கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]

கதிர்மங்கலம் வீட்டு பெரியநாணு நாயர் ஒட்டன் சுக்ரனுடன் சென்று, திற்பரப்புக்கு அப்பால் களியல் கடந்து பன்றிமலை அடிவாரத்தில் குடில்கட்டி குடியிருந்த காணிக்காரன் துடியன் குறுக்கனிடமிருந்து ஒரு பசுவை வாங்கிவந்தார். அந்தப்பசுதான் ஊரில் பிற்காலத்தில் அம்மச்சிப்பசு என்று பெயர் பெற்று கதைகளில் அழியாமல் வாழ்ந்தது.

அன்றெல்லாம் இங்கே பசுமாடுகள் மிகக்குறைவு, பாண்டிநாடுபோல மாடுமேய்ப்பதற்கான விரிவான நிலங்கள் இங்கே இல்லை. ஊர் என்பது  ஆண்டெல்லாம் மழைபெய்யும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டது. அவற்றை வெட்டி தெளிவித்து உருவாக்கப்பட்ட பள்ளமான வயல்கள். அவற்றில் ஆறுமாதம் கைவைக்காவிட்டால் கோரை மண்டி காடாகிவிடும். மேடான இடங்களில்தான் வீடுகள். எஞ்சிய இடங்களிலெல்லாம் தண்ணீரும் சேறும் சதுப்பும்தான்.

காட்டுக்குள் போன பசு திரும்பி வருவது அரிது. புலியையாவது சமாளிக்கலாம் கூட்டம்கூட்டமாக அலையும் செந்நாய்கள் மிக ஆபத்தானவை. சொல்லப்போனால் தொழுவங்களிலேயே நாய் காவல் இல்லாமல் பசுக்களை செந்நாய்களிடமிருந்து காப்பாற்ற முடியாது. வீட்டில் தூங்குபவர்களுக்கு ஓசையே கேட்காமல் வளர்ப்புநாய்களையும் தின்று தொழுவில் நின்ற பசுக்களையும் தின்று வெள்ளெலும்புகளை மட்டும் விட்டுச்சென்ற செந்நாய்க்கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்தது. அதை நஞ்சிட்டு கொன்றனர்.

பசுக்களை வீட்டுக்குள் விட்டுத்தான் வளர்க்கவேண்டும்.  அதற்கு சொந்தமாக வைக்கோல் வேண்டும். நின்றுபெய்யும் மழைக்காலத்தில் புல்பறிக்க முடியாது. புல்செறிந்த இடங்களில்தான் பாம்புகளும் செறிந்திருக்கும். ஆகவே மழைக்காலம்  முழுக்க வைக்கோலிலேயே பசு வாழவேண்டும். வைக்கோல்போர்கள் இருப்பவர்களுக்கே பசுவும் எருமையும் வளர்ப்பது சாத்தியம். அதற்கு வயல்கள் சொந்தமாக இருக்கவேண்டும். வயலிருந்தால் அதை உழுது விளைவிக்க கடாஎருமைகள் வேண்டும். அவற்றுக்கு தீனி கொடுத்தது போகத்தான் பசு வளர்க்க முடியும்.

மொத்தத்தில் அந்தக்காலத்தில் பசுக்கள் பெரியவீடுகளின் தொழுவங்களில் அம்மை மகாராணிகளைப்போல வாழ்ந்தன. அவை கருவுற்றிருக்கையிலும் பால்கறக்கையிலும் கெட்ட பார்வைகளுக்குமுன் காட்டமாட்டார்கள். ஆகவே ஊரில் பெரும்பாலானவர்கள் பசுக்களை சரியாக பார்த்திருக்கக்கூட வாய்ப்பில்லை. பசுக்களும் மனிதர்களை குறைவாகவே பார்த்தன. ஆகவே அவை பதற்றம் மிக்கவையாகவும், சிலிர்த்துக்கொண்டும் உருட்டிவிழித்துக் கொண்டும் பெருமூச்சுவிட்டுக் கொண்டும் இருப்பவையாகவும் இருந்தன.

அன்றெல்லாம் டீ காப்பி குடிக்கும் வழக்கம் இல்லை. பால் ஓர் அன்றாடத்தேவை இல்லை. குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் உரிய ஒரு பானமாகவே பால் கருதப்பட்டது. முதிர்ந்தவர்கள் கிடைத்தால் மோர் சேர்த்துக்கொண்டனர். பசு இருக்கும் இல்லங்களில் மட்டுமே உணவு மோரில் முடித்து வைக்கப்பட்டது, அது ஒரு கௌரவமாகக் கருதப்பட்டது. வீட்டுக்கு எவரேனும் வந்தால் “கொஞ்சம் மோர்சம்பாரம் எடுக்கட்டுமா?” என்று கேட்பவர்கள் பெரியகுடும்பத்தினர் என்று புகழ்பெற்றார்கள்.

ஊரில் பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகள் முலைப்பாலிலேயே வளர்ந்தன. அதிலிருந்து நேராக கஞ்சித்தண்ணீருக்குச் சென்றன. ராணி கௌரி பார்வதிபாய் ஆட்சிக்கு வந்தபோது சாதிகள் அனைவரும் பசுக்களை வளர்ப்பது ஊக்குவிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது சொறிசிரங்குகளை இல்லாமலாக்கும் என்றும், மாந்தம் நெஞ்சுக்கூடு போன்ற நோய்களை குறைக்கும் என்றும் அரசு சார்பில் முரசறைந்து விளம்பரம் செய்யப்பட்டது.

அக்காலத்தில் பிறந்த குழந்தைகளில் பெரும்பகுதி முதல் மழைக்காலத்திலேயே வயிற்றுப்போக்கில் இறந்தன. மக்களைக் கண்டும் மாம்பூ கண்டும் மானுடர் யாரும் மகிழவேண்டாம் என்ற பழமொழி புழக்கத்தில் இருந்தது. குழந்தைகளின் சாவை குறைக்கவேண்டும் என்று மகாராணி கௌரி பார்வதிபாய் கவலைகொண்டார். ஆகவே மார்த்தாண்டம் உள்ளிட்ட பதினேழு இடங்களில் அரசுநிலம் ஒதுக்கி காளைச் சந்தைகளை அமைத்து பாண்டிநாட்டிலிருந்து நல்ல காளைகளும் பசுக்களும் திருவிதாங்கூருக்குள் வர ஏற்பாடு செய்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஊரில் பசுக்களின் எண்ணிக்கை பெருகின. பசும்பாலை குழந்தைகளுக்கு கொடுக்கலாமென்ற நிலை வந்தது. காய்ச்சாத பாலை எந்த சாதியினரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம், அது தீட்டு அல்ல என்று பிராமணர்கள் அரசாங்கத்தால் சொல்ல வைக்கப்பட்ட பிறகு ஏழை மக்கள் பசுக்களை வளர்த்து பாலை விற்கமுடியும் என்னும் நிலையும் வந்து சேர்ந்தது.

இக்காலகட்டத்தில்தான் கதிர்மங்கலம் வீட்டில் ஒரேசமயம் ஒன்பது பெண்கள் பிள்ளை பெற்றார்கள். அவர்களில் மூத்தவளாகிய தேவகியம்மைக்கு நாற்பது வயது. மிக இளையவளாகிய குஞ்சுகுட்டிக்கு வயது பதினேழு. குழந்தைகள் பதினைந்து நாள் இடைவேளையில் பிறந்தன. இரண்டுபேர் இரட்டைக் குழந்தைகள் பெற மொத்தம் பதினொரு குழந்தைகள்.

பெரியநாணு நாயர் ஒரு பசுவை வாங்க முடிவுசெய்தார். ஒட்டன் சாமனிடம்  “நல்ல பசு இருந்தால் சொல்லுடா” என்றார்.

“மார்த்தாண்டம் காளைச்சந்தைக்கு போனா நல்ல பாண்டிப்பசுக்களை வாங்கலாம்” என்று ஒட்டன் சாமன் சொன்னான்.

“ஆனா அந்தப்பசுக்கள் இந்த ஊருக்க மழையிலே கால்வாதம் வந்து படுத்துப்போடும் பாத்துக்க. அதுகளுக்கு இங்கே உள்ள ஈயும் பூச்சியும் ஒத்துக்கிடுகதில்லை. கண்பழுப்பு தீனமும் குளம்பு நோயும் வந்திருது. நமக்கு நல்ல உள்ளூர் பசுதான் வேணும். இந்த மலைப்பகுதிகளிலே பிறந்த பசுவா இருக்கணும்” என்றார் பெரியநாணு நாயர்.

“அந்த மாதிரி பசுக்களை பாக்கலாம். ஆனால் இந்த நாட்டிலே பிறக்குத பசுவெல்லாம் அகிடு ஒட்டி கெடக்கும். நாழிப்பால்கூட கறக்குறதில்லை” என்றான் ஒட்டன் சாமன்.

“அது சரியா வராது. எனக்கு நாநாழி பாலாவது வேணும். எண்ணி பதினொண்ணு குழந்தைகள்டே. அதுகளுக்க அம்மைமாருக்கும் பால்கொடுக்கணும்”

“அதெப்படி தம்புரானே, ரெண்டும் சேந்து போகுமா என்ன?” என்றான் ஒட்டன் சாமன்.

