‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-3

அஸ்தினபுரியின் கிழக்குக்கோட்டை வாயிலில் பாண்டவர் ஐவருடைய கொடிகளும் அருகருகே பறந்தன. அதை அந்நகருக்குள் நுழைந்த அயல்வணிகர்கள் சிறுகுழுக்களாக கூடிநின்று சுட்டிக்காட்டி வியப்புடன் பேசிக்கொண்டனர். அந்நகருக்கு அவர்கள் வரத்தொடங்கிய நெடுங்காலமாகவே அவ்வண்ணம் ஐவர் கொடிகளும் சேர்ந்து பறந்ததில்லை. உத்கலத்தில் இருந்து வந்த பெருவணிகரான குபேரரும் அவருடைய தோழர்களும் அக்கூட்டம் ஒன்றில் நின்று அவர்கள் பேசிக்கொள்வதை கேட்டனர்.

“அவர்கள் ஐவரும் அஸ்தினபுரியில் ஒன்றிணைந்து இருந்தால் அஸ்தினபுரி அழியும், அன்றி அவர்களுடைய தொல்குடி முற்றழியும் என்றொரு தீச்சொல் உண்டு” என்று சூதன் ஒருவன் சொன்னான். “இளமையில் அவர்கள் வாரணவதம் எனும் ஊரில் தங்கள் அன்னையுடன் சென்று தங்கியிருக்கையில் துரியோதனனால் அவர்கள் தங்கியிருந்த மாளிகை எரியூட்டப்பட்டது. அதிலிருந்து தப்பும் பொருட்டு அவர்கள் ஐந்து மைந்தருடன் வந்த வேட்டுவ அன்னையொருத்திக்கு ஊனளித்து அவளை அரக்கு மாளிகையில் வைத்து பூட்டிவிட்டு நிலவறையினூடாக ஒளிந்து விலகிச் சென்றனர். எரிந்து பொசுங்கி அழிந்த அம்மைந்தரும் அன்னையும் இறக்கும் தருவாயில் அந்தத் தீச்சொல்லை விடுத்தனர்.”

“மலைக்குறத்தியின் சொற்கள் எரியென்றே எழுந்தன. ‘உங்கள் அன்னையுடன் துணைவியருடன் மைந்தருடன் கூடிவாழும் குடிவாழ்வு இனி ஒருபோதும் உங்களுக்கு அமையாது. அவ்வண்ணம் கூடியமையும் நாளில் நீங்களும் இதுபோல் முற்றழிவீர்கள். உங்கள் நகர் உடனழியும். எரி அறிக இச்சொல்!’ என்று அந்த அன்னை உரைத்தாள். தன் மைந்தர் ஊனுருகி எரிவதைக் கண்டு மேலும் வெறிகொண்டு நெஞ்சிலறைந்து ‘உங்கள் மைந்தர்கள் ஒருவர் எஞ்சாமல் அனைவரும் இவ்வண்ணமே எரியுண்டு அழிவார்கள்… அறிக மண்ணுள் வாழும் எங்கள் மூதாதையர்!’ என்று அவள் தீச்சொல்லிட்டாள்.”

“அவ்வண்ணமே ஆயிற்று” என்று சூதன் சொன்னான். “அச்சொல் அவர்களை தொடர்ந்தது. அவர்கள் இந்திரப்பிரஸ்த மாநகரை அமைத்தனர். அங்கே அரசாள இயலவில்லை. கான்வாழ்க்கையே அவர்களுக்கு அமைந்தது. அவர்கள் காட்டில் தங்கியிருந்த இடங்களிலெல்லாம் காட்டெரி எழுந்து சுழன்றது. ஏழுமுறை அவர்கள் காட்டிலிருந்து தப்பினர். தீங்கு தொடர்வதை உணர்ந்தபின் நிமித்திகன் ஒருவனை உசாவி அவ்வண்ணம் ஒரு தீச்சொல் அவர்கள் மேல் இடப்பட்டிருப்பதை அறிந்தனர். அதன் பின்னர் அவர்கள் ஐவரும் எந்நகரிலும் சேர்ந்திருந்ததில்லை.”

