கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]

இது எண்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அன்றெல்லாம் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்கள் என்று ஏதுமில்லை. ஆகவே என் அப்பா வீட்டிலேயே ஒரு சிங்கத்தை வளர்த்து வந்தார். முழுமையாக வளர்ந்த ஆண்சிங்கம். எத்தனை பெரியது என்றால் அன்று ஐந்து வயதான நான் நின்றால் என் அளவுக்கே அதன் முதுகும் உயரமாக இருக்கும். எப்போதாவது அது கதவைப் பற்றிக்கொண்டு எழுந்து நின்றால் அந்த பிரிட்டிஷ் பாணி மாளிகையின் பத்தடி உயரமான வாசலில் மேல்சட்டத்தில் அதன் தலை தட்டும். அது தரையில் தலைவைத்து படுத்திருக்கும்போது தலையின் உயரம் மட்டுமே என் இடைவரை வரும். அது ஒரு பூதம், சிங்கம் அத்தனை பெரிதாக இருக்காது,  அது சிந்தே  [Chinthe] என்ற யாளி மாதிரியான தெய்வப்பூதம்  என்று பேச்சிருந்தது. உள்ளூர் மக்கள் சிங்கத்தை பார்த்திருக்கவுமில்லை.

நாங்கள் அப்போது குடியிருந்தது அன்றைய ஒருங்கிணைந்த அஸ்ஸாம் பிராந்தியத்தில் இருந்த இன்றைய நாகாலாந்து பகுதியில் கோகிமாவிலிருந்து பர்மா செல்லும் வழியில் ஸிங்கி [Zinki] ஆற்றின் கரையில் இருந்த புங்க்ரோ [Pungro] என்னும் ஊரில். அன்று அது மிகச்சிறிய ஊர். ஊரே அல்ல, சுற்றிலும் காடு இருக்க நடுவே மரத்தாலும் மூங்கில் தட்டிகளாலுமான நாற்பது வீடுகள், அவ்வளவுதான். ஒரே ஒரு தெரு, அதில் ஒரு போஸ்டாபீஸ். குதிரைகளும் கழுதைகளும் இளைப்பாறுவதற்கான ஒரு சத்திரம். பிரிட்டிஷ் ராணுவ அவுட்போஸ்ட். அதுதான் போலீஸ் ஸ்டேஷனும்.

அருகே ஒரு சந்தை. அது வெள்ளிக்கிழமைகளில் காலையில் கூடி இருட்டும் வரை நடக்கும். தலைச்சுமையாக மலைக்குடிகள் தோல், தேன் முதலிய பலவகையான பொருட்களை கொண்டுவந்து உப்பு முதல் துணிகள், அம்புமுனைகள், கத்திகள் போன்ற பலவகையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். உள்ளூர் தலைவர் ஒருவர் தீர்வை வசூலிப்பார். பிரிட்டிஷாருக்கு அவர் ஆண்டுதோறும் அதற்கான கப்பத்தை கொடுத்துவிடுவார். சந்தையை ஒட்டித்தான் அந்த பொருளியலே இயங்கியது. சந்தையில் முக்கியமாக விற்கப்பட்டது மலைச்சாராயம். அதை வாங்க திமாப்பூரிலிருந்துவரை வியாபாரிகள் வந்தார்கள்.

பர்மாவும் அப்போது பிரிட்டிஷ் ஆட்சியில்தான் இருந்தது. திமாப்பூரில் இருந்து பர்மாவரை மிமா, சக்கபாமா, புட்சேரோ, சிஸாமி, லவோசாமி, லோங்மாத்ரா என்று பல மலைச்சிற்றூர்களை இணைத்துக்கொண்டு செல்லும் ஒரு ரகசிய கழுதைப்பாதை இருந்தது. அங்கிருந்து கஞ்சா இந்தியாவுக்கு வந்து கல்கத்தாவை அடைந்தது. அதை கல்கத்தாவில் பெரும்பாலும் ஆங்கிலேய வணிகர்கள் வாங்கினார்கள். உலகம் முழுக்க கொண்டுசென்று விற்றார்கள். அவர்கள் அந்த ரகசிய வணிகத்திற்காக கல்கத்தாவின் கவர்னருக்கு மிகப்பெரிய தொகையை லஞ்சமாக வழங்கினர். கல்கத்தா முதல் கௌஹாத்தி வரை தாராளமாகவே பணம் கொடுக்கபட்டமையால் அந்தச் சாலை சட்டத்தடை இல்லாமல் பேணப்பட்டது.

என் அப்பா பிரிட்டிஷாருக்கு செல்லப்பிள்ளை. புங்க்ரோவில் அவர் காவன் புரா [Gaon Burah] என்னும் கிராமத்தலைவர்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குமான இடையீட்டாளராக இருந்தார். தரகர் என்று கொஞ்சம் கௌரவக்குறைவாகச் சொல்லலாம். பிரிட்டிஷாருக்கு அவரைப்போன்றவர்கள் தேவைப்பட்டார்கள். கிராமத்தலைவர்களுக்கும் உண்மையில் அவர்கள் தேவைப்பட்டார்கள். கிராமத்தலைவர்களின் அதிகாரம் நிலையானது அல்ல, அது குடியில் எவராலும் அறைகூவப்படலாம். அவர் இன்னொரு குடியால் எதிர்த்துக் கொல்லப்படலாம். ஆனால் பிரிட்டிஷ் பின்புலம் ஒரு குடித்தலைவரை ஆற்றல்கொண்டவராக ஆக்கியது. ’நான் கொம்பு எடுத்து ஊதினால் துப்பாக்கிகளுடன் பிரிட்டிஷ் ராணுவம் வந்துசேரும்’ என்ற அச்சுறுத்தல் குடித்தலைவர்களிடம் நாளுக்கொரு முறையாவது எழுந்தது. அதற்குப்பதிலாக அவர்கள் விசுவாசத்தை அளித்தனர்.இந்த அதிகார வியாபாரத்தை என் அப்பா சீராக நடத்தி வைத்தார். அதற்காக அவர் கஞ்சா வியாபாரத்தை கண்டுகொள்வதில்லை என்று உறுதிப்பாட்டை பிரிட்டிஷாரிடமிருந்து பெற்றார். பழங்குடிகளிடமிருந்து ஏராளமான பரிசுகளைப் பெற்றார். ஆகவே அவர் பெருஞ்செல்வந்தராக திகழ்ந்தார்.

என் அப்பாவின் சொந்த ஊர் கேரளத்தில் கருநாகப்பள்ளி. இயற்பெயர் காவுத்தறை இட்டூப்பு. அவர் சிறுவனாக இருந்தபோது அவருடைய அப்பா காவுத்தறை மாத்துண்ணி மாப்பிள்ளை அன்றைய கொச்சி அரசர் சக்தன் தம்புரான் ராமவர்மாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்த ஒரு நாயர் குழுவுக்கு டச்சுக்காரர்களிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிக்கொடுத்தார். கிளர்ச்சி கொடூரமாக ஒடுக்கப்பட்டது. காவுத்தறை மாத்துண்ணி மாப்பிள்ளை படைவீரர்கள் தன் வீட்டை அடைவதற்கு ஒருமணிநேரம் முன்னரே பிள்ளைகுட்டிகளுடன் கொச்சி துறைமுகத்தின் உள்கடலில் நின்ற ப்ளூபேர்ட் என்ற கப்பலில் ஏறிவிட்டிருந்தார். நேராக பர்மாவுக்கு போய்ச் சேர்ந்தார். ஆனால் அங்கே சென்ற சிலநாட்களுக்குள் அவருடைய கையிருப்பு கொள்ளையடிக்கப் பட்டது. அவர் கொல்லப்பட்டார். அவருடைய விதவை எட்டு குழந்தைகளுடன் அனாதையாக நின்றாள். அங்கே அவள் ஒரு செட்டியாருக்கு வைப்பாட்டியானாள். குழந்தைகளை ஒவ்வொன்றாக அவள் கைவிட்டாள். என் அப்பாவை நான்கு வயதில் ராயல் பர்மீஸ் சர்க்கஸுக்கு விற்றுவிட்டாள்.

என் அப்பா சர்க்கஸிலேயே வளர்ந்தார். ஆரம்பத்தில் டிரெப்பீஸ் முதலிய ஆக்ரபாடிக்ஸ் வித்தைகளைச் செய்தார். பிறகு சிங்கங்களை பழக்கும் ‘காப்டன்’ ஜோசப் டி-க்ரூஸின் சீடரானார். ஜோசப் இறந்ததும் சிங்கங்கள் அவர் பொறுப்பில் வந்தன. ராயல் பர்மீஸ் சர்க்கஸிலிருந்து அப்பா எப்படி பிரிட்டிஷ் அரசின் ஏஜெண்ட் ஆனார் என்பது மர்மம்தான். அவர் ஒற்றராகச் செயல்பட்டிருக்கலாம். கஞ்சா வியாபாரியாகவும் செயல்பட்டார் என்பதில் சந்தேகமில்லை. கடைசிவரை பர்மிய எல்லைக்குள் நுழைய அஞ்சுபவராகவே இருந்தார். அவரால் பர்மிய மொழியையும் நாகர்களின் அங்கமி, சொக்ரி, கேசா, சாங்கி, லோங்லா என்று ஏறத்தாழ பதிமூன்று மொழிகளையும் பேசமுடியும். ஆயிரம் வார்த்தைகளுக்குள் அமைந்த பழங்குடிமொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பதுமொழிகளை புரிந்துகொண்டு உதிரிச்சொற்களால் பேசுவார்.

அப்பா அழகானவர். இளமையிலேயே செய்துவந்த கடும் உடற்பயிற்சிகளால் அவர் உடல் சிற்பம்போல ஆகிவிட்டிருந்தது. தொப்பையே இல்லாத நீண்ட உடல். நரம்போடிய கைகள். எப்போதும் நன்றாக சவரம் செய்த பச்சைக்கன்னம். யூடிகொலோன் வாசனை. நல்ல வெண்ணிறத் தோல் அவருக்கு. கண்களிலும் சற்று பச்சை உண்டு. அவரை போர்ச்சுகீசியரா என்று பலரும் கேட்பதுண்டு. ஐரோப்பியர்களுக்குரிய கூர்மையான மூக்கு. அடர்ந்த கரிய தலைமுடியை பக்கவாட்டில் சீவியிருப்பார். மெழுகுதடவி கூர்மையாக முறுக்கிய மீசை. அவருடைய கண்கள் எப்போதுமே மெல்லிய சிரிப்பும் கூர்ந்து கவனிக்கும் சூழ்ச்சியும் கொண்டவை. தாழ்ந்த குரலில் சொற்களை எண்ணி எண்ணிப் பேசுவார். அவருடைய அத்தனை அசைவுகளுமே நடனம் போன்றவை. நான் என் அப்பாவை அணுகும்போதெல்லாம் அந்த அசைவுகளால் மயக்கப்பட்டு விழிகொட்டாமல் பார்த்திருப்பேன். அவர் என்னை பொருட்படுத்தியதில்லை.

