கதைத் திருவிழா-26. எரிமருள் [சிறுகதை]

மாலை ஒவ்வொன்றையும் பொன்மஞ்சளென மிளிரச்செய்யும்போது வேங்கை மலர்கள் தழலென்றே ஆகிவிடுகின்றன. வேங்கை தானிருக்கும் காடெல்லாம் நிறையும்தன்மை கொண்டது. மலைச்சரிவை பொன்னால் மூடிவிடுகிறது. பற்றி எரிந்து எழச்செய்கிறது. மகரந்தப்பொடியின் மென்படலத்தால் தரையை மூடிவிடுகிறது. சிறுபுதர்களின் இலைப்பரப்புகள் பொற்பொடி தாங்கி நின்றிருக்கின்றன. வண்டுகள் பொன்சுமந்து ரீங்கரித்து அலைகின்றன. இளங்காற்றில் பொற்சாரல்.

இந்தக்காட்டுக்குள் நீ நுழைகையில் எப்போதுமே முற்றிலும் தனியன். தனிமைகொள்ளும் பயிற்சி உனக்கு இளமையிலேயே அமைந்துவிட்டிருக்கிறது. தனிமை பிறரை விலக்குவதனூடாக அடைவது. பிறரை விலக்குவது அவர்களை அறியாமலிருப்பது. விழிகளால், சொல்லால், உடலசைவால், உள்ளத்தால். தன்னை அறியாத ஒன்றை மானுடர் விலக்கிவிடுகிறார்கள். எதிர்வினையற்றவை அவர்களின் உலகில் இல்லை.

நீ விலகி விலகிச் சென்று அமைந்திருக்கிறாய். எவராலும் பார்க்கப்படாமல், எவ்வகையிலும் வடிவப்பொருள் கொள்ளாமல் இக்காட்டுக்குள் கிடக்கும் ஒரு சிறுபாறை என. அதன்மேல் இதோ வேஙகை மலர்ப்பொடி ஓசையின்றி கொட்டிக்கொண்டிருக்கிறது. மென்காற்றில் பொற்பூச்சின்மேல் அலை எழுந்து வரிவடிவாகிறது.

ஆனால் காட்டுக்குள் எந்த மரம் தனிமைகொள்ள முடியும்? சிலவகை மரங்கள் தன்னந்தனிமையை தன்னைச்சுற்றி வட்டமிட்டு உருவாக்கிக் கொள்கின்றன. மண்ணுக்குள் அவை பல்லாயிரம் வேர்களுடன் இறுகப்பின்னி ஒற்றைப்படலமென்றிருக்கும். காற்று அனைத்து மரங்களையும் இலைகோதி தளிர்நீவிச் சென்றுகொண்டிருக்கிறது.

உன் தனிமை அருமணி கிடைத்தவனின் ரகசியத்தால் ஆனது. விளக்கப்பட முடியாத ஒன்றை உளம்கொண்டவனின் தத்தளிப்பு. நெடுந்தொலைவு விலகிச் சென்றுவிட்டவனின் வியப்பு. நீ உன் தனிமையில் செழித்து கிளைவிட்டிருக்கிறாய்.

பூத்த வேங்கைமரங்களுக்கு இடையே காற்று செல்கையில் சிறுத்தை அசைகிறது. திடுக்கிடச்செய்யும் ஒருகணச் சிறுத்தை. கணம் ஆயிரம் சிறுத்தைகள். கண்கூர்பவை, வாய்திறந்து குருதிநா காட்டுபவை. வெண்பல் ஒளிர்பவை. சிறுத்தைகளை பார்த்தபடி நடந்துகொண்டிருக்கிறாய். சிறுத்தைகள் ஓசையிலா காலடிகளை பொத்திப் பொத்தி வைத்து உன்னை சூழ்ந்து தொடர்ந்து வருகின்றன

இந்தக்காடு உன்னையன்றி எவராலும் பார்க்கப்படாதது என்று அறிவாயா? விரிந்து பரந்து உங்கள் ஊர்களைச் சூழ்ந்திருக்கும் காடு சில இடங்களில் பச்சைசெறிந்தது, சில இடங்களில் வெறும் புதர்ப்பரப்பு, சில இடங்களில் பாறைமிடைமரம்.