“எப்போதும் ஐவரில் ஒருவர் நகர் நீங்கி பயணம் செய்துகொண்டிருப்பார். சிலர் திசைவெல்ல கிளம்பியிருப்பார்கள். சிலர் தனிமையூழ்கத்திற்கு கானேகியிருப்பர். இந்நகரில் இருந்தாலும் ஒருவர் புராணகங்கைக்குள் காட்டிலேயே இருப்பார். அவை கூடுகையிலும் ஒருவர் இல்லாமலிருப்பது அவர்களின் வழக்கம். அதன் வழியாக அத்தீச்சொல்லை அத்தனை நெடுங்காலம் தங்களை அணுகாது அகற்றி நிறுத்தியிருந்தனர்” என்றான் சூதன். “அறிந்திருப்பீர்கள், அவர்களின் மைந்தர்கள் அனைவருமே எரியுண்டு மறைந்தனர். அவர்களில் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது அப்பெருந்துயர்.”

“எனில் இப்போது இந்நகர் எரிகொள்ளுமா?” என்று ஒருவன் கேட்டான். “அவர்கள் ஐவரும் நகர் திரும்பியிருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு இருந்தால்கூட அவையில் ஒருவர் குறைந்திருப்பார், புராணகங்கைக்குள் இருப்பார்” என்றான் சூதன். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்லத் தொடங்கினர். “மூத்தவர் யுதிஷ்டிரன் நைமிஷாரண்யக் காட்டில் ஊழ்கத்தில் இருந்தார் என்று சொன்னார்கள். இளையவர்கள் நான்கு திசைகளுக்கும் சென்றார்கள் என்று அறிந்தேன்” என்றார் ஒருவர். “ஆம், சகதேவன் தென்திசைக்கும் நகுலன் மேற்குக்கும் பீமன் வடக்குக்கும் சென்றனர். அர்ஜுனன் காண்டீபத்துடன் கிழக்கை நாடினார்” என்றார் இன்னொருவர். “அனைவருமே மீண்டுவிட்டனரா?” என்றார் ஒருவர். “அவ்வண்ணமே கொடிகள் கூறுகின்றன” என்றார் ஒரு முதிய வணிகர்.

குபேரரும் அவர் தோழர்களும் கோட்டை வாயிலிலேயே கூடாரநிழல்களில் அமர்ந்து அதைப் பற்றி பேசிக்கொண்டர்கள். “பாண்டவர்கள் நகரில் இருக்கிறார்கள் என்றால் அவர்களை நாம் சந்திக்கவேண்டும்” என்றார் குபேரர். “பிறிதொருமுறை அவர்களை நாம் சந்திக்கவே முடியாமலாகலாம் என்று தோன்றுகிறது.” முதியவரான சுவர்ணர் “நாம் ஏன் அவர்களை சந்திக்கவேண்டும்? அவர்களுக்கும் நம் வணிகத்திற்கும் என்ன தொடர்பு?” என்றார். “வணிகத்திற்கு எல்லா செய்திகளும் தொடர்புடையவையே. நாம் அவர்களை சந்தித்தால் அச்செய்தியே பல அரசுகளில் நமக்கு அவைநுழையவும் அரசர்முன் நின்று பேசவும் வாய்ப்பளிக்கும். வணிகர்களுக்கு அரசத்தொடர்புபோல நலம்பயப்பது வேறில்லை” என்றார் குபேரர்.

“ஆனால் அவர்கள் இங்குள்ளனரா என எவ்வண்ணம் அறிவது?” என்றார் மரகதர். “கொடிகள் காட்டுகின்றனவே?” என்றார் குபேரர். “கொடிகளில் பொருளில்லை என்றல்லவா பேசிக்கொள்கிறார்கள்?” என்றார் மரகதர். “ஆம், எவ்வண்ணம் அதை உறுதிப்படுத்துவது?” என்று முதுவணிகரான சுவர்ணர் கேட்டார். “ஒன்று செய்யலாம். அது வணிகர்களின் வழக்கமான முறை. ஏதேனும் ஓர் அரிய பரிசுடன் அரசரின் அவைக்கு செல்வோம். அரண்மனைக்குள் பாண்டவ ஐவரில் எவரெல்லாம் இருக்கிறார் என்று பார்ப்போம்” என்றார் குபேரர். “எவர் இருந்தாலும் நமக்கு நன்றே. இன்று தெய்வ உருவங்கள் என கதைகளில் வாழ்பவர்கள் பாண்டவர்கள். அவர்களை நாம் விழிநோக்கி சொல்லெடுத்தோம் என்பதே நமக்கு தகுதி என்றாகும்.”

