மலையரசி, மூத்தோள்- கடிதங்கள்

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மூத்தோள் திகிலூட்டிய கதை. நான் ஜ்யேஷ்டா தேவி பற்றியே உங்கள் குறிப்பு வழியாகத்தான் தெரிந்துகொண்டேன். ஆனால் வீட்டில் மூதேவி என்ற சொல் ஒலிக்காத நாளே இல்லை. வீட்டுப்பெண்ணை மூதேவி என்று சொல்லக்கூடாது என்று என் அம்மா சொல்வாள். அம்மாவே திட்டவும் செய்வாள்.

இங்கே ஸ்ரீதேவியும் மூதேவியும் இணையாகவே கருதப்பட்டார்கள் என்பதும் சப்த கன்னியரில் அவளும் இருந்தாள் என்பதும் பெரிய ஒரு தர்சனம் என்று நினைக்கிறேன். இந்த நோய்க்காலத்தில் அதை நினைக்காமலிருக்க முடியாது. நோய் என்பது எவ்வளவு பெரிய மகாசக்தி. எல்லாமே அதன் காலடியில் விழுந்து கிடக்கின்றன இல்லையா? இருட்டுக்குள் அமர்ந்திருக்கும் அந்த தேவியை இப்போது கரோனா காலத்தில் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.

சி.மகாலட்சுமி

***

அன்பு ஜெ,

ஜ்யேஷ்டாதேவியின் முகத்திலிருந்த ஏளனமும் வெறியும் குரூரமும் கண்டு ஓர் புல்லரிப்பை என் மேனி படரவிட்டுக் கொண்டது. நோய்கள், அமங்கலங்கள் இவையாவும் துன்பம் என்ற ஒற்றை உணர்வின் பல்வேறு தோற்றங்களாக நான் பார்க்கிறேன் ஜெ.

இந்த வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது தான். என் இந்த வாழ்க்கைப் பயணத்தில் துன்பமும் இன்பமும் ஒரு வரிசை முறையைக் கடைப்பிடிப்பதைப் பார்க்கிறேன். மிக நீண்ட துன்பத் துறவறங்களுக்குப் பின் ஓர் இன்ப வரிசையைக் காண்பேன். அது குறுகிய காலங்கொண்டது. பின் அந்த வரிசைக்குள் சுழன்றிருக்கும் அனைத்து துன்ப சூறாவளிகளும் தாக்கிய பின்னர் கிடைப்பது ஓர் அரிய இன்பம். பின்பும் நான் துன்பத்தை சந்திக்கத் தயாராகி விடுவேன். இன்பம் என்பது துன்பத்தை சந்திக்கத் தயாராகும் ஓர் இளைப்பாற்றி நிலை. இது என் பயணத்தைக் கூர்ந்து நோக்கி நான் கண்டு கொண்டது ஜெ. மிகப் பெரிய இழப்புகள் அமங்கலங்கள் சந்திக்கும் யாவருக்கும் இது சாத்தியமா என்றால் இல்லை என்பேன். அவைகளை முழுமையாக சந்தித்து உள்வாங்கி போராடி இன்பம் என்ற ஒன்றை நோக்கி செலுத்துபவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகிறது. இன்பம் என்பது அந்த அந்த பருவத்தின் வெற்றி/ இலக்கு/ புகழ்/ நிறைவு/ மகிழ்ச்சி என்பேன். அவள் தான் பகவதி.

