அன்னம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

அன்னம் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அதன் ஆழ்ந்த கவித்துவமான படிமம்- அன்னமே மானுடத்திரளும் அவர்கள் உண்ணும் உணவும் என்ற வரி- அதை கவிதையாக ஆக்குகிறது. ஆனால் ஒரு சந்தேகம் வந்தது. இந்தக்கதை யானைடாக்டர், கெத்தேல்சாயபு கதை போன்றவை eulogy போன்று ஆகிவிடுகிறதல்லவா? நவீன இலக்கியத்தில் இவற்றுக்கான இடம் உண்டா? இதை நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்

சிவராம்

***

அன்புள்ள சிவராம்,

போல என்ன eulogyயேதான். நவீன இலக்கியம் என்பதற்கு ஏதாவது வரையறை உண்டா என்ன? இருந்தால் அதை மீறுவதுதானே உடனே எழுத்தாளன் செய்யவேண்டியது? எதையும் எழுதலாம் என்பதுதான் நவீன இலக்கியம் உருவாக அடித்தளமாக அமைந்த மனநிலை. அந்த மனநிலையின்படியே வாழ்க்கையின் கீழ்மைகள், இருண்டமதிப்பீடுகள் எல்லாம் எழுதப்பட்டன. இன்று அதையே இலக்கணமாக ஆக்கி வாழ்க்கையின் கீழ்மைகள், இருண்டமதிப்பீடுகள் எழுதப்பட்டால்தான் நவீன இலக்கியம் என்கிறார்கள். எந்த ஒருசெயலும் ஏராளமானவர்களால் செய்யப்படும்போது, சற்றே காலப்பழக்கம் வரும்போது அது இப்படி ஒரு பொது இலக்கணமாக ஆகி, தேய்வழக்குகளக மாறுவது இயல்பானதுதான். ஆனால் படைப்பூக்கம் அதை கடந்தே செல்லும். இலக்கணங்களில் அது நிற்பதில்லை. இன்று விழுமியங்களை எழுதுவதே ஒரு அபாரமான மீறலாக மாறிவிட்டிருக்கிறது

Eulogyயை எழுதலாமா? எழுதலாம், அதை எழுதுபவன் எழுதப்படுபவன் அளவுக்கு அக்கதையில் உயரமுடிந்தால்- கதைக்குள்தான் எழுத்தாளனால் அது இயலும். நான் எழுதும் இம்மானுடர் கற்பனையானவர்கள் அல்ல. நான் அறிந்தவர்கள். அவர்களை எழுதலாம், எழுதவேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு வரவே இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அன்றும் இன்றும் என்றும் மாமனிதர்களைப் பாடுவது கலையின் இயல்புதான். கடமையும்கூட

எழுத்தாளனின் ஆணவம், தன்னுணர்வு எழுதவைக்கிறது. ஆனால் கலைக்குள் அது மடிந்து பணியும் இடமும் வந்தாகவேண்டும். எழுத்தாளன் தன்னை மிகச்சிறியவனாக உணரும் இடங்களில் இருந்தே மெய்யான அகத்தூண்டலை அடைவான். நான் அவ்வாறு அடைந்த பல மகத்தான மானுடர்கள் உள்ளனர். அவர்களை சந்தித்தேன் என்பது என் தகுதிகளில் ஒன்று. அன்னம் சாகிப் அவர்களில் ஒருவர்.

ஜெ

 ***

ஜெ. வணக்கம்!

ஹைத்தம் இப்ராஹிம் நூரைன் என்றொரு சூடான் பழங்குடியின காட்டரபியுடன் எனக்கு பழக்கம் இருந்தது. மூவாயிரம், நாலாயிரம் ரியால் சம்பாதித்த எளிய மனிதன். (வளைகுடா நாட்டின் குமாஸ்தாவுக்கான சிறிய சம்பளம், அப்பொழுது – அதாவது 1990-களில்)  தெருவில் கண்ணுக்குத் தட்டுப்படும் எதொவொரு பெங்காலி இல்லாமல் சாப்பிடமாட்டான்.

