ஒருபோதும் திரும்பாது.

சில சமயம் சென்று தொட்டுவிடும் பாட்டு சிலநாட்கள் அலைக்கழித்து பின்பு கடந்துசென்று நினைவில் ஒரு துளியாக எஞ்சிவிடும். கூழாங்கற்களில் ஆயிரத்தில் லட்சங்களில் ஒன்றில் யக்ஷி இருக்கும் என்பார்கள். நம் கால் பட்டால் பற்றிக்கொண்டுவிடும். பித்தாக்கி உடனிருக்கும். கடந்தகாலம் யூடியூப் பாடல்களாக, கூழாங்கல் பரப்பாக பரவிக்கிடக்கிறது. எங்கே எந்த யக்ஷி காத்திருக்கிறாள் என்று தெரியாது

திலீப்குமார் நடித்து 1954ல் வெளிவந்த அமர் என்ற படத்தின் பாடல் இது.

தேரே சடகே பலம் ந கர் கோயி காம்

அன்பே உன்னை வணங்கி கேட்கிறேன் எதற்கும், வருந்தாதே

இந்த நேரமும் இடமும் இனி ஒருபோதும் திரும்பாது.

அழகானவை இந்த நாட்கள்

வசந்தம் வருமா வராதா என்று நாமறியோம்

துயரங்களை மறந்துவிடு. இக்கணத்தில் வாழ்வோம்

எவரையும் பொருட்டாக நினைக்காதே

இவ்வுலகத்தை ஏன் பொருட்படுத்தவேண்டும்?

முட்களில் உன்னை சிக்கவைத்துக்கொள்ளாதே என் அன்பே

மலர்களின் நடுவே சிரித்துக்கொண்டிரு

இவ்வுலகில் சிரிப்பு கொஞ்சம்தான் மகிழ்ச்சியும் கொஞ்சம்தான்

அன்பே வாழ்வின் துயரங்களோ ஆயிரம்

அன்பே வாழ்வின் துயரங்களோ பல்லாயிரம்

முந்தைய கட்டுரைகதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
அடுத்த கட்டுரைஅருள்,மணிபல்லவம்- கடிதங்கள்