அரசியல்சரிநிலைகள், ராமர் கோயில்

me

தன் நெஞ்சறியும் உண்மையைச்சொல்லத்துணியும் ஓர் எழுத்தாளன் அல்லது அரசியலாளன் எப்போதுமே இங்கு எல்லா தரப்பினருக்கும் எதிராக ஆகிறான். அவனால் முழுமையாக எந்தத் தரப்புடனும் சேர்ந்து நிற்க முடிவதில்லை.  ஒவ்வொருவரும் அவனை தங்கள் எதிரிகளின் தரப்பிலேயே சேர்க்க முயல்கிறார்கள். ஒவ்வொருமுறை அவன் கருத்து சொல்லும்போதும் அக்கருத்துக்கள் திரிக்கப்படுகின்றன. ‘நான் சொல்லவந்தது அதுவல்ல’ என்றுதான் அவன் ஒவ்வொரு நாளும் கூக்குரலிடவேண்டியிருக்கிறது.

காரணம், ஓர் அரசியல்சூழலில் ஆட்சிசெய்யும் ‘அரசியல் சரிநிலை’கள்தான். ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ்’ என்பது நவீன ஜனநாயகச்சூழலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சொல். ஜனநாயக அரசியல் எப்போதும் கருத்துக்களின் மோதலினால் ஆனது. இங்கே ஒருங்குதிரட்டப்பட்ட கருத்துக்களுக்கு எல்லை இல்லாத வலிமை உள்ளது. அவ்வாறு கருத்துக்களை ஒருங்குதிரட்டுவதற்கு எளிய வழி அவற்றை ஒற்றைப்படையாக ஆக்கி மீண்டும் மீண்டும்பிரச்சாரம் செய்து மக்களை அவற்றின் கீழ் அணிதிரளச் செய்வதே.

இருபதாம் நூற்றாண்டில் இந்த உத்தியை மிகச்சிறப்பாகச் செய்தவர்கள் ·பாஸிஸ்டுகள். பண்பாட்டு அடையாளங்களை உணர்ச்சிபூர்வமான குறியீடுகளாக ஆக்கி அவற்றின் கீழே மக்களைத் தொகுத்தார்கள். ஒரு மையத்தில் உணர்ச்சிபூர்வமாக ஒருங்கிணையும் கருத்து என்பது மிக மிக அபாயகரமான ஓர் ஆயுதம் என்று இவர்கள் உலகுக்குக் காட்டினார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ·பாஸிஸம் பற்றிய அச்சமும் அருவருப்பும் உலகமெங்கும் ஜனநாயகச் சிந்தனைச் சூழலில் எழுந்தது.

இந்த அச்சத்தையும் அருவருப்பையும் ஓர் அடையாளமாக ஆக்கி , அதன் கீழ் மக்களைத்திரட்டுவதற்கான கருத்தியல் ஆயுதமாக திரண்டுவந்ததே அரசியல்சரிநிலை என்பதாகும். அதன் பிறப்புநிலம் ஐரோப்பா. ஒரு சூழலில் முற்போக்கானது, நவீனமானது, மனிதாபிமானம் மிக்கது இன்னதுதான் என்று மெல்லமெல்ல சிலரால் வரையறுக்கப்படுகிறது. அந்தக் கருத்துக்கள் விவாதத்துக்கு அப்பாற்பட்ட புனித பிம்பங்களாக நிலைநாட்டப்படுகின்றன. அவற்றை ஐயப்படுவதும் விவாதிப்பதும் உடனடியாக பிற்போக்காக, பழமைவாதமாக, மனிதாபிமானத்துக்கு எதிரானதாக, அதாவது ·பாஸிசமாக, முத்திரை குத்தப்பட்டுவிடும்.

இத்தகைய கருத்துமைய உருவாக்கமும் ஒருவகை ஆதிக்கமாக, அடக்குமுறையாக ஆகும் என்பதை உலகம் அனுபவபூர்வமாக கண்டுகொண்டிருக்கிறது. இதுவும் பாஸிசம் போலவே ஓர் அழிவுச் சக்திதான். காரணம் இதுவும் சிந்தனையை முடக்குகிறது. கருத்துக்களின் சுதந்திரமான வளர்ச்சியையும் மோதலையும் தடுக்கிறது. அச்சம் மூலமும் மிரட்டல் மூலமும் தன் கருத்தியல் மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கோண்டிருக்கிரது. அதன்மூலம் இதுவும் ஜனநாயகத்தின் அடிப்படைகளையே நசுக்குகிறது.

அரசியல்சரிநிலைகள் ஏன் எதிர்க்கப்பட வேண்டியவை என்றால் அவை எப்போதுமே எளிமைப்படுத்தப்படுபவை என்பதனாலேயே. அவை மனிதாபிமானம் என்ற கோணத்தில் மிகுந்த உணர்ச்சித்தீவிரத்துடன் முன்வைக்கப்படுகின்றன. ஆகவே அவை மாற்றுக்கருத்துக்களையே அனுமதிப்பதில்லை. உதாரணமாக மரணதண்டனை எதிர்ப்பு என்பது இன்று அரசியல்சரியாக ஆக்கப்பட்டுள்ள ஒரு விஷயம். தீவிரமான குற்றமனப்பான்மை என்பது ஒரு மனிதனில் இருந்து நீக்கவே முடியாத அடிப்படை இயல்பு என்றும் ஆகவே பெருங்குற்றவாளிகளை திருத்தியமைக்கலாமென்பது ஒரு எளிய இலட்சியவாதக் கனவு மட்டுமே என்றும் ஒரு நிபுணர் வாதிடப்புகுந்தால் உடனே அவர் பழமைவாதியும் மனிதாபிமானம் இல்லாத ·பாஸிஸ்டும் ஆகிவிடுவார். அபப்டி ஒரு கோணத்துக்கு கண்டிப்பாக இடமுள்ளது என்பதும் மனித இயற்கையை எளிமைப்படுத்திவிடக்கூடாது என்பதும் விவாதத்துக்கே வராமல் செய்யப்பட்டுவிடுகிறது.