மறுநாள் காலையிலேயே அவர்கள் அரசருக்குரிய பரிசுடன் கிளம்பி அஸ்தினபுரியின் அரண்மனைக்கு சென்றனர். உத்கலத்தில் இருந்து அவர்கள் பரிசளிக்கவென்றே கொண்டுவந்திருந்த மரகதத்தாலான காளைச் சிலை அது. அவர்கள் நல்லாடை அணிந்து, தலைப்பாகைகளில் தங்கள் குலமுத்திரை பொறித்த பொன்வில்லைகளைச் சூடி, நகரினூடாக பட்டு மஞ்சலில் சென்றனர். மஞ்சல் சுமப்பவர்களை கோட்டைமுகப்பிலேயே அமர்த்திக்கொண்டார்கள். நகருக்குள் சூதர்களை அனுப்பி தங்களுக்கு கட்டியம் கூற முதுசூதனை ஏற்படுத்தினர். வெள்ளிக்கோலுடன் முன்னால் சென்ற முதுசூதன் அவர்களின் குலப்பெருமையை அறிவித்து வழிபெற்று சென்றான்.

மஞ்சலின் அருகே அவர்களுடன் நடந்தபடி சூதனொருவன் அஸ்தினபுரியை சுட்டிச்சுட்டி விளக்கிக்கொண்டு வந்தான். அஸ்தினபுரி பாரதவர்ஷத்தின் தலைமை ஊர் என மாறிவிட்டிருந்தது. முன்பு அங்கு மாமன்னர் ஹஸ்தியால் உருவாக்கப்பட்ட ஒரு சிறு நகரமே இருந்தது. உயரமற்ற மரத்தாலான மாளிகைகளும், இடுங்கலான தெருக்களும், சிறிய சதுக்கங்களும், நெரிசலான சந்தையிடங்களும் கொண்ட ஒரு தொல்நகரம். அங்கிருந்த தொல்குடிகளும் தங்கள் குடிப்பெருமை அன்றி பிறிதொன்று அறியாதவர்கள். தொழிலோ வணிகமோ தேராதவர்கள். ஆனால் ஆணவம் கொண்டவர்கள். பெருமிதமே தங்கள் செல்வம் என்று எண்ணியவர்கள்.

அஸ்தினபுரி அன்று குன்றாது குறையாது நீர்நிறைந்து நின்றிருக்கும் குளம் போலிருந்தது. அம்மக்களின் பேச்சுக்கள் பெரும்பாலும் முறைமைச் சொற்கள். அவர்களின் பாவனைகளும் மாறாதவை. அவர்களின் முகங்கள்கூட வழிவழியாக ஒன்றே. முதிய வணிகர்கள் ஒவ்வொரு முறை வருகையிலும் எல்லா நகரங்களும் மாறிக்கொண்டே இருக்க அஸ்தினபுரி மட்டும் அவ்வண்ணமே இருப்பதை கண்டனர். எவரும் அங்கே இறப்பதே இல்லை என்று ஒரு நம்பிக்கை சிலரிடமிருந்தது. அங்குள்ள ஓசைகளில்கூட எந்த மாற்றமும் இருப்பதில்லை.

அவர்கள் அனைவருமே அந்நகர்விட்டு செல்லும்படி அமைந்தது. அங்கு நிகழ்ந்த மாபெரும் போரில் அவர்கள் ஒவ்வொருவரின் குடியிலும் பலர் களம்பட்டனர். களம்பட்டவர்கள் அங்கு எழுந்த பெருந்தீயில் உண்ணப்பட்டனர். அவர்களுக்கு உரிய முறையில் இறுதிக்கடன் செலுத்துவதற்காக உடலோ சாம்பலோ கிடைக்கவில்லை. ஆகவே அந்நிலத்தையே ஓர் உடலாகக்கொண்டு பொதுவாக நீர்க்கடன்கள் செலுத்தப்பட்டன. அதில் நிறைவுறாத நீத்தோர் அங்கிருந்து கிளம்பி வந்து அஸ்தினபுரியில் தம் உறவினர்களை பற்றிக்கொள்ளத் தொடங்கினார்கள். நகரெங்கும் நீத்தோரின் நுண்ணுடல்கள் செறிந்தன.

