அரிகிருஷ்ணன் முதலில் அதைப் பார்த்தபோது குரங்கு என்று நினைக்கவில்லை. அவன் டிவிஎஸ் பைக்கின் வீல் முடுக்கிக் கொண்டிருந்தான். எதிரே அமர்ந்திருந்தது மணிகண்டன் என்றுதான் நினைத்தான். “என்னலே, அவன் என்ன சொன்னான்? அக்கவுண்டிலே எளுதிக்க மாட்டான்னு சொன்னா இனி அவன் கடை வேண்டாம் கேட்டியா?” என்றபடி சக்கரத்தை கண்ணெதிரே பிடித்து லெவல் பார்த்தான்.
குரங்கு பதில் சொல்லவில்லை என்பதைக்கூட வேலை நடுவே அவன் கவனிக்கவில்லை. “வாங்குறதுக்கெல்லாம் அப்பப்ப பைசா எண்ணிக் குடுக்கணுமானா இங்க தினமும் பைசா வரணும்ல? நாம என்ன பலசரக்குக் கடையா நடத்துதோம்? ஒருநாளு ஆர்டரு வரும், ஒருநாளு வராது. வாற அன்னைக்கு தீத்திருதோம்லா? முன்னப்பின்ன இருக்கும், எப்பயாவது பைசா ஆறுமாசம் ஒருவருசம் நின்னிருக்காடே?” என்றான்.
எழுந்து பின் சக்கரத்தை தட்டிப் பார்த்தபடி “எந்த ஏவாரம்னாலும் நீக்குபோக்கு வேணும் பாத்துக்க. விட்டுக் குடுக்கல்லேன்னா பின்ன மூடிட்டு போவ வேண்டியதுதான்… அந்த பத்து எம்மெம் எடுடே” என்றான். “எவனுக்கும் நாம கடன்படல்லே. நமக்கு ஒருத்தனும் பைசா தரல்லே, நாம சோலிசெய்து பொழைக்கோம்” என்றபின் “பத்து எம்மெம்…” என்றவன் முன்னால் அமர்ந்திருந்தது குரங்கு என்று கண்டான்.
திடுக்கிட்டு “ஏ போ போ…” என்று கையை வீசினான். குரங்கு ஒரு இஞ்ச் பின்னால் போய்விட்டு மீண்டும் முன்னால் வந்தது. ”எளவு கடிச்சிரும் போலிருக்கே” என்றான்.
சுற்றுமுற்றும் பார்த்து அங்கே கிடந்த ராடை எடுத்து “ஏ போ” என்று ஓங்கினான். அது ர்ர்ர்ர் என்று பல்லைக் காட்டியது. அரிகிருஷ்ணன் எழுந்து நின்றுவிட்டான். கீழே கிடந்த கல்லை எடுத்து எறிந்தான். தன்மேல் அந்தக்குறி படாது என அவன் ஓங்குவதற்குள்ளாகவே குரங்கு புரிந்துகொண்டது. இடுப்பை சொறிந்தபடி மேலும் அருகே வந்தது. அவன் “ஏய், ஏய்” என்றபடி பின்னால் பாய்ந்தான்.
குரங்கு முன்னால் வந்து அந்த பைக்கின் அருகே சென்று அவன் முடுக்கிக் கொண்டிருந்த நட்டை தொட்டுப் பார்த்தது. குனிந்து அதை முகர்ந்து பார்த்தபின் எடுத்துக் கடித்தது.
அவன் அதை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். எழுந்தபோது அவன் கையிலிருந்த ஸ்பானரை கீழே போட்டிருந்தான். அது குனிந்து அந்த ஸ்பானரை எடுத்து கண்முன் கொண்டுவந்து பார்த்தது. முகர்ந்தும் வாயில் வைத்தும் பார்த்த பிறகு போல்ட் மேல் அதை வைத்து அவனைப் போலவே அதை முடுக்குவதாக பாவனை செய்தது. அதனால் ஸ்பானரை பிடிக்கவோ நட்டில் கவ்வவோ முடியவில்லை. ஆனால் அதன் வாய் அவன் அதைச் செய்யும்போது எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது.
அவன் சிரித்துவிட்டான். “அப்ப அப்ரண்டீசுக்காக்கும் வந்தே இல்ல? செரிதான்” என்றான். அருகே சென்று அதனிடம் “புதிசா வாறவனுகளும் உன் லெச்சணத்திலேதான் வாறானுக. நட்டை திருக கத்துக்கிட்டா போரும் அந்தாலே கடைய திறந்து போர்டை போட்டிருதானுக. அதை நம்பி எவனாவது பொண்ணும் குடுத்திருதான். பின்ன பைக்கு என்ன, தங்கச்சங்கிலி என்ன ,பங்கி கட்டிங் என்ன, கூலிங்கிளாஸு என்ன, ஒண்ணும் சொல்லவேண்டாம்….” என்றான்.
அவன் அருகே சென்றதும் குரங்கு ஸ்பானரை அவனை நோக்கி நீட்டியது. அவன் அதை வாங்கிக் கொண்டு அமர்ந்தான். பின்சக்கரத்தை ஒருமுறை முடுக்கிவிட்டு ”பத்து எம்எம், அதாவது எம்.சிக்ஸுக்குள்ளது. அந்நா கெடக்கு… எடு பாப்பம்” என்றான்.
குரங்கு அவனைக் கூர்ந்து பார்த்தது. அவன் ஒரு சிறுகல்லை எடுத்து அந்த ஸ்பானர் மேல் எறிந்தான். குரங்கு அதை பார்த்தது. பின்னர் அவனே எழுந்து சென்று அதை எடுத்துவந்து முன்வீலை கழற்றினான். குரங்கு அருகே வந்து அவன் தோளோடு தோள் ஒட்டிநின்று அவன் செய்வதை கூர்ந்து பார்த்தது. பின்னர் அவனை வியப்புடன் நிமிர்ந்து பார்த்து கண்சிமிட்டியது. அவன் அத்தனை வியப்பையும் பக்தியையும் எந்த கண்களிலும் பார்த்ததில்லை.
