கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

சிவசங்கரன் மகேஷிடம் “என்னடே ஆச்சு? அங்க என்ன வேலை செய்யுதியா நொட்டுதியா? என்ன செய்யுதே?” என்று கூச்சலிட்டார்.

மகேஷ் முனகலாக “ஃபைலு…” என்றான்.

“ஃபைலும் மயிரும். நான் உனக்க கிட்ட என்ன சொன்னேன்? எஸ்டிமேட்டையும் ப்ளூப்ரிண்டையும் கொண்டுவரச் சொன்னேனா இல்லியா?”

‘ஆமா, அனா அது மத்த ஃபைலிலேதான் இருக்கு.”

“அப்ப அது எங்க?”

“அதைத்தான் நான் தேடி…”

சிவசங்கரன் சற்றுநேரம் அவனைப் பார்த்தபடி பொறுமையை காத்தார். பிறகு “செரி, ஃபைலு… ஃபைலு வேணும். ஃபைலு எங்க இருக்கு?” என்றார்.

“தேடுதேன் சார்.”

“இப்ப அரை மணிகூரிலே ஜிஎம் இங்க வந்திருவாரு. வந்த உடனே உமக்கும் எனக்கும் வாரியலடி இருக்கு… சாதாரண வாரியலடி இல்லை, சாணியிலே முக்கின வாரியலடி… ஆளைத்தெரியும்ல? வேலைநடக்காம மொத்த டிப்பார்ட்மெண்டும் மண்ணுலே உக்காந்திருந்தாலும் செரி, ஊழல் மட்டும் நடக்கப்பிடாதுன்னு நினைக்கிற மரைக்காயரு… சுத்தபத்தம் மயிரு மட்டை, அய்யரு செத்தான். இங்க அவனவவன் சாகுதான். அந்தாளுக்கு நேர்மை…பெரிய கக்கன் காமராஜருல்லா?”

“அதுக்கு நாம ஒரு தப்பும் செய்யல்லியே சார்?” என்று மகேஷ் சொன்னான்.

“நாம தப்புசெய்யல்ல. அது  நமக்குத்தெரியும். அவருக்க பார்வையிலே எல்லா தப்பும் ஊழலாக்கும்… நாட்டிலே உள்ள அத்தனைபேரும் திருடனுங்க. டேய், இந்த நல்லவனுக்க சிக்கலே இதாக்கும். மத்த அத்தனைபேரும் கெட்டவன்னு நினைப்பான். அவனை வச்சுகிட்டு டிப்பார்ட்மெண்டு வேலையை செய்யமுடியாது… “ சிவசங்கரன் தலையை சலிப்புடன் அசைத்து “தர்காவுக்கு போயிருக்காரு. அங்கபோயில் ஓதி தொழுகையை முடிச்சா நேர இங்க. வருவாரு நம்மள குர்பானி போடுகதுக்கு” என்றார்.

“வாறதப் பாப்பம் சார்… நாம என்ன செய்ய முடியும்?”

“என்னத்த பாக்க? நீ ஜூனியர். உனக்கு இன்னும் பத்து வருசத்துக்கு பிரமோசன் இல்லை. நான் அப்டி இல்லை. இந்தா வாற டிசம்பரோட நமக்கு பிரமோசன் வருது. ரெண்டு வருசம் அதிலே நொட்டினா ரிட்டயர்மெண்டு, கொஞ்சம் பைசா பெனிஃபிட்டு உண்டு. கிறுக்கன் நம்மளை பிடிச்சு சஸ்பெண்ட் பண்ணி விட்டான்னா பிறகு அதிலே மண்ணாக்கும். இந்தா இந்த போஸ்டிலேயே ரிட்டயர்மெண்டு… மானம் மரியாதையா ரிட்டயர் ஆகணுமானா அதுக்கும் முடியாது. ரெண்டு வருசத்துக்குள்ள கேஸு முடியணும். நம்ம டிப்பாட்மெண்டிலே கேஸு போடுகது ஈஸி, முடிக்கது கஷ்டம். அவனுக போடுத கேஸை காலிலே விழுந்து கண்ணீரு விட்டு நாம முடிக்கணும். தண்டனைய குடுங்க சாமீன்னு கெஞ்சணும்…” சிவசங்கரன் சட்டென்று உரக்க “எங்கிணயாம் போயிச் சாவணும்னு தோணுதுடே…” என்றார்.  “நல்லா நியூ இயர் விடிஞ்சிருக்கு…நாசமத்து போக.”

“பாப்பம் சார்” என்றான் மகேஷ்.

