இந்தப்புனைவு களியாட்டு- திருவிழா கதைகளை எல்லாம் மீண்டும் வெறிகொண்டு வாசித்துக்கொண்டிருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் கொஞ்சம் தீவிரமாக இருந்தேன். அவை பெரிய சோர்வை உருவாக்குகின்றன. ஆகவே வெளியே வந்துவிட்டேன். அதன்பிறகுதான் இந்த அளவுக்கு வாசிக்க முடிகிறது. இவை ஒவ்வொன்றும் மனதைக் கிளர்ந்தெழச்செய்து அன்று முழுக்க தொடர்ச்சியாக யோசிக்கவைக்கின்றன. இவை அளிக்கும் கொந்தளிப்பைக் கடந்து செல்வது எளிதாக இல்லை. ஆனால் அடுத்த கதைக்கான காத்திருப்பும் உடனே தொடங்கிவிடுகிறது
இந்தக்கதைகள் எல்லாவற்றிலும் நீங்கள் சமூகச்சூழலில் உள்ள பைனரி என்பது ஆன்மீகமான உயர்சூழலில் இல்லாமலாகிறது அல்லது எப்படி அதை ரத்துச் செய்யவேண்டியிருக்கிறது என்று பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தோன்றியது. கணக்கு போன்ற கதைகளில் சுரண்டுபவன் சுரண்டப்படுபவன் நடுவே உள்ள கொந்தளிப்பான உறவு சொல்லப்படுகிறது. ஆனால் மூத்தோள் அழிவுக் ஆக்கமும் ஒன்றே என்று சொல்கிறது. இது ஒரு டெம்ப்ளேட்டை கண்டுபிடிப்பதற்கான முயற்சி அல்ல. ஆசிரியரின் விஷன் எதைப்பற்றி, அவருடைய தேடல் எங்கே செல்கிறது என்பதை பற்றி.
சிலகதைகளில் ஒன்றை கண்டுபிடித்து மனம் கொப்பளிக்க எழுகிறீர்கள். சிறந்த உதாரணம் அரு. ஆனால் சிலகதைகளில் சலிப்புடனும் சோர்வுடனும் இதுதான் என்று சொல்லிவிட்டு பின்னால்வந்துவிடுகிறீர்கள். உதாரணம், லட்சுமியும் பார்வதியும். எதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்ற ஆர்வ்ம்தான் என்னை வாசிக்க வைக்கிறது
எஸ்.என்.சுரேஷ்
***
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
வணக்கம்.
தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பித்ததனால் நெடுநாட்களாய் பகிர்ந்துகொள்ள நினைத்ததையும் இன்னொரு மின்னஞ்சல் செய்கிறேன். வெண்முரசு தொடங்கிய காலகட்டத்தில் சில மின்னஞ்சல்கள் செய்ததுண்டு. இந்திரநீலம் வரை படித்துள்ளேன். ஒருவருடம் மேற்படிப்பு. பிறகு ஏனோ காண்டீபம் என்னால் கடக்க முடியவில்லை. யயாதி கதையை மட்டும் மாமலரில் படித்தேன். மீண்டும் தொடரவேண்டும்.
நீங்கள் எழுதிய புனைவுக் களியாட்டு சிறுகதைகள் ஒவ்வொன்றும் மிகச்சிறப்பு. அதிலும் அனந்தன், கரடிநாயர் கதைகள். ஏனோ அனந்தன் என்னும்போது அது உங்கள் இளமையுருவமும், கரடிநாயர் உங்கள் தந்தையாகவுமே என் மனதில் தோன்றும். உங்கள் குடும்பம், பெற்றோர் பற்றி நீங்கள் உங்கள் தளத்தில் எழுதியவைகளை விரும்பி வாசிப்பதுண்டு. அதுதான் காரணமா என்று தெரியவில்லை. ’கரடிக்குட்டி, குட்டிக்கரடி’ என்று நாடகம் தொடங்கும்முன் அவர்கள் கத்துவதை படிக்கும்போது என்னையும் அறியாமல் சிரித்தேன். அது சரிதானா?