அவன் போனபின் அவனுடன் வந்த ஒட்டன் சுக்ரன் திரும்பி வந்தான். பெரியநாணு நாயரிடம் “தம்புரான் கேட்டது போலவே ஒரு பசு இருக்கு. நல்ல நாட்டுப்பசு. காட்டிலேயே பிறந்து வளந்தது. ஆனா அறுநாழி பால் கறக்கும்” என்றான்.

“அறுநாழி பாலா? உள்ளூர் பசுவா? என்னடா சொல்லுதே?”

“நான் ஒரு பேச்சுக்குச் சொல்லுதேன். அறுநாழிப்பாலைக் காட்டிலும் கூடவே கறக்கும்… நான் பசுவை கண்ணாலே பாத்தேன். களியலுக்கு அப்பால் மலையடிவாரத்தில் ஒரு காணிக்காரன் அந்தப் பசுவை வளக்கிறான்.”

“விப்பானா?” என்று பெரியநாணு நாயர் ஆவலுடன் கேட்டார். “என்ன கேப்பான்?”

“ஆமா, அந்தூரிலே பால் யாருக்கும் தேவையில்லை. அதனால ஒரு லாபமும் இல்லை. அந்தப்பசுவை அவன் காட்டிலே இருந்து கன்னுக்குட்டியா பிடிச்சுக் கொண்டுவந்து வளக்குதான். அவனுக்கு நம்மூர் வெலையெல்லாம் தெரியாது. தொகையைச் சொன்னா பணத்தை ஊகிக்க அவனாலே முடியாது. பணத்தை கண்ணில் காட்டிட்டே பேசணும். வெள்ளிப்பணமாட்டு எடுத்துக்கிடுங்க. ஒவ்வொரு பணமா கூட்டிட்டே போனா ஒத்துக்கிடுவான்.”

பெரியநாணு நாயர் எவருக்கும் தெரியாமல் ஒட்டன் சுக்ரனுடன் கிளம்பி களியல் அருகே பன்றிமலைக்குச் சென்றார். துடியன் குறுக்கன் காணி தன்னந்தனியாக காடோரம் குடில்கட்டி வாழ்ந்து வந்தான். அவனுக்கு மனைவி குழந்தைகள் எவருமில்லை. காட்டிலிருந்த மாதி, குளிகன், கடுத்தா போன்ற தெய்வங்களின் பூசாரி அவன். அவற்றை தன் குடில் அருகே ஒரு தனிக்கொட்டகையில் மண்மேடையில் கல்லுருவங்களாக நிறுவியிருந்தான். காணிக்காரர்களும் அவ்வப்போது மற்றவர்களும் அவனைத் தேடிவந்து வணங்கி அங்கே பூஜையும் மந்திரவாதமும் செய்துவிட்டுச் சென்றார்கள்.

இன்னொரு சிறுகொட்டகையில் நின்றது அந்தப்பசு. அதைப் பார்த்ததுமே பெரியநாணு நாயர் திகைத்துவிட்டார். அதன் அகிடு பெருத்து தொங்கி காம்புகள் தரை தொடுமளவு தழைந்திருந்தன. சராசரி பசுவை விட அரைமடங்கு பெரிய உடம்பு. காளைக்குரிய தடித்த பெரிய கொம்புகளும் சற்று பக்கவாட்டில் தொய்ந்த பருத்த திமிலும் கொண்டிருந்தது. அவர்களை கண்டதும் விழிகளை மட்டும் உருட்டி பார்த்து நீள்மூச்செறிந்தது. மிரளவோ சிலிர்ப்பு காட்டவோ இல்லை. மற்ற பசுக்களைப்போல கால்மாற்றி நிற்கக்கூட செய்யவில்லை.

துடியன் காணி அதை விற்கும் மனநிலையில்தான் இருந்தான்.  “என்னாலே இதுக்கு புல் அறுத்துப் போடமுடியல்லை. காட்டுக்குள்ள மேயக்கொண்டு போறதுக்கும் பொழுதில்லை. இது அறுப்புக்காலம். நிறைய பேரு சாமி கும்பிட வந்திட்டிருக்கானுக” என்று அவன் சொன்னான். “இங்கே காணிக்காரனுககிட்ட இதை விக்கப்பாத்தேன். இம்பிடு பெரிய பசு என்னத்துக்குன்னு சொல்லுதானுக. இவனுகளுக்கு பசுவை வளக்கத்தெரியாது. திரும்ப காட்லே வெரட்டிப் போடலாம்னு நினைச்சேன்”

அவனே விலையை குறைப்பதற்கான எல்லாவற்றையும் சொல்லிவிட்டதனால் இரண்டு வெள்ளிப்பணத்தில் வியாபாரம் முடிந்தது. உண்மையில் ஒரு வெள்ளிப்பணமே போதும். ஆனால் பெரியநாணு நாயர் உளம் கனிந்து அவரே இன்னொரு வெள்ளிப்பணத்தையும் கொடுத்தார் துடியன் காணியின் முகம் மலர்ந்துவிட்டது.

பசுவின் கன்று செத்துவிட்டது, ஆனால் பால் கறக்கும் என்று துடியன் காணி சொன்னான்.

“வைக்கோல் கன்னுக்குட்டி வேணுமா?” என்று பெரியநாணு நாயர் கேட்டார்.

“வேண்டியதில்லை. வெறும் கையால் கன்னுட்டி மாதிரி முட்டினாலே போரும்” என்று அவனே முட்டிக் கறந்து காட்டினான்.

அங்கிருந்து பசுவை ஓட்டிக்கொண்டு வந்தனர். சாரல் மழை அடித்துக் கொண்டிருந்தது. மையப்பாதை வழியாக வந்தால் பசுவை பலர் பார்த்து கண்வைக்க நேரிடும் என்று குறுக்காக மலை ஏறி இறங்கும் காட்டுப்பாதையில் வந்தனர். ஒட்டன் சுக்ரன் பசுவை அழைத்துவந்தான். பெரியநாணு நாயர் குடையுடன் முன்னால் நடந்தார்.

அத்தனை பெரிய அகிடுடன் பசு மலையேறி இறங்குமா என்ற சந்தேகம் பெரியநாணு நாயருக்கு இருந்தது. “பாப்போம், நுரை தள்ளினா வழியில் எங்காவது தங்கலாம்” என்றான் ஒட்டன் சுக்ரன்.

ஆனால் பசு எந்த களைப்பையும் காட்டவில்லை. வழியில் புல்மேயவும் தண்ணீர் குடிக்கவும் அவர்கள்தான் அதை நிறுத்தவேண்டியிருந்தது. வழக்கமாக பசுக்களுக்கு உள்ள ஓசைகள் எதுவும் அதனிடம் இருக்கவில்லை.

மலை ஏறி இறங்கிய பின்னரும் அது மூச்சிரைக்காததைக் கண்டு பெரியநாணு நாயர் “இதென்னதுடே அசுரப்பிறவியா இருக்கு? மூச்செளைக்கவே இல்லை. நமக்கே தெவங்குதே?” என்றார்.

“காட்டுப்பசுவாக்கும்… காட்டிலே அது நடக்காத நடையா?” என்று ஒட்டன் சுக்ரன் சொன்னான்.

“இல்ல, ஒரு சந்தேகம். குட்டி செத்துப்போன பசு இப்டி அகிடு வீங்கி கறக்குமாடே?” என்று பெரியநாணு நாயர் மீண்டும் கேட்டார்.

“நாட்டுப்பசு கறக்காது. இது காட்டுப்பசுவாக்கும். காட்டிலே என்னன்னு நாம எங்க கண்டோம்?” என்று ஒட்டன் சுக்ரன் சொன்னான்.

“இருந்தாலும்டே…” என்றார் பெரியநாணு நாயர் அதை உற்று நோக்கியபடி “இன்னொண்ணு கவனிச்சியா? அது நம்மளை பாக்குறதே இல்லை. வேற எதையோ பாக்குத மாதிரி இருக்கு”

“ஓரோண்ணா சொல்லிட்டே இருக்காதீங்க”.

வழியில் அவர்கள் ஓர் இடத்தில் ஓய்வெடுத்தனர். பசு மேய்ந்துகொண்டிருந்தது. சட்டென்று பெரியநாணு நாயர் எழுந்துவிட்டார். “டேய், டேய்!”

“என்ன தம்பிரானே?”என்றான் ஒட்டன் சுக்ரன்.

“இது மேய்ஞ்சிட்டிருந்தப்ப ஒரு எலி குறுக்காப் போச்சுடே. சட்டுன்னு நாக்கால பிடிச்சு முறுக்கு திங்கிற மாதிரி தின்னுப்போட்டுது”

“அது செனைப்பசுக்களும் கறவைப்பசுக்களும் திங்குததுதான்… அதுகளுக்கு நல்ல புண்ணாக்கு வேணும். இல்லேன்னா அப்டி திங்கும்… எருமை குருதை எல்லாமே மாமிசம் திங்கும்.நத்தை வெட்டுக்கிளீன்னு பிடிச்சு மென்னு முழுங்கும். தெரியல்லேன்னா சும்மா வாருங்க.”

அவர்கள் அந்தி இருள்வது வரை காட்டில் காத்திருந்தனர். ஊர் சற்று அடங்கியபின் மெல்ல பசுவை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

வீட்டில் வளர்ந்த கருப்பு நாய் மணி பசுவைக் கண்டதும் அலறி கூச்சலிட்டது. வாலை தாழ்த்தியபடி வீட்டு வளாகத்திற்குள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

“என்ன இது, பசுவையே கண்டதில்ல போல” என்றான் ஒட்டன் சுக்ரன்.