உண்ண ஊண்கலம் முன் அமர்கையில் அருகே கண்ணுக்கு தெரியாத பிறரும் இருப்பதை தந்தையர் உணர்ந்தனர். அள்ள எடுத்த கையை அவர்கள் பசியுடன் பற்றிக்கொள்வதுபோல தோன்ற அன்னத்தை தாலத்தில் இட்டு நடுங்கி விழிநீர் உகுத்தனர். இரவுகளில் அவர்களின் கதவுகளைத் தட்டி ‘அன்னையே! அன்னையே!’ என்று மைந்தர்கள் அழைத்தனர். புரவிகளும் பசுக்களும் உருவிலிகளைக் கண்டு திகைத்து குரலெழுப்பின. கதவுகள் திறந்து மூடின. இருண்ட அறைகளுக்குள் இருந்து மெல்லிய விசும்பலோசைகள் எழுந்தன. புலரியில் கதவை திறக்கையில் முற்றத்தில் பூழியில் காலடித்தடங்கள் தெரிந்தன.

அவர்கள் அஞ்சி நிமித்திகர்களிடம் உசாவினர். பூசகர்கள் சொன்ன சடங்குகளை செய்தனர். கணியர்களைக் கொண்டு மாற்றுச்சடங்குகளை இயற்றினர். அன்னமும் நீரும் அளிக்கப்பட்டது. தெய்வங்கள் கொடை பெற்றன. அந்தணர் பொருள் கொடுக்கப்பட்டனர். எவற்றாலும் நீத்தார் நிறைவுறவில்லை.

நீத்தாருக்கு அணுக்கமானவர் துர்வாசரே என்று அவர்களுக்கு முதிய நிமித்திகர் சொன்னார். சாவும் பிணியும் நோயும் துயரும் என புவியாளும் மூத்தவளுக்கு அணுக்கமானவர், அவளை வழிபடுபவர் என்பதாலேயே அவர் கெடுமணம் கொண்ட உடலர் ஆகி துர்வாசர் என்று பெயர் பெற்றார். குடித்தலைவர் பன்னிருவர் கொண்ட குழு ஒன்று நெடுந்தொலைவு தேடிச்சென்று துர்வாச முனிவரை அணுகி பணிந்து அவரிடம் “மாற்றுவழி என்ன? எங்களவர் மீள நாங்கள் இயற்றவேண்டியது என்ன? சொல்லி எங்களை காத்தருள்க!” என்று உசாவியது.

“அவர்கள் வந்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்களை உங்களால் எவ்வகையிலும் நிறைவு செய்ய இயலாது. ஏனெனில் அவர்கள் வந்திருப்பது தங்கள் கொடிவழியினரின் எள்ளும் நீரும் பெறுவதற்காக மட்டுமல்ல. தாங்கள் இறந்த அந்தப் போரினால் உண்மையில் என்ன பயன் என்னும் அழியா வினாவை அவர்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கிறார்கள். எதன்பொருட்டு அது நிகழ்ந்தது என அறியத் துடிக்கிறார்கள். அப்பொருளின்மையே அவர்களை கொந்தளிக்கச் செய்கிறது. நீங்கள் எவரேனும் அப்பொருளின்மைக்கு அவர்கள் ஏற்கும் மறுமொழியைக் கூற முடிந்தால் அவர்கள் நிறைவுறுவார்கள்” என்றார் துர்வாசர்.

