அன்னம்,லட்சுமியும் பார்வதியும்- கடிதங்கள்

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

லட்சுமியும் பார்வதியும் கதை எனக்கு பல எண்ணங்களை உருவாக்கியது. இதேபோன்ற ஒரு சந்தர்ப்பம் விஷ்ணுபுரத்தில் வரும். கருணையற்றவர்களே நல்ல ஆட்சியாளர்கள், கருணையுள்ள ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்று சூரியதத்தரிடம் அவருடைய மகன் சொல்வான். இது உண்மையாக இருக்கலாம். ஆனால் கசப்பான உண்மை. சுவாதித்திருநாள் கேட்கும்போது புராணங்களில் மாறாக ஒரு உதாரணம்கூட இல்லையே ராமா என்றுதானே பார்வதியால் சொல்லமுடிகிறது

ஆட்சி என்பதிலேயே ஓர் அநீதி உள்ளது என்று பார்வதி இன்னொரு இடத்தில் சொல்கிறார். இதை ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். சங்ககால ஆட்சியாளர்கள் சிறுகுடி மன்னர்களை அழித்தார்கள். அந்தக் கொடூரப்போர்களை புறநாநூறு பாடுகிறது. ஆனால் அப்படி அழித்ததனால்தான் தமிழ்நாட்டில் வலுவான அரசுகள் வந்தன. போர்கள் இல்லாமலாகி மக்கள் வாழ்க்கை செழிப்புற்றது. கல்வியும் பெருகியது. இல்லாவிட்டால் நாளும் சண்டை நடக்கும் ரத்தபூமிதான் மிஞ்சியிருக்கும்

சோழர்கள் படையெடுத்துப்போன ஊர்களை எல்லாம் அழித்திருக்கிறார்கள். ஆனால் ஏரிவெட்டி நமக்கெல்லாம் சோறும் போட்டார்கள். வரலாற்றை நெறிகளின் அடிப்படையில் புரிந்துகொள்ளவே முடியாது என்று நினைக்கிறேன்

பிரபாகர்

***

அன்பு ஜெயமோகனுக்கு, வணக்கம், நலம்தானே?

லட்சுமியும் பார்வதியும் சிறுகதை படித்தேன். ஓர் உன்னதமான கதையிலிருந்து வாசகருக்குப் பல கதைகள் எழ வேண்டும்.இதில் அதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ள்ளன.

ராஜவர்மா பட்டத்துக்கு வந்தவிதம், மன்றோவின் அரசியல், மன்னரைச் சுற்றி இருப்போரின் சூழ்ச்சி, லட்சுமிபாயின் உடல்நிலை, பார்வதியின் துணிவு இப்படி இன்னும் எழுத முடியும்.

தலைமுறை இடைவெளி என்பது லட்சுமி மற்றும் பார்வதியின் உரையாடலில் நன்கு வெளிப்படுகிறது. நான் வந்த ஒருவாரத்திற்குள் அவன் தலை உருளும் என்றும், மக்களுக்காகப் பெட்டிகளைத்திறப்பேன் என்றும் சொல்லும் லட்சுமியின் உறுதியும், ஆளுமையும் நாட்டை ஆள்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

ஒரு வரலாற்றுச் சூழலை கதை இந்தத்தலைமுறைக்கு வெளிப்படுத்துகிறது.”

“ஒருகையில் துரட்டியும், மறுகையில் கரும்பும் இருந்தாலொழிய யானை படியாது” என்பது நல்ல மேற்கோள்.ஒருகையில் கோரிக்கை, மறு கையில் போராட்ட அறிவிப்பு எடுத்துக்கொண்டுதான் அரசுடன் பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டும் என்று எங்கள் ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மறைந்த  சு. ஈஸ்வரன் கூறியது நினைவுக்கு வருகிறது.

வளவ. துரையன்

———–_——————————————-

பி.கு

அண்மையில் கொச்சியில் சாலைத் தடுப்புகளுக்கிடையில் இருக்கும் குறுகிய இடைவெளியில் ஒரு குதிரை புகுந்து மாட்டிக்கொண்டு எப்பக்கமும் போகமுடியாமல் தவித்ததை தொலக்காட்சியில் பார்த்தபோது உங்களின் கதையில் ஆனை புகுந்து மாட்டிக்கொண்டு தவித்தது நினைவுக்கு வந்தது

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

அன்னம் இன்னொரு கெத்தேல்சாகிபின் கதை. படிக்கும்போது மானிட சமுத்திரம் நானென்று கூவு என்ற பாரதிதாசனின் வரியைத்தான் நினைத்துக்கொண்டேன். அதைப்போன்ற இலட்சியவரிகளை நாம் பள்ளியிலே படிக்கிறோம். அவை க்ளீஷே ஆக மாறிவிடுகின்றன. அவற்றின்மேல் ஒரு அவந்ம்பிக்கையும் உருவாகிவிடுகிறது. ஆனால் நம்மைச்சுற்றி அப்படிப்பட்ட மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த வரிகள் மேல் உருவாகும் ஒவ்வாமையால் நாம் அந்த மாமனிதர்களைப் பார்க்கும் கண்ணில்லாத குறுகியவர்களாக ஆகிவிடுகிறோம்.

நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. நவீன இலக்கியம் வாசகனை கூருணர்வுகொண்ட்வனாகவும் அவவ்நம்பிக்கை கொண்டவராகவும் சுருங்கிப்போனவனாகவும் தோல்விகளை கொண்டாடக்கூடியவனாகவும் மாறிவிடுகிறது என்று. மலேசியாவில் ஓர் உரையில் நீங்களும் அதைச் சொல்கிறீர்கள். அது பெரிய திறப்பு எனக்கு. நானே நினைத்ததுதான் அது. அன்னம் போன்ற கதைகள் நவீன இலக்கியத்தின் வழக்கமான டெம்ப்ளேட்டுகள், நிலைபெற்றுவிட்ட நம்பிக்கைகள், எவருமே விவாதிக்காமலேயே அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்ட தத்துவங்கள் ஆகியவற்றிலிருந்து மீறிச்செல்பவை. அவை நவீன இலக்கியத்திற்கு புதுமுகம் அளிக்கின்றன.ஒருவகையில் எல்லைகளை மீறிச் செல்கின்றன. அன்னம் ஒரு அரிய படைப்பு

ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஜெயமோகன்

அன்னம் , சோற்றுக் கணக்கின் தொடர்ச்சியே , கொத்தேல் சாகிப் தான் கறுத்த சாகிப் . 2 சாகிப்புகளும் அன்னத்தினால் இணைகிறார்கள் .சாப்பிடுபவர்களின் சந்தோஷக் குரல்களை  தினமும்  உள்வாங்கி உவகையடைகிறார்கள்  . கறுத்த சாகிப் போனில் கேட்கும் குரல் மூலம் தன்னை மீட்டுருவாக்கிக் கொள்கிறார் . அன்னம் அளிக்கும் கறுத்த சாகிப்பைவிட  அழகானவர் யார் ? கிருஷ்ண பட்டுக்கு எந்தத் தீங்கும் இல்லாமல் வழக்கு முடிவது சராசரி வாசகனுக்கு திருப்தி .

கோபால்
புனே

***

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைமடிவலையில்…
அடுத்த கட்டுரைதங்கப்புத்தகம்,செய்தி- கடிதங்கள்