“என்னத்த பாக்க? பாக்கவேண்டிய நேரத்திலே பாத்திருக்கணும்… இந்தா டவரு மொத்தமாட்டு சாய்ஞ்சு நிக்குது. அவுத்து அஸ்திவாரத்தை உடைச்சு சரியாக்கணும். அம்பதுலெச்சம் ரூவா செலவு. எவன் குடுப்பான்? நான் குடுக்கணும், டிஇ குடுக்கணும்… காண்டிராக்டர் அவன் பாட்டுக்கு போயிருவான்.. “ அவர் பெருமூச்சு விட்டு “நம்ம தப்புதான். நாம சரியா பாக்கல்ல” என்றார்.

“நூறுதடவை பாத்தாச்சு சார். மண்ணு பரிசோதனையிலே சிக்கல்… நாம அதை பிரிடிக்ட் பண்ணல்ல. சொல்லப்போனா காண்டிராக்டரும் தப்பு பண்ணல்ல. அவனுக்கும் நஷ்டம்தான்… கவனக்குறைவா இருந்துட்டோம். இது முதல் டவர்னா கவனமா இருந்திருப்போம். திரும்பத் திரும்ப செய்யுறப்ப எல்லாம் சரி ஓக்கேன்னு ஆயிடுது. சும்மா சித்தம்போக்கிலே எல்லாத்தையும் செய்தோம், அதாக்கும் தப்பு….”

“ஆமா, ஆனா இதை அந்தாளு சம்மதிக்கணுமே… கடிச்சு தின்ன வருவாரே.. போயி டவர் நிக்குத நிலையை பாத்தாரு. யா அல்லான்னு நெஞ்சை பிடிச்சுக்கிட்டு அப்டியே நின்னிருக்காரு. பக்கத்திலே நின்ன டிஇயும் மத்தவங்களும் நாலடி பின்னாலே போயிட்டாங்க. அந்தால போயி ஜீப்பிலே ஏறியிருக்காரு. ஜேஈ எனக்கு ஃபோனை போட்டு வந்திட்டிருக்காரு, ஃபைலையெல்லாம் எடுத்து வைக்கச் சொன்னாருன்னு சொன்னாரு. என்னவே, என்ன நிலைமைன்னு சொன்னேன்.அப்பன் தேடிவைச்ச நாலேக்கர் ரப்பர் இருக்குல்லா, இனி அதிலே போயி நொட்டி வாழுத வழியைப்பாக்கப்போறேன்னு அவன் சொல்லுதான். நமக்கு ரப்பரும் இல்லியே.”

கதவு வழியாக ஒரு வண்ணம் கடந்து போயிற்று. சிவசங்கரன் திடுக்கிட்டு எழுந்து “டேய், அது நம்ம அனந்தனுக்க மக சின்னக்குட்டியில்லா? அதுக்க பேரு என்ன? ஸ்ரீதேவியாவா?”

“வித்யா…”

“ஆமா, அது என்ன, இங்க லாந்திக்கிட்டு கெடக்கு…”

“அத ஸ்கூலு முடிஞ்சா இங்க ரூமிலேதானே கொண்டுவந்து வச்சுகிடுதான்.”

“போடே, போயி அவன்கிட்ட சொல்லு. குட்டியை எங்கியாவது கொண்டு போயி விடச்சொல்லு. ஜிஎம் வாற நேரம்.. இருக்கிற இருப்பிலே இது எதுக்காலே போனா சொல்லவேண்டாம்… சீக்கிரம் போடே.”

மகேஷ் வெளியே போனதும் சிவசங்கரன் ஃபோனை எடுத்து சுழற்றினார். மறுபக்கம் பிரான்ஸிஸ் போனை எடுத்தார் “லே மக்கா பிராஞ்சி… என்னடே நடக்குது? எனக்கு ஒரு மாதிரி இருக்குடே” என்றார்.

“அவரு தர்காவுக்க உள்ள இருந்து தொழுவுதாரு. டிஇயும் கூட்டமும் வெளியே நிக்குது… நான் இப்ப கிளம்பிட்டிருக்கேன்.”

“உம்மகிட்ட் எஸ்டிமேட்  ப்ளூபிரின்ட் எல்லாம் இருக்காவே?”

“எல்லாம் இருக்கு. நம்ம கிட்ட எட்டு டவர். எல்லா ரெடியா இருக்கு.”

“அய்யோ என்ன செய்யுததுன்னே தெரியல்ல… இங்க அந்த ஃபைலை மட்டும் காணல்ல…மகேசுகிட்ட சொன்னேன். அவன் சின்னப்பய. தத்துப்பித்துங்குதான்…”

“ஃபைலு தொலைஞ்சு போச்சோ?”