“பசுவைக் கடிச்சு கிடிச்சு வைக்கப்போவுதுடே” என்றார் பெரியநாணு நாயர் “ஏட்டி நாயைப்பிடி!”

ஆனால் மணி சட்டென்று விம்மி அழுதபடிச் சென்று வீட்டின் பின்பக்கம் சாம்பல்குழிக்குள் படுத்துவிட்டது. அங்கே கிடந்து விசும்பியது.

தொழுவத்துப் காளைகளும் எருமைக்கடாக்களும் இளம்பசுக்களும் பயந்தவைபோல காலெடுத்து வைத்தன. கட்டுக்கழுத்தை இழுத்து திரும்பி தலைதாழ்த்தி விழியுருட்டி பெருமூச்சுவிட்டன. உடல்சிலிர்த்து சிறுநீர் கழித்தன.

தொழுவுக்குள் நுழைந்த பசு வெறிகொண்டு வைக்கோலை தின்னத்தொடங்கியது.

“நல்ல பசி”என்றார் பெரியநாணு நாயர்

“அது பின்ன இருக்காதா? கறவைப்பசுவுக்க பசி மூணுமடங்காக்கும்” என்றான் ஒட்டன் சுக்ரன்.

கூலிவாங்கிக்கொண்டு ஒட்டன் சுக்ரன் சென்றான். பெரியநாணு நாயர் தொழுவத்தில் அமர்ந்து பசுவையே பார்த்துக் கொண்டிருந்தார். அத்தனை பெரிய அகிடு. ஒரு பெரிய செம்புக்கலம்போல. நான்கு காம்புகளும் புடைத்து நீண்டிருந்தன. சொன்னதுபோல ஆறுநாழி பால் கறக்குமா என்ன?

ராதா உள்ளிருந்து  வந்து “என்ன இது? பசுதானே? என்னமோ யானையை வாங்கிக்கொண்டு வந்ததுபோல ஒரு தோரணை?” என்றாள்.

“போடி உள்ளே” என்று அவர் கையை ஓங்கினார். “நாளைக்கு இதில் ஒரு துளி பாலோ நெய்யோ நீ தொடக்கூடாது.”

“ஆமா சொல்லுங்க. இங்க பாலு குடிக்க மட்டும் பதினொண்ணு பிள்ளைவாய், ஒன்பது தள்ளைவாய். அதுக்குப்பிறகு பாலாவது ஒண்ணாவது…”

அவருக்கும் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. அறுநாழி கறந்தால் பிரச்சினையே இல்லை. ஆனால் அறுநாழி கறக்கும் நாட்டுப்பசு என்று கேள்விப்பட்டதே இல்லை.

மறுநாள் கறப்பதற்காக கோமனை வரச்சொல்லியிருந்தார். அவர் காலையிலேயே எழுந்து புன்னைக்காய் எண்ணை விளக்கை கொளுத்தி வைத்துக்கொண்டு அவன் வருவதற்காகக் காத்திருந்தார். சாரல் மழை இருந்தது.

மின்னல் வெளிச்சத்தில் தலைக்குடையுடன் கோமன் வந்தான். “ஒரு பசுவுக்காக இந்த தூரம் மழையிலே வரவேண்டியிருக்கு” என்றான்.

“உனக்கு என்னடே சம்பளம்?” என்றார்.

“பசுவுக்கு மாசம் ஒரணா” என்றான் கோமன்.

“செரி, நீ இங்க பாலுக்குன்னு கணக்கு வச்சுக்கோ. நீ கறக்குத பத்துநாழி பாலுக்கு ஒரு ராசிப்பணம்… என்ன?”

“அதெப்பிடி?”

“அப்பதான் நீ ஒட்டக்கறப்பே… இது பசு பெரிசு. நீ பாதி தொட்டு விட்டுப்போனா மடி பழகிரும். பிறவு பாலு திரும்ப உள்ளபோயி ரத்தமா ஆயிடும்.”

அவன் கணக்கிட்டு பார்த்து  “செரி” என்றான்.

அவன் கறக்கும்போது பெரியநாணு நாயர் மர உரலை திருப்பிப்போட்டு அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

“பாலுகறக்கிறப்ப பாக்கப்பிடாது, குறையும்” என்றான் கோமன்.

“தெரியும்டே, பாக்கல்லேன்னா உன் கைபட்டு கூடும்” என்றர் பெரிய நாணு நாயர் “அந்த வேலை கையிலெ இருக்கட்டும்… கற”

”குட்டி இல்லேன்னா பெரிசா கறக்காது… ஒரு வைக்கோல்குட்டியாவது வேணும்” என்று சொன்னபடி கோமன் செம்பை எடுத்தான்.

“சும்மா முட்டிட்டு கறந்தாப்போரும்னு சொன்னான்” என்றார் பெரியநாணு நாயர்.

கோமன் முட்டிமுட்டி மடியிளக்கிவிட்டு முதல் காம்பைப்பற்றி கறந்தான். ர்ர்ர்ர் என்ற ஓசை கேட்டு அவனே திகைத்துவிட்டான். கண்ணெதிரே தூக்கி பார்த்தான். பால்தானா என்று.

“ஏண்டே?”

“தம்புரானே, இதென்ன? கையை வைக்கல்ல, அப்டியே கொட்டுது”

“டேய் அங்க பாரு, நாலு காம்பிலயும் கொட்டுது”

“ஆமா, அந்த ஏனத்தை எடுங்க… சீக்கிரம்”

அதற்குள் தொழுவத்தில் தரையெங்கும் பால். ஏனம் வைக்கப்பட்டதும் அதில் நான்கு வெண்ணிறக் கம்பிகளாக பால் விழுந்தது.

“தம்புரானே, இன்னொரு பெரிய ஏனம் எடுத்திட்டுவாங்க”

“அறுநாழி கறக்குமாடே?”

“இப்பமே நாலுநாழி ஆயாச்சு”

பெரியநாணு நாயர் ஓடிப்போய் ஏனத்தை எடுத்துவந்து வைத்தார். முதல் ஏனமே நான்குநாழி. அடுத்ததும் நிறைந்தது. எட்டுநாழிப் பாலா? ஒரு பசுவிலிருந்தா. பசுதானா அது?

கோமனே பிரமித்துப் போயிருந்தான். அடுத்த ஏனம் வைத்தபோது பால் கொட்டுவது நின்றது. அவன் அதை கறந்தான். முட்டிமுட்டி கறந்துகொண்டே இருந்தான். மீண்டும் ஒரு ஏனம் நிறைந்தது. பன்னிரண்டு நாழி.

“இன்னும் கொஞ்சம் வரும்… ரெண்டுநாழியாவது”

“இரு” என்று அவர் செம்பை கொண்டுவந்து கொடுத்தார். அதுவும் நிறைந்தது.

கோமன் “சாயங்காலம் நாலுநாழி கறக்கும்” என்றான். “நான் வாறேன். கறந்து தாறேன்.”

“நீ எங்க கறந்தே? கையை வச்சே.”

“தம்புரானே வாக்கு வாக்காக்கும்… பாலுக்கேத்த பணம்.”

“செரிடே”

வீட்டுப்பெண்களெல்லாம் வந்து கறந்து வைத்த பாலைச் சுற்றி திகைத்து நின்றனர். பாகீரதி அக்கச்சி “டேய், என்னடே இது. இது பசுவாடே?” என்றாள்.

“இது என்னமோ மலைதெய்வம்… வேண்டாம் கேட்டியா? இந்த பாலு நமக்கு வேண்டாம்” என்றாள் ராதா.

“நீ சும்மா கெடடி” என்றார்.

காளிப்பிள்ளை அம்மச்சி “டேய், எதுக்கும் கணியானை விளிச்சு ஒரு பலன் கேளு… அவரு சொன்னதை வச்சு முடிவெடுப்போம்” என்றாள்.

அது அனைவருக்குமே சரி என்று தோன்றியது. கணியான் குமாரனை வரவழைக்க ஆளனுப்பினார்.

ராதா “இங்க என்ன நடந்ததுன்னு சொல்லவேண்டாம். அவனே கணிச்சு சொல்லட்டும்” என்றாள்.

“ஆமா, என்ன சொல்லுதான்னு பாப்பமே” என்றாள் பாகீரதி அக்கச்சி.

“கணியானை சோதிக்கிறது பாவமாக்கும்” என்றாள் சுபத்ரை அக்கச்சி.

கணியான் குமாரன் வந்து முகப்புத்திண்ணையில் அமர்ந்து கவிடி நிரத்தி பிரஸ்னம் வைத்து பார்த்தபின் முகம் மலர்ந்து “மகாலட்சுமியாக்கும் வந்திருக்கு. புதையல் கிட்டலாம். புதிய நிலம் கைக்கு வரலாம். மங்கலமா பெண்ணு வீட்டுக்கு வரலாம்…” என்றார். “நிறைஞ்ச பாக்கியம்… போன ஒருவாரமும் இனி வாற ஒருவாரமும் லக்ஷ்மிகடாட்சத்துக்கு உள்ளதாக்கும்”

“ஒரு வரவு உண்டு” என்று பெரியநாணு நாயர் சொன்னார். விஷயத்தைச் சுருக்கமாகச் விவரித்தார்.