அரசியல்சரிநிலை என்பது நவீனத்துவத்தின் உச்சகட்ட ஆயுதமாகும். ஓர் அறிவுஜீவி இன்னதையே சிந்தனைசெய்ய முடியும், இன்னதைத்தான் செய்யமுடியும் , இன்னின்ன நிலைபாடுகள் தான் எடுக்கமுடியும் என்று எப்போதுமே நவீனத்துவத்தில் ஓர் வரையறை இருந்தது. இலக்கியம் ‘முற்போக்காக’ மட்டுமே இருக்க முடியுமென்ற நம்பிக்கை. அதாவது ஒரு காலகட்டத்தில் எது முற்போக்கு என்று கருதப்படுகிறதோ அதுவே எழுத்தாளனின் நிலைப்பாடாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கை. நவீனத்துவ நாயகர்கள் சார்த்ர் ,காம்யூ என அனைவருமே அரசியல் சரிநிலைகளைச் சார்ந்து செயல்பட்டவர்கள். முற்போக்கு முத்திரை இல்லாமல் நிற்க முடியாதவர்கள்

நான் அறிந்தவரை கேரளச்சூழலில் அரசியல் சரிநிலைகலை தான்டி ஒரு படைப்பாளி பேசினால் அது அங்கீகரிக்கபப்டுகிறது. அவனுடைய தனிப்பட்ட உள்ளுணர்வுக்கு அளிக்கபப்டும் மரியாதை அது. அரசியல் சரி என்பது ஃபாசிசத்தைவிட குரூரமான முறையில் முன்வைக்கப்படும் சூழல் தமிழிலேயே உள்ளது– குறிப்பாக தமிழ் சிற்றிதழ் உலகில்

அரசியல்சரிநிலைகளின் அதிகாரத்தை எதிர்த்து உருவானதே பின்நவீனத்துவம். எதையும் கேள்விக்குரியதாக்கும் அதன் சுதந்திரம் முற்போக்கு,ஜனநாயகம், மனிதாபிமானம் போன்ற அடையாளங்களையும் கேள்விக்குரியதாக்கியது. மேலைநாடுகளில் அரசியல்சரி என்பது ஒரு கெட்டவார்த்தை போல ஆனது பின்நவீனத்துவத்தாலேயே.

ஆனால் தமிழகத்தில் பின்நவீனத்துவ லேபிள் ஒரு புதுமையையும் அறிவுஜீவிக்களையையும் அளிக்கிறது என்ற காரணத்தால் அதைச் சூடிக்கொண்டார்களே ஒழிய பின்நவீனத்துவத்தின் அடிப்படைகளை அறிந்தவர்கள் மிகச்சிலரே. இங்கே பின்நவீனத்துவம் பேசியவர்கள் பெரும்பாலானவர்கள் எளிமையான நவீனத்துவ உலகப்பார்வையை, அரசியல் பார்வையை வெளிப்படுத்துபவர்களே. அவ்வகையில் அவர்களுக்கும் எளிமையான கட்சிமார்க்சியர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இங்கே பின் நவீனத்துவம் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் எளிமையான அரசியல் சரிகளில் சாய்ந்து நின்றவர்கள். அதை ஒரு ஆயுதமாக பிறர் மேல் போடத்தயங்காதவர்கள்.

உண்மையிலேயே பின் நவீனத்துவம் இங்கே வந்திருந்தது என்றால் நம்முடைய கேள்விக்கு அப்பாற்பட்ட எத்தனையோ முற்போக்குப்புனிதக்கருத்துக்களும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் அல்லவா? தமிழ்த்தொன்மை, இட ஒதுக்கீடு, நவீனச் சாதிவாதம் என நாம் விவாதங்களைத்தவிர்க்கும் எத்தனையோ களங்களில் புதிய உடைவுகள் நிகழ்ந்திருக்கும் அல்லவா? ஆனால் நம் பின்நவீனத்துவர்கள் பழைய முற்போக்கினரின் அதே தரப்பையே பின்நவீனத்துவக் கலகமாக மாற்றி தங்கள் நாடகத்தை ஆடி முடித்தார்கள்.

இன்று தமிழ்ச்சமூகத்தின் சிந்தனை பழமைவாதத்தாலும் மறுபக்கம் போலியான முற்போக்கு பேசுபவர்களின் அரசியல் சரிகளாலும் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறது. நாம் ஒருபோதும் பேசாமல் பொத்தி வைத்துள்ள கருத்துக்களே அதிகம். தொடக்கூடாத புனிதக்கருத்துக்களால் நம் கருத்தியல் அதிகாரம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தொட்டுப்பேசத்துணிபவர்கள் அனைத்துத் தரப்பினராலும் தாக்கப்படுகிறார்கள்.

நம் சூழலின் அரசியல் சரிநிலைகளைப்பற்றி மிகவிரிவான ஆய்வுக்கு இடமிருக்கிறது. நான் அரசியல்விமர்சகன் அல்ல. என்னுடைய எளிமையான புரிதல் பெரும்பாலும் நேரடி அனுபவங்கள் மற்றும் என் உள்ளுணர்வு சார்ந்தது. நம்முடைய ஆங்கில ஊடகங்களில் உள்ல அரசியல்சரிநிலையை நெடுங்காலமாக உருவாகிவந்த ஒருதளம், சமீப காலமாக உருவாகி வந்த தளம் என இரண்டாகப் பிரிக்கலாம்.

சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த இருபது வருடங்களில்தான் நம் ஊடகத்துறை அழுத்தமாக வேரூன்றி வளர்ந்தது. அது நேருகாலம். இக்காலகட்டத்தில் காங்கிரஸை பெருநிலக்கிழார்கள் கைப்பற்றினார்கள். இதற்கு எதிரான சக்திகளாக சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் இருந்தார்கள். இவர்கள் ஊடகங்களை மெல்ல ஊடுருவினார்கள். பெரும்பாலான அக்கால இதழாளர்கள் சோஷலிஸ்டுக் கட்சி அனுதாபிகள். இன்றும் அந்த மனநிலை ஊடகங்களில் நீடிக்கிறது.

உதாரணமாக கார்ட்டூனிஸ்ட் சங்கர் அக்காலகட்டத்தின் முக்கியமான ஊடக முன்னோடி. அவரால் இதழியலுக்குக் கொண்டுவரப்பட்ட மலையாளிகளான ஊடகவியலாளர்களின் ஒரு சமூகமே ஆங்கில ஊடகங்களில் உண்டு. நரேந்திரன்,ஓ.வி.விஜயன்,மாதவன்குட்டி போன்ற  புகழ்பெற்றவர்கள் பலர் உதாரணம். அவர்களின் அடுத்த தலைமுறை இன்று உள்ளது. இவர்களில் பலருடன் நான் உரையாடியதுண்டு. இவர்கள் அனைவருமே சங்கரின் சோஷலிஸ்டு மனநிலையைக் கொண்டவர்கள். அரசியலை வரலாற்று ரீதியாக உள்ளே சென்று அலசி ஆராயும் திராணி கொண்டவர்கள்.

இவர்களிடம் உள்ள அரசியல்சரிநிலை என்பது எப்போதும் அமைப்புக்கு எதிராக நிலைகொள்வது என்பதே. அது நூற்றுக்குத் தொண்ணூறு தருணங்களில் நியாயத்தின்பால் நிற்பதாகவே அமைகிறது என்பது இயல்பானதுதான். எந்த ஓர் அதிகார அமைப்பும் தவிர்க்கமுடியாத அன்றாட அநீதிகளின் மீது இயங்குவதே. அடக்குமுறை என்ற அம்சம் இல்லாத அரசு என்பது மண்மீது சாத்தியமானது அல்ல.  அத்துடன் இவர்கள் அமைப்பை மிக நெருங்கி நின்று அதன் உள்விளையாட்டுகளை காணும் வாய்ப்பையும் பெற்றவர்கள். ஆகவே ஒவ்வொன்றும் எத்தனை கேவலமான அதிகார ஆசை, சுயநலங்கள், சபலங்கள் மீது உருவாக்க்கப்படுகிறது என்று இவர்கள் நன்றாகவே அறிவார்கள்.

எனவே இவர்கள் அமைப்பின் தீவிர விமர்சகர்களாக தங்களை முன்வைக்கிறார்கள். அதன் உள்ளார்ந்த வன்முறையை அபத்தத்தை ஆபாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களுடைய குரல் மிகப்பெரும்பாலான தருணங்களில் சாமானியனுக்காக ஒலிக்கும் நீதியின் குரலாக எழுகிறது. ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கான அறைகூவலாக முழங்குகிறது.  இவர்கள் மீது எனக்கு மாறாத மரியாதையும் ஏன் பக்தியும் உண்டு.

சமீபகாலமாக ‘வேரற்ற’ இளம் ஊடகவியலாளர்களின் ஒரு படை ஊடகங்களை ஊடுருவியிருக்கிறது. இவர்களுக்கு அரசியல்நோக்கு ஏதும் இல்லை. இவர்களின் முன்னுதாரணம் ஆங்கில ஊடகங்கள்தான். ஆங்கில ஊடகங்களின் நோக்குகளும் வழிமுறைகளும் இவர்களை நேரடியாகப் பாதிக்கின்றன. ‘அமைப்பை எதிர்த்து துணிவுடன் குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்’ என்ற படிமம் இவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதற்கான உடல்மொழி, ஆங்கிலமொழி உச்சரிப்பு எல்லாவற்றையும் அவர்கள் முன்னோடிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு அரசியல்கோட்பாடுகள் கிடையாது. வரலாற்றுப் பிரக்ஞை கிடையாது. சமூகப்பொறுப்புணர்வு இல்லை. இவர்கள் எங்கிருந்துவந்தார்களோ அந்த உயர்நடுத்தர வற்கத்துடன் இவர்களுக்கு ஒரு மனச்சாய்வு உண்டு. அத்துடன் அவ்வப்போது மேலை ஊடகங்களில் இருந்து கிடைக்கும் உதிரியான கோட்பாடுகள் மற்றும் கலைச்சொற்கள் இவர்களின் மூளையில் உள்ளன. அவற்றைக்கொண்டு ஆழமான சிந்தனைப்பின்புலத்தில் இருந்து அரசியலை அணுகுவது போல ஒரு பாவனையை இவர்களால் சிறப்பாக உருவாக்க முடியும். ராஜ்தீப் சர்தேசாய் இவர்களுக்கு சரியான முன்னோடி உதாரணம் என்ற எண்ணம் எனக்கு உண்டு.