“தொலையாது… நான் இந்த நம்பர் பாத்து அடுக்குததில்லை பாத்துக்க. எடுத்துப் பாப்பேன், இடுக்கு இருக்குத இடத்திலே செருவி வைப்பேன். நேத்து டவர் சரிஞ்ச நியூஸ் வந்தப்ப எடுத்தேன். பாத்துட்டு எங்க வைச்சேன்னு தெரியல்ல. நாலு பீரோவிலே ஆயிரத்திநாநூறு ஃபைலு இருக்கு… எங்க தேடுகது? வந்ததுமே அதைத்தான் கேப்பாரு?”

“ஆமா கேப்பாரு… அதை பாத்தாத்தானே தெரியும்… வே, பெரிய ஊழல் நடந்திருக்குன்னுதான் நினைப்பாரு. அஸ்திவாரம் பேந்துட்டு வருதுன்னா பின்ன வேற அர்த்தமே இல்லைல்லா?”

“எஸ்டிமேட்டு, பிளான் எல்லாமே செரியா இருக்கே.”

“செரி, அப்ப அது எங்க?”

“நான் சாவுதேன்…”

“செரி” என்று அவன் போனை வைத்தான்.

”போடா…!” என்றார் சிவசங்கரன் போனை ஓங்கி வைத்தபடி.

மகேஷ் வந்து “சார், அனந்தன் ரூமிலே இல்லை. அந்தக்குட்டிதான் மேசைக்கு அடியிலே விளையாடிட்டு இருக்கு.”

“அவனை கண்டுபிடிடே… நில்லு, நீ ஜேஇயில்லா? நீ எதுக்கு போறே? பியூனை அனுப்பி அவனை பிடிச்சுட்டு வரச்சொல்லு. நேரா முன்னாலே மணிகண்டன் கடையிலே இருப்பான்… போய் கூட்டிட்டு வரச்சொல்லு… அதுக்குள்ள அந்த குட்டியை பிடிச்சு எங்கயாவது விடுடே.”

“அது செரியான சண்டிராணியாக்கும் சார். ஆளு மூக்குப்பொடி டப்பி மாதிரி இருக்குன்னு நினைக்க வேண்டாம். நான் பாப்பா வெளியே வான்னு சொன்னேன். நீ என் பிள்ளைய கொல்ல வந்தியா ராட்சசான்னு சொல்லி ஒரு கம்பை எடுக்குது.”

“பிள்ளையையா?”

“மேஜைக்கு அடியிலே அது எட்டு பிள்ளைகளை போட்டு வளக்குது சார்… நாலு பிள்ளைகளுக்கு காய்ச்சல்னுட்டு துணிபோட்டு போர்த்தி உறங்க வச்சிருக்கு.”

சிவசங்கரன் முகம் மலர்ந்து “பாருடே, சின்னக்குட்டியா இருக்குறப்பவே என்னமா பிள்ளை வளக்குதுன்னு… நம்ம வீட்டிலேயும் ஒண்ணு கிடக்கு. ரெண்டு வயசாக்கும். இருபத்துநாலு மணிக்கூர் நேரமும் அது வாத்திச்சியாக்கும். நாப்பது அம்பது பிள்ளை எப்பமும் கூடவே இருக்கும்.”

“நான் அவனை ஆளவிட்டு பிடிக்கச் சொல்லுதேன் சார்.”

“அந்தக்குட்டியை அப்டியே பின்னாலே லைன்மேன் குவார்ட்டர்ஸுக்கு அனுப்பிரு… அனந்தனை கொஞ்சம் ஒளுங்கா இருக்கச்சொல்லு. ஜிஎம் வாற நேரத்திலே கதைபுக்கு வாசிச்சுட்டு இருக்கப்போறான். அவரு பசிச்ச புலி மாதிரியாக்கும் வரப்போறாரு.”

மகேஷ் சென்றதும் அவர் எழுந்து அலமாராக்களை திறந்து ஃபைல்களை தேடினார். “எங்க கொண்டுபோயி வச்சேன்னு தெரியல்லியே. நாசமத்து போக. எனக்க முத்தாலம்மா, காப்பாத்துடீ. உனக்கு நான் ஒரு சக்கரைப் பொங்கலை வைக்கேன்.”

திரும்பி பார்த்தபோது மகேஷ் எட்டிப்பார்த்து “சார் அனந்தனை பிடிச்சாச்சு சொல்லிட்டேன்… கூட்டிட்டுப்போயி அந்தாலே விடுதேன்னு சொன்னான்.”

“டேய் ஃபைலு எங்க? எஸ்டிமேட்டும் ப்ளூபிரிண்டும் எங்க? இந்தா வந்திருவாரு” என்றார் சிவசங்கரன். “அய்யோ எனக்கு கலக்கீட்டு வருதே.”