தஞ்சை ரெஸ்டார்ண்ட், மெட்ராஸ் மெஸ் என்ற ஓட்டல்களில் தமிழ் வார இதழ்களையும் விற்றுக் கொண்டிருந்தனர். அதேபோல அங்கு நம்மூர்க்காரர் ஒருவரை பல்தியா எனப்படும் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுடன் அடிக்கடி பார்ப்பேன். பெரும்பாலும் ஈழ அகதிகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். வேறு வேறு ஆட்கள், நாற்றம் பிடிக்கும் குப்பை லாரிகளில் பணிபுரியக்கூடியவர்களை வயிறார பசியாற்றுவதை தர்மம், கடமை என்றெல்லாம் பெரிய ஜோடனைகளற்று மிக இயல்பாக செய்துகொண்டிருந்தனர். வள்ளலாரும், ஜீவாவும் இவரின் ஆதர்சங்கள்.

பிரபஞ்சன் எழுதிய “பாயம்மா” என்று கதையொன்றுள்ளது. ரொம்பச் சாதாரண கதையது. “காஃபிர்களின் கதை” என்று கீரனூர் ஜாகிர்ராஜா தொகுப்பிலும் தனியாக வேறொரு பதிப்பகம் (அனேகமாக நற்றிணை) வெளியீடாகவும் வந்துள்ளது. தாகூரும், பாரதியும்கூட இவ்வாறு முஸ்லிம்களைப் பற்றி கதைகளை எழுதியுள்ளனர். தலைக்கெட்டு காதர், கெத்தெல் சாயுபு வரிசையில் அப்துல்ரஹ்மான் ஹாஜி வரிசை “முஃமின்களின் கதைகள்” என்பேன்.

நீங்க நல்லவரா? கெட்டவரா என்று “மும்பை – பம்பாய்” படத்தில் அலியிடம் குழந்தை கேட்கும், அரை சதம் ஆண்டுகள் கழிந்த பிறகும் நல்லவனா என்று எனக்கே தெரியவில்லை உறுதியாக, கெட்டவன் இல்லை என்று தோன்றுகிறது – நீங்களும்தான்.

தமிழ் சிறுகதை வரலாற்றில் “அன்னம்” முக்கியமான பதிவு. “சுபானல்லா” என்று மிகச் சரியான தருணத்தில் அப்துல்ரஹ்மான் ஹாஜி கூறியதையே வழிமொழிய வேண்டியதுதான். மிக்க நன்றி!

கொள்ளு நதீம்,

ஆம்பூர்

***

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

கடந்த சில வாரங்களாகவே முகநூலிலும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து உங்களைக் குறித்த எதிர்மறையான, கீழ்மையான வசைபாடல்களை அணுக நேரிட்டது. ஒருகட்டத்தில் மனம் சோர்வுற்று இவைகளுக்கெல்லாம் எப்படி எதிர்வினையாற்றுவது? தவிர்த்தலின் மெளனம் ஒப்புக்கொள்ளல் ஆகிவிடுமா? காயப்படுத்தும் சொற்களை எப்படி அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்? என ஏதோதோ யோசித்து ஒருவித கையறுநிலையிலும் இயலாமையிலுமே இருந்தோம். ஆனால், வெகு சாதாரணமாக போகிறபோக்கில் உங்கள் படைப்பின் ஒற்றைவரி, எங்கள் எல்லா நம்பிக்கையிழப்புகளையும் சரிசெய்து தட்டிக்கொடுத்து மீட்டுவிடுகிறது. காலம் அந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறது.

