கதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]

சிற்றாறு அணையிலிருந்து மருதம்பாறை வழியாக பத்துகாணி போகும் சாலையில் இருந்து பக்கவாட்டில் திரும்பிச்செல்லும் செம்மண் பாதை பெத்தேல் எஸ்டேட், கிருஷ்ணா எஸ்டேட் ஆகியவற்றை தாண்டி மேலேறிச்சென்று திரும்பி ஓர் இரட்டைப்பாறையைச் அடையும் என்றும் அதன் அடிவாரத்தில் சூரன்காணியின் வீடு இருக்கிறது என்றும் சொன்னார்கள். ஆனால் நான் எங்கோ வழிதவறிவிட்டேன். அப்படி ஒரு பாறை அங்கே இல்லை.

அருகில் எங்காவது இருக்குமோ என்று எண்ணி ஒரு பக்கவாட்டு மண்சாலையில் திரும்பியது நான் செய்த பிழை. அந்த சாலை அடர்காட்டுக்குள் சென்று வெறும் ஜீப் தடமாக ஆகியது. திரும்பி வந்து பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி வந்த வழிக்கு பதிலாக நேர் எதிர்ப்பக்கம் சென்றுவிட்டேன். அது தாழ்வான கால்தடப் பாதையாக மாறி பின்னர் மழைநீர் ஒழுகும் தடமாக உருக்கொண்டது.

இரண்டு பக்கமும் ரப்பர் காடு, ஊடே பன்றிகள் போலவும் எருமைகள் போலவும் யானைகள் போலவும் கரியபாறைகள். அவற்றின்மேல் மஞ்சள்பூசணம் பூக்கள்போல மலர்ந்து ஒட்டியிருந்தது. சில இடங்களில் சிவந்த தேமல்போல படர்ந்திருந்தது. ரப்பரின் வேர்கள் பாதை முழுக்க பரவி பைக்கின் சக்கரத்தை அதிரச்செய்தன. பைக்கின் ஒலி எங்கெங்கிருந்தோ எதிரொலித்து என்னை வந்தடைந்தது.

பைக்கை நிறுத்திவிட்டேன். திரும்பிச் செல்லவேண்டியதுதான். ஆனால் தலைக்குமேல் ஒரு பெரிய கரியபாறை எழுந்து கோபுரம்போல நின்றிருந்தது. பக்கவாட்டில் ஏறி அதன்மேல் சென்றுவிடலாம் என்று தோன்றியது. அங்கே ஏறி நின்று சூழலை ஒருமுறை சரியாகப் பார்த்துவிட்டால் வழி பற்றிய தெளிவு வந்துவிடும்.

ரப்பர் காடுகளில் உள்ள முக்கியமான பிரச்சினையே அங்கே வானம் தெரியாது, ஆகவே திசை தவறிவிடும் என்பதுதான். மேலிருந்து பார்த்தால் ரப்பர் தோட்டங்களின் அடர்ந்த பசுமையின் நடுவே வழியை ஒரு வெட்டுக்கோடு போலவே பார்த்துவிடலாம். பைக்கை பூட்டிவிட்டு பின்பக்க பெட்டியில் இருந்து குடிநீர் குப்பியை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு ரப்பர் தோட்டத்திற்குள் நுழைந்து சருகுகளும் கொடிகளும் பரவிய தரையினூடாக மேலே சென்றேன்

ரப்பர் தோட்டத்தை நன்கறிந்தவர்களாலேயே உள்ளே நடமாட முடியும். உள்ளே மழைநீர் வழிந்து தேங்கி மண்ணுக்குள் செல்வதற்காக தரையை சரிவாக வெட்டி ஆழமான குழியாக ஆக்கியிருப்பார்கள். அதில் சருகுகள் விழுந்து சேர்ந்திருக்கும். அதில் கால்வைத்தால் புதைமணல் போலத்தான். ரப்பர் மரங்களில் பால்வெட்டுபவர்கள் நடப்பதற்கு ஒரு வழி இருக்கும், அது சற்று சுற்றாக இருந்தாலும் அதை ஒட்டியே செல்வதுதான் நல்லது.

மழையின் ஈரம் காயாத மண். ரப்பர் மரத்தின் தழைக்கூரைக்கு கீழே இருட்டு நிறைந்திருந்தது. சீவிடுகளின் ஒலி உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. பழையகாலத்தில் மைக் ஓயும்போது ஆம்ப்ளிஃபயர்கள் கிரீச்சிடுவதுபோல. காற்றில் குளிர் இருந்தது. ஆனால் நீராவியின் வெம்மையையும் உடல் அறிந்தது. வேர்த்து சட்டை உடலில் ஒட்டிக்கொண்டது, காற்று விரைவாக வீசியபோது சட்டை படபடத்து  உடல் குளிர்ந்தது.

இந்தப்பகுதியில் ரப்பர் தோட்டங்கள் மட்டும்தான். மக்கள் செறிந்த குமரி மாவட்டத்தில் இத்தனை பெரிய நிலப்பகுதி முற்றிலும் ஆளற்றதாக இருக்கமுடியும் என்பதை கற்பனையே செய்யமுடியாது. ஆனால் இங்கே எல்லா காடுகளும் அணுகமுடியாதபடி செறிவுகொண்டவை. மலையுச்சிகள் செங்குத்தானவை. மலைமடிப்புகளுக்குள் செல்ல பாதைகளே இல்லை. இங்குள்ள மக்கள் தொகை முழுக்க கடலோரமாகத்தான். ரப்பர் தோட்டங்களில் விளைபொருள் என ஏதுமில்லை. பால்வெட்டு நிகழாதபோது அது வெறும்காடுதான்.

இது ரப்பர் பால் சீசன் அல்ல. அதற்கு இன்னும் ஒருமாதமாகும். இந்த வட்டாரத்திலேயே எவரும் இருக்க வாய்ப்பில்லை. நான் கடையாலுமூட்டைக் கடந்த பின்னர் மனித முகத்தையே பார்க்கவில்லை. கடை ஆலுமூடு. அங்கிருந்த ஆலமரம்தான் அப்பாதையில் கடைசியானதாக இருந்திருக்கக்கூடும், நெடுங்காலம். ரப்பர் வந்தபின்னர்தான் காணிக்காரர்கள் அல்லாதவர்கள் அதை கடந்து வந்திருப்பார்கள்.அதன்பின் சிற்றாறு அணை கட்டப்பட்டது.

