காந்தி என்ன செய்தார்?

உண்மையிலேயே காந்தியின் பங்களிப்பு என்ன, காந்தியம் என்பது ஒருவகையான மதப்பற்று போன்ற நம்பிக்கை மட்டும்தானா? சென்ற சிலநாட்களாக நண்பர்கள் நடுவே இதைப்பற்றிய விவாதம் சென்றுகொண்டிருக்கிறது

காந்தி உயிருடனிருந்த காலம் முதலே இந்த விவாதம் நடந்துவந்தது. அவ்வப்போது வேறு ஏதாவது துறையில் குறிப்பிடத்தக்க ஒருவர் காந்திமேல் கடுந்தாக்குதல் தொடுப்பார். ஓஷோ அல்லது வி.எஸ்.நய்ப்பால் அல்லது சுதீர் கக்கர். மார்க்ஸியர்களுக்கும் இந்துத்துவர்களுக்கும் காந்திமேல் ஒரே வகையான – கிட்டத்தட்ட ஒரே சொற்களிலான- எதிர்ப்பு உண்டு. அவை கிளம்பி வந்துகொண்டே இருக்கும்

என்னிடம் அதிகமாக மார்க்ஸியர்களே இப்படிப் பேசியிருக்கிறார்கள். நான் உடனே ‘சரி, அவரைவிடுவோம். வேறு எவர் உலகின்மேல் மெய்யான செல்வாக்கு செலுத்தியவர்கள்? யார் சொன்னதை உலகம் அப்படியே கடைப்பிடிக்கிறது?’ என்பேன்

அவர்கள் கொஞ்சம் தயங்கி ‘மார்க்ஸ்’ என்பார்கள்.  “இன்று ஒரு அறிவுத்தரப்பினரின் முதலாசிரியர் என்பதற்கு அப்பால் எங்கே மார்க்சியம் உள்ளது? அது ஒரு அரசியல்செயல்திட்டம். நூறாண்டுகளில் அந்த அரசியல் செயல்திட்டம் எங்கே வென்றது?” என்று கேட்பேன். முக்கி முனகி கடைசியில் ‘கியூபா’ என்பார்கள்.

“ஏன் தோழர், அங்கிருப்பதை கம்யூனிஸம் என்றே வைத்துக்கொள்வோம். உலகமெங்கும் கிட்டத்தட்ட மூன்றுகோடி பேரை வெவ்வேறு கிளர்ச்சிகளிலும் புரட்சிகளிலும் களையெடுப்புகளிலும் பலிகொண்டு மார்க்சியம் அடைந்த வெற்றி ஒன்றேகால்கோடி பேருக்கு ஒரு கம்யூனிச சர்வாதிகார அரசை அளித்ததுதானா?’ என்பேன்.

“அப்டி இல்லை, மார்க்ஸியத்தோட செல்வாக்கை நீங்க சிந்தனையிலே ஒட்டுமொத்தமா பாக்கணும்” என்பார்கள். “சரி, அப்டி காந்தியோட செல்வாக்கை பார்க்கக் கூடாதா? இத்தனைக்கும் காந்தி அரசியல்செயல்திட்டம் ஒன்றையும் முன்வைத்தவர் இல்லை” என்று கேட்பேன்.

“மார்க்ஸியம்னா மார்க்ஸ் மட்டுமில்லை, பலபேர் இருக்காங்க” என்பார். “அதேதான் காந்திக்கும், காந்தியம் பலகிளைகள் கொண்டது”என்பேன். ஆனால் வழக்கம்போல “நீங்க இன்னும் படிக்கணும் தோழர்”என்று தொடங்கிய இடத்திலேயே சென்றுநிற்கும்

காந்தி, மார்க்ஸ் மட்டுமல்ல ஹெகல், ஷோப்பனோவர், சங்கரர், அரிஸ்டாட்டில்,பிளேட்டோ, நபி,ஏசு,புத்தர், கிருஷ்ணன் என இந்தப்பூமியை வடிவமைத்த எவருடைய சிந்தனையும் அப்படியே ‘நேரடியாக’ ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. அவ்வண்ணமே நடைமுறையானதில்லை. ஒன்றுக்கு ஒன்று என்னும் விளைவை உருவாக்கியதுமில்லை. அப்படி ஆகமுடியாது என்பதையே சிந்தனைகளின் முரணியக்கம் என்று சொல்கிறார்கள்.