உங்கள் அம்மா, பாட்டி (லட்சுமிக்குட்டியம்மாள் என்று நினைவு. இறுதிவரை பிடியானை போல் கம்பீரமாய் இருந்தார்கள் என்று சொல்லியிருந்தீர்கள்) எல்லாரையும் கதைத்திருவிழாவிலாவது சந்திக்க முடியுமா என்று ஆசை அது உங்கள் கையிலும் இல்லை என்று தெரிந்திருந்தும்.
கதைகளுக்கு தலைப்பிடுவதைப் பற்றி சொல்லியிருந்தீர்கள் அல்லவா. இரண்டு நாட்கள் முன்பு ஒரு சின்ன பரீட்சை எனக்கே செய்துகொண்டேன். 69 கதைகளில் 64 கதைகளை கதைத்தலைப்பில் இருந்து முழுமையாக நினைவுகூர முடிந்தது.
நன்றியுடன்,
சேவியர்
***
அன்புள்ள சேவியர்,
தலைப்பு பெரும்பாலும் கதை எழுதிக்கொண்டிருக்கும்போதே தோன்றிவிடும். 80 சதவீதம் எழுதும்போதுதான் இது எதைப்பற்றிய கதை என்று தெரியும். உடனே தலைப்பு போட்டுவிடுவேன். கதையை விளக்கும்படியான தலைப்பை தவிர்த்துவிடுவேன். கதையின் மையத்துடன் ஏதேனும் மெல்லிய தொடர்பினைக் கொண்டிருக்கவேண்டும், அவ்வளவுதான். அதுபோதும் என்பதே என் எண்ணம்.
ஜெ
***
ஜெ,
10 கதை வரை வந்து விட்டன. மீண்டும் ஒர் பயணம் ஆரம்பம்.
அருள்
ஒரு புதிய வகையில் மிக ஆழத்தில் கதை இருப்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறவைக்கும் கதை. அந்த பெயர் – சாதனா. மிக அழகிய உச்சரிப்பில், யாருமற்ற அந்த ஏகாந்தத்தில் அந்த மலையில் இருக்கும் அந்த சிலை அவளை அருகே அழைத்து உள்ளிருலை தீர்த்து வைக்கிறது, உறவில் எந்த பந்தமும் தேவையில்லை எனும்படியான ஒரு நேரத்தில் கருவை வேண்டாம் என அவளின் வேகமான இள வயது காலங்களில் கலைத்து கொண்டதின் சிதைதல் தரும் வலிகளா?, நீள் துயர் மட்டும் எனும்படியான உடல் அல்லது மன அவஸ்தைஅவளின் இருப்பா? பிடிபடாவிட்டாலும் உள்ளே ஏதோ ஒன்றை அந்த சிலை தொட்டு விட்டதாக தெரிகிறது.
அந்த ஒரு மணி நேரம் என்பது என்ன நடந்து இருக்கும்? என்ன கண்டு இருப்பாள்? அந்த சிலை முன் சிலைத்து இருந்து விட்டு, பிறந்து வந்து இருப்பாளா? காரில் டெல்லி வரை சென்ற அந்த வேக வாழ்வில் ஏதோ ஒரு திருப்பத்தில் புரண்டு அடிபட்டு, காய்த்து போன வலி தினங்களில் இருந்து புதிதாக மழை, வானவில் என ஒரு மீண்டும் ஒரு தொடக்கத்தின் – அவளின் ஒரு மீட்சியின் கதை எனினும் மேல் பார்வை தான் படுகிறது. ஏதோ ஒன்று சற்று எம்பினால் பிடித்து விடலாம் எனும் தொலைவில் ஒளிந்து இருக்கும் ஒரு படிம கதை
மணிபல்லவம்
வேறு எப்படியும் செல்ல சொல்ல முடியாத இடத்திற்கு அலையின் ஆசிர்வாதத்தில், நிலவின் ஜொலிப்பில், என ஒரு உலகை காட்டி நுழைய வைத்தது. லடாக் போல ஒரு மாயாஜால இடத்திற்கு நம் வரலாற்றின் ஒரு பகுதியை எடுத்து கட்டிய ஃபேண்டஸி கதை. இங்கேயும் அழைப்பு வருகிறது. விருந்தாளியாக மட்டும் முதலில் வந்து பார்ப்பதற்கு. நாம் வாழும் உலகில் எட்ட முடியாத இருளில் ஒரு பிரமாண்டமான உலகம் இன்னமும் உள்ளது. இழுத்து கொண்ட ஊர்களை , மக்களை எல்லாம் அங்கு வைத்து கொண்டு கடல் மேல் மட்டும் நம்மை செல்ல விட்டபடி. பாசியே இல்லாத பாறைகள்< சிலைகள்< பின் தன்னை மூடி கொள்ளும் உலகம் என்ற கற்பனை பார்வை. இந்த பெயரில் உள்ள நாவலை படித்து பார்க்கனும்