நான் மூச்சிரைக்க மேலேறி, மலைப்பாறையை சுற்றிக்கொண்டு சென்றபோது அருவியின் ஓசையை கேட்டேன். நீரின் வாசனையும் எழுந்தது. ஒரு பாறைமேல் நின்று மறுபக்கம் பார்த்தபோது கீழே அந்த பாறை அமர்ந்திருந்த குன்று சரிந்திறங்கி சென்று சேர்ந்த மடிப்பில் இலைத்தழைப்புக்கும் கோரைப்புல் செறிவுக்கும் நடுவே காட்டாறு ஒன்று நீர்நெளிய ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அது வளைந்து அப்பால் சென்று மறைந்தது. அங்கேதான் அது அருவியாக விழுந்துகொண்டிருக்கவேண்டும். அங்கிருந்து பார்க்கையில் அந்த தன்னந்தனியான காட்டாறு ஒரு விசித்திரமான மனக்கிளர்ச்சியை அளித்தது.

என் கைகள் படபடத்துக் கொண்டிருந்தன. நெஞ்சு நடுங்கி ஓசையிட்டது. அது ஏன் என்பதை அதற்குப் பின்னர்தான் நான் உணர்ந்தேன். ஆற்றின் கரையில் ஒரு பாறையின்மேல் சுந்தரம் நின்றிருந்தார். இளமஞ்சள் நிறமான நைலான் கோட் அணிந்து, ஜீன்சும் ஷூக்களும் கையில் ஊன்றுகோலாக குடையுமாக எனக்கு முதுகைக் காட்டியபடி நின்று, எதையோ பார்த்துக்கொண்டிருந்தார்.

நான் சூரன்காணியை பார்க்க வந்ததே அவரைக் கொல்வதற்கோ அல்லது கைகால் இழுத்துக்கொள்ளச் செய்வதற்கோ ஏதாவது மந்திரவாதம் செய்ய முடியுமா என்று விசாரிப்பதற்காகத்தான்.

படபடப்பை வென்று மூச்சை நிதானமாக இழுத்துவிட்டு என்னை சீர்ப்படுத்திக் கொண்டபிறகு நான் மிகமெல்ல புதர்களுக்குள் ஒளிந்துகொண்டேன். என் ஆடையை பார்த்தேன், சாம்பல்நிறம். காட்டில் எளிதில் மறைவது. கையிலிருந்த குப்பியில் இருந்து எஞ்சிய நீரை குடித்தேன். நீர் என் அகத்தில் இருந்த படபடப்பை குளிர்வித்தது

சுந்தரம் என்னை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இருந்தாலும் அதை உறுதி செய்துகொள்ள விரும்பினேன். கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவர் அவருக்கு அப்பால் புதருக்குள் நின்றிருந்த இரண்டு காட்டுமாடுகளை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஆறு ஓர் எல்லை போலிருக்கிறது. அதற்கு அப்பால் அவருடைய நிலம் என்று தோன்றியது. இயல்பாக, வழக்கமான பாதையில் செல்பவராக தோன்றினார். அங்கிருந்து எழுந்து மேலே சென்று ஒரு பாறையில் முடிந்த சிறிய குன்றின் மறுசரிவில் எஸ்டேட் பங்களா இருக்கக்கூடும்.

வேறு எவரேனும் அங்கே இருக்கிறார்களா என்று பார்த்தேன். சுந்தரம் தனியாகத்தான் இருந்தார். இன்னொரு முறை வலப்பக்கம் முதல் இடப்பக்கம் வரை, குன்றின் உச்சிமுதல் ஆறுவரை, ஒவ்வொரு புள்ளியாக பார்வையை நிலைநிறுத்தி மெல்ல நகர்த்தி எவரேனும் தென்படுகிறார்களா என்று பார்த்தேன். எவருமே இல்லை. அங்கே நானும் அவரும் தவிர வேறு ஒருவர்கூட இல்லை.

தெய்வம் உருவாக்கிய தருணம். என் கொதிப்பை, கண்ணீரை, சாபங்களை, வேண்டுதல்களை தெய்வம் கேட்டிருக்கிறது. இல்லையேல் இப்படி அமையுமா என்ன? இது எல்லா வகையிலும் தற்செயல். நேற்று இரவுவரைக்கும், சொல்லப்போனால் இன்று காலை வரைக்கும்கூட, இங்கே வரும் எண்ணமே எனக்கில்லை.

நான் இரவெல்லாம் தூங்கவில்லை. என் மனம் கொந்தளித்துக் கொண்டே இருந்தது. தூக்க மாத்திரை சாப்பிட்டேன். முன்னிரவில் அரைமணிநேரம் தூங்கினேன். விழிப்பு வந்ததும் மனம் எழுந்து ஆட்டம்போட தொடங்கிவிட்டது. இன்னொரு மாத்திரை போட்டேன். மீண்டும் ஒருமணிநேரம் தூங்கினேன். விடியற்காலையில் விழிப்பு. உடலே பரபரத்தது. எழுந்து தூக்கில் தொங்கவேண்டும் என்று. கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொள்ளவேண்டும் என்று. வெளியே இறங்கி தெருவில் நின்று கூச்சலிடவேண்டும் என்று. கையில் கிடைத்த ஆயுதத்துடன் போய் அவரைக் கொல்லவேண்டும் என்று.

அப்போதுதான் கணேசன் சொன்ன சூரன் காணியின் ஞாபகம் வந்தது. அவன் சொன்னபோது “போடா, மந்திரமாவது மாயமாவது” என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவன் சொன்ன வழியும் இடமும் ஆழமாக மனதில் பதிந்திருந்தது. அப்போது மனத்தில் தர்க்கமே வேலை செய்யவில்லை, உடனே கிளம்பிவிட்டேன்.

