கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]

கன்னங்கரிய பெருமழை பெய்து ஓய்ந்து சற்றே வான்வெளிச்சம் எஞ்சியிருந்த ஒரு காலையில் அப்துல் அசீஸ் என்னைத் தேடி வந்தான். “இக்கா உங்களை கூட்டிவரச்சொன்னார்.”

“என்னையா?” என்றேன். “எதற்கு?” நான் அப்போதுதான் எழுந்து காபி போட்டு குடித்துவிட்டு பழைய ரேடியோவை துருவிக்கொண்டிருந்தேன். இலங்கை வானொலி அங்கே கொஞ்சம் எடுக்கும். ஆனால் இடியினால் உரசல் ஓசைகள்தான் கேட்டுக்கொண்டிருந்தன.

“ஜான் சார் தங்கியிருந்த அறையை காலிசெய்யவேண்டும்… நீங்கள் வரவேண்டும் என்று சொன்னார்” என்றான் அசீஸ்.

“சரிதான், அந்த அறையை இன்னுமா காலி செய்யவில்லை?” என்றேன்.

“ஒரு ஆண்டுக்குமேல் ஆகிறது. பூட்டியே கிடக்கிறது. மேலே ஒரு தேங்காய் விழுந்து ஓடுகளும் உடைந்துவிட்டன. உள்ளே மழைநீர் விழுகிறது.உள்ளே உள்ள மேஜை நாற்காலி எல்லாமே மழையில் பூசணம் பூத்துவிட்டது. அதை திறந்து காலிசெய்து ரிப்பேர் செய்யாவிட்டால் மொத்த கட்டிடமும் விழுந்துவிடும்”

நான் “என்னை கூப்பிட்டுவரச் சொல்லியிருக்க மாட்டார். வத்ஸலன் மாஸ்டரை அழைத்துவரச் சொல்லியிருப்பார்” என்றேன்.

“இல்லை, உங்கள் பெயரைத்தான் சொன்னார்.”

“நான் வந்து என்ன செய்யப்போகிறேன்?” என்றேன்.

“இக்கா பயப்படுகிறார்… நீங்கள் வந்தால்தான் பூட்டை உடைப்பேன் என்று சொல்கிறார்.”

“பூட்டை உடைப்பதென்றால்…”

“நீங்கள் வாருங்கள்… இக்கா உங்களை காத்து அங்கே நின்றிருக்கிறார்.”

நான் சட்டையைப் போட்டுக்கொண்டு கிளம்பி அவனுடைய பைக் பின்னால் ஏறிக்கொண்டேன். அவன் மணலில் காலை உந்தி உந்தி பைக்கைச் செலுத்தினான். நான் பின்னால் அமர்ந்து காலை மணலில் மிதித்து பைக்கை உந்தினேன். தார்ச்சாலைக்கு வந்தபோது எஞ்சினை ஸ்டார்ட் செய்து சீரான வேகத்தில் ஓட்டினான்.

இடதுபக்கம் கடல் வந்துகொண்டிருந்தது. மழைக்காலக் கடலுக்கு ஒரு கலங்கலான பச்சைநிறம். கரையோரம் அலைகள் நுரையுடன் வளைந்து வளைந்து வந்து பரவி மீண்டன. கடலில் இருந்து வந்த காற்றில் என் ஆடைகள் பறக்க ,நன்றாகவே குளிர்ந்தது.

“நேற்றிரவு நல்ல மழை” என்றேன்.

“ஆமாம், நாலைந்து தென்னைமரங்கள் விழுந்துவிட்டன” என்று அசீஸ் சொன்னான்.

“ஜான் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து எத்தனை காலமாகிறது?”

“ரொம்பகாலம்… அவர் கரிவெள்ளூர் சம்பவத்தை சினிமாவாக எடுக்க நினைத்தார் அல்லவா? அதற்கு திரைக்கதை எழுதுவதற்காக இங்கே வந்தார். அப்போது வாடகைக்கு எடுத்தார்” என்றான் அசீஸ்.

“அடப்பாவி!” என்று வியந்துவிட்டேன். “அப்படியென்றால் அது எண்பத்திமூன்றில். நான்கு வருடமாகிறது…”

“இக்கா சொல்கிறார் ஐந்து வருடமாகிறது என்று.”

நான் சற்றுநேரம் கழித்து “வாடகை ஏதாவது கொடுத்தாரா?” என்றேன்.

அசீஸ் “அன்றைக்கு இங்கே பை சார் இருந்தார். அவர்தான் காரில் ஜான் சாரைக் கூட்டிவந்தார். வீட்டை அவரை நம்பித்தான் இக்கா கொடுத்தார். அப்போது வாடகை மாதம் நூறுரூபாய். ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ். ஒருவருடம் வாடகையை பை கொடுத்தார். அதன்பிறகு பை் சார் இறந்துபோனார். அதன்பிறகு ஆறேழுமாதம் வத்ஸன் மாஸ்டர் வாடகை கொடுத்தார். அவ்வளவுதான்…”

“அப்படியென்றால் எப்படிப்பார்த்தாலும் இரண்டுவருட வாடகை பாக்கி?”

