தங்கப்புத்தகம், மலையரசி- கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் இப்பொதுதான் வாசித்தேன். இதை வாசிக்க எனக்கு எட்டு நாட்கள் தேவையாகியிருக்கிறது. பலமுறை வாசித்தேன். பலமுறை நடுவே விட்டேன். எனக்குத் தேவையாக இருந்தது அந்த தனிமையில் தங்கும் தவத்துக்கும் அந்த தங்கப்புத்தகத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பதுதான். பிறகு தோன்றியது தங்கப்புத்தகம் நம்முடைய மனசுதான். அந்த ஆழத்துக்கு போகிற வழியைத்தான் அப்படி மிஸ்டீரியஸ் ஆகச் சொல்லியிருக்கிறீர்கள். அந்த ஆழத்தில் பாறையின் உள்ளே அது இருக்கிறது. வாசிக்க வாசிக்க மாறிக்கொண்டே இருக்கும் தங்கப்புத்தகம் அது. ஒரு குகைக்குள் இருந்து அதை வாசிக்க முயன்று தோற்ற முக்தா அதை வாசித்தபின் தெளிவடைந்து மீண்டும் அந்தக்குகைக்குள்ளேயே வருகிறார்

டி.எஸ்,முருகவேல்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு .,

தங்களின் கதைமாந்தரான ஔசேப்பச்சன் கூறும் த்ரில்லர் சாகச கதைகள் போல , முக்தா கூறும் கதைகள் அதற்கு மேலே சாகசத்தை நோக்கி விரிகிறது. ஔசேப்பச்சனுக்கு ஒரு மது விடுதி வேண்டும் கதை சொல்ல., முக்தாவிற்கு ஊட்டி குருகுலம். ஔசேப்பச்சன் கதை உலகியல் நோக்கி செல்லும்போது, முக்தாவின் கதைகள் ஞானத்தை நோக்கி தன் மென் சிறகை விரிக்கிறது.

தங்கப்புத்தகம் இலக்கியமும் தத்துவமும் சரியாக இணையும் பிரதியாக அமைகிறது. எல்லையற்ற ஞானமும் , எல்லையற்ற காமமும் இணையும் வஜ்ராயன பௌதம் போல. இக்கதையின் அமைப்பும் , கூறுமுறையும் தங்கப்புத்தகத்தை நோக்கி நம்மை அழைக்கிறது. ஒரு த்ரில்லர் நாவலைப் போல. தங்கப்புத்தகத்திற்கான தேடலும் , தங்கப்புத்தகமும் முதலில் படிமமாக மனதில் அமைகிறது. கதை முடிந்தபிறகு , அந்த படிமம் தான் நம்மை தத்துவத்தை நோக்கி நகர்த்துகிறது.

இந்த கதையே தங்கப்புத்தகத்தைப் போல ஒரு மாயத்தோற்றத்தை அளிக்கிறது. எந்த ஒரு நகலும் மூலப்பிரதியை விட்டு சிறிதலவேனும் மாறுபட்டவேயே என்ற வரிகள் எந்த தளத்திற்கும் செல்லுபடியாகும் போல் தோற்றம் தருகிறது. உதாரணமாக, உயிர்த்தோன்ற காரணமான புரதவிதையை மூலப்பிரதியாக எடுத்துக்கொண்டால் , அதிலிருந்து வந்த நகல்கள் தானே நாம். உலகில் வாழும் பல்லாயிர ஜுவராசிகளும் அம்மூலத்தின் நகல்கள் தானே. எவ்வளவு வேறுபாடு. எந்த நகலும் மூலப்பிரதியின் கூறு கொண்டவை மட்டுமே, மூலம் அல்ல.

இன்னொறு பார்வையில் , இக்கதையே பிரபஞ்ச தரிசனத்தை நோக்கிய பார்வையாக உள்ளது.  சங்கரரும் , இராமனுஜரும் , மத்வரும் இப்பிரஞ்ச மூலப்புத்தகத்தின் வெவ்வேறு நகலையே தங்கள் தரிசனமாக முன்வைக்கிறார்கள் என்று கதையின் ஆரம்பத்தில் வருகிறது. இந்திய ஞானம் அனைத்தும், அப்படி ஒரு தங்கப்புத்தகத்தின் நகல்கள் தானோ? அதை நோக்கிய தேடல் தானே முக்தாவின் தேடல். இறுதியில் அவர் அடைவதும் அப்படி ஒரு ஞானத்தை தானோ. “எதையும் அடையமுடியாதவனாக மாறினேன். ஆகவே எதையும் இழக்க இல்லாதவனாகவும் ஆனேன். ” இந்த இடத்திற்கு தானே ஞானம் ஒருவனைக் கொண்டு செல்கிறது.