அப்போது தூறல் மழை இருந்தது. காற்று வீசிக்கொண்டிருந்ததனால் சாலையில் எவருமே இல்லை. எந்தக்கடையும் திறந்திருக்கவில்லை. நான் மழைக்கோட்டை போட்டுக்கொண்டு, ஹெல்மெட்டை போட்டுக்கொண்டு பைக்கில் குலசேகரம் வந்து, அங்கிருந்து கடையாலுமூட்டுக்கு திரும்பினேன். எங்கு போகிறேன் என்று எவருக்கும் சொல்லவில்லை. நான் இங்கே வந்திருப்பது எவருக்குமே தெரியாது.

அது நல்லதுதான். அதுதான் மிகச்சிறந்த வாய்ப்பு. இங்கே இந்நேரத்தில் நான் இருப்பதற்கான எந்த காரணமும் இல்லை. இப்படி அவரை நான் சந்திப்பதை திட்டமிட்டுச் செய்வதாக இருந்தால் பல மாதங்கள் ஆராய்ந்திருக்க வேண்டும். பலபேருக்கு தெரியவும் வந்திருக்கும். இப்போது முற்றிலும் சாட்சிகளே இல்லை.

அந்த வார்த்தைகள் என்னை கிளர்ந்தெழச் செய்தன. சாட்சிகளே இல்லை அதை மந்திரம் போல சொல்லிக்கொண்டேன். சாட்சிகளே இல்லை. சாட்சிகளே இல்லை. சாட்சிகளே இல்லை. சாட்சிகளே இல்லை. சாட்சிகளே இல்லை.

புதர்களை அசைக்காமல், ஒரு பாறை மறைவிலிருந்து இன்னொரு பாறை மறைவுக்கு குனிந்தே தாண்டி நான் கீழிறங்கிச் சென்றேன். ஆற்றில் முழங்கால் அளவுக்குத்தான் தண்ணீர் ஓடியது. அதன் நீரோசை கேட்க தொடங்கியது. ஈரச்சதுப்பில் வளரும் வளரிப்புல்லும், காட்டுச்சேம்புச் செடிகளும் கொண்ட நிலத்தை அடைந்ததும் சேற்றில் மிதிக்காமல் பாறைகள் மீதே கால்வைத்து நடந்தேன். தவளைகள் எகிறிப்பாய்ந்தன. ஒரு பாறைக்குப் பின்னால் நன்றாக உடலை தாழ்த்தி அமர்ந்துகொண்டேன். மிக மெல்ல முகத்தை நீட்டி அவரைப் பார்த்தேன்

சுந்தரம் அந்த காட்டெருதுக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். வளைந்த பிடிகொண்ட நீண்ட குடையை சேற்றில் ஊன்றியிருந்தார். எருதுகளில் ஒன்று சிறு குட்டி. ஆகவே எருதுகளும் அவரை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தன. அவர் அசைந்தபோது அவற்றின் செவிகள் குவிந்து ஓசைகூர்ந்தன. முகவாயை சற்றே தூக்கி பெரிய கண்களால் மிரட்சியுடன் பார்த்து பிடரி சிலிர்த்து வால்சுழற்றின.

அவர் முகத்தை தெளிவாகப் பார்த்தேன். குடிப்பழக்கத்தால் வெளிறிய தொங்கிய முகம். கண்களுக்குக் கீழே கருகிய தசைவளையங்கள். உதடுகளுக்குச் சுற்றும் ஆழமான வெட்டுக்கோடு போன்ற வரிகள். அவர் கண்கள் மங்கியவை. குரூரமானவர்கள் இருவகை, மிகமிக மங்கலான கண்கள் கொண்டவர்கள், மனநோயாளிக்குரிய மின்னும் கண்கள் கொண்டவர்கள். இவர் முதல் வகை.

இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா அவருடன் பங்குதாரராக இருந்தார். அப்பா வளமான பின்னணியில் இருந்து வந்தவர். அவருடைய அப்பா ஏராளமாக நிலம் வைத்திருந்தார். சுந்தரம் அவருடன் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தவர். அப்பாவை பேசிப்பேசி கவர்ந்து, வியாபாரத்தில் இறக்கினார். அப்பா முதலீட்டுப் பங்குதாரர், சுந்தரம் உழைக்கும் பங்குதாரர். மினர்வா ஏஜென்ஸீஸ் அவ்வாறுதான் 1983 ல் ஆரம்பிக்கப்பட்டது

அவர்கள் வெவ்வேறு பொருட்களுக்கான ஏஜென்ஸிக்களை எடுத்தார்கள். ஒரேசமயம் ஐம்பதுபொருட்களுக்குக்கூட ஏஜென்ஸிக்கள் இருந்தன. சோப்பு, பௌடர், பிளாஸ்டிக் பொருட்கள் என்று என்னென்னவோ. எவையுமே அங்கீகாரமுள்ள நிறுவனங்கள் அல்ல. அப்பா ஆரம்பகட்ட லாபத்தில் மகிழ்ந்து மிகப்பெரிய தொகைகளை இறக்கினார். நிலங்களை விற்றும் அடமானம் வைத்தும் பணத்தை கொண்டுவந்தார்.

அப்பா இறக்கும்வரைக்கும்கூட உண்மையை தெரிந்துகொள்ளவில்லை. அவர் இறந்து பொறுப்பு என் கைக்கு வந்தபின் ஆறுமாதத்தில் தெரிந்தது, எங்கள் பங்குக்கு இருந்தது கடன் மட்டும்தான். சுந்தரம் மொத்தப் பணத்தையும் சிறுகச்சிறுக ஏமாற்றி எடுத்துக் கொண்டுபோய் வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்திருந்தார். நூற்றுக்கணக்கான போலி வவுச்சர்கள், போலி பில்கள். நடக்கவே நடக்காத வியாபாரங்கள். மூன்றுகோடி ரூபாய்க்குமேல் நிலுவைகள். மினர்வா ஏஜென்ஸீஸ் திவாலானது. சுந்தரம் ஏற்கனவே ஏஜென்ஸி ஒன்றை அவர் மகள்பெயரில் நடத்திவந்தது தெரியவந்தது.

இறுதியாக எங்கள் வீடும் வீட்டுநிலமும் மட்டும்தான் மிச்சமிருந்தது. அம்மாவுக்கு மொத்தமாக சொத்துக்கள் எல்லாம் போய்விட்ட செய்தியே தெரியாது. அம்மாவுக்கு பொதுவாக உலகமே தெரியாது. நல்லவேளையாக அக்காக்களை திருமணம்செய்து கொடுத்திருந்தார் அப்பா. அம்மாவுக்கு தெரியாமல் முடிந்தவரை எல்லாவற்றையும் முன்னால் கொண்டு போகலாம் என்று நினைத்தேன். குறைந்தபட்சம் அம்மா சாகும் வரையாவது.