அவருக்கு ஐரோப்பிய நாட்டுப்புற இசையில் ஈடுபாடு இருந்தது. நூறு கிராமபோன் ரிகார்டுகளுக்குமேல் வைத்திருந்தார். ஒவ்வொருநாளும் அந்தியில் அவற்றை ஒலிக்கவிட்டு மாடியில் வராந்தாவில் அமர்ந்து பிராந்தி அருந்துவார். அப்போது சிறியதாக நறுக்கி காரமாக வறுக்கப்பட்ட மாட்டிறைச்சியை உண்பார். இரவில் நெடுநேரம் அவர் இசை கேட்பதுண்டு. துப்பாக்கி சுடுவதிலும் அவர் நிபுணர். அத்தனை திறமைகளும் உடற்பாவனைகளும் சர்க்கஸிலிருந்து வந்தவை என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஏனென்றால் சர்க்கஸில்தான் ஐரோப்பாவின் மிகச்சரியான கனவான்களின் மாதிரிகளை வடித்தெடுக்கிறார்கள். கச்சிதமான உடலும் அசைவுகளும் உடையும் பாவனைகளும் குரலும் கொண்டவர்கள். குறிப்பாக துப்பாக்கி வித்தையோ கத்திவித்தையோ போடுபவர்கள் மிகமிக ஐரோப்பியத்தனமான ஒயில் கொண்டவர்கள். எனக்கு என்னதோன்றுகிறது என்றால், சர்க்கஸ் ஜிப்ஸிகளுக்குரியது. ஜிப்ஸிகள் நல்ல நடிகர்கள். அவர்கள் ஐரோப்பிய பிரபுக்களை பார்த்து நடிக்கிறார்கள். நடிப்பவர்கள் மூலத்தைவிட மேம்பட்ட வடிவங்களாக ஆகிவிடுவார்கள்.

அப்பா காட்டுக்குள் அமைந்த அந்த மாளிகையை ஏன் வாங்கினார் என்பது எனக்கு புரியாத புதிர். அவருக்குள் எங்கோ அப்படி ஓர் ஏக்கம் இருந்திருக்கலாம். அது பிரிட்டிஷ் மரவியாபாரியான வில்லியம் அல்பரி என்பவர் கட்டியது. அவர் தேக்குத்தடிகளை ஸிங்கி ஆறுவழியாக பர்மாவில் ஓடும் சிண்ட்வின் ஆற்றுக்கு கொண்டுசேர்த்து அங்கே அறுத்து தடிகளாக்கி வியாபாரம் செய்துவந்தார். ஆனால் பெரிய தேக்குமரங்களின் எண்ணிக்கை குறையக்குறைய வியாபாரம் நஷ்டமாகியது. ஸிங்கி ஆற்றில் ஆண்டில் ஐந்துமாதங்களுக்கே தடிகளை கொண்டுசெல்லும் அளவுக்கு நீர்ப்பெருக்கும் இருக்கும். ஆகவே அவர் வணிகத்தை விட்டுவிட்டு திமாப்பூருக்கும் பிறகு அங்கிருந்து கோகிமாவுக்கும் சென்றார். அப்பா அந்த கைவிடப்பட்ட மாளிகையை மிகக்குறைந்த விலைக்கு வாங்கிச் செப்பனிட்டார்.

பெரிய மாளிகை அது. கனமான மரங்களை நட்டு உருவாக்கப்பட்ட இரண்டு ஆள் உயரமான வேலியால் சூழப்பட்டது. அதே அளவு உயரமான கேட் வலுவான இரும்புச் சக்கரங்களின்மேல் அமைந்திருந்தது. வண்டிகள் ஏதாவது வந்தால்தான் அதை திறப்பார்கள். மற்றபடி சிறிய வாசல் ஒன்று உண்டு. அதற்கு வெளியே ஒரு காவல்மாடம். அதில் எப்போதும் உள்ளூர் காவலன் ஒருவன் கையில் ரைஃபிளுடன் அமர்ந்திருப்பான். அவனை உள்ளிருந்து அழைக்க ஒரு மணி உண்டு, அவன் தலைக்குமேலேயே தொங்கும். அதன் சரடு நீண்டு மாளிகையின் திண்ணையில் ஒரு சந்தன கைப்பிடியுடன் தொங்கிக்கொண்டிருக்கும்.

செங்கல்கள் அடுக்கி தரையிடப்பட்ட பெரிய முற்றத்திற்கு அப்பால் கண்ணாடிச் சன்னல்களை முகப்புகளாக கொண்டு எழுந்து நின்றிருக்கும் இரண்டு அடுக்கு மாளிகை. முகப்பில் தேக்குமரத்தாலான எட்டு தூண்கள் நின்றிருக்கும் வராண்டா. அதில் சுட்டமண் ஓடுகள் பரப்பப்பட்ட சிவந்த தரை. மரத்தடிகளால் ஆன படிகளில் ஏறி அதை அடையவேண்டும். இடப்பக்கம் செருப்புகளை வைப்பதற்கான அடுக்கு, அருகே அமர்ந்து செருப்பு அணிவதற்கான பீடம். வலப்பக்கம் கோட்டுகளை கழற்றி மாட்டுவதற்கான குமிழிகளுடன் ஒரு தேக்குமர ஸ்டாண்ட். இருபுறமும் பல அடுக்குகளினாலான கண்ணாடிச்சன்னல்கள். நாகாலாந்து வழக்கப்படி வராந்தா முழுக்க பூந்தொட்டிகள்.

வாசல் பத்தடி உயரமானது. தடிமனான மரத்தால் செய்யப்பட்டு இரும்புக் கீல்களில் நிலைகொள்வது. பித்தளைக் குமிழ்களும் பட்டைகளும் கொண்டது. அதனூடாக நுழைந்ததுமே பெரிய கூடம். அதன் மிக உயர்ந்த கூரையில் இருந்து தொங்கும் சரவிளக்குகள். அங்கிருந்து மரத்தாலான படிகள் ஏறி இருபக்கமும் விரிந்து ஒரு வராந்தாவாக ஆகி மாடி அறைகளை இணைத்தன. மாடிப்படிக்கு இருபுறமும் இரு வாசல்கள். ஒன்று இன்னொரு கூடத்திற்கும் படுக்கையறைகளுக்கும் சென்றது. இன்னொரு வாசல் விருந்துக்கூடத்துக்கும் அதையொட்டிய அறைகளுக்கும் கொண்டுசென்றது. சுவர்கள் சுதையாலானவை. அவற்றின்மேல் தடித்த தேக்குமர உத்தரங்கள் அமைந்து கூரையை தாங்கின.

முதன்மைக் கூடத்தில் மொரோக்கோ தோலுறை போடப்பட்ட பன்னிரண்டு நாற்காலிகள் அரைவட்டமாக போடப்பட்டிருந்தன. நேர் எதிரில் கணப்பு. அதனருகே அப்பாவின் வழக்கமான சாய்வு நாற்காலி. அதில் மெத்தைக்கு செம்பட்டு உறை போட்டிருந்தார். நேர் முன்னால் குட்டை மேஜையில் தோலுறைபோட்ட புத்தகங்கள், குறிப்பேடு, பேனாக்கள் போட்டுவைத்த பீங்கான் கிண்ணம், நீலக்கண்ணாடியாலான மைக்கூடு, காகிதங்களை வைக்கும் நீள்சதுர தேக்குமரப்பேழை, ஆமையோடு மூடியிட்ட ஒரு பேழையில் பேனாவுக்கான நிப்புகள், பொன்னால் வேலைப்பாடு செய்யப்பட்ட வெள்ளிமூடியிட்ட இன்னொரு பேழையில் காகிதக் கிளிப்புகள் குண்டூசிகள் போன்றவை. ஆனால் அப்பா அவற்றை பயன்படுத்துவதே இல்லை. அவர் பயன்படுத்தும் பொருட்கள் நீளமான தந்தப்பேழைக்குள் சிவப்பு வெல்வெட்டில் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இருந்த பலவகையான புகைக்குழாய்கள்தான்.

இரண்டு மேஜைகளில் ஒன்று காலியாக இருக்கும், அதில்தான் பொருட்களை வைப்பது எல்லாம். இன்னொரு அலங்காரத்திற்கானது. அதன்மேல் காகிதப்பூ வைக்கப்பட்ட சீனத்து பீங்கான் பூந்தொட்டிகள், பலவகையான ஜப்பானியப் பீங்கான் சிலைகள், பர்மிய தந்தப்பொம்மைகள். தந்தத்தாலான சீப்புகள், வெள்ளியாலான அலங்கார விளிம்புள்ள கைக்கண்ணாடிகள். பித்தளையாலான பீரங்கிப் பொம்மைகள் நான்கு இருந்தன. இரும்பில் வார்க்கப்பட்ட பிரிட்டிஷ் குதிரைவீரன் சிலைகள் அக்காலத்தைய மோஸ்தராக இருந்தது. சுவர்களில் பெருக்கல் போல பளபளக்கும் பயனெட்டுகள் கொண்ட ரைஃபிள்களை மாட்டிவைப்பது அன்றைய வழக்கம். அவை மெழுகுமின்னும் ஈட்டிமரக் கட்டைகள் கொண்டவை. டிரிக்கர் வளையங்கள் தேய்ந்து பித்தளை பொன்னிறம் கொண்டிருக்கும். உடைவாட்களை சித்திரச்செதுக்குப் பித்தளை உறைகளுடன் வரிசையாக மாட்டிவைத்திருப்பதும் அக்கால வழக்கம்.

எவரும் பயன்படுத்தவில்லை என்றாலும் மையக்கூடத்தில் இடைவரை உயரமான, கண்ணைப்பறிக்கும் அலங்காரங்கள் நிறைந்த பித்தளைக் குடுவை கொண்ட, பாரசீகபாணி ஹூக்காவை வைத்திருப்பார்கள். ஒருமூலையில் ஒரு பெரிய சீன ஜாடி. அதுவும் அன்றைய பிரிட்டிஷ் மோஸ்தர்தான். கரிய ஈட்டிமரத்தில் செய்யப்பட்டு பளபளக்கும் மிகப்பெரிய பியானோ இல்லாமல் கூடங்களே இல்லை. எங்கள் வீட்டில் சுவர்களில் ஒரு பெரிய டிரம்பெட்டும்  மாட்டப்பட்டிருக்கும். பொன் என பளபளக்கும் பித்தளையாலானது. எனக்கு அது  தங்கத்தாலான ஒரு  மலைப்பாம்பு சுருண்டு சுவரில் ஒட்டியிருப்பதாகத் தோன்றும். மறுஎல்லையில் இடையளவு உயரமான கண்ணாடி பெட்டிக்குள் வயலின், கித்தார் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. அவற்றை எடுப்பதே இல்லை. வெறும் அலங்காரப்பொருட்கள். அதன்மேல் ஒரு கிராமபோன் பெட்டி. அதன் வாய் பொன்னிறமாக பெரிய பூவரசம்பூ போன்று இருக்கும்.

