உலகம் யாவையும் [சிறுகதை] 1

வெள்ளைத்தோல் கொண்ட எவரிடமும் முதலில் கேட்கும் கேள்வியை நான் அவரிடம் கேட்டேன் ‘நீங்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்?’. ஆனால் அவரிடம் கேட்கக்கூடாத முதல் கேள்வியே அதுதான். அல்லது இப்போது தோன்றுகிறது, அவரை உண்மையில் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் கேட்டுப்பார்க்கவேண்டிய கேள்வியும் அதுதான் என.

அவருக்கு எழுபத்தைந்து வயதிருக்கும். வாய் நன்றாக மடிந்து உள்ளேசென்று உதடுகளே இல்லாமலிருந்ததும், நேரான ஜெர்மனியமூக்கு வாயை நோக்கி சற்றே வளைந்திருந்ததும், வாய்க்கு இருபக்கமும் இருந்த மடிப்புகளும் மட்டுமே அவரது வயதைச் சொல்லின. ஏழடி வரை உயரமிருப்பார். அந்த உயரம் இருப்பவர்களுக்கு தங்களைவிட குள்ளமானவர்களிடம் பேசிப்பேசி ஒரு சிறு கூனல் வந்திருக்கும். வெயிலில் வெந்த முன் வழுக்கை , வளைந்த நெற்றி, சற்று தொங்கிய கன்னம் எல்லாம் செம்மண் நிலத்தை உழுதுபோடப்பட்டதுபோல மடிப்புகள். பழுத்த உலோகக் கண்கள். விளையாட்டுவீரனுக்குரிய பச்சை நரம்பு தடித்த இறுகிய கைகள். விரிந்த தோள்கள். திடமாக ஒடுங்கிய வயிறு. இரும்பு ஸ்பிரிங்கால் இறுக்கிய மூட்டுஇணைப்புகள் கொண்ட நடை. காக்கி கால்சட்டையும் சட்டையும் அணிந்திருந்தார்.

அவர் சற்று கனத்த மூக்குக்கண்ணாடிச்சில்லு வழியாக நட்புடன் என்னை நோக்கி பதிலுக்கு ‘’நீ எந்த நாட்டவன்?’ என்றார். நான் கொஞ்சம் குழம்பி ‘இந்தியன்’ என்றேன். ‘ஓ…’என்றார். ‘நீ இந்தியன் என யார் சொன்னது?’ நான் கொஞ்சம் யோசித்து கவனமாக ‘சட்டப்படி நான் இந்தியன்’ என்றேன். ‘அதாவது, இந்தியா என்று சொல்லப்படுகிற ஒரு நிலப்பரப்பில் அமைந்திருக்கும் ஒர் அரசு உனக்கு ஒரு அடையாளத்தை அளிக்கிறது. இந்தியாவின் குடிமகன் என்று அது உன்னைச் சொல்கிறது, இல்லையா?’

நான் வில்லங்கமான ஒருவரிடம் மாட்டிக்கொண்டதை உணர்ந்தேன். ஆனால் ஊட்டியின் கிராமப்பகுதிகளில் அது சாதாரணம். ஊட்டி நகருக்குள் அல்லது கேளிக்கையிடங்களுக்குச் செல்லும் வழியில் காணப்படும் வெள்ளைக்காரர்கள் வேறுவகை. தோளில் பெரிய சுமைப்பைகளுடன் பெரிய பூட்ஸ் அணிந்து மலை ஏறச்செல்பவர்கள், காமிராக்களுடனும் பைனாக்குலர்களுடனும் காட்டுக்குள் செல்பவர்கள், ஜோடிகளாக நாலடிக்கு ஒருமுறை முத்தமிட்டுக்கொள்பவர்கள். .. ஆனால் பொதுவாக கொடைக்கானலில் காணப்படுமளவுக்கு போதையடிமைகள் இங்கே இருப்பதில்லை. கொடைக்கானலில் ஒருவகை காளானுக்காக பரட்டைத்தலைவெள்ளை இளைஞர்கள் வந்து குவிகிறார்கள். ஊட்டியில் தென்படுபவர்கள் அனேகமாக அனைவருமே ஆரோக்கியமானவர்கள்.

ஊட்டிக்கு வெளியே சிதறிக்கிடக்கும் கிராமங்களில் பல்வேறு குருகுலங்களும் ஆசிரமங்களும் உள்ளன. கிறித்தவ மடாலயங்களும் தியானமையங்களும் ஏராளம். அங்கெல்லாம் செல்பவர்களே கிராமச்சாலைகளில் தென்படுவார்கள். அந்த வெள்ளையர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தன்மை உண்டு. பிற வெள்ளையர்களை விட உள்ளூர்க்காரர்களுடன் பழகவும் பேசவும் சின்னஞ்சிறு டீக்கடைகளில் டீ குடிக்கவும் ஆர்வம் காட்டுவார்கள். மற்றவர்களைப்போல எங்கும் எதையும் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் வெறி இருப்பதில்லை. சடைமுடி வளர்த்தவர்கள், காவி அணிந்தவர்கள், மொட்டைபோட்டு ருத்திராட்சம் அணிந்தவர்கள் என பல்வேறு வகை தோற்றங்கள். ஆனால் முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு அல்லது விடுபட்ட தன்மை இருந்து அவர்கள் வேறு என்று அடையாளம் காட்டும். இவர் வைக்கோல்நிறமான கூந்தலை பின்பக்கம் குதிரைவால் கொண்டையாக கட்டியிருந்தார்.

