தங்கப்புத்தகம்,அன்னம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் தொடர்ந்து மனதை ஆட்கொண்டபடியே இருக்கிறது. உண்மையில் முதலில் அந்த கதை வந்ததனால் தொடர்ந்து எதையுமே படிக்கமுடியாதபடி ஆகிவிட்டது. அது வாசிப்பு புரிதல் என்பதையே மாற்றிவிடுகிறது. நீ என்ன எடுத்துக்கொள்கிறாய் என்று புத்தகம் நம்மிடம் கேட்கிறது. நீ என்ன எடுத்துக்கொள்கிறாயோ அதுதான் நான் என்று சொல்கிறது

என்னுடைய சின்ன வயதில் ஒருமுறை அலெ.நடராஜன் எழுதிய சுவாமி விவேகானந்தர் வரலாறு படித்தேன். என்னை அலைக்கழித்த புத்தகம் இது. அதை நூறுமுறையாவது படித்திருப்பேன். அந்த வாசிப்பை அதன்பிறகு அடையவே இல்லை. அதைப்போன்ற ஒரு தங்கப்புத்தகம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்

செந்தில் முருகேஷ்

***

அன்புள்ள ஆசான்

இந்த மொத்த கதையையும்  ஒரு மெல்லிய சிரிப்புடன்  படித்துக் கொண்டிருந்தேன்.

இதே காலத்தில் தான் உங்கள்  ‘நீலம்’ நாவலைப்  படித்துக்கொண்டிருந்தேன். “ஒரு வரி ஒரு சொல் கூட சிதறாமல் அள்ளவேண்டும்” என்று மீண்டும் மீண்டும் ஒரே வரியையே படித்துக்கொண்டிருந்தேன். படித்துக்கொண்டிருக்கிறேன்.

புத்தகம் கிண்டில் புத்தகம் கைப்பேசி லேப்டாப் என்று எல்லா தளத்திலும் நீலத்தை  மட்டுமே படிக்கிறேன்.

இராதா-கிருஷ்ணன் என்பது என்னில் கலந்தது போன்ற உணர்வை மீண்டும் மீண்டும் மீட்டு கொள்வதே என்னுடைய சுய ஆன்மீக தேடல். அதுவே என்னுடைய சமயம் ஆன்மிகம் தேடல். (‘அசிந்த்ய பேதாபேதம்’ சொல்லிக்கொடுத்த என் ஆசிரியை ஆசிரியர்கள் நினைத்துக் கொள்கிறேன். அதுவே என்னுடைய தத்துவமும் கூட )

அதே நேரம் ஒரு நாவல் நோக்கி  நாம் செல்லவேண்டும். அதை நம் உண்மைகள் நம் முன்முடிவுகளால் தகவமைத்துக் கொள்ளக்கூடாது. சில சமயம் நம்முடைய paradigm  இல் இருந்தும் விலகவேண்டும்.

இந்த இருதுருவத்தில் இருந்து மிகவும் முயன்று சிந்தாமல் சிதறாமல் மனப்பிறழ்வு நிலையை அடையாமல்  ‘உங்கள் பித்திசைவு’ புரிந்து கொண்டு பயணித்துக் கொண்டிருக்கும்போது ‘தங்கப்புத்தகம்’ படிக்கக் கிடைப்பது மிகப்பெரிய கொடுப்பினை.

என்னுடைய முக்கியமான தரிசனம் -தேடலுக்கு பிறகு எவ்வளவு எளிதாக முடிகிறது என்பதே. அந்த புத்தகம் மட்டும் மீண்டு ஆற்றுக்குள் செல்கிறது . அதை அவர்கள் எளிதாக பெறுகிறார்கள்.

ஷெல்ப் முழுக்க படிக்காத பல புத்தகங்கள் வைத்திருப்பவர் அடையும் குற்றவுணர்ச்சி தத்துவங்கள் –  குவாண்டம் இயர்ப்பியல் போன்ற அறிவியல் விஷயங்கள் – நம் அறிவு திறக்காமலே  அவை புலப்படாமல் இருக்கும் தருணங்கள் கீதை – போன்றவற்றை படிக்கும்போது ஒரே சுலோகம் ஒவ்வொருநேரமும் ஒவ்வொன்றை சொல்லிச்செல்வது. மீண்டும் மீண்டும் முட்டி மோதி பிடி கிடைக்காமல் ஒரு பின்னிரவில் புலப்பட்டுவிட்டது என்று ‘யுரேகா’ என்று கூவி பின் விழித்து சோர்வை அடைந்து…மீண்டும் சுருதி மீட்டி மீண்டும் மீண்டுமென மீளாத தேடல் ஆன்மீகத் தேடலை அறிவுத்தேடலை ஞானத்தேடலை அதிலிருக்கும் குன்றாத சாகசத்தை இதை விட அற்புதமாக சொல்லும் கதைகள் இருக்கிறதா?.

உள்ளும் புறமும் என இரண்டிலும் தெறிக்கும் அந்த உற்சாகம், துயர், அகங்காரம், அதனால் ஏற்படும் செயல்திறன், அதனால் தடைபடும் தேடல், தேற்றம் உருவாக்கும் விதம்இந்த ஒரு கதை போதும். இது பதினைந்து வயதினருக்கும் முப்பது நாற்பது வயதினருக்கும் அறுபது வயதுக்காரருக்கும் என ஒவ்வொரு விதமாக உரையாடும் கதை. உங்கள் கதைகளிலே மிகவும் பிடித்த கதை. நிச்சயம் கல்லூரி முதல்/ இரண்டாம் ஆண்டு மாணவர்கள் படித்துவிட வேண்டிய கதை.