“சிம்பிளாக்கும்… கூர்ந்து பார்த்தா தெரிஞ்சுகிடலாம் கேட்டியா? ஆனா எவன் கூர்ந்து பாக்குதான்? ஒண்ணு சொல்லுதேன் தெரிஞ்சுக்க. எப்ப இந்த செல்போன் வந்ததோ அப்பவே கூர்ந்து பார்க்குத பழக்கம் போயிட்டுது. ஒருகையிலே செல்போனை வச்சுகிட்டே தொளில் செய்யுதான். வெளங்குமா? இல்ல கேக்கேன், வெளங்குமா?”
குரங்கு அவன் கையிலிருந்த ஸ்பானரை வாங்க முயன்றது. “ஆ, அது வேண்டாம். நீ அப்ரண்டீஸாக்கும்… இருக்கப்பட்ட இடத்திலே இருக்கணும். சும்மா கிடந்து சாடப்பிடாது, கேட்டியா?”
அவன் வேலைசெய்து கொண்டிருந்தபோது அதுவும் அவனருகே அமர்ந்து ,இடம் மாறி மாறி அமர்ந்து, கூர்ந்து பார்த்தது. அவன் ”அந்த எட்டு எம்மெம் எடு மக்கா” என்று சொல்லி ஒரு கல்லை எடுத்து எறிந்தான். குரங்கு ஓடிப்போய் அதை எடுத்துவந்து அவனிடம் நீட்டியது. அவன் புன்னகைத்து அதன் மண்டையில் தடவினான்.
மணிகண்டன் வந்து “அண்ணாச்சீ, கொரங்கு. கொரங்கு உங்க பக்கத்திலே” என்றான்.
அரிகிருஷ்ணன் “ஆமா அதுக்கு என்ன இப்ப? தொளிலு படிக்க சேந்திருக்கு புதிசாட்டு” என்றான்.
“அண்ணாச்சி கொரங்கு” என்று மணிகண்டன் கூவினான்.
“டேய் தெரியும்லே. கொரங்குதான். நாங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணாக்கும்… மர்க்கட சாதியிலே நல்ல வழிச்சுத்தம் உள்ள கொரங்காக்கும்… இங்கபாரு, சொன்னதைச் செய்யும்” என்றான் அரிகிருஷ்ணன்.
“அண்ணாச்சி காட்டு கொரங்காக்கும்” என்றான் மணிகண்டன்.
“எம்.த்ரீ எடுமக்கா” என்று குரங்கிடம் சொல்லி அவன் ஒரு கல்லை எடுத்து வீசினான். குரங்கு அதை எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தது.
“அண்ணாச்சீ!” என்று மணிகண்டன் அலறிவிட்டான்.
“மரியாதையா இருந்துக்கோ… இஞ்சபாரு, இனி எனக்கு இது போரும். மிஞ்சிப்போனா ஒரு வாழைப்பழம் கேக்குமா? உனக்கு குடுக்குத மூவாயிரம் ரூவா இருந்தா இதுக்கு ஒரு வருசம் வாழைப்பழம் வாங்கலாம்”
“அண்ணாச்சி அதுக்கு குடும்பம் இல்லல்லா, நமக்கு அம்மைக்கிளவி கெடக்கா.”
“அது செரி…” என்றான் அரிகிருஷ்ணன் “அப்ப சொல்லியாச்சு. உங்களுக்குள்ள பிரச்சினை வந்திரப்பிடாது. அண்ணன் தம்பியா இருந்துகிடணும், என்ன?”
“அது தம்பியா அண்ணனா? பாக்குத பார்வைய பாத்தா பெத்த அப்பன் பாக்குத மாதிரி இருக்கு.”
“நல்ல குரங்குடே…”
“குரங்குலே அப்டி உண்டா அண்ணாச்சி” என்றான் மணிகண்டன்.
“வாலியும் சுக்ரீவனும் இருந்தானுகள்லா” என்றான் அரிகிருஷ்ணன்.
“டீசலு பட்டா குரங்கு ஓடீராது.”
“ஓடல்லியே” என்ற அரிகிருஷ்ணன் எழுந்து இரு சக்கரங்களையும் அலைன் செய்தான். குரங்கு அவன் செய்வது ஒவ்வொன்றையும் மிகக்கூர்மையாக பார்த்தது.
“சாயை குடியுங்க அண்ணாச்சி” என்றான் மணிகண்டன்.
“இதுக்கு என்னமாம் வேணுமே.. நாம மட்டும் குடிச்சா நல்லாருக்காதுல்ல. டேய், நீ போயி ஒரு ஏத்தம்பழம் வாங்கிட்டுவா” என்றான் அரிகிருஷ்ணன் “இதையும் கூட்டிட்டு போ. இதுக்கு நம்ம கணக்கிலே பழம் குடுக்கணும்னு சொல்லு.”
அவர்கள் கிளம்பியதும் “இரு” என்றான். “அது செரியாவாது. இதுக்கு அவன் பழம் குடுத்தா ஊரிலே எல்லா குரங்கும் அவன்கிட்ட வந்து பழம் வாங்கிச் சாப்பிடும். எல்லாத்தையும் நம்ம பற்றிலே எழுதிப்போடுவான். இதுக்கு மட்டும் ரொக்கம்” என்றான்.
அவன் பத்துரூபாய் தாளை எடுத்து குரங்கிடம் கொடுத்தான். அது வாங்கி கூர்ந்து பார்த்து வாயில் வைக்க போனது. “வேண்டாம்” என்று அரிகிருஷ்ணன் சொன்னதும் கையை தாழ்த்தியது. “அவன் கூட போ… பழம் வாங்கித்தருவான்… போடே.”