முக்தா முதலில் தங்கப்புத்தகத்தைக் கண்டடைந்ததும் வரும் ஏமாற்றம், ஞானத்தை தன் கைகளால் தழுவ முயலும் அனைவருக்கும் உரியதே. இதுதானா ? இதற்குத்தானா இவ்வுளவு தூரம் அழைந்தோம் ? ஆனால், அந்த இடம்தான் தேடலின் உண்மையான தொடக்கமாக அமைகிறது. அங்கிருந்து, அவன் உள்சென்று அடைவதே ஞானம்.

பாட் கதாப்பாத்திரம் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றுகிறது. இப்புவியின் அறிவியல் காலகட்டத்து பிரதிநிதியாக உள்ளே வருகிறான் பாட். அறிவியல் உள்நுழைந்தபோது பிரபஞ்சம் ஞானம் மறைபொருள் எல்லாம் obsolete ஆகப்போகிறது என்று கூக்குறல் இட்டது. இப்பொழுது அது சென்று சேர்ந்திருக்கும் இடத்தை கதையில் அறியலாம். தங்கப்புத்தகத்தின் மாயத்தோற்றம் புலப்படும் போது, முக்தா உள்நுழைய எத்தனிக்கிறார். பாட் வெளியேறுகிறார். அற்புதமான படிமம்.

கயிற்றரவம் என்ற படிமம் வேதாந்த தத்துவத்தை விளக்குவதற்கு பயன்படுத்துவதைப்போல, தங்கப்புத்தகம் இப்பிரபஞ்சப் பார்வையை விளக்கும் செவ்வியல் படிமமாக அமைகிறது.

கார்த்திக் குமார்.

***

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

லட்சுமியும் பார்வதியும், மலையரசி ஆகிய இரண்டு கதைகளை வாசித்தேன். சென்ற புனைவுக் களியாட்டு தொடரில் நீங்கள் திருவிதாங்கூர் சமஸ்தானம் பற்றி எழுதிய போழ்வு, இணைவு கதைகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. இப்போது இந்த இரண்டும். இவற்றைக் கொண்டு ஒரு ஊகமாகச் சொல்கிறேன் இது மாபெரும் வரலாற்று நாவலாக உருவாவதற்கான முன்னோட்டம்தான் இந்தக் கதைகளோ என்று எண்ணுகிறேன்.

புனைவுக்களியாட்டில் எழுதிய திருவிதாங்கூர் வரலாறுசார் கதைகளில் வேலுத்தம்பி தளவாய் எவ்வளவு முக்கியம் மிக்க கதாபாத்திரமாகவும் அரசியலின் பிடிவாதக்காரராகவும் எம்முள் இருந்தாரோ அதுபோல இந்த இரண்டு கதைகளிலும் கௌரி பார்வதி பாய் வந்தமர்கிறார். ஆனால் பார்வதி அதீதமான ராஜதந்திரி என்று அறியமுடிகிறது. அதற்கு இக்கதையில் உள்ள ஓரிடம் வலுவான சான்றை முன்வைக்கிறது. கேணல் மன்றோவை பார்வதி பிரிட்டன் அனுப்பியமை பற்றியும் அரசியல் பற்றிய ராமவர்மா உடனான உரையாடலும் ரெசிடன்ட்களை  நடத்த வேண்டிய விதம் தொடர்பான பார்வதி உரையாடலும் இதைச் சான்றாக்குகிறது.

மலையரசி கதையில் கவித்துவம்

மிக்க இடங்கள்  என்று பல உள்ளன. நான் இதில் கவனித்த விடயம், அவை அனைத்தும் பார்வதி கூற்றாகவே வருகிறது. கலையில் ஆர்வம் கொண்டவன் என்று தன்னக் கூறிக் கொள்ளும் ராம வர்மாவின் கூற்றாக யாதுமில்லை. கலை என்பது பொது அனுபவமும் சார்ந்தது என்று கதை சொல்லி கூற வருகிறார் என்பதை இதிலிருந்து அறியமுடிகிறது.