செய்தி
மிக பல கடிதங்களில் இளமையின் காமம் என வந்ததை பற்றி படித்தேன். அது தானா? அந்த உடலின் சக்தி தரும் அந்த நுட்ப மனதே எனக்கு பெரிதாக பட்டது. மனம் ஒரு பெண்ணின் மீது கொள்ளும் மோகம் என கொள்ளலாம். சட்டென ஒரு ஒரு கூரிய வருடலை உணரும் நுட்பம். பஸ்ஸில் அவள் கண்களில் வரும் அந்த ஒளியை கானும் நுட்பம் தான் அது. காடு கிரி ஞாபகம் வந்தான். ப்ரத்யேகமாக இருக்கும் அந்த மனதின் மோப்பம் மெல்ல பின் வரும் காலங்களில் கரைந்து விடிகிறது, எங்கே ஆவியாகி விடிகிறது?
அனந்தன் – எங்கெல்லாம் அவன் செல்ல முடிகிறது? ஆட்டக்கதையின் நாயகனின் கர்ப்பத்தில், கிளி சொன்ன கதையில், தேவியில் நாடக எழுத்தாளனாக, இங்கே “என் செல்ல குட்டிக்கு’ என்று ஒரு முத்தம்… அனந்தஜெயமோகன ஆலாபனை.
தங்கப்புத்தகம்
அறிதல் என்பதின் அந்த கணத்திற்கு பின் தெரிவதெல்லாம் பிரதிபலிப்புகள் எனும் பிரதிகளே. ஒவ்வொரு கணமும் காண்பதும் கூட மாறி தெரியும் விந்தையை கதை மையமாக சொல்கிறது. ஆனால் அதற்கு முன் அவர் குகையில் இருந்த தன்னை மறந்த தன்னின் எல்லாவற்றையும் உதிர்ந்த தன்மையினால் தான் அந்த கனவில் அவருக்கு அழைப்பு வருகிறது அல்லவா? பெயரும் வடிவமும் (name, form)எனப்படுவது எவ்வளவு பெரிய பிடித்தம். முதலில் கனவு சலித்தல், பின் அகங்கார கொந்தளிப்புகள், பின் ஒரு அமைதி தரும் நீளும் நாட்கள் என மெதுவாக தன் முகம், தன் சப்தம் எல்லாம் மறந்து மீட்டெடுக்க பெயராவது தெரிய வேண்டும் என ஒடுவது .. இந்த வரிகள் மெல்லிய விதிர்ப்பை தந்தது.
வழக்கம் போல நில காட்சிகள். அந்த குழந்தை அழும் குரல் என்னருகில் தொட்டு சென்றது. அந்த பாதாள உலகின் மெய்தேடல் முதலில் தான் எழுதுவது மெய் என தோன்றி, பின் அலசி, பின் தொகுத்து, பின் நிறைந்து இது தான் என்னுடைய மூலம் என செல்வது ஒரு பயணமாக பட்டது. அறிவதன் 3 புள்ளிகளும் இணைந்த மெளனம் வேறு. பிரிந்தாலும் அந்த கடலின் தன்மையை அலைகளில் கண்டுவிட்ட பின் எல்லாம் ஒன்றே.
புனைவை படிப்பதில் உள்ளின் பயணம் சாத்தியம் என்பதின் கதைகளில் கூடு, தங்கப்புத்தகம் முதன்மையாக தோன்றியது.
அன்புடன்,
லிங்கராஜ்
***
கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]
கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]
கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]
கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]
கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]
கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]
கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]
கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]
கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1