உத்கலத்து வணிகர்களுக்கான குடியிருப்பின் பெருங்கூடத்தில் குபேரருக்கு மிருத்திகன் முன்பு அந்த பலிச்சடங்கின்போது நிகழ்ந்தவற்றை சொன்னான். நான் வணிகச் செய்திகளுக்காக அன்றி எங்கும் செல்வதில்லை. பெருவிழவுகளையும் களியாட்டுகளையும் எப்போதும் தவிர்த்து வந்திருக்கிறேன். வணிகர்கள் அவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும் என்றும், வணிகத்திற்காக அன்றி பிற எதற்காகவும் அங்கு செல்லலாகாது என்றும், என் மூதாதையர் எனக்கு சொல்லியிருக்கிறார்கள்.
ஏனென்றால் விழவுக்களியாட்டுகள் உழைக்கும் மக்களுக்குரியவை. உழைப்பிலிருந்து அவர்கள் ஓய்வு பெறுவதற்குரியவை. அவர்கள் ஈட்டும் செல்வம் சிறிது. ஆகவே அவர்களால் களியாட்டை ஓரளவுக்குமேல் எடுத்து மகிழவும் இயலாது. ஆனால் களியாட்டுக்குச் செல்லும் வணிகன் தன் செல்வம் அனைத்தையும் இழந்துவிடக்கூடும். அவன் உள்ளத்தில் தன் வாழ்வு வீணானதென்றும் களியாட்டொன்றே வாழ்வில் உண்மையானதென்றும் எண்ணம் விழுந்துவிட்டால் அவன் பின் பெண்ணிலும் சூதிலும் மதுவிலும் தன் முழுச் செல்வத்தையும் இழப்பான்.
களியாட்டு நிகழும் இடங்களில் இறங்கி நின்றிருக்கும் கந்தர்வர்களும் யக்ஷர்களும் கின்னரர்களும் பல்வேறு தேவர்களும் தங்கள் இரை என உரிய மானுடரை கொள்கிறார்கள். தேன் இருக்கும் மலரை வண்டுகள் அறிவதுபோல் செல்வம் இருக்கும் மானுடரை அத்தேவர்கள் அறிகிறார்கள். அவன் உள்ளத்தில் விழைவை எழுப்புகிறார்கள். குன்றாத நிறைவின்மையை செலுத்திவிடுகிறார்கள். ‘இங்கில்லை, எங்கோ அனைத்தும் உள்ளது கிளம்புக!’ என்ற ஒற்றை எண்ணம் மட்டுமே அவனில் எஞ்சியிருக்கச் செய்கிறார்கள். பின் அவன் வாழ்வதில்லை.
ஆயினும் அவ்விழவுக்கு நான் சென்றேன். ஏனெனில் அரண்மனையிலிருந்து எனக்கு ஆணை வந்தது. அந்நிகழ்வுக்குரிய அனைத்தையும் ஒருக்கிக்கொண்டிருந்தனர். கான்வாழ்வுக்குப்பின் யுதிஷ்டிரன் நகர்புகுந்து சில நாட்களே ஆகியிருந்தன. அவர் இளையோர் வெவ்வேறு இடங்களில் அஸ்தினபுரியின் எல்லைகளை உறுதிசெய்தும், படைகளை ஒருங்கமைத்தும் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அரண்மனையில் பழையவர்கள் சென்று புதியவர்கள் பழகாமல் குழப்பம் நிலவியது. என் உதவியை அமைச்சர் சுரேசர் கேட்டார்.
தேவைப்படும் எல்லா பொருட்களையும் பலிநகருக்கு கொண்டுவரவேண்டும் என்றும், அத்துடன் பாண்டவர்கள் கௌரவர்கள் என இரு தரப்பிலிருந்தும் விண்புகாது எஞ்சிய அனைத்து அரசியரையும் அங்கு அழைத்து வரவேண்டும் என்றும் எனக்கு கூறப்பட்டது. போருக்குப் பின் அஸ்தினபுரிக்கும் கௌரவர்களின் அரசியருக்குமான தொடர்புகள் முற்றாக அறுந்துவிட்டிருந்தன. மச்சர்கள், நிஷாதர்கள், அசுரர்கள் என புறக்குடி அரசிகளில் ஏராளமானவர்கள் மறுமணம் செய்துகொண்டுவிட்டிருந்தனர். சிறுகுடி ஷத்ரியர்களில் ஓராண்டு நிறைவுக்குப் பின் மறுமணம் செய்ய பலர் காத்திருந்தனர். மறுமணம் செய்யும் வழக்கமில்லாத குடிகளில் அரசியர் தங்கள் அரண்மனையின் இருளுக்குள் கைம்மை நோன்புக்குள் ஒடுங்கியிருந்தனர்.