“ஆமாம்” என்றான் அசீஸ் “கூடுதலாகவே இருக்கும்.”

“ஜான் இங்கே வருவதுண்டா?” என்று நான் கேட்டேன். ஜானுடன் எனக்கு தொடர்பு இருந்தாலும் ஆழமான பழக்கம் இல்லை. ஜான் எல்லாரும் அவருக்கு நெருக்கமானவர்கள் என நம்பவைக்கும் கலை கற்றவர். ஆனால் அவருடைய பழக்கவழக்கங்கள், ஊடுபாதைகள் அவருக்கு நெருக்கமானவர்களுக்குக் கூட தெரியாது.

“சிலசமயம் வந்து ஒருமாதம் வரை தங்கியிருப்பார். நாலைந்து மாதம் வராமலிருப்பார். இறப்பதற்கு நான்குமாதம் முன்பு இங்கே வந்து இரண்டுமாதம் தங்கியிருந்தார். அவருடன் அவருடைய நண்பர்களும் நாலைந்துபேர் இருந்தார்கள்.”

“அந்த வீட்டுக்கு ஒரே படுக்கையறைதானே?”

“இக்கா ஒரு அறையையும் கூடத்தையும் சமையலறையையும் மட்டும்தான் கொடுத்திருந்தார். இன்னொரு அறை முழுக்க இக்காவின் பழைய ஓட்டல் ஃபர்னிச்சர்களை வைத்து பூட்டியிருந்தார்” என்றான் அசீஸ். “அவர்கள் ஒரு அறை முழுக்க என்னவோ சினிமாச் சாமான்களை வைத்திருந்தார்கள். அத்தனைபேரும் வாழ்ந்தது அந்த ஒரே கூடத்தில்தான்.”

“அங்கேயே படுத்துக்கொள்வார்களா?”

“ஆமாம்.”

“அவர்களுக்கு பாய்கூட தேவையில்லை” என்று நான் சொன்னேன்.

அசீஸ் ”ஆமாம், ஒருவர்மேல் ஒருவர் படுத்திருப்பார்கள். சாளை மீனை வாரிப்போட்டதுபோல” என்றான்.

மழைச்சாரல் இல்லை. ஆனால் காற்றில் நீர்த்துளிகள் பிசிறாகப் பறந்தன. கடலின் கொந்தளிப்பு கூடிக்கூடி வருவது போலிருந்தது. தென்னை மரக்கூட்டங்கள் ஓலைகளை மறுபக்கம் வீசி அடிப்பக்க வெளிறலைக் காட்டி சுழன்றாடிக் கொண்டிருந்தன.

நல்ல மழை. இல்லையென்றால் இந்தக்காற்றில் கண்ணில் மணலாக விழும். ”நான் கூலிங்கிளாஸை எடுக்கவில்லை” என்றான் அசீஸ்.

“அசீஸ், இக்கா ஜானிடம் வாடகை கேட்கவே இல்லையா” என்றேன்.

“கேட்காமலிருப்பாரா? நேரில் வந்து கேட்பார். நானே இக்காவுடன் பலமுறை வந்திருக்கிறேன். ஆனால் ஜான் சாரிடம் ஏது பணம்? அவருக்கு தெளிந்த நிலையே இருப்பதில்லை. அவர்களெல்லாம் சேர்ந்து இக்காவை விளையாட்டுப் பொருளாக மாற்றிவிடுவார்கள்.”

“விளையாட்டுப்பொருள் என்றால்?” என்றேன்.

“இக்கா வாடகை கேட்கப் போவதையே ஒரு நாடகமாக ஆக்குவார்கள். இக்கா ‘வாடகை தாடா நஸ்ரானி’ என்று கேட்பார். இவர்கள் அதை கோடாலி தாடா என்று காதில் வாங்கிக் கொள்வார்கள். இக்கா என்ன சொன்னாலும் கோடாலி என்று நினைத்து பதில் சொல்வார்கள். இக்கா கடுங்கோபத்துடன்  ‘அடித்து கொல்வேன் ஹமுக்கே’ என்பார். ‘ஆயிரம் ரூபாய் தருகிறேன் செல்லமே’ என்று அவர் சொன்னதாக விளங்கிக்கொள்வார்கள்” என்றான் அசீஸ்

“கடைசியாக இக்கா வாடகை கேட்கப் போயிருந்தார். அவர்கள் இக்கா ஒரு சினிமாவில் நடிப்பதாகவும் அந்த ஷூட்டிங்காகவும் அதை மாற்றிவிட்டார்கள். இக்கா பதினெட்டு ரீடேக் வாங்கினார். ஒன்றரை வருட வாடகை மீதி நிற்கிறது என்ற டயலாக்கைச் சொல்ல” அஸீஸ் சொன்னான்

நான் சிரித்துவிட்டேன். “இக்காவுக்கு அந்த நாடகம் பிடித்திருக்கவேண்டுமே?”