கோழிக்கோட்டில் இருந்து ஊட்டி நிலையத்தில் இறங்கி ஃபேர்ன்ஹில் செல்வதற்காக நின்றபோது அவரைப்பார்த்தேன். அன்று பேருந்துகள் ஓடாது என்றார்கள். ஆட்டோக்களும் வேன்களும்கூட கிடையாது. ஊட்டி பந்த். தேயிலை விலைசம்பந்தமான ஏதோ பிரச்சினை. நடந்துதான் ஆகவேண்டும். நடக்க ஆரம்பித்தபோது கொஞ்சநேரம் முன்பு இன்னொரு கேரள பஸ்ஸில் இருந்து இறங்கி என்னைத்தாண்டிச்சென்ற அவர் எனக்கு முன்னால் சிறுத்தை போல நடப்பதை உணர்ந்தேன். நான் அவரை பின் தொடர்ந்துசென்று வணக்கம் சொன்னேன்.

சரி, மேலே பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணம் வந்தது. ‘எனக்கு இந்த நாடு அடையாளத்தை மட்டும் தரவில்லை. எனக்கு இது பாதுகாப்பை அளிக்கிறது…’ என்றேன். ‘எவரிடமிருந்து?’ என்றார். ’பிற நாட்டினரிடமிருந்து’ ‘பிறநாட்டினர் என்றால்? அங்குள்ள அரசாங்கத்தால் உன்னைப்போல அடையாளம் கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களிடமிருந்தா? அவர்கள் உன் எதிரிகளா? உன்னை அழிக்க நினைக்கிறார்களா?’ என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ‘உன் நாட்டு அரசின் மீது படைஎடுப்பது பிற நாட்டு அரசு. அது அரசுகள் நடுவே உள்ள போராட்டம். உன்னை வைத்து அந்த போரை நிகழ்த்துபவர்களை நீ உனக்கு பாதுகாப்பு தருபவர்கள் என்று நினைக்கிறாய்…’

சட்டென்று எனக்கு அது புரிந்தது. பெரும்பாலான ரவுடிகள் ஒரு ஏரியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே பக்கத்து பேட்டை ரவுடியிடமிருந்து பாதுகாப்பதாகச் சொல்லித்தான். ஆனால் நான் அதை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் ‘நாடு என்று இருந்தால்தான் மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்’ என்றேன். ‘எந்த மக்கள்? பாகிஸ்தானியர்களும் இந்தியர்களுமா?’ நான் கோபமாக ’ இல்லை, இந்தியர்கள்’ என்றேன். ‘அப்படியானால் ஏன் ஊட்டி இந்தியாவுடன் இருக்க வேண்டும்? இந்த மலைப்பகுதியை தனி நாடாகச் சொல்லிவிடலாமே இந்த மலையில் உள்ள அனைவரும் ஒருவரோடொருவர் ஒற்றுமையாக இருப்பார்களே? ஏன் மசினகுடியைக்கூட தனி நாடாக ஆக்கலாமே’

நான் அவர் செல்லும் திசையை புரிந்துகொண்டு அமைதி காத்தேன். ‘ஊட்டி தமிழ்நாட்டுடன் இணைந்து ஒற்றுமையாக இருக்க முடியும் என்றால், தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்க முடியும் என்றால், ஏன் உலகம் ஒன்றாக இருக்க முடியாது?’ என்றார். அந்த கேள்வியிலிருந்த ஏதோ ஒன்றால் நான் நான் புன்னகை செய்தேன். ஊட்டியின் அந்த மலைச்சாலையில் ரிஷிகளைப்போல சிந்திக்கத்தோன்றும்போலும்.

‘நீ சிரிக்கிறாய். இதை கிறுக்குத்தனம் என்கிறாய். நான் உலகின் இருநூற்று ஐம்பது நாடுகளில் பல்லாயிரம் பேர் இந்தச் சிரிப்பை சிரிப்பதை கவனித்திருக்கிறேன்… நூறுவருடங்களுக்கு முன் கறுப்பனும் வெள்ளையனும் சமம் என்று சொன்னபோது இப்படித்தான் சிரித்திருப்பார்கள். இருநூறுவருடம் முன்பு மனிதனை அடிமையாக விற்பதும் வாங்குவதும் பாவம் என்ற போது இப்படித்தான் சிரித்திருப்பார்கள். பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று சொன்னபோது வாய்விட்டு சிரித்திருப்பார்கள்’ அவர் வேகமாகவும் உரத்தும் பேசினாலும் கொஞ்சம் கூட கோபம் இல்லாமல்தான் பேசினார்