ஆனால் எங்கள் வீட்டை ஜப்திசெய்ய வங்கியிலிருந்து ஆணை வந்தபோதுதான் என் எல்லா முயற்சிகளும் சுவரில் முட்டி நின்றன. அந்த வீட்டில் இருந்து அம்மா வெளியே போனதில்லை. எங்கள் குடும்பத்தின் அடையாளம் அந்த வீடு. வேறுவழியில்லாமல், ஒருபோதும் நேரில் பார்க்க விரும்பாத சுந்தத்தை சென்று பார்த்தேன்.

அவர்மேல் இருந்த அத்தனை கசப்புகளையும் மறைத்துக்கொண்டு, என்னை நானே புழுவினும் கீழாக ஆக்கிக்கொண்டு, காலையில் அவருடைய வீட்டுக்குச் சென்று நின்றேன். அவரை பார்க்கவேண்டும் என்று சொல்லி அவருடைய உதவியாளரிடம் மன்றாடினேன். இரண்டுமணிநேரம் காத்திருக்க வைத்தபின் உள்ளே அழைத்தார். ஒருநாற்காலியில் அமர்ந்திருந்தார். என்னை உட்காரச் சொல்லவில்லை. அறையில் அவருடைய மானேஜரும் இரண்டு வேலைக்காரர்களும் நின்றார்கள்.

“தனியாப் பேசணும்” என்றேன்.

“இவங்க இருக்கிறப்ப பேசினாப் போரும்” என்றார்.

நான் “தயவு பண்ணணும்… வீட்டுக்கு ஜப்திநோட்டீஸ் வந்திருக்கு. அம்மை அறியப்பிடாது” என்றேன்

“அதுக்கு நான் என்ன செய்யணும்?” என்றார். பழுத்த கண்கள், வெளிறிய முகம், கோடுவிழுந்த முகவாய்.

“அம்மை அறியாம இதை முடிக்கணும்… வீடு மட்டுமாவது எங்களுக்கு மிஞ்சணும்” என்றபோது நான் அறியாமல் கைகூப்பிவிட்டேன். கண்களில் நீர் நிறைந்தது

“தொழில்னா நஷ்டம் இருக்கும். லாபம் வந்தா பங்குபோடுதோம்லா? நஷ்டத்தை மத்தவன் தலையிலே கட்டுததுன்னா அது நடக்குமா?” என்றார்.

“நான் ஒண்ணும் சொல்லல்ல. உங்களுக்கே தெரியும்.. வீடு மட்டுமாவது எங்களுக்கு மிஞ்சணும்.”

“உன் அப்பன் கிட்ட நான் சொன்னேன், வீட்டை அடமானம் வைக்காதேன்னு. கேக்கல்ல. பொம்புளைச் சகவாசம்… பணத்தை எவ வாங்கினாளோ…”

“டேய்….” என்று கூவி கையை ஓங்கிவிட்டேன். அவர் அருகே நின்ற இரு வேலைக்காரர்களும் முன்னால் வந்தனர்.

“அப்ப அடிக்கத்தான் வந்தே இல்ல? அதானே பாத்தேன்” என்றார்.

“தூ நாயே… நீ என் அப்பா காலை நக்கினப்ப நான் பாத்திருக்கேன்” என்றேன்.

“உங்கப்பன் சாவுறதுக்கு முன்னாலே என் காலைப் பிடிச்சான். இப்ப நீ பிடிக்க வந்திருக்கே”

நான் அங்கிருந்து இறங்கி ஓடினேன். பைக்கில் சென்று கன்யாகுமரியில் அமர்ந்திருந்தேன். ஓட்டலில் அறைபோட்டு விடியவிடிய குடித்தேன்.

வீடு இன்னும் ஜப்தி ஆகவில்லை. கோர்ட்டில் கேஸ்போட்டு இழுத்தடிக்கிறேன். அதற்கு எஞ்சிய துண்டுநிலங்களை விற்றுக்கொண்டிருக்கிறேன். என் எதிர்காலம் அச்சமூட்டியது. நினைத்தாலே வயிற்றுக்குள் பக் என்றது.

அதை விட அந்த துரோகத்தை என்னால் கடந்துசெல்லவே முடியவில்லை. உள்ளூர எரிந்து கொண்டிருந்தேன். இத்தனை அப்பட்டமான துரோகம் சாத்தியம்தான் என்றால் எதற்குமே அர்த்தமில்லை. நீதி நேர்மை மட்டுமல்ல சட்டம் போலீஸ் நீதிமன்றம் அரசாங்கம் எல்லாமே அபத்தம்தான்.

நான் மறந்துவிட முயலாமல் இல்லை. கடந்துசெல்ல என்னால் ஆனவரை பார்த்தேன். மனநல மருத்துவர்களை பார்த்தேன். கோயில்களுக்குப் போனேன். ஆனால் என் தீ அப்படியேதான் இருந்தது. அது என்னை கொன்றது. என்னால் குடிக்காமலிருக்க முடியவில்லை. தூக்கமாத்திரை இல்லாமல் தூங்க முடியவில்லை. நேற்றுத்தான் வக்கீல் சொன்னார், இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வந்துவிடும், எந்த நம்பிக்கையும் வேண்டாம் என்று.