மகேஷ் “சார் அவரு நம்ம இன்ஸ்பெக்‌ஷன் ரிப்போட்டைத்தான் கேப்பாரு…”

“ஆமால்ல?” என்று சிவசங்கரன் ஆறுதலாகச் சொன்னார் “அது இருக்குல்ல? அது போரும்.”

“இல்ல சார், அதைத்தான் காணல்ல.”

“நாசமத்து போவ… கொன்னிருவேன்.. கொன்னு போட்டிருவேன்… வெளையாடுதியா?” என்று சிவசங்கரன் கையிலிருந்த ஃபைலை ஓங்கி மேஜைமேல் எறிந்தார்.

“சார், இதான்லா அந்த ஃபைலு?” என்று மகேஷ் அதை எடுத்தான்.

“ஆமா, இதாக்குமே” என்று சிவசங்கரன் வாங்கி பார்த்து “டேய் இதான். இங்க இருந்திருக்கு, பாத்தியா.”

“நான் அப்பவே சொன்னேன்.”

“எப்பம்டே சொன்னே? டேய் எப்ப சொன்னே?”

“சொல்ல எங்க விட்டீங்க? சும்மா நைநைன்னுட்டு.”

அனந்தன் எட்டிப்பார்த்தான். சிவசங்கரன் “வே என்னவே? எளுத்தும் வாசிப்பும் எல்லாம் நல்லதாக்கும். சரஸ்வதியாக்கும், சரஸ்வதி முத்தாலம்மனுக்க அக்கா. அதாக்கும் நான் ஒண்ணும் சொல்லுகதில்லை. ஆனா…”

“சார், என் பாப்பா எங்க?” என்றான் அனந்தன்.

“அதை ஏன் எங்கிட்ட கேக்கிறீரு?”

“நீங்க தானே பாப்பாவை புடிச்சு அந்தப்பக்கமா கொண்டுபோகச் சொன்னீங்க?”

“ஆமா, ஜிஎம் வாறாரு… இங்க நீரு பாப்பாவோட நின்னா எங்க சங்கை கடிப்பாரு.”

“அதான், அதுக்குத்தான் தேடுதேன், பாப்பா எங்க?”

“நாங்களா வச்சிருக்கோம்?. எங்களுக்கு ஃபைலு கிடைக்கல்லேன்னு நிக்கோம். அதைத் தேடுவோமா இல்ல உம்ம பாப்பாவை தேடுவோமா?”

“சார் ஃபைலு கிட்டியாச்சுல்லா?” என்றான் மகேஷ்.

“டேய் வாயை மூடு, எங்க? எஸ்டிமேட்டும் பிளானும் எங்க? ப்ளூர்பிரிண்டு எங்க?”

“அதை தேடணும்.”

“அப்ப அதைத் தேடு, சும்மா வாய வச்சுக்கிட்டு” என்றார் சிவசங்கரன். திரும்பி அனந்தனிடம் “நீரு போயி உம்ம பாப்பாவை கண்டுபிடிச்சு கொண்டுபோயி வையும்… இப்ப ஜிஎம் வந்திருவார்.”

“அதான் தேடிட்டிருக்கேன்ல? கெடைக்கலைன்னா நான் என்ன செய்ய?” என்று அவன் திரும்பிப் போனான்.

அவன் சென்றதும் மகேஷ் “நான் ஃபைலைத் தேடிப்பாக்கேன்” என்றான்.

”ஆளாளுக்கு தேடுங்கடே… கடைசியிலே சிவசங்கரனை இங்க நீங்க தேடப்போறீங்க”

உள்ளே பாப்பா வந்து எட்டிப்பாத்து “சிவேங்கு தாத்தா, இங்கபாரு கீர்ட்டிங்ஸ்!” என்றது.

“என்னது?” என்று சிவசங்கரன் திகைத்தார்.

“கிரீட்டிங்ஸ் சார். நியூஇயர் கிரீட்டிங்ஸை எல்லாரும் இதுகிட்ட குடுத்திருக்காங்க. நானும் குடுத்தேன்.”

பாப்பா கையை விரித்து ஏராளம் என உத்தேசித்து “மூணு கீர்ட்டிங்ஸ்!” என்றது.

“பாப்பா இங்க வா…”

“வரமாட்டேன். நீ முட்டாயி குடுப்பே. அது கசக்கும்.”

“விக்ஸ்மிட்டாயை குடுத்தீங்க இல்ல சார்?” என மகேஷ் கேட்டான்.