கௌரவர்களின் அனைத்து நினைவுகளையுமே அஸ்தினபுரி முற்றாக இழந்துவிட்டிருந்தது. அந்நாடுகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் வணிகர்கள் மட்டுமே. ஆகவே அவர்களில் எவர் எஞ்சியிருக்கிறார்கள், எவருடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்று அரசி சம்வகைக்கு தெரிந்திருக்கவில்லை. அதன்பொருட்டே அச்செயல்களை ஒருங்கிணைக்கும்படி நான் அழைக்கப்பட்டேன். எனக்கு மொழிகள் தெரியும், எல்லா நாடுகளிலும் என் வணிகக்குழுவினர் இருந்தனர். அவர்களுடன் ஓலைத்தொடர்பிலும் இருந்தேன்.
அனைத்து அரசியரும் அங்கு கூடவேண்டும் என்பது எவருடைய ஆணை என்றே தெரியவில்லை. அது தென்னிலத்திலிருந்து வந்த ஏதோ நிமித்திகன் கூறியதென்று அறிந்தேன். அவ்வரசியர் எஞ்சும் நினைவறுத்து முழு நீர்க்கடன் முடித்து கங்கையிலிருந்து தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் சென்றால் அஸ்தினபுரிக்குள் உலவிக்கொண்டிருக்கும் அனைத்து நுண்ணுடலர்களும் விண்புகுவர் என்று அந்நிமித்திகன் கூறியிருந்தான். அன்று இந்நகரில் அவ்வண்ணம் நீத்தாரை அகற்றும்பொருட்டு நூறுநூறு சடங்குகள் நடந்துகொண்டிருந்தன. சுரேசர் அதை ஒருங்கிணைத்தார், அரண்மனையிலேயே பலருக்கும் அது தெரிந்திருக்கவில்லை.
அந்நிகழ்வுக்கென அனைத்து நாடுகளிலிருந்தும் பலிப்பொருள்கள் அஸ்தினபுரிக்கு வந்தன. அவற்றை அமைச்சர் சுரேசரும் அவருடைய துணையமைச்சர்களும் ஒருங்கமைத்தனர். அவை சீர் நோக்கப்பட்டு, பயன் வகுக்கப்பட்டு, அடையாளமிட்டு எண்ணளிக்கப்பட்டு, வெவ்வேறு சிற்றமைச்சர்களின் பொறுப்பில் கங்கைக்கரைக்கு அனுப்பப்பட்டன. நான் எனது துணைவணிகர்களுடன் கௌரவக் குடியினரான இளவரசியர் அனைவரின் ஊர்களுக்கும் ஓலை அனுப்பி என் குடியினரான வணிகர்கள் வழியாக அந்த இளவரசியர் எங்கிருக்கிறார்கள், எவ்வாறு இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அவர்களில் கைம்மை நோன்பு நோற்பவர்களின் செய்திகளை மட்டும் சுரேசருக்கு அளித்தேன்.
அதன்படி அவர்கள் அனைவருக்கும் பரிசுப்பொருட்களுடன் அஸ்தினபுரியின் தூதர்கள் சென்று அழைப்பு விடுத்தனர். அவர்களில் ஷத்ரியர்கள் சிலர் தங்கள் அரசியரை அனுப்ப மறுத்துவிட்டனர். மச்சர்களில் சிலருக்கு அவ்வாறு அனுப்பும் மரபில்லை என்றிருந்தது.
காசிநாட்டிலிருந்து ஒற்றர்கள் திரும்பி வந்து பானுமதியும் அசலையும் அஸ்தினபுரிக்கு மீண்டுவர விரும்பவில்லை என்று கூறினார்கள். அவர்கள் அங்கேயே இளமைந்தன் ஒருவனை துரியோதனனின் பெயருக்குரியவனாக எடுத்து அவனைக்கொண்டு நீர்க்கடன்களை செய்தனர். “காசிநாடு துரியோதனனை ஒருபோதும் மறக்காது, வஞ்சத்தையும் இழக்காது. அதை யுதிஷ்டிரனிடம் சொல்” என்று அசலை கூறியதாக ஒற்றன் சொன்னான்.