கூடங்கள், படுக்கையறை எங்கும் கணப்பு உண்டு. கணப்பைச் சுற்றியே நாற்காலிகள் அமைந்திருக்கும். ஆனால் அங்கே கணப்பு பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. நாட்கணக்கில் பெருமழை பெய்யும்போதும் பிப்ரவரிமாத குளிர் உச்சத்திற்குச் செல்லும் சிலநாட்களிலும் மட்டுமே தேவைப்படும். ஆனாலும் பிரிட்டிஷ் உளவியலுக்கு உள்ளறை வாழ்க்கை என்பது கணப்பைச் சார்ந்தது. பிரிட்டன் போலன்றி அங்கே காற்றில் மகரந்தம் அதிகம். ஈரப்பதமும் வெப்பமும் எப்போதுமுண்டு. ஆகவே தோல்பரப்புகள், மரப்பரப்புகள் பூசணம்பூத்துக்கொண்டே இருக்கும். வேலையாட்கள் இரவுபகலாக சுத்தம்செய்துகொண்டே இருக்கவேண்டும். பட்லர்  அதோங் தலைமையில் இருபது வேலைக்காரர்கள் அங்கே இருந்தனர்.

எட்டு படுக்கையறைகளும் இரண்டு உட்கூடங்களும் கொண்டது அந்த மாளிகை. சமையலறையும் வேலையாட்களுக்கான தங்குமிடமும் தனியாக கூரையிட்ட ஒரு தாழ்வாரத்தால் இணைக்கப்பட்ட கட்டிடங்களாக விலகி அமைந்திருந்தன. முழு கட்டிடமும் சுட்ட ஓடு போட்ட உயரமான எட்டு கூம்புகளாக அமைந்த கூரைகள் கொண்டது. ஓட்டுக்கு அடியில் தேக்குப்பலகையால் சீலிங். மாடியில் நான்கு படுக்கையறைகளும் ஒரு சிறுகூடமும் மட்டும்தான். மாடிவராந்தாவில் மூங்கில் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். அங்கே அமர்ந்திருந்தால் ஸிங்கி ஆறு ஒரு நீலவளைவாக காட்டுக்கு நடுவே ஓடும் அழகிய காட்சியைப் பார்க்கலாம். இணையான உயரத்தில் பூத்த மரங்கள் இலைக்குவைகளுடன் காற்றில் கொப்பளித்துக்கொண்டிருக்கும்.

அப்பா சர்க்கஸில் இருந்தபோதே ஒரு பர்மியப்பெண்ணை மணந்து ஒரு மகளைப் பெற்றிருந்தார். அவர் புங்க்ரோவுக்கு வந்தபோது அந்த சிறுமி அவருடன் இருந்தாள். அவர்கள் புங்ரோவின் சந்தை அருகே ஒரு வீட்டில் வாழ்ந்தனர். அப்பா அங்கே வேரூன்றி ஸிங்கிமேனரை வாங்கியபோது அங்கே என் அம்மாவும் நானும் குடிபோனோம். என் அம்மா நாகாலாந்துப்பெண். அப்பா அவளை குடிவழக்கபடி பரிசாகப் பெற்று மணந்திருந்தார். எனக்கு இரண்டு வயதாகும்வரை நான் எங்கள் குடியினரின் மலைக்கிராமத்தில் மூங்கில்வீட்டில்தான் இருந்தேன். அங்கிருந்து நேரடியாக ஸிங்கிமேனருக்கு குடிபெயர்ந்தேன். என்ன நிகழ்ந்தது என்றே எனக்கு இப்போது நினைவுகூர முடியவில்லை. ஒற்றை அறைகொண்ட வீட்டில் இருந்து அந்த மாளிகைக்குச் சென்றபோது அதை ஒரு ஊராகவே நான் நினைத்தேன். ஆரம்பகட்ட ஆர்வம் குறைந்ததும்  “எனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை, நாம் வீட்டுக்குப் போவோம்”என்று அம்மாவிடம் அடம்பிடிக்கத் தொடங்கினேன்.அம்மா என்னை ஓயாமல் சமாதானப்படுத்தினாள்.

அம்மாவுக்கு அப்பாவுடனான உறவு என்ன என்று என்னால் சொல்லமுடியவில்லை. அம்மாவும் அப்பாவும் உல்லாசமாக அமர்ந்து பேசுவதை நான் கண்டதே இல்லை. அம்மா பெரும்பாலும் சமையற்காரர்களின் பகுதியிலேயே வாழ்ந்தாள். இரவு உறங்குவதற்காக மட்டுமே மாளிகைக்குள் போனாள். நான் சமையற்காரி மோனாவுடன் இரவில் படுத்துக்கொள்வேன். பெரும்பாலும் சமையற்கட்டிலேயே நான் வாழ்ந்தேன். அம்மாவும் அங்கேதான் மகிழ்ச்சியாகச் சிரித்துப்பேசி வாழமுடிந்தது. அப்பாவின் மூத்தமகள் ஹாய்மா ஒருமுறைகூட சமையலறைப் பக்கம் வந்ததில்லை. அவளுக்கு அப்போது பதினான்கு வயதுதான். ஆனால் மாடியில் தனக்காக தனியாக படுக்கையறையை அமைத்துக்கொண்டாள். மாடியிலுள்ள கூடத்திலோ வராந்தாவிலோ அமர்ந்திருப்பாள்.

அந்த வீட்டுக்கு நாங்கள் குடிவந்து ஏழுமாதங்களுக்குப் பின்புதான் அப்பா  சிங்கத்தை அங்கே கொண்டுவந்தார். அப்பா அதற்கு சிம்பா என்று பெயரிட்டிருந்தார். ஆப்ரிக்காவின் ஸ்வாஹிலி மொழியில் சிம்பா என்றால் சிங்கம். ஒருநாள் எங்கள் மாளிகையின் முகப்பு விரியத்திறந்து பெரிய வண்டி ஒன்று உள்ளே வந்தது. இரண்டு குதிரைகளால் இழுக்கப்பட்ட அது உள்ளே வந்து சரிந்து நின்றபோது மாளிகையிலுள்ள அனைவருமே எட்டிப்பார்த்தார்கள்.  மூங்கில்பாயால் கூடு அமைக்கப்பட்ட அந்த வண்டியின் உள்ளே இருந்து ஒரு இரும்புக்கூண்டு மூங்கில்கள் மேல் வைக்கப்பட்டு சறுக்கி இறக்கப்பட்டது. தரையை அது அடைந்ததும் பெரிய கர்ஜனை ஓசை எழுந்தது. நான் அலறி அம்மாவை பற்றிக்கொண்டேன். அனைவருமே பதறி ஓலமிட்டுக்கொண்டிருந்தார்கள்.

கனமான இரும்புக் கம்பிகளுக்கு உள்ளே சிவப்புநிறமாக பசு போன்ற ஒரு விலங்கைக் கண்டேன். “அது என்ன? பசுவா?” என்று எவரோ கேட்டார்கள். “குதிரை!” என்று வேறெவரோ சொன்னார்கள். “அது புலி! சிவப்பான புலி!” என்று மோனா சொன்னாள். “அது அங்கே பர்மாவில் உண்டு” குதிரைகளுக்கு காதுகளுக்குள் மெழுகுவைத்து சுத்தமாக மூடி மூக்கில் வாடை வராமலிருக்க யூடிகொலோன் பூசிய துணியை கட்டி அவ்வளவு தூரம் கொண்டுவந்திருந்தனர். ஆனாலும் அவை உள்ளுணர்வால் உடல் சிலிர்த்தபடியே இருந்தன. சிங்கத்தை ஓரக்கண்ணால் கண்டதுமே அவை கனைத்தபடி துள்ளத் தொடங்கின. வண்டியே குதித்துக்கொண்டிருந்தது. கூண்டு இறங்கியதுமே வண்டியை ஓட்டிக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்கள்.

கூண்டுக்குள் சிம்பா கர்ஜித்துக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தது. அப்பா அருகே சென்று கூண்டுக்குள் கையை விட்டு அந்த சிங்கத்தை தொட்டார். சிம்பா ஒருகணம் உறைந்து நின்றது. பின்னர் கர்ஜனை செய்தபடி அப்பாவின் கையை பொய்யாக கடித்தது. வாலைச்சுழற்றியபடி நிலைகொள்ளாமல் குதித்தது. அப்பா கூண்டின் கதவை திறந்தார் அது பாய்ந்து இரு கைகளாலும் அப்பாவை பிடித்தது. நான் அலறி கண்களை மூடியபடி மீண்டும் அம்மாவை கட்டிப்பிடித்து நடுங்கினேன். அப்பா அதன் எடை தாளாமல் பின்னால் சென்று மல்லாந்து விழுந்துவிட்டார். அது அவர் முகத்தை நக்கியது. அவர் மேல் தன் உடலை வைத்து அமர்ந்து அவரை பொய்யாக கடித்தது. அவர் அணிந்திருந்த கோட்டை கடித்து அவரை கவ்வி வாயில் தூக்கிக்கொண்டு வராந்தாமேல் பாய்ந்தேறியது.

அப்பா சிரித்துக்கொண்டிருந்தார். வேலைக்காரர்கள் எல்லாரும் மதில்சுவர்மேல் ஏறி நின்றார்கள். ஹாய்மா சிரித்துக்கொண்டு அருகே சென்றதும் சிங்கம் அவளை நோக்கி வந்து அவளை கவ்விக்கொண்டு இன்னொரு மூலைக்குப் பாய்ந்தது. பிறகு அவளை நக்கி நக்கி உந்தி சுவரோடு அழுத்தியது. அதன் உடலசைவுகளும் துள்ளலும் வால்சுழலலும் எல்லாமே மகிழ்ச்சியில் வெறிகொண்ட நாய்போலவே இருந்தன. அது உறுமியும், முனகியும், துள்ளியும், தன்னைத்தானே சுழன்றும், தரையை கையால் அறைந்தும், நகங்களால் தரையைச் சுரண்டியும் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. அப்பா அதன் தலையை தடவித்தடவி அமைதிப்படுத்தினார். மெல்ல அது அமைதியடைந்து அவர் அருகே படுத்துக்கொண்டது. அப்பா அதன் பிடரிமயிர்க் கற்றைகளுக்குள் கைவிட்டு அளைந்தார். ஹாய்மாவும் அருகே அமர்ந்து அதன் காதுகளுக்குள் இருந்து சில சிறு பூச்சிகளை வெளியே எடுத்து போட்டாள். நாய் மாதிரியே அது அவர் கையை முத்தமிட்டு நுனிநாவால் நக்கியது. அடிக்கடி ஹாய்மாவின் கையையும் நக்கியது.