“செருப்பாலே அடிப்பேன். போயி எஸ்டிமேட்டை எடுடா” என்று சிவசங்கரன் கத்தினார் “பஞ்சாயத்துக்கு வாறானுக!” என்று அவர் மூச்சிரைக்க மகேஷ் வெளியே போனான்.

அதற்குள் பாப்பா வெளியே போய்விட்டிருந்தது. சிவசங்கரன் வெளியே ஓடிப்போய் பார்த்தால் காரிடார் எல்லைவரை அதைக் காணவில்லை.

மாடிப்படியில் அனந்தன் இறங்கி வந்து “சார், நிஜம்மாவே பாப்பாவை காணல்ல” என்றான்.

“இந்த இங்க இப்ப நின்னுட்டிருந்தது வேய்”

“அப்ப பிடிச்சிருக்கலாம்லே?”

“பிடிக்கவா? அது என்ன பிடிக்க மாதிரியா இருக்கு? வே எதுக்குவே குட்டிகளை எல்லாம் ஆபீஸுக்கு கூட்டிட்டு வாறீரு?”

“அதுக்க ஸ்கூலு மூணுமணிக்கு முடிஞ்சிருது. எனக்கு ஆப்பீஸு அஞ்சுமணிவரை இல்ல?”

“அதுக்கு?”

“வேணுமானா நான் மூணுமணிக்கே வீட்டுக்குப் போறேன்.”

“யாருக்கு வேணுமானா? எனக்கு?” என்றார் சிவசங்கரன்.

“நீங்கதான் சொன்னீங்க?”

“நீரு வரவே வேண்டாம்…. வீட்டிலே இருந்து கதைய நொட்டும்… அய்யோ எனக்க முத்தாலம்மா, நான் சாவுதேன். இப்ப வந்திருவாரே. பள்ளியிலே மௌலவியா இருக்கவேண்டியவன்லாம் ஆப்பீசராட்டு வந்து உயிர வாங்குதானே.”

“நான் வீட்டுக்குக் கிளம்பட்டா?”

“போவும்… அந்தாலே போவும். அதையும் கூட்டிட்டு போவும்.”

“செரி.”

அனந்தன் காரிடார் எல்லை வரைச் சென்றான். அங்கே நின்று “பாப்பா பாப்பா” என்று கூப்பிட்டான். பிறகு அவரிடம் “எங்க போனா?”

“ஆ? நான் பிடிச்சு தின்னுட்டேன்” என்றபின் சிவசங்கரன் தன் அறைக்குள் போனார். மேஜைக்குப்பின் அமர்ந்து ஒரு தாளை எடுத்து அதில் “எஸ்டிமேட்” என்று சொல்லிக்கொண்டே எழுதினார். பிறகு யோசித்து “அப்ரூவ்ட் பிளான் வித் ப்ளூபிரிண்ட்” என்றார். தலையைச் சொறிந்து “சாங்க்‌ஷன்ட் ஃபினான்ஸ்” என்றார். மண்டையை மீண்டும் சொறிந்து தாளை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

கதவு திறந்து உள்ளே வந்த மகேஷ் “கிடைச்சிருச்சு சார்… இருக்கு.”

“அப்பாடா” என்றார் சிவசங்கரன் “இனி ஃபைலையாவது காட்டலாமே… அதைப்பாத்தா நாம ஊழல் செய்யல்லேன்னு தெரியும்லா?”

“அதைப்பாத்தாத்தான் சார் பிரச்சினை.”

“என்னடே சொல்லுதே?”

“லேண்ட் ரிசர்ச் பண்ணல்லை.”

“ஏன்?”

“ஏனா? என்னமோ பண்ணல்லை… எதுக்கும் பண்ணல்ல, இதுக்கும் பண்ணல்ல, அவ்வளவுதான்”

“இதுமலைச்சரிவிலே இல்லடே நின்னுட்டிருந்தது?”

“ஆமா, அப்டிப்பாத்தா பல டவரும் மலைச்சரிவிலேதான் நிக்குது.”

“அப்ப?”

“பைலை காட்டினா கொட்டையிலே மிதிப்பாரு.”

“காட்டல்லன்னா சங்கைப் பிடிப்பாரேடே.”

“ஆமா” என்றான் மகேஷ். “ரெண்டுலே ஒண்ணு… ஆனா ஒரு நல்லது என்னான்னா நாமளே ரெண்டுலே நமக்கு வேண்டியதை செலக்ட் பண்ணலாம்”

“அந்தா போகுது… டேய் அந்தா போகுதுடே”

“என்னது? என்னது?” என்றான் மகேஷ்

“அந்தக்குட்டி… அது பேரு என்ன? வித்யா… என்னத்த பேரோ, வித்தியா வாங்கினியான்னுட்டு… பிடி அதை.”