எஞ்சியோர் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். அவர்கள் நகர்நுழைய வேண்டியதில்லை என்றும் கங்கைக்கரையில் அமைக்கப்பட்டிருந்த படகுத்துறையிலிருந்து நேராக அந்த பலிநகருக்கு சென்றுவிடலாம் என்றும் கூறப்பட்டது. அவர்கள் எவருக்கும் அரசமுறைப்படியான வரவேற்போ பிற முகமனுரைகளோ தேவையில்லை என்று வகுத்தனர்.
ஒவ்வொருவராக வந்திறங்கிய அந்நிகழ்வு சோர்வை அளித்தது. படகுகளில் இருந்தும் தேர்களில் இருந்தும் இறங்கிய ஒவ்வொரு அரசியும் ஒவ்வொரு வகையில் உருமாறி வேறெங்கோ சென்று வேறெவரோ ஆகிவிட்டிருந்தனர். உடல்களினூடாகவே மானுடர் நெடுந்தொலைவு செல்லமுடியும். அங்கு கூடியிருந்த எவருக்கும் அவர்களை முன்னர் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பற்றிய நூல்களிலிருந்து அவர்களின் இளமையையும் அழகையும் அறிந்திருந்தார்கள். அரசகுடியின் ஏவலர்களும் மூத்த காவலர்களும் சிலர் அவர்களை கண்டிருந்தார்கள். அவர்களால் வந்திறங்கியவர்களை அடையாளம் காண முடியவில்லை.
பலர் ஓராண்டுக்குள் முதுகிழவிகள் என ஆகியிருந்தார்கள். உடல் வற்றி உலர்ந்து, முகமெங்கும் சுருக்கங்கள் படர்ந்து, கண்கள் மட்கி ஒளியிழந்திருக்க, சிறுநடுக்கத்துடன், சொல்லெழா அமைதியுடன் ஒவ்வொருவரும் ஏற்கெனவே இறந்தவர் போலிருந்தனர். இறந்தோர் இருப்பவரை எவ்வண்ணம் துயருறுத்த முடியும் என்பதற்கான விழிக்காட்சிகளாக அவர்கள் இலங்கினர். அவர்களைக் கண்ட ஒவ்வொருவரும் சொல்லிழந்தனர். அவர்களில் பலர் போரை சொல்லென்றே அறிந்தவர்கள், வந்து குடியேறியவர்கள். அவ்வரசியரினூடக அவர்கள் போர் என்பது உண்மையில் என்ன என்று உணர்ந்தனர்.
பலிநகரின் முகப்பிலிருந்த துறைமேடையில் நின்றிருந்தேன். பலிநகரில் இருந்து வந்து நின்ற தேர்கள் எனக்குப் பின்னால் அணிவகுத்தன. நான் படகிலிருந்து இறங்கிய அரசியர் ஒவ்வொருவரையும் பார்த்து வணங்கி தேரிலேற்றி அவர்கள் தங்கும் குடில்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். மெல்லிய குரலில், முகபாவனைகளினூடாகவே அவர்களிடம் பேசினேன். இவ்வுலகுடன் உரையாடுவதை அவர்களில் பலர் நிறுத்திவிட்டிருந்தனர். அவர்களை நோக்க நோக்க அந்திக்குள் நான் உளம் கலங்கி கைதளர்ந்துவிட்டேன். அங்கிருந்து கிளம்பிச்சென்றுவிடவேண்டும் என்றும் அது எனக்குரியதல்ல என்றும் எனக்குத் தோன்றியது. களியாட்டுகளில் நம்மிடம் அணையும் தெய்வம் அல்ல இது. இது பிறிதொன்று.