முதல்தரப்பினர் ஊடகமுதலாளிகளின் கட்டாயங்களுக்கு எளிதில் வளையாதவர்கள். அவர்களுக்கென்று ஒரு தனித்த அடையாளம் கொண்டவர்களாதலால் எந்த ஊடகத்தில் இருந்தாலும் அவர்களின் குரல்கள் தனித்து ஒலிக்கும். இரண்டாம்வகையானவர்கள் முழுக்கமுழுக்க தொழில்முறையானவர்கள். ஊடகமுதலாளிகளுடன் சமரசம் செய்துகொள்வதில் தயக்கமே இருப்பதில்லை. சொல்லப்போனால் ஆஜராகும் கட்சிக்காக முழுமூச்சாக வாதிடும் வக்கீல்களைப் போன்றவர்கள் இவர்கள்.

இவ்விருதரப்பினருக்கும் உள்ள ஒரு பொதுமனநிலையை சுட்டிக்காட்ட வேண்டும். இவர்கள் அதிகாரத்தையும் செல்வத்தையும் மிக அருகே நின்று பார்க்கிறார்கள். ஆனால் அதிகாரமும் செல்வமும் இவர்களுக்கு எட்டுவதேயில்லை. இந்த நிலையை எதிர்கொள்ள இவர்கள் மிக அழுத்தமான ஒரு சுயமுக்கியத்துவத்தைக் கற்பனைசெய்து கொள்கிறார்கள். ஊடகவியலாளர் என்ற முறையில் சரித்திரத்தை தங்களால் உருவாக்கவும், மாற்றியமைக்கவும் முடியும் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். போதையில் அப்படிச் சொன்ன பல முக்கியமான இதழாளர்களை நான் அருகில் இருந்து கண்டிருக்கிறேன்.

இந்த சுயகர்வம்தான் பழைய சோஷலிஸ்டு இதழாளர்களை தன்னம்பிக்கையுடன் அதிகார அமைப்புகளை எதிர்க்கச் செய்தது. ஆசைகாட்டல்களை நேர்மையுடன் மீறவும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் செய்தது. அதே சமயம் இதற்குள் உள்ள தாழ்வுமனப்பான்மை பலவகையான சிக்கல்களுக்குக் காரணமாக அமைகிறது. முக்கியமாக ஒருசெய்தியை எந்தவிதமான அடிப்படை நேர்மையும் இல்லாமல் திரிப்பதற்கான துணிவை இவர்களுக்கு இது அளிக்கிறது.

என்.எஸ்.மாதவன் எழுதிய ஒரு மலையாளக் கதையை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். ஒரு நாளிதழ் ஆசிரியர் அதன் கதாநாயகர்.  பழைய சோஷலிஸ்டு இதழாளர் அவர் என்பதை என்.எஸ்.மாதவன் துல்லியமாக கதையில் நிறுவுகிறார். மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். லோகியாவுடனும் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடனும் நெருக்கமானவர். ஊடக முதலாளியாலேயே அஞ்சப்படுபவர். கட்டற்றவர். குடிகாரர். இலக்கியவாசிப்பு கொண்டவர். உச்ச அதிகார மையங்களுடன் எல்லாவகையான தொடர்புகளும் கொண்டிருந்தபோதிலும் எந்தவகையான சுயநல நோக்கங்களையும் அடையமுயலாத நேர்மையாளர்.

அவர் நள்ளிரவில் நாளிதழ் ஆசிரிய வேலையில் இருக்கிறார். அத்வானி தலைமையில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அயோத்திக்குக் கரசேவைக்குச் சென்றிருக்கும் தகவல் வருகிறது. நரசிம்மராவ் அரசு கண்ணைமூடிக்கொண்டிருக்கிறது என்று செய்தி கிடைக்கிறது.  ஆசிரியர் பதற்றமும் கவலையும் கொள்கிறார். தார்மீகமான கொந்தளிப்புக்கு உள்ளாகி செயலிழந்து குடிக்ககிறார். கடைசியில் மசூதிக்கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது என்று தகவல். உதவியாசிரியர்கள் நாளிதழின் முதல்பக்கச் செய்தியாக ‘சர்ச்சைக்கிடமான கட்டிடம் இடிக்கப்பட்டது’ என்று அச்சு கோர்த்திருக்கிறார்கள். ஆசிரியர் அதை எடுத்து வெட்டிவிட்டு ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டது’ என்று செய்தியை மாற்றுகிறார். இதுதான் கதை.

இந்தக்கதை உண்மையில் நடந்தது. அந்த நாளிதழாசிரியரை நான் ஒருமுறை பார்த்துமிருக்கிறேன். செய்தியை கடைசி நிமிடத்தில் மாற்றியமைத்த நிகழ்ச்சியை அப்போது அவருடன் இருந்தவர்கள் சொன்னார்கள். அந்த நாளிதழாசிரியர் என்னுடைய பெரும் மதிப்பிற்குரியவர். எந்தவகையான நேர்மையில்லாத செயலையும் அவர் செய்யமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன். ஆனால் அவர் இங்கே இதழாளர் என்ற எல்லையில் இருந்து மீறிச்செல்கிறார். வரலாற்றை அவர் செய்தியாக்கவில்லை. மாறாக வரலாற்றை அவர் மாற்றியமைக்கிறார். அதற்கு தனக்கு உரிமை இருப்பதாக நினைக்கிறார்.

