வணக்கம்.
நீங்களும் வீட்டிலுள்ளவர்களும் நலமே இருப்பீர்கள் என நம்புகிறேன்.
புலம்பெயர்ந்த எழுத்துக்கள் என்றால் என்ன? (நன்றி – வல்லினம்) என்னும் தலைப்பில் 20-22 டிசம்பர் 2019, நீங்கள் ஒரு நிகழ்ச்சியில் ஆற்றிய உரையை இன்று செவிமடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் நீங்கள் சொல்லிய கருத்துக்கள் பலதுடன் நானும் உடன்படுகிறேன்.
இதேவேளை புலம்பெயர்ந்த நாடுகளின் கலாசாரம் வாழ்க்கைமுறை பற்றிய எழுத்துக்களை எழுதியவர் அ முத்துலிங்கம் மட்டுமே எனப்பொருள்பட பேசியிருந்தீர்கள். அது சற்று நெருடலாக உள்ளது. அவர் எனது நல்ல நண்பர், நெருங்கிய தொடர்பிலிருப்பவர் என்பதற்பப்பால் அவரது எழுத்துக்களைத் தாண்டி நீங்கள் குறிப்பிட்ட விஷயம் நெடுந்தூரம் வந்துவிட்டது என்பதைச் இங்கு சொல்ல விரும்புகிறேன்.
எனது கதைகள் குறுநாவல்கள் புனைவுக்கட்டுரைகள் ஆகிய படைப்புக்களுள் 90 வீதமானவை அன்னிய கலாசாரங்கள் பற்றியவையே.
இதுபபற்றி பேராசிரியர் எம். ஏ. நுஃமான் முதல்கொண்டு பலர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். இந்த வகையில் எனது பவனைபேசலன்றி சிறுகதைத் தொகுதியை வாசித்தபின் பல வருடங்களுக்கு முன் நீங்கள் எழுதிய கடிதத்தை பொக்கிசமாக இன்னும் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.
எதிர்காலத்தில் அ முத்துலிங்கத்தை குறிப்பிடும் அதேவேளை மற்றைய எழுத்துக்களையும் குறிப்பிடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
இக்கடிதம் நட்புடனும் உரிமையுடனும் எழுதப்பட்டது.
ஆசி கந்தராஜா
1) http://www.aasi-kantharajah.com/category/சிறுகதைகள்
2) http://www.aasi-kantharajah.com/category/குறுநாவல்
3) http://www.aasi-kantharajah.com/category/புனைவு-கட்டுரை
4) https://aasimuttam.blogspot.com/
அன்புள்ள ஆசி கந்தராஜா அவர்களுக்கு,
முதல்விஷயம், உங்கள் படைப்புக்களைப் பற்றி தமிழ்ச்சூழலில் விரிவாக தொடர்ந்து அறிமுகம் செய்து உரையாடி வரும் விமர்சகன் நான். புலம்பெயர்ந்த இலக்கியம் பற்றிப் பேசும்போது மட்டுமல்ல பெரும்பாலான இலக்கிய உரையாடல்களில் இயல்பாகவே உங்கள் எழுத்துக்களை குறிப்பிடுவதுண்டு.
அந்த உரை புலம்பெயர் இலக்கியம் பற்றியது அல்ல. நவீன இலக்கியத்தில் புழங்கும் சில இலக்கிய வகைபாடுகளில் ஒன்றாகிய புலம்பெயர் இலக்கியம் பற்றி சிலநிமிடங்கள் அதில் பேசியிருக்கிறேன்.அந்த உரையில் அ.முத்துலிங்கம் மட்டுமே சிறந்த புலம்பெயர்ந்த எழுத்தாளர் என்ற தொனி வந்திருக்குமென்றால் அது தவறு. ஒட்டுமொத்த உரை மலேசியச்சூழல் குறித்து சொல்லப்பட்டது. மலாய் சீன வாழ்க்கையை கொஞ்சம்கூட எழுதாமல், அவர்கள் எவரென்றே தெரியாமல், தங்களைப்பற்றி மட்டுமே எழுதுவதும்; தங்களுக்கான செயற்கைப்பெருமிதங்களை தமிழகத்திலிருந்து வரும் உதிரி அரசியல்வாதிகளைக்கொண்டு சொல்லிச்சொல்லி உருவாக்கிக்கொள்வதும் மிகப்பெரிய தேக்கநிலை என்ற அளவிலேயே அந்த உரை அமைந்தது.