“அது அவர்களிடம் பழகியிருக்கிறது” என்று மோனா சொன்னாள். “அது அவர்களை நினைவில் வைத்திருக்கிறது.”

“அது இனி இங்கேதான் இருக்குமா?” என்று வேலைக்காரி பெமா கேட்டாள்.

“அதற்கு காட்டுக்குள் குகை ஏதாவது பார்த்திருப்பார்” என்று மோனா சொன்னாள். “அதை இங்கே எப்படி வைத்திருக்க முடியும்?”

இருந்தாலும் அவர்கள் சந்தேகத்துடன் அம்மாவிடம் அவர்கள் சிங்கம் அங்கே இருக்குமா என்று கேட்டார்கள். அம்மா ஒன்றும் சொல்லவில்லை.

சிம்பா பங்களாவிலேயேதான் தங்கியது. அந்த நடைமுறையுடன் பொருந்திப்போக எங்களுக்கு பல வாரங்களாயின. சிம்பா அப்பாவுடன் மாடிக்குச் சென்று அங்கே இருந்தது. நாய் போலவே வீட்டுக்குள்ளும் வெளியிலும் வாலை தூக்கியபடி உலவியது. வேலைக்காரர்கள் இருக்கும் பின்கட்டையும் முன்பக்கத்தையும் பெரிய தேக்குமர வேலி ஒன்றால் பிரித்தார் அப்பா. அதன்பின் வேலைக்காரர்கள் அதைப்பற்றிய பயமில்லாமல் ஆனார்கள். வேலிக்கு இப்பால் நின்று அதை கூர்ந்து பார்த்தார்கள். அது அவர்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. கண்களைச் சிமிட்டியபடி, காதுகளை மடித்து தலையை குலுக்கியபடி, வாய்பிளந்து கொட்டாவி விட்டபடி முன்கால்நீட்டி பின்காலில் படுத்திருந்தது. மல்லாந்து படுத்து நான்கு கால்களையும்  தூக்கி முதுகை நெளித்தது. பின்கால்களை நீட்டி வயிற்றை தரையோடு ஒட்டி தரையில் தாடையை பதித்து கிடந்து தூங்கியது.

அப்பாவுடன் எந்நேரமும் அது இருந்தது. அவர் காலையில் வெளியே இளவெயில் விழுந்த திண்ணையில் அமர்ந்து படிக்கும்போது அருகே அதுவும் படுத்திருக்கும்.அதன் பிடரி மயிர் தீ போல சுடர்விட்டு நெளியும்.  அவர் கூடத்தில் இருக்கையில் அவர் அருகே காலடியில் அமர்ந்திருக்கும். அவர் வீட்டுக்குள்ளேயே நடைசெல்வார். அதுவும் அதே வேகத்தில் உடன் செல்லும். அதன் நடை இறுக்கிக் கட்டிய வில்லைப்போலிருக்க வயிறும் தாடையும் தளர்வாகக் தொங்குவதன் விந்தையை நான் சன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருப்பேன். நான் அதனருகே போனதே இல்லை. முன்னரே நான் அப்பா இருக்கும் இடங்களுக்கு போனதில்லை. அது வந்தபின் அந்த வேலியை தாண்டுவதே இல்லை.

காலையில் நான்குமணி நேரம் மட்டும் அதை கூண்டில் அடைப்பார்கள். அது அந்த கூண்டுக்குப் பழகி அந்நேரம் நன்றாக தூங்கிவிடும். கூண்டில் அடைப்பதற்கு முன்பு அதற்கு உணவு அளிப்பார்கள். உண்டதுமே அது மலம்கழித்துவிட்டு கூண்டுக்குள் சென்று படுத்துவிடும். கூண்டு இரும்பாலானது. தரை உறுதியான மரம். எங்களூரில் எப்போதும் மழைச்சாரலும் ஈரமுமாக இருக்கும். சிங்கத்துக்கு அது ஏற்றது அல்ல. ஆகவே கூண்டுக்குள் எப்போதுமே ஈரமே இல்லாமல் உலரவைத்திருப்பார்கள். வெளிச்சம் வராமல் தட்டி இறக்கி இருட்டாக்கியும் வைத்திருப்பார்கள். உள்ளே அது சிறுநீர் கழிப்பதில்லை. அதன் உதிர்ந்த முடிகளை தினமும் கூட்டிப் பெருக்கி தரையில் சிறுபூச்சிகள் வராமலிருக்க சுண்ணாம்புத்தூளை போட்டு துடைத்து வைப்பார்கள்.

மூன்று நாட்களுக்கு ஒருமுறை அதற்கு காட்டில் இருந்து ஒரு காட்டுப்பன்றியையோ மானையோ வேட்டையாடிக் கொண்டுவந்தார்கள். ஒரு மானை மூன்றாகப் பகுத்து அதற்கு உணவாக அளித்தார்கள். எஞ்சிய இறைச்சியை கமுகுப்பாளையில் அழுத்தமாகப் பொதிந்து ஒரு பெரிய பித்தளைச் சட்டிக்குள் போட்டு நீருக்குள் மூழ்கடித்து வைப்பார்கள். இரண்டாம்நாள் இறைச்சி கொஞ்சம் நாற்றமடிக்கும். மூன்றாம்நாள் சற்று நீர்விட்டிருக்கும். ஆனால் சிங்கம் அதை பொருட்படுத்தாமல் உண்டது. அப்பா ஒரு துணியால் அதன் பற்களை சுத்தம் செய்வார். பிரஷால் அதன் வாயை அவர் தூய்மை செய்யும்போது அது அண்ணாந்து காட்டும். கழிப்பறையை தூய்மை செய்வதுபோலிருக்கிறது என்று மோனா சொன்னாள்.

அப்பா அதை தானே பராமரித்தார். அதன் பிடரிக்குள் சுண்ணப்பௌடரை போட்டு ஒரு பெரிய பிரஷால் சீவுவார். குதிரையை உருவி விடுவதுபோலவே பிரஷால் அதன் உடலுக்கும் செய்வார். கால்நகங்களை வாரம் ஒருமுறை வெட்டிவிடுவார். அதற்கு மாதம் ஒருமுறை யூகலிப்டஸ் எண்ணையாலான பூச்சிக்கொல்லியை ஊட்டிவிடுவார். அது அவருடன் செல்லநாய் போலவே பழகியது. ஹாய்மா அதன் மேல் சாய்ந்துகொண்டு புத்தகம் படிப்பதைக்கூட நான் பார்த்தேன். கூண்டில் அது இருக்கும் நேரத்தில் வேலைக்காரர்கள்  வீட்டை தூய்மை செய்து முடிப்பார்கள். அதன்பிறகு அந்த மையப்பங்களா முழுக்க முழுக்க அவர்கள் இருவருக்கும், சிங்கத்திற்கும் மட்டும்தான்.

அப்பாவைத்தேடி பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளும், வெள்ளைக்காரப் பிளாண்டர்களும், அவ்வழியாக பர்மாவுக்குச் செல்லும் வியாபாரிகளும், பயணிகளான பிரிட்டிஷ் கனவான்களும் வருவதுண்டு. அவர்களின் பார்வையில் அவர் என்னவென்றே தெரியாத எதையோ செய்பவர். ஆகவே சந்தேகத்திற்கு உரியவர்.  ஆனால் அந்த வீடு அவருக்கு ஓர் அடையாளத்தையும் அந்தஸ்தையும் உருவாக்கியது. அந்த சிங்கம் அவரை ஒரு குட்டி அரசராகவே மாற்றிவிட்டது. விருந்தினர் வரும்போது அப்பா சிம்பா அருகில் நின்றிருக்க திண்ணைமேல் கையில் பைப்புடன் நின்று “வருக வருக” என்று புன்னகையுடன் வரவேற்பார். அவர்கள் திகைத்து பதறி நிற்க சிங்கத்தை இட்டுச்சென்று கூடத்தில் ஒரு தடித்த சங்கிலியில் கட்டிப்போட்டுவிட்டு   “உள்ளே வாருங்கள்” என்பார். அவர்கள் கால்கள் பதற, கண்கள் சுழலத்தான் வருவார்கள். “ஒன்றும் செய்யாது. நம்மைவிட தற்கட்டுப்பாடு உடையது. ஆனால் உங்களுக்காக கட்டிப்போட்டிருக்கிறேன்” என்று அப்பா சொல்வார். “கொஞ்சம் பழகிவிட்டால் நீங்களே அதனுடன் விளையாட ஆரம்பித்துவிடுவீர்கள்”,

ஆனால் எவரும் அதனுடன் அப்படி விளையாடவில்லை. கணப்பருகே அப்பா அமர்ந்திருக்க அவர்கள் தோலுறையிட்ட சிம்மாசனம் போன்ற நாற்காலிகளில் நுனியில் அமர்ந்து அவ்வப்போது அவர் காலடியில் கிடக்கும் சிங்கத்தை பார்த்தபடி நடுங்கும் குரலில் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்பாவின் உபசரிப்புகள் வலுவாக இருக்கும். மிக மெல்லிய குரலில், சீரான ஆங்கிலத்தில், மிகச்சம்பிரதாயமான சொற்களை பேசுவார். மரியாதை உச்சத்தில் இருக்கும். ஆனால் விருந்தினர் அச்சொற்களை செவிக்குமேல் கொண்டுசெல்ல முடியாது. வந்தவர் ராணுவத்தில் கர்னலாகக்கூட இருப்பார், ஆனால் சிம்பா அவரை அந்தக்கூடத்தில் ஆதரவற்றவராக உணரச்செய்துவிடும். அவர்களின் உடலசைவு, மொழி அனைத்திலும் பணிவு வெளிப்படும்.

எவரும் அங்கே தங்குவதில்லை. அப்பா அவர்களுக்காக ஆற்றங்கரையில் ஒரு விருந்தினர் மாளிகை கட்டியிருந்தார். அங்கே வேலைக்காரர்களும் உண்டு. வந்தவர்கள் முக்கியமானவர்களாக இருந்தால் அவர்களுக்கான விருந்துகளும் அங்குதான் நடக்கும். அப்பா வெள்ளையர்களை மகிழ்விக்கும் கலை தெரிந்தவர். ஊரிலிருந்து நாகா இனப்பெண்களும் அங்கே கொண்டு செல்லப்படுவார்கள். எவரோ எப்படியோ லியோ என்ற அடைமொழியை அவருக்குப் போட்டனர். லியோ இட்டூப் என்றே அவர் அழைக்கப்பட்டார். ஈட் லியோ என்று வெள்ளைக்காரர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். அப்பா அந்த அடைமொழியை விரும்பினார் கடிதங்களில் தன் பெயருக்குப் பின்னால் லியோ என்று அடைப்புக்குறிக்குள் போட்டுக்கொண்டார்.

