மணிபல்லவம், தங்கப்புத்தகம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

மணிபல்லவம் இன்னொரு ஷம்பாலா. மிஸ்டிக்கான நகரம். புதையுண்ட ஆழத்தில் இருந்து வருகிறது. ஆச்சரியம்தான். ஷம்பாலா உச்சத்தில் புதைந்திருக்கிறது. மணிபல்லவம் ஆழத்தில் புதைந்திருக்கிறது. ஷம்பாலா வடக்கே. மணிபல்லவம் தெற்கே. இரண்டு கனவுகளும் இருந்துகொண்டே இருக்கின்றன.

நான் தமிழாசிரியை. மணிபல்லவம் பற்றி நா.பார்த்தசாரதி எழுதிய நாவலை படித்திருக்கிறேன். சங்க இலக்கியத்தில் இருந்து தமிழர் வரலாற்றுக்கான தகவல்களை எடுப்பதற்கான ஆராய்ச்சிகள்தான் இங்கே அதிகமாக நடந்திருக்கின்றன. ஆகவே மணிபல்லவம் எந்த தீவு என்ற வகையிலேதான் பேசியிருக்கிறார்கள். அது ஒரு பெரிய கனவு என்பது நீங்கள் இந்தக்கதையில் எடுத்துக்கொடுத்த சிலப்பதிகார, மணிமேகலை வரிகள் வழியாகவே தெரிகிறது. அது காலமே இல்லாத அல்லது முக்காலத்திற்கும் உரிய ஒரு வெளியில் அமைந்திருக்கிறது.அங்கே சென்றவர்கள் எல்லாம் ஞானியராகி திரும்பி வருகிறார்கள். ஆபுத்திரன் மணிமேகலை எல்லாரும். அப்படியென்றால் அந்த இடம் எங்கே இருக்கமுடியும்? அது மனக்கடலில்தான் இருக்கும். மனக்கடலா காலக்கட்லா என்று சொல்லமுடியாது

மணிபல்லவம் கடலின் கொந்தளிப்பிலிருந்து எழுந்து வருவதும் பொன்னொளியில் தெரிவதும் இன்னதென்று அறியமுடியாத அதன் மௌனமும் அதற்கும் நீத்தாருக்கும் உள்ள உறவும் எல்லாமே ஒருவகையான பித்துநிலையை உருவாக்குகின்றன. எல்லாருக்குள்ளும் மணிபல்லவம் உண்டு. கடலின் முத்துக்கள் முளைத்துவரும் ஒரு இடம் அல்லவா மணிபல்லவம்?. என் பெயர் மணிமேகலை என்பதனால் இந்தக்கதை எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. கடிதம் எழுத நினைத்து பாதி எழுதிய கடிதங்கள்தான் அதிகம். இந்தக்கடிதம் எழுதுவதற்குக் காரணம் இதுதான்

மணிமேகலை பாண்டியராஜ்

***.

அன்பு ஜெ,

ஆர்வம் மிகுந்து வந்து ஆர்வத்தின் உச்சியை அளித்தது கதையின் இறுதி முடிபு. லைஃப் ஆஃப் பை என்ற படத்தில் விஷ்ணு சயன வடிவில் ஒரு தீவைக் காண்பிப்பார்கள். அது அப்போது மணிபல்லவத் தீவைத் தான் எனக்கு ஞாபகப் படுத்தியது. நீங்கள் இங்கு எனக்கு காட்டியிருப்பது தருக்க ரீதியிலான ரேஷனல் மணிபல்லவத் தீவு. எப்பொழுதும் உங்கள் கதைசொல்லி தருக்கத்தின் உச்சியினின்று என் போன்றவர்களுக்கு விளக்குவதாகப் பார்க்கிறேன். தருக்கத்தின் எந்த மூலையையும் விடுவதில்லை.

வேறெந்த கற்பனை இடத்தை விடவும் கடல் சார்ந்த கற்பனை உலகம் கட்டமைக்கையிலேயே பிரம்மாண்டமாக இருக்கிறது. கடல் என்றுமே எனக்கு பிரமிப்பை ஊட்டக் கூடியது. அதுவும் இரவின் கடல் என்னை என்னவோ செய்யும் தன்மையது. ஒரு முறை இரவு 2 மணியளவில் கடலை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் ஜெ. என் வாழ்வின் மறக்க முடியாத தருணமது.

