வம்புகளும் படைப்பியக்கமும்

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்

இந்தக்குரல்கள்

சட்ட நடவடிக்கை

சட்டநடவடிக்கை பற்றி…

பா.செயப்பிரகாசம் பற்றி

சட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக…

சாதியமும் புரட்சிகரமும்

பா.செயப்பிரகாசமும் மாற்றிதழ்களும்

வசையே அவர்களின் உரிமைப்போர்

அன்புள்ள ஜெ

உங்கள் மீதான அவதூறுகள், வசைகளைப் பற்றி எழுதிவருகிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட அந்த கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் பெருமாள் முருகன் பெயர் இருக்கிறது. சுகுமாரன் சமயவேல் உள்ளிட்ட சிலர் பெயர்கள் உள்ளன.

மிகவும் சோர்வு அளிக்கும் விஷயம் இது. பெருமாள் முருகன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டபோது, அவரை சூழ்ந்து தாக்கியபோது, நீங்கள் அவரை ஆவேசமாக ஆதரித்து முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருந்தீர்கள். மலையாளத்திலும் எழுதினீர்கள். ஆங்கிலத்தில் உங்கள் கண்டனத்தைப் பார்த்தேன். பெருமாள் முருகனை ஆதரித்து மலையாள டிவியில் உங்கள் பேட்டி வெளியாகியது.

நான் பெருமாள் முருகனை ஆதரிப்பவன் அல்ல. என்னுடைய கருத்து வேறு. அன்றைக்கு அந்த விஷயத்தில் உங்கள் நண்பர்கள் பலர் உங்களுடன் கருத்துவேறுபாடு கொண்டு விலகிச்சென்றோம். அவர்களில் நானும் ஒருவன். ஆனால் உங்கள் நிலைபாட்டைச் சொல்லிக்கொண்டே இருந்தீர்கள். அதைவிட உங்கள் பதிப்பாளரும் அறம் புத்தகத்தை பல ஆயிரம்பிரதிகள் விற்றவருமான வம்சிபதிப்பகம் உரிமையாளர் ஷைலஜாவின் பெயர் அப்பட்டியலில் இருக்கிறது.

உங்களுடைய நிலையிலிருந்து பார்க்கையில் இவர்களை எப்படி அணுகிறீர்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

எஸ்.ராம்குமார்

***

அன்புள்ள ராம்குமார்

பெருமாள் முருகன் , சமயவேல், சுகுமாரன் போன்றவர்கள் எப்போதுமே என் மேல் நட்போ நல்லெண்ணமோ கொண்டவர்கள் அல்ல. சென்ற முப்பதாண்டுகளில் அவர்கள் என்னைப்பற்றி எதுவுமே உயர்வாகவோ ஏற்பாகவோ சொன்னதில்லை. கசப்புடன் நிறையப் பேசியுமிருக்கிறார்கள். நேரில் பார்த்தால் புன்னகையுடன் பேசிக்கொள்வோம்—காலச்சுவடு ஆசிரியர் முன்னிலையில் என்றால் அதுவும் பேசமாட்டார்கள்.

அவர்களின் மனநிலைகள், சங்கடங்கள் எனக்குத்தெரியும். அது அவர்களின் பிரச்சினை. அவர்களின் இலக்கியப்படைப்புகளை மதிப்பிடவோ பிடித்திருந்தால் பாராட்டி எழுதவோ அதை ஒரு தடையாக நான் எடுத்துக் கொண்டதில்லை.என் அளவுக்கோல்களில் தனிப்பட்ட உறவுகளுக்கு பெரிய இடமில்லை.

பெருமாள் முருகனை ஆதரித்தது எழுத்தாளன் மீதான கும்பல்மிரட்டல்களை நான் எப்போதுமே ஏற்றுக்கொண்டவன் அல்ல என்பதனால். அது இடதுசாரி மிரட்டலாக இருந்தாலும் சரி வலதுசாரி மிரட்டலாக இருந்தாலும் சரி. எம்.எஃப்.ஹூசெய்ன், எம்.எம்.பஷீர் ஆகியோருக்கு எதிரான மிரட்டல்களுக்கு எதிராக எப்படி எதிர்வினை ஆற்றினேனோ அப்படியே பெருமாள் முருகன் விஷயத்திலும் எதிர்வினை ஆற்றினேன். நீங்கள் பெருமாள் முருகன் விவகாரம் வரும்வரை என் எதிர்ப்புகளை கண்டுகொள்ளவில்லை என்றால் அது உங்கள் பிழை.

ஜெ

***

அன்பு ஜெ,

நலமறிய ஆவல்.