இது இங்குள்ள அனைத்தையும் பொருளற்றதாக்குகிறது. தனிமை கொள், துறந்து செல் என்று நமக்கு ஆணையிடும் தெய்வம் இது. இதிலிருந்து தப்பிவிடவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஒவ்வொரு நாளும் என் அறைக்குச் சென்றபின் என் குடில் முழுக்க மலர்களையும் உணவுப்பொருட்களையும் பொன்னையும் நிரப்பிவைத்து நெடுநேரம் பார்த்துக்கொண்டு ஊழ்கத்தில் அமர்ந்து என் உள்ளத்தில் மங்கலம் நிறைத்து அதன் பின்னரே துயில்கொண்டேன். ஆயினும் என் கனவுகளுக்குள் வெறித்த பார்வையும் வற்றிய உடலும் இறந்தவர்களின் முகபாவனையுமாக எழுந்து வந்துகொண்டே இருந்தனர் அப்பெண்டிர்.
அஸ்தினபுரியிலிருந்து விலகிச்சென்று அயலூர்களில் குடியேறியிருந்த ஷத்ரியகுடியின் கைம்பெண்கள் தங்கள் மைந்தருடன் வந்தனர். அவர்கள் அஸ்தினபுரிக்குள் நுழைவதில்லை என்று வஞ்சினம் கொண்டிருந்தமையால் கங்கையினூடாக நேராக பலிநகருக்கு வந்தனர். அஸ்தினபுரியின் கொடியோ அடையாளமோ இல்லாமல் காட்டில் கட்டப்பட்டிருந்த குடில்களில் அவர்கள் தங்கினர்.
மூன்று நாட்களில் அவர்கள் அனைவரும் வந்து குடில்களை நிறைத்தனர். மூன்றாவது நாள் நான் குடில்முற்றத்தில் நின்றுகொண்டிருந்தபோது புரவியில் வந்த ஒற்றன் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர் வந்துகொண்டிருப்பதாக சொன்னான். முதற்கணம் அது கிருஷ்ண துவைபாயனர் அல்ல, அவ்வடிவு கொண்டு வந்த பிறிதெவரோ ஒருவர் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. ஏனெனில் அனைத்து முனிவர்களுக்கும் அவர்களின் அழியாத் தொடரென மாணவர் நிரை இருந்தது. கிருஷ்ண துவைபாயனருக்கும் அவ்வண்ணம் ஒரு நிரை இருக்கும் என்று எண்ணினேன்.
ஏழு அந்தணர்களை மங்கலங்களுடன் வாயிலில் சென்று நிற்கச்சொன்னேன். வாழ்த்துரைக்க சேடியரையும் ஒருக்கினேன். நான் புத்தாடை அணிந்துகொண்டு முகப்புக்குச் சென்று நின்றேன். தேரில் வருபவர் எத்தனை அகவை நிறைந்தவர் என்று எனக்குத் தெரியவில்லை. நெடுநேரம் கடந்தும் தேர் வரவில்லை. “என்ன ஆயிற்று? படகுத்துறையிலிருந்து அரைநாழிகைக்குள் வந்துவிடலாமே?” என்று நான் கேட்டேன். “அவர் வருவது வியாசவனத்தில் இருந்து. அங்கு நேற்றே வந்துவிட்டார்” என்றார்கள். “அவ்வண்ணமென்றாலும் இத்தனை பொழுதாகாதே?” என்றேன்.
“இல்லை. நெடுந்தொலைவு வரும் தேரின் அசைவை அவர் உடல் தாங்காது. ஆகவே மெல்லவே வருகிறார்” என்றார்கள். “மஞ்சலிலா?” என்றேன். “இல்லை, அவர் நெடுந்தொலைவைக்கூட நடந்தே செல்ல பழகியவர். தன் மாணவர்களுடன் நடந்தே வருகிறார்” என்றான் காவலன். “நடந்தா?” என்று திகைத்தேன். “சீரான விரைவில் விட்டில்போல வந்துகொண்டே இருக்கிறார்” என்றான். “அவர் நூறாண்டு அகவை கடந்தவர் அல்லவா?” என்றேன். “ஆம், ஆனால் உடல் வலுவாகவே உள்ளது.”