இரவின் கடல் அச்சமல்லாத ஒரு வகையுணர்வை என்னில் மூட்டியிருந்தது அன்று. நான் மட்டும் தனியில் அலைகளை காலில் தழுவ விட்டு கைகளை விரித்து கடல் நோக்கி பார்த்திருந்தேன். கடல் காலத்தின் பெருவெளியாய் என் முன் நின்றிருந்தது. அலையின் அறிப்பு நான் உள் நகர்ந்து கொண்டே இருப்பது போன்ற பிரமிப்பை அளித்திருந்தது. நான் சென்று கொண்டே இருந்தேன் எனப்பட்டது. என் ஒட்டு மொத்த ஆன்மாவை கழுவிக் கழுவி சுத்தீகரித்துக் கொண்டே இருந்தது. நான் இல்லாமல் ஆகி ஒருகட்டத்தில் அழுது கொண்டே இருந்தேன். தூரத்தில் தெரியும் அந்த நிலவு என்னில் அன்பை பரிபூரணமாக நிறைத்துக் கொண்டிருந்தது. இதுவே ஒரு வகை மயப்புனைவைப் போல்தான் இன்றும் மனதில் உள்ளது ஜெ. நீங்கள் கடத்திய மணிபல்லவத்தீவை அதனால் தான் அணுவணுவாக என்னுள் கட்டமைத்து அமிழ முடிந்தது. மனதிற்கு நெருக்கமாக்க முடிந்தது.

புவியியலையும்,  தத்வார்த்தத்தையும், பகுத்தறிவையும், அறிவியியலையும் உட்புகுத்தி கனவுகளில் செல்ல ஏதுவான ஓர் நவீன மணிபல்லவத்தீவை, எனக்கான புனைவு வெளியை கட்டமைத்துக் கொள்ள ஏதுவான கதை ஜெ. நன்றி.

அன்புடன்

இரம்யா.

***

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ

நலம்தனே? தங்கப்புத்தகம்தான் மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு சின்னவயசிலேயே நாலாயிரத் திவ்யபிரபந்தம் பாடம். அதிலேயே வாழ்ந்து வளர்ந்தேன். இப்போது நாற்பத்தாறு வயசு. இன்றைக்கும் அதுதான். என்னுடைய தங்கப்புத்தகம் அதுதான் என்று சொல்வேன். எல்லாருக்கும் ஒரு வகையில் அது அர்த்தமாகும். எனக்கு எனக்கேயான ஒரு அர்த்தம் கிடைக்கும். ஒருநாளுக்கு ஒரு வரி அல்லது ஒரு வார்த்தை. அன்றைக்கு முழுக்க அதுதான்

என் மாமாதான் எனக்கு மந்த்ரம். அவர் அப்படியெல்லாம் அர்த்தம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதெல்லாம் தப்பு என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தப்பாக இருக்கும் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் அப்படி அர்த்தம் எடுத்துக்கொள்ளாமலிருக்க என்னால் முடியவில்லை என்பதுதான் நிஜம்.  “செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே” என்ற வரியை நான் அங்கே ஒரு பெரிய காற்று வீசி அவர்களின் தலைமுடி பறந்தது என்றுதான் எடுத்துக்கொள்வேன்

தங்கப்புத்தகம் வாசிக்கும்போது என் வாசிப்பைப்பற்றி தோன்றியது. இப்படித்தான் வாசிக்கமுடியும் வாசிக்கவேண்டும் என்பதில்லை. தங்கப்புத்தகம் ஒரு கடல். நமக்கு துளிகள் தான் கிடைக்கும்

ஆர்.வரதராஜன்

***

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

வணக்கம்.

கதைத்திருவிழாவின் முதல்கதை – தங்கப்புத்தகம் வாசித்தேன். இரண்டாம்பாகம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு புரிதலுணர்வு. சட்டென்று இந்த வரி – ‘இது ஒரு புள்ளிவிவர விளையாட்டு மட்டுமே.’ கதை முழுமையும் இவ்வரியையொட்டி தெளிந்தது.

புள்ளியியலில் (Statistics) மையம் (Central Tendency), சிதறல் (Variation) என்று இரு அளவை வகைகளுண்டு. ஒரு முழுமைத்தொகுதியின் (Population) இயல்பையறிய இவ்விரண்டும் தேவை. பாட் மையத்தை அறிய விழைகிறான். முக்தாவோ அதன் சிதறல் தன்மையை அளந்துவிட எண்ணுகிறார். அடி-முடி காண்பதுபோல் இவ்விரண்டுமே முடியாமல் போகிறது. இதில் இன்னொரு ஆச்சர்யம் – தரவு சேகரிப்பில் உள்ள சிதறலுக்கு இரு முக்கிய காரணிகள் உண்டு. ஒன்று தரவு சேகரிப்பவரால் நிகழ்வது (Variation by measurer) , மற்றொன்று அவர் பயன்படுத்தும் முறையால் (Variation by method) விளைவது. இந்த இரண்டையுமே நீங்கள் விளக்கியுள்ளீர்கள். இவையெல்லாமே கொஞ்சம் சிக்கலான கருத்துருக்கள். உங்கள் கணித அறிவைப்பற்றி எழுதியிருந்தீர்கள். ஆனால் உங்கள் எழுத்து மூலமாகவே சிக்கலான கணிதக்கோட்பாடுகளையும் அலசியிருக்கிறீர்கள்.

நன்றியுடன்,

சேவியர்

***

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைமணிபல்லவம்
அடுத்த கட்டுரைஅன்னம்,மூத்தோள்- கடிதங்கள்