குரங்கு அவன் கைநீட்டியதை புரிந்துகொண்டது. மணிகண்டன் போனதும் அவன் கூடவே போயிற்று.
அரிகிருஷ்ணன் கையை கழுவிவிட்டு வரும்போது இருவரும் வந்தனர். குரங்கு கையில் நேந்திரம்பழம் வைத்திருந்தது.
“அருமையா பைசாவ குடுத்து வாங்கிச்சு அண்ணாச்சி. அதுக்கு தெரிஞ்சிருக்கு” என்றான் மணிகண்டன்.
“அது கடைய உக்காந்து பார்த்திருக்கும்ல?”
“பாருங்க உரிக்காம கொண்டு வருது.” என்றான் மணிகண்டன். “கடைக்காரரு இதாருண்ணு கேட்டாரு. ஓனருக்க மச்சானாக்கும்னு சொன்னேன்”
“டேய்!”
“மச்சான்னா உங்களுக்கு ரெத்தசம்பந்தம் இல்ல அண்ணாச்சி, சும்மா இருங்க”
அவர்கள் அமர்ந்தனர்.அரிகிருஷ்ணனும் மணிகண்டனும் வடையையும் டீயையும் சாப்பிட்டார்கள். அரிகிருஷ்ணன் “சாப்பிடு” என்றதும் குரங்கு வாழைப்பழத்தை சாப்பிட்டது.
அரிகிருஷ்ணன் ஒரு பீடி பற்றவைத்தான். குரங்கு மல்லாந்து தரையில் படுத்து கால்மேல் கால்போட்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.
“என்னமோ நினைக்குது” என்றான் மணிகண்டன்.
“என்னத்தடே நினைக்கும்?”
“எடப்பாடி பளனிச்சாமியப் பத்தி… என்னண்ணாச்சி கேக்குதீக? கொரங்கு என்ன நினைக்கும்னு நமக்கு என்ன தெரியும்?” என்றான் மணிகண்டன்.
மீண்டும் அரிகிருஷ்ணன் ஸ்பானரை எடுத்தபோது குரங்கு எழுந்து வந்து அவனுடன் வேலையை கவனித்தது. அவன் கைசுட்டி ஒன்றை காட்டினால் எடுத்து தந்தது. ஆனால் ஒவ்வொன்றையும் ஒருமுறை முகர்ந்த பின்னரே செய்தது.
“நீ அந்த நட்டுகளை களுவு” என்றான் அரிகிருஷ்ணன்.
மணிகண்டன் கழுவ அமர்ந்தபடி “சூப்பர்ஸ்டாரு படமா எறக்குதாரு, பாத்தேளா அண்ணாச்சி?”என்றான்.
“பாக்க ஆளிருக்கு, எறக்குதாரு” என்றான் அரிகிருஷ்ணன்.
“அவரு படத்துக்குத்தான் நாலு தேட்டர்லே ஆளு வருது… அவருக்கு ஸ்டைலு இருக்குல்லா?”
நாராயணசாமி வாத்தியார் பைக்கில் வந்து நின்று “என்ன அரிகிருஷ்ணன், என்ன அது குரங்கா?” என்றார்.
“பிள்ளை இல்லைன்னு அனுமாருக்கு வேண்டினேன், திடீர்னு இப்டி வந்து பொறந்துட்டுது சார்.”
”ஏய் ஏய், நாயக்கமாருகிட்ட வெளையாடாதே கேட்டியா?” என்றபடி அவர் இறங்கினார். ”நமக்கு பூர்வீகம் கோயில்பட்டி பக்கமாக்கும். சூத்திலே எவனாம் சவிட்டினா சவிட்டுதான்னு தெரியுத அளவு புத்தி உண்டு.”
“உள்ளதுதான் சார், பாருங்க முகசாடை தெரியல்ல?” என்றான் மணிகண்டன்.
“டேய், டேய், வெளையாதே… ஸ்பானராலே மண்டையை உடைச்சிருவேன்” என்றான் அரிகிருஷ்ணன்.
நாராயணசாமி குரங்கு வேலை செய்வதைப் பார்த்து “எவ்ளவு நாளாட்டு இருக்குடே?” என்றார்.
“இன்னைக்கு காலம்பற வந்தது சார்.”
“இனி இது போகாது” என்றார் நாராயணசாமி வாத்தியார் “குரங்குகளை பாத்திருக்கியா? அதுகளுக்கு பெரிய பிரச்சினையே பொழுது போகல்லேங்கிறதுதான்… எல்லா குரங்கும் போர் அடிச்சுப்போயி உக்காந்திருக்கும். அதுக பண்ணுத அட்டூழியமெல்லாம் போர் அடிச்சு செய்யுததாக்கும்…”
“ஆமா” என்றான் மணிகண்டன் “கோட்டாவியா விடுமே!”
“அதுக ஒரு விசயத்தை பிடிச்சுக்கிட்டா பிறவு விடாது.” என்றார் நாராயணசாமி வாத்தியார். “குத்தாலத்திலே ஒரு செட்டு குரங்கு பாத்ரூம் டேப்லே தண்ணிய திறந்துவிடுறதையே வெளையாட்டா வச்சிருந்தது”
“ஆனா கடையிலே இருந்து நட்டு போல்ட்டுன்னு எடுத்திட்டு போனா நஷ்டமாக்கும்” என்றான் மணிகண்டன்.
“நீ எடுத்துட்டு போன எனக்க வாட்ச்சை பத்தி பேசுலே” என்றான் அரிகிருஷ்ணன்.
“அது பழசுல்லா?”
“பழசா? டேய் வாங்கி ஒரு வருசம்கூட ஆகாத வாச்சு.”
“அண்ணாச்சி, அந்த சம்பவம் பழசுன்னு சொல்ல வந்தேன்.”