சற்று நேரத்தில் கொம்பொலி எழுந்தது. வெண்கொடி ஒன்று தோன்றியது. அதை ஏந்திய புரவிவீரன் அணுகி வந்தான். அதைத் தொடர்ந்து ஒரு சிறுகுழு நடந்து வந்தது. முகப்பில் இரு மாணவர்களைத் தொடர்ந்து சற்றே வளைந்த மெல்லிய உடலுடன் நரைத்த தாடி தொங்கும் முதியவர் ஒருவர் வந்தார். நான் நோக்கிக்கொண்டிருந்தபோது மிக நெடுங்காலத்துக்கு முன்னாலிருந்து, சென்றுவிட்ட ஒரு யுகத்திலிருந்து அவர்கள் வந்துகொண்டே இருந்தனர். துவாபர யுகத்திலிருந்து கலியுகத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தார் வியாசர்.
அவர் அருகே வந்து விரைவு குறைந்ததும் அந்தணர் முன்னால் சென்று வேதமோதி கங்கை நீர் தெளித்து அவரை வரவேற்றனர். கணிகையரும் இசைச்சூதரும் மங்கல இசை முழங்கி வாழ்த்துரைத்து வரவேற்றனர். அவ்வண்ணம் அங்கே எவரும் வரவேற்கப்படவில்லை. வீரர்கள் “பிதாமகர் கிருஷ்ண துவைபாயனர் வாழ்க! சொல் நிலைகொண்ட முதல் வியாசன் வாழ்க! வெல்க குருகுலம்! வெல்க வேதப்பெருஞ்சொல்!” என்று வாழ்த்துரைத்தனர்.
நான் கைகூப்பி நின்றிருந்தேன். அவருக்கு இருபுறமும் அவருடைய மாணவர்கள் நடந்துவந்தனர். அவருடைய முதன்மை மாணவர்களும் உபவியாசர்களுமான வைசம்பாயனர், ஜைமினி, சுமந்து, பைலர் ஆகியோர் வரவில்லை. அவர் களைத்திருந்தாலும் இயல்பாகவே இருந்தார். ஆனால் அவர் அங்கிருப்பவர்களை, அச்சூழலை அறிந்தவர்போலத் தெரியவில்லை. அவர் உள்ளம் வேறெங்கோ இருப்பதாகத் தோன்றியது. அவர் எவரையும் பார்க்கவில்லை என்று விழிகள் காட்டியமையால் அவர் பித்தரோ என்ற எண்ணமும் எழுந்தது.
நான் அருகே சென்று வணங்கி “அஸ்தினபுரியின் பலிநகர் தங்கள் வருகையால் தூய்மை அடைகிறது, மூதாதையே. இங்கு அரசரும் பிறரும் வந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் அருள்கொள்ள விழைகிறார்கள்” என்றேன். அவர் எவ்வுணர்ச்சியும் இன்றி “வெல்க! நிறைவுறுக!” என்றார். அவர் தங்கும்பொருட்டு அப்பலிநகரத்தில் கிழக்காக ஒரு சிறுசோலையில் குடில்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஒரு குடிலில் அவரும் அவர் மாணவர்களும் தங்கினர். அவருடன் வந்த ஏவலரும் பிறரும் பிற குடில்களில் தங்கினர்.
ஒவ்வொரு நாளும் மூவேளை அங்கு அனல் ஓம்பப்படும் என்றனர். அதற்குரிய அனைத்தையும் நான் ஒருங்கு செய்தேன். முதலில் அவர் வந்தது எனக்கு விந்தையாக இருந்தது. மைந்தர்கள், பெயர் மைந்தர்கள், குடிமைந்தர்கள் என பெருநிரையே களம்பட்ட பின்னர் அவ்வண்ணம் ஒருவர் மெய்யாகவே உயிருடன் இருக்க முடியுமென்பதும், அங்கு அவர்களின் நீர்க்கடனுக்காக அவர் வரமுடியும் என்பதும் திகைப்பூட்டியது. ஆனால் துயர் இன்பம் இரண்டுக்கும் அப்பாற்பட்டவராக, பிறிதொரு உலகிலிருந்து சற்றே திரைவிலக்கி எட்டிப்பார்ப்பவராக அவர் தோன்றினார்.
அன்று உச்சிப்பொழுதில் திருதராஷ்டிரரும் காந்தாரியும் படகில் வந்திறங்கினார்கள். அவர்கள் கங்கைக்கரை காடொன்றில் குடில் அமைத்து தங்கியிருந்தார்கள். அவர்களிடம் அந்த முழு நீர்க்கடன் குறித்து செய்திகள் கூறப்பட்டபோது அதன் தேவை என்ன என்று அவர்களுக்கு புரியவில்லை என்றார்கள். இருமுறையும் அந்தணர்கள் சென்று அவர்கள் வர ஒப்பவில்லை. பின்னர் சுரேசர் நேரில் சென்று விளக்கிய பின்னரே அவர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்.