“இக்கா ஆள் கில்லாடி. இந்த ஊரிலேயே பெரிய ஓட்டலை நடத்தியவர். அவருக்குத் தெரியாதா? வாடகை வாங்கப்போவது அவருக்கு ஒரு விளையாட்டு. அவர் விரும்பித்தான் நடித்தார். ரீடேக் வாங்கினார் என்று சொன்னேனே. அந்த காட்சியில் ஜான் சார் இக்காவிடம் சின் அப், சின் குளோஸ், ரைட் லுக், லெப்ட் லுக் என்றெல்லாம் சொல்வார். இக்கா அதையெல்லாம் சரியாக செய்வார்.”

”காமிரா? அவர்களிடம் காமிரா இருந்ததா?”

“காமிராவா? நல்ல கதை. அவர்கள் இக்கா அங்கே வைத்திருந்த ஒரு வெண்கலக் குண்டானை எடுத்துச்சென்று விற்று குடித்தார்கள். மேனோன் ஒரு தண்ணீர் கூஜாவை காமிராவாக காட்டினார். அதில்தான் ஒளிப்பதிவு.”

“கூஜாவா? அதற்கு முன்பாகவா இக்கா நடித்தார்?”

“ஆமாம். இக்கா மகத்தான நடிகர். என்ன ஒரு தத்ரூப நடிப்பு!” என்று அசீஸ் சிரித்தான்.

பைக் தென்னந்தோப்புக்குள் நுழைந்து தாழ்வான ஓட்டுக்கூரையிட்ட வீட்டுக்கு முன் சென்று நின்றது. காதர் இக்கா வீட்டின் பின்பக்கத்தில் இருந்து கையில் தென்னை ஓலையுடன் வந்தார். என்னை பார்த்து சிரித்து “வா நாயர்குட்டீ” என்றார்.

தலையில் எப்போதும் ஒரு துண்டை மடித்து போட்டுக் கொண்டிருப்பது இக்காவின் வழக்கம். அவருக்கு எழுபது வயதுக்கு மேல். முகம் முழுக்க சுருக்கங்கள். கண்களைச் சுற்றி வலைபோல அடர்ந்த சுருக்கங்கள். ஆனால் உடல் நல்ல தெம்பானது. தொப்பை கிடையாது. இறுகிய தோள்கள். பெரிய விரல்கள்.

“என்ன இக்கா? என்ன பிரச்சினை?” என்றபடி இறங்கினேன்.

“என்ன பிரச்சினையா? வீட்டை பார்த்தாயா? எட்டு மாதமாக பூட்டிக்கிடக்கிறது. அந்த ஹமுக்கு பூட்டி சாவியை கொண்டு போய்விட்டான். ஓடு உடைந்து உள்ளே தண்ணீர் நிறைந்து பூசணம் பிடித்துவிட்டது. பூட்டை உடைக்கப்போகிறேன். நீதான் சாட்சி.”

“நானா?” என்றேன். இக்காவின் தீவிரமான முகத்தைப் பார்க்க சிரிப்பு வந்துவிட்டது. “இக்கா, இது உங்கள் வீடு. இதை உடைக்க எதற்கு சாட்சி?”

“இல்லை, அவன் பெரிய சினிமா டைரக்டர். இத்தாலிக்கெல்லாம் கூட போயிருக்கிறான்?” என்றபின் அஸீசிடம் “இத்தாலிதானேடா ஹமுக்கே?” என்று கேட்டார்.

“ஆமாம் இக்கா, இத்தாலிதான்.”

“அங்கே போயும் குடித்து விழுந்து கிடந்திருப்பான். ஆனால் அங்கெல்லாம் வெள்ளைக்காரர்கள். சாலையோரம் பீ கிடக்காது” என்றார் இக்கா.

நான் வெடித்துச் சிரித்துவிட்டேன். இக்காவிடம் பேசினால் இதுதான் பிரச்சினை. அவர் முகம் தீவிரமாக இருக்கும், ஆனால் நாம் சீறிச்சிரித்துக் கொண்டே இருப்போம்.

இக்காவின் நகைச்சுவை உணர்வுதான் அவரை ஜான் விரும்ப வைத்திருக்க வேண்டும். ஜானின் நகைச்சுவை உணர்வு விளையாட்டுத்தனமானது. எதையும் எந்த தயக்கமும் இல்லாமல் நடிப்பவர் அவர். இக்காவின் நகைச்சுவை ஒரு வகையான மாப்பிள்ளைத்தனமானது. மாப்பிள்ளைகள் நகைச்சுவைகளை பெரும்பாலும் தங்களை வைத்தே நடத்திக்கொள்வார்கள்.

“இக்கா, உங்களிடம் பூட்டுக்கு மாற்றுச்சாவி இல்லையா?” என்றேன்.

“இருந்தால் நான் அப்போதே திறந்திருப்பேனே?” என்று இக்கா சொன்னார். “ஆனால் அவனிடமும் சாவி இல்லை.”