‘அன்னம்’ கதையினை எல்லோருக்குமான ஒரு பெரிய பதிலாகவே காண்கிறோம். இது வெறும் அர்த்தப்படுத்திக்கொள்ளல் அல்ல, சத்தியப்படிக்கு எங்கள் அகத்திலுணரும் மனவுண்மை. உங்களைத் தொடர்பவர்கள் தூற்றுபவர்கள் என அனைவருக்குமான பதில்களென்றே நீங்களெழுதும் கதைகள் வெளிப்படுவதை அறியமுடிகிறது. இக்கதை எங்களை அவ்வளவு சலனப்படுத்துகிறது, சமன்குலைக்கிறது! ஆச்சாரமான சடங்குகளை நம்புகிற ஒரு வைதிக பிராமணனும், நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கு தினமும் அன்னமிடுகிற இசுலாமிய பாய்க்கும் இடையே நிகழ்கிற இருதயவுரையாடல்களாக, அதன்வழி அமைகிற நட்புறவாக இக்கதையில் சித்திரிக்கப்பட்டுள்ள அவ்விருவரின் உறவுநிலை மீளமீள அன்னத்தை ஒரு தொன்மக்குறியீடாக எங்களுக்குள் ஆழப்பதிக்கிறது. அகம் என்பது எத்தனைபெரிய அன்னக்கலயம்!

ஹெப்பார் கிருஷ்ண பட் அவர்களின் குலநடைமுறைகளை சிறிதுகூட மீறிடாமல் அவரை அப்படியே ஏற்று அவருக்கான மரியாதையையும் உதவியையும் கறுத்தசாகிப் அள்ளியளிப்பதும், அத்தகைய ஆறடிதேகம் பக்கவாதத்தில் சாய்கையில் லைன்மேன் தருகிற கைமாறும் இக்கதையினை ஒரு நிகர்வாழ்வாக கண்முன் நிறுத்துகிறது. தூக்கமும் பசியும் இல்லாமலாகி கறுத்தசாகிப் கட்டிலில் வீழ்கையில் ஹெப்பார் பெருவண்ணானை அழைத்துவந்து மந்திரிக்கும் இடத்தில் இக்கதை வாழ்ந்துமறைந்த முன்னோர்களையெல்லாம் நினைவுக்கு கொண்டுவந்து அலைவுறுத்தியது. ‘சூன்யத்தால் தவிக்கும் ஆன்மா’ எதைக்கொண்டு நிறைவடையும் என்கிற தவிப்பு கிருஷ்ண பட்டை துளைத்தெடுக்கிறது.

‘அற்புதங்கள் தற்செயலென நிகழும்’ ஒரு அருங்கணத்தை நாமெல்லாம் நம் வாழ்வில் ஒருமுறையேனும் அடைந்திருப்போம். அத்தகைய பெருங்கண்டடைதல்தான், ஃபோன் வழியாக குரல்கள் கேட்டதும் கறுத்தசாகிப்பின் கண்கள் மலர்வது. ‘மனிதக்குரல் கேட்டாலே அவர் மலர்வதைக் கண்டேன்’ என்னும் வரிகள் ஒரு பெளத்தவனத்துக்குள் மனதை அழைத்துப்போகிறது.

ஒட்டுமொத்த கதைச்சரடாக இதை வாசிக்கையில் அடைகிற உளநெகிழ்வு ஒருபுறமெனில், இக்கதையில் வருகிற சில பத்திகளும் அதன் கருத்தாழங்களும் உடலை நடுநடுங்கச் செய்துவிடுகிறது. கதையாக சரளமாக நகர்கையில், ஒருகணம் நின்று நிதானித்து மனதுக்குள் காட்சிப்படுத்திப் பார்க்கையில் எத்தனை மானுடதரிசனங்களை இக்கதைவழியாக அகம் கடந்திருக்கிறது என்பது எங்களை பேச்சில்லாமலாக்குகிறது.