‘எத்தனையோ முற்போக்குக் கருத்துக்களைப் பேசுகிறோம். ஏன் இந்த எண்ணத்தைப்பற்றி நாம் யோசிப்பதில்லை? யோசிப்போமே. விவாதிப்போமே. சிறிய அளவிலேனும் நடைமுறைப்படுத்திப் பார்ப்போமே. எல்லா நல்ல சிந்தனைகளும் ஆரம்பத்தில் கிறுக்குத்தனமாகத்தான் தோன்றும். சில கிறுக்கர்களால்தான் முன்னெடுத்துச் செல்லப்படும். சிவில் உரிமைகளைப்பற்றிப் பேசிய தோரோ கிறுக்கனாகத்தான் கருதப்பட்டான். அவன் செய்த சிறிய செயலுக்கு நேரடியான அர்த்தம் என ஒன்றும் இல்லை. ஒரு மனிதன் வரிகொடுக்க மறுத்து ஒரு குளக்கரை காட்டில் மரக்குடிலில் வாழ்ந்தால் என்ன நிகழ்ந்துவிடும்? ஆனால் அது ஒரு குறியீட்டு நிகழ்ச்சி…இதைப்பார்’

அவர் தன் பையில் இருந்து நீலநிறமான ஒரு கனத்த டைரியை எடுத்து நீட்டினார். அது ஒரு பாஸ்போர்ட் என கையில் வாங்கியபிறகே எனக்குத்தெரிந்தது. அமெரிக்க பாஸ்போர்ட்டின் அதே நிறம் வடிவம். அமெரிக்க பாஸ்போர்ட் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதில் சிவந்த அட்டை மீது ஓர் உலக உருண்டையின் படமிருந்தது. கீழே ’One world ,One nation’ என்ற குறிக்கோள் வாசகம். அதன் கீழே பெரிய நீல எழுத்துக்களில் ’World Passport for World citizens’

உலகின் எந்த நாட்டையும் சேராமல் உலகை ஒட்டுமொத்தமாக தன் நாடு என நினைக்கும் உலகக் குடிமகன்களுக்கான பாஸ்போர்ட் அது என்ற விளக்கக் குறிப்பு இரண்டாம் பக்கத்தில் இருந்தது. பலமொழிகளில் அந்த வாசகங்கள் காணப்பட்டன. அந்த பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் மேய்ன் பகுதியில் எல்ஸ்வர்த் நகரில் உள்ள உலகக் குடிமகன்களின் பதிவகம் (International Registry of World Citizens) வழங்கியிருந்தது. அந்த பாஸ்போர்ட் பெறுவதற்கான நிபந்தனை ஒன்றுதான், வேறெந்த நாட்டின் பாஸ்போர்ட்டும் வைத்துக்கொண்டிருக்கக் கூடாது. எந்த நாட்டிலும் ராணுவசேவையில் இருக்கக் கூடாது. உலகத்தை தன் நாடாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு உறுதிமொழி எடுக்கவேண்டும்

அந்த பாஸ்போர்ட்டில் அவரது படம் இருந்தது. நாற்பது வருடம் முன்புள்ள கறுப்பு வெள்ளை படம். நீளமுகத்துடன் சற்றே மேலேறிய நெற்றியுடன் உற்சாகமான சிரிப்புடன் இருந்தார். லாரல் ஹார்டி இரட்டையரில் லாரலுக்கு கொஞ்சம் சதை போட்டது மாதிரி. அவர் பெயர், காரி டேவிஸ். உலகக்குடிமகன். 1921ல் அமெரிக்காவில் பிறந்தவர். 1948 முதல் உலகக் குடிமகனாக தன்னை அறிவித்துக்கொண்டிருந்தார்.

நான் அதை அவரது சொந்தக் கிறுக்குத்தனம் என்றுதான் நினைத்தேன். அதற்குள் அவர் ’இந்த பாஸ்போர்ட் இப்போது அறுபதுநாடுகளுக்கு செல்லுபடியாகக்கூடிய ஒன்று. இந்த பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு ஏழாவது தடவையாக நான் இந்தியா வருகிறேன்’ என்றார். நான் பாஸ்போர்ட்டை பிரித்து பார்க்கப்பார்க்க ஆச்சரியத்தில் என் கைகள் நடுங்கின. அந்த பாஸ்போர்ட் மேலும் மேலும் பக்கங்கள் இணைக்கப்பட்டு கிட்டத்தட்ட இருநூறு பக்கம் இருந்தது. அதன் பக்கங்களில் ஏராளமான முத்திரைகள். சிவப்பு,பச்சை எழுத்துகளாலான குறிப்புகள். அடித்தல்கள் திருத்தல்கள். பலமொழிகளில் பல கைவண்ணங்களில்…உலக வரைபடத்தில் விழுந்துபுரண்டு உடலெங்கும் வண்ணங்களுடன் வந்த ஒரு அணில் போல.