“அய்யோ, அப்படியென்றால் எப்படி திறந்தார்?” என்றேன்.

“மகனே நாயர்குட்டி, இந்த பூட்டுக்கு எதற்குச் சாவி? நீ அதை பிடித்து இழு, திறக்கும்” என்றார் இக்கா.

உண்மையில் அந்தப்பூட்டு ஒரு சின்ன நண்டுக்குஞ்சு மாதிரி இருந்தது. இழுத்ததுமே திறந்துவிட்டது

“கொஞ்சம் அழுத்தினால் மூடிவிடும்” என்று இக்கா சொன்னார். “இப்படி ஒரு பணிவான பூட்டு இந்த துனியாவில் இல்லை.”

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சிரித்துக் கொண்டே இருந்தேன்.

“நீ முன்னால் போ நாயரே, உள்ளே அறைக்குள் அந்த ஹமுக்கு என்னென்ன குலுமால் செய்து வைத்திருக்கிறான் என்று யார் கண்டது?” என்று இக்கா சொன்னார் “அவன் என் வீட்டை சினிமாவில் காட்டி என்னை அவமானப்படுத்துவான் என்று மிரட்டினான்.”

நான் உள்ளே பார்த்தேன். பீதியாகத்தான் இருந்தது. அந்த அறைமுழுக்க காகிதங்கள், பழைய துணிகள், சாப்பாட்டுப் பொட்டலம் கட்டிய காய்ந்த இலைகள், வாழைப்பழத்தோலின் சருகுகள் .இன்னும் என்னென்னவோ பரவிக்கிடந்தன. பீடிக்குச்சிகளை திரட்டினால் ஏழெட்டு கிலோ தேறும் என்று தோன்றியது. அனைத்துக்கும் மேல் பரவிய பஞ்சுப்பூசணம்.

அறையைப் பார்த்தபடி “அவன் எடுத்த படம் போலத்தான் இருக்கிறது” என்று இக்கா சொன்னார்.

“இக்கா நீங்கள் அவர் எடுத்த படத்தை பார்த்திருக்கிறீர்களா?”

“ஆமாம், ஒரு படத்திற்கு கூட்டிப்போய் காட்டினான். அவன் எடுக்க நினைத்ததை எடுத்திருந்தான்”

“உண்மையாகவா?” என்றேன். அப்படி சரியாக வந்த ஜானின் படம் எது என்று குழப்பமாக இருந்தது.

“அவன் அப்படி கந்தரகோலமாகத்தான் நினைப்பான்” என்றார் இக்கா.

“இக்கா, இந்த வீட்டை காலிசெய்யவா இத்தனைநாள் காத்திருந்தீர்கள்?” என்றேன்

“உள்ளே ஒரு ஜின் இருக்கிறது என்று அவன் சொன்னான். அதனால்தான் அவன் இல்லாதபோது நான் உள்ளே போகாமலிருந்தேன். நமக்கு எதற்கு ஜின் சகவாசம் எல்லாம்? அதுவும் அவன் வைத்திருப்பது கிறிஸ்தவ ஜின்னாக வேறு இருக்கும்” என்று இக்கா சொன்னார்.

“அதெப்படி சொல்கிறீர்கள்?” என்றேன்.

“அவன் ஒரு சத்யகிறிஸ்தியானி… அவனுக்கு பைபிள் நன்றாகத் தெரியும். நிறைய பைபிள் வசனங்கள் சொல்லுவான்” என்றார் இக்கா. “பிற்பாடு பைபிளை அவறாச்சன் சொல்லிக் கேட்டபோதுதான் ஜான் சொல்வதுபோல அதில் அவ்வளவு கெட்டவார்த்தைகள் இல்லை என்று எனக்குத் தெரிந்தது.”

நான் “கெட்டவார்த்தைகளா?” என்றேன்.

“ஆமாம். புண்ணியவாளர்கள் அப்படித்தான் பைபிளை சொல்வார்கள். அவன் ஒரு புண்ணியவாளனாக ஆக முயற்சி செய்துகொண்டிருந்தான்” என்றார் இக்கா “கீவர்கீஸ் புண்ணியவாளனைப்போல”.

“இக்கா, இதை யார் சொன்னது?”

“அவனேதான் சொன்னான். வத்திக்கானில் இருந்து அவனை புண்ணியவாளன் என்று அறிவிப்பார்கள். அவன் செய்த அற்புதங்களுக்கு நானும் சாட்சி என்று சொன்னானே” என்று இக்கா சொன்னார்.

“இக்கா, நீங்கள் அப்படி என்ன அற்புதம் பார்த்தீர்கள்?”

“என் புன்னார மகனே நாயர்குட்டி, ஒருத்தன் உட்கார்ந்த இடத்திலிருந்தே தண்ணீர்கூட சேர்க்காமல் இரண்டு ஃபுல் அடிப்பதை நான் வேறெங்கும் பார்த்ததில்லை.”

நான் உரக்கச் சிரித்தபடி சுவரில் சாய்ந்து நின்றுவிட்டேன்.

