வேணு வேட்ராயன் கவிதைகளைப் பற்றி…
சமகால கவிஞரின் நூலுக்கு விமர்சனம் எழுதவேண்டுமென்றால் முதலில் கவிஞரின் அனைத்து நூல்களையும், கவிதைகளையும் வாசிக்கவேண்டும். பிறகு கவிஞரின் ஆளுமை பற்றி ஓரளவாவது அறிமுகம் வேண்டும். ஒரு ஒரு நூலை மட்டுமே வாசித்து அதில் இருப்பதை மட்டுமே வைத்து புறவயாக விமர்சித்து எழுதுவதை கவிதைகளுக்கு நான் பெரும்பாலும் செய்வதில்லை. இதன் காரணத்தை இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன். தொடர்ந்து அயலில் வாழ்வதால் நூல்களை குறித்த காலத்தில் கைப்பெறுவதே கூட சிரமான செயல். ஆகவே ஒரு சமகால கவிஞர் பற்றிய முழு மதிப்பீடு எழுதுவது போன்ற சிரமங்களுக்கு துணிய எனக்கு வாய்ப்பு அமைவதில்லை.
கவிஞர் வேணுவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மின்னஞ்சல் வழி தொடர்பு கிடைத்தது. அவரின் புத்தகம் கிண்டிலில் கிடைத்ததால் உடனே எடுத்து வாசிக்கவும் முடிந்தது. இதுவரை அவர் வெளியிட்டது இந்த ஒரு புத்தகம் மட்டும்தான் என்பதால் அதைப்பற்றி எழுதவும் துணிவு ஏற்பட்டது.
சரேலென பறந்து
சரிந்து இறங்கி
நிலைத்த நீரின்மேல் நின்றது
ஒரு நிறமற்ற பறவை.
அலகில் அலகு பொருத்தி
அலைகளிலாடும் தன்னை
அது
அருந்திவிட்டுச் சென்றது.
மாயை தண்ணீர். அதில் தெரியும் என் பிம்பம் அகந்தை. இந்த பிம்பம் தன்னை ‘நான்’ என்று நினைத்துள்ளவரை, தண்ணீரின் அலைப்புக்கெல்லாம் ஆடுகிறேன்; பிம்பத்தை உண்டாக்கும் எனது நிஜசொரூபமாகவே எப்போதும் இருந்திருப்பதை அறிகிறேன்; பிம்பத்துக்கும் அது தண்ணீரில் படும் அலைப்புகளுக்கும் சம்மந்தம் அற்றவனாகிறேன். ஆனால் அலைவாய்ப்பட்ட பிம்பம் ஆடியபடி தான் இருக்கும். உன் பார்வையில் நோவாய்ப்படுவதும் அழுவதும் சிரிப்பதும் உபதேசிப்பதும் மௌனமாய் இருப்பதும், எல்லாம் இந்த பிம்பம்தான். நீ வழிபடுவது அல்லது சிலுவையில் அறைவது, இந்த பிம்பத்தைத்தான். நீ காண்பது இதன் அலைப்புகளைத் தான். ஆனால் சத்ய சொரூபத்தில் இந்த அலைப்புகள் ஏதுமில்லை. அது அலையாட்டம் இல்லாத திடமான சொரூபமாக, எங்கோ நிற்கிறது. அது மாயையின் கரையை விட்டு நீங்கியதும், அதன் பிம்பமும் மறைகிறது. உடனே ‘மகாசமாதி, மகாபரிநிர்வாணம்’, என்றெல்லாம் சொல்கிறாய் (தியானதாரா- சாது அப்பாத்துரையின் வாய்மொழிகளை). அலகில் அலகு கவிதையை முன்வைத்து முன்பொரு சமயம் விவாதித்தபோது வேணு வெட்ராயன் கூறியவை இவை. பிரமிளின் புகழ்பெற்ற ’காவியம்’ என்ற கவிதையையைப்போன்ற நவீனக்கவிதையில் ஒரு கிளிஷேயாக மாறிவிடக்கூடிய வல்லமை கொண்டது அலகில் அலகு இக்கவிதை.