சமீபத்தில் கதைகளல்லாத உங்களின் பிற பதிவுகளையும் வாசித்துக் கொண்டுதான் வருகிறேன். சர்ச்சைகளுக்கான பதில்கள், மாஸ்டர் மற்றும் பல. இது தவிர உங்களை நோக்கி வரும் வசைகளைப் பார்க்கிறேன். ஏனோ உங்கள் பதில்களைத் தீவிரமாக படிக்குமளவு இந்த வசைபாடிகளின் வசைகளை இரண்டொரு வரிகளுக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை ஜெ. இவர்களின் வசைகளைப் படிக்கையில் ஓர் ஏளனச் சிரிப்பும், பரிதாப உணர்ச்சியுமே வருகிறது. இவர்கள் உங்களை முழுமையாகப் படித்திருந்தால் இப்படி பேச வாய்ப்பில்லையே என்று தோன்றும். இவர்களைப் பொருட்படுத்த வேண்டுமென்பதில்லை. ஆனாலும் உங்கள் எழுத்தென்னும் ஆயுதத்தால் எதிர்கொள்கிறீர்கள். அதையும் அவர்கள் எதிர்கொள்ளப் போவதில்லை. ஏனென்றால் அவர்களால் முடியாது. கருத்துவேறுபாடுகள், கொள்கை மாறுபாடுகள் பற்றிப் பேசவில்லை நான். உங்கள் எழுத்துக்களை ஒன்றுக்குள் அடைத்து ஓரம்கட்ட முயற்சி செய்யும் சினிக்குகளுக்கு ஏன் தெரிவதில்லை. அது இயலாதென்று. விசுவரூபமாக உங்கள் எழுத்துக்கள் மானுடத்தை, அறத்தை, சமூகத்தை, அரசியலை, சமத்துவத்தை, உயிரை, உணர்வை, ஆன்மாவை, கலாச்சாரத்தை, பண்பாட்டை யாவையும் பற்றிச் சொல்லும் போது உங்களை ஓர் இஸத்துக்குள் அடைக்கப் பார்ப்பது கண்டு நடுக்குருகிறேன். உண்மையை எத்துனை காலம் மறைக்க முடியும் என்பதால் அமைதி கொள்கிறேன்.

உங்களைப் பார்க்கையில் காந்தியை, பெரியாரை பார்த்து ஏற்பட்ட பரிதாபமே ஏற்படுகிறது ஜெ. காந்தி எல்லாருக்கும் உரியவர் எந்த ஒன்றிலும் அவரை அடைக்க முடியாமையால் எல்லா தரப்பும் அவரைச் சாடியது. பெரியாரின் தேவையுள்ளவரை பயன்படுத்திவிட்டு இன்று SC, ST க்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து தா எனும் போது சாதியத்தை உயர்த்திப் பிடித்து நிற்கிறது. பெரியார் மீதான தாக்குதலும் காந்தி மீதான தாக்குதல்களும் என்னை திக்கு முக்காடச் செய்திருக்கின்றன. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொண்ட கொள்கையளவில் மாறுதல் இருக்கலாம். ஆனால் கீழ்த்தரமான தாக்குதலில் அறம் சிதறிப்போவது கண்டு நெஞ்சு பதைக்கிறது.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்” என்ற பாரதியின் வரிகள் நினைவிற்கு வருகின்றன ஜெ.

வெண்முரசு என்ற காவியம் , நாவல்கள், வீடுறைவு கால சிறுகதைகள், கதைத்திருவிழா, இலக்கியப் பேச்சுக்கள், இயற்கை இரசிப்பு என உங்கள் பயணம் திகைப்பூட்டக் கூடிய வேகத்தில் சென்று கொண்டிருப்பது திருப்தியளிக்கிறது. அந்த எழுத்துக்களின் ஜெ வை சந்திக்காதவர்களால் எழுப்பப்படும் முறையற்ற தாக்குதல்களையும், அதனை எதிர்கொண்டு எழுதும் அந்த ஜெ வையும் நான் பார்க்கிறேன். ஏன் இவர்களெல்லாம் உங்களின் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று கோவம் வருகிறது. அது நான் “மூத்தோள்” கதை படித்து முடிக்கையில் ஆவியாகியிருந்தது. உங்களுக்கான துன்பங்கள் துறை சார்ந்து, வாழ்க்கை சார்ந்து இருக்கத் தானே செய்யும். எழுத்து சார்ந்து நீங்கள் சந்திக்கும் சில துன்பங்களை/ஜ்யத்யஷ்டாதேவியை நீங்கள் எதிர்கொள்ளும் விதத்தை படிப்பினையாகவே பார்த்து வருகிறேன் ஜெ. அதிலும் கற்றுத் தருகிறீர்கள். கேட்டுக் கொள்கிறேன்.