ஏனென்றால் எந்தச் சிந்தனையும் எதிர்த்தரப்பு அற்றது அல்ல, எதிர்விசை இல்லாமல் அது செயல்படவும் முடியாது.

ஒரு சிந்தனை எப்படிச் செயல்படும் என்பதற்கான எளிய வரையறை இது. அச்சிந்தனை அதற்கு எதிரான சிந்தனைகளுடன் முரண்பட்டு உரையாடி முன்னகரும். இரண்டு அச்சிந்தனை அச்சூழலின் ‘நிலைத்து நீடிக்கும் விருப்பத்துடன்’ மோதி சற்றே முன்னகர்த்தி சற்றே தானும் உருவழிந்து செயல்படும். இந்த இரண்டு முரணியக்கங்களும் இல்லாத சிந்தனையே இல்லை.

காந்திய சிந்தனைக்கு எதிர்ச்சிந்தனைகள் என்பவை இரண்டு, 1. அன்று உருவாகி மேலெழுந்துகொண்டிருந்த முதலாளித்துவ,நுகர்விய சிந்தனைகள்.2. நுகர்வியத்தை ஏற்றுக்கொண்டு புவிமேல் மானுட ஆதிக்கத்தை முன்னிறுத்திய மார்க்ஸியச் சிந்தனைகள். இவ்விரண்டுடனும் காந்தியம் தொடர்ந்து மோதி விவாதித்துக்கொண்டேதான் இருக்கும். அதன் சிந்தனைப் பாதிப்பு என்பது அந்த உரையாடலின் விளைவான ஒன்றாகவே அமையும்.

எதிர்க்கருத்துக்களை முற்றாக தோற்கடித்து முழுமுற்றான உண்மை என்று எந்தக் கருத்தும் தன்னை நிறுவ முடியாது. அப்படி நிறுவச்செய்ய அரசதிகாரம் பயன்படுத்தப்பட்டால் பேரழிவு உருவாகும்.

இரண்டாவது, காந்தியின் காலம் வரை சமூகப்பொருளியல் வளர்ந்து வந்து ஒரு நிலைத்தன்மையை அடைந்திருக்கிறது. அது அப்படியே நீடிக்கவே விரும்பும். இயற்கையைச் சுரண்டிய பொருளியல், நுகர்வு, மானுடமைய உலகநோக்கு என்று அதற்கு பல அடிப்படைகள். காந்தியம் அந்த நிலைத்தன்மையை நகர்த்த முயல்கிறது. அமைப்பு எதிர்ப்பை அளிக்கிறது. மாற்றம் இருபக்கமும் நிகழும். காந்தியை அல்ல எந்தச் சிந்தனையாளரின் பாதிப்பையும் இப்படித்தான் புரிந்துகொள்ளமுடியும்

உலக அளவில் கண்கூடான காந்தியச் செல்வாக்கு என்ன? இன்று உலகமெங்கும் அரசியல்போராட்டங்களில் 99 சதவீதம் ‘குடிமைச்சமூகத்தின் ஒத்துழையாமை’ [ civil disobedience] என்ற அளவிலேயே நிகழ்கிறது. அந்தக் கருத்துக்கு நவீன ஐரோப்பாவிலும் சமணமதத்தின் வரலாற்றிலும் வேர் உண்டு. அதை நவீன ஜனநாயகத்தின் அரசியல்வழிமுறையாக உலகளாவ நிறுவியவர் காந்தியே.

காந்திக்குப்பின் உலகில் நிகழ்ந்த 90 சதவீதப் போராட்டங்களும் காந்தியவழியிலானவை. எஞ்சியவை, ஆயுதத்தை கையாண்டவை, அவை மிகப்பெரும்பாலும் தோற்கடிக்கப்பட்டன, முற்றழிவை மட்டுமே அளித்தன. நெல்சன் மண்டேலா முதல் சென்ற அரைநூற்றாண்டு வரலாற்றை நோக்குபவர்கள் அரசியல்போராட்டங்களில் காந்தியின் சிந்தனை- வழிமுறையின் செல்வாக்கை கண்முன்மலை என காணமுடியும்—கண்களை மூடிக்கொண்டால் தெரியாது.