சட்டென்று அதில் ஜவகர்லால் நேருவின் கையெழுத்தை கண்டேன். பச்சை வண்ண மையில் ‘இந்திய குடியரசு இந்த பாஸ்போர்ட்டை அதிகாரபூர்வ ஆவணமாக அங்கீகரிக்க நான் பரிந்துரை செய்கிறேன், ஜவகர்லால் நேரு இந்திய பிரதமர்’ என 1954 ஜூலை 18 ஆம் தேதியில் கையெழுத்திட்டிருந்தார். அவரது அதிகாரபூர்வ இலச்சினை. அதன் கீழே ‘ஒரு உன்னதமான இலட்சியம். இந்திய அரசு இதை அங்கீகரித்துள்ளது’ என்று இந்திராகாந்தியின் கையெழுத்து. அவர் அதை வாங்கி ஒரு பக்கத்தைப் பிரித்து ‘இதைப்பார்’ என்றார். ‘உலகக்குடிமகனாகிய நான் உலகக்குடிமகனாகிய காரி டேவிஸ் பிரான்ஸில் நுழைய இதனால் அனுமதி அளிக்கிறேன்’ என்று அல்பேர் காம்யூ கையெழுத்திட்டிருந்தார்

இதென்ன கோமாளித்தனம் என்றுதான் மீண்டும் தோன்றியது. ஆனால் எகிப்தின் நாசரும் யூகோஸ்லாவியாவின் மார்ஷல் டிட்டோவும் கையெழுத்திட்டிருந்தார்கள். ஏராளமான உலகத்தலைவர்கள் அவர்கள் நாடுகளின் அதிகாரபூர்வ அனுமதிக்கு பரிந்துரை செய்திருந்தார்கள். அமெரிக்க அரசுதான் அதை முதலில் அங்கீகரித்திருந்தது. நான் அதை திரும்ப கொடுத்தேன். ‘நீ விரும்பினால் இந்த அமைப்பில் சேரலாம். நான் உனக்கு பாஸ்போர்ட் தருகிறேன்’ என்றார்

‘நீங்கள் எங்கே போகிறீர்கள்?’ என்றேன். ‘இங்கே நாராயணகுருகுலம் என்ற இடம் உள்ளது. அங்கேதான் தங்கியிருக்கிறேன்’ ‘அட!’ என்றேன். ‘நானும் அங்கேதான் போகிறேன். நான் நித்ய சைதன்ய யதியின் மாணவன்’

அவர் என் கைகளை தன் வலிமையான கைகளால் பற்றிக்கொண்டார். ‘ஆச்சரியம்…நான் நித்யாவின் நெருக்கமான நண்பன். உண்மையில் நான் அவருடைய குருவின் நண்பன்..உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி..’. நான் ‘உங்களுக்கு நடராஜகுருவை தெரியுமா?’ என்றேன். அவர் ‘நானும் அவரும் இருபதைந்தாண்டுக்காலம் ஒன்றாக வேலைசெய்தோம். நான் அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டவன்’ என்றார்

நான் ஆச்சரியத்துடன் அவரை பார்த்தேன். ‘…எனக்கு ஹென்றிபெர்க்ஸனின் தொடர்பு இருந்தது. அவரைப்பார்க்க 1945 ல் நான் சார்போன் பல்கலைக்கு போனேன். அப்போது அங்கே நடராஜ குரு ஒரு கருத்தரங்குக்காக வந்திருந்தார். அவரையும் ஜான் ஸ்பியர்ஸையும் அப்போதுதான் சந்தித்தேன். அதன்பின்னர் ஒரே உலகம் என்ற கருத்துக்காக நாங்கள் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்தோம்’

அவரிடம் பேசிக்கொண்டே குருகுலம் நோக்கிச் சென்றேன். எட்டரை மணிக்குத்தான் ஊட்டியில் காலை கொஞ்சம் தயங்கித்தயங்கி விடிய ஆரம்பித்திருந்தது. உருளைக்கிழங்கு வயலைநோக்கி ஒரு கிளிக்கூட்டம் சாலையை மறித்துக்கொண்டு பறந்து இறங்கியது. பக்கவாட்டின் பசும்புல்வெளி ஈரத்துடன் மின்ன அதில் மேய்ந்துகொண்டிருந்த கனத்த பசுக்களின் உடல்கள் வானில் இருந்து ஒளிக்கோடு ஒன்றால் பிரிக்கப்பட்டிருந்தன. ஒளியில் துழாவியபடி வால்கள் சுழல சிறு பூச்சிகள் தீப்பொறிகள் போல சுற்றிப்பறந்தன.

நான் நித்ய சைதன்ய யதியை அறிமுகம் செய்துகொண்டு குருகுலத்திற்குச் செல்ல ஆரம்பித்து அப்போது ஒரு வருடம்கூட ஆகவில்லை. குருகுலம் பற்றியும் அதன் பல்வேறு உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் பற்றியும் எனக்கு அதிகமாக ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அங்கே ஒவ்வொருமுறையும் எனக்கு ஆச்சரியங்கள் இருந்தன. உலகின் மிகமுக்கியமான கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், பயணிகள் நித்யாவின் நண்பர்களாகவும் மாணவர்களாகவும் அங்கே வந்துகொண்டிருந்தார்கள்.