திகைப்புடன் “அப்பெரும்போருக்கான மறுமொழியை நாங்கள் எவ்வாறு கூற முடியும்? அது எவ்வாறு ஒருங்கிணைந்தது ஏன் நிகழ்ந்தது எவ்வண்ணம் முடிந்தது என்று எவரும் அறியார்” என்றனர் குடியினர். “ஆம், அது இந்நிலத்தில் நிகழ்ந்த மாபெரும் பொருளிலா ஆடல். அதில் இனி வரும் தலைமுறைகள் பொருளேற்றம் செய்யும். அப்பொருள் சொல்தோறும் பெருகும். அது முடிவிலி வரை உருப்பெருக்கும்” என்று துர்வாசர் கூறினார். “இனி எழும் யுகங்களில் எங்கோ என்றோ மானுடர் மேலும் பல போர்களினூடாக இப்போருக்கு பொருள்கொள்ள முடியும். இதுவே இப்புவியில் இன்னும் பலமுறை நிகழ்ந்து இதன் பொது நெறிகள் தெரியவரக்கூடும். அதுவரை இந்நீத்தார் அடங்கப்போவதில்லை.”

“முனிவரே, அருள்க! நாங்கள் என்னதான் செய்வது?” என்று அவர்கள் அழுது பணிந்தனர். “அவ்வினா அஸ்தினபுரியை மையம் கொண்டது. அவர்களால் அவ்வினாவுடன் அஸ்தினபுரியிலிருந்து வெளிவர இயலாது. குருக்ஷேத்ரத்திற்கும் அஸ்தினபுரிக்கும் அவர்கள் குறுங்காற்றுகளென சென்றுகொண்டே இருப்பார்கள். நீங்கள் அஸ்தினபுரியை கைவிட்டு விலகிச் செல்லுங்கள். புது நிலம் தேடுங்கள். புது வாழ்வை தொடங்குங்கள். அங்கே புது மைந்தர் எழட்டும். அவர்களிடம் நீத்தார் பற்றி எதுவும் கூறவேண்டியதில்லை. நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் நீர்க்கடன்களை இறுதிக்கடனென அஸ்தினபுரியிலேயே அளித்து, கங்கையிலேயே அவர்களை நினைவுதுறந்து விட்டுச்செல்க!” என்று துர்வாசர் சொன்னார்.

“அவர்களின் பெயர் உங்களிடம் எஞ்சலாகாது. அவர்கள் பயன்படுத்திய பொருள் எவையும் இருக்கலாகாது. அவர்களைப்பற்றிய சொல் எதுவும் உங்களிடம் நீடிக்கலாகாது. உங்களின் உள்ளத்திலிருந்து அவர்கள் ஒழிவார்கள் எனில் நீங்கள் விடுதலை கொள்வீர்கள். இது ஒன்றே வழி” என்றார் துர்வாசர். அவ்வண்ணம் அஸ்தினபுரியின் தொல்குடியினர் நகரை நீத்து அந்நீத்தாருக்கான இறுதி நீர்க்கடன்களை கங்கையிலேயே செலுத்திவிட்டு அவ்வண்ணமே கிளம்பி வேறு திசைகளுக்குச் சென்று மறைந்தனர்.

அவ்வொழிந்த நகரில் உலகெங்கிலுமிருந்து பிறர் குடியேறினர். அவர்கள் புது வேதம் விடுத்த அழைப்பை ஏற்று வந்தவர்கள். உழவர்கள், ஆயர்கள், வணிகர்கள், வீரர்கள். அவர்களுக்கு இங்கிருந்த பழைய நகர் உவப்பாக இருக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலத்திலிருந்து வந்தவர்கள். ஆகவே யவனர்கள் மேற்கின் செம்பாறையின் தன்மையிலும், திருவிடர்கள் தெற்கின் கல்லின் அழகுடனும், கிழக்கினர் மூங்கில் பின்னலாலும், நடுநிலத்தோர் மரத்தின் அடுக்குகளாலும் தங்கள் இடங்களை அமைத்தனர். இந்நகர் முற்றாக மாறியது. தெருக்கள், இல்லங்கள் அனைத்தும் பிறிதொன்றாயின.