குடிமைச்சமூக எதிர்ப்பு எல்லா தருணங்களிலும் வெற்றி அளிக்குமா? இல்லை, அது ஒன்றும் மாயமந்திரம் அல்ல. அது மக்கள் தங்கள் ஆற்றலை திரட்டிக்கொண்டு வரலாற்றுடன் மோதும் ஒரு வழிமுறை. வரலாற்றின் நெறிகள் முழுக்கமுழுக்க எவராலும் எதனாலும் கட்டுப்படுத்த முடிபவை அல்ல. வெல்லும் வாய்ப்பு வரலாற்றில் இருந்தால் மட்டுமே போராட்டங்கள் வெல்லும். ஆனால் மக்களின் விழைவு வரலாற்றை மாற்றவேண்டுமென்றால் குடிமைச்சமூக எதிர்ப்பு ஒன்றே வழி.

இரண்டாவதாக அதிகாரப்பரவலாக்கம், குடிமகனின் தனிப்பட்ட ‘அரசின்மை’க்கான சுதந்திரம், மையப்படுத்தலுக்கு எதிரான பார்வை ஆகியவற்றில் காந்தியின் செல்வாக்கு கண்கூடானது. குடிமகனை முழுக்கமுழுக்க அரசின் பகுதியாக ஆக்கிய நவஐரோப்பாவின் அரசியல் நோக்குக்கு நேர் எதிரானது அது. ஆகவே ஃபாசிசத்திற்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம். இன்னும் நெடுங்காலம் அது அப்படித்தான் இருக்கும்.

கடைசியாக உலகளாவ சூழியல்சிந்தனைகளில், மாற்றுப்பொருளியல் சிந்தனைகளில் காந்தியின் செல்வாக்கு. ஷூமாக்கர் முதல் புகுவேகா வரை இதை காணலாம். மனிதனை மையமாக்காத ஓர் இயற்கையை உருவகம் செய்துகொள்ளுதல், இயற்கையை அழிக்காத உற்பத்திமுறைக்கான கனவு, நுகர்வியத்திற்கு எதிரான நிலைபாடு ஆகியவை இன்றைய உலகசிந்தனையின் மையப்போக்குகள். அவை எதிர்ச்சிந்தனைகள். இன்றிருக்கும் உலகுதழுவிய நுகர்வுமுதலாளித்துவத்திற்கு எதிரான எதிர்நிலைகள். அவற்றை உருவாக்கிய அடிப்படைச்சிந்தனைகளில் ஒன்று காந்தியம்.

காந்தியின் சிந்தனைகள், வழிமுறைகளில் இருந்து இன்றைய இச்சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதற்காகவே காந்தி விரிவாகப் பேசப்படுகிறார், விளக்கப்படுகிறார். எல்லா சிந்தனைகளும் அப்படித்தான் வளர்கின்றன. மார்க்சியமும் காந்தியமும் எல்லாம் விளக்கம், மறுவிளக்கம், விரிவாக்கம் வழியாகவே உலகளாவிய சிந்தனையாக மாற்றப்படுகின்றன.

ஒரு சிந்தனையாளன் ஒன்றைச் சொல்ல உலகம் அப்படியே அதை ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும், எனில் மட்டுமே அவன் சிந்தனையாளன் என்றால் உலகில் இதுவரை சிந்தனையாளர்களே தோன்றவில்லை என்று பொருள்.

காந்திய ஒழுக்கவியல் பழைய சமண- வைணவ ஆசாரம் சார்ந்தது. அவருடைய குடிமைச்சமூகம் குறித்த பார்வை, தனிமனித அரசியல் குறித்த பார்வை, இயற்கை குறித்த பார்வை எப்படி உலகளாவ ஏற்கப்படுகிறதோ அதற்கு நிகராக காந்திய ஒழுக்கவியல் மறுக்கவும் படுகிறது. காந்தியை ஏற்பது என்பது காந்தியை வழிபடுவதோ தலைமைகொள்வதோ அல்ல.