மீண்டும் மீண்டும் தங்கப்புத்தகத்தை பல இரவுகளில் மீள்வாசிப்பு செய்வேன்.

நன்றி ஆசான்

அன்புடன்

ஸ்ரீதர்

***

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

அன்னம் ஒரு அற்புதமான கதை. இஸ்லாம் மதத்தில் இருந்து அந்த பாரபட்சமில்லாத சமத்துவத்தை நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வந்தது

உணவு என்பது பாரபட்சமே இல்லாதது என்ற ஒரு சிந்தனை வந்தது. சங்கீதம் கலைகள் என எதுவாக இருந்தாலும் எல்லாருக்கும் ஒன்று அல்ல. உணவு அப்படி அல்ல. மற்ற எல்லா சுவைகளுமே அன்னத்தில் இல்லை. கற்பனையில் இருக்கின்றன. கற்பனை எல்லாருக்கும் ஒன்று கிடையாது

பசி ருசி இரண்டுமே ஒன்றுதான். அது அன்னம்தான். அன்னத்துக்கு பாகுபாடே இல்லை

ராகேஷ் ராஜ்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

குற்றம், விசாரணை என்று துவங்கியதும் ஒளசேப்பச்சன் வருவாரென்று நினைத்தேன். ஆனால் அன்னம் மற்றுமோர் சோற்றுக்கணக்கு, அறம் வரிசைக்கதைகள் எல்லாமே கருத்த சாஹிப் வந்ததும் வரிசையாக மனதில் வந்தது.

அப்படி பனையோலைப் பாயில் மலைபோல் குவித்து வைத்து அனைவருக்கும் அள்ளி அள்ளி அவர் வழங்கியது அவரின் அன்பைத்தான். ஒரு சாதாரண லைன்மேனுக்கு, பட்டினியில்  தகப்பன் செத்துபோனபின்னால் குடும்பத்தை காப்பற்ற மிஞ்சிய சோற்றுக்காக ஓட்டலில் வேலைபார்த்த, மிக  எளிய ஒருவருக்கு சாஹிப் அன்று கொடுத்த மரியாதையும் உணவும் நெகிழ்ச்செய்தது வாசிக்கையில்.

இவர் யாரென்று தெரிந்ததுமே திருமேனி என்கிறார். கிருஷ்ண பட்டே பந்தியில் எல்லாருடனும் அமர்ந்து உணவுண்ண விரும்பியும் ’அப்பாக்கு பிடிக்காது இல்லியா ,வேண்டாமென்கிறார்.

ஆயிரகக்ணக்கானவர்களுக்கு அன்னமிட்டவருக்கு, குடும்பத்தையே மேலேற்றிய சாஹிபுக்கு ஒரு லைன்மேனாக கிருஷ்ணபட் என்ன செய்யமுடியுமோ அதை செய்திருக்கிறார். உணவுண்ண உள்ளே வரும் ஒவ்வொருவரையும் சாஹிப் கட்டிதழுவி   அன்பைகாட்டினார் கிருஷ்ணபட் தனக்கு தெரிந்தவகையில் இப்படி  ஒரு தனி இணைப்பு கொடுத்து   இறுதிநாட்களில் தான் தனியே இல்லை என்று சாஹிப் நினைக்கும்படி அன்பைக் காட்டியிருக்கிறார்.  நிர்வாகத்தை பொருத்தவரையில் இது குற்றம்தான். அதனாலென்ன?

அளிப்பதன் இன்பத்தை சாஹிப் அளவிற்கு பெறமுடியாவிட்டாலும் கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது பெற்றிருக்கிறார் கிருஷ்ணபட்

இன்று யூ ட்யூபில்  ஆண்கள் நாலுபேராக சேர்ந்து வயல்வரப்புகளிலும் ஆற்றங்கரையோரங்களிலும் ஊர் எல்லைகளிலுமாக அசைவ உணவு சமைக்கும் ’வில்லேஜ் சமையல்’ என்னும் நிகழ்சியொன்றை எதேச்சையாக பார்த்தேன். பெரிய பெரிய பாத்திரங்களில் ஏராளமாக அசைவ உணவை தயாரித்து, அத்தனையையும் 50 பேருக்கு மேலாக மிகமிக எளியவர்களுக்கும் முதியவர்களுக்கும் கொடுக்கிறார்கள். அதில் பலருக்கும் இலை நிறைந்திருக்கும் அத்தனை சுவையான அசைவ உணவை பார்த்திருக்கும் வாய்ப்பே இருந்திருக்காது. பலருக்கு அதை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் திராணிகூட இல்லை இன்னும் பலருக்கு அதை முழுக்க சாப்பிடும் தெம்பும் இல்லை. ஆனால் அதை பரிமாறிய இவர்களின் கண்களில் அப்படி ஒரு ஒளியும் சிரிப்பும். கொடுப்பதின் இன்பத்தை அறிந்த சாஹிப்பை  இவர்களிலும் கண்டேன்.

பெருநாளன்று சாஹிபின் மன்ஸிலிலிருந்து திரும்பி வருகையில் கிருஷ்ணபட்டிற்கு எப்படி எல்லாமே இனிமையாக தெரிந்ததோ, அபப்டி இக்கதை வாசித்த பின்னர் சுற்றிலும் இனிமையால் நிறைந்திருந்தது போலிருந்தது,  நன்றி

அன்புடன்

லோகமாதேவி

***

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைகாந்தி என்ன செய்தார்?
அடுத்த கட்டுரைசுக்ரர், கணக்கு- கடிதங்கள்