“இவன் ஆளு கில்லிடே” என்றார் நாராயணசாமி “பாருடே, குரங்கும் சிரிக்குது.”
அவர்கள் சிரிப்பதை கண்டு குரங்கு இரு கைகளையும் கூப்பி தலைமேல் வைத்து தரையில் உருண்டு எழுந்தது
“விளுந்து விளுந்துல்லா சிரிக்கு!” என்றான் மணிகண்டன்.
“அதுக்கும் திருட்டு பழக்கிவிடாதே… அனுமாராக்கும்” என்றார் நாராயணசாமி.
“குரங்குன்னா திருடும்… ராமருக்க மோதிரத்தை அனுமாரு திருடினாரு, அதை சீதைக்க கிட்ட காட்டினாருன்னு ஒரு கதை உண்டுல்லா?” என்றான் மணிகண்டன்
“ஆமாடே ராமரு அந்த மோதிரத்தை தசரதன்கிட்ட திருடினாரு..” என்றான் அரிகிருஷ்ணன் “பொத்திட்டுபோ. மண்டையிலே சாத்திருவேன்.”
“உனக்கு நல்ல சிஷ்யன்… ராமாயணம் அப்டியே கரதலப்பாடம்…” என்றார் நாராயணசாமி வாத்தியார் “நான் சின்னப்பையனா இருக்கிறப்ப உனக்க அப்பா அனந்தன்பெருமாளுக்க வில்லுப்பாட்டை கேட்டவனாக்கும். மகாபாரதமும் ராமாயணமும் சம்பூர்ண பாடம்லா…. உனக்க அம்மையும் சேந்து பாடுவாளே. என்னா கொரலு. நவல்காட்டு ராஜலட்சுமின்னா நாஞ்சிநாட்டுக்கே பேரு தெரியுமே.”
“இப்ப ஒத்தையிலே இருந்து பாடுதா” என்றான் அரிகிருஷ்ணன்.
“நீ இங்க ஸ்பானர் பிடிக்கே” என்றார் வாத்தியார்.
“கஞ்சி குடிச்சு கெடக்கணும்லா?”
“கூட இந்த ராமாயணத்திலேயே எச்சிக்கையைவிட்டு ஆட்டுத பயலை வச்சிருக்கே”
“ஆளு வேணும்லா?” என்றான் அரிகிருஷ்ணன்
“அதான் இப்ப அனுமாரு இருக்காருல்லா?”
“இவன துரத்திப்போடலாம் நாய்க்கர்வாள், இவன் அந்தாலே போயி போட்டிக்கடைய போட்டிருவானே. அம்பதுரூபா கம்மி குடுத்தா நீங்க அங்க போயி நிப்பீங்க”
“வாருதே பாத்தியா?”
அரிகிருஷ்ணன் முந்தைய வேலையை முடித்துவிட்டு எழுந்து நாராயணசாமி வாத்தியாரின் பைக்கை பார்த்து “சாருக்கு என்ன பிரச்சினை?” என்றான்.
“அதை நீ இப்ப கேளு… டேய், இதில என்னமோ சத்தம் வருது. இந்தா பாரு” என அவர் முடுக்கிக் காட்டினார்.
“வயசாச்சுல்லா, சத்தம் வந்திட்டேதான் இருக்கும். நம்ம கிளவி ஒண்ணு கிடக்கு. அதுக்கும் இப்டித்தான், எப்பமும் சத்தம் ஒருபக்கம் லீக்காயிட்டேதான் இருக்கும். நாம செவிகுடுக்கப்பிடாது” என்றான் மணிகண்டன்
“வயசா? எட்டு வருசமாச்சு வாங்கி.”
“அதானே நான் சொன்னேன்” என்றான் மணிகண்டன்.
அரிகிருஷ்ணன் வண்டியை கூர்ந்து பார்த்தான். “சத்தம் கேக்குதது சின்ன பிரச்சினைதான். மட்கார்டிலே ஸ்க்ரூ எளகியிருக்கு… அதை செரிபண்ணிப் போடலாம்… ஆனா நாலஞ்சு பார்ட்டுங்க மண்ணு செம்மி துரும்பு பிடிச்சிருக்கு. களட்டி களுவிப்போட்டா பிரச்சினை இல்லை. வழியிலே நின்னுட்டா கஷ்டமாக்கும்” என்றான் “இப்டி ஒரு வண்டி வழியிலே நின்னாக்கும் ராமாயணக் கதையே தொடங்கிச்சு.”
“வெளங்கீரும்… உனக்க அசிஸ்டெண்டு எங்கேருந்து ராமாயணம் படிச்சான்னு இப்ப தெரியுது.”
அவன் கல்லை எடுத்து வீசிக்காட்ட, குரங்கு ஸ்பானரை தாவி எடுத்து வந்தது
“ஏலே, லெங்கை வரைக்கும் தாவிடும் போல இருக்கே” என்றார் நாராயணசாமி வாத்தியார்.
“வாலிலே தீ இல்லாம சாடணும், அவ்ளவுதான்” என்றான் மணிகண்டன்.
“ஒரு குரங்கு இருக்குதது நல்லதாக்கும்…” என்று அரிகிருஷ்ணன் சொன்னான். “ராமனை மாதிரி கிருஷ்ணனுக்கும் ஒரு குரங்கு இருந்திருந்தா வேடன் காலிலே அம்பு விட்டிருப்பானா?”
பேசிக்கொண்டே அவன் வேலை செய்ய கூடவே வேலையில் குரங்கும் தீவிரமாக ஈடுபட்டது. நாராயணசாமி வாத்தியார் “சத்தியமாட்டுடே, நம்பவே முடியல்லை” என்றார்.
“அந்தக்காலத்திலே சேதுவுக்கு குறுக்கே அணைய கட்டிச்சுன்னு சொன்னா நம்புவீங்க.”