உண்மையில் முந்நூறு வருடங்களுக்கும் மேலாக ராமஜன்மபூமி — பாபர் மசூதி சர்ச்சை நிகழ்ந்து வருகிறது. ராமஜன்மபூமி என்று நூற்றாண்டுகளாகக் கருதப்படும் அந்த நிலத்தில் பாபர் கட்டிய வெற்றிக்கும்பம் இருந்தது. அது வழிபாடு நிகழ்ந்த மசூதி அல்ல, கும்மட்டம் மட்டுமே. அதை நானே கண்டுமிருக்கிறேன். இப்போது அதைப்போன்ற பாழடைந்த வெற்றிக் கும்மட்டங்கள் காசிவிஸ்வநாதர் கோயிலை ஒட்டியும் மதுராவில் கிருஷ்ண ஜன்மபூமி கோயிலை ஒட்டியும் உள்ளன. அங்கும் தொழுகைகள் ஏதும் நிகழ்வதில்லை. வட இந்தியாவில் உள்ள பல கோயில்களை ஒட்டி இத்தகைய மசூதிக்கும்மட்டங்களைக் காணமுடியும்.

முகலாயர் ஆட்சிக்காலத்தில் இக்கோயில்கள் இடிக்கப்பட்டு அங்கே அந்தக் கும்மட்டங்கள் கட்டப்பட்டன என்பது வரலாறு. சில நூற்றாண்டுகள் கழித்து காசி மராட்டியர்களாலும், மதுரா ராஜபுத்திரர்களாலும் கைப்பற்றப்பட்டபோது அங்கே கோயில்கள் மீண்டும் கட்டப்பட்டன. முந்தைய கோயில்கள் இருந்த இடம் குறித்த நினைவு தலைமுறை தலைமுறையாக இருந்து கொண்டிருந்ததனால் இது சாத்தியமாயிற்று. காசியும் கிருஷ்ணஜன்மபூமியும் அப்படி குறைந்தது இரண்டுமுறை மீண்டும் கட்டி எழுப்ப்பபட்டன.

அதே போல நினைவில் ராமஜன்மபூமியாக கருதப்படும் இடம் அயோத்தியில் அந்த நிலம். அங்கே கோயில்கட்டவேண்டும் என்ற கோரிக்கை பதினேழாம் நூற்றாண்டில் முகலாய ஆட்சி முடிந்தது முதல் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்தப்பகுதி அவத் நவாபால் ஆளப்பட்டமையால் கோயில் கட்டமுடியவில்லை. அந்நிலத்தைக் கைப்பற்ற பல போர்களும் பூசல்களும் நடந்துள்ளன. பிரிட்டிஷ் அரசாங்கம் அந்தச் சர்ச்சைக்கு முடிவுகாண முடியாமல் அப்பகுதியைப் பூட்டிவைத்தது. அதை நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திறந்தார்கள். அதையொட்டித்தான் ராமஜன்மபூமியில் கோயில்கட்டவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை பாரதீய ஜனதா கட்சி அரசியல்படுத்தியது.

பாபரின் மசூதி கும்மட்டம் இடிக்கப்பட்டதை இந்திய ஜனநாயகத்தின் மீதான ஒரு இழிவான தாக்குதலாக மட்டுமே நான் காண்கிறேன். காந்தியின் இந்தியா அழிந்து மதவெறியர்களின் இந்தியா உருவான திருப்புமுனைப்புள்ளி அது. இன்றைய இந்தியாவின் வன்முறைச்சூழலுக்கு அதன்மூலம் இந்துத்துவர்கள் வழியமைத்தார்கள். அந்தப்பழியின் பொறுப்பில் இருந்து ஒருநாளும் பாரதீய ஜனதாக்கட்சி தப்ப முடியாது. அங்கே நவீன இந்தியாவின் குறியீடாக மசூதியும் கோயிலும் இணைந்த ஒரு கட்டுமானம் எழுந்திருந்தால் அது எத்தனை மகத்தான முன்னுதாரணமாக இருந்திருக்கும். ஒரு இந்துத்தலைவர் அப்படிச் செய்யும் பரந்தமனமும் தொலைநோக்கும் கொண்டவராக இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருந்திருக்கும்!

இன்று அந்த நிலத்தில் ராமருக்குக் கோயில் கட்டப்படுவதை நான் எதிர்க்கிறேன். அந்த இடம் அரசியலாக்கப்பட்டதன் வழியாக, ஒரு அறமீறல் அங்கே நிகழ்ந்ததன் வழியாக, இந்திய ஜனநாய்கத்தின்மீதும் இந்து மனநிலைமீதும் ஒரு களங்கமாக அது ஆனதன் வழியாக, அங்கே ராமருக்கு கோயில் கட்டபப்டும் தகுதி அவ்விடத்துக்கு இல்லாமலாகிறது என்றே எண்ணுகிரேன். அங்கே நம் நாட்டின் மத நல்லிணக்கத்தை நிலைநாஅட்டும் ஒரு தேசியச்சின்னம் அம்ட்டுமே உருவாக்கப்படுவதே சிறந்தது என்று என் எண்ணம். அங்கே ஒரு கோயில் கட்டபப்டுமென்றால் ஒருபோதும் அது ஓர் ஆன்மீக மையமாக இருக்காது, ஓர் அரசியல் சின்னமாகவே இருக்கும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று அந்த நாளிதழாசிரியர் அடைந்த அதே மனக்கொந்தளிப்பையும், வருத்தத்தையும், இயலாமையையும், எதிர்காலம் குறித்த அச்சத்தையும் நானும் அடைந்தேன். ஆனால் அவர்செய்ததை பிறகு கேள்விப்பட்டபோது நான் ஏற்கவில்லை. அப்படி ஒரு திரிப்பைச் செய்ய அவருக்கு என்ன உரிமை என்றுதான் என் எண்ணம் எழுந்தது. எத்தனை உயர்ந்த நோக்கத்தில் அவர் அதைச் செய்திருந்தாலும் அதன் மூலம் தீய விளைவுகளே உருவாகும் என்று தோன்றியது.