இங்கு ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் மானுடர். தேனும் கிழங்கும் கனியும் சேகரிக்கும் குறவர்கள், வேட்டைக்காரர்கள், தோட்டப்பணியாளர்கள், பயணிகள். தாங்கள் தேடுவனவற்றை சிலர் பார்க்கிறர்கள். தேடும் விழியலைவில் அவர்களை அறியாமல் உள்ளிருந்து அகம் சிலவற்றை நோக்குகிறது. ஒட்டுமொத்தமாக காட்டை நோக்குபவர் பலர். எனினும் இக்காட்டில் ஒருமுறைகூட ஒரு மானுட விழிகூட பார்க்காத பகுதிகளே மிகுதி. விழிகளால் பொருள் வகுக்கப்படாத மரங்களின் கிளைநெளிவுகள், கொடிகளின் முயங்கல்கள், செடிகளின் செறிவுகள்.

இக்காடு தெய்வங்களாலானது. மலர்களுக்கும் தளிர்களுக்கும் இலைகளுக்கும் கனிகளுக்கும் அடிமரங்களுக்கும் சருகுகளுக்கும் வேர்களுக்கும் வெவ்வேறு தெய்வங்களுண்டு. ஒவ்வொரு மலர்களுக்கும் மரங்களுக்கும் வேறுவேறு தெய்வங்களுண்டு. நீரோடைகளுக்கும் பாறைகளுக்கும் தெய்வங்களுண்டு. நீரோடையின் ஒரு சுழிப்புக்கென அங்கே உறையும் ஒரு தெய்வம் உண்டு

மானுடர் நோக்கியறியாத ஒன்றை தான் நோக்குபவன், அவ்வாறு நோக்குவதை அறிபவனுக்கு முன்னால் கானகத்தை ஆளும் தெய்வங்களில் ஒன்று தோன்றுகிறது. அவன் சிந்தனைக்குள் ஒருதுளித் தேனை, எரியும் மதுவை சொட்டுகிறது. அவன் மதம்கொண்டவனாகிறான். அதன்பின் அவன் வாழ்வது காட்டில் மட்டுமே.

இந்த வேங்கை உன்னால் மட்டுமே பார்க்கப்பட்டது, இதன் திமிறிய கிளைஎழுகை கண்டு அவ்வாறு நீ உணர்ந்த கணம் உன்னருகே நான் நின்றேன். உன்னை மெல்ல குளிராக முத்தமிட்டேன். உன்னுள் அறியவொண்ணா வேட்கை ஒன்றை நிறைத்தேன். நீ பெருமூச்சுவிட்டபோது என் அருகமைவை ஆழத்தில் உணர்ந்தாய். நான் ஒளிரும் மஞ்சள்மலர்களில் குடிகொள்பவள்.

இங்கு எவ்வுறவும் மீண்டும் நிகழ்வதுதான். கருவறை புகுவதற்கு முன்னரே இருப்பதுதான். அறிகையில் நாம் திடுக்கிடுவது அதனால்தான். அணுகிய விரைவை எண்ணி வியப்பதும் அகலமுடியாமையை எண்ணி அஞ்சுவதும் அதனாலேயே. நீ என்னை அறிந்த முதற்கணத்தை ஒருபோதும் மறந்ததில்லை.

அன்று உனக்கு எட்டு வயது. பள்ளிகள் திறக்கும் மழைக்காலம். உன் சிற்றூரில் கோடை என்பது மாம்பழத்தின் பலாப்பழங்களின் பருவம். ஒவ்வொரு மாமரமும் பலாமரமும் தனிப்பெயர் கொண்டிருந்தது. தன் கனிகளின் சுவைகளால், வண்ணங்களால் நின்றிருக்கும் இடத்தால். யக்ஷிக்கோயில் தேன்வரிக்கை, பொற்றையில் செம்பருத்தி, ஓடைக்கரை வருக்கை,நீலம், முல்லைத்தறை செங்கைவரிக்கை என. சுவையிலிருந்து சுவைதேடி ஓடிக்கொண்டே இருக்கும் பகல். ஒரு காற்று வானிலிருந்து கனிகளை கொட்டச்செய்கிறது. பதறியடித்து ஓடி ஓடி பொறுக்கிச் சேர்ந்து உறிஞ்சி சப்பி உடையும் உடலும் மாங்கனிச்சாறு படிந்து உலர்ந்து மணக்க அலைந்துகொண்டே இருந்தாய்.