இதன் தொல்மொழி மறைந்தது. இங்கு பேசப்படும் இந்த மொழி இங்கு முன்பு வாழ்ந்த அஸ்தினபுரியின் தொல்குடிகள் எவருக்கும் தெரியாதது. இது இங்கு வந்தவர்களின் மொழிகள் கலந்து உருவான ஒன்று. கங்கையின் புதுமழைப் பெருக்கில் கரையோரம் ஒதுங்கும் நுரைபோன்றது. நூறு பாறைகளில் அடிபட்டு, நூறாயிரம் அலைகளால் திரட்டப்பட்டு உருவாகி வந்தது. அதில் அத்தொன்மொழியின் சொற்கள் பெரும்பாலும் ஏதுமில்லை. இன்று இங்கே அவர்களில் ஒருவர் எஞ்சியிருப்பாரெனில் அவர் உளம் பதைத்து பித்தனென அலைந்துகொண்டிருப்பார்.

உண்மையில் இப்போதுகூட இந்நகர்களின் தெருக்களில் அத்தகைய பித்தர்களை நாம் பார்க்க முடியும். அவர்கள் பிறிதொரு காலத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரைச் சுற்றியும் எந்த வெளிச்சத்திலும் பலநூறு நிழல்கள் விழுவதை பார்க்கலாம். இங்கு வாழ்ந்து குருக்ஷேத்ரத்தில் களம்பட்டவர்களின் நுண்ணுடல்கள் அவை. நீத்தோர் இங்கு வருகையில் இப்பித்தர்களை மட்டுமே அடையாளம் காண்கின்றனர். அவர்களை மட்டுமே மொய்த்துக்கொள்கின்றனர். அவர்களுடன் உரையாடுகின்றனர். அவர்களை பித்தாக ஆக்குகின்றனர். இங்குள்ள பிறரை அந்த நுண்ணுடலர் அறியார். அவர்களுடன் பேச அவர்கள் முயல்வதில்லை.

இந்நகரில் ஒரு நம்பிக்கை உள்ளது, இங்கு பேசப்பட்ட அத்தொல்மொழியை எவரும் மறந்தும் பேசலாகாது. விளையாட்டுக்கெனவோ, வேறேதும் தொழில் பற்றியோ அம்மொழியில் ஓரிரு சொற்களை ஒருவர் சொன்னார் என்றாலே அவருடைய நிழல் பெருகத்தொடங்குவதை பார்க்கலாம். அச்சொற்கள் இந்நகரெங்கும் முட்டி மோதி அலைந்துகொண்டிருக்கும் நுண்ணுடலர் அனைவரையும் அழைத்து அவர்களின் அருகே கொண்டுவந்துவிடுகின்றன. அவர்கள் ஊனில் ஈக்களென பற்றிக்கொள்கிறார்கள். அவர்களிடமிருந்து மீள்வது எளிதல்ல. ஏனென்றால் அவர்கள் மேலும் மேலும் தங்கள் சொற்களால் நம் சித்தத்தை நிரப்பிவிடுவார்கள்.

எப்பொழுதேனும் களிமண் பலகையிலோ மரப்பட்டையிலோ ஓலையிலோ எழுதப்பட்ட அந்தத் தொல்ஆவணங்களை படிப்பதற்காக வணிகமன்று கூடியிருக்கும் என்றால் அவ்வண்ணம் நிழலுருக்கள் பெருகாமல் இருக்கும் பொருட்டு அவ்வறையின் தென்மேற்கு மூலையில் சுடர் கொளுத்தி வைத்து அருகே ஒரு கிளியை நிறுத்துவார்கள். அக்கிளி சூதர்களால் பயிற்றுவிக்கப்பட்டது. அது அந்த நீத்தார் தொன்மொழியின் சில சொற்களை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கும். அக்கிளியைச் சுற்றி கிளியின் நிழல்கள் பெருகியிருக்கும். அப்பணி முடிந்ததும் அக்கிளியை கூண்டுடன் எடுத்துச் சென்று நகருக்கு வெளியே திறந்துவிடுவார்கள். அக்கிளியை மொய்த்திருக்கும் நுண்ணுடலர்களும் கிளியுடனே நகரிலிருந்து வெளியே செல்வார்கள்.