பிரிதொரு நாளில் “தேரே சடகே பாலம் நா கர் கோயி காம்” என்ற பாடலைப் பகிர்ந்திருந்தீர்கள். அதன் வரிகள் என் மனதிற்கு நெருக்கமாகிவிட்டன.

“அன்பே உன்னை வணங்கி கேட்கிறேன் எதற்கும், வருந்தாதே

இந்த நேரமும் இடமும் இனி ஒருபோதும் திரும்பாது.

அழகானவை இந்த நாட்கள்

வசந்தம் வருமா வராதா என்று நாமறியோம்

துயரங்களை மறந்துவிடு. இக்கணத்தில் வாழ்வோம்

எவரையும் பொருட்டாக நினைக்காதே

இவ்வுலகத்தை ஏன் பொருட்படுத்தவேண்டும்?

முட்களில் உன்னை சிக்கவைத்துக்கொள்ளாதே என் அன்பே

மலர்களின் நடுவே சிரித்துக்கொண்டிரு

இவ்வுலகில் சிரிப்பு கொஞ்சம்தான் மகிழ்ச்சியும் கொஞ்சம்தான்

அன்பே வாழ்வின் துயரங்களோ ஆயிரம்

அன்பே வாழ்வின் துயரங்களோ பல்லாயிரம்”

அற்புதமான ஆன்மா நீங்கள். மகிழ்ச்சியாகவும் நலமாகவும் இருக்க வேண்டும், அதே தீவிரமான எழுத்தில் திழைக்க வேண்டும் என்பதைத் தவிரவும் வேறு வேண்டுதல்கள் என்னிடம் இல்லை. அதை நீங்கள் செய்வீர்கள். இருந்தும் சொல்ல வேண்டும் என்றே தோன்றுகிறது. சொல்கிறேன். இது அப்படியான தருணம்.

அன்புடன்

இரம்யா.

***

அன்புள்ள இரம்யா

இதைப்போல பலர் எழுதிய கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. நான் அனைவருக்குமாகவும் சொல்வது இதைத்தான். படைப்பியக்கத்திற்கு எதிராக இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் கும்பல்வன்முறை, வசைபாடல்களைச் சுட்டிக்காட்டவே இவற்றை எழுதுகிறேன். எனக்கு எவ்வகையிலும் உணர்வுரீதியான ஈடுபாடு இவற்றில் இல்லை. இருந்தால் நான் கதைகளை நாளுக்கு ஒன்றென எழுதிக்கொண்டிருப்பேனா என்ன? வெண்முரசும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.முடியப்போகிறது, அதன் ஏக்கம், நிறைவு.

என் உளநிலைக்கு இவர்களும் இந்தக் கொசுக்கடியும் ஒரு பொருட்டே அல்ல. இவர்களின் எந்த குறிப்பையும் கட்டுரையையும் வாசிக்கவே மாட்டேன். வாசிக்காமலிருப்பதே இவர்கள் செய்யும் வசைக்கு நாம் அளிக்கும் பதில். வாசிக்கும் தகுதியுடன் அவர்கள் எழுதட்டும் முதலில்

எழுதும் அனைவருக்கும் நான் சொல்வது இதையே, இந்த கும்பல் உங்கள் உளநிலையை பாதிக்க அனுமதிக்காதீர்கள். அனுமதித்தால் அவர்கள் வென்றார்கள். அந்தச்சிறுமைகள் காலத்தின் முன் எவ்வகையிலும் பொருட்டல்ல. இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் எழுந்த இதைப்போன்ற வசைகள் உங்களுக்கு தெரியுமா? விஷ்ணுபுரம் அப்படியே இருந்துகொண்டிருக்கிறது.அதை எழுதுவதே எழுத்தாளனின் சவால்

இளைய எழுத்தாளர்களுக்கு நான் சொல்வது என்னைப்போல இடக்கைச் சுட்டுவிரலால் இவற்றை கையாளத்தெரியாவிட்டால் வாயே திறக்காதீர்கள் என்றுதான். படைப்பிலக்கியமே இலக்கியத்தின் மையம்,சாரம். இலக்கியமென்பதே அதுதான். மற்றவை எல்லாமே வெறும் சத்தங்கள். மிகமிக உயரிய விமர்சனமேகூட பெரும்பாலும் பொருளற்றது என்னும்போது இந்த அற்ப அரசியல்கூச்சலுக்கு என்ன பொருள்?

படைப்புநிலை என்பது ஒன்றியிருப்பது. உங்களை எப்போதும் உலுக்கும் அடிப்படைவினாக்களில் ஆழ்ந்திருப்பது. அதில் மட்டுமே நான் இருந்துகொண்டிருக்கிறேன்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஅன்னம்,மூத்தோள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]