மூத்தோள்,செய்தி- கடிதங்கள்

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

செய்தி கதை இந்தக்கதைவரிசையில் எங்கே நிற்கிறது என்று பார்த்தேன். ஒளிமிக்க ஒரு கணம். அப்படி எழுதப்பட்ட கதைகளில் இந்தக்கதையும் வருகிறது முதல் ஆறு ஓர் உதாரணம். ஆழி இன்னொரு உதராணம். இந்தக்கதைகளில் எல்லாம் மனிதர்கள் மனிதர்களை ஆழமாக சந்திக்கிறார்கள். காதல் அல்லது காமம் அதிலே ஒன்று மட்டும்தான். இந்தக்கதையில் காமம். முதலாறு கதையில் காதல். எதுவாக இருந்தாலும் இனிமையான ஒரு சந்தர்ப்பம், அவ்வளவுதான்.

பகவதியை அனந்தன் தற்செயலாக, அந்த கணத்தின் ஒரு மீறலால், மனதின் ஆழத்தில் தீண்டிவிடுகிறான். அவள் மனசுக்குள் ஒரு மணலை போட்டுவிடுகிறான். அது என்றென்றும் முத்தாக அங்கே இருந்துகொண்டிருக்கும். அவர்கள் அதை மனதால் எடுத்து மகிழ்ந்து திரும்ப வைத்துவிடுவார்கள். அனந்தன் அதைக் கடந்துவிடுவான். அவளால் முடியாது

எஸ்.அரசு

***

அன்புள்ள ஜெ.

செய்தி கதை வயதைத் தாண்டிய இருவரின் பாலியல் கவர்ச்சியை பரஸ்பர மனங்களில் கொண்டுவந்து சித்தரிக்கும் கதை போலத் தோன்றுகிறது.

பகவதி அவனில் கணவனைக் காண்கிறாள். அதனை அவள் விரும்பியும் இருக்கிறாள். அதனால்தான் அவள் அந்தக் கடிதத்தின் ஆசை வார்த்தைகள் பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ளவில்லை. ஆனால் அவன் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. தத்தளிக்கிறான். அலைந்து திரிகிறான். இறுதியில் அவளில் உண்டான மாற்றத்தை உணர்கிறான். இது யௌவன பருவங்களின் ஆற்றாமையை உள் அடக்கிய கதைபோல உணர்கிறேன். இது ஒவ்வொருவருக்குமான அனுபவம். வெளியில் கூறுவதில்தான் தயக்கம். இந்தக் கதை அந்தத் தயக்கத்தின் வெளிப்பாடு என்றே கருதுகிறேன்.

கேரளத்தில் பகவதி. தமிழகத்தில் கண்ணகி. இந்தப் பெயர்களை ஒரு குறியீடு போலப் பார்க்கிறேன்.

சுயாந்தன்.

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

மூத்தோள் சிறுகதை ஒரு அதிர்ச்சியை அளித்தது. அந்த முடிவை நான் எதிர்ப்பர்க்கவில்லை.அந்த முடிவிலிருந்து அந்த கோயிலே ஒரு மெடபிசிக்கல் இமேஜ் ஆக மாறிவிட்டது. ஒரு குகைக்குள் பகவதியும் மூத்தவளும் இருந்தார்கள் என்று சொல்லும்போது இரண்டுபேரும் சமமான அளவிலுள்ள சிலைகளாக இருந்தார்கள் என்று நினைக்கத்தான் தோன்றும். ஆனால் மூத்தவள் அப்படி பேருருவமாக இருந்திருக்கிறாள். இளையவள் சிறியவளாக அவள் காலடி அளவிலேயே இருந்திருக்கிறார். அந்த பிரம்மாண்டம்தான் இருட்டில் ஆழத்தில் எல்லா விளக்குகளையும் வழிபாடுகளையும் வாங்கிக்கொண்டு அமந்திருக்கிறது. அதன் மடியில் அமர்ந்து அதை வெறுத்தும் பழித்தும் நாம் வாழ்கிறோம்.

சிவக்குமார்

***

வணக்கம் ஜெ

மூத்தோள் சிறுகதையை வாசித்தேன். ஒரு துளி அமங்கலம் பொருட்டே உலகம் தன்னை ஆக்கச்சக்திகளால் நிறைத்துக் கொள்கிதது. அத்தனைக்கும் பின்னால் பேருருவென எழுந்திருக்கும் அமங்கலம் நகைக்கும் தருணம் கொண்ட கதை. ஒரு துளி அமங்கலமேனும் சூடாத எதுவும் நிறைவுறுவதில்லை. அத்தனைக்கும் அடியில் இருக்கும் அமங்கலத்தைத் தரிசிக்கச் செய்தது.

அரவின் குமார்

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைஅருள்,மணிபல்லவம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவசையே அவர்களின் உரிமைப்போர்