அவர்களுக்கான முன்னுதாரணமாகவே அ.முத்துலிங்கம் அவர்களைச் சுட்டிக்காட்டினேன். அ.முத்துலிங்கம் நவீனத்தமிழிலக்கியத்தின் ஓர் உச்சம் என்றே நான் நினைக்கிறேன். அவருடைய அக்கா தொகுதியை அவரே மறந்துவிட்ட நாளிலேயே அதைப்பற்றிப் பேசியிருக்கிறேன்.அவர் மீண்டும் எழுதவந்தபோது பிரசுரமான முதல்கதைக்கே என் வாசகர்கடிதம் பிரசுரமாகியிருந்தது. அவர்மேல் நான் கொண்டுள்ள ஈடுபாடும் மதிப்பும் அத்தகையது.
அத்தகைய முன்னுதாரணமாக அவரை நான் சுட்டுவதற்கான முதன்மைக் காரணம் அவர் இயல்பான ஓர் ‘உலகக்குடிமகன்’ என்பது. அவர் ஈழ அரசியலின் சமையலறை விவாதங்களுக்குள் சிக்கிக்கொள்ளவில்லை என்பதனால் அவரை வசைபாடுபவர்களை இருபத்தைந்து ஆண்டுகளாக கண்டுவருகிறேன்.அவ்வாறு அவர் சிக்காமலிருப்பது அவர் உலகமறிந்தவர் உலகைநோக்குபவர் என்பதனால்தான்.
அந்த உரையில் ஓர் அடையாளமாக, இன்று எழுதுவோர் சென்றடைய வேண்டிய இலட்சியமாக அல்லது கடக்கவேண்டிய சாதனையாகவே முத்துலிங்கம் குறிப்பிடப்பட்டார். அவர் மட்டுமே இருக்கிறார் என்று அல்ல. அப்படி குறிப்பிடவேண்டியதில்லை – பிறர் அனைவரைப்பற்றியும் எழுதியிருக்கிறேன் என்னும் நிலையில்.
நான் பேசிக்கொண்டிருந்தது புலம்பெயர்ந்து சென்ற உலகங்களுடனான கலாச்சார உரையாடலைப் பற்றி மட்டுமே. அந்த அம்சத்திற்கு வெளியே நின்று பார்க்கையில் ஷோபா சக்தி மிகமுக்கியமான இலக்கியப் படைப்பாளி என்று எப்போதுமே சொல்லி வருகிறேன். ஷோபா சக்தி புலம்பெயரவே இல்லை என்பதே என் கருத்து
அந்த உரை புலம்பெயர்ந்த படைப்பாளிகளில் எவரெல்லாம் முக்கியமானவர்கள் என்ற அளவில் அமைந்தது அல்ல—அதை நீங்கள் முழுமையாகக் கேட்கலாம். அவ்வாறு புலம்பெயர் இலக்கியம் பற்றி மொத்தமான பார்வையில் எழுதப்பட்டுள்ள எல்லா கட்டுரைகளிலும் முக்கியமான அனைவரையும் சுட்டிக்காட்டி மதிப்பிட்டே எழுதியிருக்கிறேன்
உங்களைப் பற்றிய எழுத்துக்களில் நீங்கள் அ.முத்துலிங்கம் போன்றே உலகை நோக்கி விரியும் நோக்கு கொண்டவர், ஆகவே முக்கியமானவர் என்று எழுதியிருக்கிறேன். நீங்கள் ,நோயல் நடேசன், பொ.கருணாகரமூர்த்தி என அவ்வாறு வேறு பண்பாடுகளுடனான உரையாடலை நிகழ்த்திய படைப்பாளிகள் புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளிடையே உள்ளனர். அனைவர் பற்றியும் எழுதியிருக்கிறேன். [சொல்லப்போனால் தமிழகத்தில் நான் மட்டுமே எழுதியிருக்கிறேன், இன்னும் எழுதவிருப்பவனும் நான் மட்டுமே. அது உங்களுக்கும் தெரியும்]
ஆனால் முத்துலிங்கமே முதன்மையானவர், முன்னோடி, முன்னுதாரணம் என்பதில் எனக்கு ஐயமில்லை.
ஜெ
***