சாமி கும்பிடும் போது, “சாமி காப்பாத்து. எந்த கஷ்டமும் இல்லாம என்ன பாத்துக்கோ” என்பார்கள். துன்பம் வந்தால், “எனக்கு மட்டும் ஏன்? கல் சாமி. சாமின்னு ஒன்னுமில்லை”னு பிதற்றுபவர்களையே பார்த்திருக்கிறேன். சிறு வயதில் எனக்கு என்னைச் சுற்றியிருக்கும் மக்களால் கற்பிக்கப்பட்டதும் இது தான். அப்படி ஒரு முறை ஊட்டியில் என் பள்ளி விடுதியில் ஓர் தீபாவளியின் போது யாவரும் வீட்டிற்கு சென்றுவிட, வெற்று தியான அறையில் அதன் மங்கல் வெளிச்சத்தில் நித்தியமாய் வீற்றிருக்கும் இயேசு சிலைக்கு முன் மண்டியிட்டு அழுது கொண்டிருந்தேன். இன்று நினைத்தால் அந்தத் துன்பங்கள் கடுகளவு தான். ஆனால் அன்று அந்த பதின்ம வயதில், அன்பே அனைத்தும் என்றெண்ணும் துன்பத்தின் வலி கொடியது. அழுது கொண்டே ஏதோ வேண்டிக் கொண்டிருந்தேன். தீடீரென ஒரு இளஞ்சூடான கரம் என் தோள்பட்டையைத் தொட்டது. திரும்பிப் பார்த்தேன். என் விருப்பத்திற்குரிய கன்னியாஸ்திரி மார்செலின் சிஸ்டர். “ரம்யா, எதற்காக அழுகிறாய் என்று நான் கேட்க மாட்டேன். ஆனால் நான் உனக்கு சொல்ல வேண்டுவது ஒன்றுண்டு. துன்பங்களைக் கண்டு துவண்டு போய் விடாதே. துவண்டு துன்பங்களை தரவேண்டாமென ஆண்டவனை வேண்டாதே. எப்பொழுதும் ஆண்டவரிடம் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதற்கான மனவலிமையை மன்றாடு. நல்ல துன்பங்களுக்காக மன்றாடு. துன்பங்கள் தான் உன்னை உருவாக்குபவை. இடையில் வரும் சிறு சிறு துன்பங்களில் உன்னைத் தொலைத்து விடாதே. உன்னால் கையாள முடியாததை ஆண்டவரின் பாதங்களில் விட்டு விட்டு பயணித்து வெளிவந்திடனும்” என்று கூறினார். சற்று நேரம் என் தலையில் கைவைத்து வேண்டுதல் செய்து நெற்றியில் சிலுவையிட்டு விட்டு சென்றுவிட்டார். என் கண்ணீர்த் துளிகள் காய்ந்திருந்தது. அதற்கு மேல் வெறுமையைத் தவிர வேறு ஏதும் அங்கு இல்லை. அன்றிலிருந்து துன்பங்களை நான் பார்க்கும் பார்வை மாறியது.

ஜ்யேஷ்டா தேவியின் பலதரப்பட்ட அவதாரங்களை அப்படி தான் நான் இரசித்திருக்கிறேன். இன்று இந்தக் கதையின் மூலம் என் தலைக்கு மேல் அவளின் கால்களை சந்தித்து அவளின் தரிசணத்தைப் பெற்றேன். பேருருவாய் ஜ்யேஷ்டா தேவியும், அங்கே ஓரமாய் மங்கள பகவதியின் தரிசனமும் என என் வாழ்க்கையையே இக்கதையில் கண்டேன்.

தந்த்ரி சங்கரன் போற்றியையும், இன்ன பிறரையும் கண்டு சிரித்தேன். நான் பண்டாரமாயிற்றே. அதனால்தானென்னவோ.

அற்புதமான காட்சிப் பிம்பத்தில் வடித்திருக்கிறீர்கள் ஜெ. அதிலும் அந்த இறுதித் தரிசனத்தில் என் மயிர் கூச்செறிந்தது. நன்றி.

அன்புடன்

இரம்யா

***

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வரலாற்றுக் கதைகள் பற்றி தளத்தில் உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. வரலாறு இன்னும் சொல்லாதவற்றை புனைவு நிரப்புகிறது. மற்றும்கேரள வரலாறு பற்றி மட்டும் அல்லஎன்பதும் முக்கியமான திறப்பு. மங்கம்மாள் மீனாட்சி போன்றவர்கள் பற்றியும் வந்தால் அபாரமாக இருக்கும்.