கோடைக்குரிய மலர்கள் பூக்கும் பருவம். ஊரெங்கும் கொன்றை பூத்து மஞ்சள் ஒளியை நிறைத்திருந்தது. பூம்பொடி விழுந்து மெத்தையென்றே ஆன நாட்டுவழிகள். கால்தொட்ட பூவுக்குள் இருந்து ரீங்கரித்து எழுந்து பறக்கும் பொன்பொடி சிலிர்த்த உணர்கொம்புகள் கொண்ட வண்டுகள்.

நிறைந்திருந்த காற்றோசையினூடாக நீ சென்று ஏறிய சிறுகுன்றின்மேல் நின்றிருந்தது வேங்கை. தொலைவில் அதைக் கண்டு எரியென மருண்டு “ஆ!” என்று கைசுட்டினாய். “அது வேங்கை!” என்றனர் தோழர். காலடிப்பாதையினூடாக காய்ந்த புல்நடுவே ஓடி மலையேறி அதை சென்றடைந்தீர்கள்.

எரி! எரி! எரி! என்று தவித்து நின்றிருந்தன காய்ந்த மலர்கள். பற்றிக்கொள் பற்றிக்கொள் என்று தழல்நிற மலர்கொண்டு நின்றது வேங்கை. அங்கே ஒரு பாறைமேல் நின்றிருந்தபோது உன் உள்ளம் விம்மிக்கொண்டிருந்தது. ‘எழுக எரிந்தெழுக!’ என்று.

மறுநாள் உன் தோழர்கள் சொன்னார்கள் குன்றின்சரிவு பற்றிக்கொண்டுவிட்டது என்று. நீ கோயில்முனை இலுப்பை மரத்தின்மேலெ எறி நின்று தொலைவில் புகை எழுந்து வானில் கறையென கரைந்து கொண்டிருப்பதைக் கண்டாய். அன்று அந்தியில் வானில் சிவந்த கொடி என தழல் ஏறிச்செல்வதை காணமுடிந்தது.

மறுநாள் மழை விழுந்தது. கோடையின் முதல்மழை எப்போதும் மரங்களை வெறிகொள்ளச் செய்யும் காற்று எனவே தோன்றும். தென்னை இலைகள் வீசிச்சுழலும். உதிர்ந்த இறகுகள் போல தென்னையோலைகள் நிலம்வந்து படியும். மரங்கள் வேருடன் பறிக்கப்பட்டுவிடுமோ என்று உள்ளம் பதறும். தெங்காய்களும் உடைந்த கிளைகளும் உதிரும் ஓசை. காற்று சன்னல்கள் வழியாக பீரிட்டு வீட்டுக்குள் ஒவ்வொரு பொருளையும் மண்ணிலிருந்து எழுப்ப முயலும். துணிகள் பறந்து எழுந்துவிடும்.

காற்று மெல்ல மெல்ல அடங்கி ஒவ்வொன்றும் அசைவின்மை கொள்ளும். ஓரு இலைநுனியில் கூட சொல்லிருக்காது. கூழாங்கற்கள் பொறுக்கி வீசப்பட்டதுபோல முற்றத்தின் புழுதியின்மேல் நீர்த்துளிகள் சரிவாக அறைந்து சுருளும். பின்னர் நீர்ச்சரடுகள் குலைகுலையாக வந்து அறைய, சற்றுநேரத்திலேயே மண்ணும் காற்றும் வானமும் நீரலானவையாக மாறிவிட்டிருக்கும். நீரின் ஓலம் சூழ்ந்திருக்கும். அறைகளுக்குள் நீராவியின் வெப்பமும் முற்றத்தில் குளிர்வாடையும் நிறைந்திருக்கும். உடல் வெக்கையையும் சிலிர்ப்பையும் மாறிமாறி அடையும்.