“அது வேற குரங்குல்லா?”
“எஞ்சீனியரிங் படிச்ச குரங்கோ?”
“ஆஞ்சநேய த்வேஷம் வேண்டாம் கேட்டியா? நான் வீரவைஷ்ணவனாக்கும்.”
வேலை முடிந்து போனபோது நாராயணசாமி வாத்தியார் முந்நூறுரூபாய் கொடுத்தார். “வாறேண்டே… இப்ப உன்னைய நினைச்சா ராமரு போல இருக்கு. ரெண்டுபக்கமும் அனுமாரும் அரக்கனுமா இருக்கே”
ரூபாயை எண்ணி “அந்திக்கு ஆச்சு…” என்றான் அரிகிருஷ்ணன்.
“அண்ணாச்சு ஒரு அம்பது ரூபா குடுங்க… கிளவிக்கு மருந்து வாங்கணும்.”
“என்ன மருந்து?”
“மருந்துன்னு சொன்னேன்லா?”
“டாஸ்மாக்கிலே இல்ல?”
“அண்ணாச்சி அதுவும் மருந்துதான்.”
“நாசமத்து போ”என்றான் அரிகிருஷ்ணன்.
“அவரு நம்மள அரக்கன்னு சொன்னாரே, ஏன்?”
“டேய் விபீசணன் பரம பக்தனாக்கும்”
கடையை மூடுவதற்கு முன்பு கீழே சிதறிக்கிடந்த நட்டு போல்டுகளை பொறுக்கிச் சேர்த்தனர். குரங்கும் சேர்ந்து பொறுக்கியது. அவர்கள் பொறுக்கியதைவிட விரைவாகவே பொறுக்கிவிட்டது. தனித்தனியாக டப்பாக்களில் போடவும் செய்தது
“ஏலே, கடைமூடினா இது எங்க போவும்?”
“அது மரத்துக்குமேலே போயிரும்” என்றான் அரிகிருஷ்ணன்
கடையை மூடிக்கொண்டு அரிகிருஷ்ணன் தன் டிவிஎஸ் வண்டியை எடுத்தபோது குரங்கு தகரக்கூரைமேல் ஏறி மல்லாந்து படுத்தது
“களைச்சு போட்டு… நல்ல உழைப்புல்லா?” என்று அரிகிருஷ்ணன் சொன்னான்.
“பாருங்க, நாலஞ்சுநாளிலே டாஸ்மாக்குக்கு போக ஆரம்பிச்சிரும்” என்றான் மணிகண்டன்.
”வாய வச்சுக்கிட்டு சும்மா இருடே.”
வண்டியை எடுத்துக்கொண்டு சாலையில் ஏறி ஓட்டிச் சென்றான்.
சாப்பிடும்போது அரிகிருஷ்ணன் மகாலட்சுமியிடம் அதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தான். அம்மா அப்பாலிருந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவன் சாப்பிட்டு எழுந்தபோது அம்மா தெருத் திண்ணைமேல் நின்று கொண்டு “ஏம்லே, அதை எதுக்கு பழக்கிவிடுதே?” என்றாள்
“நான் எங்க பழக்கினேன்? அது வந்தது, சும்மா வெளையாடினேன்.”
“அது போவாதுலே. அது இனி அந்த எடத்தை விட்டே போவாது” என்று அம்மா சொன்னாள்.
“நாளைக்கு போயிரும்” என்று அரிகிருஷ்ணன் சொன்னான். “இன்னைக்கு என்னமோ அதுக்கு தோணியிருக்கு.”
அவன் திண்ணைக்கு வந்து கட்டைபெஞ்சில் அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டான்.
அம்மா திண்ணை விளிம்பில் அமர்ந்தபடி “டேய் மனுசனை சம்சாரத்திலே பிடிச்சு வைக்குதது என்ன? அறிவாக்கும். ஒரு புதியவிசயத்தை அறிஞ்சுகிடணும்னுதான் மனுசன் எல்லா பிரச்சினைக்குள்ளையும் போறான்.”.
“இவரு அங்க என்னதான் செய்யுதானுகன்னு பாக்கத்தானே முதல்தடவை டாஸ்மாக்கிலே நுழைஞ்சாரு” என்றாள் மகாலட்சுமி
“நீ சுமமா இருடி, எந்திரிச்சு வந்தா சவிட்டீருவேன்” என்றான் அரிகிருஷ்ணன்.
“ஆமா எந்திரிச்சா ஆடி விளுந்திருத லெச்சணமாக்கும் இப்ப” என்றபடி அவள் உள்ளே சென்றாள்.
“மனுசனுக்கு சாமி அறிவை குடுத்திருக்கு. ரெண்டு அறிவு. எல்லாத்துக்கும் உள்ள போறதுக்கு ஒரு அறிவு, வெளியே வாறதுக்கு இன்னொரு அறிவு. பலபேரு அந்த ரெண்டாவது அறிவை பயன்படுத்துறதில்லை. அது அவனுக்க தப்பு. ஆனா மிருகங்களுக்கு அப்பிடி இல்லை. அதுகளுக்கு ஒற்றை அறிவு மட்டும்தான். உள்ள போவத்தான் முடியும், அதை நீ உள்ள இழுத்துப் போட்டேன்னா அதுக்கு விடுதலையே இல்லை பாத்துக்க” என்று அம்மா சொன்னாள்.
“ஏன் மனுசன் மட்டும் வெளியே போய்ட்டா இருக்கான்? எதிலயானாலும் உள்ள போனா போனதுதான்” என்றான் அரிகிருஷ்ணன்
“ஆனா யோகி வெளியே போவான்”
“யோகிதானே?”
