வம்புகள், புலம்பெயர் இலக்கியம்-கடிதங்கள்

புலம்பெயர் இலக்கியம் – அ.முத்துலிங்கம்

அன்புள்ள ஜெ

நேற்று எனக்கும் என் நண்பருக்கும் இடையே சுவாரசியமான ஓர் உரையாடல் நடந்தது. அவர் கொஞ்சம் இடதுசாரி- திமுக கலவை. நான் அவரிடம் உங்கள் அன்னம் கதையைப் பற்றிப் பேசியபோது ‘ஜெமோவை கழுவிக்கழுவி ஊத்துறாங்களே’ என்றார். நான் சொன்னேன். சரி, ஒன்றுசெய்யுங்கள். டிவிட்டர், ஃபேஸ்புக்கில் ஜெயமோகன் என்று அடித்து தேடிப்பாருங்கள். வரும் கருத்துக்களில் எவை எந்த சதவீதத்தில் இருக்கின்றன, என்ன கண்டெண்ட் என்று பாருங்கள் என்றேன். உடனே தேடினோம்.

ஒவ்வொருநாளும் பத்து இருபது பதிவுகள் உங்களைப்பற்றி டிவிட்டர், ஃபேஸ்புக்கில் வருகின்றன. அவற்றில் பெரும்பான்மை உங்கள் படைப்புக்களில் இருந்து தங்களை பாதித்த வரிகளை பலர் மேற்கோள் காட்டியிருப்பது, உங்கள் படைப்புகளைப் பற்றிய கருத்துக்கள். அதற்கு கொஞ்சம் குறைவாக எதிர்மறை கருத்துக்கள். நாங்கள் தேடியபோது உங்களை வாசித்து மேற்கோள் காட்டியவர்கள் ஒருபக்கம். மறுபக்கம் இருந்தவர்கள் அத்தனைபேரும் புளிச்சமாவு என்று சொல்லி ஏதாவது வசையோ நையாண்டியோ செய்தவர்கள்.

நான் அந்த நண்பரிடம் கேட்டேன். உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள்.உங்கள் அரசியலை விடுங்கள். நீங்கள் அறிவார்ந்த தேடல் கொண்ட ஒரு இளைஞன் என்றால் இந்த இரண்டு தரப்புகளில் எதை தேர்வுசெய்வீர்கள்? அவர் உண்மைதான். ஒட்டுமொத்தமாக பார்த்தால் அவரை ஒரு பொறுக்கிக்கூட்டம் எதிர்ப்பதுமாதிரித்தான் தெரிகிறது என்றார்.

நான்  சொன்னேன். அதுதான் உண்மை. வாசிக்க வருபவன் வெறும் அரசியல்தொண்டன் அல்ல. அவனுக்கு சென்சிபிளிட்டி உண்டு. உங்கள் காழ்ப்புகளை எல்லாம் அவன் பங்குவைக்க மாட்டான். அவன் இந்த வரிகளில் ஏதாவது ஒரு வரியால் இன்ஸ்பையர் ஆவான். இப்படி ஆழமோ புரிதலோ இல்லாமல் நக்கலும் வசையும் செய்பவர்கள் மேல் கசப்புதான் வரும் அவனுக்கு. இப்படித்தான் அவருக்கு வாசகர்கள் வருகிறார்கள் என்றேன்.

அவர் மனம் மாறவில்லைதான். அவரே எதையாவது படிக்கும் வரை மனம் மாறப்போவதுமில்லை. ஆனால் அவரால் பதில்சொல்லமுடியவில்லை

டி.செந்தில்குமரன்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நேற்று உங்கள் இணையத் தளத்தில்  உங்களது உரையொன்று பற்றிய  ஆசி.கந்தராஜா அவர்களின் ஆதங்கத்தினையும், அதற்கான உங்கள் பதிலினையும் கண்டேன்.

ஒருவரது உரையின் காணொளி   அல்லது எழுத்தின் சிறு பகுதிகளை இன்னொருவர்  வெளியிடும்  போது இவ்வாறான கருத்துச் சிக்கல்கள் தோன்றுவதற்கு இடமுண்டு. ஒருவரின் உரையின் முக்கியமான பகுதியை சமூக ஊடகங்களில்  பகிரும் ஒருவர்  முழுக் காணொளியின் இணைப்பை முதலாவது கருத்துப் பதிவிலேனும் பகிர்ந்தால் ஆர்வம் உள்ளவர்கள் அதை பார்த்து தமது புரிதல் நியாயமானதுதானா என உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

உங்களது குறிப்பிட்ட உரையினை முழுமையாக, கவனமாக கேட்டேன். நவீன இலக்கியத்தின் வகைப் பாடுகளாகக்  கருதப்படும்  நான்கு முக்கிய தலைப்புகளில்  மிகச் சிறப்பாக உரை ஆற்றியிருக்கிறீர்கள். அந்த உரையைக் கேட்பது இனிமையான அனுபவமாகவே இருந்தது.  கலாசார பன்மைத்துவ இலக்கியம்,புலம்பெயர் இலக்கியம், பாரிய அல்லது கூட்டு இடம்பெயர்வின் பின்  எழுதப்படும் இலக்கியம், விளிம்பு நிலையாளர் பற்றிய இலக்கியம் என்ற தலைப்புகளில் விரிவாகவும், இவ்வகை எழுத்துக்களில்  உதாரண எழுத்தாளர்கள் ஒரு சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டும் இந்த உரை அமைந்திருந்தது.

புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகளில்  அ.முத்துலிங்கம் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது கலாச்சார பன்முகத் தன்மையை பிரியத்துடனும்,  மனவிரிவுடனும், மானுட சமத்துவத்துடனும் அணுகிய ஒரே எழுத்தாளர் என்றால் அது முத்துலிங்கம் தான் என்பதை வெகு  அழுத்தமாகவே பதிவு செய்திருந்தீர்கள். ஆனால் ஆசி.கந்தராஜா அவர்களுக்கான பதிலில் அப்படிப்பட்ட தொனி வந்திருக்குமாயின் அது தவறு என்பதையும் கூறியுள்ளீர்கள்.

எனினும் ஒரு சபையில் ஆற்றப்படும் இத்தகைய உரையானது  புலம்பெயர் வாழ்வு, பன்னாட்டு கலாசார விழுமியங்கள், பண்பாட்டு மாற்றத்தினை எதிர் கொள்ளும் சிக்கல்கள் என்பன பற்றித் தனது இலக்கிய எழுத்தின் மூலம் பற்பல படைப்புகளைத் தந்த ஒரு பிரபல இலக்கியவாதியை ஆதங்கம் கொள்ளச் செய்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனது பேரபிமானத்துக்கு உரிய எழுத்தாளர் என்ற வகையில் ஆசி.கந்தராஜா அவர்களின் ஆதங்கத்தை நான் மிகவும் நியாயமானதாகக் கருதுகிறேன்.

நான் வியந்து நோக்கும் எழுத்துக்கள் உங்களுடையவை. இவ்வளவு தகவல்களும்,தரவுகளும்  உங்கள் நினைவுக் கலங்களில் எவ்வாறு நிலைநிறுத்தப் படுகின்றன என்ற பிரமிப்பு அடிக்கடி எழுவதுண்டு.உங்கள் எழுத்துக்கள் புரியாதிருக்கும் போது ஒரு வித ஆற்றாமையும் ஒவ்வாமையும் கூடவே வருவதுண்டு. வாசித்தலில் ஆர்வமிருந்தாலும் இத்தகைய எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் பொறுமை எல்லோருக்கும் வாய்க்குமா என்பது சந்தேகமே. ஆனாலும்  தொடர்ந்து வரும் வாசகர் கடிதங்கள் எனது புரிதலை மேம்படுத்த உதவுகின்றன. வாசிக்க முடிந்த சமீபத்தைய கதைகளில் யாதேவி, கூடு,போழ்வு, இணைவு ,பத்துலட்சம் காலடிகள்,பலிக்கல்ஐந்து நெருப்பு, லீலை ஆகியன முக்கியமானவை.

அதே சமயம் எனது புரிதலுக்கும், தேடலுக்கும் ஏற்ற வகையில் வேறு பல எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் நல்ல எழுத்துக்களையும் விரும்பி வாசிக்கிறேன். ஒவ்வொருவருக்கும்  ரசனைகள் தனித்துவமானவை. அன்பு வாழ்த்துக்களுடன்

ரஞ்ஜனி சுப்ரமணியம்

கொழும்பு

***

ஜெமோ சார் ,
உங்கள் கதைகளை எழுத்துக்களை வாசித்துக்கொண்டே இருக்கின்றேன். இது ஒரு முடிவற்ற ஆனந்தமாக உள்ளது. ஆங்கிலம் மற்றும் அறிவியல் மூலம் எனது வயிறு நிரம்புகிறது.. தமிழ் மற்றும் உங்கள் எழுத்துக்கள் மனம் நிரம்புகிறது. உங்களது கதைகள், உங்களது வாசகர் கடிதங்கள், பிற எழுத்தாளர்கள் மற்றும் உங்களைப்பற்றிய பற்றிய வம்புகள் என உங்களது தளம் உயிர்ப்புடன் உள்ளது.நானும் உங்களது வாசகராக உள்ளேன் என்பதே ஒரு பெரும்பேறு.

அன்புடன்
செல்வராஜ் சுப்புராஜ்

***

முந்தைய கட்டுரைகதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]
அடுத்த கட்டுரைராஜன்,மலையரசி- கடிதங்கள்