யாரோ எதுவோ எங்கோ ஏனோ முதல் பெண் சூடிய முதல் பூவில் அழகின் பிறப்பு மெய்யென்றும் பொய்யென்றும் அறிந்ததும் அறியவொண்ணாததுமாய் பெருமரமாய் கிளைத்துப்பரவி விழுதில் வேரூன்றிக்கிடக்கிறது. இளைப்பாறும் காதுகளில் கடல் அனுப்பிய மீன் ஒன்று அதன் ரகசியங்களை சொல்லிக்கொண்டிருக்கிறது.
நீரற்ற ஓடைமேல் சருகுகள் புரளச்செய்யும் காற்று. பாலை மணல்வரிகளில் அடுக்கடுக்காய் காற்றின் நினைவுகள். அதில் இரைவேண்டி கடும் வெயிலில் தவம் புரியும் அரவம். முடிவின்றி சொட்டிக்கொண்டிருக்கும் கடிகார முட்களின் அடியற்ற ஆழத்தில் விழுந்து கொண்டிருக்கும் காலத்துளிகள், சிந்தனை அனைத்தும் நின்றபின் துளிர்க்கும் முதல் அசைவு. நிலைகொள்ளாமல் கிளைமேல் சிறகடிக்கும் பறவை, திரியில் காற்றில் துடிதுடிக்கும் சுடர்.
சிறுசிறு குட்டைகளில் தேங்கி நிற்கிறது முன்னொரு காலத்தின் பெருநதி. அவை ஒவ்வொன்றிலும் உதித்தெழுகிறது அதிகாலைச் சூரியன். அருஞ்சுவை பருகும் வேரிதழ்கள் வழி மறைந்து மேலேறும் ஆழ்நதியின் நீர். செந்தளிர்களில் ஒளிரும் உயிரின் சுடர்.
வட்ட வட்ட வளையங்கள் ஒன்றை ஒன்று வெட்டிட இணைந்து விலகும் நீர்மேல் நீர்த்துளிகள். நீரினில் விழும் ஒரு துளி நீலம் உடைந்து சிதறும் கண்ணாடி குடுவை வெளியினில் நீந்தி விளையாடும் மீன்கள். நெற்பரப்பில் பறந்தலையும் காற்றின் அலைகள். தீராத எண்ணங்களை தின்று கொண்டிருகும் குருவிக்குஞ்சுகள்.
பெருவெளியை உழுது செல்லும் ஓர் ஒற்றைத்தோணி. மழைநீர்கழுவிய மண்வாசலில் கோலம் தேடிவந்த ஒரு கூட்டு நத்தை அதில் தன் கோலத்தை மெல்ல வரைந்து மெல்ல செல்கிறது.
வேணுவின் கவிதைகளுக்கு தமிழுக்கு வெளியே ஒப்புமை சொல்ல வேண்டுமானால் சீன தேசத்தின் தொன்மையான ஜென் கவிதைகளுக்குத்தான் செல்லவேண்டும். குறிப்பாக 4-7 B.C.E காலகட்டத்தை சேர்ந்த கவிஞர்கள் எழுதியவை.
இவற்றில் பல கவிதைகளில் உவமையோ உருவகமோ இருப்பதில்லை. சொற்சிக்கனம், எளிமை ஆகியவற்றால் உருவாகும் கவித்துவம் பயின்று வரும் ஒரு எளிய சிறு நிகழ்வின் அவதானமே முழுக்கவிதையாக உருப்பெற்று நிற்கிறது. பொதுவாக சொன்னால் லாவோ சூ, ஹான் ஷான், லி போ, டோகன் கிஜென், சியாவோ ஜான், யுவான் மீ, ரியோகன், சைகியோ, பாஷோ மற்றும் பலரின் படைப்புகளில் இந்த அம்சங்களை காணலாம்.