அப்பாவுக்கு உள்ளூரில் அசாதாரணமான அதிகாரத்தை அந்தச் சிங்கம் அளித்தது. பர்மாவின் காட்டில்  சிங்கம் இல்லை, முன்பெப்போதாவது இருந்திருக்கலாம். மழைக்காடுகள் சிங்கங்களுக்கு உரியவை அல்ல. ஆனால் சிங்கத்தின் அலங்காரவடிவம் ஒன்று அவர்களின் சிற்பக்கலையிலும் தொன்மத்திலும் உண்டு. அதற்கு சிந்தே என்று பெயர். அது நம்மூர் யாளி போல. அதைப்போன்ற சிங்க வடிவங்களை நாம் நம் கோயில்களில் பார்க்கலாம்.சீனாவில் அரண்மனைகள் மற்றும் பௌத்த மடாலயங்களை காவல்காக்கும் சிங்கங்கள் ஷிஷி எனப்படுகின்றன. இவை மிகமிக ஆடம்பரமான சுருள்பிடரிகளுடன், உருண்டைக்கண்களுடன், உக்கிரமாக வாய்பிளந்து நின்றிருக்கும். ஆண்சிங்கம் வலக்காலில் ஓர் உருளையை பிடித்திருக்கும். ஷிஷி சீனாவில் இருந்து பர்மா வந்து அங்கிருந்து கேரளக் கடற்கரைக்கு வந்து யாளியாக உருமாறியது என்று ஊகிக்கலாம். திபெத்,தாய்லாந்து. கம்போடியா எல்லா இடங்களிலும் இதைப்போன்ற அலங்காரச் சிங்கவடிவங்கள் உண்டு.

பர்மாவிலிருந்துதான் அலங்காரச்சிங்கம் சிங்களத்திற்குச் சென்றது என்பார்கள். மகாவம்சத்தில் உள்ள கதைதான் பர்மாவிலும் சொல்லப்படுகிறது. வங்கத்தின் இளவரசியான சுபாதேவி காட்டுக்குச் சென்றபோது ஒரு சிங்கத்தைக் கண்டு காதல்கொண்டாள். அவள் சிங்கத்தை புணர்ந்து ஒரு மகனை ஈன்றாள். அவன் பெய சிம்ஹபாகு. சிங்கத்துடன் அவள் உறவுகொண்டதை அறிந்த அரசன் அவளை அழைத்துச் சென்றுவிட்டான். அவளும் சிங்கத்தை மறந்தாள். சிங்கம் சீற்றம் கொண்டு ஊருக்குள் வந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் அறைந்துகொன்றது. சுபாதேவி தன் மகனை அந்தச் சிங்கத்தைக் கொல்லும்படி ஆணையிட்டு அனுப்பினாள். சிம்ஹபாகு தன் தந்தையான சிங்கத்தை கொல்ல காட்டுக்குச் சென்றான். போர் நடந்தது. போரில் தன்னை எதிர்த்து நின்றவனின் ஆற்றலைக் கண்டு அது தன் மகன்தான் என்று சிங்கம் புரிந்துகொண்டது. அது மகிழ்ச்சியாக தோல்வியடைந்தது. சிம்ஹபாகு சிங்கத்தைக் கொன்றான்.

சிம்ஹபாகு திரும்பி அன்னையிடம் வந்து சிங்கத்தைக் கொன்றதைச் சொன்னான். சிங்கம் சாகும்போது தன்னை ஆசீர்வாதம் செய்ததைப் பற்றி சொன்ன அவன் அது ஏன் என்று அன்னையிடம் கேட்டான். சுபாதேவி, அந்தச் சிங்கம் அவன் தந்தைதான் என்றாள். மனம் உடைந்து, அன்னையை சாபமிட்டு நாட்டிலிருந்து அகற்றிய சிம்ஹபாகு சிங்கத்திற்கு ஊரெங்கும் சிலையெடுப்பித்தான். அதுதான் சிந்தே என்னும் வடிவம். சிந்தே என்பது சிங்கம் என்ற சொல்லின் மருவாகக்கூட இருக்கலாம். அந்தக்கதையை அர்ஜுனனை மணந்து பப்ருவாகனன் என்ற மகனை ஈன்ற சித்ராங்கதை என்னும் மணிப்பூர நாட்டு அரசி தன் மகனையே அர்ஜுனனை கொல்லும்படி அனுப்பியதையும், அவன் அர்ஜுனனை கொன்றதையும் பற்றிய கதையின் வளர்ச்சியாகவும் காணலாம்.

பழங்குடிகள் என் அப்பா சிந்தேயை தன் வீட்டில் வைத்திருப்பதாக நம்பினார்கள். சிந்தே மொஷே என்று அவர்கள் என் அப்பாவை அழைத்தனர். மாஸ்டர் என்ற சொல்லின் மருவு மொஷே. அப்பா அந்த பயத்தையும் விரும்பினார். ஊருக்குள் அவர் அரிதாகவே சென்றார். செல்லும்போது அவரை பார்த்தவர்கள் எல்லாம் திகைத்து எழுந்து கைகூப்பி நிற்பார்கள். அவரை நேருக்குநேர் பார்க்கக்கூட அவர்கள் அஞ்சினார்கள். அவருடைய பெயரை உச்சரிப்பதையே தவிர்த்தார்கள். அவருடைய ஆணைகளுடன் செல்லும் குடித்தலைவர்கள் மறுசொல் இல்லாத ஆதிக்கத்தை அடைந்தார்கள். உண்மையில் பூசல்கள் ஓயாமல் நடந்துகொண்டே இருந்த அந்தப்பகுதியில் முழுமையான அமைதியை அப்பா அந்த ஆதிக்கம் வழியாக உருவாக்கினார்.

சிந்தே காவலுக்கு இருப்பதனால் அப்பா ஒரு போதிசத்வர் என்ற நம்பிக்கை மெல்ல உருவாகியது. லோகநாத போதிசத்வர் என்று அவரை அவருடைய ஏவலர்களே சொல்லிப் பரப்பினார்கள். மெய்யாகவே எங்கள் வீட்டில் சிந்தே இருக்கிறதா என்று பார்ப்பதற்காக உள்ளூர்க்காரர்கள் வந்து தொலைவில் மரங்களின்மேல் ஏறி அமர்ந்திருப்பார்கள். சிம்பா வெளியே சென்று நின்று பிடரிகுலைக்கும். சிலசமயங்களில் எழுந்து கால்களை சுவர்மேல் ஊன்றி நிற்கும். மரங்களின்மேல் அலறலோசை கேட்கும். சிலசமயங்களில் அவர்கள் அஞ்சி உதிர்ந்து விழுந்துவிடுவதும் உண்டு.

பார்த்த முதல்கணம் முதலே நான் சிம்பாவை அஞ்சினேன். என் கனவுகளிலெல்லாம் அது வந்தது. ஒவ்வொரு முறையும் மிகமிக மெல்ல காலெடுத்து வைத்து, மூக்கை நீட்டி, உணர்ச்சியில்லாத கொடூரமான கண்களுடன் அணுகி வந்தது. தீ எரிந்தபடியே அருகே வருவதுபோல. நான் அலறி எழுந்து மோனாவை கட்டிக்கொண்டேன். படுக்கையில் சிறுநீர் கழித்திருந்தேன். மோனா என்னை அணைத்து “அது இங்கே வராது… தூங்கு” என்று தட்டிக்கொடுத்தாள். நான் நெடுநேரம் நடுங்கிக்கொண்டிருந்தேன். மீண்டும் கண்மூடினேன். அந்த சிங்கம் அங்கேயே அமர்ந்திருந்தது. மெல்ல எழுந்து நாக்கால் மோவாயை நக்கியபடி என்னை நோக்கி வந்தது. நான் அலறிக்கொண்டு மீண்டும் எழுந்தேன்.

பலமுறை அப்பா எனக்கு அந்தச் சிங்கத்தை பழக்க முயற்சி செய்திருக்கிறார். என்னை அழைத்து வரும்படி அம்மாவிடம் சொல்வார். அம்மா வந்து அழைத்ததுமே நான் அலறிவிடுவேன். கைகால்களை உதைத்து கூச்சலிடுவேன். என்னை இழுத்துச் செல்வார்கள். “ம்ம்” என்று அப்பா ஓர் அதட்டல் போட்டதுமே  நான் ஓசையடங்கி சடலம்போல் ஆகிவிடுவேன். என்னை செங்குத்தாகத் தூக்கி கொண்டுசென்று சிங்கத்தின் அருகே விடுவார். சிறுநீர் ஒழுக நடுங்கியபடி நிற்பேன். “தொடு… தொடு அதை” என்பார். என் கையை அவரே பிடித்து அதன்மேல் வைப்பார். பலமுறை அப்படி தொட்டிருக்கிறேன். என் கையில் அந்த தொடுகையை நான் உணர்ந்ததே இல்லை. அதன்பின் அப்பா என்னை விட்டுவிட்டார்.

ஒருநாள் நான் எதையோ எடுப்பதற்காக போனேன். சற்று முன்னர் வரை மோனா அந்த அறையை துடைத்துக்கொண்டிருந்தாள். அப்போது சிங்கம் கூண்டுக்குள் இருந்தது. ஆனால் நான் வருவதற்குள் மோனா உள்ளே போய், மணி அடித்து, சிங்கத்தை திறந்துவிட்டிருந்தார்கள். நான் என் பந்தை எடுத்துவிட்டு திரும்பியபோது நேர் எதிரில் சிங்கம் நின்றிருந்தது. என் கைகால்கள் எல்லாமே செத்து குளிர்ந்து எனக்கு தொடர்பற்றவையாக ஆகிவிட்டன. நாக்கு இறங்கி தொண்டையை அடைத்தது. சிலநிமிடங்கள் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. சிங்கமும் என்னைப் பார்த்தபடி அசையாமல் சின்றது. பின்னர் ஒரு காலை மெல்ல தூக்கி வைத்தது. ஒரு விக்கல்போல எனக்குள் அச்சம் வெடித்து வெளியேறியது. சிறுநீர் சூடாக கால்களில் வழிந்தது. “அ! அ!அ!” என்று ஓர் ஓசை எழுப்பினேன்.

