீச்சொல்லிடுக என்னை!” என்றார். திருதராஷ்டிரர் வாழ்த்துவதுபோல வலக்கையை தூக்கி காட்டினார்.

“நான் அறத்தின் முடிவிலா வழிச்சிக்கல்களையே இக்காவியத்தில் பேசுகிறேன்” என்றார் வியாசர். அப்பால் நின்ற அர்ஜுனன். “அறமா? இங்கு நடந்தது ஒரு தற்கொலை! ஆணவத்தாலும் பொறாமையாலும் ஒரு குலம் தன்னைத்தானே கொன்றுகொண்டது. பிணத்துக்கு அணி செய்ய முயலவேண்டாம், பிதாமகரே” என்றார்.

வியாசர் அதை கேளாதவர்போல “எனது காவியம் வெற்றியை பாடுகிறது என்பது உண்மை. அதற்குப் பின்னால் உள்ள தோல்விகளையும், சரிவுகளையும் சொல்கிறது. தோல்விக்குப் பின்னால் உள்ள பெருமைகளை பாடுகிறது. அன்புக்குள் வாழும் வெறுப்பையும், வஞ்சத்தின் ஊற்றுமுனையாகிய அன்பையும் சொல்கிறது. ஆக்கமும் அழிவும் கூடிமுயங்கும் வாழ்வையே என் காவியம் கூறுகிறது. மானுட வாழ்வு எனும், ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாத பெருக்கைப் பற்றியே நான் எழுதியுள்ளேன். அந்தப் பெருக்கை வழிநடத்துவது விண்பேரறம். அப்பேரறத்தின் காட்சி இங்குள்ள வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் தெரியக்கூடும். என் காவியம் காட்டுவது அதையே” என்றார்.

“இனி என்ன பயன் அதனால்?” என்றார் அர்ஜுனன். “கைம்பெண்களுக்கும் தந்தையில்லா மைந்தருக்கும் எவருமில்லா பெற்றோர்களுக்கும் உங்கள் அறம் என்ன வழிகாட்டப் போகிறது?” வியாசர் “முடிந்தது குருக்ஷேத்ரப் போர் மட்டுமே. அறத்துக்கும் மறத்திற்குமான போர் ஒருபோதும் முடிவுறுவதில்லை. நாம் கற்றதை நம் வழித்தோன்றல்களுக்கு பயன்படும்படி நாம் அளிக்க வேண்டாமா?” என்றார்.

அர்ஜுனன் சிரித்தார். “பிதாமகரே, இந்த வயதிலும் தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பது வியப்பு தருகிறது. நான் அறிந்த மெய்மை ஒன்றே ஒன்றுதான். மனிதவாழ்வு என்பது ஒரு பெரும் சரிவு. இழந்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. அடையும் ஒவ்வொன்றிற்கும் நாம் ஆயிரம் மடங்கு விலை தருகிறோம். நாம் தரும் ஒவ்வொன்றுக்கும் இளமையில் ஆயிரம் பங்கு எடை. நாமோ இளமையைத் தந்து பட்டறிவுகளை பெற்றுக்கொள்கிறோம். காலம் முடுகி அணையத் தொடங்குகையில், தொலைவில், கனவுவெளியென இளமை ஒளிபெற்று விரிந்து கிடக்கிறது. ஏக்கம் மிகுந்த கண்ணீருடன் இந்தக் கரையில் நின்றபடி நாம் புண்களையும், உதவாத நாணயங்களையும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்…”

“பிதாமகரே” என்று யுதிஷ்டிரன் தணிந்த, உறுதியான குரலில் கூறினார். “தாங்கள் காவியத்தை படியுங்கள். என் வழியாக பேரறம் ஆடிய விளையாட்டு என்னவென்று கூறுங்கள்…” வியாசர் பெருமூச்சுடன் தொடரும்படி கைகாட்ட மாணவர் படிக்கத் தொடங்கினார். சூழ்ந்திருந்த அனைவரும் விழிகளில் ஈரப்படலம் தெரிய உணர்வுகளில் முகத்தசைகள் நெளிய அதை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