காந்தியில் ஒருவர் எதை ஏற்கிறார் என்பது அவருடைய சிந்தனைகளைச் சார்ந்தது. ஒருவர் காந்தியில் இருந்து மையநீக்கம் என்ற கருத்தை மட்டும் ஏற்கலாம். மனிதமையமற்ற இயற்கையை நோக்கும் பார்வையை மட்டும் பெற்றுக்கொள்ளலாம். அரசின்மைவாதத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளலாம். அப்படித்தான் உலகமெங்கும் சிந்தனையாளர் ஏற்கப்படுகிறார்கள். அந்தக்கோணத்திலேயே முதலாளித்துவநாடுகளின் மக்கள்நலத்திட்டங்களில் மார்க்ஸின் செல்வாக்கு உண்டு என்கிறோம்

கடைசியாக ஒன்று ‘வெற்றிபெற்று’ ‘உலகை ஆளும்’ சிந்தனை மட்டுமே உண்மையானது, அதுவே உலகைப்படைப்பது என்பது ஒரு எளிய மாயை. எதிர்ப்பாக மாற்றாக நிலைகொள்வது அதைவிட ஆற்றல்கொண்டது. ஏனென்றால் அது சமகாலத்தின் முழு எடையையும் தாங்கி அந்த எதிர்ப்பை அளிக்கிறது. காந்தியம் இன்றும் பல தளங்களில் சமகால அதிகாரம், பொதுப்போக்கு ஆகியவற்றுக்கு எதிரான விசைதான். ஆகவேதான் அது என்றும் சிந்தனையாளர்களைக் கவர்வதாக உள்ளது.

காந்தியம் எதிர்ப்பினால் ஆனது.  எதிர்ப்புக்கு ஆதாரமாக அமைவது நம்பிக்கை. இவ்வுலகை மாற்றிவிடமுடியும் என்ற கனவு. அந்நம்பிக்கையை இழப்பவர்கள் காந்தியிடமிருந்து விலகிச் செல்கிறார்கள். அவர்கள் பொதுவாகவே எல்லாவகையான இலட்சியவாதங்களில் இருந்தும் விலகிச் செல்பவர்கள். அவர்களின் பாதை வேறு.

நண்பர் பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதிய குறிப்பு இதை எழுதச் செய்தது. அவருடைய ‘இன்றைய காந்திகள்’ என்ற நூல் நான் மேலே சொன்ன அனைத்துக்குமான நேரடியான நடைமுறை உதாரணங்களால் ஆனது. அந்நூல் நவீன இந்தியாவை மட்டுமே கருத்தில்கொள்வது. அதிலும் வெரியர் எல்வின் முதல் லாரி பேக்கர் வரை காலம்சென்ற பலர் இல்லை. உலகம் முழுக்க அத்தகைய இன்றைய காந்தியர்களை பட்டியலிட்டால்  மிகமுக்கியமான நூறுபேரைச் சொல்லமுடியும்

ஜெ

காந்தி என்ன கிழித்தார்? – பாலசுப்ரமணியம் முத்துசாமி

ஜே சி குமரப்பா, தனது முதுநிலைப் படிப்புக்காக எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு, ‘The contribution of Public finance to the present Economic State of India’. இந்த ஆய்வறிக்கை நாட்டின் இயற்கை வளங்களை அளவோடு பயன்படுத்தி, மக்கள் நன்மைக்காக, முற்போக்கு வரிவிதிப்பு முறைகளை (progressive taxation) உபயோகிப்பது பற்றிப்பேசியிருந்தார். அதில் பிரிட்டிஷ் வரிவிதிப்பு முறைகள் எப்படி, ஏழைகளிடம் இருந்து அதிக வரி வசூல் செய்து, அதை நிர்வாக, காலனிய சௌகர்யங்களுக்காக அரசு செலவு செய்கிறது என்பதை விரிவாக ஆராய்ந்திருந்தார். நிலவரி, உப்பு வரி முதலியவற்றின் அநீதியை, அவர் சுட்டியிருந்தார். இந்த ஆய்வறிக்கையை ஒரு புத்தகமாக வெளியிடும் பொருட்டு, அவர் 1929 ஆம் ஆண்டு காந்தியைச் சந்தித்தார்.