பின்னர் பலநாட்கள் மழைதான். அவ்வப்போது நீர்த்திரை காற்றால் இழுத்து விலக்கப்பட்டு கழுவப்பட்ட மரங்கள் இலைப்பசுமையில் தளிர்மென்மையுடன் துலங்கும். எஞ்சிய ஈரமலர்கள் வேரடியில் உதிர்ந்து நீரால் அறையுண்டு மண்ணில் கலந்து கிடக்கும். ஒளிச்சரடை நீட்டியபடி நூறுநூறு நத்தைகள் ஈரநிலத்தில் ஊர்ந்து செல்லும். காக்கைகள்கூட பாளைகீறி வெளிவந்த குருத்தின் மென்மையை கொண்டிருக்கும்

பள்ளிதிறக்கும் நாள் நெருங்கிவருகிறது. தைக்கக்கொடுத்த புதிய சட்டையும் கால்சட்டையும் கைக்குவருவது தள்ளித்தள்ளிச் செல்கிறது. எப்போதும்போல முதல்நாள் முந்தைய ஆண்டின் பழைய உடைகளையே அணிந்துகொண்டு செல்லவேண்டுமா என்ற எண்ணம் பதற்றமூட்டுகிறது. அப்பா புதிய நோட்டுகளும் புத்தகங்களும் வாங்கிக்கொண்டு வந்தார். புதுத்தாளின் மணம் கொண்டவை நோட்டுகள். அச்சுமை மணம்கொண்டவை புத்தகங்கள். தமிழ்ப்புத்தகத்தை எடுத்து ஒரே அமர்வில் கடைசிவரை படித்துவிட்டாய். மற்றப்புத்தகங்களில் படங்களை பார்க்கிறாய்

உள்ளக்கிளர்ச்சியுடன் வீட்டுக்குள் அலைந்துகொண்டிருக்கிறாய். வெவ்வேறு சன்னல்கள் வழியாக மழையை பார்க்கிறாய். மழையில் இறங்கி ஓட விரும்புகிறாய். அப்போது செவலைக்கன்றுக்குட்டி கட்டறுத்துக்கொண்டு ஓட ‘டேய் பிடிடா பிடிடா”என்று அம்மா கூச்சலிட்டாள். நீ இறங்கி அறையும் மழைத்தாரைக்குள் ஓடி சேற்றிலும் ஓடும்நீரிலும் சருகுப்பொடிகளிலும் விழுந்து எழுந்து அதை துரத்திச் சென்று இடைவழி முடுக்கில் அதன் கயிற்றைப் பிடித்து இழுத்துவந்தாய். மழை உன் தலைமயிரிலிருந்து முகத்தில் கொட்டுகிறது. உடல் குளிரில் உலுக்கிக்கொள்ள சிரித்து தோள்குறுக்கிக் கொள்கிறாய். உன் உள்ளத்திலிருந்த நிலைகொள்ளாமை மறைந்துவிடுகிறது. நாளை திறக்கவிருக்கும் பள்ளி எங்கோ என அகன்றுவிட்டது. அக்கணம், அங்கே மழையுடன் நின்றிருக்கிறாய்.

தலைதுவட்டிவிட்டு மழையை நோக்கிக்கொண்டு மீண்டும் சன்னலருகே நின்றிருக்கிறாய். கோடைமழையின் இடியும் கொப்பளிப்பும் பருவமழைக்கு இல்லை. அவ்வப்போது சில உறுமல்கள் மட்டுமே. அது ஒரு நீர்க்காடு போல நின்றுகொண்டிருக்கும். அவ்வப்போது காற்றில் மொத்தமாக அலைவுறும். ஓங்கி ஒலித்து சற்றே தணிந்து மீண்டும் மேலெழும்.

மழையிருட்டுக்குள் அந்தியின் இருள் எழுவது கண்களுக்குள் நிகழ்வதுபோலிருக்கும். மரங்கள் இருண்டு நிழலுருக்களாகும். வீட்டுச்சுவர்களின் வெண்மை மேலும் துலங்கி பின் சாம்பல்நிறப் படலமாக ஆகும். ஓசை மாறுபடாமல் வந்து சூழும் அந்தி. மழைத்தாரைகளிலும் தரையில் ஓடும் நீரிலும் மட்டும் ஒளி மிஞ்சியிருக்கும். பின் ஒவ்வொன்றாக அணையும். இருட்டுக்குள் மழை ஓசையென்று நின்றிருக்கும். சற்றே இடைவெளி விடும்போது காற்றில் இலைகள் நீர்த்துளிகளை உதறிக்கொள்வது நாய் தன்னை குடைந்துகொள்வதுபோல் ஒலிக்கும்