“ஆமா, ஆனா அப்டி ஒரு வழி இருக்கே”
அரிகிருஷ்ணனுக்கு சட்டென்று எரிச்சல் வந்தது “இப்ப என்ன விடுதலை மண்ணாங்கட்டி? அதும் ஸ்பானரு பிடிச்சு வேலைச் செய்யட்டும். கொரங்கு மெக்கானிக்கு ஆகட்டும்… என்ன இப்ப?”
“டேய், அது மரமும் வானமுமா சந்தோசமா இருக்குத உயிரு. நினைச்சு துக்கப்படுறதுக்கு அதுக்கு பழைய ஞாபகம் இல்லை. வாறதை நினைச்சு பயப்படுததுக்கும் ஒண்ணுமில்லை. நீ அப்டியா? நீ இந்தா இந்த சின்ன வீட்டிலே, இந்த சாக்கடைச் சந்திலே நீ என்ன சந்தோசமாட்டா இருக்கே? அதுக்கு இருக்குத வாழ்க்கை உனக்கு உண்டா? சுதந்திரமும் இல்லை, சந்தோசமும் இல்லை. கடன் இருக்கு. பயம் இருக்கு. வேற என்ன? இது மனுசப்பய வாழ்க்கை. கோடிகோடி இருந்தாலும் இப்டித்தான். இந்த சிக்குமுள்ளிலே அதை எதுக்கு இழுத்து விடுதே? பெரும்பாவம் பாத்துக்க.”
“மனுசன் எல்லாவனும் துக்கத்திலேயா இருக்கான்?” என்றான் அரிகிருஷ்ணன்.
“ஆமா. அதுக்கு லௌகீகதுக்கம்னு பேரு. இல்லாததை கற்பனை செய்யுதது, வராததை எதிர்பாக்கிறது, தேடிட்டே இருக்கிறது, எதுகிடைச்சாலும் நிறையாம மறுபடி தேடிப்போறது… அதைவிட பெரிசு ஒண்ணு இருக்கு, எல்லாத்தையும் அறிஞ்சுகிட நினைக்கிறது, அறிஞ்சுகிடலாம்னு நம்புறது. அதுக்குப்பேரு ஞானதுக்கம். ஞானசன்யாசம்தான் அதுக்கு மருந்து. அதை நீ குரங்குக்கு குடுக்க முடியாதுல்ல? பிறவு ஏன் துக்கத்தை மட்டும் குடுக்குதே?” என்றாள் அம்மா.
“நீ இந்த புராணக் கதையை எல்லாம் எங்கிட்ட வச்சுக்கிடாதே கேட்டியா. எனக்குத் தெரியும் என்னன்னு.”
“புராணத்துக்கு என்ன கொறை? அதிலேதான் ஞானம் இருக்கு.”
“ஞானத்தை வச்சுக்கிட்டு பசிச்சா சுட்டு தின்னு… உனக்க கெட்டினவன் அனந்தன்பெருமாள் நாடாரு பதினெட்டு புராணமும் கரைகண்டு கடைசியிலே சோறில்லாம செத்தாருல்லா? நீ படிச்ச புராணத்தை வச்சு இப்ப என்ன செய்யுதே? கிரீசுநாத்தம் அடிக்குத சோறைத்தானே நீயும் திங்கே?”
அம்மா ஒன்றும் சொல்லாமல் பெருமூச்சுவிட்டாள்.
“பேச்சு பேசுதாளாம்.. போடீ” என்றான் அரிகிருஷ்ணன். ஏப்பம் விட்டபடி எழுந்தபோது தள்ளாட்டம் இருந்தது. வெற்றிலையை துப்பிவிட்டு உள்ளே சென்று சுவரைப் பிடித்தபடி சென்று படுத்துக்கொண்டான்.
கையை துடைத்தபடி உள்ளே வந்த மகாலட்சுமி “இப்ப எதுக்கு அம்மைகிட்ட பஞ்சாயத்து?” என்றாள்
“நான் என்ன சொன்னேன்? ஒரு கொரங்கு வந்திருக்குன்னேன். அதுக்குள்ள அவ படிச்ச எல்லா புராணத்தையும் சொல்ல ஆரம்பிச்சாச்சு. மனுசன வாழவிடமாட்டா.”
“அவங்க சொல்லுததும் நியாயம்தானே?”
“என்ன நியாயம்?”
“இங்க நாயெல்லாம் தெருவிலே சீப்படுதே. கொரங்காவது சந்தோசமா இருக்கட்டுமே.”
“ஏன் ,அப்ப நீ சந்தோசமா இல்லியா?”
“சந்தோசம் இருக்கு.”
“பின்ன?”
“நாமள்லாம் தொழுத்திலே கட்டின மாடுங்க மாதிரித்தானே? காட்டிலே இருக்குத மான் மாதிரியா இருக்கோம்?”
அவனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
“பசுமாடு தொழுத்திலே கெடக்கு. காளை மாடு நாலூரு பாக்குது, ஆனா நுகத்திலே கட்டி கூட்டிட்டுப் போறாங்க”
“போடி , ஆக்கம்கெட்ட நாயே.”
“சொல்லியாச்சுல்ல? தூங்குங்க… நான் சமையலறையை கழுவணும்… நாளைக்கு வெள்ளிக்கிழமை”
அரிகிருஷ்ணன் அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். குரங்கு என்ன செய்யும் இந்நேரம்? மெக்கானிக் வேலையை நினைத்துக் கொண்டிருக்குமா? இல்லை கிளம்பிச் சென்றிருக்குமா? அதற்கு மனைவிகள் இருக்கலாம். குட்டிகள் இருக்கலாம். நாவல் மரங்கள் பழுத்துக் குலைகுலையாக தொங்குகின்றன. அது வாழ வானமே இருக்கிறது. ஏதோ ஓர் ஆவலுக்காக கீழே வந்திருக்கிறது. இந்த புழுதியில் மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்காக.
