வசையே அவர்களின் உரிமைப்போர்

செட்டியார் மாத்திரை-லக்ஷ்மி மணிவண்ணன்

அன்புள்ள ஜெ

‘அவதூறு’, ‘அவமதிப்பு’ விஷயமாக ஒரு செய்தி. வேடிக்கையானது, ஆனால் இது பதிவாகவேண்டும். நீங்கள் பிரசுரித்த ஒரு கடிதத்தில்  செயப்பிரகாசத்தைப் பற்றி அவருடைய இயக்கத்தோழர்கள் அச்சில் வெளியிட்ட ஒரு கருத்தை ஒட்டி ஒரு வரி இருந்தது. அதை அவதூறு அவமதிப்பு என்று குதித்து கூச்சலிட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஆள்சேர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்கள். இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் அறிக்கை வெளியிட்டன. அந்த அறிக்கை ஒன்றில் கவிஞர் சமயவேலும் ஆதரவு கையெழுத்து போட்டிருந்தார்.

ஆனால் பா.செயப்பிரகாசம் வழக்கு தொடுத்தது ஒரு வீண்வேலை என்று சமயவேல் கருத்து தெரிவித்தார். அவ்வளவுதான், தோழர்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள். சமயவேல் சாதிவெறியன், களவாணி, போலிவேடதாரி, அயோக்கியன். ஊழல்செய்தவர் என்று இரண்டுநாட்களாக வசை கொட்டிக்கொண்டிருக்கிறது.

இது அவமதிப்பு என்று அந்த கையெழுத்திட்ட நூறுபேரில் எவருக்குமே தோன்றவில்லை. தமிழில் ஒரு முன்னோடிக்கவிஞனைப்பற்றிய இந்தவசைகளை பொதுவெளியிலே கொட்ட எந்த தயக்கமும் இல்லை. ஒருவர்கூட அப்படியெல்லாம் ஒரு கவிஞனை வசைபாடலாமா என்று கேட்கவில்லை.

இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. பா.செயப்பிரகாசம் ஒரு இடதுசாரிக்கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே கூட்டம். ஒருவருக்காக அத்தனைபேரும் கிளம்புவார்கள். மற்றபடி அவர்களுக்கு எந்த ஒரு பொதுநலக் கொள்கையோ திட்டமோ கிடையாது.

இடதுசாரிக்கும்பல் எழுத்தாளர்களை கீழ்த்தரமாக வசைபாடும், அவதூறுசெய்யும். அதெல்லாம் கொள்கைச்செயல்பாடு, அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என உண்மையிலேயே நம்புகிறார்கள். ஆனால் அவர்களை பற்றி மிகச்சாதாரணமான ஒரு சந்தேகம் பதிவானால்கூட மொத்தக் காக்காய்க் கூட்டமும் கூடி கூச்சலிடும். அதற்கு எழுத்தாளர்களும் போய் சேர்ந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் முற்போக்கு முத்திரை கிடைக்காது. பரிதாபம்.

எழுத்தாளர்கள் அனைவருக்குமே ஒரு எச்சரிக்கை இது. அவர்கள் தங்கள் சொந்த காழ்ப்புகளுக்காக இந்தக் கும்பலை வளர்த்துவிட்டால் என்றைக்கிருந்தாலும் அவர்களுக்குத்தான் ஆபத்து. எழுத்தாளர்களுக்கு கௌரவமோ அடையாளமோ ஒன்றுமே கிடையாது என்று நம்பும் கட்சியரசியல் கூட்டம் இது.

மகேஷ்

***

அன்புள்ள மகேஷ்,

சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் கூப்பிட்டார். நீங்கள் சொல்லும் கட்சியரசியல்கும்பலில் ஒருவர். எழுத்தாளர் அல்ல, வாசகரும் அல்ல, ஆனால் இலக்கிய உலகில் முப்பதாண்டுகளாக இருக்கிறார். கருத்துக்கள் சொல்வார், வசைபாடமாட்டார் ஆனால் வசைபாடிகளுடன் இருப்பார். ஏனென்றால் அதுதான் அவருக்கு அடையாளம். தனியாக அடையாளமில்லை. கும்பல்தான் அவருக்கு அடையாளம்.

“நீங்க அப்டி வெளியிட்டிருக்கக் கூடாது, அது அவமதிப்பில்ல?. நான் தன்மையா சொல்றேன்” என்றார்.

“சரி தோழர், ஒரு அஞ்சுவருஷமா யமுனா ராஜேந்திரன்னு ஒருத்தர் என்னை மிகமிகக்கேவலமா திட்டி அவதூறுபண்ணிட்டே இருக்கார். பச்சை கெட்டவார்த்தையா எழுதுறார். அப்டி சாக்கடை வார்த்தையாலே ஒவ்வொருநாளும் எழுதுற ஒரு நாலஞ்சு ஆத்மாக்கள் இருக்கு. நீங்க எதாவது கருத்து தெரிவிச்சிருக்கீங்களா?”