கணியான் மீண்டும் கணித்து  “ஆமா, காட்டுறது அப்டித்தான். வந்திருக்கப்பட்டது சாட்சாத் துர்க்காலக்ஷ்மி. துர்க்கையும் லட்சுமியும் ஒன்றானவள். கொஞ்சம் உக்ரமூர்த்தியாக்கும். க்ஷிப்ரபிரசாதி, க்ஷிப்ரகோபி. அதனாலே பாத்து நடந்துகிடணும்.”

“என்ன செய்யணும் கணியாரே?” என்று காளிப்பிள்ளை அம்மச்சி கேட்டாள்.

”இவ்ளவு பாலுகுடுக்குதுன்னா அது குடும்பத்துக்கு மட்டுமில்லை. ஊருக்கும் சேத்தாக்கும். குடும்பத்துக்கு அவசியமான பாலை எடுத்துக்கிட்டு மிச்சத்தை ஏழைப்பட்ட பிள்ளைகளுக்கு குடுத்திடுங்க. விக்கப்பிடாது. ஒரு பிரதியுபகாரமும் எதிர்பார்க்கக்கூடாது” என்று கணியார் சொன்னார் “துர்க்கைன்னா தனியா வராது, பூதபிரேதாதிகள் கூடவே இருக்கும். அதிலே ஏதாவது பிசகு நடந்தாக்கூட தானதர்ம புண்ணிய பலனாலே நமக்கும் ஊருக்கும் ஒண்ணுமே ஆகாது. புண்ணியபலன் பெருஞ்சொத்து… சேத்து தலைமுறைகளுக்கும் குடுக்கலாம்.”

அன்று கறந்தபாலில் அறுநாழிப்பாலை எடுத்துவிட்டு மிச்சத்தை கோயிலுக்கு கொண்டுபோய் அபிஷேகத்திற்கு கொடுத்தார் பெரியநாணு நாயர். அன்றுமாலை கோமன் வந்து மீண்டும் நான்குநாழி பால் கறந்தான்.

கோயிலில் போற்றியிடம் சொல்லி ஆசாரிக்குடி, கொல்லக்குடி உட்பட எல்லா கரைகளிலும் பிள்ளை இருப்பவர்கள் தர்மப்பால் வாங்க வரும்படி சொன்னார். மறுநாள் காலையில் வீட்டுமுகப்பில் நூறுபேருக்குமேல் கையில் மரக்குவளைகளுடன், இடுப்பில் குழந்தைகளுடன் வந்து நின்றார்கள்

“என்னடே பெருங்கூட்டமா இருக்கு… ஆளுக்கொரு அரைக்குவளையாவது குடுக்கணும்லா?” என்றார் பெரியநாணு நாயர்.

“பாப்பம்…” என்று கோமன் கொஞ்சம் சந்தேகமாகச் சொன்னான்.

ஆனால் அன்றைக்கு கறந்தது பதினேழுநாழி. அத்தனைபேருக்கு முழுக்குவளை பால். மறுநாள் அந்தக்கூட்டம் மேலும் கூடியது. அதற்கேற்ப பாலும் கூடியது. இருபது நாழி பால். பெரிய குடங்களில் கொண்டுசென்று முன்னால் வைத்த குட்டுவத்தில் ஊற்றி நிறைத்து அள்ளி அள்ளி ஊற்றவேண்டியிருந்தது.

ஒற்றைப் பசுவிலிருந்து அத்தனை பாலும் வருவதை ஊர் அறியவேண்டாம் என்றுதான் பெரியநாணு நாயர் நினைத்தார். தொழுவத்துக்கும் முற்றங்களுக்கும் நடுவே பெரிய தட்டி வைத்தார். ஆனால் அத்தனை பேருக்கும் தெரிந்திருந்தது. சீக்கிரத்திலேயே ஊரில் பசுவைப்பற்றிய கதைகள் பரவலாயின.

“அமுதசுரபின்னாக்கும் அந்தப்பசுவுக்க பேரு. அது காட்டுக்க முலையாக்கும். நம்ம பிள்ளைகளுக்கு பாலூட்டுகதுக்கு காடு கனிஞ்சு அதை அனுப்பியிருக்கு” என்று பூசாரி முட்டன் சொன்னான்.

அச்சுதக் கணியார் “அது காமதேனுவாக்கும். பண்டு வசிட்டருக்க ஆசிரமத்திலே நின்னுது. ஆயிரம் அக்ரோணி சேனைக்கும் அது ஒரு பசுவுக்க பாலாக்கும் ஆகாரம்” என்றார்.

அந்தப் பசு பெரியநாணு நாயரின் வைக்கோல்போர் அளவுக்கு உயரமானது என்றும் கோமன் அதற்கு அடியில் நின்றுகொண்டு பால்கறப்பதாகவும் சொன்னார்கள். “பாலு வாற காம்பு ஓரோண்ணும் ஓரோ கைத்தண்டி கனமாக்கும். அதைப்பிடிச்சு தொங்கியாக்கும் அவன் கறக்குதான்” என்றாள் குறத்தி வேட்டச்சி.

“கறக்கல்லே, சும்மா தொட்டாப்போரும்னு சொன்னாங்க.”

பாலுக்காக முதியவர்களும் நோயுற்றவர்களும் வரத்தொடங்கினார்கள். ஆகவே கோயில்முற்றத்தில் ஒரு கொட்டகை போடப்பட்டது. பால் குடங்களில் கொண்டுவந்து அங்கே ஊற்றப்பட்டு பகிர்ந்து அளிக்கப்பட்டது. நாளுக்குநாள் பால் குடிப்பவர்களின் எண்ணிக்கை பெருக பாலும் கூடிக்கூடி வந்தது. ஒருநாளுக்கு பத்துகுடம் பால். பின்னர் இருபது குடம்பால்.

பெரிய கலம் இல்லாததனால் ஆற்றிலிருந்து படகு கரையேற்றிக் கொண்டுவந்து வைக்கப்பட்டு அதில் பால் ஊற்றி நிறைக்கப்பட்டது.  “பாற்கடல் அலையாக்குமே!” என்று கண்ணன் மூப்பன் சொன்னார்.

அதைக்கேட்ட கேசுப் போற்றி ஓர் உருளியில் சிறிய விஷ்ணுசிலையை போட்டு அதில் மிதக்கவைத்தார்.

“பாத்தா பாம்பு வந்து சுருண்டு கெடந்திரும்போல இருக்கே” என்றார் கண்ணன் மூப்பன்.

“இவன் ரெண்டுபக்கமும் பேசுவான், நாயி” என்றார் செல்லன் நாடார்

ஊரிலிருந்த அனைவருமே காலையில் பால்குடிக்கத் தொடங்கினர். பிள்ளைகளுக்கெல்லாம் இருவேளை காய்ச்சிய பால். மோரும் தயிரும் கூட்டி உண்ணுவது வழக்கமாகியது. ஆனைக்கல் மகாதேவனுக்கும் நெல்குந்நு பத்மநாபசாமிக்கும் அக்கரை பகவதிக்கும். மணமூடு சாஸ்தாவுக்குமெல்லாம் நாள்தோறும் பால்பாயசம் நைவேத்தியம்.

பிள்ளைகளின் முகங்கள் பொலிவுற்றன. தோலில் மின்னொளியும் குரல்களில் மணிநாதமும் எழுந்தன. அவர்கள் கூச்சலிட்டு விளையாடி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஊரெல்லாம் கீரிபோல முயல்போல குழந்தைகள் ஓடின. குரங்குகள் போல மரங்களில் தாவின. அணில்கூச்சல் போல குழந்தைகளின் சத்தம் காற்றை நிறைத்திருந்தது.

ஊரில் முன்பு குழந்தைகள் அப்படி விளையாடுவதில்லை. வெறித்த கண்களும் உலர்ந்த உதடுகளுமாக அவை சோர்ந்து அமர்வதே வழக்கம். கொஞ்சநேரம் விளையாடினாலே அவற்றுக்கு மூச்சிளைத்து விலாவெலும்புகள் அசைய ஆரம்பித்துவிடும். ஆடிமாதத்தில் பட்டினி பரவும்போது பெரும்பாலான குழந்தைகள் வெவ்வேறு இடங்களில் புழுப்போல சுருண்டு கிடக்கும். அவற்றில் பாதி ஆவணியில் செத்துவிட்டிருக்கும்.

அத்தனை குழந்தைகளுக்கும் சித்திரையில் சொறி வாரிப்போடும். வைகாசியில் அவை சொறியால் உக்கி மட்கிய மரத்தடிபோல நிறம் மாறிவிட்டிருக்கும். சொறிந்து சொறிந்து உடம்பெல்லாம் புண்ணாகி, புண்ணுக்கு அஞ்சி குளிக்காமல், நாற்றமடிக்கும் பொருக்குகளுடன் அலையும். ஆனியில் மழை எழுந்ததும் சொறி குறைந்து சிரங்கு மேலெழும். சொறிசிரங்காலேயே செத்துவிடும் குழந்தைகளும் உண்டு.