அவன் தூங்கிவிட்டான். விழித்துக் கொண்டபோது அறைக்குள் நீலவெளிச்சம். ஃபேன் சுற்றிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக காற்றும் வந்தது. தொலைவில் லாரி போகும் சத்தம். தெருவிளக்கின் ஒளியில் வெளியே சிவப்பாக தெரிந்தது.
அவன் உள்ளம் உருகி நீர்போல அலையடித்தது. தொண்டை அடைத்து கண்களிலிருந்து நீர் பெருகத் தொடங்கியது. அழத்தொடங்கியபிறகே அவன் அந்த அளவுக்கு துக்கத்தை அடைந்தான். ஏன் துக்கம் என்று தெரியவில்லை. அழுதுகொண்டே இருந்தான். அழுது அழுது ஓய்ந்தபோது மனம் சோர்ந்து ஓய்ந்திருந்தது. உடலை அசைக்கக்கூட முடியாது என்று தோன்றியது
மீண்டும் ஒரு மயக்கம். விழித்துக் கொண்டபோது நல்ல தாகம். உடல் வியர்த்திருந்தது. கூஜாவை எடுத்து நேராக விட்டுக்கொண்டு தண்ணீரை குடித்தான். மெல்ல நடந்து பின்பக்கம் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தான்.
வந்து படுத்தபோது ஆறுதலாக இருந்தது. செய்யவேண்டியதென்ன என்பது திட்டவட்டமாகத் தெரிந்தது. நாளைக்கே அதை துரத்திவிட்டு விடவேண்டும். அதற்கு தீனி எதுவும் கொடுக்கக்கூடாது. அதை துரத்திக் கொண்டே இருக்கவேண்டும். தகரடப்பாவால் தட்டினால் பயந்து ஓடிவிடும். அல்லது கொஞ்சம் டீசலை தரையில் விட்டு தீவைத்து தழலைக் காட்டினால் போதும். துரத்திவிடுவது கஷ்டமானதுதான். ஆனால் அதை விடுதலை செய்வதற்கு வேறுவழியில்லை.
அரிகிருஷ்ணன் காலையில் எழுந்து வழக்கம்போல பல்தேய்த்து கொல்லைப்பக்கம் மகாலட்சுமி போட்டுவைத்த வெந்நீரில் குளித்து வேட்டிகட்டிக்கொண்டு செல்வப்பிள்ளையார் கோயிலுக்கு போய் கும்பிட்டு விபூதியுடன் வந்தான். அம்மா தினத்தந்தியை கூர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அவன் வந்து அமர்ந்ததும் அதை மடித்து நீட்டினாள். அவன் நேற்றைய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க நினைத்தான். ஆனால் வழக்கம்போல “என்ன நூஸு?” என்றுதான் கேட்டான்
“என்னத்த நூஸு? எல்லாம் வழக்கமான நூஸுதான். சேலம் ரோட்டை போட்டே தீருவோம்னு எடப்பாடி சொல்லுதாரு” என்றாள் அம்மா.
“அவரு சொல்லுவாரு… அவருக்க ஊருல்லா?” என்றபடி அவன் பேப்பரை எடுத்தான். “ஜனங்க எதுக்குறாங்க. காட்டை அழிக்கப்பிடாதுன்னு ஜனங்களே சொல்லுறாங்கல்லா, அந்தமட்டும் நல்லது”
”ஏன் அவனுக எதுக்குதானுக? அவனுக்க நிலம் போயிரும்னு நினைக்கான்…” என்று அம்மா சொன்னாள் “அவன் காட்டை ஆக்ரமிச்சு வச்சிருந்தா விட்டுக்குடுப்பானா? அவன் பேசுத பேச்சுக்கு ஒண்ணும் அர்த்தமில்லை. ஆனா எப்டியாவது காடு அழியாம இருந்தா நல்லதாக்கும்”
“காடு இருந்தாத்தான் மழைன்னு சொல்லுதானுக”
“ஆமா அது இப்ப சயண்டிஸ்டுக சொல்லுதது. புராணத்திலே எல்லா ரிஷிகளும் தபஸ் செய்யுதது காட்டிலேயாக்கும். தர்மசம்வாதம் நடக்குத எடம் காடு. தர்மம் முளைச்சு வாரதுக்குண்டான காடு இல்லேன்னா ஊரிலே மழை இல்லைன்னு சொல்லுவாங்க. தர்மம் தழைச்சா மழைபெய்யும், மழை தர்மத்தை வளக்கும். மழையை தர்மவர்த்தினின்னு சொல்லியிருக்கு” என்று அம்மா சொன்னாள்.
மகாலட்சுமி “எந்திரிச்சு வாருங்க” என்று கூப்பிட்டாள். அவன் உள்ளே போனான். அவள் சூடான புட்டும் கடலைக்கறியும் தந்தாள். சாப்பிட்டுவிட்டு அவன் பையை தொங்கவிட்டுக் கொண்டு பைக்கை எடுத்தான்.
பட்டறையை நெருங்கும் போதுதான் அங்கே குரங்கு இருக்கும் என்ற நினைப்பு வந்தது. செல்லச் செல்ல படபடப்பாக இருந்தது. அதை எப்படி துரத்துவது? இல்லை ஒருவேளை அது தானாகவே போயிருக்குமோ? அந்த நினைப்பே அவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அப்படி போயிருந்தால் ஏன் அவன் ஏமாற்றமடைய வேண்டும்?