வழியில் நான்கு குதிரைகள் எதிரே வந்தன. ஒன்று வெண்ணிறம். பிற மாந்தளிர் நிறமானவை. காலைமஞ்சளில் அவை பொன்னாலும் வெள்ளியாலும் ஆனவை போல ஒளிவிட்டன. சருமத்தை சிலிர்த்துக்கொண்டு வால் சுழல இறுகிய தசைகளின் மிடுக்குடன் குளம்புகள் ஒலிக்க நடந்து வந்தன. ஒன்று எங்களை பிடரி மயிர் நலுங்க திரும்பிப்பார்த்தது. நான் நினைத்ததையே அவரும் சொன்னார்.’வெள்ளியும் பொன்னும்..’ நின்று அவற்றை பார்த்துக்கொண்டு முகம் மலர ‘எவருக்கும் சொந்தமில்லாத செல்வங்கள். கட்டற்ற செல்வங்கள்…’ அவர் மனம் முழுக்க அந்த அடிப்படைச்சிந்தனை எப்போதும் ஓடிக்கொண்டே இருந்தது என்று புரிந்துகொண்டேன்.

மஞ்சணகொரே கிராமத்தை அடைந்து நாராயணகுருகுலத்தை நோக்கி திரும்பினோம். திரும்பும் வழியில் ஒரு புதிய வீடு கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. காரி டேவிஸ் என்னிடம் ‘ஐம்பத்திநான்கில் நான் இங்கே முதல்முறையாக வந்தபோது இந்தப்பகுதியெங்கும் ஒரு வீடு கூட இல்லை. பள்ளங்களில் கொஞ்சம் உருளைக்கிழங்கு வயல்கள். மேடுகள் முழுக்க புதர்க்காடுகளும் யூகலிப்டஸ் மரங்களும்தான். குருகுலம் காட்டுக்குள் ஒரு தகர டப்பாவை யாரோ விட்டுவிட்டுச் சென்றது போல் இருக்கும்…’

நடராஜ குரு அந்த அத்துவானக்காட்டில் அன்பளிப்பாக கொடுத்த நிலத்தில் அவரே கையால் கட்டிக்கொண்ட தகரக்குடிசையில் தனியாக தங்கியிருந்த நாட்கள் அவை. அன்று அவரை சிலரே அறிந்திருந்தார்கள். அவர் ஏற்கனவே செயல்பட்ட நாராயணகுருவின் அமைப்புகள் அனைத்துடனும் தன் தொடர்புகளை வெட்டிக்கொண்டு உலகறியாமல் ஒளிந்து வாழ்ந்துகொண்டிருந்தார். நடராஜகுரு ஆவதற்கான கூட்டுப்பருவத்தில் இருந்தார். ஐம்பதுகளின் தொடக்கத்தில் ஜான் ஸ்பியர்ஸ் வந்துவிட்டார். நித்ய சைதன்ய யதி சென்னை பல்கலை பேராசிரியர் வேலையை துறந்து வந்து சேர்ந்தார்.

‘நீங்கள் வரும்போது நித்யா இருந்தாரா?’ என்றேன்.’ஆம், ஆனால் நான் முதலில் வந்தபோது அவரைப்பார்க்கவில்லை. அவர் வற்கலையில் இருந்தார். ஜான் ஸ்பியர்ஸ் பெங்களூரில் இருந்தார். அங்கிருந்து வேல்யூஸ் மாத இதழை வெளியிட்டுக்கொண்டிருந்தார். இங்கே நடராஜகுருவும் சிதம்பர தீர்த்தரும் மட்டும்தான் இருந்தார்கள். சிதம்பர தீர்த்தர் அப்போது துறவி ஆகவில்லை. பர்மாவில் இருந்து அப்போதுதான் வந்து இங்கே ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்’

குருகுலத்திற்குள் நுழைந்த காரி டேவிஸ் ‘நான் மேலே அந்த சிறிய குடிலில் தங்கியிருக்கிறேன். நீ தயங்காமல் என்னைச் சந்திக்க வரலாம்’ என்று சொல்லிவிட்டு தண்ணீர் தொட்டி வழியாக ஏறிச் சென்றார். நான் நேராக நித்யாவின் அறைக்குச் சென்று வணங்கிவிட்டு பேசிக்கொண்டிருந்தேன். ‘குரு, காரி டேவிஸை பார்த்தேன்’ என்றேன். ‘நாங்கள் சேர்ந்து வந்தோம்’ நித்யா சிரித்துக்கொண்டு ‘வந்துவிட்டாரா? பேசிக்கொண்டே வந்தீர்களா?’ என்றார். நான் ‘ஆமாம். அவரைப்பற்றி நான் இதுவரை கேள்விப்படவில்லை’என்றேன்

நித்யா ‘அதற்குரிய ஆர்வம் உனக்கு இல்லை என்று பொருள்’ என்றார். ‘நடராஜகுருவின் சுயசரிதையான ‘The Autobiography of an Absolutist’ வாசித்திருக்கிறாயா?’ நான் வாசிக்க ஆரம்பித்து இரு அத்தியாயங்களுடன் நின்றிருந்தேன். ‘அதில் காரி டேவிஸ் பற்றி விரிவாகவே வருகிறது. நடராஜ குருவின் ஓருலகம் பற்றிய கருத்து அவரும் காரியும் சேர்ந்து உருவாக்கிக்கொண்டது. இருவரும்சேர்ந்துதான் ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிட்டிக்கான முன்வரைவை உருவாக்கினார்கள்’ ’நான் அவரை இதுவரை கேள்விப்படவில்லை என்று நினைக்க வருத்தமாக இருக்கிறது…’ ‘சரி, இப்போது கேள்விப்பட்டாயிற்றே…அப்புறம் என்ன? அவரைச் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது’