தாவோயிசத்திலிருது பெற்றுக்கொண்டபடி மிகையான சொற்பிரயோகத்தின் மீது நம்பிக்கையற்ற நிலைப்பாடு கொண்டவை என்று ஜென் கவிதைகளை வகைப்படுத்தலாம். பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிலைகளில் நிற்பவை என்றாலும் ஒரு பொருளை அல்லது நிகழ்வை தியானிப்பதன் வழி அந்த நிகழ்கணத்தின் மனதின் ஒளியை எளிய சொற்களில் வெளிப்படுத்துபவை என்று இவைகளை ஒட்டுமொத்தமாக பொதுப்படுத்தலாம்.
உயர்ந்து நிற்கும் மலையின் மீது
நுரையாய் வழிகிறது மேகம்
நிலவொளியை
உரிமை கொண்டு
குளிரின் மையத்தில்
சில்லிட்டு நிற்கிறது
கோயில்
-ஹூய் யுங், 332-414 B.C.E
தேங்கி நிற்கும் குளத்திலிருந்து
குளிர்கால நிலவை
கரைத்து அழிக்கப்பார்க்கிறது
காற்று
-மியாவோ யின், 376-380 B.C.E
மலையின் மீதமர்ந்து
கீழிருக்கும் நீரில்
சிற்றலைகளின் விளையாட்டை காண்பது
எல்லையில்லா இன்பம்
எளிய மேகம்
நிறங்களற்று
கரைந்து செல்கிறது
-லி போ, 701–762 B.C.E
எண்ணங்கள் உணர்வுகள் வழி பெருகி ஒன்றிலிருந்து ஒன்றென விரிந்து செல்லக்கூடிய மனநிலையில் உருவாவது அல்ல வேணு வேட்ராயனின் கவிதைகள். மாறாக அதற்கு எதிர்திசையில், எண்ணங்கள், உணர்வுகள் அற்றுபோகும் நிலையில் இருந்து உருவாகி வருபவை. ஒரு அவதானம் உருவாக்கும் எண்ணங்கள், கருத்துகள், உணர்ச்சிகள் அனைத்தும் முயங்கி அடங்கி நிறையும் புள்ளியின் மெளனத்திலிருந்து தோன்றி உருப்பெருபவை.
ஆகவே அலங்காரங்கள் ஒப்பனைகள் அற்றவை. வழிச்செல்லும் ஒரு பயணியை வழிமறித்து எதிர்கொள்ளும் துடுக்கோ, விரிவான உரையாடல்களோ, உபசரித்து விருந்தளிக்கும் பானங்கள், உணவுகள் ஆகியவற்றின் நீண்ட பட்டியலோ அவைகளிடம் இல்லை. மாறாக மலை மேல் இருந்து இறங்கி வந்து மரநிழலில் அமர்ந்திருக்கும் ஒரு எளிய கிழட்டுத்துறவியைப்போல அவை மெளனத்தில் தியானிக்கின்றன. கேட்பவர்களுக்கு அவை கையளிப்பது குளிர்ந்த நீரின் ஒரு எளிய குவளையை. தாகத்தை தணிக்கும் வல்லமை கொண்ட அரிதான ஒரு சுனையிலிருந்து முகரப்பட்ட தூய நன்னீர் நிரம்பிய குவளை. இக்கவிதைகளின் எளிமைக்கு காரணம் படைப்பின் போதாமை அல்ல. இப்படைப்புகளின் தோற்றமும் மூலமும் வேறானது என்பதுதான். துறவி ஒருவன் மலையின் முகட்டின் மீது பலமணி நேரம் சொல்லின்றி நின்றபின் அவன் குரல் வழி காற்றில் உருப்பெறும் சில சொற்களைப்போல ஒரு நிகழ்வின் எளிய சாட்சியாக கவிஞனுடன் மெளனித்து நிற்பவை என்று இக்கவிதைகளை கூறலாம்
நவீன மனித மனம் ஒரு வாசிப்பு முறையின் சட்டகத்து பழகியுள்ளது. இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக எழுதப்படும் மொழிகளுக்கு உள்ள முறைமைகள் ஒருபக்கம். ஒரு தலைப்பை வாசித்ததும் அது ஏற்படுத்தும் மனப்பதிவு வாசகனை மேற்கொண்டும் அந்த பிரதியில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய ஒரு எளிய சித்திரத்தை உருவாக்கி அளிக்கிறது. அந்த சித்திரம் பலசமயங்களிலும் ஆசிரியனுக்கு அனுகூலமானதும் கூட. ஆகவே ஒரு கவிஞன் அந்த வாய்ப்பை துணிந்து தன் ஆயுதமாக பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.