அவர்கள் இருவரும் பாய்ந்து வந்தபோது காரிடார் காலியாக இருந்தது.

மகேஷ் “எங்க போச்சு?” என்றான்.

“அதான் நான் கேக்கேன்.”

“நீங்க உள்ளதாகவே பாத்தியளா?”

“பின்ன பாக்காம?”

“இல்ல, பயந்து போனதினாலே…”

“…பெனாத்துதேன்னு சொல்லுதே?” என்று சிவசங்கரன் கூவினார் “கிறுக்கன்னு சொல்லுதே?”

மேலிருந்து அனந்தன் இறங்கி வந்து “சார், பாப்பாவை காணல்லை… எங்கயுமே இல்ல”என்றான்.

“இப்ப இங்க நின்னா வே.”

“அப்ப பிடிச்சிருக்கலம்ல?”

“அதுக்கு பின்னாலே ஓடச்சொல்லுதியா? வயசான காலத்திலே? இந்நா நம்ம விதி இது, பாய் கையாலே அடிவாங்கி சாவப்போறேன்.”

அனந்தன் “நான் பாக்குதேன்… சிலசமயம் டாய்லட்டிலே இருப்பா” என்று மேலே சென்றான்.

“வாய்ப்பிருக்கு. அதுக்கு பாத்ரூமிலே எல்லா டேப்பையும் திறந்துவிட்டுட்டு வீட்டுக்கு போற பழக்கம் உண்டு” என்றான் மகேஷ்.

“என்னவே இது? ஆபீசா இல்ல…” என்றார் சிவசங்கரன்.

“சார், நம்ம வேலையை பாப்பம்… இப்ப ஃபைலு இருக்கு. என்ன செய்ய? காட்டணுமா வேண்டாமா?”

“டேய், நீ நம்ம எளைய பயலுக்க பிராயமாக்கும். நீ சொல்லுடே, நான் என்ன செய்ய?”

“பேசாம காலிலே விழுந்திரணும்.. எர்த் டெஸ்ட் பண்ணல்ல, ரொட்டீன் விசிட்டும் அடிக்கல்லை. நெக்லிஜென்ஸ் ஆக்கும், ஆனால் ஊழலொண்ணும் செய்யல்லை, அதைச் சொல்லிப்பாத்தா மைனர் வார்னிங்கோட விட்டிருவாரு..”

“விடுவாரா?” என்றார் சிவசங்கரன் ஏக்கமாக.

“நல்ல மூடிலே இருக்கணும்…”

“இல்லியே, நல்ல மூடிலே இல்லியே. கொல்லுத மூடிலே இல்ல இருக்காரு… அதாக்குமே பிரச்சினை. இருக்குத இருப்பிலே சவிட்டி போட்டுட்டுப் போயிருவாருன்னுல்லா தோணுது.”

உள்ளே ஃபோன் அடித்தது. சிவசங்கரன் ஓடிப்போய் அதை எடுத்தார். “ஆல்லோ!”

“சார், கிளம்பியாச்சு. அஞ்சு நிமிசத்திலே வந்திருவாரு.”

“அங்க பள்ளியிலே என்னவே தொழுகை இப்டி முடிஞ்சுபோச்சு.”

“ஒருமணிநேரம் இங்க இருந்திருக்காரு. ஏடு படிச்சு கேட்டிருக்காரு.”

”ஆளுக்க மூடு எப்டி இருக்கு?”

“எப்டீன்னா? ரெத்தம் கேக்காரு…  மனுச ரெத்தம். அவரு வந்தப்ப டிரைவரு அந்தாலே ஒரு சாயை குடிக்க போயிருந்தான். அப்பவே சஸ்பெண்ட் பண்ணுவேன்னு நின்னாரு. அவன் அங்க ரோட்டிலேயே கையெடுத்து கும்பிட்டு அழுதிட்டான்…”

“என்னடே நெஞ்சக் கலக்குத பேச்சு பேசுதே?”

“வண்டியிலே ஏறுறப்ப டிஇ சும்மா சமாதானம் செய்யுததுக்காக சக்தியுள்ள சூஃபியாக்கும்னு சொன்னாரு. ஆமா உன்னை மாதிரி திருடனை எல்லாம் பொசுக்குறதுக்குண்டான சக்தி இங்க உண்டு… சம்பளம் வாங்குறீங்கள்லா, சர்க்கார் சொத்திலே ஏன்வே கையை வைக்குதீருன்னு ஒரு காட்டுக்கத்தல். டிஇ நடுங்கிட்டாரு… நான் ஒண்ணும் செய்யல்ல, எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொன்னப்ப அவருக்கு கண்ணீரு வந்திட்டுது. அதை ஆபீஸிலே போயி பாப்பம்னு சொல்லியாக்கும் ஜீப்பிலே ஏறி அங்க வாறாரு.”