சொல்லொழுக்கின் நடுவே மெல்லிய குரலில் ஒரு முதுமகள் “பிதாமகரே” என்றாள். வியாசர் “யார்?” என்றார். “என் மைந்தரை நான் பார்க்கவியலுமா?” என்றாள் அவள். “அவர்கள் விண்புகுந்துவிட்டனர், மகளே” என்றார் வியாசர். அக்கணம் ஒரு பெண் எழுந்து ஓடிவந்து தன் நெஞ்சில் அறைந்துகொண்டு வீறிட்டாள். “என் குழந்தைகள்! அவர்களை நான் பார்க்கவேண்டும். நான் இறந்த பிறகாவது அவர்களை பார்க்கவேண்டும்.” கதறியபடி அவள் தரையில் சரிந்தாள். மார்பில், வெறியுடன் ஓங்கி அறைந்துகொண்டு கதறியழுதாள்.

விரிந்த தலையுடன் பெண்கள் நாலாபக்கமிருந்தும் எழுந்து வியாசரை நோக்கி ஓடிவந்தனர். அவர்கள் அலறினார்கள். “என் மைந்தரை காட்டுக, பிதாமகரே! உங்கள் சொல்தவத்தால் என் மைந்தரை காட்டுக!” என்று அலறினார்கள். வியாசர் “என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்துதான் சொல்கிறீர்களா?” என்றார். முதிய பெண் ஓடிவந்து வியாசரின் காலில் விழுந்தாள். காதுகளும் மார்புகளும் நீண்டு தொங்கின. வெண்ணிறத் தலைமயிர் விரிந்து, சுருக்கம் பரவிய வெற்று முதுகில் ஈரமாக ஒட்டியிருந்தது.

“மாமுனிவரே, ஒன்பது பிள்ளைகளையும் பதினேழு பெயரர்களையும் பறிகொடுத்த பெரும்பாவி நான்! என் மைந்தரை காணமுடியும் என்று சூதர் சொன்னதை நம்பியே வந்தேன். எவ்வண்ணமோ என் குழந்தைகள் மீண்டு வந்துவிடுவார்கள் என்று நம்பினேன். ஏதோ ஒரு மாயம் நடக்கும் என்று எண்ணியிருந்தேன். தந்தையே, என் கனவை வீணடித்துவிடாதீர்கள். என்னை கைவிட்டுவிடாதீர்கள்” என்று அவள் கதறி அழுதாள். “எங்கள் குழந்தைகளை நாங்கள் பார்க்கவேண்டும், உத்தமரே!” என்று குரல்கள் வீறிட்டன. அழுகைகளும் புலம்பல்களும் நான்கு திசைகளிலிருந்தும் வந்து பெருகின.

“நான் என்ன செய்யமுடியும்? நான் வெறும் கவிஞன், தாயே!” என்றார் வியாசர் தளர்ந்த குரலில். “பிதாமகரே, நீர் அறிவீர். எங்கள் குழந்தைகள் எங்கே?” ஒரு பெண் கூவினாள். “அவர்கள் வீரருக்குரிய விண்ணுலகில் இருக்கிறார்கள். வீரர்களுக்குரிய களியாட்டுகளுடன், வீரர்களுக்குரிய பெருமைகளுடன்” என்றார் வியாசர். “நீங்கள் எப்படி கண்டீர்கள்?” என்று அந்தப் பெண் கேட்டாள். “நான் கவிஞன். சொற்களை பருவடிவு விட்டு ஊழ்கவடிவம் கொள்ளவைக்கும் பேறு பெற்றவன். ஊழ்கவடிவாக அனைத்துலகங்களையும் தொட்டு விரியும் என் அகம். நான் கண்டேன், என்னை நம்புங்கள்.”

“பிதாமகரே!” என்று ஒரு கிழவி அலறினாள். “எங்கள் குழந்தைகளை எங்களுக்கு காட்டுங்கள். நீங்கள் கூறுவது உண்மையென்றால் காட்டுங்கள்! அறத்தின் மீது ஆணை!” வியாசர் அவளுக்கு மறுமொழி சொல்ல திரும்புவதற்குள் “காட்டுங்கள்! காட்டுங்கள்!” என்று ஓலமிட்டது நதிக்கரை. “ஒரு கணம் பிதாமகரே, கனிவு காட்டுங்கள். ஒரு கணம்” ஒரு பெண் கதறியழுதாள். வியாசர் மாறி மாறி பார்த்து பதைக்கும் கைகளால் ஏதோ சொல்ல முயல அவர்கள் நெஞ்சில் அறைந்து அலறிக்கூச்சலிட்டனர். மணலில் விழுந்து கைகளால் அறைந்துகொண்டு அழுதனர்.