அந்த இதழாளரின் நிலைபாட்டைத்தான் இந்தியாவில் உள்ள முற்போக்காளர்கள் அனைவரும் எடுத்தார்கள். அதை மீண்டும் மீண்டும் பாபர் மசூதி என்று சொல்லிச் சொல்லி நிலைநாட்டினார்கள். அங்கே ஒரு நீண்டகால உரிமைச்சர்ச்சை நிகழ்ந்திருந்தது என்பதையே முழுமையாக மறைத்தார்கள். அந்நிகழ்ச்சி நடந்து முடிந்தபின் வந்த இன்றைய புதிய தலைமுறைக்கு அந்தத்தகவல்கள் எதுவுமே தெரியாது. பல்லாயிரம்பேர் அமர்ந்து தொழுகைசெய்துவந்த ஒரு மசூதியை ராமர்கோயில் கட்ட இடம்வேண்டும் என்று கோரி இந்துத்துவர்கள் இடித்துவிட்டார்கள் என்ற ஒற்றைச்சித்திரம்தான் இன்றைய முஸ்லீம்களிடம் உள்ளது. இவ்வருடம் டிசம்பரில் தமிழகம் முழுக்க ஒட்டப்பட்ட பல்லாயிரம் சுவரொட்டிகளில் இருந்தது அந்த வாசகம்தான்!

உண்மையில் இந்தியாவில்  முஸ்லீம் ஆட்சியாளர்கள் கோயில்களை இடித்த வரலாறும், ராமஜன்மபூமியின் வரலாற்றுப்பின்புலமும் தெரியாத நிலையில் ஒரு முற்போக்கு முஸ்லீமுக்குக் கூட இன்று கூறப்படும் பாபர் மசூதி இடிப்புச்சித்திரம் மனக்கொதிப்பைத்தான் உருவாக்கும். அவர்களுக்கு நம் ஊடகங்கள் சொல்லும் சித்திரத்தைவைத்துப்பார்த்தால் அந்தக் கொதிப்பு நியாயமானதே. மீண்டும் மீண்டும் ஆவேசமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இன்று வரை  அதுதான் அச்சமூக இளம்தலைமுறையினரிடம் முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு டிசம்பர் மாதமும் கிளம்பும் பீதியும், அவநம்பிக்கையும், வெறிகளும் அந்த தவறான தகவலில் இருந்து உருவாக்கப்பட்டவை. இன்றைய இந்தியாவில் உள்ள அடிப்படைவாத வன்முறையின் பெரும்பகுதிக்கு அந்த ஒற்றைத் தகவல்த்திரிபுதான் காரணம். அந்தத் திரிபை உருவாக்கியவர்கள் நமது முற்போக்கு ஊடகவியலாளர்கள்.

இஸ்லாமியர்களை அது வெறிகொள்ளச்செய்கிறது என்பது ஒருபக்கம் என்றால் அதன்மூலம் உருவாக்கப்படும் அச்சம் மற்றும் பதற்றம் காரணமாக இஸ்லாமியர்கள் மீது ஆழமான அவநம்பிக்கை பிறரிடம் உருவாகிறது. ஒரு சராசரி இந்து ‘அப்படித்தான் ராமர்கோயிலை இடித்த பாபரை ஆதரிப்பேன்’ என்று முஸ்லீம்கள் சொல்வதாக எடுத்துக்கொள்கிறான். அவர்கள் நம்பும் திரிபுபட்ட வரலாறு இவர்களுக்கு தெரியாது. இந்த அவநம்பிக்கையை வன்மத்தையும் வெறுப்பையும் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட அறிவுஜீவிகள் தூண்டிவிடுகிறார்கள். விளைவாக இந்த நாடு மேலும் மேலும் பிளவுபடுகிறது. இந்நாட்டின் எதிரிகள் இந்நாட்டின்மீது தீவிரவாதிகளை ஏவி விடுவதற்கான முக்கியமான காரணமாக இத்தகவலையே சொல்கிறார்கள். அதன் இழப்புகள் நாள்தோறும் பெருகுபவை.

இன்று ராமஜன்மபூமி-பாபர் மசூதி சர்ச்சையின் உண்மையான வரலாற்றை எவரேனும் சொல்லப்போனால் அவரை இந்துத்துவர் என்று முத்திரை குத்தி கடப்பாரை ஏந்தி பாபர்மசூதியை இடிக்கப்போனதே அவர்தான் என்று கைகாட்டி வன்முறைக்கு இலக்காக ஆக்கிவிடுவார்கள் என்ற நிலை நிலவுகிறது இன்று. நம் கண்முன் நடந்த, கால்நூற்றாண்டுகூடத் தாண்டாத, இந்த நேரடியான வரலாற்றுத்தகவலை இன்று எந்த செய்தித்தாளிலும் நாம் எழுதிவிட முடியாது!

அந்த நாளிதழாசிரியரைப் போன்றவர்கள் ஒரு தார்மீக ஆவேசத்தால் உந்தப்பட்டு செய்த ஒரு வரலாற்றுப்பிழையின் விளைவுகள் இந்நாட்டில் இன்னும் பலதலைமுறைக்காலம் ரத்தத்தை ஓடவைக்கும். சொல்லப்போனால் அவர் பாபர்மசூதியை இடித்த மதவெறியர்கள் அளவுக்கே பெரிய பேரழிவை இந்தத் தேசத்துக்குச் செய்திருக்கிறார்.