என்னிடம் கடைசியாகப் பேசியபோதிருந்த சுந்தரத்தின் முகத்தையும் கண்களையும் ஒருகணமும் நான் மறக்கவில்லை. எப்போது எண்ணினாலும் அவற்றை அருகில் என பார்க்கமுடியும்.அவற்றிலிருந்த சலிப்பும் சூழ்ச்சியும் கலந்த பாவனை பல வியாபாரிகளிடம் இருப்பது. குறிப்பாக தரகர்களிடம். அவர்கள் அதைப் பயின்று பழகி, நடித்து, மெல்லமெல்ல இயல்பாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த சலிப்பு பிறர் அவர்களிடம் நெருங்கிவிடாமல் காக்கிறது. அவர்களுக்கு அது ஒரு கோட்டை போல. அதற்குள் அவர்கள் தங்கள் விஷக்கொடுக்குகளுடன் ஒளிந்திருக்கிறார்கள்

அவர் அங்கே அந்த நிலத்தை வாங்கியிருக்கலாம். நீண்டநாட்களாகவே அவருடைய உடைமையாக அது இருந்திருக்கலாம். அவருடைய நடையில் இருந்தது உரிமையாளனுக்குரிய சுதந்திரம். காட்டெருதுக் கூட்டம் மலைச்சரிவினூடாக விலகிச்செல்ல அவர் எதிர்த்திசையில் நடந்தார். நான் ஆற்றின் கரை வழியாக அவரை தொடர்ந்து சென்றேன்.

நான் திரும்பிப் பார்த்தேன். மலைச்சரிவில் என் காலடிகள் இல்லை, சருகுப்பரப்பில் காலடிகள் பதிவதில்லை. சேற்றுப்பரப்பில் பாறைகளின் மீது மட்டுமே காலை வைத்திருந்தேன். நான் வந்ததை எவரும் பார்க்கவே இல்லை. நான் அங்கே இருப்பதற்கு ஒரு தடையம்கூட அங்கே இல்லை.

ஒரு தடையம்கூட இல்லை.அந்தச் சொல் அளித்த படபடப்பும் கிளர்ச்சியும் என்னை உச்சிமுனையில் நிறுத்தியிருந்தன. நான் என் வாழ்க்கையில் அப்படி முழுக்கூர்மையுடன் இருந்ததே இல்லை. என் கண்களுக்கும் காதுகளுக்கும் மூக்குக்கும் ஆற்றல் பலமடங்கு பெருகிவிட்டிருந்தது. அந்தப்பகுதியை நான் துளித்துளியாக ஒட்டுமொத்தமாக அறிந்துகொண்டிருந்தேன்.ஒரு தடையம்கூட இல்லை.ஒரு தடையம்கூட இல்லை.

ஆற்றை பாறைகள் மீது மட்டும் கால்வைத்து நடந்து கடந்தேன். ஒரு கீற்றுபோல மண்ணுக்குள் இருந்து பாறை வெளியே தெரிந்தது. அதன் வழியாகவே சென்றேன். சட்டென்று சூழ்ந்திருந்த ரப்பர் காடுகளில் ஓலம் எழுந்தது. மிகச்சில நிமிடங்களில் மழை வந்து அறைந்து சூழ்ந்துகொண்டது. என் உடல் நனைந்து சிலிர்ப்படைந்தது.

ஆனால் மழை பெரிய திரைபோல என்னை மறைத்துக்கொண்டது. இனி நான் தொடர்ந்துசெல்வதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவர் திரும்பிப் பார்த்தால்கூட என்னை பார்க்கப் போவதில்லை. என் காலடித்தடங்கள் எஞ்சாது. போலீஸ் நாய் வந்தால்கூட என்னை பிடிக்கப்போவதில்லை

போலீஸ் நாயா? அப்படியென்றால் நான் என்ன செய்யப்போகிறேன்? கொலையா? அந்த வார்த்தை என் ரத்தத்தை பொங்கி தலைக்குச் செல்லவைத்தது. அந்த குளிரிலும் என் உடல் வெம்மைகொண்டது. கைவிரல் நுனிகளிலெல்லாம் ரத்தம் வந்து முட்டுவதை உணர்ந்தேன். முகத்தில் எறும்பூருவதுபோல ரத்தக்குழாய்களின் அசைவை அறிந்தேன். கொலையா?கொலையா? கொலையா?

மூச்சை மெல்ல மெல்ல சீர்ப்படுத்திக் கொண்டேன். கொலையேதான். இதைப்போல ஒரு வாய்ப்பு இனி கிடைக்கப்போவதில்லை. இதைச் செய் எனறு எனக்கு தெய்வமோ விதியோ ஆணையிடுகிறது. இத்தனை விஷயங்கள் வெறும் தற்செயலால் ஒருங்கிணையுமா என்ன?

எப்படி கொல்வது? என்னிடம் ஆயுதங்கள் ஏதுமில்லை. எனக்கு தேவை ஒர் அரிவாள். ஒரு கத்தி. அல்லது ஒரு கம்பி. ஏன் கல் போதாதா? உண்மையில் கல்லே நல்லது. இங்கே கல்லில் தலை அறைபட்டு அவர் செத்துக்கிடந்தால் அதை விபத்து என்றே நினைப்பார்கள். விபத்தாகவே அதை காட்டவேண்டும். இங்கே இன்னொருவர் வந்த தடையமே இருக்கக்கூடாது.

கல்தான் நல்லது. ஒருமுனை கூர்மையான, உறுதியான கருங்கல். எடைகொண்டதாகவும் இருக்கவேண்டும். நான் கற்களை கண்களால் தொட்டுத் தொட்டு சோதனையிட்டுக் கொண்டே நடந்தேன். இந்தக்கல், இல்லை இன்னொன்று, பிறிதொன்று.

கல்லால் அடிக்கவேண்டும் என்றால் போதுமான அளவு அருகே செல்லவேண்டும். அடித்தபிறகே அவர் அறியவேண்டும். ஒற்றை அடியுடன் தலை உடைந்து விழுந்துவிடவேண்டும். ஒரு மற்பிடி நடக்கக்கூடாது. ஒரே பாய்ச்சலில் அணுகும் அளவுக்கு அருகே சென்றாகவேண்டும்.

சுந்தரம் குடையை விரித்து பிடித்துக்கொண்டு நடந்து சென்றார். அவரை சீரான இடைவெளியுடன் அணுகினேன். அவர் என் பார்வையில் இருந்து மறைந்தார். மிகமிக கவனமாக காலடி எடுத்துவைத்து மேலே சென்றேன். பாறைகள் மீதே நடந்தேன். அவரை கண்டேன். அவர் ஒரு பாறை மேல் நின்றிருந்தார். அவர் காலடியில் வலப்பக்கம் ஆறு ஓடி சரிந்து சென்றது.