அவன் பைக்கை உள்ளே கொண்டு போனபோது மேலே கூரையைப் பார்த்தான். குரங்கு இல்லை. முற்றத்தில் எங்கும் அதைக் காணவில்லை. டீசல் விழுந்த கறையுடன் புழுதித்தரை வெறுமையாக கிடந்தது. கைதுடைக்கும் துணி, கிரீஸ் படிந்த கற்கள். அப்பால் சில சக்கரங்கள் சரித்து வைக்கப்பட்டிருந்தன. குரங்கு எங்கும் இல்லை
போய்விட்டது என்ற எண்ணம் வந்ததும் அவன் உள்ளம் மிகுந்த எடையை அடைந்தது. உடல் தளர்ந்து எங்காவது உட்கார்ந்து விடவேண்டும் என்று தோன்றியது. அப்போது மெல்லிய சத்தம் ஒன்றைக் கேட்டான். அவன் உடல் சிலிர்ப்படைந்தது. குரங்குதான். மெல்லிய உறுமலோசை. அது தனக்குத்தானே ஏதோ சொல்லிக் கொள்வதுபோல
அவன் மெல்ல எழுந்து நடந்து பட்டறையின் பக்கவாட்டில் சென்றான். உடைசல்களை போட்டுவைக்கும் இடத்தில் குரங்கு தரையில் அமர்ந்திருந்தது. குனிந்து மிகக்கவனமாக ஏதோ செய்துகொண்டிருந்தது. அவன் மறைந்து நின்று அது என்ன செய்கிறது என்று பார்த்தான்
அது ஒரு ஸ்க்ரூவை துளையில் நுழைக்க முயன்று கொண்டிருந்தது. பெரிய துளை வழியாக போட்டது இருமுறை ஆட்டியபின் எடுத்தது. இன்னொரு துளைக்குள் விட ,முயன்றது. அது சிறிய துளை. அதற்குள் ஸ்க்ரூ நுழையவில்லை. பலமுறை நுழைக்க முயன்றது. முடியவில்லை. தலையை கையால் பட் பட் என அறைந்தது. எரிச்சலுடன் தனக்குத்தானே சுற்றிக்கொண்டது. தூக்கி வீசிவிட்டு திரும்பி அமர்ந்தது. வால் நெளிந்து கொண்டிருந்தது
மீண்டும் மிகமெல்ல கவனமாக அதை எடுத்தது. கூர்ந்து பார்த்து மெல்ல நுழைத்துப் பார்த்தது. நுழையவில்லை. ர்ர்ர் என்று உறுமியபடி தூக்கி வீசி பல்லைக் காட்டியபடி தன்னைத்தானே சுற்றியது. தலையில் அடித்துக்கொண்டு எம்பி எம்பி அமர்ந்தது. உடல் மயிரை பிய்த்துக் கொண்டது. தரையில் கால்களை போட்டு உரசி உறுமி முனகியது
சலித்து சோர்ந்து சற்றுநேரம் அமர்ந்திருந்தது. மீண்டும் ஸ்க்ரூவை எடுத்து கூர்ந்து பார்தது. இரும்புக் குவியலில் இருந்து இன்னொரு பட்டையை எடுத்தது. அதிலிருந்த துளை சரியானது என்று அரிகிருஷ்ணன் கண்டான்
குரங்கு அந்த துளையில் கவனமாக ஸ்க்ரூவை வைத்தது. கைகளால் சுழற்றியது. அது உள்ளே நுழைவதைக் கண்டதும் நெஞ்சில் பட்பபட் என அடித்துக்கொண்டு ‘ஹெய்க்! ஹெய்க்! ஹெய்க்!” என்று ஓசையிட்டு துள்ளித் துள்ளி அமர்ந்தது. பின்பு அது செய்ததைக் கண்டு அரிகிருஷ்ணன் திடுக்கிட்டு சற்று முன்னடைந்து பார்த்தான்
அது ஒரு பட்டையான இரும்புத்துண்டை எடுத்து ஸ்க்ரூவின் மையத்திலிருந்த வெட்டுக்கோட்டில் வைத்து அழுத்திச் சுழற்றி இறுக்கியது. ஸ்க்ரூ டிரைவரை பயன்படுத்துவதை மட்டுமல்ல, அது எப்படி செயல்படுகிறது என்றும் தெரிந்து கொண்டிருக்கிறது. அரிகிருஷ்ணன் கைகள் நடுங்க பார்த்துக் கொண்டு நின்றான்
ஸ்க்ரூ நன்றாக இறுகியதும் குரங்கு அதை விரலால் தொட்டு பார்த்தது. வாயில் வைத்து கடித்தும் பார்த்தது. பிறகு மீண்டும் மார்பில் பட்பட்பட் என அடித்தபடி ‘ஹெய்க்! ஹெய்க்! ஹெய்க்!” என்று எக்காளமிட்டுக் கொண்டு சுற்றிச்சுழன்றது. கைகளால் தரையை அடித்தபடி எம்பி எம்பி குதித்தது. அப்போதுதான் அவனைப் பார்த்தது.
ஒற்றைக்கையை ஊன்றி ஊன்றி பாய்ந்து அவனிடம் வந்து அதை நீட்டி கண்களை சிமிட்டி வாயை வலித்தது. அவன் அதை வாங்கிப் பார்த்தான். இறுக்கமாக சுழற்றியிருந்தது.
அவன் அதன் தலையை தடவி “நீ இங்கியே இருடே மக்கா…” என்றான். “இங்க எல்லா துக்கமும் உண்டு பாத்துக்க. அங்க வானத்திலே உனக்கு அந்த துக்கமொண்ணும் இல்லை. ஆனா இந்த சந்தோசம் அங்க இல்ல கேட்டியா?”
குரங்கு அதை வாங்க கைநீட்டியது. அவன் அதை கொடுத்ததும் கையை ஊன்றி பாய்ந்து சென்று முற்றத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. நாவல் மரத்தில் பாய்ந்தேறி மீண்டும் கீழே குதித்து ‘ஹெய்க்! ஹெய்க்! ஹெய்க்!” என்று கூச்சலிட்டபடி புழுதியில் சுழன்று சுழன்று ஓடியது. அதன் வால் விடைத்து நின்றது. அரிகிருஷ்ணன் புன்னகையுடன் அந்த களியாட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
***