காந்திக்கு அவரது பொருளியல் அணுகுமுறை மிகவும் உகந்ததாக இருந்தது. குமரப்பாவைப் பற்றிப் பிறிதொருமுறை குறிப்பிடுகையில், ‘ He came, ready made’, எனக் குறிப்பிட்டார். குஜராத்தி வித்யாபீடத்துடன் இணைந்து, ஒரு ஊரகப் பகுதியை முழுமையாக பொருளியல் ஆய்வை நடத்துமாறு பணித்தார். அந்த ஆய்வறிக்கை, (மட்டார் தாலூகா பொருளியல் ஆய்வு) காலனிய பிற்போக்கு வரிமுறையின் தீமைகளையும், வேளாண்மை, நீர் நிர்வாகம் போன்றவற்றை எப்படி காலனிய அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் தரவுகளோடு சொல்கிறது.

1929 லாகூர் காங்கிரஸ், நேருவின் தலைமையில், ‘பூர்ண ஸ்வராஜ்யமே’, இனி குறிக்கோள் என அறிவித்திருந்தது. ஆனால், காந்தியோ, அடுத்த ஜனவரியில், வைசிராய்க்கு 11 கோரிக்கைகளை வைக்கிறார். நிலவரி, உப்பு வரி, மது வணிகம், சுங்க வரி, கப்பல் வணிகம், ராணுவச் செலவுகள், காலனி அதிகாரிகளின் சம்பளம் என, அதன் பல அம்சங்கள், பிரிட்டன் எவ்வாறு இந்தியாவைப் பொருளியல் ரீதியாகச் சுரண்டுகிறது என்பதையும், அவை மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் பேசியது. காங்கிரஸில் பலருக்கும் இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மோதிலால் நேரு, தன் மகனும், காங்கிரஸ் தலைவருமான ஜவஹர்லால் நேருவுக்கு இதைப் பற்றிக் கடிந்து கடிதம் எழுதுகிறார். ஆனால், காந்தி, தன் நிலையைப் பொறுமையாக நேருவுக்கு விளக்குகிறார். பூரண ஸ்வராஜ்யமே குறிக்கோள் என அறிவித்த பின்பு, பொருளியல் சுரண்டல் பற்றிய கோரிக்கைகள், செல்லும் திசையை மாற்றுவது போலத் தோன்றியதில் வியப்பில்லை

காந்திக்கு, காலனி ஆதிக்கம் இந்திய மக்களை, குறிப்பாக ஏழைகளைச் சுரண்டுவது பற்றிய அறிதல் ஏற்கனவே இருந்தது. தாதாபாய் நௌரோஜி, கோவிந்த் ரானடே போன்றவர்கள் பலகாலம் முன்பே இதைப் பற்றி எழுதியிருந்தார்கள். காந்தியும் யங் இந்தியாவில் இது பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருந்தார். ஆனால், குமரப்பா அவருடன் வந்து இணைந்து கொண்ட போது, இதைப் பற்றிய அறிதல், பொருளியல் கோட்பாடுகளின் பிண்ணணியில், தரவுகள் திரட்டப்பட்டு மேலும் கூர்மையடைந்தது என்கிறார் ஆய்வாளர் சைத்ரா ரெட்கர்.

உப்புச் சத்தியாக்கிரகம், இந்திய விடுதலைப் போரின் மிக முக்கியமான போராட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பின்னர் கிராம முன்னேற்றத்திட்டங்களுக்கான கொள்கைகளை வகுப்பதிலும், நிறுவனங்களை உருவாக்குவதிலும் குமரப்பா ஈடுபட்டார். 1934 ஆம் ஆண்டு பனாரஸ் காங்கிரசில் ‘சுதேசி’ என்பதன் வரையறை என்ன என்பது பற்றிய வாக்குவாதங்களில் நடுவராக இருந்த குமரப்பா, இந்திய மக்களின் சக்தியை உபயோகித்து உருவாக்கப்படுபவையே சுதேசி என இறுதி செய்தார். இதன் முடிவில், 1934 ஆம் ஆண்டு, ’அகில இந்திய கிராம தொழில் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டது. ஊரக புனர் நிர்மாணத்தைக் கட்டமைக்க விரும்பிய காந்தியின் முயற்சியாகும். இந்த அமைப்பு. கிராம தொழில் அமைப்புகள், ஆராய்ச்சி, பயிற்சி முதலிய பல தளங்களில் செயல்பட்டது.