நித்யா விருந்தினர்களைப் பார்க்க ஆரம்பித்தபோது நான் சமையலறைக்குச் சென்றேன். டாக்டர் தம்பான் சாமி சமையலில் ஈடுபட்டிருக்க அருகே கருணாகரன் முள்ளங்கி நறுக்கிக் கொண்டிருந்தாண்டிருந்தார். நான் சென்றதும், ’வாங்கோ வாங்கோ வாங்கோ’ என்று மலையாளத்தமிழில் தம்பான் சாமி வரவேற்றார். ‘எலக்கியமெல்லாம் எப்புடி இருக்கு?’ என்றார். ‘அதுபாட்டுக்கு இருக்கு’ என்றபடி அலுமினியக்குண்டானில் இருந்து எனக்கு ஒரு சூடான கறுப்புடீ மொண்டுகொண்டேன். கருணாகரன் அருகே பெஞ்சில் அமர்ந்தேன்.

‘காரி டேவிஸை பாத்தாச்சா?’ என்றார் டாக்டர். ‘எப்டி தெரியும்?’ ‘நமக்கு எல்லாம் தெரியும் சாமி. முக்காலமும் உணர்ந்த ஞானியாணு’ என்றார். நான் கொல்லைப்பக்க சன்னலைபார்த்தேன். அதன் வழியாக நாங்கள் வந்த பாதை தெரிந்தது. ‘பெரிய மனிதர்’ என்று மலையாளத்தில் சொன்னேன். ‘எழுத்தாளர் சாரே, ஹென்றிச் இப்சனின் எனிமி ஆஃப் த பீப்பிள் வாசித்ததுண்டா?’ என்றார் தம்பான் சாமி மலையாளத்தில்.

நான் ‘ஆமாம் என்றேன். ‘உலகம் முழுக்க சிந்தனையாளர்களுக்கு அது ஒரு ஆளுமை முன்வரைவை அளித்தது… ஐரோப்பாவில் பதினேழாம் நூற்றாண்டு முதல் தனிமனித சிந்தனைக்கு அதிகமான முக்கியத்துவம் வந்தது. தனித்து நின்று சிந்திப்பவனை அன்றைய மதமும் அரசாங்கமும் ஒட்டுமொத்த சமூகமும் அன்னியனாக வெளியேற்றின. அவனை ஒழுக்கமில்லாதவன் என்றும் கலகக்காரன், அராஜகவாதி என்றும் முத்திரை குத்தின. இந்த முத்திரைகள் பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் மிகமிக அபாயகரமானவை’

டாக்டர் தொடர்ந்தார் ‘அன்று ஆயிரக்க்கணக்கான சிந்தனையாளர்களும் அறிவியல்வாதிகளும் இப்படி பொதுச்சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டார்கள். ஆனால் அவர்கள்தான் ஐரோப்பிய நாகரீகத்தையே உருவாக்கினார்கள். அந்த அத்தனை மனிதர்களின் பிரதிநிதியாகத்தான் இப்சன் டாக்டர் தாமஸ் ஸ்டாக்மான் என்ற மனிதரை உருவாக்கினார். அந்த காலத்தில் ஐரோப்பா முழுக்க எத்தனையோ ஸ்டாக்மான்கள் இருந்தார்கள். அந்த நாடகம் அவர்களைப்பற்றிய வெகுஜனக்கருத்தை மாற்றியமைத்ததில் பெரும்பங்கு வகித்தது. தன்னை சமூகத்தில் இருந்து வெளியேற்றிக்கொண்டவனே சமூகத்திற்கு புதிய வழியைக் காட்டமுடியும் என்று அந்நாடகம் காட்டியது. அந்த அன்னியர்கள் எந்த ஒரு சமூகத்திற்கும் பெரும் சொத்துக்கள்…’

சர்ர் என்று வாணலியில் தழைகளை போட்டு கிண்டி அதை கூர்ந்து பார்த்து கொஞ்சம் மிளகாய்ப்பொடி தூவிய பின் என்னிடம் ‘இன்றைய ஐரோப்பா உலகுக்கே அறிவையும் தொழில்நுட்பத்தையும் கொடுக்கும் ஞானபூமியாக இருக்கிறதென்றால் அது அன்னியர்களைக் கொண்டாடக் கற்றுக்கொண்டதுதான் காரணம்.கிறுக்கர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த மானுட நாகரீகம். எழுத்தாளர் சார், நீங்கள் கார்ல் சகனின் புரோக்காஸ் பிரெய்ன் என்ற புத்தகத்தை வாசித்தீர்களா?’

‘இல்லை’ என்றேன். ‘சரியான பதில்’என்றார் வெளியே இருந்து வந்து அவ்வழியாகச் சென்ற தியாகீஸ்வரன் சாமி ‘ஒரு புத்தகத்தை தோற்கடிக்க மிகச்சிறந்த வழி இந்த ஒரு சொல்தான். அது பக்கம் பக்கமாக என்ன சொன்னால் என்ன? இந்த ஒரு சொல்லைக்கேட்டதும் திகைத்து வாய் பிளந்து நின்றுவிடும்’ நான் சிரித்தேன்.