கங்கையில் ஒரு மீன் துள்ளி விழுந்தது. அலைகள் கரிய வளையங்களாக பரவின. வியாசர் கைகளை தூக்கினார். “சரி, காட்டுகிறேன்! அவர்களைப் பார்ப்பது உங்களுக்கு உளஅமைதியைத் தருமா? தங்கள் புகழுலகில் அவர்கள் ஒளியுடன் இருப்பதைக் கண்டால் உங்கள் தீ அணையுமா?” என்றார். “ஒரு கணம் என் குழந்தையை பார்த்தால் போதும், பிதாமகரே! வேறு எதுவும் வேண்டாம்!” என்று ஒரு பெண் கதறினாள்.

நான் குந்தியை பார்த்தேன். அவர் அங்கிருப்பதாகத் தோன்றவில்லை. திரௌபதியும் எங்கோ அந்த உணர்வலைகளுக்கு அப்பாலெனத் திகழ்ந்தார். பாண்டவர்களின் முகங்களில் உணர்வுகள் கொந்தளித்தன. ஏக்கம், துயர், சீற்றம் என. யுதிஷ்டிரன் கைகளைக் கூப்பி நின்றார்.

வியாசர் கங்கையை நோக்கி திரும்பினார். அழுத்தமான குரலில் அவர் கூறிய சொற்களை நான் உதடசைவுகளைக்கொண்டே உணர்ந்தேன். “கங்கையே, நீ என் மூதாதை. என் சித்தம் உன் பெருக்கு. என் சொற்தவம் மெய்யானது எனில் நீ என் காவியமாகி விரிக! ஓம், அவ்வாறே ஆகுக!”

என் உள்ளம் கூர்கொண்டது. விழிகூர்ந்து கங்கையை பார்த்தேன். கங்கைமீது நிலவொளிபோல ஒரு துலக்கம் தோன்றியது. அது அலைகளாக விரிவடையத் தொடங்கியது. மெல்ல ஒளி கூடியபடியே வந்தது. ஒளிபெற்ற படிகவெளியாக அது ஆயிற்று. நீரின் பொன்னிற ஆழம் தெரிந்தது. அங்கு நெடுந்தொலைவில் நிலா ஒன்று சுடர்ந்தது. பளிங்கு மாளிகைகள் நிரம்பிய பெருநகரம் ஒன்று கனவுபோல தெரிந்தது. அது அஸ்தினபுரம் என்பதை நான் வியப்புடன் அறிந்தேன்.

தெருக்களில் பொற்பல்லக்குகள் நகர்ந்தன. புரவிகள் வெண்ணிற முகில்கள்போல ஓடின. அங்கிருந்து பொன்னொளி சுடரும் பாதை ஒன்று கிளம்பி மேலே வந்தது. அதன் வழியாக மெதுவாக நடந்து ஒருவர் வந்தார். ஒளிசிதறும் வைரமுடியும், மணிக்குண்டலங்களும் பொற்கவசமும் அணிந்திருந்தார். கையில் பொற்கதாயுதம். அது துரியோதனன் என்பதை நான் மார்பை அடைத்த வியப்புடன் அறிந்தேன்.

துரியோதனனின் முகம் பொலிவு நிரம்பியதாக இருந்தது. கண்களில் மகிழ்ச்சி சுடர அவர் நீர் மீது எழுந்து நின்றார். திருதராஷ்டிரர் உரத்த குரலில் “மகனே! துரியோதனா!” என்று வீறிட்டார். மதயானையின் பிளிறல் போலிருந்தது அது. அவருக்கு எப்படி தெரிகிறது அந்தக் காட்சி? இதெல்லாம் என் உளமயக்குதானா? காந்தாரி “மைந்தா! மைந்தா!” என்று கைகளை விரித்தார்.