1940 களில் பாம்பே மில்க் ஸ்கீம் என்னும் ஒரு திட்டம் ஆங்கிலேயரால் தீட்டப்பட்டது. பெருநகரமான பம்பாயின் பால்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய, பால் பல்வேறு இடங்களில் இருந்து கொள் முதல் செய்யப்பட்டது. குஜராத்தில் உள்ள ஆனந்த் என்னும் ஊரில், பால்சன் என்னும் ஆங்கில வணிகர் பாலைக் கொள்முதல் செய்து வந்தார். பால் உற்பத்தி, குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும். அப்போது அந்த வணிகர் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை வாங்க மறுத்தார். அவர்கள், தங்கள் தலைவரான வல்லப் பாய் படேலிடம் சென்று முறையிட்டார்கள். வல்லப்பாய் படேல், மொரார்ஜி தேசாய் மற்றும் திருபுவன் தாஸ் படேல் இருவரையும் அழைத்து, ஒரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவை ஏற்படுத்தி, அவர்களே பாலை பம்பாய்க்கு அனுப்பும் வகையில் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்த ஆணையிட்டார். ஆனந்த் மில்க் யூனியன் என்னும் அமுல் உருவானது. உற்பத்தியாளர்களே தங்கள் பொருளை நுகர்வோருக்கு நேரிடையாகச் சென்று சேர்க்கும் தொழில் மாதிரி.

இந்த தொழில் மாதிரியின் அடிப்படை, காந்தியப் பொருளியலின் முதல் விதி – Production by masses and not mass production – நாடெங்கும் இன்று 1.7 கோடி பால் உற்பத்தியாளர்கள், இந்த கூட்டுறவு இயக்கத்தில் இணைந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 50 கோடிக்கு அதிகமான நுகர்வோரிடம், தங்கள் உற்பத்தியை இடைத்தரகர்கள் இன்றி, நேரிடையாகக் கொண்டு சேர்க்கும் ஒரு தொடர்புச் சங்கிலியை உருவாக்கி, கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். நுகர்வோர் பொருளுக்குச் செலுத்தும் பணத்தில் 70-75%, உற்பத்தியாளர்களை, வாரா வாரம் தவறாமல் சென்றடைகிறது. உழவர்களின் வீடுகளில், under employed ஆக இருக்கும் மகளிரின் உழைப்பு இதில் உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரும் தனியார் நுகர்பொருள் நிறுவனமான இந்துஸ்தான் லீவரின் வருட வருமானம் 39000 கோடி. பெரும் உணவுப் பொருள் நிறுவனமான ப்ரிட்டானியா 11000 கோடி. பால்த்துறையில் உலகில் மிக முக்கியமான பன்னாட்டு நிறுவனமான நெஸ்ட்லே யின் வருட வருமானம் 12000 கோடி.

இவற்றோடு ஒப்பிடுகையில், அமுல் சின்னக் கொசு அளவிலானது. வருட வருமானம் வெறும் 45000 கோடிதான். இந்தியாவின் கூட்டுறவு பால் நிறுவனங்கள் அனைத்தையும் சேர்த்தால் 1 லட்சம் கோடி வரலாம்.

இதில் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், இந்த் தொழில்முறையில் லாபம் என்னும் கருதுகோள் கிடையாது. உற்பத்தியாளர்களும், நுகர்வோரும், உற்பத்தி விலைக் காரணிகள் மற்றும் சந்தை மதிப்பு இவற்றின் கலவையாக, இருவரும் ஒரு விலையில் சந்தித்துக் கொள்கிறார்கள். மற்ற வேளாண் பொருட்களில், உற்பத்தியாகும் பொருள் குறைந்தது 2-3 கை மாறி, அவர்களின் லாபம் சேர்க்கப்பட்டே நுகர்வோரை அடைகிறது. இதனால், உற்பத்தியாளருக்கு சரியான விலை கிடைப்பதில்லை. நுகர்வோரும், பொருளுக்கு அதிக விலை தரும் நிலை உருவாகிறது. கூட்டுறவு மாதிரியில் இது தவிர்க்கப்பட்டு, . இருவரும் பயன்பெறும் ஒரு நிலை உருவாகிறது.