குழந்தைகளுக்கு அடைச்சொறியின் அறிகுறிகள் தெரிந்தால் எப்படியும் செத்துவிடும் என்று கணக்கிட்டு மேற்கொண்டு உணவுகொடுக்காமல் பிழைக்க வாய்ப்புள்ள குழந்தைகளுக்கு உணவை சேர்த்துக் கொடுப்பார்கள். உணவுகிடைக்காத குழந்தை அழுது மன்றாடி களைத்து தவழ்ந்து வழியோரங்களுக்கு வந்து அங்கே கைக்குக் கிடைக்கும் காய்களைப் பறித்து தின்று செத்துக்கிடக்கும்.

வழியோரங்களில் மெலிந்த குழந்தைகளின் உடல்கள் கிடப்பது சாதாரணக் காட்சி. பார்ப்பவர்கள் அங்கேயே குழியெடுத்து அவற்றை புதைத்துவிடுவார்கள். பத்தும் பதினெட்டும் பெற்று ஒன்றோ இரண்டோ எஞ்சுவதே தாய்மாரின் விதியாக இருந்தது.

பால் அனைத்தையும் மாற்றியது. நெய் ஊற்றிய விளக்குச்சுடர் போல எல்லா குழந்தைகளும் ஒளியுடன் எழுந்தன. சுடர்போல ஒருகணமும் அசைவிலாது நிற்காதவையாக ஆயின. குழந்தைகள் அப்படி விளையாடும் என்பதையே ஊர்க்காரர்கள் அப்போதுதான் அறிந்தார்கள். குழந்தைகளின் உடல் தளிர்போல மின்னும் என்று முதல்முறையாக கண்டனர். அன்னையர் குழந்தைகளை நேருக்குநேர் பார்க்கவே அஞ்சினர். பார்த்துவிட்டால் கண்பட்டுவிடக்கூடாதே என்று தெய்வங்களிடம் நேர்ந்தனர்.

“அன்னலட்சுமி வந்தபிறகு ஊரு செழிச்சுப்போட்டு” என்று எங்கோ எவரோ சொல்லி காதில் விழுந்துகொண்டே இருந்தது. ஆண்களும் தோள்கள் பெருத்து ,கைகள் இறுகி, சலிக்காமல் வேலை செய்பவர்களாக ஆனார்கள். பெண்கள் மெலிவும் வெளிர்வும் நீங்கி ஆற்றல்பெற்றனர். ஆகவே நிலங்கள் பண்படுத்தபட்டன. விளைச்சல் பெருகியது. நெல்லும் கிழங்குகளும் பெருகின. வீடுகள் பழுதுபார்க்கப்பட்டன. ஊரில் எங்குபார்த்தாலும் திருமகளே தென்பட்டாள்.

குமரேசன் பாட்டா பெரியநாணு நாயரிடம் “எங்கேயோ இருந்து மகாலட்சுமியை கூட்டிவந்திட்டே… ஊருக்கே நீதான் இப்ப ரட்சகன். பூர்வஜென்ம புண்ணியம், பூர்வீகர் செய்த சத்கர்மம் பாத்துக்கோ” என்றார்.

ஒன்றரை ஆண்டுகள் தொடர்ச்சியாக பால் கொட்டிக்கொண்டே இருந்தது. கடைசியாக ஐம்பதுகுடம் பால். பசுவின் உடலைவிட பாலின் அளவு அதிகம்.

“அதிப்ப பாத்தோம்னா, சின்ன மதகுவழியா ஏரியிலே இருந்து வெள்ளம் வெளியே வாறது மாதிரியாக்குமே” என்று கண்ணன் மூப்பன் சொன்னார்.

இரண்டாம் ஆண்டு நிறையும்போது பசு கத்தத் தொடங்கியது. பொதுவாக அது கூச்சலிடுவதில்லை. மற்ற பசுக்களைப்போல ம்பே என்று கூவுவதில்லை. சிங்கம் போன்ற உறுமலோசைதான். பசித்தால் மட்டுமே ஓசை வெளிவரும். உடனே புல்லும் வைக்கோலும் ஊறவைத்த புளியங்கொட்டையும் கிழங்கு மாவும் கொடுப்பார்கள்.

ஆனால் அதற்கு உணவு போதவில்லை. அது சிங்கம் தின்பதுபோல உறுமியபடி வெறிகொண்டு சாப்பிட்டது. ஒருமுறை அருகே சென்ற பூனையை தாவிக்கடித்து தூக்கி அப்படியே நொறுக்கிச் சாப்பிட்டது. நாய் ஒன்றையும்ம் சாப்பிட்டது. அதனருகே தொழுவில் நின்ற மற்ற மாடுகளை கடித்து ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தது

அதன்பின் பெரியநாணு நாயர் குறவர்களிடம் சொல்லி இரண்டுநாளுக்கு ஒருமுறை ஏதாவது விலங்கை வேட்டையாடி கொண்டுவந்து தரச்சொன்னார். காட்டுப்பன்றி முதல் வெவ்வேறு வகையான விலங்குகளை வெட்டி பச்சை ரத்தத்துடன் மரத்தொட்டியில் அதற்கு உணவாக வைத்தார்கள். அது உண்டு நிமிரும்போது முகத்தின் முடிகளில் ரத்தம் கொழுத்த சிவந்த மணிகளாக நின்றிருக்கும். அப்போதுதான் அது அடங்கி அமைதியாகி ,கண்கள் சரித்து, உடல் சிலிர்த்து அசைய, அரைத்துயில் கொண்டு நிற்கும்.

நாலைந்து நாளில் தெரிந்தது அது கத்துவது சாப்பாட்டுக்காக அல்ல. கத்தலும் ஏக்கம் கொண்டதாக இருந்தது. கோமன் “இது மத்ததுக்காக்கும்… சேருவைக்கு” என்றான்.

“சேருவைன்னா?”

“காளைகொண்டான்னு கேக்குது” என்றான் கோமன்.

“ஆனா பாலு குறையல்லியே” என்று பெரியநாணு நாயர் சொன்னான்.

“சிலது அப்டியாக்கும். சினைப்பிடிக்கிறப்ப பாலு நின்னிரும். அதுவரை ஊறும்” என்றான் கோமன்

பசுவை வேறு இடங்களுக்கு கொண்டு சென்றால் கண்படும் என்பதனால் சேருகாளைளை தன் கொட்டிலுக்கே கொண்டுவர பெரியநாணு நாயர் சொன்னார். ஒரு காளைக்கு ஒரு முறைக்கு ஒரு பணம் என்று கூலி முடிவுசெய்தார்

சேருகாளைகள் அந்தப் பசுவின் சூடுமணத்தை தொலைவிலேயே கண்டுகொண்டன. வரும் வழியிலேயே அவை அமறலோசை எழுப்பின.  திமில் குலுங்,க விதைகள் ஊசலாட, குறிநீட்டி, அங்கிருந்தே ஓடி தொழுவத்தை அடைந்தன. வழக்கமாக அவற்றுக்கு உணர்வு கொண்டுவர பசுவின் பசைதொட்டு அதன் மூக்கில் காட்டுவது, கையால் தொட்டு விதையை அளைவது போன்று பலவற்றை செய்யவேண்டியிருக்கும். அவை எதுவுமே தேவையிருக்கவில்லை.

அந்தப்பசுவை கண்டதுமே காளைகள் நடுங்கி உடல் உக்கி வளைந்து படமெடுத்த பாம்புபோல இறுகின. கயிற்றை தளர்த்தியதுமே ஏறிப்பொருந்திக் கொண்டன. காளைகள் புணர்வின்போது உறுமலோசை எழுப்பும், பசு தலைதாழ்த்தி அமைதியாகவே நிற்கும். பசு கர்ஜனை புரிவதை அப்போதுதான் கோமனே பார்த்தான்.

புணர்ந்து முடித்து காளை விலகியதும் வெறிகொண்டு திரும்பிய பசு காளையை கொம்பால் முட்டி தூக்கி போட்டது. கயிற்றை பிடித்திருந்த கோமனை இழுத்தபடி வந்து காளையின் கழுத்தை கடித்து குதறியது. காளை அலறி துடிக்க ஏழெட்டுபேர் சேர்ந்து பசுவை இழுத்து அப்பால்கொண்டு சென்றனர். காளை ரத்தம்வழிய அங்கேயே செத்துவிட்டது.

பெரியநாணு நாயர் பணம்கொடுத்து அந்தக் காளையை வாங்கிக்கொண்டார். அதை துண்டுகளாக நறுக்கி பசுவுக்கே நாலைந்துநாள் உணவாக வைத்தார். மீண்டும் அது ஓலமிடத் தொடங்கியது.

இம்முறை பசுவை வலுவான இரும்புக் கம்பிகளில் கட்டி வைத்திருந்தன. பொலிகாளை வெறிகொண்டு மேலேறி புணர்ந்தபின் தளர்ந்து விழுந்தது. பசு துள்ளி குளம்புகளால் நிலத்தை உதைத்து கூச்சலிட்டது.

“மறுபடியும் ஏறவைப்போம்… வேணுமோ என்னமோ” என்றான் கோமன்

காளையை இளைப்பாறச்செய்து நீர்கொடுத்தபின் மீண்டும் ஏறவைத்தனர். பசுவுக்கு நிறையவில்லை. அந்தக்காளை அன்றுமட்டும் எட்டுமுறை அதை புணர்ந்தது. அந்தியில் பசு சீற்றம் மிகுந்து மரச்சட்டத்தை முட்டியே உடைத்தது.

“நாலஞ்சு காளைகளை கொண்டுவரச் சொல்லுடே… என்ன இருந்தாலும் ராட்சசப்பிறவியில்லா” என்றார் பெரியநாணு நாயர்.