டாக்டர் சாமி அவரைப்பார்த்து புன்னகை செய்து ‘அந்த புத்தகத்தில் ’நைட் வாக்கர்ஸ் ஆண்ட் மிஸ்ட்ரி மாங்கர்ஸ்’ என்று அத்தியாயம் இருக்கிறது. அறிவியலின் விளிம்புகளைப்பற்றிய அற்புதமான கட்டுரை அது. நாம் என்ன நினைக்கிறோம் என்றால் அறிவியல் மிகவும் தர்க்கபூர்வமானது, அதில் கிறுக்குத்தனங்களுக்கு இடமே இல்லை என்று. அது பாடப்புத்தக அறிவியல். நமக்கு தெரிந்தது அதுதான். நம் பையன்கள் அதற்குமேல் வாசிப்பதும் இல்லை. ஆனால் அறிவியல் வளர்ந்துகொண்டே இருக்கிறதே அந்த தளிர்நுனியில் அது கிறுக்கர்களால்தான் முன்னெடுக்கப்படுகிறது. விதவிதமான கிறுக்குத்தனமான ஊகங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். அவற்றில் சில ஊகங்கள்தான் அறிவியல் கொள்கைகளாக நிரூபிக்கப்படுகின்றன. மிச்சமெல்லாம் குப்பைக்கூடைக்கு போகும். ஆனால் அந்த ராத்திரியில் உலாவும் கிறுக்கர்கள் இல்லாவிட்டால் அறிவியலே இல்லை.’

வாணலியை இறக்கி வைத்துவிட்டு டாக்டர் சாமி ஒரு பானையை அடுப்பில் ஏற்றினார். நான் பச்சைமுள்ளங்கியை உப்பில் தொட்டு தின்றேன் ‘பச்சை முள்ளங்கியை உப்பு தொடாமல் தின்ன வேண்டும். உப்பு பட்டால் அதன் இயல்பு திரிந்துவிடும். எது ஒன்றின் இயல்பை மாற்றுகிறதோ அது அந்த உணவுக்கு எதிரி…பாகற்காயை புளி சேர்த்து ஊறவைத்து சாப்பிட்டால் கசப்பு இருக்காது. கசப்பு இல்லாவிட்டால் பாகற்காயை ஏன் சாப்பிடவேண்டும்? வெள்ளரிக்காயே போதுமே? இலக்கியம் இல்லாவிட்டால் ஜெயமோகன் எதற்கு? பிஎஸ்என்எல் கிளார்க்கே போதுமே… இல்லையா சாமி?’ என்றார்.அதே மூச்சில் ‘அறிவியலுக்கே இப்படி என்றால் தத்துவமும் கலையும் எல்லாம் எப்படி இருக்கும்? சமநிலையும் லௌகீகவிவேகமும் உள்ளவனுக்கு உள்ளே போவதற்கு அனுமதிச்சீட்டே கிடையாது…’

நான் ‘நம்முடைய நாட்டிலும் அன்னியர்களுக்கு இடமிருக்கிறதே’ என்றேன். ‘இந்தியா அதன் உச்சநிலையில் இருந்தபோது இரவு உலாவுபவர்களையும் மர்மங்களை தேடி அலைபவர்களையும் தான் கொண்டாடி இருக்கிறது. அவர்களுக்கு சமூகம் ஆதரவும் பாதுகாப்பும் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. நெடுங்காலம் இந்த மனநிலை இருந்ததனால் அதை சமூக விதியாக மாற்றிக்கொண்டார்கள். அந்த விதிகள் மத நம்பிக்கைகளாக ஆனதனால் அவை கணிசமானவர்களிடம் இன்றும் நீடிக்கின்றன. ஆகவேதான் நடராஜகுரு ஆறுவருடம் இந்த நாட்டில் பிச்சை எடுத்து அலைந்தார். நித்யா நான்கு வருடம் அலைந்தார். எப்படியும் ஒரு ஐந்தாறுலட்சம்பேர் அப்படி அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை இச்சமூகம் பேணுகிறது’

டாக்டர் கொதிக்கும் நீரில் உருளைக்கிழங்குகளை போட்டார். என்னருகே வந்து அமர்ந்து காரட் நறுக்க ஆரம்பித்தார். ‘..ஆனால் எங்கே இந்து அல்லது பௌத்த, சமண, சீக்கிய, மதநம்பிக்கைகள் வலுவாக இருக்கின்றனவோ அங்கு மட்டும்தான் இந்த மனநிலை இன்று உள்ளது. நம்முடைய படித்த வர்க்கம் அவற்றை மூடநம்பிக்கை என்று நினைக்கிறது. அவர்கள் ஐரோப்பாவில் இருந்து அற்பமான தொழில்நுட்பக்கல்வியை அல்லது பொருளியல் கல்வியை மட்டுமே பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் ஐரோப்பா என்று நினைக்கிறார்கள். ஐரோப்பாவின் ஆன்மா பற்றிய அறிவே அவர்களிடம் இல்லை’