“அவனுங்க அப்டித்தான், நான் என்ன சொல்றது?”

“சரி, இப்ப எங்கிட்ட பேசுறீங்க. நான் தாக்கப்பட்டப்ப கேலிசெய்து கும்மாளமிட்டு கெட்டவார்த்தையாலே வசைபாடினாங்களே அது நாகரீகமில்லைன்னு சொல்லியிருக்கீங்களா?”

அவரால் பதில் சொல்லமுடியவில்லை.

“சரி, இதுவரை எழுத்தாளர்களை இந்தக்கும்பல் அவமானப்படுத்தினப்ப ஏதாவது எதிர்வினை ஆற்றியிருக்கீங்களா? சும்மாவாவது கூப்பிட்டு வேண்டாம்னு சொல்லியிருக்கீங்களா?”

அவர் “அவங்கள்லாம் சோஷியல் ஆக்டிவிஸ்டுங்க” என்றார்.

“என்ன ஆக்டிவிசம்? இந்த வசைபாட்டுக்கு அப்பாலே அவனுங்க என்ன செஞ்சிருக்காங்க?. ஒண்ணும் எழுதலை. சரி,வேண்டாம், அந்தமட்டுக்கும்போச்சு. அவனுக வசைபாடுற எழுத்தாளர்களை வாசிச்சாவது பாத்திருக்கானுங்களா?”

“என்ன அப்டி சொல்லிட்டீங்க.”

“மெய்யாகவே கேட்கிறேன். இந்தக் கும்பலாலே யாருக்கு என்ன நன்மை?”

அவர் ஃபோனை வைத்துவிட்டார்.

இது ஒரு போலிக்கும்பல். கூட்டமாக அடையாளத்திற்கு அலைபவர்கள். எதையும் எழுதவோ வாசிக்கவோ சிந்திக்கவோ துப்பில்லாத மொண்ணைகள். ஆனால் கூட்டமாக இருப்பதனாலேயே ஒரு பெரிய ஆற்றலை திரட்டி வைத்திருக்கிறார்கள். வசைபாடும் மிரட்டும் அதிகாரம். இப்போது நீதிமன்ற மிரட்டலையும் கையில் எடுத்திருக்கிறார்கள்.

தமிழின் முன்னோடியான கவிஞனை இவர்கள் சாக்கடை மொழியில் அவதூறு செய்யலாம். எவரும் வாய் திறக்கமாட்டார்கள். சமயவேலே இவர்களை ஒன்றும் சொல்லமாட்டார். முகத்திலேயே உமிழப்பட்டாலும் துடைத்துக்கொண்டு பவ்யமாகச் சிரிக்கவேண்டும். ஏனென்றால் இங்கே எழுத்தாளன் தன்னந்தனியன்.

ஆனால் இந்த ஆற்றலை எல்லாம் இவர்கள் எழுத்தாளர்களிடம் மட்டும்தான் காட்டுவார்கள். ஏனென்றால் அவன் எளியவன், தனித்தவன். இவர்கள் எழுத்தாளர் எவரையாவது சங்கி என்று முத்திரை குத்தி அவன்மேல் வசைபாடி நமைச்சலை அடக்கிக்கொள்வார்கள். உண்மையிலேயே ஒரு பாரதிய ஜனதா ஆள் மேல் இதையெல்லாம் செய்வார்களா? பெண்டு நிமிர்ந்துவிடும் என்று தெரியும்.

இந்தக் கும்பல் எழுத்தாளர்கள் அல்ல, வாசகர்கள் அல்ல. இவர்களுக்கும் இலக்கியத்திற்கும் கருத்துச் செயல்பாட்டுக்கும் சம்பந்தமே இல்லை. பெரும்பாலானவர்கள் வெறும் என்ஜிஓ பிழைப்புவாதிகள் அல்லது கட்சிக்காரர்கள். ஒரு கண்டன அறிக்கை, ஒரு வக்கீல் நோட்டீஸ் கூட வசையும் அவதூறும் இல்லாமல் கௌரவமான மொழியில் எழுத அங்கே ஆள் கிடையாது.

இவர்களுடன் இணைந்தால் முற்போக்கு முத்திரை கிடைக்கும் என்று நினைக்கும் எழுத்தாளன், இவர்களால் சக எழுத்தாளன் கீழ்மைப்படுத்தப்படும்போது கண்டும் காணாமலும் இருப்பவன், எத்தனை கீழ்மை மிக்கவன். அவனை எண்ணித்தான் வருந்துகிறேன்.

ஜெ

***

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்

இந்தக்குரல்கள்

சட்ட நடவடிக்கை

சட்டநடவடிக்கை பற்றி…

பா.செயப்பிரகாசம் பற்றி

சட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக…

சாதியமும் புரட்சிகரமும்

பா.செயப்பிரகாசமும் மாற்றிதழ்களும்

***

 

முந்தைய கட்டுரைமூத்தோள்,செய்தி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]