யுத்தமும் ராஜதந்திரமும் ஆண்களுடையது. அவற்றின் விளைவு பெண்களுக்கும் குழந்தைகளுக்குமானது என்பதே பல காலத்து வரலாறு. இக்கதைகளில் குழந்தைப் பருவத்தில் இருந்து அரசியலும் யுத்தமும் அறிந்தவளாக பார்வதி உருவாகிறாள். ராமவர்மாவுக்கு அவள் இரண்டையும் சொல்லிக் கொடுக்கிறாள். ஆனால் அவனால் இதற்குள் செல்ல முடியவில்லை. இக்கதைகள் உண்மையாக நடந்தன என்பது ஒருபுறம் இருந்தாலும், அவை அபுனைவுகளாகத்தான் எழுதப்பட்டுள்ளன. அவை வெறும் செய்திகள். ஆனால் இக்கதையில் நீங்கள் ஒரு பெண்ணின் ராஜதந்திரங்களையும் ஆளுமையையும் மதிப்பிடுகிறீர்கள் என்றே நினைக்கின்றேன். இந்த மதிப்பீடு வரலாற்றுக் கதைகளில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் முக்கியமான ஆவணம்.

மெட்ராஸ் மாகாணத்தில் இணையாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நீண்டகாலமாக எண்ணிய சுதந்திரத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை இந்திய மாநிலங்களுக்குள் உள்ளீர்த்தமை தொடர்பான இனிவரும் கதையும் உங்கள் எழுத்துக்களால் எதிர்பார்ப்பது அவ்வரலாற்றின் அன்றைய காட்சிகளையும் மனநிலைகளையும் அறிய என்றே கூறுகிறேன்.  .

கேரளத்தின் வரலாற்றை அறிவதற்கு அண்மையில் சில நூல்களைத் தெரிந்து படித்தேன். அதில் ஒன்று உங்களுடைய முன்னுரையுடன் நிர்மால்யா எழுதிய “மகாத்மா அய்யன்காளி” என்ற  நூல். அய்யன்காளியின் வரலாற்று நூல் கேரளத்தின் அடிமை முறையை ஒரு  சித்திரமாக வெளிப்படுத்திய நூல். தாங்கள் தற்போது எழுதும் புனைவுகளுக்குப் பிற்பட்ட வரலாறு அய்யன்காளியினுடையது என்று நினைக்கிறேன்.

மலையரசி கதையில் கூட அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று பார்வதி ஆசைப்படுகிறார். பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்துள்ளார். அந்தச் செய்திகளை உலகளாவிய உதாரணங்களுடன் மனக்காட்சியாக இக்கதை கூறுகிறது.

இரண்டு பண்பாடுகளை இணைத்து எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். புனைவுகளில் இதற்கு முன்பு யாரும் முயன்றிடாத சாதனை என்று நினைக்கிறேன். அதுவும் காலக்கோடுகள் அனைத்தும் துல்லியமாகவும் பௌதிகக் காட்சிகள் பழையகாலத்தையும் ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாயர்களின் பணி எவ்வகையானது என்றும், நாஞ்சில்நாட்டு வெள்ளாளரின் அரிசிதான் திருவிதாங்கூரின் சோற்றுக்கலம் என்றும் ஒரு பண்பாட்டுக் கலப்பையும் எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இது தமிழின் புதிய வாசிப்பு வெளிகளைத் திறந்து விட்டிருக்கிறது.  குறிப்பாக உதிரிகளாக இருக்கும் தரவுகளையும் செய்திகளையும் காட்சிக்குள் கொண்டுவரும் அதீத முயற்சி இது.

(குறிப்பு- இந்த இரண்டு கதையிலும் வரும் பார்வதி ராணி இலங்கையில் புகையிலை வியாபாரத்தை ஒப்பந்தங்கள் செய்து மேற்கொண்டுள்ளார் என்றும் வெளித்தகவல்கள் மூலம் அறிந்துள்ளேன்.)

சுயாந்தன்

***

அன்புள்ள ஜெ,

மலையரசி, லட்சுமியும் பார்வதியும் இரு கதைகளும் இரண்டு வகையான ஆட்சியாளர்களின் கதைகள் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இரண்டு வகையான பெண்களின் கதைகள் என்று எடுத்துக்கொண்டால் இன்னும் அழகான விரிவு வருகிறது. பெண்ணுக்காக நம் சூழலில் இருந்து இரண்டு வகையான பெர்சனாலிட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. லட்சுமி ஒருவகை. துர்க்கை இன்னொரு வகை. துர்க்கையும் கருணைகொண்டவள்தான். ஆனால் அக்ரஸிவானவள். லட்சுமியக இருந்து வாழ்க்கையில் துர்க்கையாக ஆன ஏராளமான பெண்கள் உண்டு. அவர்களால்தான் கடுமையான சூழல்களை எதிர்கொள்ள முடிகிறது

வேல்துரை

***

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைவண்ணம், ஆமை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசித்தம் எப்படியோ