ஆனால் புனைவுச்சூழலில் ஏன் இதுவரை நிகழவில்லை என்று கேட்டுக்கொள்கிறேன். கேரளத்தின் புனைவெழுத்துச் சூழல், அதன் மாபெரும் புனைவெழுத்தாளர்கள் இதுவரை இதை எப்படி விட்டு வைத்திருந்தார்கள்?? ஒரு சூழல் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுதீம்‘- எடுத்துக்கொள்ள ஏதேனும் ட்ரிக்கர் தேவைப்படுகிறதா?

எப்படியிருந்தாலும், கேரளத்தில் இந்தக் கதைகள் (நற்றுணை, பத்துலட்சம் காலடிகள் போன்றவையும் சேர்த்து) ஒரு அலையை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். இருமொழியும் அறிந்த விமர்சகர்கள் வாசகர்களிடமிருந்து இதுவரை ஏதாவது குறிப்பிடத்தக்க ரியாகஷன் வந்துள்ளதா என்று அறிய ஆவல்.

மது

***

அன்புள்ள மது

இந்தக்கோணத்தில் நான் சிந்தித்ததில்லை. ஆனால் சில விஷயங்கள் தோன்றுகின்றன. கேரள இலக்கியத்தின் தொடக்க நாயகர்களில் ஒருவர் சி.வி.ராமன்பிள்ளை. அவர் எழுதிய மார்த்தாண்டவர்மா, தர்மராஜா ஆகிய இரு நாவல்களும் திருவிதாங்கூர் அரசரைப் பற்றியவை. அவருடைய சமகாலத்தவரான உள்ளூர் பரமேஸ்வர அய்யர் உமையம்மை ராணி பற்றி உமாகேரளம் என்னும் காவியத்தை எழுதினார். அதன்பின் வைக்கம் சந்திரசேகரன் நாயர் திருவிதாங்கூர் வரலாறு சார்ந்து இரண்டு நாவல்களை எழுதினார். அவை சாண்டில்யன் வகை நாவல்கள்.

ஆனால் பொதுவாகவே சரித்திரநாவல்கள் கேரளத்தில் மிகமிகக் குறைவு. அவர்களின் வரலாறே அவர்களுக்கு பதினேழாம் நூற்றாண்டில்தான் தொடங்குகிறது. அதில் பெருமைகொள்ள, கனவுகாண பெரிதாக ஏதுமில்லை என்பது காரணமாக இருக்கலாம். வரலாற்று நாவல்கள் என்று எவை வந்தன என்று எண்ணிப் பார்க்கையில் ஆச்சரியமாக சி.வி.ராமன் பிள்ளையின் இரண்டு நாவல்கள் அன்றி எதுவுமே ஞாபகம் வரவில்லை.

இதற்கான இன்னொரு காரணம் மார்க்ஸியமாக இருக்கலாம். முற்போக்கு பார்வை தகழியின் தலைமுறையை ஆட்டிப்படைத்தது. அவர்களுக்கு அரசர்கள் நிலப்பிரபுத்துவத்தை சார்ந்தவர்கள். அங்கே பேச ஏதுமில்லை. கேரளத்தின் மூன்று பெரிய அரசுகளான திருவிதாங்கூர் கொச்சி கோழிக்கோடு பற்றிய நாவல்கள் எவையும் பிற்காலத்தில் எழுதப்படவில்லை.

ஜெ

***

அன்புள்ள ஜெ,

கௌரி பார்வதிபாய் ஒரு அபாரமான கதாபாத்திரமாக எழுந்து வந்திருக்கிறார். வெண்முரசில் தேவயானி, தமயந்தி, சத்யவதி, திரௌபதி, சம்வகை என்று பல பேரரசிகளை உருவாக்கிக் காட்டினீர்கள். அந்த வரிசையில் வரும் அரசி அவள். கொற்றவை என்ற சொல்லுக்குச் சரியான பொருள். வேங்கைப்புலி. நோயுற்ற குட்டியை கொல்கிறது. சரியான குட்டியை பேணி வளர்க்கிறது.

செல்வக்குமார்.

***

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7, மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6, அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3, லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1 ’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைவேறொரு காலம்- கடிதம்
அடுத்த கட்டுரைஏழாவது,சுக்ரர்- கடிதங்கள்