வீட்டுக்குள் அம்மா குத்துவிளக்கு ஏற்றிவைத்து ராமநாமம் சொன்னாள். பின்னர் மண்ணெண்ணை விளக்குகள் ஏற்றப்பட்டன. சிவந்த கனிபோல ஒளிகொண்ட கண்ணாடிக்குமிழ்கள். சுவர்களின்மேல் பொருட்களின் நிழல்கள் நீண்டு வழிந்து நின்றன. சிலதுணிகள் ஒளியுடன் காற்றில் அலைவுகொண்டன.

அம்மா உன்னை சாப்பிட அழைத்தாள். சூடான பயற்றுக் கஞ்சி, பலாக்காய் மயக்கிய களி, மீன்குழம்பு, பலாக்க்கொட்டை வறுவல். மழையின் ஓசையுடன் அதை உண்டாய். விளக்குச் சுடரைச் சுற்றி சிறு பூச்சிகள் கனல்பொறிகள் போல பறந்தன. கையில் சிம்மிணியுட்ன் அம்மா திண்ணைக்குச் சென்றபோது வெளியே மழைச்சாரல் கனல்துருவல்களாக கீழ்நோக்கி பெய்தது

பாயைப் போட்டுப் படுத்துக்கொண்டாய். போர்வைகளின் மெல்லிய நூல்பிசிறுகளில் சின்னஞ்சிறு நீர்த்துளிகள் இருந்தனவா என்று தோன்றும்படி தொட்டபோது ஈரம் இருந்தது. படுத்துக்கொண்டு போர்வையை முகம் வரை இழுத்து போர்த்தினாய். உடல் அந்த ஈரக்குளுமையை ஏற்று சிலிர்த்துக்கொண்டே இருந்தத்ய். உடலை அசைத்து அசைத்து மிகமெல்ல உள்ளே உன் வெப்பத்தை நிறைத்துக்கொண்டாய்.

அரைத்தூக்கத்தில் எவரோ வீட்டுக்குள் வருவதையும் அம்மா சென்று வரவேற்பதையும் அப்பாவின் குரலையும் கேட்டாய். ஒரு புதிய முதியவரின் குரல், ஒரு புதிய இளம்பெண்ணின் குரல். கண்திறந்து எழுந்து சென்று பார்க்கவேண்டும் என்று எண்ணினாலும் துயில் பிசின் போல உன்னை இழுத்து தன்னில் ஒட்டி வைத்திருந்தது. தேன்போல இனிப்பது, ஒவ்வொரு தசையிலும் சோம்பலை நிறைப்பது.

உன் அறைக்குள் பேச்சொலிகள். அம்மாவும் புதிய இளம்பெண்ணும் நடமாடும் காலடிகள். நீ மெல்லிய சிணுங்கல்போன்ற கொலுசொலியைக் கேட்டாய். அந்தக் கால்களைப் பார்க்க விழிகளை திறக்கவேண்டும் என்று எண்ணினாய் அவ்வெண்ணத்துடனேயே துயிலில் ஆழ்ந்தாய்.

பிறகெப்போதோ நீ விழித்துக்கொண்டாய். பின்னிரவா, விடியற்காலையா என்று அறியவில்லை. எங்கிருக்கிறோம் என்றும் உணரவில்லை. உன் முன் ஒரு பூத்த வேங்கைமரம் நின்றிருந்தது. வீட்டின் அறைக்குள் இருப்பதை, பாயில் படுத்திருப்பதை உணர்ந்தாய். அந்தமரம் மலர்க்கொத்துகளுடன் காற்றிலாடியபடி நின்றிருந்தது.

நெஞ்சு விம்ம உடல் மெய்ப்புகொண்டு கொதித்து நரம்புகள் இழுத்துக்கொண்டு செவிகளில் ஒரு குழலோசையின் உச்சவளைவைக் கேட்டு பின்னர் மெல்லத் தளர்ந்து நீ பார்த்துக்கொண்டிருந்தாய். அது ஒரு மஞ்சள் புடவை. அதை கட்டிக்கொண்டு ஒருத்தி காற்றிலென நின்றிருந்தாள். முகம்தெரியாதவள். அச்சேலைக்கு உடல்வளைவை மட்டுமே அளித்தவள். பறக்கும் சிறகுகள் என அச்சேலை அலைகொண்டது.

