வழக்கமாக யூடியூபில் பாட்டு கேட்பதற்கு ஒரு ‘டெம்ப்ளேட்’ இருக்கிறது. இளையராஜா ஹிட்ஸ், எம்எஸ்வி ஹிட்ஸ் என்றோ ஹிட்ஸ் ஆஃப் 60 என்றுதான் கேட்போம். ஆனால் யூடியூபில் பாட்டுகள் கேட்க ஆரம்பித்து இந்த பத்தாண்டுகளில் திரும்பத்திரும்ப சில பாட்டுக்களே வந்துகொண்டிருக்கின்றன. புத்தம்புதிய பாட்டு ஒன்றைக்கேட்டு மண்டை சிலிர்க்கும் அனுபவம் குறைந்துவிட்டது.
பழங்காலத்தில் ரேடியோவில் பாட்டு கேட்பதிலுள்ள மிக உற்சாகமான அம்சம் அதில் அடுத்தபாட்டு என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடியாது என்பது. பாட்டை அறிவிக்கும் வரை இருக்கும் மெல்லிய எதிர்பார்ப்பு, சிலசமயம் அறிவித்தபின்னரும் என்ன பாட்டு என்று தெரியாத குழப்பம், பாட்டு ஒலிக்க ஆரம்பிக்கும்போது கிளை அலைவுற்று துளிகள் எதிரபாராமல் உடலில் விழுவதுபோன்ற சிலிர்ப்பு. ஒலிநாடாக்கள் வந்து வேண்டிய பாட்டை எத்தனை முறை வேண்டுமென்றாலும் கேட்கலாம் என்றபோதே அது போய்விட்டது. அத்தனைபாட்டும் கைபேசியில் இருக்கிறது என்ற நிலையில் பாட்டுகேட்பதில் எதிர்பார்ப்பே இல்லை
ஆகவே ஒரு வழி கண்டுபிடித்தேன். 1962 முதல் – அது நான் பிறந்த ஆண்டு- எந்தெந்த தமிழ் மலையாள படங்கள் வந்துள்ளன என்று கூகிளில் பார்ப்பது. எல்லா படங்களிலும் உள்ள எல்லா பாட்டுக்களையும் ஒரு நிமிடமாவது கேட்பது. முப்பதாண்டுகளாக கேட்காத பல பாட்டுகளை கேட்கமுடிந்தது. ஒருமுறை கூட கேட்டிருக்காத பல பாட்டுக்களையும் கேட்டேன். இத்தனை நாட்களில் 1965 வரை வந்துவிட்டேன்.
இதற்கு மடிவலை தேடல் என்று பெயர் சொல்லலாம் என்று நினைக்கிறேன். மடிவலை என்பது மீனவர்கள் போடும் நுட்பமான கண்ணிகள் கொண்ட வலை. ஒரு வட்டாரத்தின் அத்தனை மீன்களையும் குப்பைகூளங்களோடு அள்ளிவிடும்
1965 தமிழ்மலையாள இசையின் ஒரு நல்ல காலகட்டம் போலிருக்கிறது. ஏகப்பட்ட நல்ல பாட்டுக்கள். பெரும்பாலும் மெல்லிசை மெட்டுக்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன் ஜி.தேவராஜன், சலீல் சௌதுரி நால்வருமே நல்ல ஊக்கமான நிலையில் இருந்திருக்கிறார்கள். சுசீலாவின் குரல் மிகமிக இளமையாக பட்டுபோல இருந்திருக்கிறது.