அவருக்கு அப்பால், நேர்முன்னால் மழையின் சரியும் நீர்த்திரை. அதில் அவர் மஞ்சள் வண்ணத்தில் வரையப்பட்டு கரைந்து கரைந்து நெளியும் ஓவியம் போலத் தெரிந்தார். மேலும் நெருங்கியபோது அது மலைவிளிம்பு என்று தெரிந்தது. அந்த ஆறு அங்கே அருவியாக கொட்டிக்கொண்டிருந்தது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த அதன் ஓலம் மழையின் ஓசையில் மறைந்துவிட்டிருந்தது.

நான் அங்கிருந்த பாறை ஒன்றுக்குப்பின் அமர்ந்தேன். அங்கே அசையாமல் இருந்துகொண்டு அவரை பார்த்தேன். அவர் கால்கள் மழைத்தாரையில் நனைந்திருந்தன. குடை கொப்பளித்துக் கொப்பளித்து அசைந்தது. மெல்ல எழுந்து இன்னொரு பாறைக்குப் பின் சென்று அமர்ந்துகொண்டேன். என் முகத்தின்மேலும் மார்பின் மேலும் மழை அறைந்துகொண்டே இருந்தது.

அங்கிருந்து அப்பால் மலைவிளிப்பை பார்க்கமுடிந்தது. செங்குத்தாக இறங்கி மிக ஆழத்திற்குச் சென்றது. அங்கே அருவி நூறடிக்குமேல் ஆழத்தில் விழுந்துகொண்டிருந்தது. குறைவாக நீர் ஓடும் இந்த ஆற்றின் அருவி இத்தனை ஓசையிடுவதற்கு ஆழம்தான் காரணம்

கல்லால் அடிக்கவேண்டியதில்லை. ஒரே உந்தில் தள்ளிவிட்டால் போதும். அவர் மிக விளிம்பில்தான் நின்றிருந்தார். அவரைப்போன்ற வியாபாரிகள் அப்படித்தான், அவர்கள் விளிம்புவரைச் செல்வார்கள். அதில்தான் கிளர்ச்சி அடைவார்கள். ஆனால் மிகக் கவனமாகவும் இருப்பார்கள்

ஒரு சிறு உந்தல் போதும். அருவி விழும் இடங்களில் கீழே பாறைகள்தான் இருக்கும். மண்டை உடைந்துவிடும்.மிகமிகச் சரியான விபத்து. இந்த மழையில் ,மலைவிளிம்பில் ,அருவி ஒழுகும் பாறைமேல் நின்றால் விபத்து நிகழ எல்லா வாய்ப்புகளும் உண்டு. உண்மையில் நிகழாமலிருந்தால் தான் ஆச்சரியம்

கால்வழுக்கி விழுந்திருக்கிறார். அவர் குடித்திருக்க வாய்ப்புண்டு. மாத்திரைகள் சாப்பிடும் வழக்கம் இருக்கலாம். அவை போஸ்ட்மார்ட்டத்தில் தெரியும். அவருக்குப் பல பிரச்சினைகள் கூட இருக்கலாம். ஆகவே போலீஸ் இதை தற்கொலையாக நினைக்கலாம். அதற்காகவே அவர் இந்த பொழுதில் தன்னந்தனியாக வந்திருக்கலாம் என்று கருதலாம்.

எல்லாமே முழுமையாக, பிழையற்றவையாக, எண்ணி எண்ணி இயற்றப்பட்டவையாக இருந்தன. நான் செய்யவேண்டியதெல்லாம் எழுந்து அவரை ஓர் உந்து உந்துவது மட்டுமே. நான் எனக்கும் அவருக்கும் நடுவில் உள்ள தூரத்தை கணக்கிட்டேன். பத்தடி. எழுந்து ஓரு மிதி மிதிக்க உகந்த தொலைவு.

செல்லும் வழியில் கற்கள் காலில் படக்கூடாது. தடுமாறிவிடக்கூடாது. முக்கியமாக நான் நிலைகுலைந்து கூடவே விழுந்துவிடக் கூடாது. ஓசைகேட்டு அல்லது அசைவைக் கண்டு அவர் அனிச்சையாகப் பதறி திரும்பி  என்னை பிடித்துவிடக்கூடாது. பாய்ந்து செல்வது ஆபத்து. மிக மெல்ல சென்று ஓங்கி ஓர் உதைவிடவேண்டும். அதுவே நல்லது

நான் எழுவதைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கையில்தான் தரையில் கிடந்த நீண்ட மூங்கில்கழியை பார்த்தேன். பன்னிரண்டு அடி நீளமிருக்கும். காட்டில் துரட்டியாக பயன்படுத்தும் கழி. ஆடுமேய்ப்பவர்கள் குழை ஒடிப்பது.என் நெஞ்சின் ஓசையை அடங்கவைக்க சற்றுநேரம் தேவைப்பட்டது.

இப்போது இன்னும் எளிது. மிகமிக எளிது. ஒன்றுமே செய்யவேண்டியதில்லை, அந்த கழியை எடுத்து இங்கிருந்தே உந்தி பள்ளத்தில் தள்ளிவிடலாம். அவர் பிடித்தால்கூட கழியுடன் கீழே சென்றுவிடுவார். ஒவ்வொன்றும் அப்படி ஒன்றுடனொன்று பொருந்தி முழுமையாக இருந்தது

நான் ஊசியால் குத்தப்பட்டதுபோல அந்த எண்ணத்தை அடைந்தேன். இப்படி ஒவ்வொன்றும் முழுமையாக ஒருங்கமைக்கப்பட்டு காத்திருப்பது சாத்தியமா? இது வெறும் தற்செயலா? இது அவருக்கான பொறியா இல்லை எனக்கானதா?

நான் நடுங்கிவிட்டேன். கைகளை கோத்து நெஞ்சுடன் இறுக்கிக் கொண்டேன். மிக மிகத்தந்திரமான சூழ்ச்சியா இது? தெய்வமோ விதியோ எனக்காக அமைத்திருப்பதான் என்ன? நான் இதைச் செய்கிறேனா என்று எவரோ பார்க்கிறார்கள்.

ஒருகணம்தான், ஒரே ஒரு கணம்தான். அதன்பின் நான் திரும்பமுடியாது. எதையும் சரிசெய்ய முடியாது. எல்லாமே இறுதியாக முடிவாகிவிடும்.