“அடுப்புப் பக்கத்திலே போகாதே, பற்றி எரிந்துவிடுவாய் என்று நான் சொன்னேன். நான் அவனை தீவண்டி என்றுதான் சொல்வேன். அவனுக்கும் அது பிடிக்கும்”

அசீஸ் “இக்காவைக் கண்டதும் ஜான் சார் அவரே ‘வண்டி வண்டி தீவண்டீ உன்னை போல உள்ளில் எனக்கும் தீதானே’ என்று பாட ஆரம்பித்துவிடுவார்.” என்றான்

“எனக்கு இந்த வார்த்தை பிடிக்கும், தீவண்டி. நல்ல வார்த்தை. தமிழில் புகைவண்டி என்று தப்பாகச் சொல்கிறார்கள்” என்றேன்.

“புகைவண்டி என்றால் அவனுடைய நண்பன் மேனோனைச் சொல்லவேண்டும். அவனுக்கு ஒருநாளைக்கு பதினைந்து கூடு பீடி வேண்டும்” என்றார் இக்கா. “அவனை நான் உமித்தீ என்றுதான் அழைப்பேன்”

“இக்கா உள்ளே நீங்கள் ஜின்னை பார்த்திருக்கிறீர்களா?”

“இதோ பார் நாயரே, அவனுடன் வருபவர்கள் எல்லாருமே ஜின் மாதிரித்தான் இருப்பார்கள். அவர்களில் எவர் மெய்யான ஜின் என்று நான் எங்கே சோதனை செய்வது?”

“ஜின்கள் பொதுவாக எப்படி இருக்கும்?” என்றேன்.

“தெரியவில்லை. அன்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். மனிதர்களிடமிருந்து வேறுபாடு தெரியவேண்டும் அல்லவா?” என்றார் இக்கா. “நாயர்குட்டி, நீ உள்ளே போய் அவனுடைய பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்று பார். முக்கியமான ஏதாவது பொருள் இருந்தால் சொல், எடுத்துக்கொண்டு போய் பத்திரமாக வைப்போம். நாளை ஒரு காலத்தில் வத்திக்கானிலிருந்து வந்து கேட்கும்போது கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் கிறிஸ்தவப் புண்ணியவாளனின் சாட்சிகளை முசல்மான்கள் அழித்துவிட்டார்கள் என்று சொல்வார்கள்.”

“நீங்களும் உள்ளே வாருங்கள் இக்கா” என்றேன். “இங்கே ஜின் ஏதும் இல்லை”

“நீ வந்தால் ஜின் எல்லாம் ஓடிவிடும்” என்று இக்கா சொன்னபடி உள்ளே வந்தார்.

“ஏன்?” என்றேன்.

“நாயர்களைக் கண்டால் ஜின்னுகள் ஒதுங்கிப்போய்விடும். ஜான்தான் சொன்னான்.”

“ஏன்?”

“கழுத்தில் நானொரு ஜின் என்று எழுதி தொங்கவிட்டால்தான் நாயர்களுக்கு அது ஜின் என்று புரியுமாம்” என்று இக்கா சொன்னார். “இல்லாவிட்டால் பின்னணியில் சலீல் சௌதுரி பாட்டு ஒலிக்கவேண்டும்.”

அது இக்கா எனக்கு போட்ட ஆப்பா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் இக்காவின் முகம் வழக்கம்போல தீவிரமான சாந்தநிலையுடன் இருந்தது.

தரையெல்லாம் தூசி. சமையலறைக்குள் நம்பவே முடியாதபடி என்னென்னவோ பொருட்கள். சப்பிய அலுமினிய பாத்திரங்கள். கொட்டாங்கச்சிகள்.

“இதென்ன கொட்டாங்கச்சிகள்?” என்றேன்.

அசீஸ் “நான் கொண்டுவந்து கொடுப்பேன். ஜான் சார் கள்ளை மட்டும் கொட்டாங்கச்சியில்தான் குடிப்பார்” என்றான்.

“ஏன்?” என்றேன்.

“விஷுவல் யூனிட்டிக்காக” என்றான் அசீஸ். “ஃபெலினி என்று ஒரு தேவதைதான் அதை பார்த்துக்கொள்கிறது.”

“எதை?” என்றேன்.

“விஷுவல் யூனிட்டியை… ஜான் சார் சொன்னார்” என்று அசீஸ் சொன்னான். “விஷுவல் யூனிட்டியை அழிப்பவர்களை புனுவல் என்று ஒரு பயங்கரப் பேய் வந்து துரட்டிக்கொழுவு மாட்டி இழுத்து நரகத்திற்கு கொண்டுசெல்லும். அங்கே குடலை கொக்கி மாட்டி வாய் வழியாக உருவி எடுக்கும்”

“நீ ஜானுடன் பேசுவாயா?” என்றேன். அவன் அத்தனை ஞாபகம் வைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது.