சுரேசர் அவரிடம் “இக்காட்டில் பதினொரு மாதகாலம் தவம் செய்தும் உங்களுக்கு உயிர் நீக்கும் ஆணையை தெய்வங்கள் வழங்கவில்லை. உங்களை இங்கிருந்து அழைத்துச் செல்லாமல் அவர்கள் தவிர்ப்பது ஏன் என்று எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டபோது காந்தாரி திகைத்து கைகூப்பினார். “உங்கள் கடன் இங்கு எஞ்சியிருக்கிறது. ஒருவேளை இந்த ஆண்டுநிறைவில் அதை நீங்கள் தீர்க்கக்கூடும். அதன்பொருட்டே தெய்வங்கள் காத்திருக்கின்றன” என்றார். காந்தாரி உடனே சொல்லளித்துவிட்டார்.
அஸ்தினபுரியிலிருந்து சென்ற வீரர்கள் அவர்களை காட்டிலிருந்து கங்கையில் படகிலேற்றி அழைத்து வந்தனர். அவர்கள் இருவரும் அந்த ஒற்றைப்பாய் படகிலிருந்து இறங்கியபோது அங்கு வரவேற்கவோ வாழ்த்துரைக்கவோ எவரும் இருக்கவில்லை. பலிக்கடன் கொடுக்க வருபவர்களில் அரசமுடி இல்லாத எவருக்கும் எந்த முறையான வரவேற்பும் வேண்டியதில்லை என்பதே முன்னர் வகுக்கப்பட்டதாக இருந்தது. அதைக் கடந்து வியாசருக்கு மட்டுமே நான் அவ்வரவேற்பை அளித்தேன். அவர் சொல் மகுடம் அணிந்து காவியம் எனும் அரியணையில் அமர்ந்திருப்பவர் என்று எண்ணிக்கொண்டேன்.
அவ்வண்ணம் ஏன் எனக்குத் தோன்றியது என்று எனக்கு தெரியவில்லை. அதை ஆணையிட்ட பின்னர் சுரேசரிடம் என்ன சொல்வதென்று எண்ணி அவ்வரியை நான் கண்டடைந்தேன். எங்கோ எவரோ அதை சொல்லியிருந்தார்கள். ஆனால் அவ்வரியை அடைந்ததுமே நான் நிறைவுற்றேன். ‘நன்று, உகந்த ஒன்றை செய்துவிட்டேன்’ என்று எண்ணினேன். மகாவியாசரை நான் சந்தித்தது என் வாழ்வின் நிறைவு என்றே எண்ணுகிறேன்.
காந்தாரியும் திருதராஷ்டிரரும் சிறிய ஒற்றைப்புரவித் தேரில் பலிநகருக்குள் வந்தனர். திருதராஷ்டிரர் உடல் மெலிந்து காட்டு வாழ்வின் சுவடுகளுடன் இருப்பார் என்று நான் எண்ணினேன். மாறாக அவர் அதே பெருந்தோள்களும் விரிந்த கரிய பேருடலும் கொண்டிருந்தார். கரிய தசை திரண்ட கைகளை தேரில் இருபுறமும் விரித்து, கால் நீட்டி, தலையை சற்றே சரித்து ஓசைகளை செவிகொண்டு அமர்ந்திருந்தார்.
மாறாக காந்தாரி மிக மெலிந்து வெண்ணிற நிழலுருபோல தோன்றினார். அவர் அணிந்திருந்த மரவுரியும் நைந்திருந்தது. கன்னங்கள் குழிந்து உடல் வற்றி ஒரு சிறுமியைப்போல் தோன்றினார். நீலத்துணியால் கண்களை கட்டியிருந்தார். முன்பு அவர் வெண்ணிறப் பேருருவாக இருந்தார் என்று கேட்டிருந்தேன். எனில் அப்போது இருந்த உருவில் ஐந்தில் ஒரு மடங்குதான் இப்போது இருக்கிறார் என்று தோன்றியது. அவர்களை எதிர்கொண்டு, சொல்லின்றி வணங்கி, அவர்களுக்குரிய குடிலில் கொண்டு தங்க வைத்தேன்.