சிங்கம் காதுகளை மடித்து மூக்கை முன்னால் நீட்டி மிகமெல்ல காலெடுத்து வைத்தது. அது கனவா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. கனவுதான் கனவுதான் என்று எனக்கே சொல்லிக்கொண்டேன். கையை நீட்டி பின்பக்கமிருந்த சுவரை தொடப்போய் அங்கே சுவர் இல்லாததனால் சரிந்து விழுந்தேன். சிங்கம் லேசாக உறுமியபடி என்னை நோக்கி வந்தது. நான் புரண்டு எழுந்து அலறியபடி பின்னாலிருந்த மரப்படிகளில் பாய்ந்து ஏறினேன். சிங்கம் படிகளில் ஏறி என்னை துரத்தி வந்தது. மேலேறியதும் படிக்கட்டை மூடும் பலகையை இழுத்து மூடிவிட்டு ஓடிச்சென்று திகைத்து நின்றேன். பொருட்களை போட்டு வைக்கும் கூடத்தில் எந்த திசை நோக்கி செல்வது என்று தெரியவில்லை. நான் கூச்சலிட்டபோது ஓசை எழவே இல்லை என்று கண்டுபிடித்தேன். அப்படியென்றால் இது கனவே தானா?

பலகைக்கதவை உந்தித் திறந்து சிங்கம் மேலே வந்து விட்டது. அதன் நகங்கள் நரநரவென பலகையில் பதிந்த ஓசையை நான் கேட்டேன்.  அது என்னை நோக்கி பாய்ந்தது, ஓசையே இல்லாமல், ஒரு சிவப்புநிற கம்பளம் காற்றில் சுழன்று வருவதுபோல. நான் குளிர்ந்த ஓசையில்லா அலறலுடன் ஓடி சிறிய அறைக்குள் புகுந்தேன். ஓசையுடன் கதவை மூடினேன். அங்கே கீழே தாழ் இருந்தது. அதைப்போட்டுவிட்டு மறுபக்கம் ஓடி வெளியே சென்றேன் அங்கே வராந்தாவுக்குச் சென்றதும் நேர் எதிரில் சிங்கம் நின்றிருப்பதை கண்டேன். பின்னால் செல்ல முயன்று சுவரில் முட்டி அப்படியே நெஞ்சடைத்து கீழே விழுந்தேன். என் வலக்கால் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது.

சிங்கம் அருகே வருவதைக் கண்டேன். மிக மெல்ல வந்து முகம் தாழ்த்தி என்னை முகர்ந்து பார்த்தது. நான் கண்ணீர் வழிய, நரம்புகளெல்லாம் இறுகி அசைவிழக்க, அப்படியே கிடந்தேன். சிங்கம் என்னை என் சட்டையின் காலரைக் கடித்து தூக்கிக்கொண்டது. அதன் வாயில் எடையில்லாதவனாக நான் தொங்கினேன். அது வராந்தா வழியாகச் சென்றது. கீழே ஏதோ காலடி ஓசைகேட்க தயங்கியது. பின்பு வராந்தாவின் கைப்பிடியை எளிதாகத் தாண்டி அப்பால் கூரைச்சரிவின் மேல் சென்றது. ஓட்டுப்பரப்பின் மேல் அது மிகமெல்ல காலடி வைத்து நடந்தது. ஓடுகள் அசையவில்லை. எரவாணத்தின் விளிம்பு வரைச் சென்று அங்கிருந்து கீழே தாவி முற்றத்தை அடைந்தது. நான் அதன் வாயில் தொங்கியபடி, பறந்திறங்குவதாக உணர்ந்தேன்.

அது முற்றத்தைக் கடந்து என்னை தன் கூண்டுக்குக் கொண்டு சென்றது. கூண்டுக்குள் என்னை போட்டு வாசலுக்கு குறுக்காக படுத்துக்கொண்டது. அது என்னை கொல்லப்போகிறது என்று நினைத்தேன். ஆனால் என்னை கூர்ந்து நோக்கிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தது. பின்னர் முன்கால்களை நீட்டி அவற்றின்மேல் தலையை வைத்து படுத்துக்கொண்டது. சிப்பி போன்ற கண்களால் என்னை பார்த்துக்கொண்டிருந்தது. நான் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதை முன்பு அத்தனை கூர்ந்து பார்த்ததே இல்லை. அது ஒரு காய்ந்த புல்லின் புதர்போல தோன்றியது. அதன் கண்கள் மூடின. நான் மிகமெல்ல எழுந்தேன். அது கண்களை திறந்தது. நான் மீண்டும் மிகமெல்ல அமர்ந்துகொண்டேன்.

என்னை எவராவது பார்த்தாலொழிய நான் வெளியே போகமுடியாது என்று தெரிந்தது. கூச்சலிட்டாலோ கடந்துசெல்ல முயன்றாலோ அது கடிக்கலாம். ஒரு அடி அடித்தால்கூட உயிர் போய்விடும். பொறுமையாக காத்திருக்கவேண்டியது மட்டும்தான் ஒரே வழி. அந்தப்பொறுமை பலனளிக்குமா என்றும் தெரியவில்லை. ஆனால் வேறு வழியே இல்லை. நான் மெதுவாக இயல்பாகிக் கொண்டே சென்றேன். சாய்ந்து அமர்ந்தேன். கால்களை நீட்டிக்கொண்டேன். கைகளை மடியில் வைத்தேன். அதைப் பார்க்கப் பார்க்க மீண்டும் உடல் பதறியது. ஆகவே எதிரே ஆடிக்கொண்டிருந்த மரங்களைப் பார்க்கத் தொடங்கினேன். என் மனம் மிக இயலபாக ஆகியது. மெல்ல மெல்ல இனிமையைக்கூட உணர்ந்தது. அந்த இனிமையுடன் தூங்கினேன். கனவில் சிங்கம் மெல்ல காலடி எடுத்து வைத்து என்னை அணுகியது. என்னை நக்கியது. என் அம்மா கைகளால் வருடிக் கொண்டிருப்பதைப் போல.

நான் சிம்பாவின் கூண்டுக்குள் இரண்டு மணிநேரம் இருந்தேன். என்னை தேடி அலைந்த மோனா சன்னல் வழியாக வெளியே தேடும்போது கூண்டுக்குள் இருந்த என்னை கண்டு கூச்சலிட அப்பா வந்து என்னை மீட்டார். சிங்கம் என்னை அவர் வெளியே எடுக்கும்போது தன் கைகளால் தட்டிவிடப் பார்த்தது. என் ஆடையைக் கவ்வி இழுத்தது, நான் அதன் உடைமை என்பதுபோல. ஆனால் என்னை காப்பாற்றிவிட்டார்கள். அப்பா சிரித்துக்கொண்டு “சொன்னேன் இல்லை? ஒன்றுமே செய்யாது. அது ஒரு பக்கா ஜெண்டில்மேன்” என்றார்.

அம்மா அலறியபடி ஓடிவந்து என்னை அள்ளித்தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கதறி அழுதாள்.  “நான் போகிறேன், நானும் என் மகனும் இங்கே இருக்க மாட்டோம்… நான் போகிறேன்” என்று அலறினாள்.

“உனக்கு என்ன கிறுக்கா? அது என்ன செய்தது உன் மகனை?” என்று அப்பா சொன்னார்.

“அது சிந்தே. அது என்னையோ என் மகனையோ ஒன்றும் செய்யாது, எனக்குத் தெரியும்… ஆனால் நீங்கள் போதிசத்வர் இல்லை… சிந்தேயை காவல் நிறுத்த நீங்கள் லோகபாலர் இல்லை.”

“சீ உள்ளே போடி…” என்று அப்பா கையை ஓங்கிக்கொண்டு வந்தார்.

அம்மா என்னை அணைத்தபடி பின்பக்கத்துக்கு ஓடிவிட்டாள். அன்று முழுக்க என்னை அம்மா அணைத்து முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். கண்ணீர் என் மேல் கொட்டிக் கொண்டே இருந்தது. சமையற்கட்டின் ஒரு மூலையில் ஒடுங்கிக்கொண்டாள்.

மோனா அருகே வந்து “சரி, ஒன்றும் ஆகவில்லையே. விடுங்கள்” என்றார்.

“அதன் கருணைதான் என்னை அச்சுறுத்துகிறது… அந்த அளவுக்கு கருணை இருந்தால் அது மெய்யாகவே சிந்தே என்றுதான் அர்த்தம்” என்று அம்மா சொன்னாள். “அது வெறும் விலங்கு, சிந்தே இல்லை என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார், அவருக்கே தெரியவில்லை. அது சிந்தேதான். சந்தேகமே இல்லை.”

“என்ன சொல்கிறீர்கள்?” என்று மோனா கேட்டாள்.

“சிந்தே காவல்பூதம்… அது தவறுகளை விட்டுவைக்காது. பழிசேர்ப்பவரை அது அழித்துவிடும்.”

“அதனாலென்ன? உன் மகனும் நீயும் என்ன பழி செய்தீர்கள்?”

“நான் இவருக்கு மனைவியாக இருக்கிறேன். இவன் இவருடைய ரத்தம். சிந்தேயிடமிருந்து இவனை நான் காப்பாற்றியாகவேண்டும்.”

“நீங்கள் சொல்வது புரியவில்லை” என்றாள் மோனா.

“உண்மையாகவே உனக்குப் புரியவில்லையா என்ன?” என்றாள் அம்மா.

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“நான் கிளம்புகிறேன்… இன்றைக்கே கிளம்புகிறேன்.”

“அவர் அனுப்பாமல் நீங்கள் எப்படி கிளம்ப முடியும்? இது காவல் உள்ள மாளிகை” என்றாள் மோனா.

அம்மா மீண்டும் என்னை உடலுடன் அணைத்துக்கொண்டாள். அன்றைக்கே இரவு என்னை அழைத்துக் கொண்டு சிறு துணிமூட்டையுடன் வெளியே கிளம்பினாள். நாங்கள் இருட்டில் எந்த வெளிச்சமும் இல்லாமல் காட்டுப்பாதை வழியாக நடந்தோம். பாம்புகளும் ஓநாய்களும் கழுதைப்புலிகளும் கரடிகளும் உலவும் காடு. அவற்றில் எவையெவையோ ஓசையிட்டுக் கொண்டிருந்தன. அம்மா என்னை அணைத்துக் கொண்டு சொன்னாள்  “உன்னை எந்த விலங்கும் ஒன்றும் செய்யாது. உன்னை சிந்தே ஆசீர்வதித்திருக்கிறது. சிந்தேயை நினைத்தாலே எல்லா விலங்குகளும் பதறி ஓடிவிடும்.”

நாங்கள் இருட்டினூடாக கண்வெளிச்சத்தை நம்பி மெல்ல மெல்ல  நடக்கையில் அம்மா சொன்னாள் “கேட்கிறாயா?”

“என்ன?” என்றேன்.

“சிந்தே நம்முடன் வருகிறது. காலடியோசை கேட்கிறது பார்.”

உண்மையில் கேட்டது. ஆனால் அது எங்கள் காலடியோசை எங்கோ எதிரொலிப்பது போலவும் இருந்தது.