மறுநாள் மூன்று காளைகள் வந்தன. அவை இருபதுமுறைக்குமேல் பசுவை புணர்ந்தன. அதற்கு அடுத்தநாள் நான்கு காளைகள் முப்பது முறைக்குமேல் புணர்ந்தன.

எத்தனை காளை வந்து புணர்ந்தபோதிலும் பசு அடங்கவில்லை. “இதென்னடே இது…” என்று பெரியநாணு நாயர் அஞ்சினார்.

கணியார் குமாரன் வந்து சோழி பரப்பி நோக்கி “நூற்றெட்டு காளைவேணும் அதுக்கு… இப்ப எவ்ளவு ஆச்சு?”என்றார்.

“பத்தொன்பது.”

“வெளியூரிலே இருந்தும் கொண்டுவாங்க” என்றார் கணியார் குமாரன்.

“என்ன கணியாரே இது!” என்று பெரியநாணு நாயர் சொன்னார். ”பயமா இருக்கு…”

உள்ளிருந்து காளி அம்மச்சி “டேய் நாணு, துர்க்கை காமஸ்வரூபிணியாக்கும். அசுரன்மார் ஆயிரமும் அவளுக்கு மாரன்மாராக்கும். ரெத்தம் குடிச்சு அடங்குத காமம் உண்டு அவளுக்கு” என்றாள்.

கதிர்மங்கலம் வீட்டுக்கு காளைகள் வந்துகொண்டே இருந்தன. கண்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவற்றை விடியற்காலையில் இருட்டில் கொண்டுவந்து இரவில் திரும்பி கொண்டுசென்றனர். நூற்றெட்டு காளைகள் ஆயிரத்தெட்டு முறை புணர்ந்தபின்னர் ஒருமாதம் கழித்து பசு மெல்ல அடங்கியது.

பெரியநாணு நாயர் பெருமூச்சுவிட்டார். “யப்பா, ஒரு காட்டு தீயை அணைச்சமாதிரி இருக்குடே” என்றார்.

“ஊருக்கே ஊற்றா அமுதம் வருதுன்னா சும்மாவா? இப்ப எட்டுசாதியும் பதினெட்டு குடியும் இந்த நாலு காம்பை நம்பியாக்கும் வாழுது” என்றான் கோமன்.

“பாலு வந்திட்டே இருக்கு… குறையல்ல. அதான் குழப்பமா இருக்கு.”

“சில பசுக்கள் அப்டியாக்கும். முழுச்சினை ஆறதுவரைக்கும்கூட பாலு ஊறும்” என்று கோமன் சொன்னான்.

பசு கருவுற்றது. வயிறு தொங்கத் தொடங்கியது. ஆனாலும் பால் நிற்கவில்லை. குடம்குடமாக ஊருக்கே பால் ஊற்றியது. இரண்டரை ஆண்டுகளில் வீடுகளில் அந்திக்கு பால்கஞ்சி வழக்கமாகியது. கெட்டித்தயிரில்லாமல் பிள்ளைகள் சாப்பிட மறுத்தன. காய்ச்சில்கிழங்கு மயக்கினாலும் நெய்விழுதை பலாவிலையால் வெட்டிக்கோரி எடுத்து சூடான களிமேல் விட்டு உருகவைத்துச் சாப்பிட்டார்கள்.

பாலூரின் பெண்களின் அழகு திருவிதாங்கூர் முழுக்க புகழ் பெற்றது. வேணாட்டின் நூற்றிநாற்பத்தெட்டு ஊர்களிலும் இருந்து பாலூருக்கு பெண்ணெடுக்க வந்தார்கள். பத்துபிள்ளை பெற்று ,பத்தையும் பாலூட்டி தேற்றி எடுக்கும் முலைவீர்ப்பு கொண்டவர்கள் அங்குள்ள பெண்கள் என்று சொல்நின்றது. குடிபெருகுவதே அன்றைய ஒரே இலக்கு என்பதனால் பொன்கொடுத்து வணங்கி பெண்பெற்றுச் சென்றார்கள்.

அதற்கேற்ப பாலூரின் பெண்களின் முலைகள் மகாதேவர் கோயில் கல்சிற்ப யட்சிகளின் முலைகள் போல உருண்டு பெருத்திருந்தன. கட்டைவிரல் கனத்தில் இருந்தன காம்புகள். ஒருமுலை ஊட்டுகையில் மறுமுலையில் பால் ஊறி வெண்ணிற ஊசிகளாக பீய்ச்சியடித்து ஆடையையும் தடுக்கையும் தாழ்வாரத்தையும் நனைத்தது. “வச்சகலம் நிறைய மறுகலத்தோட நிக்கணும்லா” என்றனர் மருத்துவச்சிகள்.

இரண்டாம் பிள்ளை நடப்பது வரை முதல்பிள்ளைக்கு பால்கொடுத்தனர் பாலூர் பெண்கள். வற்றாத ஊற்றுக்கு ‘பாலூர்க்காரிக்கு பத்துமுலை’ என்ற சொல்வழக்கம் உருவாகியிருந்தது. பிள்ளைபெருக்கி, நிலம்பெருக்கி, குடியை நிலைநிறுத்தும் துர்க்காலட்சுமிகள் என்று அவர்களை வணங்கினர். குடும்பங்களில் அவர்களின் வார்த்தையே அறுதியாக கருதப்பட்டது. கணவர்கள் அவர்களுக்கு சொல்பணிந்து மறுசொல்லின்றி ஒழுகினர்.

பசுவின் வயிற்றில் குட்டி பெருத்து வந்தபோது பெரியநாணு நாயர் மீண்டும் கணியான் குமாரனை வரவழைத்து பிரஸ்னம் வைத்து பார்த்தார்.

“ஒரு கெட்ட கேடு தெரியுதே நாயரே” என்றார் கணியான். “உள்ள இருக்குதது அக்னியாக்கும்… அதிலே இருந்து ஒண்ணுமே வெளியே வராது… வந்தா பாப்பம்.”

ஆச்சரியமாக பத்துமாதம் கழித்தும் குட்டி பிறக்கவில்லை. பதிமூன்று மாதமாகியதும் வயிறு வற்றி ஒட்டிவிட்டது. அது கருவுற்றது உண்மை, வயிற்றில் குட்டியின் அசைவைக்கூட பெரியநாணு நாயர் பார்த்திருந்தார். உள்ளேயே ஜடராக்னியிலேயே குட்டி எரிந்து செரித்துக் கொள்ளப்பட்டுவிட்டது.

அந்தக் குட்டிக்கு மோட்சம் கிடைப்பதற்காக பெரியநாணு நாயர் கோயில்களில் பூசைகளும் வழிபாடுகளும் செய்தார். ஆனால் அதை எவரிடமும் சொல்லவில்லை. கோமனிடமும் வாயே திறக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்.

ஆனால் ஊரே எல்லாவற்றையும் அறிந்துகொண்டுதான் இருந்தது. ஊரில் அந்தப்பசுவை நேரில் பார்த்தவர்கள் குறைவாகவே இருந்தனர். அதனாலேயே கதைகளை அவர்கள் ஆவலுடன் கேட்டு கற்பனையில் அதை வளர்த்துக்கொண்டே இருந்தனர்.

அந்தப்பசு ரத்தம்குடிக்கும் என்ற செய்தி வெளியே பரவியது. ஆயிரத்தெட்டு காளைகளை அது புணர்ந்தது என்ற கதை நம்பக்கூடியதாக இல்லை, ஆனால் பலர் அதற்காக வந்துகொண்டே இருந்த சேருகாளைகளை பார்த்திருந்தார்கள். அவை திரும்பிப்போகவே இல்லை, அவற்றை புணர்ச்சிக்குப்பின் அந்தப்பசுவுக்கே உணவாக அளித்துவிட்டார்கள் என்று பூசாரி முட்டன் கதை சொன்னான்.

“நாம குடிக்குதது அந்தக் காளைகளுக்க ரெத்தமாக்கும். நல்லா பாருங்க, அது பாலு இல்லை. வெள்ளைநிறமான ரத்தம்” என்றான் முட்டன் பூசாரி “ஆல்போலே தழைச்சு அருகுபோலே வேரோடணும்னாக்கும் சொல்லு. நம்ம பிள்ளைகுட்டிகளுக்கு ரெத்தபழி வந்திரப்படாது.”

ஆச்சரியமாக ஒவ்வொரு நாளுமென அந்தப்பேச்சு பரவத்தொடங்கியது.  “அது பசு இல்லை, ஏதோ மலைவாதையாக்கும். நாளுக்கு நானாழி ரெத்தம் குடிக்குது. அது நாலுகுடம் ரெத்தம் வேணும்னு கேக்க இனி எத்தனை நாளாகும்? குடுப்பீராவே? பெத்த பிள்ளைகளை கொண்டுபோயி பலிகுடுப்பீரா?” என்றார் காஞ்சிரமூடு வைத்தியர்.

“அவ நமக்கு கனிஞ்சு பாலுகுடுக்கல்ல, பாலு குடுத்து பலிமிருகங்களா வளக்குதா. வளத்து பெருக்கி ஒட்டுமொத்தமா தின்னுட்டுபோவா” என்றார் சுப்பாமுத்து பாட்டா.