“இங்கே வருவாரே… ஆட்டோவில் இருந்து இறங்கினால் நான்தான் ஆட்டோவை பணம்கொடுத்து அனுப்பவேண்டும்” என்றான் அசீஸ். “என்னை சினிமாவில் நடிக்கவைத்து பிரேம் நசீர் மாதிரி ஆக்கிவிடுவதாகச் சொன்னார்”. பெருமூச்சுடன் “எனக்கு அவர் பெயர் கூட போட்டிருந்தார். பிரேம் அசீஸ்”

“பிறகு?”

“நான் பொடிமீசை வைத்துக்கொண்டேன். அவருடனேயே சுற்றினேன். ஒருநாள் அவர் சொன்னார், மகனே நீ என்னுடன் சேராதே. என் வாழ்க்கை இப்படி கொதார்த் ஸ்கிரிப்ட் மாதிரி கோழிகிண்டிய பதத்தில் ஆகிவிட்டது, நீயாவது உருப்படு என்று” என்றான் அசீஸ்.“அதன்பிறகுதான் நான் ஓட்டல் வைத்தேன்.”

இக்கா கீழே பார்த்துக்கொண்டு “புண்ணியவாளனாக இருப்பது எவ்வளவு கஷ்டம்!” என்றார்.

“ஏன்?”

“இல்லை, இவ்வளவு குப்பை!” என்றார் இக்கா காலால் ஒரு துருப்பிடித்த டப்பாவை தட்டியபடி “புண்ணியவாளர்களைச் சுற்றி குப்பை சேரும்போல.”

“இக்கா, இங்கே புண்ணியவாளனுக்குரிய ஒரு சான்றும் இல்லை” என்று நான் சொன்னேன். “நீங்கள் இதைச் செப்பனிட்டு மறுபடியும் வாடகைக்கு விடலாம்”

“என் நாயர்குட்டி, இதை செப்பனிட நாளாகும். பார் சுதையெல்லாம் பெயர்ந்து விழுந்திருக்கிறது. இந்த வீட்டில் நான்கு ஆண்டுக்காலம் என்னென்ன கோலாகலம். குடி கும்மாளம். எப்போது பார்த்தாலும் பாட்டு, சிரிப்பு. அந்தப்பாட்டும் சிரிப்பும் சந்தோஷமும் இங்கிருந்து போகவேண்டும் என்றால் யாராவது மௌலவிக்கு நான்கு வருடம் வாடகைக்கு விடவேண்டும்” என்றார் இக்கா.

“ஆமாம், ஜான் மிக அற்புதமாக பாடுவார்” என்றேன்.

“பின்னே? கோழிக்கோடு அப்துல்காதரின் எல்லா கெஸ்ஸும் அவனுக்கு தெரியும். ஒரு கெஸ்ஸு பாடுவதற்கு இருபது ரூபாய். ஒரேநாளில் இருபது கெஸ்கூட பாடியிருக்கிறான்.” என்றார் இக்கா

“இக்கா, இந்த இருபது ரூபாயை யார் கொடுப்பது?” என்று படபடப்புடன் கேட்டேன்.

“நான்தான்… கோழிக்கோடு அப்துல் காதர் எழுதியவை நல்ல கெஸ்ஸு பாட்டுகள்தானே?”

“இக்கா, நாநூறு ரூபாயை ஒரே நாளில் கொடுத்தீர்களா?”

“என் நாயர்குட்டீ, எனக்கு தெரியுமா அந்த ஹராம்பிறந்தவன் ஒருநாளில் இருபது கெஸ்ஸுபாட்டை சகல பிடிகளுடனும் அப்படி பாடுவான் என்று?”

“ஐஸ்வரியமான வீட்டு உடைமையாளர்” என்று நான் அசீஸிடம் சொன்னேன்.

“அதைத்தான் அவனும் சொல்வான்” என்றார் இக்கா. “அவன் உண்மை சொல்லும் புண்ணியவாளன்!”

“அந்த நாநூறு ரூபாயில் இருந்து நூறுரூபாயை வாடகையாக தந்திருக்கலாமே இக்கா?”

“அதெப்படி? என்றார் இக்கா “இது வேறு கணக்கு. அவன் போனபிறகு மொஹாபத் ஓட்டல் கரீம் இவனும் இவனுடைய நரிக்கூட்டமும் தின்ற வகையில் ஆயிரத்தி எழுநூறுரூபாய் பாக்கி நிற்பதாகச் சொன்னான். அவனுடைய எல்லா பாக்கியையும் நான்தானே அடைத்தேன்?”

நான் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டேன். “ஆயிரத்தி எழுநூறு ரூபாயா இக்கா?”

“ஆமாம், ஏன் உனக்கு ஏதாவது பாக்கி நிற்கிறதா?”