நெடுநேரம். கனவில் என கணமும் காலப்பெருக்குமான பொழுது. பின்னர் நீ தூங்கிவிட்டாய். காலையில் விழித்துக்கொண்டபோது, கண்களை திறப்பதற்கு முன்னரே, அந்த நினைவு வந்து உள்ளம் உலுக்கல் கொண்டது. கொடியில் கிடந்த அந்த மஞ்சள்பூச் சேலையை மீண்டும் பார்க்க கண்களை திறப்பதற்கு முன், அந்தக் கணத்தில் இமைகளை உன் மனத்தால் அழுத்தி பிடித்துக்கொண்டாய்.

நீ அதை பார்க்கவேண்டாம் என்று முடிவெடுத்தாய். கண்களை மூடிக்கொண்டே படுத்திருந்தாய். அம்மாவின் குரல் கேட்டது, அந்தப்பெண்ணின் குரல், மெல்லிய கொலுசின் ஓசை. அவர்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். எழுந்து சென்று அவளைப் பார்க்கவேண்டும் என்று எழுந்த உந்துதலை அதேயளவு உளவிசையால் அழுத்தி பிடித்து அக்கணத்திலேயே நிறுத்தினாய்.

உடலை இறுக்கியபடி, கைகளைச் சுருட்டி பிடித்து பற்களை கடித்தபடி, போர்வைக்குள் கிடந்தாய். பேச்சொலி காற்றுச்சுழலில் கசங்கி கசங்கி ஒலித்தது. அவர்கள் கிளம்பும் விடைபெறல் சொற்கள் கேட்டன. இனி ஒருபோதும் அவளை பார்க்கமுடியாமலாகலாம். நீ எழுந்துவிடத் தவித்தாய். ஆனால் எழவில்லை.

பின்னர் உடல்தளர்ந்து மீண்டு, உளம் கரைந்து விழிநீர் விட்டாய். கண்ணீர் குளிர்ந்து காதுமடல்களில் நிறைய விடியும்வரை படுத்திருந்தாய். விழித்தெழுந்தபின் நீ உன் அன்னையிடம் கேட்டிருக்கலாம் வந்தது எவர் என. விசாரித்துச் சென்றிருக்கலாம். அந்த செம்மஞ்சள் புடவையைக்கூட கண்டிருக்கலாம்.

ஆனால் வேண்டாம் என்று முடிவெடுத்தாய். நீ அதைப்பற்றி உன் அம்மாவிடமோ பிறரிடமோ கேட்கவில்லை. ஒவ்வொரு நாளும் அதை நினைவுகூர்ந்தாலும்கூட அதை தொடர்ந்து எங்கும் செல்லவில்லை.அது எண்ணி எடுத்த முடிவல்ல, எண்ணும் வயது உனக்கு ஆகவில்லை. எதனாலோ நீ அந்த ஒரு தருணத்திலிருந்து காலத்தை முன்னும் பின்னும் வெட்டிக்கொண்டாய். அதை குன்றாத கூடாத ஒரு துளிக்காட்சியென்றே நிறுத்திக்கொண்டாய். ஒருபோதும் உலகுடன் பொருத்திக்கொள்ளவில்லை.

எத்தனை பெருமழைக்காலங்கள் கடந்துசென்றன. எத்தனை முறை கொன்றை பூத்து எழுந்திருக்கிறது. காலமே மலர்களை வாடச்செய்கிறது. நீ காலத்திற்கு அப்பால் அதைக்கொண்டுசென்று வைத்து அழிவின்மையை அளித்துவிட்டாய்.

இன்று இதோ என்னருகே நின்றிருக்கிறாய். இந்த பூத்தவேங்கையின் உள்ளிருந்து ஓசையற்ற காலடிகளுடன், கூர்ந்த மூக்குடன், விழித்த கண்களுடன், மெல்லமடிந்த சிறிய காதுகளுடன் உன்னை நோக்கி வருகிறேன்.

***

முந்தைய கட்டுரை‘திராவிட மனு’
அடுத்த கட்டுரைதுறத்தலென்பது…