அதேசமயம் தலைப்பு இல்லாமல் எழுத ஆசிரியன் தீர்மானித்து விட்டபிறகு அதற்கு ஒருவேளை காரணங்கள் இருக்கக்கூடும் என்பதையும் வாசகன் நம்பியாக வேண்டும். தலைப்புகள் அற்று இருப்பது வாசிப்பை சிரமமாக்குகிறது சிதறடிக்கிறது என்றாலும் கவிதைகளின் அரூபத்தை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. ஒருவேளை கவிஞர் விரும்புவது அதைத்தான் என நினைக்கிறேன்.
ஒரு கவிதை அது நிகழும் தேசம், புவியிடம், இடம், காலம், காட்சி ஆகியவற்றை முன்வைக்க முடியும். முடியும். கவிதை நிகழ்த்துபவரின் தொழில், நோக்கம், உளக்காட்சி கவிதையில் அவருக்குள்ள இடம் ஆகியற்றையும் தெளிவுபடுத்துவதன் வழி நிகழ முடியும். யதார்த்தம், வரலாறு, புராணம், தொல்படிமம், ஆகியவற்றின் வழி இயங்க முடியும். ஆன்மீகமான கேள்வி, தன்னுரையாடலின் சர்ச்சை ஆகியவற்றின் வழி உருப்பெற முடியும். இவற்றையெல்லாம் கடந்து ஒரு எளிய இருப்பின் அழகின் வழி இயங்குபவை என்பது இக்கவிதைகளை தனிப்படுத்துவது.
அந்த வகையில் வேணு வெட்ராயனின் கவிதை அபூர்வமானது. எண்ணங்களால் பதைபதைத்து மனதின் ஆழம் மொழியில் ஆழத்துள் உறைந்து நின்றபின் ஏற்படும் நிச்சலனம் நிலைபெற்றபிறகு உருவாகி வருவதால் சிலசமயங்களில் சொற்களுக்கும் தர்கங்களுக்கும் அப்பாற்பட்டு நிகழ்பவையும் கூட. அவருக்கு வாழ்த்துக்கள்.
மாணிக்கவாசகர் திருத்தக்கதேவர் வழியாக நீளும் ஒரு சரடு அவரை சங்கால கவிதைகளுடன் பிணைத்து பிரமிள், தேவதேவன், தேவதச்சன் ஆகியோருடன் நிகழ்காலத்தில் இணைக்கிறது. அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்.
-வேணு தயாநிதி
விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020
வேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது
ஒரு துளி நீலம்– சுனில் கிருஷ்ணன்
வெண்மலர் பறவை – அலகில் அலகு கவிதைத் தொகுப்பு குறித்து
குமரகுருபரன் விருது- வேணு வேட்ராயன்- பேட்டி
வேணு வேட்ராயன்- குமரகுருபரன் விருது வழங்கும் நிகழ்வு
அலகில் அலகு மின்நூல் வாங்க
அலகில் அலகு நூல் வாங்க
வேணு வேட்ராயன் கட்டுரைகள் அரூ