“இக்கா!” என்றேன். மேற்கொண்டு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

“என்ன பாட்டு. என்ன ஆட்டம். அதோடு கதை விவாதம். என் நாயர்குட்டீ, எத்தனை கதைகள். அவர்கள் சொன்னதில் பாதியை சினிமாவாக எடுத்திருந்தாலே நூறுபடம் தேறியிருக்கும்” என்றார் இக்கா. “நடுவில் சினிமா விவாதம் வேறு. ஜான் ஒருநாள் சாபுவின் முகத்தில் ஒன்றுக்கு அடித்துவிட்டான். ஏன் என்று கேட்டேன். யாரோ ஒரு வெளிநாட்டு டைரக்டரை இவன் குறை சொல்லிவிட்டானாம்! என்னை பஞ்சாயத்து செய்ய சொன்னார்கள்.”

“எந்த டைரக்டர்?” என்றேன்

“அண்டோனியோனி, மைக்கேலாஞ்சலோ அண்டோனியோனி…” என்றான அசீஸ். “என்னிடம் ஜான் சார் சொன்னார்.”

“பர்க்கத்துகெட்டவனே, கெட்டவார்த்தையா சொல்கிறாய்?” என்றார் இக்கா.

“ஏன் அதற்கு ஒன்றுக்கடிக்கவேண்டும்?” என்றேன்.

“நாய் அப்படித்தான் செய்யும் என்று ஜான் சொன்னான். நாய் நன்றியுள்ளது அல்லவா, சொல்லுங்கள் இக்கா, மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் என்று சத்தம்போட்டான். எப்படி மறுக்கமுடியும்? ஆகவே நான் ஜான் செய்தது சரிதான் என்று நான் சொல்லி முடித்துவைத்தேன்.”

எனக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. இக்கா தீவிரமான முகத்துடன் சமரசம் செய்து தீர்ப்பு சொல்வதை நினைத்துப் பார்த்தேன். அடக்கவே முடியவில்லை.

“இந்த அறையை மூடிவைத்திருந்தான். உள்ளே சினிமாவுக்கான அவசியப்பொருட்கள் இருப்பதாகச் சொன்னான்” என்று இக்கா சொன்னார்.

“சினிமாவுக்கான பொருளா?” என்று நான் கேட்டேன்.

“இதோ பார்.”

வெளியே சிவப்புப் பெயிண்டால் ‘சினிமாவுக்கான கச்சாப்பொருட்கள் வைக்கும் இடம்’ என்று எழுதியிருந்தது.

“இங்கேதான் ஏதாவது முக்கியமான பொருளை வைத்திருப்பான்” என்றார் இக்கா.

“அசீஸும் சாட்சி” என்று நான் சொன்னேன். அசீஸ் தீவிரமான முகம் அடைந்தான்.

நான் கதவை தள்ளி திறந்தேன். உள்ளே ஒட்டடை, புழுதி வாடை. ஆனால் ஏதோ நாய் செத்து அழுகிய நாற்றம் அதை தூக்கி அடித்தது

கையால் முகத்தை துடைத்து துப்பியபின் நான் உள்ளே பார்த்தேன். என் இடுப்பளவு உயரத்திற்கு காலி மதுக்குப்பிகள் குவிந்துகிடந்தன. பல அளவுகளில் பலவகையான மதுக்குப்பிகள். இறுக மூடியவை, மூடாதவை. ரம், பிராந்தி, விஸ்கி குப்பிகள். பட்டைச்சாராயம் கொண்டு வரும் நிறமில்லாத நீண்ட குப்பிகள். பீரை ஜான் வெறுத்தார். அவை மணிகௌல் படங்களைப்போல என்றார். சாராயமாக நடிக்கும் கஞ்சித்தண்ணி.

“யப்பா… இவ்வளவுமா?” என்றேன்.

அசீஸ் “விற்றால் நூறுரூபாய்க்கு போகும்” என்றான்.

இக்கா வெளியிலேயே நின்றுவிட்டார் “இது நமக்கு ஹராமாக்கும்” என்றார்.

“இது வெறும் குப்பி இக்கா” என்றேன்

“ஆமாம், ஆனால் எல்லா குப்பியும் எவ்வளவு மொஞ்சுள்ளது… பார்த்தாலே ஹராம்” என்றார். “சொப்பனத்தில் வேறு வந்து தொலைக்கும் என்று தோன்றுகிறது.”

நான் குனிந்து அந்த புட்டிகளை எடுத்து பார்த்தேன். ஒரு குப்பியில் கொஞ்சம் நிறமில்லாத சாராயம் மிஞ்சியிருந்தது. அதை ஒரு குப்பியை திறந்து அதில் ஊற்றினேன். எரியும் மணம் எழுந்தது. நல்ல அசல் சாராயம்.

“என்ன செய்கிறாய்?” என்று இக்கா கேட்டார்.

“சும்மா” என்றேன்.

இக்கா “ஏதாவது இருந்தால் எடுத்துக்கொண்டு வா” என்று சொல்லிவிட்டு வெளியே போனார்.

குப்பிகளை திறந்து அந்த குப்பிக்குள் ஊற்றிக்கொண்டே இருந்தேன். பாதிக்குப்பி அளவுக்கு சாராயம் வந்துவிட்டது.

“என்ன செய்கிறீர்கள்?” என்று அசீஸ் கேட்டான்.