இது போன்ற சில பல சில்லறை முயற்சிகள், மற்றும் மிகக் குறைவான உயிர்ப் பலியில் உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு விடுதலை போன்ற வேலைகள் தாண்டி, காந்தியினால் பெரிதாய் ஒன்றும் கிடைத்தது மாதிரி தெரியவில்லை

இன்றைய காந்திகள் நூல் பற்றி… பால சுப்ரமணியம் முத்துசாமி

அந்தக் கட்டுரைத் தொடரை எழுத மிக முக்கியமான தூண்டுதலே, படித்தவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இடையே காந்தியப் பொருளியல் பற்றிய சரியான புரிதல் இல்லாததுதான். காந்தியும் குமரப்பாவும் அன்று உபயோகித்த குறீயீடுகளை, இன்று மேற்கோள் காட்டி, அதெல்லாம் காலத்துக்கு உதவாது என்பது போன்ற பாவனையான வாதங்கள் வைக்கப்பட்டன. ராட்டையில் நூல் நூற்று இன்று பொருளாதாரத்தை முன்னேற்ற முடியுமா அல்லது ட்ராக்டர் சாணி போடுமா என்னும் குமரப்பாவின் வாதம் எவ்வளவு சரி என்பது போன்றவை.

காந்தியப் பொருளியல் இரண்டு முக்கியமான அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று, அனைத்து மக்களுக்குமான சூழலாக அது அமைய வேண்டும். பெரும்பாலானோர், உடல் உழைப்பில் ஈடுபடும் நிலைமை இருக்கையில், மனித உழைப்பைத் தவிர்க்கும் தொழில்நுட்பம் நிறுவனத்துக்கான செயல் திறனைக் கொண்டிருந்தாலும், சமூகத்துக்கான பயன் திறனைக் கொண்டிருக்காது. எனவே, மக்களை உள்ளிழுத்து, அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் குறைந்த பட்சம் ஏற்படுத்தும் பொருளியல், தொழில்முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இரண்டாவது, மேற்கத்திய முதலாளித்துவம், இயற்கை வளங்களை சீரழிக்கும், செயல்திறனற்ற வகையில் பயன்படுத்தும் தொழில்முறை. அது காலனி ஆதிக்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களின் மீது கட்டப்பட்ட ஒன்று. இந்தியா போன்ற அதீத மக்கள் நெருக்கம் கொண்ட சமூகத்துக்கு அது ஒத்து வராது. எனவே, decentralize செய்யப்பட்ட, உள்ளூர் சிறு/குறு தொழில்முறைகளே சரியாக இருக்கும். இது காந்தி / குமரப்பாவின் பொருளியல் தரப்பு. இன்றைக்கும் இந்தியாவில் மிக அதிகமாகத் தொழிலளர்களுக்கு வேலையளிப்பது சிறு/குறு நிறுவனங்களே. பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு பொருளியல் வளர்ச்சியில் இருந்தாலும், வேலைவாய்ப்பில், அவற்றின் பங்களிப்பு குறைவு.

இன்றைய காந்திகள் புத்தகத்தில் கையாளப்பட்டிருக்கும் ஒவ்வொரு உதாரணமும், இந்தக் கருதுகோள்களின் மீது எழுந்த வெற்றிகரமான உதாரணங்கள். பால்க் கூட்டுறவு, அர்விந்த் மருத்துவமுறை மட்டுமல்ல, இலா பட் உருவாக்கியுள்ள ஒரு காந்தியத் தொழிற்சங்கம் கூட இந்த அடிப்படையில் செயல்படுகிறது என்பதைப் படிக்கும் ஒவ்வொருவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். காந்தியம் எப்படி இன்றையச் சூழலில் உருமாறி, நவீன உருவில், எந்த அரசு மற்றும் தனியார் நிறுவனத்தையும் விட மிக அதிகமாக மக்களுக்குப் பயனளிக்கிறது என்பதைத் தரவுகள் மூலம் அந்தப் புத்தகம் விளக்குகிறது.
முந்தைய கட்டுரைகதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]
அடுத்த கட்டுரைதங்கப்புத்தகம்,அன்னம்- கடிதங்கள்