நான் குற்றவுணர்ச்சி அடையக்கூடும். அதில் எஞ்சிய வாழ்நாள் முழுக்க உழலக்கூடும்.ஒருவேளை இப்போது நான் கொண்டிருக்கும் கசப்பும் வஞ்சமும் எல்லாம் மேலோட்டமானது என்றும், ஆழத்தில் அவர்மேல் எனக்கு ஒரு சிறு கனிவு உண்டு என்றும் தெரியவரலாம். அவர் இளமையில் என்னை தூக்கியிருக்கிறார். என்னை சினிமாவுக்குக் கூட்டிச்சென்றிருக்கிறார். அக்கொலையை நான் செய்தபின் அவை அனைத்தும் நினைவில் வளர்ந்து வரலாம்.

அல்லது ஒரு சின்னஞ்சிறு பிழை இதில் எங்கோ ஒளிந்திருக்கக் கூடும். ஒருவேளை இந்த முழுமையென்னும் தோற்றமே அந்தப் பிழையை மறைப்பதற்காகத்தான்.இதை நான் செய்ததுமே அந்தப்பிழை எழுந்து வளர்ந்து நிற்கும். அதுதான் இவையனைத்திற்கும் மையம் என்று தெரியவரும்.

நான் என்னையறியாமலேயே ஏராளமான தடையங்களை விட்டுக்கொண்டே இருந்திருக்கலாம். நான் சிக்கிக்கொள்வேன்.என்னை போலீஸ் கைது செய்யும்.என் வீட்டிலிருந்து இழுத்துச்செல்வார்கள். என் அம்மாவின் கண்முன்னால் நான் போலீஸுடன் செல்வேன். என் அம்மா கைவிடப்படுவாள்.

நான் மெல்ல கைகளை ஊன்றி ஊர்ந்து அங்கிருந்து திரும்பினேன். பாறைமறைவுகளில் இருந்து பாறை மறைவுகளுக்குச் சென்றேன். ஆற்றுநீரில் இறங்கி ,மறுபக்கம் பாறைகளில் தாவி, சருகுகள் மீது நடந்து, குன்றின் உச்சிப்பாறையை அடைந்து, சுற்றிக்கொண்டு இறங்கி, என் பைக்கை எடுத்துக்கொண்டு, மண்பாதையினூடாக மழையில் சென்றேன்.

செல்லுமிடமெல்லாம் நான் விட்டுவந்திருந்த தடையங்களையும் சாட்சிகளையும் கண்டேன். ரப்பர்தோட்டத்தில் ஒரு வாட்ச்மேன் தலையில் பிளாஸ்டிக் தாளை மடித்துப் போட்டபடி கையில் கழியுடன் வந்தவர் என்னை முன்னரே பார்த்திருந்தார். என் பைக்கை பார்த்தபடி இருவர் ஒரு மரத்தடியில் குடைக்குக் கீழே குனிந்து அமர்ந்திருந்தனர்.அருகே வேட்டையாடப்பட்ட முயல்கள் சில இருந்தன. சாலையில் வெற்றிலைபாக்குக் கடைக்காரன் என் முகத்தை நினைவில் வைத்திருந்தான்.

நான் குலசேகரத்தை அணுகும்போது மிகவும் களைத்திருந்தேன். ஆனால் மிகமிக நிம்மதியாக உணந்தேன். நிம்மதி எப்போதுமே இனிமையை அளிக்கிறது. என் உள்ளத்தில் தென்றல் சிலுசிலுப்பதுபோலிருந்தது. என் முகம் மலர்ந்துவிட்டது.  ‘திங்களுறங்கிய போதும் தென்றலுறங்கியபோதும் கண்களுறங்கிடுமா காதல் கண்களுற்ங்கிடுமா?” என்று பாடிக்கொண்டிருந்தேன்.

மழை கடையாலுமூட்டிலேயே நின்றுவிட்டிருந்தது. என் ஆடைகள் உலர்ந்திருந்தன.வீட்டுக்குச் சென்று எல்லாவற்றையும் கழற்றிவிட்டு லுங்கிக்கு மாறியபோதுதான் நான் எத்தனை பெரிய பொறியில் இருந்து தப்பி வந்துவிட்டிருக்கிறேன் என்பதே புரிந்தது. இக்கணம் வரை என் வாழ்க்கை என் கையில் இருக்கிறது. நான் எத்திசைக்கும் திரும்பிவிட முடியும். அந்த முடிவு எடுத்திருந்தால் என் வாழ்க்கைமேல் எனக்கு எந்த பிடிமானமும் இல்லாமலாகிவிட்டிருக்கும்

அன்று கொஞ்சம் மது அருந்தினேன். கொஞ்சம் டிவி பார்த்தேன். தூங்கி விடியற்காலையில் விழித்துக்கொண்டபோது என் மனம் ஏமாற்றத்தால் எடைகொண்டிருந்தது. நெஞ்சில்மேல் பெரிய பாறாங்கல்லை வைத்ததுபோல தோன்றியது. நான் கருணையால் அதைத் தவிர்க்கவில்லை. நல்லியல்பால் அதிலிருந்து விலகவில்லை. வெறும் கோழைத்தனத்தால் அந்த வாய்ப்பை தவிர்த்தேன். எதிர்காலம் பற்றிய பயம், என் மனஉறுதி பற்றி எனக்கே இருந்த சந்தேகம்.

நான் தெய்வத்தையும் விதியையும் எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கிவிட்டேன். என் வேண்டுதகளைக் கேட்டு அவை எனக்கு அமைத்துத்தந்த வாய்ப்பு அது. ஒவ்வொன்றாக பார்த்துப்பார்த்து ஒருங்குகூட்டி தந்தன. நான் அதற்கு தகுதியற்றவன் என்று காட்டிவிட்டேன். நான் தகுதியற்றவன், ஆகவே என் பொருமல்களுக்கு பொருளே இல்லை என்று எனக்குக் காட்டுவதுதான் அத்தருணத்தை அமைத்த சக்திகளின் நோக்கமா?