நான் அதைப்பற்றியே சிந்தனை செய்துகொண்டிருந்தேன். டாக்டர் சொன்னார் ‘சொல்லப்போனால் இந்த அடிப்படை மனநிலை ஐரோப்பாவில் என்றுமே இருந்தது. கிறிஸ்தவத்தை உலகமெங்கும் கொண்டுசென்ற பிரச்சாரகர்கள் அப்படிப்பட்ட அன்னியர்கள்தான். கப்பலில் ஏறி புதிய உலகை கண்டுபிடிக்கச்சென்ற கொலம்பஸும் வாஸ்கோ ட காமாவும் அப்படிப்பட்டவர்கள்தான். ஹெர்மான் குண்டர்டை நினைத்து பார்த்து நான் சின்ன வயதில் ஆச்சரியப்படுவேன். மிஷனரிகளுக்கு மிகச்சிறந்த உதாரணம் அவரே. பதினெட்டு வயதில் ஏதோ ஒரு அன்னிய நாட்டுக்கு கப்பல் ஏறி பல கடல்களைக் கடந்து சென்று அங்கே வாழ்நாள் முழுக்க தங்கி அந்தமொழியை கற்று அந்த மொழிக்கு இலக்கணநூலையும் அகராதியையும் அமைத்து முன்னோடியாக இருப்பதென்பது எவ்வளவு மகத்தான விஷயம். நம்மில் எத்தனை பேர் அதைச்செய்திருக்கமுடியும் என்று நினைத்தால் அந்த தீவிரத்தின் அர்த்தமென்ன என்று புரியும்’

’ஒருகாலத்தில் இந்தியாவில் அந்த வேகம் இருந்திருக்கிறது. வெறும் ஒரு ஆலிலையுடன் போதிதர்மர் ஜப்பான் வரை சென்றார். ஆனால் அந்த ஆன்ம வலிமையும் உலகையே அணைத்துக்கொள்ளும் பிரக்ஞையும் நம்மிடம் பிறகு இல்லாமலாகிவிட்டது. நாம் மனம் குறுகிய சமூகமாக ஆகிவிட்டோம். அந்த மனநிலையை திரும்ப மீட்டெடுத்தவர் சுவாமி விவேகானந்தர் மட்டும்தான். துறவுமனம் கொண்ட இளைஞர்கள் தனக்குத்தேவை என்று சொன்னபோது விவேகானந்தர் உத்தேசித்ததும் அதுதான். ஆனால் நாம் இன்னும் லௌகீகச்சேற்றில் கால் புதைந்துதான் கிடக்கிறோம்… நம் இளைஞர்களில் சாகச உணர்வோ கனவுகளோ கொண்டவர்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது…’ டாக்டரின் கை அவருக்குச் சம்பந்தமில்லாமல் காரட்டுகளை அடுக்கப்பட்ட பொன் நாணயங்களாக ஆக்கிக்கொண்டிருந்தது.

’காரி டேவிஸ் அந்த ஐரோப்பிய மனம் கொண்டவர். சாகசம் செய்வது, வித்தியாசமாக இருப்பது, மகத்தான கனவுகளுடன் இருப்பது, திடமான நம்பிக்கைக்காக சாகவும் தயாராக இருப்பது, உலகைநோக்கி பேசும் தன்னம்பிக்கை இதெல்லாம் அவருக்கும் உண்டு. அதுதான் அவரை இப்படி ஆக்கியது…. அவரைப்பற்றி ஒரு நல்ல கட்டுரை இருக்கிறது..தருகிறேன்’ டாக்டர் சொன்னார்.

நான் எழுந்தேன். ‘குளித்துவிட்டு வருகிறேன் டாக்டர் சாமி’ என்றேன். டாக்டர் சாமி ‘இந்த இரண்டு பாத்திரத்தையும் காரி சாகிப்பிடம் கொண்டுசென்று கொடு’ என்றார். நான் ‘எதற்கு?’ என்றேன். ‘அந்த பெரிய பாத்திரம் நிறைய கிறுக்கும் சின்ன பாத்திரம் நிறைய கனவும் மொண்டுதருவார்… ஊதி ஊதி குடிக்கலாம்’ நான் சிரித்தேன். ’கொண்டுபோய் கொடு சாமி’ என்றார் டாக்டர்.

நான் மேடேறி குடிலை அடைந்தேன். குடில் வாசலில் காரி டேவிஸ் இளவெயிலில் ஒரு குட்டைக் கால்சட்டை மட்டும் அணிந்துகொண்டு பெரிய காரட் போல நின்றிருந்தார். வெயில் காய்கிறார் என்று தெரிந்தது. அருகே அவரது காக்கிநிற உடைகள். நான் கொண்டுசென்று கொடுத்த பாத்திரங்களை வாங்கிக்கொண்டு புன்னகையுடன் நன்றி சொன்னார். அந்த பாத்திரங்களில் கொஞ்சமாக நீர் மொண்டு துணிகளை அதற்குள்ளேயே போட்டு சிறிய பிரஷ்ஷால் உரசி விசித்திரமான முறையில் துணி துவைக்க ஆரம்பித்தார். மிகக்கொஞ்சமாக நீர் செலவிட்டு துணிதுவைப்பதற்கான ஒரு முறையை அவர் ஐரோப்பிய இயற்கைவாதிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தார்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஉலகக் குடிமகன்
அடுத்த கட்டுரைஉலகம் யாவையும் [சிறுகதை] 2