அதிலும் குறிப்பாக,

“அவர் எப்போதுமே இன்னொருவர் முன்னால் வைத்து எந்த கொடையும் செய்வதில்லை. பெறுபவர் குன்றிவிடுவார் என நினைப்பார். அது ஒரு ரகசியச் செயல்பாடாகவே நடக்கும். பெற்றுக்கொள்பவனே சொன்னால்தான் உண்டு…”

“மனிதர்கள் சாப்பிடுவது ஒரு யாகமாக நிகழமுடியும் என்று அப்போதுதான் பார்த்தேன். நான் பல யாகங்களை பார்த்திருக்கிறேன்…”

“அன்னம் அன்னத்தை கண்டுகொள்கிறது, அன்னம் அன்னத்துடன் இணைகிறது, அன்னம் அன்னத்தால் நிறைகிறது. பூமி மீது இருக்கும் எல்லா உயிரும் சேர்த்து ஒரே அன்னம்தான்…”

“ஒரு ஐந்துவயது பெண் ஒருவயது தம்பிக்கு ஊட்டியதை பார்த்தேன். வெளியே வந்ததும் அதன் காலைத்தொட்டு வணங்கி “புவனராணியான அன்னபூரணியே, இந்த உலகத்தில் பசியை அணைத்துக்கொண்டே இரு தாயே” என்று சொல்லி கண்ணீர்விட்டேன்…”

“ஆமாம், ஆனால் குரல்கள் ஆத்மாவின் பகுதிகள். நத்தை ஊர்ந்துபோகும்போது அதன் ஒரு பகுதிதான் ஒளிவிடக்கூடிய தடமாக ஆகிறது. அதுதான் சைதன்யம் என்பது…”

இத்தகைய வரிகளை வாசித்து மீள்கையில், ஒரு படைப்பு என்பது எல்லாவற்றுக்குமான எதிர்வினையாக இல்லாமல் எல்லாவற்றையும் கடந்த ‘பதிலாக’ இருப்பதை நாங்கள் சிறுதயக்கமுமின்றி ஏற்றுக்கொண்டோம். காழ்ப்பின் சீழண்டாத வீழாச்சொல் இது! மணிமேகலை பாத்திரம் பெற்ற காதை “அறம் கரியாக அருள்சுரந்து ஊட்டும் சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது” எனச் சுட்டுவதைப்போல ‘அறத்திற்கு சுரக்கும் பேரன்னமாக’ இக்கதைகள் “தான்தொலைவு இல்லா ஆருயிர் மருந்தென” எங்கள் அகப்பசியாற்றுக!

திண்டுக்கல் காந்திகிராமில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாற்று நூலான ‘சுதந்திரத்தின் நிறம்’ நிகழ்வினில், கண்பார்வையற்ற ஒரு வயோதிகர் வள்ளலார் பாடலைப் பிரார்த்தித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இருபது வருடங்களாக அவர் விழிகளுக்குப் பார்வையில்லை. தனது விழியையிழந்த நாளிலிருந்து, மக்களிடம் தேடிச்தேடிச் சென்று அரிசி, பருப்பு யாசகம் வாங்கி அன்னதானம் செய்வதைத் துவங்கியவர், இன்னமும் அன்னமளித்தலை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். இந்த நோயச்சகாலத்திலும் அவருடைய அன்னக்கருணை நின்றுவிடவில்லை, அருட்பெருஞ்சோதி அவருடைய அகத்தில் அணையாமலெரிகிறது.

நம் மண்ணில் வந்துதித்த அப்படியான அன்னமனிதர்களையும், அவர்களுடைய புண்ணியவாக்கினையும் நெஞ்சிலேந்தி உங்களுக்கும் உங்களுடைய படைப்பான்மாவுக்குமான இறைவேண்டலை, அணையாஅடுப்பின் அன்னவெளியில் முன்வைக்கிறோம்.

நன்றிகளுடன்,

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி

புளியானூர் கிராமம்

***

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைராஜன்,மலையரசி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]