இந்நகரம் இறந்தவர்களால் நிறைந்திருக்கிறது. இங்கு வாழ்பவர்களைவிட நூற்றெட்டு மடங்கு நீத்தார் இருக்கிறார்கள் என்பது சூதர் கூற்று. ஆனால் அந்நீத்தார் இன்று வாழ்பவர்களுடன் ஒரு சொல்லும் பேச முடியாது, ஒருவகையிலும் தங்கள் இருப்பை உணர்த்த இயலாது என்பதனால் அவர்கள் நமக்கு இல்லாதவர்களே. ஒன்றுடன் ஒன்று ஊடுருவாமல் இரு பேருலகங்கள் இங்கே திகழ்கின்றன.

வணிகர்களே, அந்த நுண்ணுடலர்கள் இந்நகரின் இந்தப் புதிய மாளிகைகளையும் தெருக்களையும் அறிவதே இல்லை. அவர்கள் இங்கே நுண்வடிவில் இருக்கும் அப்பழைய மாளிகைகளில் வாழ்கிறார்கள். அவை இல்லாமலாகிவிட்டனவா? இல்லை, எவையுமே இங்கு முற்றாக மறைவதில்லை என்று உணர்க! உச்சிப்பொழுதிலோ முழுநிலவு நடுவான் அடைகையிலோ சில தருணங்களில் இந்த நகரின் மாளிகைகளின் நிழல்களை பாருங்கள். அவை அப்பழைய நகரின் மாளிகைகளின் நிழல்கள் என்று காண்பீர்கள்.

அஸ்தினபுரியின் நகரினூடாகச் சென்ற குபேரரும் தோழர்களும் அதன் புதிய பளிங்கு அரண்மனையை சென்றடைந்தனர். கட்டியங்காரன் அவர்களை அறிவித்தான். அவர்களை நோக்கி வந்த காவலர்தலைவரிடம் உத்கலத்தின் பெருவணிகர்களாகிய தாங்கள் அஸ்தினபுரியின் அரசரை காண விழைவதாக கூறினர். காவலர்தலைவர் “இன்று இங்கு அரசு கொண்டிருப்பவர் பேரரசர் யுயுத்ஸு. அவரது துணைவி பேரரசி சம்வகை இந்நகரத்தை ஆள்கிறார். உங்கள் வணக்கத்தையும் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்கள் அவர்களே” என்றார்.

“அல்ல, நாங்கள் இந்நகரின் மெய்யான மணிமுடிக்குரியவராகிய யுதிஷ்டிரனை பார்க்கும்பொருட்டு வந்துள்ளோம். அவருக்கும் அவரது நான்கு தம்பியருக்கும் பேரரசி திரௌபதிக்குமான பரிசுப்பொருட்களுடன் உத்கலத்திலிருந்து வந்தோம்” என்றார் குபேரர். “அவர்கள் எவரையும் தாங்கள் சந்திக்க இயலாது. வருகையர் எவரும் தன்னை சந்திக்கவேண்டியதில்லை என்பது அரசரின் ஆணை” என்றார் காவலர்தலைவர்.

“நாங்கள் இந்நகருக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் அரசரையும் அரசியையும் கண்டு வணக்கம் தெரிவித்து பரிசில் வழங்கிக்கொண்டிருக்கிறோம். பாண்டவ ஐவரை பார்ப்பதற்கும் மூதரசி திரௌபதியை வணங்குவதற்குமான வாய்ப்பு இப்போது அமைந்துள்ளது. கோட்டை முகப்பில் கொடி பறக்கிறது. ஐவரும் இங்குள்ளார்கள் என்று அறிந்து வந்தோம்” என்றார் மரகதர்.

காவலர்தலைவர் புன்னகைத்து “உண்மையில் ஐவரும் இங்கில்லை. பீமசேனன் புராணகங்கைக்குள் காட்டிற்குள் சென்றுவிட்டார். கொடி பறப்பது அவருடைய தரப்பு என சகதேவன் நின்று பேசுவார் என்பதனால்தான். பேரரசி திரௌபதி எந்த அவையிலும் கலந்துகொள்வதில்லை. அவர் இங்கு நோன்பு மாடத்தில் இருக்கிறார். இன்று அந்தியில் அரசரும் அரசியும் பாண்டவ மூத்தோர் நால்வரையும் சந்திக்கிறார்கள். அது குடியவையும் ஐவர் அவையும் கூடும் நிகழ்வு. அதில் சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன” என்றார்.