மனம் உடைந்து  அழுதேன். நான் கோழை, அற்பன், என்மேலேயே நம்பிக்கை இல்லாதவன்,  எதற்குமே தகுதியற்றவன் என்று சொல்லி தலையில் அறைந்துகொண்டேன். சுந்தரம் வெல்பவர். அந்த விளிம்புவரை சென்று நிற்க அவரால் முடிந்தது. என்னால் முடியாது, என் கால்கள் பதறும். ஒருவேளை அவர் அங்கே நின்று என்னை எதிர்கொண்டிருப்பார். என்னால் முடியாது, என் அப்பாவால் முடியாது. நாங்கள் ஏமாற்றப்படுவதும் சுரண்டப்படுவதும் அழிக்கப்படுவதும் இயலபானதே.

என்னுள் என்னைப் பற்றி இருந்த நம்பிக்கை உடைந்தது. அது எலும்புச்சட்டகம் நொறுங்குவதுபோல. மொத்தமாகவே தளர்ந்து தசைப்பிண்டமாக ஆனேன். என்னால் எந்த வியாபாரத்தையும் தொழிலையும் செய்ய முடியவில்லை. எதிலும் நம்பிக்கை வரவில்லை. ஏனென்றால் வெற்றிபெறமுடியும் என்னும் உறுதியே என்னில் எழவில்லை. எதிலும் பயம். பயந்து செய்தவை தோல்வி அடைந்தன. தோல்வி மீண்டும் என்னை மேலும் பயம்கொண்டவனாக ஆகியது.

என் அம்மா எனக்கு பெண்பார்த்துக் கட்டிவைத்தாள். என் மனைவி கொண்டுவந்த சீதனப்பணத்தால் மீண்டும் தொடங்கலாம் என்று நினைத்தேன். என்னால் முடியாது முடியாது என்ற கசப்பின் உச்சியில் இருந்து ஏன் முடியாது என்று வீம்பை சென்றடைந்தேன். எதையும் எண்ணாமல் பணத்தை புதிய வியாபாரங்களில் இறக்கி அழித்தேன்.

இழந்தவற்றை எண்ணி எண்ணி ஏங்கினேன். அதை தன்னிரக்கமாக ஆக்கிக்கொண்டேன். விரக்தியாகவும் கசப்பாகவும் மாற்றிக்கொண்டேன். மெல்ல மெல்ல பேச்சிலும் எண்ணங்களிலும் விஷம் நிறைந்த நக்கல்பேர்வழியாக மாறினேன். அனைவரையும் புண்படுத்தினேன், எதிலும் தீமையையே சுட்டிக்காட்டினேன், எப்போதும் கீழ்த்தரமான ஏளனத்துடன் இருந்தேன். ஆகவே பிறரால் வெறுக்கப்பட்டேன், தனிமையானவனாக ஆனேன். தனிமை என்னை மேலும் மேலும் குடிக்கவைத்தது. குடிக்கு அடிமையாகி , உறவுச்சூழலில் மதிப்பிழந்து அலைந்தேன்.

என் சொத்துக்களை முற்றாக இழந்தேன். வருமானமே இல்லாதவனாக ஆனேன். வாடகைவீடுகளிலும் பின்பு ஒட்டுக்குடில்களிலும் தங்கினேன்.  என் மனைவி வேலைசெய்து என் பிள்ளைகளுக்குச் சோறுபோட்டாள். ஒரு கட்டத்தில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு என்னை கைவிட்டுவிட்டு தன் ஊருக்கே சென்றாள். தொடர்பை முற்றாக அறுத்துக்கொண்டாள்.

சக்கரவர்த்தினியாக வாழ்ந்த என் அம்மா ஒருவேளைச் சோற்றுக்காக மகள்களுடன் போய் தங்கினாள். அங்கே துயர்கொண்டு நோயுற்று அனாதையாகச் செத்தாள். அவளுக்கு தீபோடக்கூட நான் செல்லவில்லை. நான் எங்கோ குடித்து நினைவில்லாமல் கிடந்தேன், அவர்களால் என்னை கண்டுபிடிக்க முடியவில்லை.

நெஞ்சுவெந்து நான் தெருவில் கிடந்தேன். என் மனைவி என்னை தூக்கிக்கொண்டு சென்று மருத்துவம் செய்தாள். என் மனைவியை மேலும் துன்புறுத்தி, சொந்தக்காரர்கள் அனைவரிடமும் பிச்சை எடுக்கவைத்து, என் சாவுக்காக அவளை தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவைத்தபின் உயிர்துறந்தேன்.

சாவதற்கு முன் உணர்ந்தேன், எனக்கு அளிக்கப்பட்ட அந்த வாய்ப்பை நான் தவிர்த்தபோது தெய்வத்தின் கையை தட்டிவிட்டிருக்கிறேன். எதிர்காலம் பற்றிய நம்பிக்கை கொண்டவனையே தெய்வம் ஏற்கிறது. எதிர்காலத்தை சந்தேகப்படுபவன் தெய்வத்தைத்தான் சந்தேகப்படுகிறான்.

எதிர்காலத்தை தானே  முழுமையாகத் திட்டமிட்டு அமைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கையில் மனிதன் தெய்வத்தை அவமதிக்கிறான். திறக்கும் நல்வாய்ப்புகளின் வழியாக தன்னை நம்பி, தெய்வத்தை நம்பி ,துணிந்து முன்செல்பவன் தான் விரும்பியதை அடைகிறான். விரும்பிய ஒன்றை பயத்தால் கைவிடுபவன் எதையுமே அடைய தகுதியற்றவனாக தன்னை ஆக்கிக்கொள்கிறான்.

நான் அப்போதும் மலைவிளிம்பில், பதுங்கியிருந்த அந்தப்பாறையின் பின்னாலிருந்து எழுந்துவிட்டிருக்கவில்லை. கையெடும் தொலைவில் மூங்கில் கழி கிடந்தது. நின்றுபெய்யும் மழைக்கு அப்பால் மலைவிளிம்பில் அருவிக்குமேல் சுந்தரம் என் முதுகைக்காட்டி நின்றுகொண்டிருந்தார். ஒரு கணத்தில் நான் எடுக்கவிருக்கும் முடிவுக்காக என் வானமும் பூமியும் காலமும் காத்திருந்தன. அந்தக்கணம் இருபக்கமும் நீண்டு நீண்டு முழுவாழ்க்கையாக விரிந்துகொண்டிருந்தது.

***

முந்தைய கட்டுரைராஜன் குறை என்பவர் யார்?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5