ஒரு நாகரீகமான இந்து பலநூற்றாண்டுக்காலம் இந்த நாட்டில் இந்துமதம் நிகழ்த்திய சாதிக்கொடுமைகளுக்காக வெட்கப்பட்டாகவேண்டும். ஒரு நாகரீகமான கிறித்தவன் உலகமெங்கும் பன்மைக்கலாச்சாரம் மீது கிறித்தவம் நிகழ்த்திய அழித்தொழிப்புகளுக்காக வெட்கியாக வேண்டும். ஓரு நாகரீகமான இஸ்லாமியன் சென்றகாலத்தில் மதவெறிகொண்ட இஸ்லாமிய மன்னர்களால் நிகழ்த்தப்பட்ட அழிவுவேலைகளுக்காக வெட்கப்பட்டாக வேண்டுவோரு கம்யூனிஸ்டு ஸ்டாலினுகாகவும் போல்பாட்டுக்காகவும் தலைகுனிந்தாகவேண்டும். அது நம் ஒவ்வொருவர் மீதும் வரலாறு ஏற்றிவைத்துள்ள சுமை.

இந்தியாவில் இஸ்லாம் பேரழிவுகளை உருவாக்கியிருக்கிறது. நிறுவனங்களை நம்பி நடந்த தத்துவமதமான பௌத்தம் இஸ்லாமியப்படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது. சடங்குமதமாக இருந்த இந்துமதம் சடங்குகளாக தப்பியதென்றாலும் அதன் நிறுவனங்கள் அழிக்கப்பட்டன. ஆதிக்க அரசர்களான பாபரும் ஔரங்கஜீபும் நிகழ்த்திய அழிவுகளுக்கு இன்றைய இஸ்லாமியர் பொறுப்பல்ல. வேதம் கேட்ட காதில் ஈயத்தை உருக்கி ஊற்றிய நேற்றைய பிராமணத்தலைமைக்கு இன்றைய இந்து பொறுப்பல்ல என்பது போல. ஆனால் நேற்றைய பிராமணியத்தை இன்று ஒருவர் அப்படியே தன்னது என்று ஏற்றுக்கொள்கிறார் என்றால் அவர் அதற்குப் பொறுப்புதான். பாபரையும் ஔரங்கஜீ¨ப்பைம் ஒருவர் இன்றும் தூக்கிப்பிடிக்கிறார் என்றால் அவர் அதற்குப் பொறுப்புதான்.

இந்தத்தெளிவு இஸ்லாமியர்களுக்கு இருந்திருந்தால் பாபர் மசூதியை தங்கள் அடையாளமாக அவர்கள் முன்வைக்கமாட்டார்கள். அந்தப் புரிதலை அவர்களுக்கு அளிப்பதற்குப் பதிலாக ஆதிக்கவெறிகொண்ட மன்னர்களின் அந்தப் பாரம்பரியத்தை பாதுக்காக்க முஸ்லீம்கள் ஒருங்கிணையவேண்டுமென்ற சித்திரத்தையே நமது ஊடகங்கள் அவர்களுக்கு அளித்தன. பாபரை இலட்சிய புருஷனாக நம் முற்போக்காளர்களே எழுதினார்கள். இன்றைய இஸ்லாமிய சமூகத்தை நேற்றைய ஆதிக்கவெறியர்களுடன் அடையாளப்படுத்தியது முதன்மையாக நம் முற்போக்காளர்களே. சர்ச்சைக்கிடமான கட்டிடம் என்பது பாபர் மசூதி என்ற ஐயம்திரிபிலாது மாற்றப்படுவதன் மூலம் நடந்தது இதுவே. அந்த வெறி இஸ்லாமியரிடம் எழுப்ப்பபட்டதன் விளைவே இன்றைய வன்முறைகள். அதற்கு மதவெறிகொண்ட இந்துத்துவர் முதல் பொறுப்பு என்றால் வரலாற்றைத் திரித்த நம்முடைய முற்போக்கு இதழாளர்கள் இரண்டாம் பொறுப்பு.

அரசியல்சரிநிலை என்பது அபத்தமாக, அழிவுசக்தியாக ஆன வரலாற்றுத்தருணம் இது. அந்தப்பிழை இன்றும் தொடர்கிறது. அரசாங்கம் செய்யும் ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாக ஊடகம் ஒலிப்பது அரசியல்சரிநிலை. ஆனால் ஒரு அரசாங்கம் தீவிரவாதம் போன்ற நேரடி ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராடும்போதுகூட நம் ஊடகவியலாளர்களில் ஒரு சாரார் அரசாங்கத்தை எதிர்ப்பது என்ற நோக்கில் தீவிரவாதத்துக்கு ஆதரவான நிலைபாடு எடுக்கிறார்கள். தீவிரவாதியை தியாகியாக ஆக்குகிறார்கள். அப்சல் என்ற தீவிரவாதியை அரசு தண்டிப்பதை இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரான செயலாக சித்தரித்த நம் இதழாளர்கள் அல்லவா உண்மையில் இஸ்லாமிய சமூகத்தையே தீவிரவாதிகளாக முத்திரை குத்தியவர்கள்? அப்பொறுப்பின்மை மூலம் அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளையும் செயலற்றதாக ஆக்குகிறார்கள். அதன் மூலம் நம் தேசத்தையே பாதுகாப்பில்லாத நிலைக்குத் தள்ளுகிறார்கள்.