குபேரர் “தாங்கள் அனைத்தையும் அறிந்தவர்” என்றார். காவலர்தலைவர் மிகைச்சொல்லர் என்று உணர்ந்துகொண்டிருந்தார். காவலர்தலைவர் மகிழ்ந்து “இந்நகரம் மீளுருவாக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இதன் பட்டத்து இளவரசராகிய பரீக்ஷித் இதுவரை மருத்துவர்களால் பேணப்பட்டு அகத்தளத்திலேயே வளர்க்கப்பட்டார். அவருக்கு அரசகுண்டலம் அணிவிக்கும் நிகழ்வு முடிவுசெய்யப்படுகிறது. பட்டத்து இளவரசராக அவரை அமர்த்திவிட்டு பாண்டவர்கள் இங்கிருந்து மீண்டும் கிளம்பவிருக்கிறார்கள் என்று பேசப்படுகிறது” என்றார்.

குபேரர் “இன்று அந்தியில் நிகழும் அந்தப் பேரவைக்கு உத்கலத்து குலவணிகர்களின் தரப்பென்று நாங்கள் பங்கெடுக்க இயலுமா?” என்றார். “தங்கள் கணையாழியுடன் குலமுறைப் பெயர்களையும் எழுதி சிற்றமைச்சர் விசாகரிடம் அளியுங்கள். அவரிடமிருந்து தங்களுக்கு அழைப்பு வந்தால் கலந்துகொள்ளலாம்” என்றார் காவலர்தலைவர். குபேரர் காவலர்தலைவருக்கு ஐந்து கழஞ்சு பொன்நாணயத்தை வழங்கினார். அவர் புன்னகைத்து தலைவணங்கி வாழ்த்துரைத்தார்.

குபேரர் தலைமையில் வணிகர்கள் விசாகரை அணுகினர். விசாகர் சிறு பதற்றத்தில் இருந்தார். குபேரர் கணையாழியைக் காட்டி தங்களை அறிமுகம் செய்துகொண்டு “நாங்கள் அரசவைநுழைவை விழைகிறோம்” என்றார். “வணிகர்களுக்கு எதற்கு அவைநிகழ்வு?” என்றார் விசாகர். “பதினெட்டு அகவை நிறைகையில் இங்கு பரீக்ஷித் மீண்டும் அரசு கொள்வார் என்பது உண்மையா என்று அறிய விரும்புகிறோம். எங்கள் வணிகத்திட்டங்களை அதன் அடிப்படையிலேயே வகுக்கமுடியும்” என்றார் குபேரர். விசாகர் “ஆம், அரசர் யுயுத்ஸுவும் அரசி சம்வகையும் ஆள்வது இளவரசர் பரீக்ஷித்தின் பொருட்டே” என்றார்.

“அதற்கு இங்கே மாற்றுக் கருத்து எதுவும் உண்டா?” என்றார் குபேரர். “இங்கு அரசி சம்வகைக்கு எதிராக எண்ணுவதே தலை போகும் செயல்” என்றார் விசாகர். “நன்று, நாங்கள் இங்கு அனைத்து சந்தைகளும் உயிர்த்துடிப்புடன் இருக்கவேண்டும் என்று மட்டுமே எண்ணிக்கொள்கிறோம். வணிகர்களாகிய நாங்கள் எதையும் விரும்புபவர்கள் அல்ல. எங்கள் பரிசில்களை இன்று பேரவையில் அளிக்கவிருக்கிறோம். எங்கள் குலமுறையை பொறித்த ஓலை, முத்திரைக் கணையாழி ஆகியவற்றை அளிக்கிறோம்” என்றார் குபேரர். “ஆய்ந்து தங்களை அழைப்போம்” என்று விசாகர் சொன்னார். அவருக்கும் ஐந்து கழஞ்சு பொன் கொடுத்து தலைவணங்கி அவர்கள் விடைபெற்றனர்.

முந்தைய கட்டுரைஓஷோ- மீண்டும் மீண்டும்
அடுத்த கட்டுரைகீர்ட்டிங்ஸ்,சாவி -கடிதங்கள்