கவசகுண்டலங்கள், செஞ்சூரியக்கதிர்கள் என ஒளிவிட கர்ணன் வந்து துரியோதனனின் அருகே நின்றார். துச்சாதனன் புன்னகை தவழும் இனிய முகத்துடன் எழுந்தார். சகுனியும், துரோணரும், பீஷ்மரும் வந்தனர். துர்முகனும் துர்மதனும் முகப்பில் வர இளைய கௌரவர்கள் வந்தனர். லட்சுமணனும் துருமசேனனும் அழைத்துவர கௌரவ மைந்தர்கள் வந்தனர். சாரிசாரியாக அவர்கள் வந்தபடியே இருந்தனர்.

கையில் பாசாயுதத்துடன் உயர்ந்த கரிய உடலை மெல்ல ஆட்டியவனாக யானைக்குட்டிபோல கடோத்கஜன் நடந்து வந்தான். அவன் மைந்தன் பார்பாரிகன் அருகே பிறிதொரு களிறு என நடந்துவந்தான். அபிமன்யுவும் பிரதிவிந்தியனும், சுதசோமனும், சதானீகனும், சுருதகீர்த்தியும், சுருதசேனனும் வந்தனர். நிர்மித்ரனும் யௌதேயனும் சர்வதனும் அரவானும் எழுந்து வந்தனர். கூட்டம் கூட்டமாக அலைகளில் இருந்து பாவைகள் என நெளிந்து நெளிந்து ஓருருவம் ஆயிரமெனப் பெருக அவர்கள் வந்தபடியே இருந்தனர்.

இமைத்தால்கூட அந்தக் காட்சி நழுவிவிடும் என்று பயந்தவன்போல பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த முதுமகள் திடீரென்று “மகனே!” என்று கூவியபடி நீரை நோக்கி ஓடினாள். எங்கும் வீறிட்ட அலறல்கள் வெடித்துப் பரவின. பெண்களும் முதியவர்களும் கூட்டம் கூட்டமாக நீரை நோக்கி ஓடினர். “நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று வியாசர் கூவினார். கூட்டம் கூட்டமாக பெண்கள் நீரில் விழுந்தனர். கங்கை நீர் ஆயிரம் வாய்களைப் பிளந்து அவர்களை விழுங்கியது.

“அர்ஜுனா! நிறுத்து அவர்களை. அர்ஜுனா!” என்ற வியாசரின் குரல் அங்கிருந்த கூச்சல்களில் மறைந்தது. உடல் தவிக்க முன்னும் பின்னும் ஆடியபடி வியாசர் கூவினார். கையில் காண்டீபத்துடன் கண்ணீர் வழிய அர்ஜுனன் வெறுமனே நின்றார். “அர்ஜுனா… அர்ஜுனா” என்று கைநீட்டி அலறினார் வியாசர். “அவர்கள் போகட்டும், பிதாமகரே. அவர்களுக்கு இனிமேலாவது அமைதி கிடைக்கட்டும்” என்றார் அர்ஜுனன்.

“இது என்ன அறிவின்மை! நில்லுங்கள் நில்லுங்கள்! போகாதீர்கள்!” வியாசர் கண்ணீருடன் கூவினார். மறுகணம் காட்சி அணைந்து, கங்கை இருண்டது. “அர்ஜுனா, அவர்கள் உன் குடிமக்கள். அவர்களைக் காப்பது உன் கடமை” என்று வியாசர் சொன்னார். “இல்லை, பிதாமகரே! அவர்கள் சாவின் குடிமக்கள். தங்கள் மைந்தர்களுடனும் கணவர்களுடனும் அவர்கள் சென்று சேரட்டும். பிதாமகரே, அபிமன்யுவையும் அரவானையும் பார்த்தபோது ஒரு கணம் என் கால்கள் தவித்தன. ஏன் நான் ஓடவில்லை என வியந்துகொள்கிறேன். உயிர்விழைவா? அல்ல, ஆணவம். எளிய பாமர மக்களுக்கு இருக்கும் உணர்ச்சிகள்கூட இல்லாதவன் நான்.”