“அய்யோ எனக்க முத்தாலம்மா!” என்றார் சிவசங்கரன். தளர்ந்து நாற்காலியில் அமர்ந்து தலையை அண்ணாந்தார். நன்றாக வியர்த்துவிட்டது.

“சார்” என்று மகேஷ் அழைத்தான்.

“இம்பிடு வெள்ளம் எடுடே… எனக்க பேகிலே ஒரு மாத்திரை இருக்கு அதை எடு”

மாத்திரையை மகேஷ் எடுத்து தர சிவசங்கரன் நீருடன் அதை விழுங்கினார். “அந்த ஃபேனை கொஞ்சம் நல்லா போடுடே”

மகேஷ் ஃபேனை போட்டான். அதன் சத்தம் கறக் கறக் என்றது.

“வேணுமானா இப்டி செய்யலாம்”

“என்னது?”

“ஒண்ணுமில்லை.”

“டேய் என்னது?”

“ஒண்ணுமில்லை சார்.”

“ஒண்ணுமில்லைன்னா என்ன மசுத்துக்குடே சொல்லுதே?”

“பேசாம, ஆமா அப்டித்தான் நீ நொட்டுகதை நொட்டுன்னு சொல்லலாமான்னு யோசிச்சேன்.”

“யோசிச்சே?”

“ஆமா” என்றான் மகேஷ் “ஆனா அவருக்கு டிஸ்மிஸ் பண்ணுகதுக்குண்டான அதிகாரம் உண்டு.”

“மனசறிஞ்சு சொல்லுதேண்டே, நீயெல்லாம் நல்லா இருக்க மாட்டே…” என்றார் சிவசங்கரன்.

“நான் இப்ப என்ன சொன்னேன்?”

“ஏன், அந்தாலே இந்த ஃபேனிலே கெட்டித்தூங்கி சாகலாம்னு யோசனை சொல்லுகது?”

“அந்த யோசனை எனக்கு வரலியே.”

“வந்தா சொல்லியிருப்பே?”

மகேஷ் ஏதோ முணுமுணுத்தான்

“பேசாதே, வாய வச்சுகிட்டு சும்மா இரு” என்றார் சிவசங்கரன்.

வியர்வையுடன் அவர் அமர்ந்திருந்தபோது வெளியே கார்களின் ஓசை கேட்டது.

“சார், வந்திட்டாங்க.”

“எனக்க முத்தாலம்மோ உனக்கு பந்திருநாழி சர்க்கரைப் பொங்கல் போடுதேண்டீ”

“சார் ஃபைலை என்ன செய்ய?”

“நான் செத்தா கொண்டுவந்து என் சிதையிலே வைடே… கேக்கான் பாரு…” என்று சிவசங்கரன் கூவினார். உடனே அடங்கி “ஒண்ணும் செய்யவேண்டாம். இனி ஒண்ணும் செய்யுறதுக்கில்லை. விதிபோலே நடக்கட்டும் என்றார்.

“வெளியே போயி வரவேற்கணும்லா?”

“ஆமா, மறந்துட்டேனே” என்று சிவசங்கரன் எழுந்து வெளியே ஓடினார்.

வெளியே பெரிய வெள்ளை காரில் இருந்து ஜிஎம் முகமது இஸ்மாயீல் மரைக்காயர் இறங்கி விடுவிடுவென நடந்து வந்தார். செக்கச்சிவந்த நிறம். வெண்ணிறமான நரைத்த தலை. விளிம்பில்லாத மூக்குக்கண்ணாடி. முகம் ரத்தம்போல சிவந்திருந்தது. மூச்சு இரைக்க படியேறி வந்தார்.

சிவசங்கரன் கைகூப்பியபடி முன்னால் சென்று “வெல்கம் சர்” என்றார்.

“இஸ்பெக்‌ஷனுக்கு எல்லாம் ரெடிதானே?”

“எஸ் சர்.”

“எல்லா ஆபீஸர்களும் இருக்கணும்.”

“ஆமா சார்.”

அவர் பின்னால் வந்த டிஇயின் முகம் காய்ச்சல் கண்டது போலிருந்தது. அவர்கள் படிகளில் ஏறினர். மரைக்காயர் பாய்ந்து பாய்ந்து மேலேறிச் செல்ல பிறர் மூச்சிரைக்க அவர் பின்னால் துரத்துவதுபோலச் சென்றனர்.