“நம்ம ஊருக்கு ஒரு மதிப்பிருந்தது வே. இப்ப அது இருக்கா. நம்ம பொம்புளையாளுக நம்ம சொல்படி அடங்கி கெடந்நாளுக. கஞ்சியோ கெளங்கோ குடுத்ததை தின்னிட்டு வாழ்ந்தாளுக. மனசுதொட்டு சொல்லுங்க. இப்ப அப்டியா? இப்ப நடக்குதது பொம்புளை ராச்சியமாக்கும். நாமெல்லாம் அவளுகளுக்க அடிமைகள். காலுலே கிடந்து சேவுகம் செய்யுத நாய்கள்… இல்லேன்னு சொல்லுங்க பாப்பம்” என்றார் முத்தன் ஆசாரி.

“அதுக்கு பண்டு ஆம்புளை கொண்டுவந்து குடுத்தாத்தான் அவளுக குடும்பம் நடத்தி பிள்ளைகளை பெத்து வளக்கமுடியும்னு இருந்தது. இப்ப அப்டியா?அவளுக ஏறி நிக்காளுக. ஆம்புளை இருந்தா என்ன, செத்தா என்ன?” என்றான் சிண்டன் புலையன்.

“உள்ளதைச் சொல்லுங்க… இப்பம் பொம்புளைகளை ரசிச்சு அணையுத ஆம்பிளைக எம்பிடுபேரு? இங்க உள்ளவனுக சொல்லட்டும்” என்று ஏரிமேட்டில் அமர்ந்திருக்கையில் நாகமுத்தான் வைத்தியர் கேட்டார்

“அப்டி கேட்டா பொம்புளைக மேலே இப்டி ஒரு கிறுக்கு முன்னாலே வந்ததில்லை. ஓரோருத்தியும் பூமாதிரி மலர்ந்து கனிமாதிரி தெரண்டிருக்கா…” என்றான் சிறையன் ராமன்.

“நம்ம காமம் கூடியிருக்கு. ஏன்னா அவளுகளுக்கு நாம காமம் குடுக்கணும். ஏலே, நம்ம காமம் தணியுதா? அதைச் சொல்லு” என்றார் நாகமுத்தான் வைத்தியர்.

“அப்டி சொன்னா…”

“நீ தளந்திருதே…உன்னாலே முடியல்லை. உனக்கு நிறைவிருக்காடே?”

யாரும் ஒன்றும் சொல்லவில்லை.

“நிறையாது. ஏன்னா ஆணுக்குக் காமம் அகங்காரத்திலேயாக்கும். அது நிறையணுமானா பெண்ணு அடங்கணும். இப்ப எந்த பெண்ணுடே நிறைஞ்சு அடங்குதா? சொல்லுடே” என்றார் நாகமுத்தான் வைத்தியர்.

ஆண்கள் மேலும் மேலும் வெறுப்பும் விரோதமும் கொண்டார்கள். ஆனால் பெண்களும் குழந்தைகளும் பால் வாங்க வந்துகொண்டுதான் இருந்தார்கள். வீடுகள் தோறும் சண்டை நடந்தது. அந்தப்பாலை தன் குழந்தைகள் குடிக்கக்கூடாது என்றார்கள் ஆண்கள். பெண்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

சித்திரை மாதம் வெள்ளிக்கிழமை முட்டன் பூசாரி நள்ளிரவில் வெளியே வந்து பார்த்தபோது வானத்தில் ஒரு வால்நட்சத்திரத்தை கண்டன். அது ஒரு விசித்திரமான பறவை என்றுதான் அவன் நினைத்தான். அதன்பிறகுதான் வால்நட்சத்திரம் பற்றி அவன் அப்பன் சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது. ”எனக்க அப்போ, வால்நச்சத்திரமாக்குமே” என்று அவன் நெஞ்சில் கைவைத்து ஏங்கி அழுதான்.

அவன் தாத்தா அண்டன் பூசாரியின் காலகட்டத்தில் வால்நட்சத்திரம் வந்தது. மகாமாரியாக மூன்று நோய்கள் ஒரே சமயம் ஊரை தாக்கின. ஊரிலிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் செத்து ஒடுங்கினார்கள். ஊரையே கைவிட்டு பாண்டிமலைப் பக்கம் போய் மூன்று ஆண்டுகள் கழித்தே திரும்பி வரவேண்டியிருந்தது. வந்தபோது ஒரு செடி ஒரு மரம் இல்லாமல் ஊரே பட்டுப் பாழடைந்து கிடந்தது.

மறுநாளே முட்டன் ஊர்ச்சாவடியில் வந்து நின்று கைதூக்கி கூச்சலிட்டு வானம் துர்ச்செய்தியை அறிவித்துவிட்டதை சொன்னான். பிறர் எவரும் அதைப் பார்த்திருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் நடுங்கினார்கள். முகம் வெளிறி சொல்லிழந்து வெறித்த பார்வையுடன் வீடுதிரும்பினார்கள்.

அன்றிரவு அத்தனைபேரும் வெளியே வந்து பார்த்தனர். வானத்தில் வால்நட்சத்திரம் கையால் இழுத்து அழித்த குங்குமப்பொட்டு போல தெரிந்தது. பலர் அங்கேயே அலறி அழுதபடி அமர்ந்துவிட்டனர். சிலர் கதறியபடி வீட்டுக்குள் ஓடி இருட்டறைக்குள் சுருண்டு நடுங்கினர்.

மறுநாள் கோயில்சாவடியில் பெருங்கூட்டம் கூடியது. “இப்ப தெரியுதா? அந்த பசு என்னன்னு தெரியுதா? அது திருட்டாந்தம். வானத்திலே வால்நச்சத்திரம் வாறதுக்கு முன்னாலே அது இங்க வந்திருக்கு..” என்றான் முட்டன்.

“காட்டுக்கும் நாட்டுக்கும் எல்லையுண்டு. காட்டுதெய்வம் ஊருக்குள்ளே வரக்கூடாது. ஊருதெய்வங்களுக்கு காட்டிலே சக்தி கெடையாது. ஆனால் இப்ப எல்லாம் நிலையழியும். சட்டி பானைக்குள்ள கவிழும். பானை சட்டிக்குள்ளே மறியும். காட்டுதெய்வங்களெல்லாம் ஊருக்குள்ளே வரும். மாதனும் கூளியும் மாதியும் குளிகனும் கடுத்தாவும் பிறுத்தாவும் வரும். சீக்கும் பிணியும் பூச்சிகளும் பாம்புகளும் பெருகிவரும்… இது அடையாளமாக்கும்…”

“என்ன செய்யணும் முட்டா!” என்று கண்ணன் மூப்பன் கைவிரித்து அலறலாகக் கேட்டார்

“அந்த பசு வழி ஒருக்க வந்த முன்னோட்டமாக்கும். அதை இங்க வச்சிருந்தா அது வந்த வழியிலே அம்பிடு காட்டுவாதையும் இங்க வந்திரும்… அதை இங்கேருந்து விரட்டணும். அது வந்த வழியை சுத்தப்படுத்தணும். அது வந்த வழியை சக்தியுள்ள தெய்வத்தை வைச்சு அடைக்கணும்…”

அத்தனை பேரும் ஆர்ப்பரித்தனர். அங்கிருந்தே அவர்கள் கற்களும் கழிகளும் அரிவாள்களுமாக கூச்சலிட்டபடி கிளம்பினர். கதிர்மங்கலம் வீட்டை அவர்கள் அடைந்தபோது கூட்டம் மும்மடங்காக இருந்தது.

அவர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு கதிர்மங்கலம் வீட்டுக்குள் நுழைந்தபோது பெரியநாணு நாயர் ஓடிப்போய் அறைக்குள் ஒளிந்துகொண்டார். காளிப்பிள்ளை அம்மச்சியும் வீட்டுப்பெண்களும் கைவிரித்தபடி வந்து அவர்களை தடுத்தனர்.

கையில் அரிவாளுடன் நின்ற காளியம்மச்சி “வீட்டுக்கு வந்த பசுவாக்கும். அதுக்குமேலே கையை வச்சீங்கன்னா இங்கேயே சங்கறுத்து விழுந்து சாவேன்… டேய், நான் செத்தா ஏழு தலைமுறை பேயா வந்து உன்னையும் உன் வம்சத்தையும் கருவறுப்பேன்” என்று கூவினாள். அரிவாளை தன் கழுத்திலேயே வைத்துக்கொண்டாள்.

பாகீரதி “டேய், இங்க பசுவுக்க உடம்பிலே இருந்து ஒருதுளி ரத்தம் விழுந்தா பின்ன உங்க குடும்பத்தையே அழிப்போம்” என்றாள்.

கூட்டம் அலைமோதியது, வசைகளும் ஆபாசக்கேலியுமாக முட்டி மோதியது. முட்டன் பூசாரி கையமர்த்தி அவர்களை அடக்கி “அம்மிணி, அந்தப் பசுவை நாங்க ஒண்ணும் செய்யமாட்டோம். ஆனா அது இனி இந்த ஊரிலே இருக்கக்கூடாது. அது அமங்கலமாக்கும். காட்டுவாதைக்க வடிவமாக்கும். அதை காட்டுக்கே கொண்டுபோயி விட்டுடுவோம்” என்றான்.