“சிந்தே கூடவருகிறது. அது நம்மை காப்பாற்றும்” என்றாள் அம்மா. “அதன் காதுகளின் ஓசை கேட்கிறது.”

ஆச்சரியமாக, அந்த இரவில் காட்டுப்பாதையின் இருட்டில் முப்பத்தைந்து கிலோமீட்டர் நடந்து நாங்கள் எங்கள் கிராமத்தைச் சென்றடைந்தோம். எங்கள் கால்கள் வேர்களிலும் முட்களிலும் கற்களிலும் பட்டு புண்ணாகியிருந்தன. மூங்கில் இலைகளால் எங்கள் உடல்கள் இடைவெளி இல்லாமல் அறுக்கப்பட்டிருந்தன. எங்கள் கிராமத்தை நாங்கள் சென்றடைந்தபோது விடியற்காலை. வளர்ப்புநாய்கள் எங்கள் மணத்தை அறிந்து ஊளையிட்டு குரைத்தன. கரடிதான் வந்துவிட்டதோ என்று கைகளில் தீப்பந்தங்களுடன் வந்த எங்கள் குடிமூத்தவர்கள் எங்களைக் கண்டு திகைத்தனர். அவர்கள் நாங்கள் ஆவிகளாக வந்திருப்பதாக நினைத்தார்கள். அம்மா கைநீட்டி “மாமா, நான்தான். ரம்யோலா, என் மகனுடன் வந்துவிட்டேன்.”

என் தாய்மாமா அருகே வந்து “நீ எப்படி வந்தாய்?” என்று கேட்டார்.

“காடுவழியாக வந்தேன்” என்று அம்மா சொன்னாள்.

“தனியாகவா?” என்று அவர் கேட்டார்.

“எங்களுக்கு துணையாக சிந்தே வந்தது… கிராம எல்லை வரை வந்தது” என்று அம்மா சொன்னாள்.

அத்தனை பேரும் வியப்பொலி எழுப்பினார்கள். எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். அது நம்பக்கூடியதாகவே இருந்தது. இல்லாவிட்டால் எவரும் அக்காடு வழியாக வந்திருக்கமுடியாது. ஒரு வளர்ப்பு ஆடு வெளியே போனால்கூட எலும்புதான் மிஞ்சும். நீண்டநாட்களுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிந்தது, நாங்கள் அப்படி பத்திரமாக வந்தது என் உடலில் இருந்த சிங்கத்தின் மணத்தால்தான் என்று. என்னை அது கவ்விக்கொண்டு சென்றிருக்கிறது, நக்கியிருக்கிறது. நான் அதே ஆடையுடன் காட்டில் வந்தேன். என்னைச்சுற்றி அத்தனை விலங்குகள் ஓலமிட்டுக்கொண்டே இருந்ததும் அந்த மணத்தை உணர்ந்து அஞ்சித்தான்.

அம்மாவைத் தேடி அப்பா வரவே இல்லை. அம்மா கிளம்பியதை அறியாதவர் போலவே இருந்தார். அவர் வருவார், அல்லது அவருடைய ஆட்கள் வருவார்கள் என்ற சந்தேகமே இல்லாதவள் போல அம்மா இருந்தாள். பழைய தோழிகளுடன் கிழங்கு இடித்தாள். விறகுபொறுக்கச் சென்றாள். கைகளை கோத்துக்கொண்டு பாட்டு பாடினாள். இரவில் நடனமாடினாள். நானும் கிராமத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்தேன். அங்கே எனக்கு செய்வதற்கு ஏராளமாக இருந்தன. ஆடுமேய்க்க காட்டுக்குள் சென்றேன். காய்களையும் கிழங்குகளையும் சேகரித்து வந்தேன். பொறிவைத்து விலங்குகளைப் பிடிப்பதற்காகச் சென்றேன். ஒருநாள் என்ன ஏது என்று பார்ப்பதற்குள் கடந்து சென்றது. களைத்துப்போய் கனவுகளே இல்லாமல் தூங்கினேன்.

நாங்கள் வந்த ஏழாவது மாதம் அம்மா அஞ்சியது நடந்தது. மேலே பங்களாவிலிருந்து வேலைக்காரர்கள் பதறியடித்து ஓடிவந்தனர். அங்கே என்ன நடந்தது என்று அவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. இரவில் சிங்கத்தின் கர்ஜனை உரக்கக்கேட்டது. அப்பா கூச்சலிடுவதும் அதட்டுவதும் கேட்டது. அதன்பின் அவருடைய அலறல். ஆனால் எவரும் எல்லை தாண்டிச் செல்ல துணியவில்லை. விடிந்ததும் பின்பக்கமாக ஓடிவந்துவிட்டார்கள். பிரிட்டிஷ் மிலிட்டரி அவுட்போஸ்டுக்கு செய்தி சென்றது. அவர்கள் இருபதுபேர் ரைஃபிள்களுடன் அணிவகுத்து கிளம்பிச் சென்றார்கள். அவர்களுடன் உள்ளூர் இளைஞர்களும் சிலர் சென்றனர். அவர்கள்தான் நடந்ததை ஊருக்குச் சொன்னார்கள்.

ராணுவம் சென்றபோது பூட்டிய காம்பவுண்டுக்குள் சிங்கம் கர்ஜித்துக்கொண்டு சுற்றிவந்தது. காவலன் பதறி வெளியே ஓடிவிட்டான். அவர்கள் சுற்றியிருந்த மரங்கள்மேல் ஏறி உள்ளே பார்த்தார்கள். சிங்கம் மிகக்கோபமாக இருந்தது. தொடர்ந்து கர்ஜித்தபடி பதற்றமாக வீட்டுக்குள்ளும் வெளியிலும் சுற்றிவந்தது. அப்பாவின் உடல் எங்கே கிடக்கிறது என்று தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. சிங்கத்தை கூர்ந்து பார்த்த  லெஃப்டினெண்ட் அதன் வாயில் ரத்தமில்லை என்றார். அப்படியென்றால் அப்பா உள்ளே உயிருடன் இருக்க வாய்ப்புண்டு. சிங்கத்தை சுடவேண்டும். அவர் ஆணையிட்டதும் குண்டுகள் முழங்கின ஆனால் அது சட்டென்று உள்ளே போய்விட்டது. குண்டுகள் குறிதவறிவிட்டன.

லெஃப்டினென்ட் பலகோணங்களில் அந்த வீட்டை ஆராய்ந்தார். கேட்டை திறந்து உள்ளே போய் பங்களாவுக்குள் சிங்கத்தை வேட்டையாட முயன்றால் உயிர்ப்பலி நிச்சயம் நடக்கும். அதற்கு அந்த வீடு நன்றாகவே தெரியும். பதுங்கி இருந்து தாக்குவது சிங்கங்களின் வழக்கம். ஒருமுறை அது மாடி பால்கனியில் வந்து பார்த்துவிட்டுச் சென்றது. எங்கிருந்து வேண்டுமென்றாலும் பாயக்கூடும். மிகப்பெரிய சிங்கம். அனுபவமில்லாத ராணுவ வீரர்களை அது ஒரே அடியிலேயே கொன்றுவிடலாம். லெஃப்டினெண்ட் ஒரு உத்தியை வகுத்தார். அதன்படி முகப்பு வாசல் திறந்து வைக்கப்பட்டது. அதன் வழியாக சிங்கம் வெளியே செல்லும்போது சுட்டுவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அது மிக எளிது. முற்றம் ஒரு திறந்தவெளி. அந்த வாசலுக்கு குறிவைத்தாலே போதும்.

இருபது ரைபிள்கள் குறிவைத்து காத்திருந்தன. நேரம் கடந்துகொண்டிருந்தது. சிங்கத்தின் கர்ஜனை ஓயாமல் எழுந்துகொண்டிருந்தது. பின்னர் வீட்டிலிருந்து அது மிகமெல்ல காலடி எடுத்துவைத்து முற்றத்திற்கு வந்தது. ஆணை கிடைப்பதற்கு முன்னரே ஒரு வீரன் சுட்டுவிட்டான். வெடியோசை எழ குண்டு மரப்பலகையை உடைத்தது. சிங்கம் உரக்க கர்ஜித்தபடி பாய்ந்து, நம்பமுடியாத விசையுடன் காற்றில் எழுந்து, மிதந்துசெல்வதுபோல வேலியை கடந்து, வெளியே பாய்ந்து காட்டுக்குள் மறைந்தது. எவரும் அதை சரியாகப் பார்க்கவே இல்லை.

நெடுநேரம் அதற்காக காத்திருந்த பின், அது வராது என்று உறுதிசெய்துகொண்டு, உள்ளே சென்று பார்த்தார்கள். உள்ளே முதற்கூடத்திலேயே அப்பா கொல்லப்பட்டு கிடந்தார். ஒரே அடியில் சிங்கம் அவருடைய கழுத்தை முறித்திருந்தது. நகம் பதிந்து கன்னமும் கழுத்தும் தசை சிதைந்திருந்தன. ஆனால் கடித்தகாயம் ஏதுமில்லை. ரத்தம் வெளிவரவில்லை. வீட்டில் ஹாய்மா இல்லை. மேலே சென்று பார்த்தார்கள். எங்கும் அவள் இல்லை. அதன் பின்பு விசாரித்த போதுதான் இரவிலேயே அவள் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த ஒரு பர்மியனுடன் அவனுடைய குதிரை வண்டியிலேயே கிளம்பிச் சென்றுவிட்ட செய்தி தெரிந்தது.

சிங்கத்துக்கான தேடல் நீண்டநாள் நடைபெற்றது. அது அப்படியே மறைந்துவிட்டது. அதை எவருமே பார்க்கவில்லை என்றார்கள். சிங்கங்கள் நெடுந்தொலைவு செல்லக்கூடியவை. அது எல்லை கடந்து பர்மாவுக்கு தன் பழைய ஊருக்கே சென்றிருக்கும் என்றார்கள். ஆனால் ஸிங்கிமேனர் அப்படியே கைவிடப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு எவருமே அங்கே செல்லவில்லை. அந்தக்காடே கைவிடப்பட்டது. எங்கள் காடுகள் மனிதர்கள் சிலகாலம் செல்லாமலானால் புதர் மண்டி தழை செழித்து அப்படியே திரையிடப்பட்டு மூடப்பட்டுவிடும்.

அம்மா அப்பா இறந்த செய்தியை ஒருவிதமான இறுக்கத்துடன் எதிர்கொண்டாள். ஒருவார்த்தைகூட பேசவில்லை. அவளிடம் எது கேட்டாலும் பதில் சொல்லவில்லை. அப்படி ஒன்று நிகழவே இல்லை என்பதுபோல ஆகிவிட்டாள். ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று நடந்துவிட்டிருந்தது. ஆறுமாதத்தில் அவள் இறந்தாள். மெலிந்துகொண்டே இருந்தாள். இரவுகளில் முற்றிலும் தூங்குவதில்லை. நான் எழுந்து பார்க்கும்போதெல்லாம் முழங்காலை கட்டிக்கொண்டு சுருண்டு படுக்கையில் அமர்ந்திருப்பாள். அவள் உடல் மெலிந்து எலும்புக்கூடாக மாறியது. தோல் வெளிறி களிமண்ணைப்போல ஆகியது. அவள் கண்களில் எவரையுமே அறியாத வெறிப்பு ஒன்று எப்போதும் இருந்தது.