“இது ஒரு சடங்கு… இந்துக்களும் கிறிஸ்தவர்களும் செய்வது” என்றேன். “இறந்தவரின் ஆத்மா இங்கே வரும். பார்.”

“ஓ” என்று அவன் சொன்னான்.

“உன்னிடம் தீப்பெட்டி இருக்கிறதா?” என்றேன்

“இருக்கிறது. ஆனால் நான் சிகரெட் பிடிப்பதைக் கண்டால் இக்கா அடிப்பார். சிகரெட் நமக்கு ஹராம் என்கிறார்.”

“அவர் ஹூக்கா பிடிப்பாரே?”

“அது அரேபிய ஹூக்கா.”

நான் தீப்பெட்டியை உரசி பற்றவைத்து அந்த புட்டியின் விளிம்பில் வைத்தேன். குப் என்று நீலச்சுவாலை பற்றிக்கொண்டது. அந்தரத்தில் தழல் நின்று எரிந்து பின் புட்டியின் வாயில் நின்று எம்பி எம்பி ஆடியது

அதை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்ற நான் தீ இறங்கி வழிந்தோடியதைக் கண்டு திடுக்கிட்டு பின்னடைந்தேன். நீலநிற திரவம் போலச் சென்ற தீ காலியான புட்டிகளுக்குள் புகுந்தது. அவை டப் டப் டப் என்று வெடித்தன.

”அய்யோ சார்” என்றான் அசீஸ்.

நான் என்ன செய்வதென்று தெரியாமல் பின்னடைந்தேன். தீ அந்த குவியலின் மீது பரவி மேலெழுந்தது. நீலத்தழலுக்குள் புட்டிகள் வெடித்துக்கொண்டே இருந்தன.

அந்த தீ மேலெழுந்து வீட்டில் பரவாது என்று தெரிந்தபின் நான் ஆறுதலடைந்து அதைப் பார்த்துக்கொண்டு நின்றேன். புட்டிகள் வெடித்து வெடித்து உடைந்து கொண்டே இருந்தன. குமிழிகள் உடைந்து நுரை மறைவதுபோல அந்த புட்டிகளின் குவியல் நொறுங்கி சுருங்கி கீழமைந்து கொண்டிருந்தது.

அது தன்னைத்தானே உள்ளிழுத்துக்கொண்டு மடிவதை பார்த்து நின்றிருந்தேன். தீ சட்டென்று அணைந்தது. அங்கே உடைந்த கண்ணாடித் துண்டுகளின் குவியல் மட்டும் கிடந்தது. கரியோ புகையோ ஒன்றுமே இல்லை.

நான் பெருமூச்சுடன் “போவோம்” என்றேன்.

அசீஸ் தலையசைத்தான்.

நாங்கள் வெளியே வந்தோம். இக்கா முற்றத்தில் நின்று கூரையை பார்த்துக்கொண்டிருந்தார்.“என்ன செய்தீர்கள்?” என்றார்.

“இக்கா உள்ளே ஜின் இல்லை, ஒரு ஹூறி இருந்தாள்” என்றேன்.

“ஹூறியா?” என்றார் இக்கா. “அழகியா?”

“பேரழகி… நீலநிறமான கூந்தல். சிவப்புநிறமான உடல்… அவளுக்கு ஜான் சொர்க்கத்துக்குப் போன செய்தி தெரியவில்லை. அவளை ஒரு சிறிய சடங்கு செய்து மேலே அனுப்பினேன். ஜானிடம் போய்விடுவாள்.”

“அவனுடன் எப்போதும் அந்த மொஞ்சுள்ள ஹூறி இருந்தாள்” என்றார் இக்கா “ஏதாவது பொருள் மிஞ்சியதா?”

“ஒன்றுமில்லை இக்கா”என்றேன்.

“சாட்சிகளே இல்லாத புண்ணியவாளன்” என்று இக்கா சொன்னார். “அந்த கண்ணாடிச் சில்லுகளை வேறு அள்ளவேண்டும்.”

நான் அசீஸிடம் போகலாமா என்று தலையசைத்தேன். அவன் ஆம் என்று தலையசைத்தான்.

இக்கா வீட்டை அண்ணாந்து பார்த்து “பழைய வீடு.. பத்தாயிரம் ரூபாயாவது இல்லாமல் கையை வைக்கமுடியாது” என்றார்.

“நான் கிளம்புகிறேன் இக்கா” என்றேன்.

“சரி” என்றார் இக்கா.

அசீஸின் பைக்கின்மேல் நான் ஏறிக்கொண்டேன் “நடுநடுவே வந்துபோ நாயர்குட்டி… என்ன இருந்தாலும் ஒரு புண்ணியவாளன் தங்கிய பொந்து அல்லவா?” என்றார் இக்கா.

நான் புன்னகைத்து “வருகிறேன் இக்கா” என்றேன்.

***

முந்தைய கட்டுரைகழுமாடன்,சாவி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஓஷோ- மீண்டும் மீண்டும்