“பார்த்தா! உனக்குத் தெரியாது” என்றபடி வியாசர் சொன்னார். “நான் அறிவிலி! நான் அறிவிலி! பெரும் பிழை செய்துவிட்டேன்.” என்று விம்மினார். இரையுண்ட பாம்புபோல கங்கை அமைதியாக விரிந்து கிடந்தது. அதன் கருமையை நோக்கியபடி நான் கைகூப்பி நின்றிருந்தேன்.

“தந்தையே!” என்றார் திருதராஷ்டிரர். “அவர்கள் அங்கு தங்கள் குழந்தைகளுடன் வாழ்வதைவிட மேலானதா இங்கு நடமாடும் பிணங்களாக வாழ்வது? என்னை யாராவது பிடித்து அங்கு இட்டுச் சென்றிருக்கலாகாதா?” வியாசர் திரும்பி அவரிடம் “எப்படி சொல்வேன், குழந்தைகளே? நீங்கள் பார்த்தது என் காவியத்தின் ஓர் உருவெளித்தோற்றம் மட்டுமே. கங்கை என் காவியமாக ஆயிற்று. காவியம் நாம் எண்ணுவதன் ஒரு பாவை மட்டுமே” என்றார்.

அர்ஜுனன் “அப்படியானால் இங்கே தெரிந்தவர்கள் எவர்?” என்றார். வியாசர் மெல்ல அடங்கினார். ”அவர்கள் என் காவியத்தில் வாழும் வடிவமே இங்கு தெரிந்தது. காவியத்துக்கு அப்பால் இவர்கள் எங்குள்ளனர் என நான் அறியேன்.” அவர் கண்களில் கண்ணீர் ஒளிவிட்டது. பெருமூச்சுடன் கங்கையையே பார்த்தார்.

பெருமூச்சுடன் “காவியத்தில் நாம் பார்ப்பது வானை பிரதிபலிக்கும் மேற்பரப்புகளை மட்டுமே. ஆழத்தில் இருண்ட பேருருலகங்கள் விரிந்து கிடக்கின்றன. அங்கு கோடிகோடி மானுடர் உறைகின்றனர். அவர்களுடைய கூறப்படாத துயரங்கள், பகிரப்படாத கனவுகள். அங்கு எந்த ஒளியும் சென்று சேர்வதில்லை. காலத்தின் விரல்நுனி அங்கு துயில்பவர்களை ஒரு போதும் தீண்டப் போவதில்லை. காவிய ஆழம் ஓர் அணிச்சொல்லின் மின்மினிகூட வழிதவறிச் செல்லமுடியாத பேரிருள்…” என்றார் வியாசர்.

பீமன் “பிதாமகரே, இக்கங்கையின் ஆழத்தில் இருந்துதான் இவையனைத்தையும் தொடங்கிய முதல்நஞ்சு எனக்கு அளிக்கப்பட்டது” என்றார். “அந்நஞ்சும் உங்கள் காவியத்தில் இருந்தா எனக்கு வந்தது?” வியாசர் ஒன்றும் சொல்லவில்லை. நடுங்கும் தலையுடன், கைகளை கூப்பியபடி கங்கையை பார்த்துக்கொண்டிருந்தார். “கூறுக, பிதாமகரே!” என்றார் பீமன். வியாசர் கண்களை மூடி நடுங்கிக்கொண்டிருந்தார்.

என் மனம் நடுங்கி உறைந்தது. என்னால் கங்கையை பார்க்கமுடியவில்லை. கரிய வாள்போல அது கிடந்தது. அதன் ஆழத்தில் நிழல் நிழலாக கரைந்திறங்குவது என்ன? என்னுள் தேங்கிய வெறுமையை எல்லாம் பெருமூச்சாக மாற்றி வெளித்தள்ள முயன்றேன். மார்பு ஒழியவேயில்லை. நான் திரும்பி காட்டை நோக்கி நடந்தேன். இருளில் திமிறிப் புணர்ந்த மரங்கள் காற்றில் உறுமும் காடு. அங்கு நிழல்கள் ததும்பின. பெயரற்ற அடையாளமற்ற தவிப்பு மட்டுமேயான நிழல்கள்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைகதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு [சிறுகதை]
அடுத்த கட்டுரைபுழுக்கச்சோறு,நெடுந்தூரம் -கடிதங்கள்