மேலே காரிடாரை அடைந்தபோது ஓர் அறைக்கு உள்ளிருந்து பாப்பா வெள்ளை சீருடைக் கவுன் அணிந்து கிரீட்டிங் கார்டுகளை அடுக்கி மார்போடு அணைத்து பாப் கட்டிங் தலை அலைபாய ஓடிவந்தது. அவரைப் பார்த்ததும் நின்று எச்சரிக்கை கொண்ட கண்களுடன் கூர்ந்து பார்த்தது.

டிஇ சிவசங்கரனின் கையை பிடித்துக்கொண்டார். சிவசங்கரன் விழாமலிருக்க வேண்டும் என்று மகேஷின் தோளை பிடித்தார்.

பாப்பா புன்னகைத்து “எங்கிட்ட கீர்ட்டிங்ஸ் இருக்கே, உங்கிட்ட இருக்கா?” என்று தலையை ஆட்டியபடி மரைக்காயரிடம் கேட்டது.

மரைக்காயர் புன்னகையுடன் குனிந்து “இல்லியே பாப்பா… எனக்கு ஆருமே குடுக்கல்லியே” என்றார்.

“அழுவாதே. நீ நல்ல தாத்தா. நான் உனக்கு நல்ல கீர்ட்டிங்ஸ் தாறேன் என்ன?” என்ற பின் பாப்பா உதட்டை குவித்து தன் அட்டை அடுக்குகளை மிகத்தீவிரமாக பரிசீலித்து ஓர் அட்டையை எடுத்து நீட்டியது.

“ஆ சூப்பரா இருக்கே” என்றார் மரைக்காயர்.

“அதை வைச்சு நீ வெளையாடு என்ன? கிழிக்காம வச்சுக்கோ.”

“ஒண்ணுதானா?” என்று மரைக்காயர் கேட்டார்.

பாப்பா “நீ நல்ல தாத்தாதானே?” என்று கேட்டபின் இன்னொரு சின்ன அட்டையையும் எடுத்து நீட்டியது..

அவர் அதை வாங்கி ”சரி, கிழிக்காம வச்சுக்கிடுதேன் என்ன?” என்றார்.

அப்பால் அனந்தன் வந்து நின்றான். பாப்பா அவனிடம் ஓடிப்போய் “அப்பா நான் இந்த செவேப்பு தாத்தாக்கு கீர்ட்டிங்ஸ் குடுத்தேன். அவரு பாவம்தானே?” என்றது.

அனந்தன் சங்கடமாக சிரித்தபடி அவளை அருகே இழுத்தான். “ஏன் கையை பிடிச்சு இழுக்கே?” என்றது பாப்பா.

மரைக்காயர் “உங்க டாட்டரா?”  என்றார்.

“ஆமா சார்.”

“என்ன பேரு?”

பாப்பா “விடியா” என்றது “ரொம்ப நல்ல விடியா.”

“என்னது, லிடியாவா?”

“இல்ல சார், வித்யா” என்றான் அனந்தன்.

“நல்ல சூட்டிகையான குட்டி. நல்லா இருக்கட்டும்… சீரும் சிறப்புமா இருக்கட்டும். இன்ஷால்லா!” என்ற மரைக்காயர் பாப்பாவின் தலையில் கைவைத்து வாழ்த்திவிட்டு முன்னால் போனார். பியூன் டென்னிஸ் கதவை திறக்க உள்ளே சென்றார். சிவசங்கரன் அனந்தனை பார்த்து முறைத்துவிட்டு தானும் உள்ளே சென்றார்.

கான்ஃபரன்ஸ் மேஜையில் மரைக்காயர் அமர்ந்தபின் மற்றவர்களும் அமர்ந்தார்கள். உடைகள் அசையும் ஓசையும் நாற்காலிகளின் உரசும் ஒலியும் மட்டும் கேட்டது. அனைவரும் அமர்ந்ததும் மரைக்காயர் சுற்றுமுற்றும் பார்த்தார். அவர் முகம் மலர்ந்திருந்தது.

கிரீட்டிங்ஸ் கார்டுகளை மேஜைமேல் வைத்தபின் “எல்லாருக்கும் நியூ இயர் கீர்ட்டிங்ஸ்” என்றார் மரைக்காயர். பிறகு உரக்கச் சிரித்தார்.

இறுக்கம் அகன்று அத்தனைபேரும் சிரிக்க சிவசங்கரன் தனக்குள் “முத்தாலம்மோ உனக்கு பந்திருநாழி பொங்கலாக்கும்டி” என்றார்.

***

முந்தைய கட்டுரைசிறகு,கணக்கு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைலௌகீக திபெத்