மேலும் தீவிரவாதம் அதற்கு அடிப்படையாக உள்ள மத அடிப்படைவாதம் போன்றவற்றை நியாயப்படுத்தும் இதழாளர்களும் அறிவுஜீவிகளும் ஒரு தேசத்துக் குடிமக்களுக்கு அத்தேசம் மீது இருந்தாக வேண்டிய  அடிப்படையான நம்பிக்கையைச் சிதைக்கிறார்கள். ஒரு நிலப்பகுதியில் வாழும் மக்கள் ஒருவருக்கொருவர் பற்றுகொண்டு ஒரு சமூகமாக உணர்வதே தேசியம் என்பது. அந்த ஒற்றுமை உணர்வின் மூலம் அவர்கள் பாதுகாப்பையும் பொருளியல்முன்னேற்றத்தையும் அடைகிறார்கள். அப்படி ஒருங்கிணைக்கும் விழுமியங்கள் மீது அவர்கள் கொள்ளும் நம்பிக்கையும் ஈடுபாடுமே தேசபக்தி என்பது.

தேசபக்தியை இழக்கும்போது தேசிய அமைப்பு சிதறுகிறது. அவநம்பிக்கைகளும் மோதல்களும் பெருகுகின்றன. அதன் விளைவாக உருவாகும் அழிவுகளுக்கு எல்லையே இல்லை. பிற தேசங்கள் மீது ஆக்ரமிப்பை நிகழ்த்தும்பொருட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவகிக்கப்பட்ட தீவிரதேசியக் கருத்துருவங்களை நாம் இங்கே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு நிலப்பகுதியின், ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறையின் கட்டாயத்தால் ஒருமக்கள்கூட்டம் சேர்ந்துதான் வாழ்ந்தாகவேண்டும் என்ற நிலையில் உருவாகும் இன்றியமையாத தேசியத்தைப்பற்றியே நாம் பேசுகிறோம்.

இந்தியா என்ற இந்த நிலப்பகுதியில் பல நூற்றாண்டுக்காலமாகவே மக்கள்பரிமாற்றம் நடந்துள்ளது. இங்குள்ள ஒவ்வொரு பகுதியிலும் பல இன,மொழி,மத மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இது ஒரு தேசியமாகவே நீடிக்க முடியும். இவர்கள் அனைவருக்கும் இடமுள்ள ஒரு விரிவான நவீன தேசியமே இந்நிலத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். அத்தகைய ஒரு தேசியமாகவே இந்திய தேசியம் இதன் முன்னோடிகளால் உருவகிக்கப்பட்டிருக்கிறது.

நமது முற்போக்கு இதழாளர்கள் அரசாங்கத்தை எதிர்க்கிறோம் என்ற நிலைபாட்டில் நின்றபடி இந்த தேசியத்தின் அடிப்படைகளைக் கெல்லி எறியும் சிதிலசக்திகளை தூண்டி விடுகிறார்கள். அவர்களை நியாயப்படுத்துகிறார்கள். அவர்களை வளர்த்தெடுக்கிறார்கள். மத, இன,மொழி அடிப்படைவாதங்களை ஆதரிக்கும் இதழாளர்கள் அதன்மூலம் பேரழிவுகளுக்கு விதை வீசுகிறார்கள். மக்களிடையே கசப்புகளையும் வன்மங்களையும் உருவாக்கும் ஊடகவியலாளர்கள் நிகழ்த்தும் அழிவுகள் எல்லையற்றவை.

இன்னும் பெரிய ஆபத்து ஒன்று உண்டு. இந்த தேசியத்தை அழித்து, ஒன்றுடன் ஒன்று மோதி அழியும் மக்கள்திரளாக இதை மாற்றி, ஆயுதவிற்பனை மூலமும் நில,கனிவளங்களை உரிமைகொள்வதன்மூலமும் லாபம் அடைய எண்ணும் அன்னிய சக்திகளின் கைக்கூலிகளாகச் செயல்படும் இதழாளர்களும் அறிவுஜீவிகளும் நம் நாட்டில் ஏராளமாக இருக்கிறார்கள். இந்தக் கும்பல் மேலே சொல்ல அரசியல்சரிநிலை எடுக்கும் இதழாளர் மற்றும் அறிவுவுஜீவிகளின் அதேகுரலை தங்கள் போர்வையாகக் கொண்டிருக்கிறது. அதே கோஷங்களை தங்களுக்கு ஏற்ற வகையில் திரித்து மேலும் உரக்க ஒலிக்கிறது.

இன்றைய சூழலில் அப்பட்டமாக உண்மையைச் சொல்லும் திராணி கொண்ட இதழியல் நமக்கு தேவை. ஆனால் இதழியல் இந்த அளவுக்கு வணிகமயமாகியுள்ள சூழலில் அதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவே. ஆகவேதான் நான் செய்தித்தாள்களை ஒட்டி சிந்திப்பதை எப்போதுமே தவிர்க்க முயல்கிறேன்.

மறுபுரசுரம் முதற்பிரசுரம் ஜனவரி 2009

ஊடகங்கள், அரசியல், விவாதங்கள்

அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்

இஸ்லாம், மார்க்ஸ்:ஒரு கடிதம்

அ.மார்க்ஸ்:கடிதங்கள்

அ.மார்க்ஸ்;கடிதம்

அ.மார்க்ஸ் என்னும் வழக்குரைஞர்

இந்தியா கடிதங்கள்

இந்தியா:கடிதங்கள்

எனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்

எனது இந்தியா:கடிதங்கள்

இந்தியா:கடிதங்கள்

எனது இந்தியாவைப்பற்றி….

எனது இந்தியா:கடிதங்கள்

எனது இந்தியா

முந்தைய கட்டுரைஅகக்காடு- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 17