அன்று அந்தியில் விதுரரும் குந்தியும் காட்டிலிருந்து சிறுபடகில் ஒற்றை வீரன் ஒருவனால் அழைத்துவரப்பட்டனர். குந்தி எந்த மாற்றமும் இல்லாமல் கானுக்குச் சென்ற அதே வடிவில் அவ்வண்ணமே இருப்பதாக என் அருகே நின்ற முதிய வீரன் சொன்னார். விதுரர் நீண்ட தாடியும் தோளில் புரண்ட சடைமுடிகளுமாக உடல் வற்றி கூன்விழுந்து முதிய முனிவர் போலிருந்தார்.
ஒவ்வொருவராக வந்தணைந்துகொண்டிருந்தனர். அனைவரும் வந்துவிட்டார்கள் என்ற செய்தியை நான் அஸ்தினபுரிக்கு அனுப்பினேன். அங்கிருந்து முதலில் தேரில் சுரேசரும் அமைச்சர்களும் வந்தனர். தொடர்ந்து ஐந்து வெவ்வேறு தேர்களிலாக பாண்டவர்கள் வந்தனர். அவர்கள் இறுகிய முகம் கொண்டவர்களாக, எண்ணங்களில் தனித்தவர்களாக, துயர்கொண்ட அசைவுகளும் ஓசையற்ற சொற்களும் கொண்டவர்களாக இருந்தனர். வெவ்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் வந்தனர். யுதிஷ்டிரனுக்கு மட்டும் வேதியர் நீர்தெளித்து வேதமோதி வாழ்த்துரைத்தனர். வீரர் வாள்தாழ்த்தினர்.
தொடர்ந்து தன் தேரில் திரௌபதி வந்தார். பெரிய கொண்டை தோளில் சரிந்திருக்க, நெஞ்சில் கைகளைக் கட்டி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். மூதன்னை போலிருந்தாலும் அவருடைய நிகர்நிலை கொண்ட தோள்களும், நிமிர்ந்த உடலும், ஒழுகுவது போன்ற நடையும் விந்தையான ஒரு தெய்வத்தன்மையை காட்டின. அவரை முன்னரே அவ்வப்போது ஓரிருமுறை பார்த்திருந்தாலும்கூட தொடர்ச்சியாக அவ்வண்ணம் பார்க்கையில் முதன்முறையாகக் காண்கிறேன் என்று எண்ணத் தோன்றியது.
இறுதியாக சம்வகையும் யுயுத்ஸுவும் தேரில் வந்தனர். சம்வகை பெருத்த பேருடலும் இறுகிய முகமும் எவரையும் நோக்காது அனைவரையும் அறிந்திருக்கும் விழிகளும் கொண்டிருந்தார். அரசியருக்கான உடலும் நடையும் அவர்கள் குலத்தால் வருவதல்ல, இயல்பால் வருவது என்று அப்போது அறிந்தேன். யுயுத்ஸு யுதிஷ்டிரனைப் போலவே கூன்விழுந்த உடலும் தணிந்த தலையும் ஐயுற்று அசைவுகொண்டிருந்த கண்களுமாக இருந்தார்.
அனைவரும் வந்திறங்கியபோது அந்திக்கான கொம்புகள் முழங்கின. அந்திப்பொழுதின் வேள்விச் சடங்குகள் அங்கே தொடங்கின. இளமைந்தன் அங்கு வரவில்லை. அவனை கொண்டுவரும் பொருட்டு ஒரு தனியான தேர் ஒருங்கிக்கொண்டிருப்பதாகவும் மறுநாள் புலரியில் அவன் அங்கு வந்து சேரும்படி பயணம் ஒருக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. உண்மையில் அந்நீர்க்கடனே பரீக்ஷித்தின் கையால் நீத்தோருக்கு அன்னம் அளிக்கும்பொருட்டும், குந்திக்கும் திருதராஷ்டிரருக்கும் காந்தாரிக்கும் விதுரருக்கும் மைந்தனை காட்டும் பொருட்டும்தான் அமைக்கப்பட்டிருந்தது என நான் நினைத்தேன்.