கடைசிநாட்களில் எதையோ புலம்பிக் கொண்டிருந்தாள். அவள் உதடுகள் சுருங்கி வாய் ஒட்டியிருந்தமையால் அவள் பேசுவதென்ன என்று எவருக்கும் புரியவில்லை. நான் உதடுகளில் காதை வைத்துக் கேட்டேன். அவள் சிந்தே சிந்தே என்று சொல்லிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதை நான் எவரிடமும் சொல்லவில்லை. என் கையை பிடித்து “போய்விடு… இங்கே வேண்டாம்” என்று சொன்னாள். “போகிறேன்” என்று நான் அவளுக்கு உறுதி அளித்தேன். அவள் முகத்தில் ஒரு தவிப்பு இருந்தது. அவளை பலர் சேர்ந்து இழுத்துப் பிடித்தால் எப்படி இருக்கும், அப்படி ஒரு திமிறல். பின்னர் அவள் முகம் விடுபடலை காட்டியது. இறந்துவிட்டிருந்தாள்.

 

நான் திமாப்பூரில் என் மாமனின் கடையில் வேலை செய்வதற்காகச் சென்றேன். அங்கிருந்து கோகிமாவுக்குச் சென்றேன். அங்கே நானே ஓர் ஓட்டலை தொடங்கினேன். அங்கே சில பிரச்சினைகள் உருவானபோது கௌஹாத்திக்கு வந்தேன். பின்னர் கல்கத்தாவுக்கு வந்தேன். நான் கல்கத்தா வந்தது மிகச்சிறந்த முடிவு. கல்கத்தா சுதந்திரத்திற்கு பின் காட்டுப்புகை போல வளர்ந்தது. நானும் கூடவே வளர்ந்தேன். இந்த ஓட்டல்கள், கடைகள் எல்லாமே நான் ஈட்டியவை. இந்த தெருவின் கடைவரிசையே என்னுடையதுதான்.

என் மனைவி நாகாலாந்தில் இருந்து இங்கே வீட்டுவேலைக்கு வந்தவள். எங்களுக்கு நான்கு மகன்கள். அவர்களுக்கு மொத்தமாக பதிமூன்று குழந்தைகள். அவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். அமெரிக்காவில் என் பேத்தியும் பேரனும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எட்டு, பத்து, பதிமூன்று வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் ஆலமரம்போல பரவிவிட்டேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் என் மனைவி காலமானாள். நான் கல்கத்தாவில் என் மூத்த பேரனின் வீட்டில் இருக்கிறேன். எந்தக் குறையும் இல்லை. இயல்பாக நிம்மதியாக உயிர் துறப்பேன்.

என் வாழ்க்கை சிந்தேயின் அருள். என் வாழ்க்கையில் நான் எப்படி வெற்றி பெற்றேன் என்று கேட்பார்கள். நான் அந்தக்கூண்டில் சிந்தேயின் முன்னால் இருந்தது போல பொறுமையுடன் இருந்தேன். என்னை மீறியவற்றின் முன் பதற்றம் கொள்ளாமலிருக்க பழகினேன். குறைந்த சேதத்துடன் பெரிய தீங்குகளில் இருந்து வெளிவந்திருக்கிறேன். அறுபத்தாறில் ஒரு கலவரத்தில் என் ஓட்டல்கள் கொளுத்தப்பட்டிருக்கின்றன. நான் அமைதியாக இருந்தேன். சிதல்புற்றுபோல மீண்டும் கட்டி எழுப்பினேன், நான் தோல்வியே அடைவதில்லை. சிதல்புற்று தோல்வியடையுமா என்ன? ஆயிரமாண்டுகள் அது வந்துகொண்டே தானே இருக்கும். மலைப்பாறைகளை தூக்கி வைத்தாலும் அது முளைத்துக் கிளம்பும் அல்லவா?

நான் சொல்ல வந்ததில் மிஞ்சுவது ஒன்று உண்டு. கல்கத்தாவில் இருக்கும்போது, புங்க்ரோவிலிருந்து வந்து நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நான் மீண்டும் அங்கே சென்றேன். அங்கே இருந்த என் குடியுடன் எனக்கு உறவே இல்லாமலாகிவிட்டிருந்தது. மலைகளுக்குமேலே குடியிருந்தவர்கள் கீழே வந்து ஸிங்கி ஆற்றங்கரை ஓரமாக வீடுகளை கட்டிக்கொண்டமையால் புங்க்ரோ பெரிய ஊராக மாறியிருந்தது. மலைகள் முற்றாகவே கைவிடப்பட்டிருந்தன. பர்மா இந்தியா பூசல் இருந்து கொண்டிருந்தமையால் காடுகளுக்குள் சிவிலியன்கள் செல்வதை ராணுவம் விரும்பவில்லை. பல இடங்களில் காடுகளுக்குள் முட்கம்பிவேலிகள் போட்டிருந்தனர்.

நான் என் அப்பாவின் மாளிகையைப் பார்க்க விரும்பினேன். புங்க்ரோவில் ஒரு வேடனை துணைக்கு அழைத்துக் கொண்டேன். அவன் அந்தக்காட்டுக்குள் சென்றதே இல்லை. ஆனால் அப்பகுதியின் காடுகள் அவனுக்கு தெரிந்திருந்தன. அவனும் நானும் காட்டுக்குள் ஊடுருவிச் சென்றோம். எங்களுக்கு வலப்பக்கம் ஸிங்கி ஆறு வந்துகொண்டே இருந்தது. அதுதான் வழிகாட்டி ஓசையும்கூட. காடு மூடியிருந்தாலும்கூட பச்சைப் புதர்களுக்கு நடுவே பழைய வழி சற்று எஞ்சியிருப்பதைக் கண்டேன். அதனூடாக ஒரு பகல் முழுக்க சென்றோம். இரவை ஒரு மரத்தின்மேல் கழித்து மறுநாள் மீண்டும் சென்றோம். காலைவெயில் எழுந்து காடுகளுக்குள் ஒளிச்சட்டங்கள் சரிந்து நின்றன. கண்ணாடித் தூண்கள் கொண்ட ஒரு மாளிகைக்குள் செல்வது போலிருந்தது. எங்கள் உடைகள் ஒளிவிட்டு ஒளிவிட்டு அணைய மிகப்பெரிய மின்மினிகளாக மாறிவிட்டிருந்தோம்.

மாளிகையை நான் முதலில் கண்டேன். ஒரு மனித உடல் அளவு பெரிய கொடிகள் அதன்மேல் பற்றி ஏறி முழுக்க சுற்றி வரிந்து நொறுக்கி பிடித்து அப்படியே நிறுத்தியிருந்தன. மாளிகையின் மேலேயே மரங்கள் எழுந்து நின்றன. ஆனால் சுற்றியிருந்த பெரிய மரச்சுவர்கள் அப்படியே மட்கி கருமையாக தெரிந்தன. முகப்பு கேட் விழுந்து கிடந்தது. நான் என் கையில் இருந்த பயனெட்டால் கொடிகளை வெட்டிக்கொண்டு முட்புதர்கள் மண்டிக்கிடந்த முற்றத்தின் பெயர்ந்து கிளர்ந்திருந்த செங்கற்களின் வழியாக வீட்டின் முகப்பு நோக்கி சென்றேன். அந்நிலையிலும் கண்ணாடிச் சன்னல்கள் உடையாமல் இருந்தமையால் அது ஒரு வீடென்றே தோன்றியது. அந்தவீடு மேலிருந்து கொடிகளால் கட்டி மண்ணுக்கு இறக்கப்பட்டது என்ற பிரமை எழுந்தது

நான் உள்ளே நுழைந்தபோது நீண்டகாலத்தை ஒரு காலடியில் கடந்திருந்தேன். அந்த கூடம் அப்படியே இருந்தது. தோலிருக்கைகளில் பூசணமே செடிபோல வளர்ந்திருந்தாலும், மாடிப்படிகள் சிதைந்து விழுந்திருந்தாலும், கூரையில் இருந்து கொடிகளும் வேர்களும்  இறங்கி மண்ணில் படிந்திருந்தாலும், அது அந்த கூடமேதான். எனக்கு ஏக்கத்தால் நெஞ்சு நிறைந்து கண்ணீர் வந்தது. எதை எண்ணி ஏங்குகிறேன் என்று நினைத்துக் கொண்டேன். எவருக்காகவுமில்லை. எனக்கு இறந்தகாலமே இல்லாமலானதைப் பற்றி. திரும்பிச் செல்ல இடமே இல்லாமல் முன்னால் ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையைப் பற்றி.

அப்போது   ஓர் உறுமலோசையை கேட்டேன். வாசலுக்கு அப்பால், இன்னொரு அறையிலிருந்து அது எழுந்தது. அங்கே ஜன்னல் வழியாக உள்ளே வந்த ஒளியில் எழுந்த நிழல் இப்பால் சுவரில் விழுந்தது. அது ஒரு பெரிய ஆண்சிங்கம். அதனுடன் இணைந்து பெண்சிங்கங்கள் இரண்டு எழுந்து வந்ததையும் நிழலசைவாகக் கண்டேன். “ஓடு” என்று மூச்சால் அலறியபடி பாய்ந்து முற்றம் வழியாக வெளியே ஓடினேன். வேடனும் என்னுடன் ஓடிவந்தான். நெடுந்தொலைவு விலகி வரும்வரை நாங்கள் முள் கல் எதையும் பார்க்கவில்லை.

நான் அதை இங்கே எவரிடமும் சொல்லவில்லை. நாகாலாந்து பர்மா எல்லையில் அக்காட்டில் சிங்கங்கள் இல்லை என்பதுதான் இன்றுவரை அரசாங்கப் பதிவு. அங்கிருக்கும் மக்களும் சிங்கங்களைப் பார்த்ததில்லை. ஆனால் அங்கிருந்து வந்த முதியவர்கள் சிலரிடம் பேசியிருக்கிறேன். அங்கே சிந்தே இருப்பதாகவும் மலைகளின் உச்சியில் வாழும் லோகபாலருக்கு அதுவே காவல் என்றும் சொல்கிறார்கள். நீங்கள் செல்லலாம், அங்கே நீங்கள் பார்ப்பது சிங்கங்களை அல்ல.

***

முந்தைய கட்டுரைவெண்முரசின் இறுதிநாவல்- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-1