அம்மச்சி “செரி, அம்மை உங்களுக்கெல்லாம் அமிர்தம் தந்தா. இப்ப உனக்கு அவளை வேண்டாம். செரிடே கொண்டுபோயி காட்டிலே விட்டிடு.. ஆனா நீ இங்க மண்ணுதொட்டு உன் குலத்துக்குமேலே சத்தியம் செய்யணும், அம்மைமேலே இருந்து ஒருதுளி ரெத்தம் வரக்கூடாது. அம்மையை காட்டிலே கொண்டுபோயி விடுவேன்னு அத்தனைபேரும் சத்தியம் செய்யணும்…” என்றாள்.

“நான் சத்தியம் செய்யுதேன்” என்றான் முட்டன்.

“இங்க வந்த அத்தனைபேரும் சத்தியம் செய்யணும்” என்றாள் பாகீரதி.

“செய்யுதோம்” என்றார் கண்ணன் மூப்பன். அவர்கள் அனைவரும் மண்ணை தொட்டு குலம் மீது சத்தியம் செய்தார்கள்.

அதன்பின் அம்மச்சியே தொழுவுக்குச் சென்று கயிற்றை அவிழ்த்து பசுவை பிடித்து கண்ணன் மூப்பனிடம் ஒப்படைத்தாள். அதன் பின்பக்கத்தை தொட்டு வணங்கி “அம்மே, துர்க்காலட்சுமீ, அடியேங்களை காத்துக்கொள்ளுடீ” என்றாள்.

வீட்டுப்பெண்கள் அனைவரும் அந்தப்பசுவை தொட்டு வணங்கினார்கள். அதன் குளம்புபட்ட மண்ணைத் தொட்டு தலையில் சூடிக்கொண்டார்கள். கோமன் “அம்மச்சீ…அம்மச்சீ” என்று கைகூப்பி கதறி அழுதபடி அதன்பின்னால் சென்றான்.

கண்ணன் மூப்பன் பசுவின் கயிறை பிடித்துக்கொண்டார். அது சென்றவழியில் இரண்டுபேர் சாணிநீர் கரைத்து தெளித்தபடி பின்னால் சென்றனர்.

அவர்கள் செல்லச்செல்ல களிவெறி கொள்ளத் தொடங்கினார்கள். பசுவின்மேல் மண்ணையும் புழுதியையும் வாரி வீசினார்கள். பின்னர் சாணியையும் சேற்றையும் அள்ளி வீசினார்கள். இறுதியில் வழியில் கிடந்த மலத்தை அள்ளி எறிந்தார்கள். ஆபாசப்பாட்டுகளை பாடியும் கீழ்மை நிறைந்த வசைகளை கூவியும் சிரித்து எக்களித்து நடனமிட்டார்கள்.

யாரோ ஒரு கழியால் பசுவின் அகிடை தட்டினான். அது பால்சொரியத் தொடங்கியது. அவர்கள் அதன்மேல் காறித்துப்பினார்கள். பாலின் தடம் அது சென்ற வழியெல்லாம் நீண்டு கொண்டே போயிற்று

தெற்கேக்காட்டுக்குச் சென்றபோது கண்ணன் மூப்பன் அதன் கயிற்றை அறுத்தார். முட்டன் அதை கழியால் அடித்து துரத்தினான். சித்திரை மாத வெயிலில் காய்ந்து நின்ற இஞ்சிப்புல் மேட்டில் பசு நுழைந்து மறைந்தது. அதன் கொம்புகள் மட்டும் தெரிந்தன.

திடீரென்று எவரோ தீ கொளுத்தி புல்மேல் எறிந்தார்கள். வெறிகொண்ட கூட்டம் அங்குமிங்குமிருந்து தீயை கொளுத்தி எறிந்தது. புல்வெளி பற்றிக்கொண்டது. தைலப்புல் ஆதலால் புகையும் செஞ்சுடருமாக விரைவிலேயே ஆளுயரத்தில் கொழுந்துவிடத் தொடங்கியது. நான்குபக்கமும் சூழ்ந்த தீயில் பசு சிக்கிக்கொண்டது.

ஆனாலும் அது அலறவில்லை. அதை தீயின் சுடர்கள் சூழ்ந்துகொண்டபோது அசையாமல் நின்றது. புகையிலும் தழலிலும் அது மறைந்தது.

அங்கிருந்தவர்கள் அனைவரும் கூச்சலிட்டு ஆர்ப்பரித்து நடனமிட்டார்கள். ஒருவரை ஒருவர் தூக்கி மேலே வீசி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். வெறிகொண்டு ஆடியபடியே திரும்பி வந்தார்கள்.

அவர்கள் திரும்பும் வழியில் குறிசொல்லும் வேட்டச்சிக் குறத்தி வெறிகொண்டு கைவிரித்து எதிரே ஓடிவந்து “பெத்தம்மை முலைவெட்டி திங்குத பாவிகளே, உங்க கையும் காலும் விளங்காம போகும். படுத்த பாயிலே பீயோட கட்டையிலே போவீங்க” என்று மண்ணைவாரி சாபமிட்டு அழுதாள். நெஞ்சிலறைந்து விழுந்து மண்ணில் தலைமுட்டி கதறினாள்.

அவர்களின் வீட்டுப்பெண்களும் குழந்தைகளும் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களை தேற்றவே முடியவில்லை. அவர்கள் மாதக்கணக்கில் எண்ணி எண்ணி அழுதனர். கணவர்களை அருகே வரவோ ஒரு சொல் உரைக்கவோ விடவில்லை.

கதிர்மங்கலம் வீட்டு அம்மச்சியும் பெண்களும் அச்செய்தியை அறிந்ததும் வெறிகொண்டார்கள். அம்மச்சி அச்செய்தி கேட்டு மயங்கி விழுந்து மயக்கத்திலேயே உயிர்விட்டாள். கதிர்மங்கலத்து வீட்டிலிருந்த அனைவருமே அங்கிருந்து அன்றே கிளம்பி மலைக்கு அப்பால் அவர்களின் பிறிதொரு பூர்வீக நிலத்துக்குச் சென்றுவிட்டனர். கதிர்மங்கலத்து வீடு கைவிடப்பட்டு கிடந்தது. மெல்ல மெல்ல காடுமூடி இடிந்து மறைந்தது.

முட்டன் பூசாரி சொன்னதுபோல் தீங்கு ஒன்றும் நிகழவில்லை. தூமகேது ஒருவாரத்தில் மறைந்தது. நல்ல மழைபெய்து ஆறுகள் நிறைந்தன. வயல்கள் செழித்து கதிர்பெருகியது. அவ்வாண்டு மாமரங்களும் பலாமரங்களும் காய்த்து தள்ளின. ஊரை எந்த நோயும் அணுகவில்லை.

அங்குள்ள அத்தனை பசுக்களுமே இருமடங்கு பால் கொடுக்கலாயின. பாலூர் பசுக்கள் அகிடுபெருத்தவை, அறுநாழி கறப்பவை என்று பெயர் பெற்றன. அங்கே குழந்தைகளுக்கு அதற்குப் பின்னரும் பால் குறையவில்லை. அங்குள்ள பெண்களின் முலைப்பால் மேலும் பெருகியது. ஒரு சொல் தணியாதவர்களாக, ஒரு சொல் பொறுக்காதவர்களாகவே அவர்கள் பின்னரும் நீடித்தனர்.

அது அந்தப் பசுவின் வாழ்த்தால்தான் என்று பெண்கள் நம்பினார்கள். உடலெங்கும் தீ எழுந்து சதை உருகும்போதுகூட குரலெழுப்பி ஒரு சொல் சாபமிடாமல் நின்றது அது பசுவுருவில் வந்த லட்சுமி என்பதனால்தான்.

“அதெப்பிடி சாபம்போடுவா? இந்த ஊரிலே அம்பிடுபேரும் அவளுக்க பாலைக்குடிச்சவங்கள்லா? அவளுக்க மடிப்பிள்ளைகள்லா? அவமேலே மண்ணும் பீயும் வாரி எறிஞ்சவனுகளும் அவளுக்க குழந்தைகளாக்குமே” என்றாள் குறிசொல்லும் மூத்த குறத்தியான வேட்டச்சி. “அவ உடம்பிலே ரத்தம் ஓடல்லை, நிறைஞ்சு ஓடினது முழுக்க கனிஞ்ச முலைப்பாலாக்கும்”.

நெடுநாட்களுக்குப்பின் நூறுவயதான மூத்த குறத்தி வேட்டச்சி பசுவை கொண்டுசென்று தீவைத்த அந்த புல்காட்டில் ஒரு ஆலமரத்தின் அடியில் ஒரு கல்லை நட்டு அம்மச்சிப்பசுவை தெய்வமாக நிறுத்தினாள். மாதந்தோறும் பௌர்ணமியில் அம்மச்சிப்பசுவுக்கு மஞ்சள் குங்குமம் சார்த்தி அருகம்புல் படைத்து பெண்கள் வழிபட்டனர். கருவுற்ற பெண்கள் பெற்றுபிழைக்கவும் முலைப்பால் பெருகவும் வணங்கும் தெய்வமாக அம்மச்சிப்பசு மாறியது. பின்பு அமிர்தலட்சுமி அன்னை என்று பெயர்பெற்று பெரிய கோயிலாகியது.

***

முந்தைய கட்டுரைகீர்ட்டிங்ஸ்,சாவி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகௌசல்யா -சங்கர் தீர்ப்பு சட்டத்தின் பார்வையில்…